Friday, November 25, 2011

யாருக்காக உழைக்கிறார்கள் மலையகத் தலைவர்கள்? (பகுதி 1)

பொதுவாகவே நான் யாருக்கும் எதிரி கிடையாது. அரசியலில் ஈடுபடும் எண்ணமும் கிடையாது. உண்மையை உள்ளவாறே கூறுவதால் பலர் என்னை எதிரியாகப் பார்க்கிறார்கள். எனக்கு அப்படியொரு மனோபாவம் கிடையாது.

மக்கள் சார்புப் பிரச்சினைகளை மக்களில் ஒருவனாக இருந்து அந்தப்பார்வையில் எழுதுகையில் ஏனோ உண்மைகள் பலவற்றை வெளிப்படையாகக் கூறிவிடுகிறேன். இதில் தவறில்லை என்பதுதான் என்னுடைய கருத்து.

இருக்கட்டும்.

மலையகத்தில் குறிப்பாக நுவரெலியா, மாத்தளை, இரத்தினபுரி மாவட்டங்களில் புரட்சியுடன் கூடிய இளைய தலைமுறையினர் மக்களின் நலனுக்காக உழைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்கள் அரசியல் சார்ந்தவர்கள் அல்லர். சுயலாபத்துக்காக வேசத்துடன் உழைப்பவர்களும் அல்லர். அவர்களுடன் பழகும் சந்தர்ப்பம் அண்மையில் கிடைத்தது.

பலர் எனக்குப் புதியவர்கள் அல்லர். அவர்கள் ஆரம்பகாலம் முதலே மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு திட்டங்களுடனும் தொடர்புடையவர்கள்.

அண்மையில் இரத்தினபுரி மாவட்டத்தில் நடைபெற்ற சமூக நிகழ்வுக்குப் பிறகு நாம் ஆறுதலாகப் பேசிக்கொண்டிருந்தோம். மலையகத்தின் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த இளைஞர்கள் அங்கு இருந்தார்கள்.

அப்போது பொதுவாக எல்லாரும் எழுப்பிய கேள்வி - "யாருக்காக உழைக்கிறார்கள் மலையகத் தலைவர்கள்?"

உண்மைதான். ஆரோக்கியமானதும் யதார்த்தத்துக்குப் பொருத்தமானதுமான கேள்வி இது.

பத்துப் பதினைந்து கூரைகள், விளையாட்டு உபகரணங்கள், ஒரு சில தொழில்வாய்ப்புகள், அனர்த்தங்களின்போது உதவிகள், வீதித் திருத்தம்...இப்படி குறிப்பிட்ட அரசியல் தலைவர்களுக்கே உரித்தான சில பொதுச் சேவைகள் உண்டு. அவற்றைத்தான் காலம் காலமாகச் செய்துவருகிறார்கள்.

இதனை யாரும் மறுப்பதற்கு இல்லை.

உண்மையாகவே மக்களின் அடிப்படைப் பிரச்சினை என்ன?

அவர்களுக்குச் சொந்தமான வீட்டுக்கு இன்னும் உரிமைப்பத்திரம் வழங்கப்படவில்லை. தொழிலாளர்களுக்கென விலாசம் இல்லை. இது அடிப்படையில் அவர்களுக்குரிய பிரச்சினையாகும்.

அடுத்தது கல்வித் தேவைகள். மலையகத்தில் எத்தனை சிறுவர்கள் பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்தியிருக்கிறார்கள்? அதற்கான காரணம் என்ன? செல்வந்தர்களின் வீடுகளில் எத்தனைபேர் வேலை செய்கிறார்கள்? அதன் உண்மை நிலை என்ன?

வெளிநாடுகளுக்குப் பணிப்பெண்களாகச் செல்லும் பெண்களில் எத்தனைபேர் பாதிக்கப்படுகிறார்கள்? ஏமாற்றப்படுகிறார்கள்?

இவை தொடர்பாக மலையக அரசியல் தலைவர்கள் செவி சாய்ப்பதில்லை. ஏனென்றால் இவை மிகப்பெரிய திட்டங்கள். இந்தத் திட்டத்தினால் மக்கள் நன்மையடைவார்களேயானால் அவர்களை ஏமாற்றிப் பிழைக்க முடியாது. அடிப்படைத் தேவைகளைத் தாமாகவே பூர்த்திசெய்துகொண்டு ஒரு சமுதாயம் தானாகவே முன்னேற்றம் காணுமானால் அரசியல் தலைவர்களுக்கு அங்கு வேலையிருக்காது.

