கலைத் தாயின் குழந்தைக்கு ஈழக் கலைஞர்களின் பிரியாவிடை (01)கலைத்தாயின் முழுமையான அருளை தன்னகத்தே பெற்ற மாபெரும் கலைஞனை ஈழம் இழந்திருக்கிறது. கலைஞன் என்பதற்கு அப்பால் நட்புள்ளமும் உதவி செய்யும் மனப்பான்மையையும் கொண்டிருந்த உதாரவாதியை கலையுலகம் இழந்திருக்கிறது.

ஆம்!ஸ்ரீதர் பிச்சையப்பா என்ற கலைச்சரிதத்துக்கு காலன் முற்றுப்புள்ளி வைத்து ஒரு வாரம் ஆகப்போகிறது.

எதைக் கொண்டும் யாராலும் எப்போதும் ஈடுசெய்ய முடியாத இழப்பினை தாங்கிக் கொள்ள முடியாதவனாய் தவித்திருந்த பொழுதுகளை நினைவூட்ட விரும்பவில்லை.

எனினும் ஸ்ரீதரின் இறுதிச் சடங்குகள் தொடர்பான விடயங்களை வெளியுலகுக்கு கொண்டுவரவேண்டிய கடமை எனக்கு இருக்கிறது என நினைக்கிறேன்.

அமரர் ஸ்ரீதர் பிச்சையப்பாவின் பூதவுடல் கடந்த புதன்கிழமை கொழும்பு – கலாபவனத்தில் கலைஞர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அனைத்துத் துறை சார்ந்த கலைஞர்களும் வருகை தந்து ஸ்ரீதரை கண்ணீருடன் வழியனுப்பி வைத்தனர்.

அவர்கள் ஸ்ரீதருடனான நினைவுகளை கலாபவனத்தில் பகிர்ந்துகொண்டனர்.

பீ.எச்.அப்துல் ஹமீட்:
ஸ்ரீதர் பிச்சையப்பா, பன்முகத் திறமைகள் வாய்ந்த கலைஞன், தந்தைக்கு தப்பாமல் பிறந்த தனயன். முதல் தலைமுறையை விட அடுத்துவரும் தலைமுறை அதைவிட சாதிக்கும் என நான் அடிக்கடி சொல்லுவதுண்டு. அதற்கொரு நல்ல உதாரணம் தான் ஸ்ரீதர். தந்தை நடிப்புக் கலையில் தன்னை வளர்த்துக்கொண்டார். ஸ்ரீதர் நடிப்புக் கலை மட்டுமல்லாது ஏனைய துறைகளிலும் மிளிர்ந்தார்.
பல்துறை அறிவையும் திரட்டி சிறந்த கட்டுரைகளாக எழுதக்கூடிய திறமை வாய்ந்தவர்.

பொதுவாக இதுபோன்ற புகழ்சார்ந்த துறைகளில் திடீரென்று அவர்கள் நம்மைவிட்டுப் பிரியும் போது பேரிழப்பு என்கிறோம். சிலர் சம்பிரதாயமாக அதைச் சொல்வார்கள். ஆனால் எம்மைப் பொறுத்தவரையில் உண்மையில் இது பேரிழப்பு தான்.

மேமன் கவி:
நண்பன் ஸ்ரீதர் பிச்சையப்பாவை கடந்த 30 வருட காலமாக அவருடன் நேசமிருந்தது. நான் நினைக்கிறேன். ஒரு கலைஞனின் பன்முக ஆற்றல் என்பதற்கு அப்பால் எல்லா கலைஞர்களுக்கும் எல்லா படைப்பாளிகளுக்கும் தன்னை ஆழமாக வெளிப்படுத்த முடிவதில்லை. ஆனால் ஸ்ரீதரைப் பொறுத்தவரையில் எல்லா துறைகளிலும் தனது தனித்துவத்தைப் பேணி, பதித்து வந்தவன்.
அவனுடைய பாடல், நாடகம் இவ்வாறு பலதுறைகளைப் பற்றியும் பேசும் போது நான் முக்கியமாக ஓவியத்தை கவனம் செலுத்தியிருக்கிறேன். ஏனென்றால் அவனுடைய கோட்டோவியங்கள் மிக முக்கியமானவை.

