Thursday, October 30, 2008
திலகருடனான நேர்காணல்: இந்திய வமிசாவளி தமிழர்களைப்பற்றி உங்களில் எத்தனைப் பேருக்குத் தெரியும்?
வலை நண்பர் சேவியர் இன் மல்லியப்பூசந்தி திலகருடனான நேர்காணலை தமிழோசை பத்திரிகை பிரசுரித்திருந்தது। ஈழத்து இலக்கிய ஆர்வலர்களில் ஒருவர், சமூக ஆர்வலர், சிறந்த நண்பர் என நிறைய விடயங்களை திலகர் பற்றிக் கூறலாம்। சேவியருடானான பதிவுத் தகவல் பரிமாற்றங்கள் தான் இந்த நேர்காணலுக்கு வழிவகுத்தது எனலாம்।
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட,அநேக இந்தியர்களால் அறியப்படாத ஒரு சமுதாயம் பற்றிய குறிப்பாகவும் அவருடைய நேர்காணல் அமைந்துள்ளது। அந்த நேர்காணலை இங்கு தருகிறேன்। படத்தை சொடுக்கியும் பார்க்கலாம்।
உங்கள் ‘மல்லியப்பு சந்தி’ கவிதை நூலின் பாடுபொருள் என்ன?
ஒரு உழைப்பாளர் வர்க்கத்தின் வாழக்கைப்பரிமாணத்தையும் அதன் வலிகளையும், அவலங்களையும் பாடுபொருளாகக் கொண்டதே ‘மல்லியப்பு சந்தி’ ஆகும்। இதில் முக்கிய விடயம் இந்த உழைப்பாளர் வர்க்கம் யார் என அடையாளம் கண்டு கொள்வதில்தான் இருக்கிறது।இலங்கையில் மத்திய மலைநாட்டுப் பகுதிகளிலும் தென்பகுதியிலும் தேயிலை இறப்பர் தோட்டங்களில் ‘தினக்கூலிகளாக’ வேலைசெய்யும் தொழிலாளர்களும் அவர்கள் சார்ந்த சமூகமும்தான் ‘மல்லியப்பு சந்தி’ எடுத்துக்காட்டும் மக்களாகும். இவர்கள் ஏறக்குறைய 220 ஆண்டுகளுக்கு முன்பு தெனிந்தியாவிலருந்து குறிப்பாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து (திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர்) ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் இந்திய அரசாங்கத்தின் ஒப்புதலோடு அழைத்துவரப்பட்டு கூலிகளாக அமர்த்தப்பட்டுள்ளனர்.
என் பாட்டனார் இவ்வாறு வந்தவராவார். இவர்கள் இலங்கைக்கு நடக்கவைத்தே அழைத்துவரப்பட்டனர் என்றும் அவ்வாறு வருகையில் பசியினாலும், நோயினாலும் பாதைகளிலேயே செத்து மடிந்ததைச் சொல்லும் சோக வரலாறும் உண்டு. (பதிவு- மரணத்தில் தொடங்கும் வாழ்வு- மல்லியப்பு சந்தி). இவர்கள்தான் இலங்கையில் பெருந்தோட்டங்களை உருவாக்குவதற்கு உதிரத்தைக் கொடுத்துள்ளனர். இவர்களின் வாழிடமாக 10 ஒ 12 அடிகள் பரப்பளவான அறைகளைக் கொண்டதான தொடர் ல(h)யங்கள் வழங்கப்பட்டன. இன்றும் கூட ழுழு குடும்பமுமே அந்த அவலம் நிறைந்த லைன் அறையில் வாழந்து கொண்டு ( பதிவு – வரையப்படாத லைன்கள் - மல்லியப்பு சந்தி) தினக்கூலிகளாக இருக்கிறார்கள் என்பது அங்கே நிகழ்ந்து கொண்டிருக்கிற மிகப்பெரிய மனித அவலமாகும்.
இந்த மக்கள் எல்லோரும் தமிழர்களா? அவர்களின் இலங்கையின் குடியுரிமை நிலை என்ன?
இவர்களுள் 99வீதமானோர் தென்னிந்திய தமிழர்களே. ஏனையோர் மலையாளிகள் மற்றும் தெலுங்கர் ஆவர். இலங்கையில் அரசியலமைப்பின் பிரகாரம் அங்கு வாழும் மக்கள் தொகையினரின் அளவின்படி இனங்களுக்கு இலக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தவகையில் சிங்களவர் (01), இலங்கை தமிழர் (2), முஸ்லீம்கள் (3), இந்திய தமிழர் (4) ஏனையோர் (5) எனவும் பாகுபடுத்தப்பட்டுள்னர். அரச பொது படிவங்களில் ‘இனம்’ என ஒதுக்கப்ட்டிருக்கும் கூட்டில் நாம் (4) என பதிதல் வேண்டும். அந்தளவுக்கு இந்திய வம்சாவளி தமிழர்கள் தனியொரு இனமாக தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளோம். இதேநேரம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பூர்வீகமாக வாழும் இலங்கை தமிழர்கள் (2) என குறிப்பிடுதல் வேண்டும். இவர்களை மையப்படுத்தியே ஈழப்போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இலங்கைத் தமிழர்கள் பொதுவான வழக்கில் “ஈழத்தமிழர்கள்” என்றும் இந்திய வம்சாவளி தமிழர்கள் “ மலையகத் தமிழர்கள்” என்றும் அழைக்கப்படுகிறார்கள். இனத்தால், மொழியால், பண்பாட்டினால், மதவழிபாடுகளால் (பெருமளவில் இந்துக்கள், அடுத்து கிறிஸ்தவர்கள்) இவர்கள் ஒட்டுமொத்தமாக தமிழர்களே. ஆனால் இவர்கள் வேறுபடுவது “இலங்கையின் குடிமக்கள்” என்ற விடயத்தில்தான்.
இலங்கையில் உள்ள ஏனைய இனங்களில் இருந்து மலையகத்தமிழர்கள் வேறுபடுவது இவர்கள் இன்றும் குறித்த ஒரு சட்டத்தின் கீழ் இலங்கையில் வதிவிட பிரஜைகளாக ( By Registration) பதியப்பட்டிருப்பதுதான். குடியுரிமை (By Decent) உள்ளவர்களாக இல்லை. இவர்களின் பதிவுக்காக இவர்களுக்கு ஒரு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அது கிழிந்தாலோ, தொலைந்தாலோ இம்மக்கள் கிழிந்த அல்லது தொலைந்த பிரஜைகள்தான். அதன் பின் தங்களை அடையாளப்படுத்த பல பிரயத்தனங்களை செய்யவேண்டியிருக்கும். அந்த பிரயத்தனங்களில் தோற்றுப்போன எத்தனையோ பாமரமக்கள் அவர்களின் பிள்ளைகள் அநாதைகளாக வாழ்கின்றனர். அண்மையில் (ஆகஸ்ட் 23 2008) நடந்த மாகாண சபை தேர்தலில் கூட ஏறக்குறைய 10000 பேர் வாக்களிக்க முடியாமல் போன துரதிஸ்டமெல்லாம் நடந்துகொண்டுதான இருக்கிறது. தவிர அபிவிருத்தித்திட்டங்கள் எனும் போர்வையிலும், கட்டாய குடும்பக் கட்டுப்பாட்டுத்திட்டங்கள் மூலமும் மலையக மக்களின் செறிவைக் குறைக்கும் அடக்குமுறைகளும் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். (பதிவு: கூடைபுராணம், நமது கதை, விடிவு, மரணத்தில் தொடங்கும் வாழ்வு – மல்லியப்பு சந்தி)
மலையக மக்கள் குடியுரிமை பெறுவதற்கான வழிகள் உண்டா?
