Saturday, November 7, 2009

அச்சுவலைச் சந்திப்பு 01

வலைப்பதிவுகளில் சூடான வாதங்கள் சில நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது ஒதுங்கி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்து எனது கருத்துகளை சொல்வதை சில மாதங்களாக வழமையாக்கிக்கொண்டிருக்கிறேன். என்னுடைய பதிவுகளுக்கு வரும் அனானிகளின் அம்புத் தொல்லைகள் தான் இதற்குப் பிரதான காரணம்.

தாமதமான பதிவுக்கு மன்னிக்கவேண்டும். வலைப்பக்கம் வரமுடியாதளவுக்கு வேலைகள் அதிகம்.

ம்ம்ம்ம்……
இருக்கிறம் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்த அச்சுவலைச் சந்திப்புக்கு எனது உள்ளம் நிறைந்த நன்றிகள். இதுபற்றி பதிவர்களிடையே பல்வேறு வகையான விமர்சனங்களை காணக்கூடியதாக இருந்தது. என்னதான் இருந்தாலும் ஏதோ ஒருவகையில் எமது ஒன்றுகூடலுக்கு களம் அமைத்துக்கொடுத்து முகம்தெரியாத சகோதரர்களை சந்திக்கச் செய்தமைக்கு இருக்கிறம் நிர்வாகத்தினருக்கு என் அன்பை பகிர்கிறேன்.

எனது கருத்துகளை சொல்லுமுன்னர் அன்றைய சந்திப்பில் நடந்த முழுமையான விபரங்களை முடியுமானளவு சரியாக தர முயற்சிக்கிறேன்.

சந்திப்புஅச்சுவலைச் சந்திப்பானது நவம்பர் மாதம் 2ஆம் திகதி மாலை 3 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்த போதும் தவிர்க்க முடியாத காரணங்களால் மாலை 4.06 மணிக்கு ஆரம்பமானது. இருக்கிறம் சஞ்சிகையின் இணை ஆசிரியர் அருளானந்தம் சஞ்சீத் “மன்னிக்கவேண்டும்” என ஆரம்பித்து தனது அறிமுக உரையினை நிகழ்த்தி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து அங்கு வருகை தந்திருந்த பதிவர்கள் தம்மை அறிமுகம்செய்துகொண்டனர்.

பின்னர் உரையாற்றிய வைத்தியர், பதிவர் எம்.கே. முருகானந்தன்
“வலைப்பதிவுகளை சுதந்திரமான ஊடகங்கள் என்றுகூட குறிப்பிடலாம். ஆனால் முழுமையான சுதந்திரத்துடன் அவற்றை வெளியிட முடியுமா என்பதில் கவனம்கொள்ள வேண்டும்.
உலகம் முழுவதிலுமுள்ள இணையவாசகர்கள் எமது வலைத்தளங்களை பார்வையிடுகிறார்கள். சில கட்டுப்பாடுகளை பேணுவது பல சந்தர்ப்பங்களில் அவசியமாகிறது.
எனக்கு ஆரம்பகாலங்களில் வலைப்பதிவு குறித்த போதிய அறிவு இல்லை. ஏன் இப்போதும் கூட இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
வலைப்பதிவுகளை வாசகரிடத்தில் கொண்டு சேர்ப்பதற்கு திரட்டிகள் பிரதான இடம் வகிக்கின்றன. அவற்றில் தமிழ்மணம், யாழ்தேவி, தமிழ்வெளி போன்ற வலைத்திரட்டிகளை புதிய பதிவர்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும்.

என்னைப்பொறுத்தவரை ஏனைய பொழுதுபோக்கு அமிசங்களைவிட வலைப்பதிவுகளில் எழுதுவது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. ஒரு பதிவை எழுதிவிட்டு என்ன பின்னூட்டம் வருகிறது என அடிக்கடி பார்த்த முதற்கால அனுபவங்களை இப்போதும் மறக்க முடியாது. பின்னூட்டங்கள் தான் எம்மை மேலும் மேலும் எழுதத் தூண்டுகின்றன.