ராகலையைச் சேர்ந்த நண்பர் ஒருவர் அன்று வேதனையோடு கூறுகிறார்.

"எங்களது தோட்டத்தில் மகேந்திரன் என்ற பெயரில் மூவர் இருக்கிறார்கள். என்னுடைய பெயரும் மகேந்திரன். எனக்கு ஒரு கடிதம் வந்தால் மற்றைய மூவருக்கும் சென்றுதான் கடைசியில் என்னிடம் வரும். அப்படி வராமல் போன கடிதங்களும் உண்டு. எங்களுக்கு விலாசம் இல்லை என்பதற்கு இதைவிட என்ன அத்தாட்சி தேவைப்படுகிறது?"

இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக தோட்டங்கள்தோறும் உபதபால் நிலையங்கள் நிறுவப்பட்டன. எனினும் அவற்றில் பல இயங்காமை வருத்தத்திற்குரியதே.

இரத்தினபுரி டிப்டீன் என்ற தோட்டத்தில் கோப்பிமலை எனும் இடமிருக்கிறது. அங்கு பெரும்பான்மையினத்திருக்கு கூலித் தொழில் செய்யும் அடிமைகளாகத் தமிழர்கள் நடத்தப்படுகிறார்கள்.

பாடசாலைக்குச் செல்லாத சிறுவர்கள் உடும்பு இறைச்சி சாப்பிட்டு கசிப்பு குடிக்கிறார்கள். இது எத்தனை அரசியல் தலைவர்களுக்குத் தெரியும்?

பதுளை மாவட்டத்தில் பின்தங்கிய பகுதி சிறுவர்களிடையே போஷாக்குக் குறைவாகக் காணப்படுகிறது. அவர்களின் பற்கள் செம்மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றன.

சுத்தமான தண்ணீர் இல்லாமையும், போஷாக்கின்மையும்தான் காரணமாக இதற்குக் கூறப்படுகிறது. குறிப்பாக கோதுமை மாவை இவர்குள் அதிகம் உண்பதால் இப்பிரச்சினை உருவாகியிருக்கலாம் என நான் நினைக்கிறேன்.

இதற்குரிய உண்மையான காரணம் என்ன? வறுமைதான். காலம் காலமாக உழைத்துக் களைத்து தலைவரின் பின்னாலேயே ஓடி ஓடி தேர்தல் காலத்தில் குடியும் குடித்தனமுமாக இருந்து விழிப்புணர்வுகளைத் தொலைத்த மக்களும் இதற்குக் காரணம்.

எப்படியிருந்தாலும் சுற்றிச்சுற்றி அதே அரசியல்வாதிகள் தான் நம் வீடுதேடி வருகிறார்கள். என்னதான் செய்வது நம் தலைவிதி என வாக்களிக்கிறோம் எனக் கூறுவோரும் இருக்கிறார்கள்.

பாரம்பரிய அரசியல் கலாசாரத்துக்கு அப்பால் புதிய வருகைகளை மக்கள் விரும்பினார்கள்.

ஸ்ரீரங்கா - தேர்தலுக்கு முன் மக்களோடு மக்களாக இருந்து மத்திய மாகாணமே தஞ்சம் என இருந்தார். அரசியல் கட்சித் தலைவர்களை வெளிப்படையாக விமர்சித்தார். ஹட்டன் வெலிஓய மக்களின் முழுமையான ஆதரவோடு இவருக்கு ஆதரவு அதிகரித்தது. வழமையாக தெரிவாகும் தலைவர்கள் எங்களை ஏமாற்றுகிறார்கள். புதிய சிந்தனையோடு மக்கள் நலனுக்காகக் குரல்கொடுக்கும் ரங்காவை தெரிவு செய்வோம் என மக்கள் தெரிவு செய்தார்கள். ஆனால் தற்போதைய நிலை?

அவரைக் காண்பதற்கே தவம் கிடக்க வேண்டியிருக்கிறது.