நிச்சயமாக உண்டு. இந்தியாவிலிருந்து இந்த மக்கள் இந்திய அரசின் உடன்பாட்டோடுதான் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டார்கள். பின்னர் 1948ம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த அதேவருடத்தில் மலையக மக்களுக்கான இலங்கை குடியுரிமை சட்டம் இயற்றப்பட்டு பறிக்கப்பட்டது. இவர்கள் நாடற்றவர்களாயினர். பின்னர் அப்போதைய இந்நதிய பிரதமர் சாஸ்திரி அவர்களுக்கும் இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா அவர்களுக்கும் செய்யப்பட்ட “சிறிமா- சாஸ்திரி” ஒப்பந்தம் மூலம் ஒரு தொகுதி மக்கள் இந்தியாவுக்கு மீண்டும் திருப்பிப் பெற்றுக்கொள்ளப்பட்டனர்.
இவர்கள் இன்று தமிழகத்தின் தென்மாவட்டங்களிலும் ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில் தேயிலைத் தோட்டங்களிலும் வாழ்கிறார்கள். அதேநேரம் மலையக மக்களின் ஒரு தொகுதியினரும் இந்தியாவில் அகதியாக முகாம்களில் வாழ்கின்றனர் என்பது ஈழத்தமிழ் அகதிகள் பற்றி தெரிந்த பலரும் அறியாத செய்தி. இந்தியா திருப்பி;பெற்றுக்கொண்டாலும் இந்த மக்களுக்கான புனர்நிர்மாண பணிகளை மேற்கொள்ளாமையினாலேயே இவர்கள் அகதியாக வாழ்கின்றனர்.
நான் இந்தியா வரும்போதெல்லாம் இவ்வாறு திரும்பி வந்த எங்கள் உறவுகளை பார்க்கத் தவறுவதில்லை. என் “மல்லியப்பு சந்தி” தொகுதிக்கான முன்னுரையைக்கூட இவ்வாறு இந்தியா வந்து சேர்ந்த என் உறவுக்காரரான என் குருவிடமே பெற்றுக்கொண்டுள்ளேன் என்பதை குறிப்பிட விரும்புகிறேன். அத்துடன் இந்த உறவுகள் இலங்கையிலிருந்து திரும்பி வருகையில் இந்தியாவை தமது தாய்நாடாக கருதி பெற்றதாயைக் கூட அங்கே தவிக்கவிட்டு வந்த அவல நிலையும் உண்டு.(பதிவு- பொட்டு, மீண்டும் குழந்தையாகிறேன்- மல்லியப்புசந்தி).
மலையக மக்கள் குடியுரிமை பெறுவதற்கான ஒரே வழி அவர்கள் இலங்கையின் குடியுரிமையாளர்களாக பிரகடனப்படுத்தப்படவேண்டியதுதான். இதற்காக சான்றிதழ் வழங்கப்படகூடாது. இதனை இலங்கை அரசாங்கமே செய்யவேண்டும். இதற்காக இந்திய அரசு தனது அழுத்தத்தைக் கொடுக்கவேண்டும். அதனைச் செய்யவேண்டிய கடப்பாடு இந்தியாவுக்கு உண்டு. இப்போது இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக மக்கள் 15 லட்சம் பேறும் இலங்கையின் வதிவிடபிரஜைகளாகவும் இந்திய பிரஜையாக அல்லாமலும் இந்து சமுத்திரத்தில் தத்தளிக்கும் “பார்க்கு நீரிணை”பிரஜைகளாகவுள்ளனர். இந்தியா எங்களைத் திருப்பிப்பெறவேண்டாம். குறைந்த பட்சம் இலங்கை குடியுரிமையாளர்களாக பிரகடப்படுத்துவதற்கான ஏற்பாடுகளையாவது செய்யவேண்டும் என்பதுதான் இந்த மக்களின் எதிர்பார்ப்பாகும்.
இலங்கை எழுத்தாளர்கள் என்றாலே “ஈழப்பிரச்சினையையும்” அதன் பாதிப்புக்களையும் தான் எழுதுவார்கள் எனும் நிலை தமிழகத்தில் உண்டு. அதன் காரணம் என்ன நினைக்கிறீர்கள்?
நான் மேலே சொன்ன விடயங்கள் பற்றிய தெளிவின்மை ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது ஈழப்பிரச்சினையின் வியாபகமாக இருக்கலாம்.
அதேநேரம் மலையக மக்களுக்கும் ஈழப்பிரச்சினைக்கும் தொடர்பில்லை என சொல்லிவிடமுடியாது. ‘தமிழர்கள்’ என்ற பொது அடையாளத்தினால் ஈழப்பிரச்சினையின் பாதிப்புக்களில் மலையக மக்களும் அடங்குகின்றனர். மலையகத் தமிழர்களில் ஒரு பகுதியினர் 1970களில் இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளில் குடியேறிவாழ்கின்றனர்.
அவர்கள் நேரடியாக யுத்தத்தினால் பாதிப்படைகின்றனர். தவிர நான் சொன்ன பிரஜாவுரிமை பிரச்சினை காரணமாக ஆள் அடையாள அட்டை வழங்கப்படாத அல்லது அடையாள அட்டை இருந்தாலும் தமிழர்களென்ற காரணத்தினால் சந்தேகத்தின் பேரிலும் ஏராளமான மலையக இளைஞர் யுவதிகள் ஈழப்பிரச்சினையின் பெயரில் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுகின்றனர்.
மலையக மக்களின் வாழ்க்கையைபற்றி மட்டும் பாடுவது ஈழம் என்ற முதன்மை பிரச்சினையின் தீவிரத்தை நீர்க்கச்செய்யாதா?
நிச்சயமாக இல்லை. பாரதி சாதியத்துக்கு எதிராகவும் பெண்விடுதலைக்காகவும் பாடியதனால் அதேகாலத்தில் அவனது சுதந்திரத்துக்கான பாடுகை நீர்த்துப்போனதா என்ன? முதலில் ஈழத்து தமிழ் இலக்கியம் பற்றி புரிந்துகொள்ளுதல் வேண்டும். பேராசியர் கா.சிவத்தம்பி அவர்கள் இப்படி கூறுகிறார். ‘ஈழத்து இலக்கிய நதி என்பது பல ஓடைகளின் சங்கமிப்பாகும். இதில் யாழப்பாணம் வரும், மட்டக்களப்பு வரும்,( வடக்கு, கிழக்கு) கொழும்பு வரும், இஸ்லாமிய வாழ்க்கை வரும், மலையக வரும். இந்த எல்லா ஓடைகளினதும் சங்கமிப்புதான் ஈழத்து தமிழ் இலக்கிய நதியின் பிரவாகமாகும்’.(மூலம்- ‘மல்லியப்பு சந்தி’ இறுவட்;டு அறிமுக உரை).எனவே ஈழத்து இலக்கியப்பபரப்பில் மலையக இலக்கியத்துக்கு தனியான ஒரு இடமுண்டு. மலையக இலக்கியம் என்று வரும்போது மலையக மக்களின் வாழ்க்கையையும் வலிகளையும் பாடுவதுதான பொருந்தும். அதுதானே சரியானதும் கூட.
