Tuesday, October 30, 2018

மக்களின் கொந்தளிப்பில் குளிர்காயும் அரசியல் முதலைகள்!

ஒரு மலையகத் தமிழனாக, மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டவனாக வரலாற்றில் மிகக் கேவலமானதொரு அரசியல் தலைமையை சமகாலத்தில் கண்டிருக்கிறேன் என்பதை மிக வேதனையுடன் பதிவு செய்து தொடர்கிறேன்.



வடிவேல் சுரேஷ்
- மலையகத்தின் மீட்பர் போல தீவிரமான பேச்சு, போலிச்சிரிப்பு, அவ்வப்போது நாடகம் என அரசியல் ரீதியாக எந்தவொரு கொள்கையும் இல்லாமல் அப்பாவி மக்களின் வாக்குகளால் தெரிவான நபர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வியூகம் அமைத்து வெற்றி பெற்றாலும் காலம் இவரை மக்கள் மத்தியில் பல சந்தர்ப்பங்களில் அடையாளம் காட்டியிருக்கிறது.

நேற்று முன்தினம் புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து ஆதரவு தெரிவித்ததை மக்கள் அறியாமல் இல்லை. ஆனாலும் நேற்று ஐக்கிய தேசிய கட்சியினருடன் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலும் அதன் பின்னர் தனிப்பட்ட ரீதியில் தெரிவித்த கருத்துக்களும் நியாயமான சிந்தனையுடையவர் என்ற தோற்றப்பாட்டை உருவாக்கியிருந்தன.
இதில் குறிப்பிடத்தக்க சில கருத்துக்களை இங்கே பதிவிடுகிறேன்.

“நான் கட்சி மாறியதாக கூறியதில் எந்த உண்மையும் இல்லை. மரியாதையின் நிமித்தமே மகிந்த ராஜபக்ஷவை சந்தித்தேன். நான் ஒரு பச்சைத் தமிழன், இந்து, எனக்கு நன்றிக்கடன் என்ற கடமை இருக்கிறது. அதற்காக நான் அவர்களுடன் இணைந்துகொண்டதாக போலிப்பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராக செயற்படுகிறேன். அதனூடாக மக்கள் சேவை செய்யவே விரும்புகிறேன்”

இப்படிக் கூறிய வடிவேல் சுரேஷ், அன்றையதினமே மாலை மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அமைச்சரவையில் இராஜாங்க அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இங்கே மக்கள் முன்வைக்கும் கேள்விகள்தான் என்ன?

நீங்கள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளராகவே இருந்திருக்கலாம். எதற்காக மீண்டும் கட்சி மாறி நாடகம் ஆடினீர்கள்?

அன்று மாலையில் அமைச்சுப் பொறுப்பை ஏற்கும் அளவுக்கு பேச்சுவார்த்தைகளின்போது எட்டிய இணக்கப்பாடுகள் அல்லது கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் என்ன?

உங்களது இந்த செயற்பாட்டினால் ஒட்டுமொத்த மலையக மக்களையும் தலைகுனிய வைத்துவிட்டீர்கள் என்பதை அறிவீர்களா?

வெறும் பதவிக்காக தாவும் நீங்கள், முதலாளிமார் சம்மேளனத்துடன் இத்தனை நாள் நடைபெற்ற பேச்சுவார்;த்தைகளின் போது மக்களின் நியாயங்களையும் போராட்டங்களையும் காட்டிக்கொடுத்து கையொப்பம் இட்டதன் உண்மையான காரணம் வெளிப்படுத்திவிட்டீர்கள் என்பதை அறிவீர்களா?

மலையகத்தில் பட்டினிக்கான போராட்டம் நடைபெறுகிறது. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பிரதான தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளரான நீங்கள் மக்களின் நிலைப்பாடு, வேண்டுகோள் பற்றி முன்வைத்த கோரிக்கைகள் என்ன?

அமைச்சர் வடிவேல் சுரேஷ் அவர்களே, மக்களுக்கு சேவையாற்றவே கட்சி மாறினேன் என வெகு இலகுவாக நீங்கள் கூறிவிட்டுச் செல்லலாம். ஆனால் காலம் உங்களுக்குக் குத்தியிருக்கின்ற கறுப்புப் புள்ளியை என்றுமே மறைக்க முடியாது.