சந்தனராஜ், வீரசந்தானம்,ஆதிமூலம் இப்படி பலருடைய ஓவியங்களை நாம் பார்த்திருக்கிறோம். அந்த கோட்டோவியங்களினூடாக இவை ஸ்ரீதருடைய ஓவியங்கள் தான் என தனித்துவமாக சொல்லக்கூடியவை.
இப்படியான கலைஞர்கள் ஒரு கால இடைவெளிக்குள்ளே தான் தோன்றுவார்கள். பன்முக ஆற்றல் எனும்போது இயந்திரத் தனமாக இல்லாமல் ஆத்மார்த்தமாக தூய்மையாக அதனை ஸ்ரீதர் செய்துவந்தார்.

ஸ்ரீதருடைய எல்லா பார்வையிலும் படைப்பிலும் ஒரு நவீனத்துவம், ஒரு புதுமை, மக்களைக் கவர்கின்ற வெளிப்பாட்டுத் தன்மை இருந்திருக்கிறது. இனிவரும் காலங்களில் ஸ்ரீதரின் இழப்பினை நாம் அதிகமாக உணர்வோம் என்பதில் சந்தேகமில்லை. அவனுடைய ஆத்மா சாந்தியடைவதாக.

சீத்தாராமன்:
இலங்கைக் கலையுலகம் சகலகலா வல்லவனை இழந்திருக்கிறது.அவரும் நானும் ஒரே நிகழ்ச்சியில் 1979ஆம் ஆண்டு அறிமுகமானோம். இருவரும் நாடகங்கள், நிகழ்ச்சிகளில் பங்குபற்றினோம்.

ஸ்ரீதருக்கு அப்போது சிறந்த பாடும் திறமை இருந்தது. அப்போதிலிருந்து ஓர் இசைக்குழுவை ஆரம்பிக்க வேண்டும் என அவரும் நானும் முழுமூச்சாக செயற்பட்டு வந்தோம்.
1980ஆம் ஆண்டில் எமது இசைக்குழுவினூடாக அவர் பாடிய முதல் பாடல் வாழ்வே மாயம் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வந்தனம் வந்தனம்’ என்ற பாடல் தான். உலகுககே வந்தனம் சொல்லி கலைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்தார். அப்போது ஸ்ரீதர் மிகச்சிறந்த அளவில் பேசப்பட்டார். உலகம் முழுதும் அவர் சென்றார்.

அதேபோல கடைசி இசை நிகழ்ச்சியும் என்னோடு தான் செய்தார். கடைசியாக தென்பாண்டிச் சீமையிலே என்ற துக்ககரமான பாடலைப் பாடினார். அது அவரது வாழ்வின் இறுதிக்காலத்தைச் சொல்லும் என நான் நினைக்கவில்லை.

மோகன்ராஜ்:
என்னுடைய ஆத்ம நண்பனும் இலங்கையின் புகழ்பெற்ற கலைஞனுமான ஸ்ரீதர் பிச்சையப்பா ஒரு பல்துறைக் கலைஞன். கிட்டத்தட்ட 37 வருடங்கள் ஒரே தெருவில் ஒன்றாக சாப்பிட்டு ஒன்றாக இருந்து வளர்ந்தவர்கள்.
அவனிடமிருந்த மனிதப் பண்பானது ஏனைய கலைஞர்களுக்கு படிப்பினையாகும். ஆழந்த கவலையுடன் இந்த சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியிருக்கிறோம்.

இராஜேஸ்வரி சண்முகம்:
என் மகன் ஸ்ரீதரின் அந்திமக்கிரியைகளில் கலந்துகொண்டிருக்கிறோம். பிறந்தோம் வாழ்ந்தோம் என்றில்லாமல் உலகுக்கு எதையாவது விட்டுச்செல்ல வேண்டும் என வாழ்ந்தவர் ஸ்ரீதர். அவர் என்னோடு பல்வேறு நாடகங்களில் நடித்திருக்கிறார்.

