Monday, October 14, 2019

Digital யுகத்தில் மலையகத்தின் குரலாக ஒலிக்கும் மலையகம்.lk – அங்குரார்ப்பண விழா பற்றிய பார்வை


மலையகம்.lk இணையத்தளத்தின் அங்குரார்ப்பண நிகழ்வும் மலையக சாதனையாளர்களுக்கான விருது வழங்கும் விழாவும் ஹற்றன் புனித பொஸ்கோஸ் கல்லூரியில் நேற்று (13) மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மலையகத்தின் தனித்துவமான கலை அம்சங்களைத் தாங்கி, பாரம்பரிய அடையாளங்களை வெளிக்கொணரும் வகையில் இவ்விழா மிக நேர்த்தியாகவும் மனதைக் கவரும் விதத்திலும் இடம்பெற்றது.


மலையகம்.lk இணையத்தளத்தின் பணிப்பாளர் கே. தனபாலசிங்கத்தின் (ஆர்.ஜே. தனா) தலைமைத்துவத்தில் அக்கறையும் ஆர்வமும் நிறைந்த இளைஞர் பட்டாளம் முன்னின்று இந்த நிகழ்வை நேர்த்தியாக வடிவமைத்திருந்தது.

இந்த விழா குறித்தான என்னுடைய பார்வையை இங்கே பதிவு செய்கிறேன்.


ஆரம்பம்
கல்லூரி வளாகத்திலிருந்து தப்பு இசையோடு காவடியாட்டத்துடன் அதிதிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். பக்திப் பரவசத்தோடு அவர்கள் அந்தக் கலையை நிகழ்த்திய விதம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்திருந்தது.

விழாவின் ஆரம்பமாக மலையகம்.lk இணையத்தளத்தின் பணிப்பாளர் கே. தனபாலசிங்கம் (தனா) வரவேற்புரை நிகழ்த்தினார். வரவேற்பு மாத்திரமன்றி இணையத்தளத்தின் ஆரம்பம், இளைஞர்களை இணைத்துக்கொண்டமை, திட்டமிடல்கள், சிரமங்கள், சவால்கள் என அத்தனையும் அவரது உரையில் பதிவு செய்தார்.

“நான், வீட்டு வேலைகளை அதிகமாகக் கவனித்தது கிடையாது. இப்படியொரு இணையத்தளத்தை என் மண்ணுக்காக உருவாக்கும் கனவு இன்று மெய்ப்பட்டிருக்கிறது. இதற்காக நான் பட்ட கஷ்டங்கள் ஏராளம் உண்டு. அவற்றையெல்லாம் வார்த்தைகளில் சொல்ல முடியாவிட்டாலும், அவை அத்தனையும் இன்று மகிழ்ச்சிப் பூக்களாக என் மனதை ஆராதித்துக்கொண்டிருக்கின்றன.
இனிமேல் என் குடும்பத்துக்காக நேரத்தைச் செலவிடுவேன். அம்மா, அப்பா மற்றும் குடும்ப உறுப்பினர்களை இனி கவனித்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்” என மிக உருக்கமாக கருத்து வெளியிட்டார்.

அவ்வேளையில், சபையில் மத்திய இருக்கைகளில் அமர்ந்திருந்த தனாவின் பெற்றோர் நெகிழ்ச்சியடைந்ததை பலர் அவதானித்திருக்க வாய்ப்பில்லை.

நிகழ்வு
தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட மலையக மக்கள் பட்ட துன்ப, துயரங்களை அடிப்படையாகக் கொண்டும் மலையக மக்களின் பாரம்பரிய கலைவடிவங்களோடும் டிக்கோயா நுண்கலை கல்லூரி மாணவர்கள் முதல் நிகழ்ச்சியைப் படைத்தார்கள்.

“காடுகளே போய்வரவா..” என்ற பாடலோடு, தத்தளிக்கும் கப்பலில் மண்ணைவிட்டு, சொந்தங்களை விட்டு வேறு தேசத்துக்குப் பெயர்ந்த எம் மக்களின் கண்ணீரை அந்த மாணவர்கள் யதார்த்தமாக வெளிக்கொண்டு வந்திருந்தார்கள்.

