Tuesday, February 15, 2011

இறக்குவானை அம்பிகைக்கு மணிமகுடம் சூட்டும் பிரம்மோற்சவம்


இலங்கைத் திருநாட்டின் இரத்தினத் துவீபம் எனப் போற்றப்படும் இரத்தினபுரி மாவட்டத்தின் சகல வளங்களும் சிறந்து விளங்கும் இறக்குவானையில் அருளாட்சி புரியும் அம்பிகைக்கு பிரம்மோற்சவம் நடத்தத் திருவருள் கூடியுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்தில் மகோற்சவம் நடைபெறும் ஆலயங்களில் பிரதானமானதாகவும் ஏனைய ஆலயங்களுக்கு முன்னுதாரணமாகவும் திகழ்கிறது இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம். ஏறத்தாழ 150 ஆண்டுகள் பழைமையானதும் வரலாற்றுச் சிறப்புடையதுமான இவ்வாலயம் சக்தி நிறைந்ததாக விளங்குகிறது.

இந்து மதம் மாத்திரமே இறைவனை தாயாகவும் தந்தையாகவும் தலைவனாகவும் தோழனாகவும் குருவாகவும் வழிபடும் சுதந்திரத்தை வழங்கியுள்ளது. இவற்றில் தாயாக வழிபடுவது அன்பின் பிணைப்பால் அருள்பெறும் முறையாகக் கொள்ளப்படுகிறது.

இந்நிறத்தான் இவ்வண்ணத்தான், இப்படியிருப்பான், இன்ன குணங்கள் உடையான், இன்ன நிலையில் இருப்பான் என்று சற்றேனும் குறிப்பிட்டுக் கூற முடியாமல் இருக்கும் இறைவன் ஆன்மாக்களுக்கு இறைமோட்சம் கிடைக்க கீழிறங்கி வந்து உருவம் கொண்டு அனைத்துமாகி அருளாட்சி நடத்தும் இடமே ஆலயம்.

சகலரும் தன்முன் பொதுவெனக் காட்டும் ஆலயத்தில் நடைபெறும் கிரியைகள் அனைத்துமே பொருள் தருவன, தத்துவம் உடையன.

அவ்வாறு தத்துவங்களை உணர்த்துபவளாகவும் அண்டசராசரங்கள் அனைத்தின் இயக்கத்துக்குக் காரணமாகவும், ஆள்பவளாகவும், ஆட்டிப்படைப்பவளாகவும் அரவணைப்பவளாகவும் விளங்குகிறாள் அன்னை ஆதிபராசக்தி. அவள் அம்பிகையாகத் திருவுருவம் கொண்டு இறக்குவானை மக்களுக்கு தாயாகத் திகழ்கிறாள்.

அந்த அம்பிகைக்கு மணிமகுடம் சூட்டி குலதெய்வத்துக்குத் தேரெடுத்து அலங்காரமிட்டு பக்திப் பரவசத்தோடு கொண்டாடும் ஊர்த் திருவிழாவாக இறக்குவானை மக்கள் இந்த ஆலயத்தின் பிரம்மோற்சவத்தைப் பார்க்கிறார்கள்.

ஆலயங்களில் தினந்தோறும் நடைபெறும் கிரியைகள் நித்தியக்கிரியைகள் என்றும் விசேட காலங்களில் நடைபெறும் கிரியைகள் நைமித்தியக் கிரியைகள் என்றும் கொள்ளப்படுகின்றன. நைமித்தியக் கிரியைகளில் சிறப்புடன் குறிப்பிடப்படுவது மகோற்சவப் பெருவிழாவாகும். உற்சவங்களில் மகோன்னதமானதும் விழாக்களில் பெரியதாகவும் பெயர்பெற்ற மகோற்சவங்கள் கொடிமரம் உள்ள அனைத்து ஆலயங்களிலும் முக்கியத்துவம் பெறுகின்றன.

இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும் இந்தப் பெருவிழா வருடந்தோறும் சிறப்பாக நடைபெறுவது வழமையாகும்.