நான் வைத்தியத் துறையை சேர்ந்தவன். எனக்கு தொழில்நுட்ப அறிவு குறைவு. ஆனாலும் என்னுடைய சொந்த அனுபவங்களை, வைத்தியம் குறித்தான தகவல்களை எமது மக்களுக்கு கொடுப்பதில் நான் பெரிதும் மகிழ்வடைகிறேன். என்னிடம் பல்வேறு விதமான நோய்களையுடைய, குறைபாடுகளையுடைய நோயாளிகள் வருகின்றனர். அவர்களின் பெயர் குறிப்பிடாமல் அவர்களின் தவறுகள், பிரதிபலன்கள், வைத்திய முறைகள் ஆகியன பற்றி பதிவிட்டு வருகிறேன்.

இனிவரும் காலங்களிலும் நல்ல காத்திரமான பதிவுகளை வழங்கமுடியும் என எதிர்பார்க்கிறேன். இந்தச் சந்திப்பினூடாக பலரை நான் சந்திக்கக்கூடியதாக இருந்தது. அதனால் மகிழ்ச்சியடைகிறேன். தொடர்ந்தும் நல்ல பதிவுகளை வழங்குமாறு கூறி விடைபெறுகிறேன்.

திருமதி சாந்தி சச்சிதானந்தம் (நிர்வாக ஆசிரியர்- இருக்கிறம்)


இணைய உலகைப் பொறுத்தமட்டில் வலைத்தளங்கள் பிரதான இடத்தை வகிக்கின்றன. உலகம் எங்கிலும் பரந்துவாழும் எமது மக்களிடையே எமது கருத்தினை சுதந்திரமாக கொண்டுசெல்லக்கூடியளவுக்கு வலைத்தளங்கள் இருப்பதையிட்டு நான் மகிழ்வடைகிறேன்.
எனினும் எனக்கு இதில் தனிப்பட்ட ரீதியில் உள்ள கருத்துதான் பெண்களின் பங்களிப்பு என்பது.

இங்கு எத்தனை பெண் வலைப்பதிவாளர்கள் வந்திருக்கிறார்கள்? குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய சிலர் தான் இருக்கிறார்கள். ஆனால் ஆண்களுடன் ஒப்பிடுகையில் இணையத்தளங்களில் பெண்களின் வருகையும், பங்களிப்பும் குறைவாகவே இருக்கிறது. விழுதுகள் - ஆற்றல் மேம்பாட்டு மையத்தினூடாகவும் அகவிழி சஞ்சிகையினூடாகவும் எம்மால் இயன்ற பல்வேறு விழிப்புணர்வூட்டல் நிகழ்வுகளை செய்துவருகிறோம்.

பெண்களும் ஜனநாயக நீரோட்டத்தில் இணையவேண்டும். எத்தனையோ பெண் சாதனையாளர்கள் போல வளரவேண்டும். நல்ல சிந்தனைகள், சமூகம்சார் அனுபவங்கள் போன்றன காத்திரமான ஆக்கங்களை எழுதுவதற்கு வழிவகுக்கின்றன. பெண் எழுத்தாளர்கள் இவற்றை கருத்திற்கொள்ள வேண்டும். இங்கு வருகைதந்துள்ளவர்கள் எல்லோரும் ஏதோ ஒருவகையில் எழுத்தாளர்கள் தான்.
ஆகையால் சரியான கருத்துருவாக்கத்துடன் கூடிய பெண்களின் தனித்துவத்தினை பேணக்கூடிய பெண் எழுத்தாளர்களை வளர்க்க வேண்டியது எமது பொறுப்பாகும்.