அதனையே மல்லியப்பு சந்தி யும் செய்கிறது. அதே நேரம் பொதுப்படையான அடக்குமுறைகளுக்கு எதிராகவும் நாம் பாடாமலில்லை. (பதிவு:- வேள்வி தீயொன்று வேண்டும், பிரிவு, - மல்லியப்பு சந்தி)அடிப்படையில் குடியுரிமை என்ற கோவணத்தடனாவது வாழும் இலங்கைத் தமிழர்கள்களோடு வாழும் மலையக மக்கள் அந்;த குடியுரிமை என்ற கோவணம் கூட இல்லாமல் நிர்வாணமாக நிற்கையில் அதுபற்றி தனியாக பேசுவது, பாடுவது எந்தவகையிலும் ஈழப்பிரச்சினையை நீர்க்கச்செய்யாது என நினைக்கிறேன். ஈழப்பிரச்சினைக்கு தீர்வாக முன்வைக்கப்பட்ட ‘திம்பு கோட்பாட்டில்’ (பூட்டான் நாட்டில் நடைபெற்றது) இந்தியா வம்சாவளி மக்களுக்கு குடியுரிமை வழங்கப்படவேண்டும் எனும் கோரிக்கை தமிழர் தரப்பில் முன்வைக்கப்பட்டமையை நன்றியுடன் நினைவு கூரக்கடமைப்பட்டுள்ளேன்.
இலங்கையில் மலையக மக்களின் நாட்கூலி 170 ரூபா அரிசி 65 ரூபா என்று அறிகிறோம். இந்த நிலை தமிழர்களுக்கு மட்டும் தானா?
இல்லை. விலைவாசி உயர்வு என்பது எல்லோருக்கும் பொதுவான பிரச்சினைதான். ஆனால் மலையக மக்களுக்கான பிரச்சினை வருவாய் சம்பந்தப்பட்டதுதான். ஏனைய சமூகங்களைவிட இந்த மக்களின் வருவாய் அளவு மிகக்குறைவாகும். மலையகத்தமிழர் பதினைந்து லட்சம் பேரில் 90 வீதமானோர் தொழிலாளர் சார்ந்த குடும்பங்களாகும். ஏனையோர் அரச, தனியார் துறைகளிலும் வியாபாரத்துறையிலும் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளி ஒருவருக்கான நாளொன்றுக்கான அடிப்படை சம்பளம் 170 ரூபா. சராசரியாக ஒரு குடும்பத்தில் ஐந்துபேராகும். குடும்பத்தலைவன், தலைவி இருவரினதும் உழைப்பு ஒருநாளைக்கு 340 ரூபா (இந்திய மதிப்பில் 125ரூபா). இப்போது இந்த குடும்பத்தின் உணவு கல்வி, சுகாதாரம் ஏனைய நலன்களின் நிலையை நீங்களே புரிந்துகொள்ளலாம். (பதிவு – ஒப்பந்தம்- மல்லியப்பு சந்தி)
இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகமக்கள் சட்டத்திற்கு உட்பட்ட வகையில் என்ன செய்யலாம் என நினைக்கிறீர்கள்?
இலங்கைப்பிரச்சினை தொடர்பாக தமிழகத்தில் சிலரினது அரசியல் விளையாட்டுக்களை தவிர்த்து விட்டுப்பாரத்தால் தமிழக மக்களிடையே இருக்கும் ஆத்மார்த்தமான ஆதரவினையும் பற்றுதலையும் எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடமுடியாது. அதனையும் தாண்டி உங்கள் சட்டவரையறைக்குள் என்ன செய்யலாம் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் மலையக மக்கள் தொடர்பில் தமிழக மக்கள் அறிந்து கொள்ளவேண்டும் என எதிர்பாரக்கிறோம். நாங்கள் நேரடியாக தமிழகத்தில் உறவுகளைக் கொண்டுள்ளதோடு இன்றும் கூட இந்திய வம்சாவளியினர் என்றே பதியப்பட்டும் அழைக்கப்பட்டும் வருகிறோம். இந்தியாவின் ஆதரவை நாங்கள் எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லாமலில்லை.
தமிழக வணிக சஞ்சிகை ஒன்று 10 வருடங்களுக்கு முன்பு ஒரு குறிப்பு எழுதியிருந்தது. அதில் ‘இலங்கையில் மலைசாதி மக்கள் ஒரு தொகுதியினர் வாழ்கின்றனர். அவர்களும் தமிழ்தான் பேசுகிறார்கள்’ என குறிப்பிடப்பட்டிருந்தது கண்டு மனம் நொந்துபோனேன். இந்திய வம்சாவளி தமிழர்களாக மலையக மக்கள் என தமது தேசியத்தை வலியுறுத்தி நிற்கும் ஒரு சமூகத்தை இது கேவலப்படுத்தும் செயலாகும். நடைமுறையில் தங்கள் வீட்டுசுவரில் காந்தி முதல் எம்.ஜி.ஆர் வரை படமாக தொங்கவிட்டுக்கொண்டும் ‘வடிவேலு’வின் பேச்சு நடையை ஒப்புவித்துக்கொண்டும், மலையக தமிழரான முரளிதரன் பந்து வீசும்போது கூட அதற்கு டெண்டுல்கர் சிக்ஸர் அடிக்கவேண்டும் என ஆசைப்பட்டுக்கொண்டிருக்கும் இந்திய வம்சாவளி தமிழர்களை இந்தியா அடையாளம் காணாமல் இருப்பது துரதிஸ்டமே. இந்தியாவில் மலையக தமிழர்கள் இன்றும் ‘அகதியாக’ வாழ்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களெனில், இலங்கையில் எமக்கு குடியுரிமை கிடைக்கவேண்டும் என வலியுறுத்துவீர்களெனில் அதுவே நீங்கள் எமக்கு தரும் தார்மீக ஆதரவாகும்.
இந்தியா மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையின் எதிர்பார்ப்பும் இதுவேயாகும்.
ஒட்டுமொத்தமாக மலையக மக்களின் வாழ்க்கை தரம் உயர என்ன செய்யலாம் என நினைக்கிறீர்கள்?
இயல்பான போக்கில் அயராத முயற்சியினால் இந்த மக்கள் தமது வாழக்ககைத் தரத்தை உயர்த்த முயற்சித்துக்கொண்டுதான இருக்கிறார்கள். இப்போது கணிசமான அளவில் படைப்பாளிகள், பட்டதாரிகள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள்,ஒரு சில பேராசியர்கள் என விரிந்து செல்கிறார்கள். இலக்கியதுறையில் காத்திரமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளனர். ஆனால் அரசியல் ரீதியாக காத்திரமான தலைமைத்துவத்துக்கான தேவை நிலவுகிறது. அரசியல் ரீதியாக பலம் உறுதிப்படுத்தப்படுகின்றபோது வாழ்க்கைத்தரம் உயர வாயப்புகள் இருக்கின்றன. அதற்கு ‘குடியுரிமை’ என்கிற பிரகடனம் இன்றியமையாதது. இல்லாத பட்சத்தில் இந்த வளர்ச்சி இரட்டிப்பாக இன்னும் இருநு}று ஆண்டுகள் தேவைப்படலாம்.
சந்திப்பு: சேவியர்
Subscribe to:
Post Comments (Atom)
30 comments:
மிகவும் பயனுள்ள பதிவு.
//சங்கர் said...
மிகவும் பயனுள்ள பதிவு.
//
வாருங்கள் சங்கர்.
அன்பு நன்றிகள்.
சரியான நேரத்தில் தெளிவான பதிவு.
சகோதரர் நிர்ஷன் அவர்களே! நம் இந்திய உறவுகளுக்கும் எம் மலையகத் தமிழர்களின் பிர்ச்சினை புரிவதில்லையே. நமக்காக அவர்கள் என்றும் குரல் கொடுக்கவில்லையே.
