Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

Thursday, October 22, 2009

இலங்கை ஊடகங்களில் செய்தித் தவறுகள்…!?


வந்தியின் அடுத்த முதல்வன் யார்? என்ற பதிவே இந்தப் பதிவையும் எழுதக் காரணமானது.நமது தொலைக்காட்சிகளில் பயனுள்ள நிகழ்ச்சிகளைத் தவிர ஏனைய நிகழ்ச்சிகளை பார்ப்பதை நான் தவிர்த்துவருகிறேன். அதனால் நிகழ்ச்சிகளைப் பற்றி அவ்வளவாக குறிப்பிடத் தெரியாது.

ஆனாலும் சாமானியன் என்ற வகையிலும் நாட்டு நடப்புகளை அறிந்துகொள்ளவேண்டிய குடிமகன் என்ற ரீதியிலும் செய்திகளை பார்ப்பதும் கேட்பதும் உண்டு।

செய்தி எழுதுவதும் தொகுப்பதும் தனியொரு கலை. படித்தவருக்கும் பாமரருக்கும் விளங்கும் வகையிலும் பிழைகளைத் தவிர்த்தும் கருத்துப் பிசகாமலும் எழுத வேண்டும். அதனால் தான் செய்தியாசிரியர்களுக்கும் தொகுப்பாசிரியர்களுக்கும் (இருவருக்கும் வித்தியாசம் உண்டு) அதிக மதிப்பு இருக்கிறது.

செய்திகளில் அடிக்கடி இடம்பெற்ற சில தவறுகளை நான் குறிப்பெடுத்துக்கொள்வேன். ஏனென்றால் அடுத்தமுறை நான் அந்தப் பிழையை விடக்கூடாது என்பதற்காக.

நான் குறிப்பெடுத்துக்கொண்டதில் சிலவற்றை மட்டும் (பெயர், இடங்களை மாத்திரம் மாற்றி) இங்கு தருகிறேன்.
நான் தமிழ்ப்புலமை பெற்றவன் அல்ல. எனக்குப் பட்டவற்றை சொல்கிறேன்.

பிழையிருப்பின் அடியேனையும் மன்னித்தருள்க.


*நேற்றுமாலை புறக்கோட்டையில் இடம்பெற்ற விபத்தொன்றில் முன்னாள் கொழும்பு மாநகரசபையின் உறுப்பினர் பெயரிலி படுகாயமடைந்தார்.

அநேகமான இலங்கை ஊடகங்களில் இந்தத் தவறு இடம்பெறுவதை கவனிக்கக் கூடியதாக உள்ளது.

சம்பவங்களைக் குறிப்பிடும்போது இடத்திற்குப் பிறகுதான் காலத்தைச் சொல்ல வேண்டும். அது தவிர கொழும்பு மாநகரசபையை முன்னாள், இந்நாள் என இருவேறாக குறிப்பிட முடியாது. அது எப்போதும் அப்படியே தான் இருக்கிறது. இங்கு உறுப்பினரின் பதவிக்காலம் தான் குறிப்பிடுபொருள்.

சரியாயின்,
புறக்கோட்டையில் நேற்றுமாலை இடம்பெற்ற விபத்தொன்றில் கொழும்பு மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் பெயரிலி படுகாயமடைந்தார்.

(சிலருக்கு முன்னாள் என்பதற்கும் முன்னால் என்பதற்கும் வித்தியாசம் தெரியாமலிருப்பது கவலைக்குரியது).

*விபத்தில் உயிரிழந்தோருக்கு நஷ்ட ஈடு வழங்குவதாக அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

உயிரிழந்தவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க முடியாது என்பதை எழுதுபவர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

*நீர்கொழும்பு கடற்கரைப்பகுதி நீர்நிலைகளில் கிருமிநாசினிகள் கலந்துள்ளமையால் மீன்கள் அதிகமாக உயிரிழந்து கரையொதுங்குவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் உயிரிழந்த மீன்களை விற்பனை செய்ய அப்பகுதியில் தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.

உயிரிழப்பதில் அதிகமாக குறைவாக என்று சொல்ல முடியாது. இங்கு மீன்களின் எண்ணிக்கையை சுட்ட பயன்படும் அதிகமாக என்ற சொல் தவறான இடத்தில் குறிக்கப்பட்டுள்ளது. சரியாயின் அதிகமான மீன்கள் உயிரிழந்து கரையொதுங்குவதாக…. என தொடர வேண்டும்.