திகாம்பரம் - புரட்சியோடு கொஞ்சம் கொஞ்சமாக அரசியலில் முன்னேறினார். மக்களோடு மக்களாக இருந்து செயற்பட்டார். தேர்தல் காலங்களில் திகாம்பரத்தின் பேச்சு அனல் வீசியது. அதனால் இளைஞர்கள் பலர் அவரோடு இணைவதற்குத் தீர்மானித்தார்கள். அரசியல் ரீதியாகப் பழிவாங்கப்பட்டவர்கள் பலர் அவரோடு இணைந்துகொண்டார்கள். மக்களும் நம்பினார்கள். புதிய தலைமைத்துவம் உதயமாவதை எண்ணி மகிழ்ந்தார்கள்.

இறுதியில்? தேர்தலில் வெற்றிபெற்ற திகாம்பரம் வழமையான அரசியல்தான் புரிந்தார். ஆளும் கட்சியோடு இணைந்துகொண்டதால் புலி வாலைப் பிடித்த கதையாய் போயிற்று.

இப்போது நினைத்துப்பாருங்கள். மக்களின் கதி என்ன?

இருநூறு வருடங்களாக நாட்டின் முதுகெலும்பாய் உழைக்கும் வர்க்கத்தினருக்கு இதுவரை வீட்டுரிமைப் பத்திரம் பெற்றுக்கொடுக்க முன்வராதவர்கள் இனி என்ன செய்யப்போகிறார்கள்?

-இராமானுஜம் நிர்ஷன்

(இதன் அடுத்த பகுதி விரைவில் எழுதுகிறேன்)

Friday, November 11, 2011

“அவர் கூப்பிட்டால் எத்தனை மணி என்றாலும் வரணும்” அமைச்சர் ஆறுமுகனின் உத்தியோகத்தர்கள் இளம் பெண்ணுக்கு இட்ட உத்தரவு

அன்று புதன்கிழமை 09.11.2011.

மதியம் 12.30 மணியளவில் தங்கையிடமிருந்து அழைப்பு. ‘அண்ணா என்னை அவசரமாக மினிஸ்ட்ரிக்கு வரச்சொல்றாங்கண்ணா’.

ஏன்? என்ன விஷயம் என்று கேட்டேன். ‘ஹவுப்பே பிரஜாசக்தி சென்ரர் பற்றித்தான் பேச வரச்சொல்றாங்கனு நினைக்கிறேன். ஆனா எதுவும் விளக்கமா சொல்லல’
கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

பலாங்கொடைக்கு அண்மித்ததாகவுள்ள பிரஜாசக்தி நிலையமொன்றில் இணைப்பாளராகக் கடமையாற்றுகிறாள் அவள்.

பிரஜாசக்தி நிலையங்கள் சௌமியமூர்த்தி தொண்டமான் மத்திய நிலையத்தின் கண்காணிப்பின் பேரில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்குக் கீழ் இயங்கிக்கொண்டிருக்கிறது.

அமைச்சிலிருந்து ஏன் அவசரமாக வரச்சொல்ல வேண்டும் என சிந்தித்தேன். நீங்கள் வரவேண்டாம். இப்போது கொழும்புக்கு வருவதென்றால் மாலை 5.30 மணியாகும். அமைச்சு அலுவலகங்கள் 4.30 மணிக்கு மூடப்படும். எதுவாயினும் விபரமாகக் கேளுங்கள் எனக் கூறினேன்.

பயந்த சுபாவமுடைய தங்கை அமைச்சு அதிகாரிகளுக்குப் பயந்து கொழும்புக்கு வந்தாள்.

அதற்கிடையில் பிரஜாசக்தியுடன் தொடர்புடைய அதிகாரிகள் சிலருக்கு நான் தொலைபேசியினூடாகத் தொடர்புகொண்டேன்.

“இது அலுவலக வேலை. நீங்கள் தலையிட வேண்டாம். தலையிடவேண்டிய அவசியமும் இல்லை” - இது எனக்குக் கிடைத்த பதில்.

ஆகட்டும் என தங்கைக்காக புறக்கோட்டையில் காத்திருந்தேன். அவள் வரும்போது மணி 6.15 ஆகியிருந்தது.

அதே நேரத்தில் அமைச்சு அலுவலகத்திலிருந்து தூதுவர் ஒருவரும் அங்கு வந்திருந்தார்.

‘நேரம் தாமதமாகிக்கொண்டிருப்பதால் அழைத்துவருமாறு என்னை அனுப்பினார்கள்’ - இது அவர் எனக்குத் தந்த பதில்.