கவிதைகளில் கருவாகி நின்றவனே
கலைகளில் உருவாகி நின்றவனே
நாடகங்களில் பாத்திரமாகி நின்றவனே

நான் உனக்கு கண்ணீரை மட்டுமே காணிக்கையாக்குகிறேன் ஐயா.
விடைபெறுகிறேன் ஐயா.

நீ போகும் இடத்திலாவது இறைவன் உனக்கு நிம்மதியைத் தரட்டும்.

கமலினி செல்வராஜன்:
நான் அதிகமான சந்தர்ப்பங்களில் ஸ்ரீதரை என் வீட்டுக்கு அழைத்து கதைத்துக்கொண்டிருப்பேன். பல விடயங்கள் கதைப்போம். எல்லாவற்றையும் பேசி முடித்த பிறகு கலைகளைப் பற்றித் தான் அதிகம் சொல்லிக்கொண்டிருப்பார்.

கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கண்ணை இழந்த போதிலும் அந்த சோகத்தை மறைப்பதற்காக கலைகளோடு வாழ்ந்து வந்தார். கலையோடு மிக்க ஆர்வம் இருந்தது.

ஆனால் குடும்பம் சரியாக இருக்கவில்லை என்பதனால் தன்னை மறந்து வாழக்கூடிய ஒருவனாக இருந்தார். என்னதான் இருந்தாலும் ஆற்றுப்படுத்தல்போல அன்பாக கதைப்பார்.

மல்லிகை ஜீவா
மிகச்சிறந்த ஓவியன், மிகச்சிறந்த நடிகன்,அற்புதமான நடிகன். இவை எல்லாவற்றையும் விட எல்லாரையும் நேசிக்கும் அன்பான நண்பன். இந்த அற்புதமான கலைஞனை கடந்த 30 ஆண்டுகளாக நான் அறிவேன். யாழ். கலைஞர்கள், எழுத்தாளர்கள் சார்பில் ஆழ்ந்த துக்கத்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.
எத்தனையோ கலைஞர்கள், துறை சார்ந்தவர்கள் இன்று கூடியிருக்கிறார்கள். ஸ்ரீதர் மற்றவர்கள் மீதிருந்த பாசம் இப்போது விளங்குகிறது.

(தொடரும்)

(ஊடகம் சார்ந்தபடியால் முன் அனுமதியின்றி படங்களை பயன்படுத்த வேண்டாம்)

6 comments:

said...

வணக்கம் நிர்ஷான்

இறவாக் கலைஞனின் நினைவுப்பதிவாகத் தந்திருக்கிறீர்கள். மிக்க நன்றி

said...

இன்னமும் சாதித்திருக்க வேண்டிய கலைஞன்

said...

இறுதி சடங்குகளில் மயானத்தில் கலந்துகொண்டிருந்தாலும், அலுவலக வேலையின் காரணமாக கலாபவனத்துக்கு வருகை தரமுடியாமல் போயிருந்தது.
இந்தத் தொகுப்பின் மூலமாக எல்லாம் அறிந்துகொண்டேன். நன்றி நிர்ஷன்..

ஸ்ரீதரின் இழப்பு ஈடு செய்ய முடியாவொன்று.

said...

தொகுப்பிற்கு நன்றி நிர்ஷன், அவரது இழப்பு ஈடுசெய்யவியலாதது

said...

விபரங்களுக்கு நன்றி!

said...

cool!very creative!avdvd,色情遊戲,情色貼圖,女優,偷拍,情色視訊,愛情小說,85cc成人片,成人貼圖站,成人論壇,080聊天室,080苗栗人聊天室,免費a片,視訊美女,視訊做愛,免費視訊,伊莉討論區,sogo論壇,台灣論壇,plus論壇,維克斯論壇,情色論壇,性感影片,正妹,走光,色遊戲,情色自拍,kk俱樂部,好玩遊戲,免費遊戲,貼圖區,好玩遊戲區,中部人聊天室,情色視訊聊天室,聊天室ut,成人遊戲,免費成人影片,成人光碟,情色遊戲,情色a片,情色網,性愛自拍,美女寫真,亂倫,戀愛ING,免費視訊聊天,視訊聊天,成人短片,美女交友,美女遊戲,18禁,三級片,自拍,後宮電影院,85cc,免費影片,線上遊戲,色情遊戲,情色