அத்துடன்,
உயிரிழந்த மீன்கள் தான் அனைத்து இடங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதற்கு யாரும் தடைவிதிக்க முடியாது. ஆதலால் செய்தி இவ்வாறு தொகுக்கப்பட வேண்டும்.

நீர்கொழும்பு கடற்கரைப்பகுதி நீர்நிலைகளில் கிருமிநாசினிகள் கலந்துள்ளமையால் அதிகமான மீன்கள் உயிரிழந்து கரையொதுங்குவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அப்பகுதியில் கிருமிநாசினி காரணமாக உயிரிழந்த மீன்களை விற்பனை செய்ய தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.

*மட்டக்களப்பு நகரில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். குறித்த நபர் மேலும் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எந்தவொரு வாக்கியத்தையும் குறித்த என்ற பதத்துடன் ஆரம்பிப்பது தவறாகும். குறித்த என்ற பதத்துக்கு பதிலாக அந்த என்ற பதத்தை உபயோகிக்கலாம்.

அல்லது,
மட்டக்களப்பு நகரில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் குறித்த நபர் மேலும் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
(வசனத்தின் நீளம் வாசகர்/நேயர்களை சங்கடத்துக்குள்ளாக்கும் என்பதால் சுருக்குதல் சிறந்தது)

*வெலிகமவில் இன்று காலை தனியார் பயணிகள் பஸ் ஒன்றுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நான்கு வயது குழந்தையொன்று வீதியில் நடந்து கொண்டிருந்த சமயம் விபத்துக்குள்ளான சம்பவத்தை அடுத்தே இந்தத் தீ வைப்பு இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
அவ்வாறு குழந்தைமீது மோதிய பஸ் தீ வைக்கப்பட்டுள்ளது.

இங்கு இறுதி வசனம் தேவையற்ற ஒன்று என்பது நான் சொல்லித்தான் புரியவேண்டும் என்றில்லை.

*……………. செவ்வாய்க்கிழமை கொழும்பில் உள்ள அமைச்சு அலுவலகத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இச்சந்திப்பின் போது இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களின் சுகாதார நிலைமைகள் மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின்போது இடம்பெயர்ந்து என்பதில் உள்ள மயக்கத்தை கவனிக்க வேண்டும். சந்திப்பின்போது யாரும் இடம்பெயரவில்லை.
சரியாயின்,
……இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களின் சுகாதார நிலைமைகள் மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பில் இச்சந்திப்பின்போது விரிவாக ஆராயப்பட்டது.

*எதிர்வரும் பருவப் பெயர்ச்சி மழைக் காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் இடம்பெயர்ந்தோரை வேறு இடங்களில் பாதுகாப்பாக தங்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

தங்கவைக்க வேண்டுமென… என்பதே சரியானதாகும்.

*இடம்பெயர் மக்களை வேறு இடங்களில் தங்க வைக்கும் செயன்முறையின் போது மக்களின் சுதந்திரமான நடமாட்டத்தினயும் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களிற்கான பொறுப்பாளர் ஜோன் ஹோல்ம்ஸ் தெரிவித்துள்ளார்.

இடம்பெயர் என்ற சொல் நிகழ்காலத்தை குறிப்பிடும் தொக்கிநிற்கும் சொல்லாக இருக்கிறது. இதன் அர்த்தம் தற்போது இடம்பெயர்ந்து கொண்டிருக்கும் மக்களை …. எனக்கொள்ளலாம்.

இடம்பெயர்ந்துள்ள மக்களை..... என ஆரம்பிப்பதே சிறந்தது.

*புத்தளம் நிவ்செட்ல்மென்ட் வீதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவமொன்றில் ஒருவர் வாள்வெட்டு காயங்களுக்குள்ளான நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாள்வெட்டு சம்பவம் என்றால் வாள்வெட்டுக் காயம் தான். ஏற்கனவே வாள்வெட்டு என்ற சொல் உபயோகித்துள்ள படியால் வெட்டுக்காயங்களுக்குள்ளான நிலையில்…. என தொடர்தல் பொருத்தமானதாகும்.

----------------------------------------------------------------------------------------------
இந்தப் பதிவு எந்தவொரு ஊடகத்தையும் தாக்கும் எண்ணத்தில் எழுதப்பட்டதல்ல. ஊடகங்களைப் பொறுத்தவரையில் சில சில தவறுகள் இடம்பெறுவதை ஏற்றுக்ககொள்ள வேண்டும். ஆயினும் அது தொடர்கதையாயின் ஏற்றுக்கொள்ள முடியாது. நேரமிருப்பின் முழுமையான விபரப் பதிவினைத் தர முயற்சிக்கிறேன்.