இறக்குவானை நிர்ஷன்,
//இனங்களுக்கு இலக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தவகையில் சிங்களவர் (01), இலங்கை தமிழர் (2), முஸ்லீம்கள் (3), இந்திய தமிழர் (4) ஏனையோர் (5) எனவும் பாகுபடுத்தப்பட்டுள்னர். அரச பொது படிவங்களில் ‘இனம்’ என ஒதுக்கப்ட்டிருக்கும் கூட்டில் நாம் (4) என பதிதல் வேண்டும்.//
என்ன மாதிரி நாடய்யா இது? :((
1.இந்த மாதிரி படிவங்களில் நிரப்புதல் கட்டாயமா அல்லது optionalஆ?
//ஒரு சட்டத்தின் கீழ் இலங்கையில் வதிவிட பிரஜைகளாக ( By Registration) பதியப்பட்டிருப்பதுதான். குடியுரிமை (By Decent) உள்ளவர்களாக இல்லை.//
2.முரளிதரன் இலங்கை குடியுரிமை கொண்டவரா?
3.யாருக்குமே குடியுரிமை கிடையாதா நீங்கள் உட்பட?
**
4.மலையக மக்களின் தற்போதைய அரசியல் தலைவர் யார்? அவர்கள் சிங்கள அபிமானிகளா இல்லை புலிகள் அபிமானிகளா?
5.மலையக அரசியல்/தொழிற்சங்கத் தலைவர்கள் தமிழ்நாட்டின் உறவை எப்படி பார்க்கிறார்கள்?
6.மலையக தொழிற்சங்கங்கள் கம்யூனிச அமைப்பா? அப்படி என்றால் இந்திய அல்லது உலக அளவில் அவர்களின் அமைப்பிற்கு தொடர்பு/கருத்து பரிமாற்றங்கள் உண்டா?
7.ஒரு பகுதி மக்கள் (தமிழீழம்) போராடும்போது எப்படி இவ்வளவு காலம் உணர்வற்று இருக்கிறது இந்த சமுதாயம்? உணவு/இருப்பிடம் முக்கிய காரணங்களாக போனதினாலா? :(((
8.நில எல்லைகள் தாண்டி புலிகளின் அரசியல் உதவி கோரப்பட்டதா?
9.அல்லது புலிகள் இதற்கான தீர்வு குறித்து ஏதும் கருத்துக் கொண்டுள்ளார்களா?
THE PROPOSAL BY THE LIBERATION TIGERS OF TAMIL EELAM ON BEHALF OF THE TAMIL PEOPLE FOR AN AGREEMENT
http://www.ltteps.org/mainpages/images/2004/10/proposal.pdf
மேலே உள்ள கோப்பில் மலையகம் பற்றி ஒன்றும் இல்லையே? அவர்கள் பிரச்சனை அவர்களுக்கு என்று கொண்டாலும் வருத்தமாக உள்ளது. :-((
10.மலையக மக்கள் ஏன் புலிகளுடன் ஒருங்கிணைந்து அரசியல் தீர்வுகாணக்கூடாது? (அலாஸ்கா மாநிலம் 'கனடா'விற்கும் 'ரஷ்யா'விற்கும் அருகில் இருந்தாலும் அது அமெரிக்காவின் மாநிலம். )
**
தமிழ்நாடு ஏதாவது செய்யும் தமிழ்நாட்டினர் புரிந்து கொள்வார்கள் என்றெல்லாம் நினைக்கத் தோன்றவில்லை எனக்கு.
வாயில் பீயை ஊற்றி இங்குள்ள மக்களை இங்குள்ளவர்களே கொடுமைப்படுத்தினாலும் அவை எல்லாம் முக்கியச் செய்திகளாக வராது தமிழ்நாட்டில்.
யாராவது ஒரு சினிமாக்காரர் பேசினால் தவிர தமிழ்நாட்டில் கருத்துகள் போய்ச்சேராது. அப்படியே போனாலும் மறக்கப்படும் சாத்தியக்கூறுகளே அதிகம்.
யாரைச் சொல்லியும் குற்றம் இல்லை. பொருளாதார ஓட்டத்தில் தாய், தந்தைகளே விடுதிக்குப் போகும்போது யாரையும் குற்றம் சொல்ல முடியாது.
**
கல்வியறிவு முக்கியம்.
இப்படியே இருந்தால் ஒரு இனமே அடையாளம் இன்றிப் போய்விடும் அபாயம் உள்ளது.
எதுவும் செய்ய இயலாத கையாலாகதனத்தில் என்ன செய்ய நான் :((
http://www.malaiyagam.org க்கான இணைப்பைக் கொடுங்கள் உங்கள் பதிவில்
உங்கள் மக்களுக்கு எனது ப்ரியங்களைச் சொல்லுங்கள்.
வெளிப்படையாக பேச இயலாது என்றால் balloonmama at gmail க்கு மயில் அனுப்பவும்.
//‘இலங்கையில் மலைசாதி மக்கள் ஒரு தொகுதியினர் வாழ்கின்றனர். அவர்களும் தமிழ்தான் பேசுகிறார்கள்’ என குறிப்பிடப்பட்டிருந்தது கண்டு மனம் நொந்துபோனேன்.//
இதனைப் படித்தவுடன் நானும் நொந்துபோனேன். அறியாமையையே அறிவுடைமை என்றெண்ணி வாழ்பவர்களை நினைத்து நொந்துபோகாமல் வேறென்ன செய்வது?
திலகரின் சந்திப்பைப் பலரும் படித்தறிய நீங்கள் உதவியுள்ளீர்கள். உங்களுக்கு நன்றியறிதல் உடையேன்.
மலையக மக்கள் என்ற ஒரு இனம் பற்றியோ அவர்கள் தென்னிந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்பது பற்றியோ அறியாத எத்தனையோ பேர் இந்தியாவில் இருப்பது துரதிர்ஷ்டம் தான். திலகராஜ் என்ற திலகருடன் இணைந்து சிறு பையனாக அக்காலத்தில் பள்ளி சென்ற அனுபவங்கள் இரயிலில் செல்லும் போது அவருடனான கருத்தாடல்கள் (அந்த சிறு வயதிலும்) என் மனக்கண்ணில் கடந்து போகின்றன நிர்ஷன். திலகரும் எனது மண்ணில் பிறந்தவர் என்பது எனக்கு பெருமையளிக்கின்றது.அவருடனான அந்த இரயில் பயணங்கள் எனும் அனுபவங்களை விரைவில் தருகிறேன்.
2.முரளிதரன் இலங்கை குடியுரிமை கொண்டவரா?
muralitharanukku ilankai kudiurimai illai. avar india thamilar.
-Amal Hatton.
பகிர்வுக்கு நன்றி நிர்ஷன் பதிவை பிரதி செய்திருக்கிறேன்...
// ச.இலங்கேஸ்வரன் said...
சரியான நேரத்தில் தெளிவான பதிவு.
சகோதரர் நிர்ஷன் அவர்களே! நம் இந்திய உறவுகளுக்கும் எம் மலையகத் தமிழர்களின் பிர்ச்சினை புரிவதில்லையே. நமக்காக அவர்கள் என்றும் குரல் கொடுக்கவில்லையே.
//
உண்மைதான். அப்படி குரல்கொடுத்திருந்தால் இன்று தலைநிமிர்ந்து சகல வளங்களும் நிறைந்த ஒரு சமுதாயமாக மலையகம் மாற்றம் கண்டிருக்கும்.
நன்றிகள் உங்களுக்கு.