இரகுபதி பாலஸ்ரீதரன் வாமலோஷனன் - முகாமையாளர் வெற்றி எப்.எம்
இருக்கிறம் நிர்வாகத்தினர், அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகவியலாளர்களுக்கும் வலைப்பதிவாளர்களுக்கும் இடையில் எற்படுத்திய சந்திப்பு வரவேற்கத்தக்கது. ஊடகங்கள் எனும்பொழுது பல்வேறு சிந்தனை நோக்கு கொண்ட, பல்வேறு வயதெல்லைகொண்ட, வித்தியாசமான நேயர்கள், வாசகர்கள் இருப்பதால் நடுநிலைமையுடன் நடந்துகொள்ளவேண்டிய பொறுப்பு இருக்கிறது. அதுதான் கடமையும்கூட என்று சொல்லலாம்.

ஆனால் வலைப் பதிவுகளைப் பொறுத்தவரை ஊடகம் என்ற நடுநிலைமைக்கு அப்பால் எமது சொந்த கருத்துக்கள் இதுதான் என்பதை சுயமாக சொல்லக்கூடிய நிலை இருக்கிறது.இதனை பலரும் தவறாக நினைப்பதானது அதில் சரியான தெளிவினைக் கொண்டிருப்பதில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இவ்வாறான சந்திப்புகள் நம் மத்தியில் மிக அவசியமாகும். நமது சமூகம், நமது மொழி, நமது கலாசாரம் ஆகியவற்றை எம்மால் முடிந்தளவு காத்திரமாக பேணுவதில் வலைப்பதிவாளர்களுக்கும் பங்குண்டு என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.

என்.வித்தியாதரன் - பிரதம ஆசிரியர் – சுடர் ஒளி, உதயன்

நான் ஆரம்பகாலங்களிலிருந்தே வலைப்பதிவுகளை வாசித்துவருகிறேன். குறிப்பாக நமது நாட்டு பதிவர்கள் எவ்வாறு பதிவிடுகிறார்கள், அவர்கள் ஒருவிடயத்தை எந்த நோக்கில் கையாளுகிறார்கள் என்பதை உற்றுக் கவனித்திருக்கிறேன்.இனிவரும் காலங்களில் எமது பதிவர்களின் நல்ல படைப்புகளை எனது பத்திரிகையிலும் பிரசுரிக்க தீர்மானித்துள்ளேன்.

ஆனாலும் ஒருவிடயத்தை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இதை எனது வேண்டுகோளாகவும் நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். தயவுசெய்து தமிழை கொல்லாதீர்கள். தமிழ்க் கொலையாளி என்ற பட்டத்தை வாங்கிக்கொள்ளாதீர்கள்.

வலைப்பதிவு என்ற பெயரில் பலரும் இன்று அதனை செய்துகொண்டிருக்கிறார்கள்.ஒரு வசனம் எழுதும்போது எங்கே “ஒரு” போட வேண்டும் எங்கே “ஓர்”போட வேண்டும் என்பதை இங்கு எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? அதேபோன்று இரு,ஈர் என்ற பதங்கள் இங்கு எத்தனை பேருக்குத் தெரியும்?

பதற்றம் என்கிறோம். பதட்டம் என்கிறோம். எது சரியானது? பதறு என்ற வினையடியிலிருந்து வருகின்ற சொல்லாதலால் பதற்றம் என்பதே சரி.

சைக்கிளில் வந்த நபர், துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச்சென்றார். என்பதில் உள்ள தவறென்ன?சைக்கிள் என்பதை விடுவோம். அது நாம் ஆரம்பத்திலிருந்தே பயன்படுத்திவரும் சொல். வந்த என்பது அஃறிணையை குறிப்பது.

இன்று இலங்கையிலுள்ள பல பத்திரிகைகள் இவ்வாறான தவறுகளை சுமந்துதான் வெளிவருகின்றன. ஏன் எமது பத்திரிகையிலும் இடம்பெறுவதை ஏற்றுக்கொள்கிறேன். அங்கு நான்தான் பத்திரிகை ஆசிரியர், எழுத்தாளர், செய்தியாளர்,ஒப்புநோக்காளர் என எல்லாம். சில வேளைகளில் பக்கத்தை வடிவமைப்பதும் நான்தான்.