குறிப்பாக, “வெளையாத காட்டவிட்டு
வெளையாண்ட வீட்டவிட்டு
வெள்ளந்தியா வெகுளிச்சனம்
வெளியேறுதே..
வாழ்வோடு கொண்டு விடுமோ
சாவோடு கொண்டு விடுமோ
போகும் தெசை சொல்லாமலே
வழி நீளுதே..!
உயிரோடு வாழ்வது கூட சிறு துன்பமே
வயிறோடு வாழ்வது தானே பெருந்துன்பமே” என்ற வரிகளை மாணவர்கள் பாடி, நடித்தபோது சபையினர் கண் இமைக்காமல் பார்த்திருந்தனர்.

அதனையடுத்து கண்டிச்சீமைக்கு வந்த மக்கள் வேதனையோடு தொழில்புரிந்தாலும் தமது மண்சார்ந்த, வாழ்வியல் சார்ந்த பாடல்களைப் பாடி மகிழ்ந்த விதத்தையும் மாணவர்கள் வெளிப்படுத்தத் தவறவில்லை.

“மலையோரம் காட்டுக்குள்ள
கொழுந்தெடுக்கப் போறபுள்ள” என்ற காதல் துளிர்க்கும் பாடல் முதல் ஒப்பாரிப்பாடல் வரை ஒரு முழுமையான படைப்பை மேடையேற்றியிருந்தார்கள்.

இந்த விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டிருந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் எம். இந்திரஜித் மற்றும் சிறப்பு அதிதிகளால் மலையகம்.lk இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

மலையகத்தில் அனைத்து விதத்திலும் பேசப்படும் பாடசாலையாகத் திகழும் கேகாலை, கந்தலோயாவின் மாணவர்கள் மேலும் விருந்தளித்தார்கள் என்றே சொல்ல முடியும். அதிலும் குறிப்பாக பறை இசையில் கைதேர்ந்தவர்களாக தனித்துவமான படைப்புகளை வழங்கினார்கள்.

பறை என்பதை பலர் தாழ்த்தப்பட்டதாக நினைப்பதாகக் குறிப்பிட்ட மாணவர்கள் அது தமிழரின் பாரம்பரிய இசை என்பதை வலியுறுத்தியிருந்தார்கள்.

அதுமாத்திரமா? பறையின் இசை வடிவங்களைச் சொல்லி அதற்கேற்றாற்போல இசையமைத்துக் காட்டியமையால் கரகோஷத்தால் நிறைந்தது அரங்கு.

விருதுக்குத் தெரிவு செய்யப்பட்ட மலையகக் கலைஞர்களும் தமது திறமையை மேடையில் வெளிக்காட்டியிருந்தார்கள்.

கௌரவம்
மலையகத்தில் பல்வேறு துறைசார்ந்து பங்களிப்பு வழங்கிவரும் படைப்பாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களுக்கு இதன்போது கௌரவம் வழங்கப்பட்டிருந்தது. குறிப்பாக நாட்டுப்புறக் கலைகளை வளர்க்கப் பாடுபட்டுக்கொண்டிருக்கும் முக்கியஸ்தர்கள் கௌரவிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

நாட்டார் பாடல் கலைஞர், நாட்டார் பாடல்கள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு வரும் பண்டாரவளை கதிர்வேல் விமலநாதன், காமன் கூத்துக் கலையை காலங்காலமாகப் பேணிவரும் மஸ்கெலிய லங்கா தோட்டத்தைச் சேர்ந்த சுப்ரமணியம் ராமர் மற்றும் சின்னையா சுப்ரமணியன் ஆகியோர் தங்களது அளவில்லாத மகிழ்ச்சியை என்னோடு பகிர்ந்துகொண்டனர்.

அதுமாத்திரமல்லாது புரட்சிக் கவிதைகள் மூலம் நற்கருத்துகளை விதைத்துவரும் பொகவந்தலாவை ப. கணகேஸ்வரன், மலையகத்தில் இளம் படைப்பாளர், நூலாசிரியர் கணேசன் பிரவீனா, இளம் விஞ்ஞானி விஷ்ணு தர்ஷன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டமை பாராட்டுக்குரியது.

