Wednesday, February 27, 2008

இலங்கைப் பதிவர்களுக்கு பைத்தியமாம்...!

கொழும்பு வெள்ளவத்தை தமிழ்ச்சங்கத்துக்கு கடந்த சனிக்கிழமையன்று போயிருந்தேன்। வாசிகசாலைக்கு அருகில் இரண்டு பெரியவர்கள் ( பார்ப்பதற்கு அப்படித்தான் தெரிந்தது) வலைத்தளங்கள் பற்றி உரையாடிக்கொண்டிருந்தார்கள்। தவறென்று தெரிந்தும் காதுகொடுத்தேன்।
இளைஞர்கள் தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகளுக்கு பெரும்பாலும் வருவதில்லை என்ற வாதத்தின் தொடர்ச்சியாக இப்படி பேசப்பட்டது.

ஒருவர் : இப்போ புதுசா வலைப்பதிவர் என்று ஒரு கூட்டம் அலையுது। என்ன வேலை செய்றியள் என்று கேட்டால் நான் புளொக் செய்றன் என்று பதில் சொல்லுதுகள்

மற்றவர்: சண்டே தினக்குரல் பார்க்கிறியளே॥ புதுசா வலைப்பதிவராம் என்று அரைப்பக்கத்தை வீணடிக்கினம்। சாமிய கண்டா( தினக்குரல் அதிபர்) கேட்கவேணும்। அவனவன் சுயநலத்துக்காக புளொக் என்று வச்சுக்கொள்றான்। அதை தம்பட்டம் அடிக்கிறதுக்கு மற்றொரு கூட்டம்॥

ஒருவர்: எல்லாம் பைத்தியங்கள்... வேலையில்லாம நெட் நெட் என்று கஃபே ல உட்கார்ந்திட்டு நெட்ல கொப்பி பண்ணி புது விஷயம்னு போடுதுகள்... முருகானந்தன் ட கொஞ்சம் பார்க்கலாம்...

இதுவரை தான் என்னால் கேட்க முடிந்தது. இதற்கு மேல் கேட்டால் நான் பதில் சொல்ல வேண்டிவரும் என்பதால் அங்கிருந்து வந்துவிட்டேன். இருந்தாலும் இவர்களுடைய உரையாடல் எனக்குள் இனம்புரியாத கவலையை பிரசவித்தது. வெள்ளை உடையில் தன்னைத் தூய்மையானவர்கள் எனக் காட்டிக்கொள்ளும் இவர்களா இப்படிப் பேசுகிறார்கள் என்றும் எண்ணத் தோன்றியது.
இலங்கை பதிவர்கள் பலர் எத்தனை சிரமத்துக்கு மத்தியில் பதிவிடுகிறார்கள் என்பது யாருக்கு புரியப் போகிறது? ( தமிழ்ச்சங்க நிகழ்ச்சிக்கு அடுத்த முறை சென்றால் அந்தப் பெரியவர்கள் யாரென்பதை அறிந்து பெயருடன் தர முயற்சிக்கிறேன்).
மற்றும் பதிவர்களை அறிமுகப்படுத்துவதில் ஒரு பத்திரிகை முந்திக்கொள்ள அதனை ஏற்றுக்கொள்ள மனமில்லாத மற்றை பத்திரிகை ஊடகவியலாளர் ஒருவர் தனிப்பட்ட ஒருவரை அறிமுகப்படுத்துவது ஊடகதர்மத்தை மீறும் செயல் என்று விளக்கம் கூறுகிறார்। இப்படியெல்லாம் நடக்கிறது பாருங்கள்...
என்னதான் இருந்தாலும் வலைப்பதிவர்கள் நாம் இணைந்து ஆரோக்கியமான மாற்றத்தை உண்டுபண்ணுவோம் என்பது மட்டும் உண்மை।