பொறுமையாக இருந்தேன்.

தங்கையை அழைத்துக்கொண்டு கொள்ளுப்பிட்டியில் உள்ள அமைச்சுக்குச் சென்றேன்.

மூன்று மணிக்குத்தானே வரச்சொன்னோம். இரத்தினபுரியிலிருந்து இரண்டு மணித்தியாலத்தில் வரமுடியும்தானே? எனக்கேட்டார் அதிகாரியொருவர்.

திடீரென அழைத்துவிட்டு, தங்கையிடம் பணம் இருக்கிறதா? வேறு என்ன தேவைகள்இ கொழும்பு என்பது இரத்தினபுரியிலிருந்து 7 ரூபா தூரம் அல்ல என்பது அவர்களுக்கு விளங்கவில்லை என்பதை புரிந்துகொண்டேன்.

அப்போதும் நான் பொறுமையாகத்தான் இருந்தேன்.

வாருங்கள். வாகனத்தில் ஏறுங்கள் என்றார்கள்.

JY 2390 என்ற இலக்கமுடைய வாகனத்தில் ஏறினோம். எங்கே போகிறோம் எனச் சொல்லவில்லை.

எம்மோடு இரண்டு அதிகாரிகள் இருந்தார்கள்.

அவர்களில் ஒருவரிடம் என் தங்கை கேட்டாள் ‘ எங்கே போகிறோம் சேர்?’

‘ட்ரஸ்டுக்குப் போறோம்’

‘ட்ரஸ்ட் எங்கே இருக்கிறது’

‘தெரியாது’

இது அவர்களுக்கிடையில் நடந்த சம்பாஷனை.

வாகன நெரிசல்களுக்கிடையில் எமது வாகனமும் மெல்ல மெல்ல நகர்கிறது.

இறுதியில் பாராளுமன்றக் கட்டடத்தொகுதிக்கு அண்மையில் உள்ள அமைச்சின் மற்றுமொரு அலுவலகத்துக்கு வந்தோம்.

அப்போது சரியாக மணி 7.20.

எதற்காக இங்கே வந்திருக்கிறோம் எனக்கேட்டாள் தங்கை.

மினிஸ்டர் சர் வரச்சொன்னார் என்றார் அந்த அதிகாரி.

மினிஸ்டர் எத்தனை மணிக்கு வருவார் என நான் கேட்டேன் - எனது பொறுமை களைத்து முதலாவதாக நான் பேசிய வார்த்தைகள் இவை.

இன்னும் ஹாஃப் என் ஹவர் ஆகும் எனப் பதில் கிடைத்தது.

உத்தேச பறிமுதல் சட்டம் தொடர்பான விவாதமும் வாக்கெடுப்பும் பாராளுமன்றில் அன்றைய தினம் நடந்துகொண்டிருக்கிறது என்பது எனக்குத் தெரியும். அதனால் அமைச்சர் வரத் தாமதமாகும் என்பதையும் நான் அறிந்தேன்.

அரைமணிநேரம் பொறுமையாக இருந்தேன்.
பின்னர் பிரஜாசக்தியின் முகாமையாளரிடம் நான் சென்று பேசினேன்.

பொறுமைக்கும் எல்லை உண்டல்லவா?

அமைச்சர் இப்போதைக்கு வரமாட்டார். இதற்கு மேலும் என் தங்கையை இங்கே இருத்தி வைக்க எனக்கு விருப்பமில்லை. நான் அழைத்துச்செல்கிறேன் என ஆத்திரத்துடன் கூறினேன்.

இவள் எங்களுக்குக் கீழ் வேலை செய்யும் உத்தியோகத்தர். நாங்கள் அழைத்திருக்கிறோம். அவள் வந்திருக்கிறாள். இதில் நீங்கள் தலையிட எந்த உரிமையும் இல்லை என்றார் அவர்.

உங்களிடம் வேலை செய்வதற்கு முதல் அவள் என்னுடைய தங்கை என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ளுங்கள். இவ்வளவு நேரம் பொறுமையாக இருந்தோம்.

ஐந்து மணிநேரப் பயணத்தை 2 மணிநேரத்துக்குள் வரச்சொல்கிறீர்கள். இது எந்த வகையில் நியாயம்? அமைச்சர் என்றால் எதுவும் செய்யலாமா?