செய்திப் பத்திரிகைகளில் எழுதுவதற்கும், சஞ்சிகைகளில் எழுதுவதற்கும், இணையத்தளங்களில் எழுதுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அதனை நாங்கள் நன்றாக கற்றுக்கொள்ள வேண்டும். தமிழை வளர்க்கிறோம் என்றுகூறி கண்டதையும் எழுதி மொழிக்குற்றம் செய்யாதீர்கள். இதுதான் நம்மை வாழவைத்துக்கொண்டிருக்கும் மொழி.

(வந்தார் பிரபாகரன்! என்று தலைப்பிட்ட கதை, இந்திய ஊடக அனுபவங்கள் குறித்து வித்தியாதரன் பேசிய விடயங்களை தனிப்பதிவாக தருகிறேன்)

(தொடரும்)

8 comments:

Unknown said...

ம்...
தொடர்ந்து உங்கள் பகுதிகளை எதிர்பார்க்கிறோம்....

கடுமையான வேலைப்பழுவிற்கு மத்தியில் இதை பதிவேற்றியதற்கு நன்றிகள்....

அருமையாக தொகுத்திருக்கிறீர்கள்...
எங்கள் பலருக்கு உங்கள் தளம் மூலம் தான் நடந்ததை அறிய முடிகிறது...
நன்றிகள்...

Subankan said...

உங்கள் பதிவைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். அடுத்த பகுதியையும் விரைவில் எழுதிவிடுங்கள். நன்றி

தங்க முகுந்தன் said...

முன்னுக்கு இருந்து ஏதோ எழுதியதாக அன்றைய சந்திப்பைப் பற்றி எழுதிய ஒரு பதிவர் குறிப்பிட்டிருந்தார். எம் போன்றவர்களுக்கு முன்னைய நிருபர் என்ற கோதாவில் தாங்கள்தான் நடந்த விடயத்தைக் குறித்து அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். மிகமிக நன்றி! விரைவில் நடந்த முழுச் சம்பவங்களையும் பதிவிட்டால் நல்லது!

Admin said...

எங்க பதிவைக் காணவில்லையே என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன் வந்துவிட்டதே... தொடருங்கள்.


உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சியே.. ஆனாலும் அன்று நீங்கள்தான் busy ஆகிவிட்டிர்களே.

வேந்தன் said...

உங்கள் பதிவில்தான் சந்திப்பில் நடந்த உரையாடலை முதல் முறையாக காண்கின்றேன். அடுத்த பதிவுக்காக காத்திருக்கின்றேன்.

Unknown said...

இருக்கிறம் நடத்திய அச்சுவலைச் சந்திப்பின் முழுமையான விபரத்தினை எவரும் பக்கச் சார்பின்றி தரவில்லையே எனும் ஆதங்கம் இருந்தது, அதனை நீங்கள் நீக்கப் போகின்றீர்கள் என்பதனை நினைக்கும் போது சந்தோசமாக இருக்கின்றது.

ஆரம்பம் முதல் சகல விடயங்களையும் முகஸ்துதி பாராமால் பதிவு செய்யுங்கள் நிர்ஷன்.

முயற்சிக்குப் பாராட்டுக்கள்.

யோ வொய்ஸ் (யோகா) said...

எனக்கும் அச்சந்திப்பு உங்களை சந்திக்க வாய்ப்பாக அமைந்தது, அருமையாக தொகுத்துள்ளீர்கள் நிர்ஷன். வாழ்த்துக்கள்

ARV Loshan said...

அருமையான, செம்மையான தொகுப்பு நிர்ஷன்..
தொழில் செம்மை தொகுப்பில் தெரிகிறது..

ஒரே விமர்சனங்களைப் பார்த்துக் கொண்டிருந்த பதிவுலகில் (வம்பு சண்டைகள், விவாதங்களையும் தான்) உங்கள் தொகுப்பு ஒரு வித்தியாசம்.. அடுத்த பகுதியை எதிர்பார்க்கிறோம்