கல்வெட்டு,
உங்கள் பின்னூட்டத்தால் நான் பெருமை கொள்கிறேன். நீங்கள் கேட்டுள்ள கேள்விகளுக்கு நான் பதில்சொல்வதைவிட திலகர் பதிலளிப்பதே சிறந்தது என நினைக்கிறேன்.
நீங்கள் தந்த தளம் பார்த்தேன். இணைப்பு கொடுக்கிறேன். விரைவில் மின்மடலில் உங்களை சந்திக்கிறேன். உங்களைப்போன்றவர்கள் எமக்கு கைகொடுக்க இருக்கும்போது எதற்கு பின்னிற்க வேண்டும் எனத் தோன்றுகிறது.
நன்றிகள் நன்றிகள்.
//அ. நம்பி said...
//‘இலங்கையில் மலைசாதி மக்கள் ஒரு தொகுதியினர் வாழ்கின்றனர். அவர்களும் தமிழ்தான் பேசுகிறார்கள்’ என குறிப்பிடப்பட்டிருந்தது கண்டு மனம் நொந்துபோனேன்.//
இதனைப் படித்தவுடன் நானும் நொந்துபோனேன். அறியாமையையே அறிவுடைமை என்றெண்ணி வாழ்பவர்களை நினைத்து நொந்துபோகாமல் வேறென்ன செய்வது?
திலகரின் சந்திப்பைப் பலரும் படித்தறிய நீங்கள் உதவியுள்ளீர்கள். உங்களுக்கு நன்றியறிதல் உடையேன்.
//
என்ன செய்ய நம்பி. தமிழினத்தவராயிருந்தாலும் உலகளவில் இனங்காணப்படாத சமுதாயமாகத்தான் மலையகம் இன்றுவரை உள்ளது. இதுதான் விதி போல??
வருகைக்கு நன்றிகள்.
வாருங்கள் சிவகுமாரரே,
நன்றி.
திலகரை இதுவரையில் நான் நேரில் சந்திக்கவில்லை. ஆனால் தமிழர்கள் மீதும் சமுதாயம் மீதும் அவர் கொண்டுள்ள அக்கறையும் ஈடுபாடும் வியக்கவைக்கிறது. என்னைவிட மூத்தவர் (அறிவிலும் தகைமையிலும் எல்லாவற்றிலும்) என்றாலும் நல்ல நண்பரைப்போல பழகுகிறார்.
உங்களுடைய பதிவினை எதிர்பார்க்கிறேன். விரைவில் பதிவிடுங்கள்.
கல்வெட்டு கேட்டுள்ள கேள்விகளுக்கு உங்களது பார்வையிலான பதில்களையும் பின்னூட்டமாக தரலாமே?
//தமிழன்...(கறுப்பி...) said...
பகிர்வுக்கு நன்றி நிர்ஷன் பதிவை பிரதி செய்திருக்கிறேன்...
//
அக்கறையுடனான வருகைக்கு நன்றி.
எனது பதிற்குறியைத் தருமுன்னர் இருவருக்கு எனது முதல் நன்றிகள். முன்னையவர் சேவியர். வலைப்பதிவு மூலமான தொடர்புகளால் நேரில் சந்திக்கும் வாய்ப்புப்பெற்று சந்தித்ததோடு மட்டுமல்லாமல் என்னுடனான ஒரு நேர்காணலை பத்திரிகை (தமிழோசைக்கும் நன்றிகள்) ஒன்றில் பிரசுரித்தமைக்கு. பத்திரிகையில் பேட்டி வெளியானதை எனக்கு சேவியர் அறிவித்ததும் எனது இந்திய உறவினர் நண்பர்களுக்கு தகவல் அனுப்பினேன். கிடைத்த பதில் பத்திரிகைகள் விற்றுத் தீர்ந்துவிட்டன என்பது. பின்னர் என் நெருங்கிய உறவினர் ஒருவர் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் ஏற்கனவே வாங்கியிருந்த நண்பரிடத்தில் பெற்று எனக்கு தொடர்பு கொண்டு சொன்னார் கையிலிருப்பதாக, நான் ஆறுதலைடைந்தேன். ஆனால் இன்னும் கைக்குக்கிடைக்கவில்லை.
நண்பர் சேவியர் அண்மையில் மின்னஞ்சல் மூலமாக பேட்டியினை அனுப்பியிருந்ததை நானும் பார்த்தபின் பார்வைக்காக நிர்ஷனிடம் பகிர்ந்துகொண்டேன். அத்துடன் அவர் இன்று உலகம் முழுக்க எடுத்துச்சென்று உன்னத பணியினை ஆற்றியுள்ளார். இரண்டாமவரான நிர்ஷனின் உழைப்புக்கும் முயற்சிக்கும் எனது நன்றிகள்;. நண்பர் நிர்ஷன் இத்தனை முயற்சிகள் எடுக்கிறார் என்றால் அது முகதாட்சனைக்காக இல்லை என்பது புரிகறிது. ஏனெனில் இதுவரை என் முகம் அறியாதவர் நிர்ஷன். சமூகத்தின் மீதான அவரது அக்கறை போற்றத்தக்கது.
பேட்டியின் பின்னு}ட்டிகள் மிகுந்த உற்சாகமளிக்கின்றன. வலைப்பதிவின் பெறுமதியும் தெரிகின்றது. பத்திரிகை வாசித்த எத்தனையோ அன்பர்கள் தங்களுக்குள் எழுந்த கேள்விகளை கேட்க முடியாமல் போக வலைப்பதிவிட்டதன் காரணமாக இதைப்பற்றிய பல கேள்விகளையும் கேட்டு பல நண்பர்கள் பல நாடுகளில் இருந்து தொடர்பு கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது. அதில் பத்து கேள்விகளுக்குமான பதில்களை விரையில் தருகிறேன். (அதுவோர் நேர்காணல் ஆகிவிடும்போல் தெரிகிறது…) நம்பிக்கும் ஏனையவர்களுக்கும் நன்றிகள். நான் மலேஷியா (ஏலவே வந்திருக்கிறேன்) வரும்போது முடியுமாயின் நம்பியை சந்திக்கிறேன். உங்களுடனான உறவு (மலேஷிய தமிழர்கள்) எங்களுக்கு (மலையக மக்களுக்கு) இன்னொரு பலம்.
திலகர்
தம்பி சிவகுமாரின் பதிவு நெஞ்சைத் தொட்டது. எனக்கும் அந்த நாள் ஞாபகங்கள் வந்து சேர்ந்தன. ரயிலில் இணைந்து பயணித்து உரையாடிய நாங்கள் இன்று இணையத்தில் இணைந்திருப்பது மகிழ்ச்சி.
நான் நிறைய பேரை சமூகத்துக்காக வளர்த்தவன் என்பதை தம்பி சிவகுமார் அறிவீர்கள். என்னுடைய அரவணைப்பில் வளர்ந்தவர்கள் எத்தனையோ பேர் எனக்கு நன்றியில்லாவிட்டாலும் பரவாயில்லை சமூகத்திடமும் நன்றிகெட்டத்தனமாக நடந்து கொள்கிறார்களே என்ற ஆதங்கம் என்னிடத்தில் நிறைய உண்டு. அதே நேரம் பாடசாலைக்காக ரயிலில் பயணிக்கும் ஒரு சில மணித்தியாலங்களில் உரையாடிய நிகழ்ச்சிகளையும் விடயங்களையும் கூட மனதிலிறுத்தி இன்று சமூகத்துக்காக குரல்கொடுக்கும் தம்பி சிவகுமாரை நினைக்கும் போது பெருமையாயிருக்கிறது. நீங்கள் குறிப்பிட்டது போல் நமது மண்ணுக்குள் ஏதோ இருக்கிறது. கவிஞர் சி.வி. வேலுப்பிள்ளை, அமைச்சர் எம்.எஸ்.செல்லச்சாமி, கல்வியாளர் அரசியலாளர் வி.டி தர்மலிங்கம், கல்வியாளர் ரி.வி.மாரிமுத்து, தமிழ்மணி சி.எஸ்.காந்தி விரிவுரையாளர் வ.செல்வராஜா, சமூக சேவையாளர் சண்முகம் மாஸ்டர் என நம் சமூகத்தின் வரலாறுகள் நம்பின்னே இருப்பதுவும் ஒரு காரணமோ…….? உங்களின் எல்லா முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள்.
