Monday, August 25, 2008

நல்லதொரு அடி!!!!!


இலங்கையின் சப்ரகமுவ மற்றும் வடமத்திய மகாணங்களுக்கான மாகாணசபை தேர்தல் பாரிய பிரச்சினைகள் எதுவுமின்றி நடந்துமுடிந்தது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதிகபட்ச ஆசனங்களைப் பெற்று வெற்றிபெற்றது.

தமிழர்களுக்கு தங்களை விட்டால் யாருமில்லை என்ற தோரணையில் தேர்தலில் போட்டியிட்ட மலையக தமிழ் அரசியல் கட்சிகளுக்கு தமிழ்பேசும் மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர். இவர்களால் எந்தவொரு ஆசனத்தையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

சம்பளப் போராட்டத்தின்போது துரோகம் இழைத்த தலைவர்களுக்கு இப்போது இரத்தினபுரி மக்கள் தகுந்த பாடம் கற்பித்துள்ளனர். அறுபதாயிரத்துக்கும் அதிகமான தமிழ்வாக்காளர்களில் இரத்தினபுரியில் பிரதான மலையக தமிழ்க் கட்சி பெற்றுக்கொண்டது வெறும் 5135வாக்குகளே.

மக்களை ஏமாற்றும் தமிழ்த்தலைவர்களுக்கு இரத்தினபுரி மக்கள் பாடம் கற்பிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என தேர்தல் தொடர்பான கடந்த பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

சேவை செய்யாமல் தேர்தல்காலத்தில் மட்டும் எட்டிப்பார்க்கும் நம்ம தலைவர்களுக்கு இதைவிட வேறு எப்படி கவனிக்க முடியும்?

Tuesday, August 19, 2008

சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில் மாடாக்கப்படும் தமிழர்கள் !


இலங்கையின் சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களில் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் இந்த வேளையில் தமிழர்கள் மீண்டும் அரசியல்வாதிகளின் சாட்டையடிக்கு மாடாய் மாறி மானம்போக்கும் அவலம் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.

தமது எதிர்காலத்தை தாமே தீர்மானிக்கும் தீர்க்கமான,வரலாற்றின் மிகத்தேவையான தேர்தலுக்கு வரும் 23 ஆம் திகதி சப்ரகமுவ தமிழ்பேசும் மக்கள் முகங்கொடுக்கின்றனர். ஆனால் தமிழ் பிரிவினைவாதத்திற்கு தமிழர்களே வித்திட்டு தமக்குத்தாமே எதிர்விளைவுப் பாதை வகுக்கும் வழமையான நிலையில் மக்கள் உள்ளதை காணக்கூடியதாக இருக்கிறது.
இலங்கை மலையகத் தமிழ் அரசியல்வாதிகள் சிலருக்கு பதவிப் பேராசை ஏராளமாய் உண்டு. தேர்தல் காலத்தில் மக்களை ஏமாற்றி அவர்களை தெய்வம் எனக்கூறி அரசியல் இலாபம் தேட நல்ல ஆசாமிகளாக மாறிவிடுவார்கள்.

ஏமாற்றத்துக்குத் தயாரானது போலவே எமது மக்களும் அவர்களின் ஊதுகுழலுக்கு தேவைக்கு அதிகமாகவே ஆடுவார்கள். இறுதியில் அந்தத் தலைவர்களைப் பார்ப்பதற்குக் கூட சந்தர்ப்பம் கிடைக்காது. அப்படி கிடைத்தாலும் மரியாதையில்லாமல் நடத்தப்படுவதும் கீழ்த்தரமாக ஒதுக்கப்படுவதும் வரலாறு படிப்பித்த உண்மை.
இரத்தினபுரி மாவட்டம் தமிழர்கள் செறிந்துவாழும் அரசியலின் பிரதான இடம் என்பதால் தமிழ்த் தலைவர்கள் அனைவரும் அங்கு வாடகை வீடு வாங்கித் தங்கியிருந்து மக்களை ஏமாற்றத் தொடங்கியிருக்கிறார்கள்.

பிரதான அரசியல் கட்சிகள் முதல் சிறிய கட்சிகள் வரையில் தமிழர்கள் அளவுக்கு அதிகமாகவே வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழர்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு பெரும்பான்மையினரின் ஆட்சி நிரூபணமாகி தமிழர் அபிலாஷைகள் அனைத்தும் உடைத்தெறியப்படவேண்டும் என்ற பெரும்பான்மையின் விருப்பிற்கிணங்க தேர்தல் முடிவு இருக்கப்போவது உண்மை.

இறக்குவானைக்கு கடந்த தேர்தலின் போது வந்த அரசியல்வாதிகள் இப்போதுதான் மீண்டும் வந்திருக்கிறார்கள். நீங்கள் தான் எங்கள் உயிர். உங்களுக்காகத்தான் நாங்கள் என்கிறார்கள்.
தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து பட்டினியுடன் பலவாரங்கள் போராட்டம் நடத்திய தொழிலாளர்களுக்கு ஏமாற்றம் தந்த அரசியல்வாதிகள் இப்போது எந்த முகத்துடன் வாக்கு கேட்டு மண்டியிடுகிறார்கள்?
சப்ரகமுவ தமிழ்மாணவர்களுக்கு வரலாற்றிலேயே உயர்தர விஞ்ஞான,கணித பிரிவினை ஏற்படுத்தித்தராமல் அதைவைத்தே வாக்கு கேட்கும் இவர்களுக்கு வெட்கம் எங்கே போனது?

இந்த அரசியல்வாதிகளின் முகமூடி தெரிந்தும் அவர்கள் பக்கம்சார்ந்து வாக்கு கேட்கும் வேட்பாளர்களுக்கு இதுவரை அந்தக் கட்சிகள் செய்தது என்ன? தமிழர்களின் வாக்குகளை சிதறடிக்கச்செய்து வரலாற்றுத்தவறினை செய்யப்போவதை எப்போது இவர்கள் உணரப்போகிறார்கள்.

மலையக அரசியல்வாதிகளின் வேஷம் மலையக மக்களாலேயே களைக்கப்படும் என்ற நம்பிக்கை இன்னும் இரத்தினபுரி தமிழ் இளைஞர்களிடம் உண்டு.

காலம் பதில்சொல்லும் நிச்சயமாக.

மலையகத் தொழிலாளர்கள் பற்றிய
பாவையின் பதிவொன்று, http://paavais.blogspot.com/2006/12/blog-post_13.html