சூரியன் வானொலியின் திட்டமிடல் விரிவாக்கல் பிரிவின் உதவி முகாமையாளர் அஜித் குமார், கந்தலோயா பாடசாலையின் அதிபர் கருணாகரன், சாதனை ஓட்ட வீரர் சண்முகேஸ்வரன், தேசாபிமானி பதூர் பாபா ஆகியோரையும் மலையகம்.lk குழு கௌரவித்தது.
பத்தனை ஸ்ரீபாத அரசினர் ஆசிரியர் கலாசாலையின் அதிபர் திருமதி. சந்திரலேகா, விரிவுரையாளர் திருமதி. ரூபாராணி, மலையக சமூக ஆய்வு மைய இணைப்பாளர் சிவன் பிரபா, சமூக செயற்பாட்டாளர் பொன் பிரபா ஆகிய சிறப்பு அதிதிகளும் விழாவில் கௌரவம் பெற்றனர்.











நிறைகள்:
நமது தனித்துவமான கலைகள் மேடையேற்றப்பட்டமையை நிகழ்வுக்கு வருகை தந்திருந்த அனைவரும் மனம் திறந்து பாராட்டினார்கள். நிகழ்ச்சிகள், மேடைப் பேச்சுகள் அனைத்தும் வெகு நேரம் எடுத்துக்கொள்ளப்படாமல் ஏற்பாட்டாளர்கள் முக்கிய அவதானம் செலுத்தியிருந்தார்கள். சித்திரக் கலைஞர் கணேஷ் வெகுவாகப் பாராட்டி கௌரவப்படுத்தப்பட்டமையும் நினைவுகூர வேண்டும்.

முக்கிய கவனம் செலுத்தப்பட்ட விடயம்:
இந்த விழாவின் வெற்றிக்கு அறிவிப்பாளர்களின் பங்கு பாரியளவில் பக்கபலமாக அமைந்திருந்தது. சுதர்ஷன், விநோத், நவீன் ஆகிய இளையோர்கள் மூவர் சபையினரின் மனதில் இடம்பிடித்துக்கொண்டார்கள். அவர்களது நிகழ்ச்சித் தொகுப்பு, கம்பீரமான குரல் என்பன அரங்கை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தன.

இதேவேளை, கௌரவத்தின்போது யாருக்கும் பொன்னாடை போர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் அரசியல்வாதிகள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படாமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

விமர்சனங்கள்:
இந்தப் பாரிய விழாவினை நடத்துவதற்கு புனித பொஸ்கோஸ் கல்லூரியின் கேட்போர் கூடம் பொருத்தமானதாக இல்லை. மேடையில் போதியளவு வெளிச்சம் இல்லாமையால் முதல் நிகழ்ச்சியில் ஒருவகை தொய்வு காணப்பட்டது.

சவால்கள்:
மலையகம் சார்ந்து பல்வேறு இணையத்தளங்கள், சமூக ஊடகங்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. ஆனால் அவை அனைத்தும் நமது வாழ்வியலை அடையாளப்படுத்துவதாக, தனித்துவத்தைப் பேணுவதாக, சமூக அவலங்களை ஆதாரங்களோடு வெளிப்படுத்துவதாக, நமது பாரம்பரிய கலை வடிவங்களை அடுத்த சந்ததிக்குக் கொண்டு செல்வதாக அமைவதில்லை.

ஆனால் மலையகம்.lk என்ற இணையத்தளக் குழுவினருக்கு இந்தத் தார்மீகப் பொறுப்பை சுமக்க வேண்டிய கட்டாயப்பாடு உண்டு.

இப்போதுள்ள டிஜிட்டல் யுகத்தில் இனிவரப்போகும் அதையும் தாண்டிய நவீன காலகட்டத்துக்கு ஏற்ற வகையில் மாற்றங்களோடு பயணிக்க வேண்டிய தேவையும் உண்டு.

வெறுமனே இணையத்தளத்தை ஆரம்பித்துவிட்டோம், இனி இயலுமானதைச் செய்துகொண்டு தொடருவோம் என்றுதான் பலர் இணையத்தளங்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஒருசிலர் அரசியல் தேவைக்காக செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். மேலும் சிலர் பொழுதுபோக்குக்காக இயங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

இங்கே, இவற்றைத் தாண்டி இணைய வெளியில் மலையகத்தின் தாய் இணையத்தளமாக அதனை மாற்றியமைத்து மக்களின் மனதில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பக் கூடிய வகையில் மலையகம்.lk இணையத்தளக் குழுவினர் பணியாற்றுவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

-நிர்ஷன் இராமானுஜம்-
இறக்குவானை
14.10.2019