அமைச்சர் வரச்சொன்னால் எத்தனை மணி என்றாலும் வரத்தான் வேண்டும். ஏனென்றால் அவள் எங்களிடம் கைநீட்டி சம்பளம் வாங்குகிறாள். நாங்கள் 11.30 மணிக்கே கூறிவிட்டோம். அவள்தான் அம்மாவிடம் சொல்லவேணும் அப்பாவிடம் கேட்கவேணும் என நேரம் தாமதித்தாள். நீங்கள் கட்டாயம் இங்கு இருந்து அமைச்சரைச் சந்தித்துவிட்டுத்தான் போகவேண்டும் என்றார் அந்த அதிகாரி.

அம்மா அப்பாவிடம் கேட்காமல் எப்படி ஒரு பெண்ணால் தனியாக கொழும்புக்கு வரமுடியும்? அவள் வேலை செய்ததற்காக சம்பளம் வாங்குகிறாள். சும்மா உட்கார்ந்திருந்து சம்பளம் வாங்கவில்லை. உங்களைப்போல அமைச்சருக்கு நாலு போஸ்டர் ஒட்டிவிட்டு வால்பிடித்து இந்தத் தொழிலுக்கு வரவில்லை என ஆத்திரத்துடன் கூறி தங்கையை அழைத்துக்கொண்டு வெளியில் வந்தேன்.

கொஞ்சம் பொறுங்கள் அமைச்சரிடம் கேட்டுச்சொல்கிறேன் என தொலைபேசி அழைப்பெடுத்தார் அந்த அதிகாரி.

அண்ணன் வந்து பெருங்குழப்பம் போடுகிறார். கண்டபடி திட்டுகிறார். என்ன செய்வது என உரையாடியதை நான் கவனித்தேன்.

அமைச்சர் வந்தாலும் நான் எனது தங்கையை அழைத்துச்செல்வேன் வராவிட்டாலும் அழைத்துச்செல்வேன் எனக் கூறிவிட்டு அங்கிருந்து வந்தோம்.

அமைச்சுக்கு அதிகாரம் உள்ளது என்பதற்காக எப்படியெல்லாம் நடந்துகொள்கிறார்கள் பாருங்கள். நான் அங்கு சென்றதுஇ நடந்த விடயங்கள் அனைத்தையும் எனது ட்விட்டர், பேஸ்புக் தளங்களில் பதிவேற்றிக்கொண்டிருந்தேன்.



உண்மையில் எனக்கு அமைச்சர் மீது அப்படியொரு கோபம் வந்தது. அவருக்கு பல விடயங்கள் தெரியாது. ஆனால் அவருடைய பெயரை வைத்துக்கொண்டு நடத்தப்படும் அராஜகங்களால் அமைச்சரின் பெயர்தான் கேவலமாக்கப்படுகிறது.

இப்படி எந்தப் பெண்ணையும் எந்த நேரத்திலும் அழைக்கும் அதிகாரம் இவர்களுக்கு யார் கொடுத்தது?

அலுவலக ரீதியில் என்றால் அதற்கு ஒரு ஒழுங்குமுறை இருக்கிறது. அதனை இவர்கள் சரியாகக் கடைப்பிடித்தார்களா?

மலையத்தின் தந்தை அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானை நான் அந்த நேரத்தில் நினைவுகூர்ந்தேன். அற்புதமான அந்த மனிதரின் பெயரால் நடத்தப்படும் இந்த பிரஜாசக்தி நிலையங்களில் இப்படியும் அதிகாரம் பயன்படுத்தப்படுகிறதா என வியந்தேன்.

எனது தங்கையை நான் அழைத்துச் சென்றதால் சரியாகிப்போனது. இதேபோல் வேறு பெண்களை இவர்கள் அவசரமாக அழைத்தால் எங்கே தங்கவைப்பார்கள்? யார் பாதுகாப்பு? யார் பொறுப்பு? இப்படியெல்லாம் அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்து அவை அத்தனையும் அமைச்சர் ஆறுமுகனின் மீது வெறுப்பாகவே அமைந்தன.

இப்போதும் எனக்குக் கோபம் அடங்கவில்லை. ஆனால் பொறுமையாக இருக்கிறேன்.

-ஆர்.  நிர்ஷன்