ஆம்! பல்லாயிரக்கணக்கான மக்களை ஓரிடத்தில் கூடவைக்கும் பிரம்மோற்சவம், துவஜாரோஹணம் எனப்படும் கொடியேற்றத்துடன் கடந்த 9ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமானது. உலகமாகிய பந்தத்திலிருந்து ஆன்மாவை விடுவித்து இறைவன்பால் சேர்த்து இன்பம் அனுபவிக்கும் உயர்நிலைத் தத்துவத்தை விளக்கும் இக்கிரியையில் பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து விஷேட பூஜைகள் நடைபெற்றுவருகின்றன. எதிர்வரும் 15ஆம் திகதி மாலை வேட்டைத் திருவிழாவும் 16 ஆம் திகதி இரவு சப்பரத் திருவிழாவும் இடம்பெறவுள்ளன.

இறைவனின் ஐந்தொழிலைக் குறிக்கும் மகோற்சவத்தில் அழித்தல் தொழிலைக் குறிக்கும் தேர்பவனி எதிர்வரும் 17 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. திருவிழாவில் இம்முறை முத்தேர் பவனி இடம்பெறுவது சிறப்பமிசமாகும்.

சர்வலோக நாயகியான அன்னை அம்பிகை, சோடச உபசாரங்களுடன் சர்வ அலங்கார நாயகியாக வீற்று தேரில் ஆரோகணித்து அடியார்களுக்கு அருள்பாலிப்பதற்காக வீதியுலா செல்கிறாள்.

சிவனில் பாதியாகி இயக்கத்துக்குக் காரணமாகி நாடிவருவோருக்கு நயம்,நலம் தரும் அம்பிகைக்கு மணிமகுடம் சூட்டி ஆலய வாசலில் கடவுளர்கள், தேவர்கள், ரிஷிகள் குங்குமம் சூட்டி ஆசிர்வதிக்க நாயகியவள் நகர்வலம் வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

நான் என்ற அகங்காரமும் எனது என்ற மமகாரமும் நிறைந்த ஆணவம் என்னும் இருள் மலத்தை அருள் என்னும் ஒளியால் அகற்றும் தத்துவமே தேர்பவனியின் பொருளாகும்.

அதுமட்டுமன்றி ஊர்த்தூய்மை, ஊரவர்களின் ஒற்றுமை, சேர்ந்து செயற்படும் தன்மை, அனைவரும் அன்னையின் நிழலில் ஒடுங்கும் நிலையை நெறியெனக் கூறும் இப்பெருவிழா சமய சடங்குகளில் தனித்துவம் நிறைந்தது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி வழிபடுவதனால் தான் கடந்த 2009 ஆம் ஆண்டு பேரினவாத சக்திகளால் தேர்பவனி தடை செய்யப்பட்டது. அந்தக் கசப்பான அனுபவங்களை உரமாக்கி அசைக்கமுடியாத ஆலமரமாய் மேலும் வளர்ந்து அன்பு நிழல் தரும் ஆலயமாக மிளிர்ந்திருக்கிறது.

ஆலய நிர்வாக சபையினரும் ஆலயத்துக்காக தங்களை அர்ப்பணித்துள்ள இறக்குவானை இந்து இளைஞர்களின் பங்களிப்பும் இதற்கு முக்கிய காரணமாகும்.

ஆலயத்தின் பிரதான விழாவான தேர்த்திருவிழாவைத் தொடர்ந்து மறுநாள் தீர்த்தோற்சவமும் அதற்கு அடுத்தநாள் பூங்காவனத் திருவிழாவும் நடைபெறவுள்ளன.

எங்களுடைய கலாசாரம், எங்களுடைய பண்பாடு, எங்களுடைய விழுமியங்கள், எங்களுடைய பாரம்பரியங்கள், எங்களுடைய தனித்துவங்களைக் காக்கவேண்டிய கடமைப்பாடும் பேணவேண்டிய பொறுப்பும் எங்களுக்குத் தான் இருக்கிறது. ஆதலால் ஆசார சீலர்களாய் ஆலயத்துக்கு வந்து அன்னையின் அருள் பெற்றுய்வோம்.

-இராமானுஜம் நிர்ஷன்
(நன்றி வீரகேசரி வாரவெளியீடு-13.02.2011)