அண்ணன் திலகராஜ் (திலகர்)
மலையக தமிழனின் குரல் உலகத்தின் காதுகளுக்கு கொண்டுசெல்லப்பட தொடங்கியாகிவிட்டது....
உண்மையில் மிக்க மகிழ்ச்சி...
நிச்சயம் வரும் காலம் இறக்குவானை நிர்ஷனை நினைத்துக்கொள்ளும்
என்ன செய்வது
என்று தெரியாது
ஒரு சமூகம்
விக்கித்து நின்ற நிலை மாறுகிறது.
மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம்
கை கோர்த்து நிற்போம் நமது
சமூகத்தின் விடிவைக்காண.
கலைஞர் கருணாநிதி - தமிழர்களில் அனுபவமிக்க, மூத்த நாடகக் கலைஞன்
- தேசப்பித்தன்
வன்னியிலிருந்து அனுப்பப்பட்டதாக சொல்லப்படும் ஓர் இறுவட்டை பார்த்ததும், தமிழக முதலமைச்சரால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட நாடகம் ஒன்று 29ம் திகதி சுபமாக, அதாவது முதல்வர் கருணாநிதிக்கு சுபமாக முடிவடைந்துள்ளது.
ஆறுதலாக இருக்கும் என்று சொல்லி ஆறு அம்ச தீர்மானங்களை நிறைவேற்றிய தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்துடன் (?) ஆரம்பித்த கூத்தை, சொந்தப் பணத்தில் பத்து இலட்சம் ரூபாயை வழங்கியும் இந்திய மத்திய அரசின் முயற்சிகளுக்கு நன்றி கூறியும் நிறைவு செய்து வைத்துள்ளார் கருணாநிதி. இந்தியா என்ன செய்து கிழித்துவிட்டதென்று நன்றி கூறினாரோ, அது வேறு விடயம்.
கலைஞர் அரங்கேற்றிய இந்த நாடகத்தில் பல கதாபாத்திரங்கள் இருந்தன. தமிழக முதல்வர், இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள், இந்தியப் பிரதமர், காங்கிரசின் தலைவர், தமிழக எதிர்க்கட்சித் தலைவர்கள், தமிழ் சினிமாத்துறை, இலங்கை அரச அதிபர், இலங்கை அதிபரின் ஆலோசகர் எனப் பலரும் பங்கு பற்றியிருந்தனர். நாடகத்தில் பங்கு பற்றிய அனைவருமே தமது தரப்புக்களிற்கு ஏதுவான சாதகமான இலாபப் பங்குகளை பெற்றுக் கொள்ளத் தவறவில்லை.
இந்த கூத்தாட்டத்தில் பயனடைந்தவர் என்றால் அது கருணாநிதியும் அவரது குடும்ப அரசியல் தலைமையும், இந்திய மத்திய அரசின் அதிகார மையமும் எனலாம். இந்த நாடகத்தை பயன்படுத்திக் கொண்டவர்கள் இலங்கையின் இனவாத அரசியல் தலைவர்கள். பாதிக்கப்பட்டவர்கள் என்று பார்த்தால், ம.தி.மு.கவின் தலைவர்களும், தமிழ்ப் பற்றுக்கொண்ட தமிழ்த் திரை இயக்குநர்களும் எனலாம். ஏமாற்றப்பட்டவர்கள் என்ற வகையில் வஞ்சக நோக்கங்கள் எதுவுமின்றி ஈழத் தமிழர்களுக்காக வெயிலிலும் கடும் மழையிலும் தமது ஆதரவுக் கரங்களை உயர்த்திய சாதாரண தமிழகத் தமிழர்கள் என வகைப்படுத்தப்படுகிறார்கள். ஏமாறுவோம் எனத் தெரிந்தும் சொந்த மக்களையும் ஏமாற்றி, தாங்களும் ஏமாளியானவர்கள் யாரென்றால் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும், நெடுமாறன், ராமதாஸ், திருமாவளவன் போன்ற தமிழக தலைவர்களும்தான். ஒட்டுமொத்தமாக, இந்த நாடகத்தில் பழைய அனுபவத்தையே பாடமாகக் கற்றுக் கொண்டவர்கள் ஈழத் தமிழர்கள் மட்டுமே என்றால் அதை மறுப்பதற்குமில்லை.
மின்வெட்டு, விலைவாசி உயர்வு என்பவற்றால் மதிப்பிழந்திருந்த கருணாநிதி தலைமையிலான ஆளும் தரப்பு, மக்களின் கவனத்தை திசை திருப்ப வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. அதேவேளை அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் நாடாளுமன்ற சட்டசபைத் தேர்தல்களுக்கான கூட்டணியாக மீண்டும் காங்கிரசுடனான தற்போதைய கூட்டை பலமானதொரு நிலையில் புதுப்பிக்க வேண்டிய தேவையும் இருந்தது. அதாவது மத்தியில் தமிழக கூட்டணியின் 40 எம்.பிக்கள் எனும் பலத்தை ஆளும் காங்கிரசுக்கு உணர்த்த வேண்டிய தருணமாகவும் இன்றைய காலம் தி.மு.கவிற்கு விளங்குகின்றது.
ஆனந்தவிகடன் - நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இணைந்து நடாத்திய கருத்துக் கணிப்பில் வெளிப்படுத்தப்பட்ட புலிகள் இயக்கம் அதன் தலைமைத்துவம் ஈழத் தமிழர்களின் போராட்டம் என்பன பற்றிய தமிழக மக்களின் உணர்வலைகளை சாதகமாக பயன்படுத்த துணிந்த கருணாநிதிக்கு ஈழத் தமிழர்கள் பற்றிய நாடகக் கூத்து மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதும் தெரியும்..
மூதூர் கிழக்கில் இருந்து தமிழ்மக்கள் விரட்டப்பட்டு கிழக்கில் சுமார் இரண்டு இலட்சம் மக்கள் தொடர்ச்சியாக இடம்பெயர்ந்து அவலப்பட்டு, குண்டுவீச்சுக்களிலும், எறிகணை வீச்சுக்களிலும் முன்னூறுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டபோது வாய்மூடி கண்ணயர்ந்திருந்த கருணாநிதி, மத்திய அரசின் இலங்கைத் தமிழர் கொள்கையே தனது கொள்கை என்று சப்பைக் கட்டு கட்டிய கருணாநிதி, விடுதலைப் புலிகளுக்கு தமிழ்நாட்டில் எக்காலத்திலும் இடமில்லை என்று கூறி, இலங்கை அகதிகளுக்கெதிரான போக்கை சொல்லிலும் செயலிலும் காட்டி வந்த கருணாநிதி
இன்று இறுவெட்டை பார்த்து கண்ணீர்விட்டு, பத்து இலட்சம் ரூபா பணம் கொடுத்து நிவாரணப் பொருட்களை சேகரித்து அனுப்பி வைக்க தயாராகின்றார் என்றால் அது தேர்தல் நோக்கத்தைத் தவிர வேறொன்றில்லை.