மலையக மக்கள் ஏமாற்றுப்பேர்வழிகள், கொஞ்ச காலம் கோபமாக இருப்பார்கள், பின்னர் அனைத்தையும் மறந்துவிடுவார்கள் என்ற எண்ணத்தை துடைத்தெறியுங்கள். ஒரு மலையக சமூகத்தைச் சார்ந்தவனாக, உங்களைப் போன்றவர்களை மக்கள் தெரிவு செய்திருக்கிறார்கள் என்பதை நினைத்து வெட்கித் தலைகுனிகிறேன்.

உங்களுடைய கட்சித்தாவலுக்கும் கடைசிநேர சதுரங்க ஆட்டத்துக்கும் பிரதான காரணம் என்ன என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள். உங்களை அமைச்சுப் பொறுப்பில் அமர்த்தியவர்களின் முக்கிய நோக்கம் என்ன?

நீங்கள் மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்பதா? அல்லது பெரும்பான்மையை நிரூபித்து தமிழ்மக்கள் தங்களோடு இருக்கிறார்கள் என்பதை வெளியுலகுக்குக் காட்ட வேண்டும் என்பதா?

நான் ஐக்கிய தேசிய கட்சி சார்ந்தவன் அல்லன். மனச்சாட்சியுள்ள பெருந்தோட்டவாசியாக மக்கள் மனதில் உள்ள குமுறல்களை வார்த்தையாக்கிக்கொண்டிருக்கிறேன்.



ஆகட்டும், இப்போது நீங்கள் பெருந்தோட்டத்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கிறீர்கள். இனி மக்களின் கோரிக்கையை எவ்வாறு நிறைவேற்றப்போகிறீர்கள்? புதிய பிரதமரும் அவர் சார்ந்த குழுவினராலும் இது தொடர்பாக எழுத்து மூல உறுதிப்பாடு வழங்கப்பட்டிருக்கிறதா? என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்துங்கள்.

பெருந்தோட்ட மக்களின் சம்பளக் கோரிக்கை தொடர்பாக ஒக்டோபர் 10ஆம் திகதி தங்களுடைய தொழிற்சங்க அலுவலகத்தில் நாம் சந்தித்திருந்தோம். ஆயிரம் ரூபா சம்பளம் பெற்றுத்தராமல் ஓயமாட்டேன் என உறுதியளித்ததை மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

இனி உங்களுக்கு ஒரு தொழிற்சங்கம் இல்லை. இனியும் ஒரு தொழிற்சங்கம் வேண்டுமானால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிடம் தஞ்சம் கோரலாம். ஆனால் நீங்கள் ஆரம்பத்தில் அங்கும் எவ்வாறான சித்துவிளையாட்டுகளை நடத்தினீர்கள் என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள்.

எந்தவொரு சுயலாபமும் (?) இன்றி மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அமைச்சுப் பொறுப்பை ஏற்றிருந்தால் அந்தக் கடமையை நியாயமாகவும் நேர்மையாகவும் செய்வதற்கு இனியாவது முயற்சி செய்யுங்கள் அமைச்சரே. அரசியல் ரீதியாக எந்தவொரு கொள்கையும் இல்லாமல் அங்குமிங்கும் தாவித்திரிவதால் உங்களை மாத்திரமன்றி சமூகத்தையும் காட்டிக்கொடுக்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

மக்களின் கொந்தளிப்பில் குளிர்காயும் அரசியல் முதலைகள் பல இருக்கின்றன. இப்போது மக்களுக்கு முக்கியமானதொரு தேவை இருக்கிறது. அது சம்பளத் தேவை. அதனைக்காரணம் காட்டி கட்சி தாவுவது மிக இலகுவான விடயம் தான். ஆனாலும் இனிவரும் காலம் சவால்மிக்கதொரு நிலைமையைத் தோற்றுவிக்கலாம் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

அத்தோடு மக்கள் சார்பில் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். இருநூறு வருட கடும் உழைப்போடு இன்றும் தமது உழைப்பை மாத்திரமே நம்பியிருக்கும் அப்பாவித் தொழிலாளர்களின் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள். உங்களை அறியாமல், மலையகத்தில் மாற்றத்தை வேண்டி பாரியதொரு இளைஞர் சக்தி உருவாகி வருகிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.



மேலும் பல முதலைகள் பற்றி தொடர்ந்தும் பேசுவோம்.

-இராமானுஜம் நிர்ஷன்-