
கொழும்பில் பெரும்புள்ளிகளுக்கு வால்பிடித்துத்திரியும் சில வாலாட்டிகள் தமது வால்புத்தியை ஏழை மக்களிடம் காட்டத்தொடங்கியிருக்கிறார்கள்।
கொழும்பில் ஏழைமக்களின் பிள்ளைகளுக்கு இத்தாலி வீசா எடுத்துத்தருவதாகக் கூறி இருவர் ஏமாற்று நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாக பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் கூறினார்। கொட்டாஞ்சேனை, வெள்ளவத்தைப் பகுதிகளில் இந்த வாலாட்டிகள் தமது ஏமாற்று வித்தைகளில் ஈடுபட்டுவருவதாகவும் தகவல் கிடைத்தது।
சிவகாமி என்பவர் வெள்ளவத்தையில் வசிக்கும் வயதான அம்மா। யுத்தத்தில் அனைத்தையுமே இழந்து வருமானமில்லாமல் வாடகை வீட்டில் தங்கியிருக்கும் இவர் தனது பேரனை வெளிநாட்டுக்கு அனுப்ப பெரும் பாடுபட்டுள்ளார்।
அவரது பேரன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பெரும்புள்ளியொருவரின் உதவியால் விடுவிக்கப்பட்டுள்ளார்। அச்சந்தர்ப்பத்தில் அந்தப்பெரும்புள்ளியின் நெருங்கிய நபர் எனச்சொல்லிக்கொண்டவர் அந்த இளைஞரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக வாக்குறுதி கொடுத்து பணம் வாங்கியுள்ளார்। இவர்களுடைய சந்திப்பு கொட்டாஞ்சேனைப் பகுதியிலுள்ள பிரபல உணவகத்தில் இடம்பெற்றுள்ளது।
ஒருமாத காலப்பகுதியில் ஐந்து இலட்சம் பணம்பெற்றுக்கொண்ட அந்த நபரை இப்போது தொடர்புகொள்ள முடிவதில்லை என கவலையுடன் கூறுகிறார் அந்த அம்மா।
யார் எப்படியென்றாலும் பரவாயில்லை தன்பிழைப்புக்கு பணம்கிடைத்தால் போதும் என இயங்கும் இவ்வாறான பூனை வேஷம்போட்ட நரிகளிடமிருந்து சம்பந்தப்பட்டவர்கள் தம்மை காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.