தமிழ்நாட்டு எம்.பிக்கள் பதவிகளை துறக்க மாட்டார்கள் என்பதை ஈழத் தமிழர்கள் நன்கு அறிந்து வைத்திருப்பதைப் போல இந்திய நடுவண் அரசும் கூட நன்கு அறியும். இருந்தும் கருணாநிதியின் நாட்டியத்திற்கு உணர்ச்சியூட்டி இலங்கையை மிரட்டியதன் மூலம் இந்திய அரசு தனது பிராந்திய மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த இச்சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டது. அதில் இலங்கைத் தமிழர்களின் நலன்கள் எதுவும் உள்ளடக்கப்பட்டிருக்காது என்பதும் உண்மை.
ஈழப் போராட்டத்தின் இறுதி மூலோபாயமாக ஆயுதப் போராட்டம் அமைந்துள்ளதும், அதன் முதன்மையானதும், ஒரே போராட்ட அமைப்பாகவும் ஜனநாயக மறுப்பையும், ஈவு இரக்கமற்ற படுகொலைக் கலாச்சாரத்தையும் பிரதான தந்திரோபாயங்களாக கொண்ட புலிகள் அமைப்பே தற்போது விளங்குகின்றது.
புலிகளை ஜென்ம விரோதியாக ஒதுக்கி வைத்துள்ள இந்திய மத்திய அரசுக்கு இலங்கை அரசை மிரட்டி அடிபணிய வைக்கக் கூடிய மாற்று அமைப்புக்களோ, வழிகளோ வடகிழக்கில் கிடையாது. அதற்காக புலிகளை மறைமுகமாகவேனும் ஆசிர்வதிக்கும் எண்ணமும் தற்போதைக்கு இல்லை. இந்த நிலையில் இலங்கை அரசின் யுத்த அரசியலுக்கு முண்டு கொடுப்பதைத் தவிர வேறு வழி ஏதும் இந்தியாவுக்கு இருப்பதாக தெரியவில்லை. இலங்கை அரசு தன்னைவிட்டு விலகிச் செல்வதை தடுப்பதற்கு.
ஆனாலும் இலங்கை அரசோ இந்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்பதுதான் உண்மை. மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று தடவைகள் கப்பல்கள்மூலம் கனரக யுத்த உபகரணங்களை எந்தவிதமான நிர்ப்பந்தங்களும் நிபந்தனைகளுமின்றி தென்கோடியில் இறக்கிவிட்டு செல்ல பாகிஸ்தானும் ஈரானும் சீனாவும் தயாராக உள்ளன. பொருளாதார உதவிகளை வழங்கி, இந்திய - மேற்குலக இராஜதந்திர அழுத்தங்களை உதாசீனப்படுத்தக் கூடிய பலத்தை இலங்கைக்கு கொடுக்க சீனாவும் ஈரானும் தயாராக உள்ளன.
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் அடிப்படையாக இருந்த வட-கிழக்கு இணைப்பு விவகாரம் சிங்கள சமூகத்தால் தூக்கி வீசப்பட்டபோது கையாலாகாத நிலையில் இருந்த இந்தியா இன்று, கிழக்கு அதிகாரம் வேண்டும். வடக்கிற்கு அதிகாரம் வேண்டும் என்று கேட்பது கூட்டறிக்கையின் சுவைக்கு இடப்பட்ட வாசனைத் திரவியங்களை போன்றதே. இந்தக் கோலத்தில், இந்தியாவுக்கு சொல்லி இலங்கை அரசை யுத்தத்தை நிறுத்தச் செய்யலாம் என்று நினைத்த அனைத்து அரசியல் கூத்தாடிகளையும் என்ன பெயர் சொல்லி அழைப்பதென்றே தெரியவில்லை.
ஒரு காலத்தில் தமிழ் ஆயுத அமைப்புக்களை வைத்து இலங்கையை மிரட்டிய இந்தியா, மிகவும் பலவீனப்பட்டு போயுள்ள தனது இலங்கை சம்பந்தமான இராஜதந்திர நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்திக் கொள்ள கலைஞரின் உதவியை பெற்று செயற்பட முயற்சிக்கிறது போலும். இருந்தும் இந்தியா இதில் வெற்றிபெறப் போவதில்லை. எதிரியை வெல்ல முடியாவிடின் இணைந்துவிடுவதே மேல் என்று சொல்வதுபோல் இந்தியா இலங்கை அரசுடன் இணைந்து செயற்படவும் மறுபுறத்தில் முயற்சிக்கிறது.. ஆனாலும் அதிலும் இந்தியாவிற்கு வெறும் தோல்விதான். இலங்கை அரசின் நண்பர்கள் வரிசையில் இந்தியாவுக்கு முன்னால் பல நண்பர்கள் நிற்கிறார்கள். உலகிலேயே சிறந்த நண்பன் இந்தியாதான் என்று புதுடில்லியில் பசில் கூறியது ஏமாற்று என்பது பசிலுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் புரியும்.
இவற்றையெல்லாம் மேவி கலைஞர் இந்திய மத்திய அதிகார வர்க்கத்துடன் இணைந்து நடாத்திய நாடகத்தின் பிரதான விளைவுகள் எனச்சிலவும் சுட்டிக்காட்டப்பட வேண்டியுள்ளது.
கருணாநிதி கொடுத்த (?) இரண்டுவார காலக்கெடு பகுதியில் வடக்கில் இலங்கை விமானப்படை குண்டு வீச்சுக்களில் உயிரிழப்புக்கள் ஏற்படுவது தவிர்க்கப்பட்டிருந்தது. இந்நடவடிக்கையை இலங்கை அரசு இந்திய அரசின் கையறுநிலையை ஆசுவாசப்படுத்த மேற்கொண்டிருந்தது என்பதை, மீண்டும் நேற்று (காலக்கெடு முடிவின் முதல்நாள்) இலங்கை விமானங்கள் நடாத்திய கண்மூடித்தனமான குண்டுவீச்சில் மூன்று தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை உறுதிப்படுத்துகின்றது.
அடுத்ததாக, எதிர்வரும் காலங்களில் தமிழகத்தில், ஈழத் தமிழர்கள் சார்பாக அந்த மக்களால் முன்னெடுக்கப்படும் எத்தகைய எழுச்சிகளையும் அரசும், அதன் தோழமைக் கட்சிகளும் கணக்கிலெடுக்காமலிருக்கக் கூடிய துணிச்சலையும் ஈழத்தமிழர்களுக்காக ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்கக்கூடிய ஆதரவு நிலை வட கிழக்குக்கு வெளியே இருக்கப் போவதில்லை எனும் மோசமான நிலையையும் தமிழர்கள் தரப்பில் கருணாநிதியின் கூத்து உருவாக்கியுள்ளது.
ரஜீவ் காந்தியின் படுகொலையின் பின்பு, நீண்ட காலத்தின் பிறகு, சாதாரண தமிழக மக்கள் மத்தியில் உருவாகியுள்ள ஆரோக்கியமான கரிசனையை ஈழத் தமிழர்களாகிய நாம் அவமதிக்க வேண்டாம் வரவேற்போம். அதேநேரத்தில் தமிழக அரசியல் தலைமைகளிற்கு ஈழத் தமிழர்களின் அரசியல் போராட்டத்தில் அவர்களின் சுயநலமற்ற பங்கு, பணி எவ்வாறு அமைய வேண்டும் என்பதை ʽஅ" இலிருந்து சொல்லிக் கொடுக்க யாராவது முன் வந்தேயாக வேண்டும். என்றோ ஒரு நாளிலாவது, ஈழத் தமிழர்களுக்காக அர்த்தபுஷ்டியான ஆதரவை வெளிப்படுத்த அதை நெறிப்படுத்தக்கூடிய தலைமை உருவாகும் என்று காத்திருப்போம்.
www.thenee.com
//அதில் பத்து கேள்விகளுக்குமான பதில்களை விரையில் தருகிறேன். (அதுவோர் நேர்காணல் ஆகிவிடும்போல் தெரிகிறது…) நம்பிக்கும் //
நன்றி திலகர்.
நீங்கள் ஏதேனும் அமைப்பின் ஆதரவாளராக (அபிமானியாக)இருந்தால்கூட மாற்று அமைப்புகளின் கருத்துகளையும் பதிவு செய்யுங்கள்.
ப்ரியங்களுடன்
கல்வெட்டு
//ஜோசப் இருதயராஜ் said...
மலையக தமிழனின் குரல் உலகத்தின் காதுகளுக்கு கொண்டுசெல்லப்பட தொடங்கியாகிவிட்டது....
உண்மையில் மிக்க மகிழ்ச்சி...
நிச்சயம் வரும் காலம் இறக்குவானை நிர்ஷனை நினைத்துக்கொள்ளும்
என்ன செய்வது
என்று தெரியாது
ஒரு சமூகம்
விக்கித்து நின்ற நிலை மாறுகிறது.
மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம்
கை கோர்த்து நிற்போம் நமது
சமூகத்தின் விடிவைக்காண.
//
நாம் கைவிடப்படவில்லை என்ற ஆறுதல் தோன்றுகிறது.நன்றிகள் பல உங்களுக்கு.
திலகருக்கு நன்றிகள். கல்வெட்டு கேட்டுள்ள கேள்விகளுக்கு பதில்தருவீர்கள் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறேன்.
அனானியின் விளக்கமான பின்னூட்டத்துக்கு நன்றி. இவ்வாறான சில வடயங்கள் மாற்றுச்சிந்தனையில் சிந்திக்கத் தூண்டுகிறது.
மிக அற்புதமான பதிவு. இன்றைய சூழலில் தேவையான பதிவும் கூட. இதில் பாதிக்கும் மேல் எனக்கு புதிய தகவல்களை தந்திருக்கிறது. இது போன்ற முயற்சிகளில் இன்னும் தீவிரமாக இறங்க வேண்டும் நிர்ஷன்.
இந்த பதிவை என் வலைப்பூவில் வெளியிட அனுமதி வேண்டுகிறேன்.
மிக அற்புதமான பதிவு. இன்றைய சூழலில் தேவையான பதிவும் கூட. இதில் பாதிக்கும் மேல் எனக்கு புதிய தகவல்களை தந்திருக்கிறது. இது போன்ற முயற்சிகளில் இன்னும் தீவிரமாக இறங்க வேண்டும் நிர்ஷன்.
இந்த பதிவை என் வலைப்பூவில் வெளியிட அனுமதி வேண்டுகிறேன்.
நண்பர் கல்வெட்டின் கேள்விகளுக்கு திரு.திலகர் அவர்களின் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அதை எனக்குத் தெரியபடுத்துங்கள் நிர்ஷன்.
அதையும் என் வலைப்பூவில் வெளியிட அனுமதி வாங்கி குடுங்க.
//பொடியன்-|-SanJai said...
மிக அற்புதமான பதிவு. இன்றைய சூழலில் தேவையான பதிவும் கூட. இதில் பாதிக்கும் மேல் எனக்கு புதிய தகவல்களை தந்திருக்கிறது. இது போன்ற முயற்சிகளில் இன்னும் தீவிரமாக இறங்க வேண்டும் நிர்ஷன்.
இந்த பதிவை என் வலைப்பூவில் வெளியிட அனுமதி வேண்டுகிறேன்.
//
நன்றி சஞ்சய்.
ஒதுக்கப்பட்ட சமுதாயமாக வாழ்ந்துகொண்டிருக்கும் மலையக மக்களுக்காக யாரும் குரல்எழுப்புவதில்லை. தங்களைப்போன்ற அன்புள்ளம் படைத்தவர்களின் வருகையும் பின்னூட்டமும் எத்தனையோ சந்தோஷத்தை தருகிறது. உண்மையாகவே கூறுகிறேன்.
நீங்கள் தாராளமாக பதிவிடுங்கள். ஊமைக்குரல்கள் உங்கள் பதிவில் ஒலிக்கட்டும்.
அனுமதிக்கு நன்றி நிர்ஷன்.
இங்கே இந்தப் பதிவு.
http://podian.blogspot.com/2008/11/blog-post_04.html
//பொடியன்-|-SanJai said...
அனுமதிக்கு நன்றி நிர்ஷன்.
இங்கே இந்தப் பதிவு.
http://podian.blogspot.com/2008/11/blog-post_04.html
//
நன்றி சஞ்சய்.
பார்த்து மகிழ்ந்தேன். பின்னூட்டத்தில் சந்திக்கிறேன்.
தமிழ் நாட்டில் உள்ள சிலருக்கு மலையக தமிழர்கள் யார் என்ற விடயம் தெரிவில்லை
இலங்கை பூர்விக தமிழர்கள் பற்றி தெரிந்த இவர்களுக்கு இலங்கைல் மலையக தமிழ் இனத்தவர்கள் இரண்டு இனமாக உள்ளதை தெரியவில்லை
தமிழ் தேசியம் பேசும் தேசியவாதிகளே ஏன் மலையக தமிழர்கள் தாக்குதலை கண்டிக்கவில்லை http://www.nerudal.com/nerudal.26736.html/comment-page-1#comment-7798
மலையகத்தில் வாழ்த்து வரும் தமிழர்களை இந்திய தமிழர்கள் என்று வேறுபடுத்தி பார்ப்பது ஏன் இது தான் தமிழ் தேசியமா
இலங்கையில் மலையக தமிழர்கள் வேறு என்ற நிலையே உள்ளது! :
இலங்கை பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம்
இதற்கான விடயம் தெரியவேண்டும்
http://inioru.com/?p=6886
1946 ஆம் ஆண்டு இலங்கையின் மொத்த சனத் தொகையில் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை 10.9 வீதமாகவே இருந்தது அதேவேளை பெரும்பான்மை தமிழர் என்ற நிலையில் மலையக தமிழர்களே காணப்பட்டனர்1946 ஆம் ஆண்டு மலையக தமிழர்களின் எண்ணிக்கை (இந்திய வம்சாவளியினர்) 11.7 விழுக்காடாக காணப்பட்டபோது . சுதேசிய பூர்வீக தமிழர்களாக கருதப்பட்ட இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை 10.9 விழுக்காடாக இருந்தது. அதேவேளை முஸ்லிம்களின் எண்ணிக்கை 6.2 விழுக்காடாக இருந்தது. இந்த மலையக மக்களின் அரசியல் பலம் சிங்கள தேசியவாதிகளுக்கு மட்டுமல்ல யாழ் மேட்டுக்குடி மையவாத தமிழர்களுக்கும் தமது அரசியல் ஆளுமைக்கும், பிரதிநித்துவத்துக்கும் சவால் விடுவதாக அமைந்ததால் தான் ஜி.ஜி பொன்னம்பலம் அவர்கள் அன்றைய அரசுடன் சேர்ந்து இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமையை பறிக்கும் சட்டத்துக்கு ஆதரவளித்தார்.
இதற்கு உங்கள் பதில் என்ன
சுதந்திரம் என்றான பின்!
http://lankamuslim.org/2011/02/09/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/
Post a Comment