Friday, November 14, 2008

இந்திய தூதரகத்தின் மற்றுமொரு கேளிக்கூத்து..!

"பிச்சை எடுக்கிறானாம் பெருமாளு, அதப் புடுங்குறானாம் அனுமானு" என்றொரு கிராமியப் பழமொழி உண்டு. அதற்கேற்றாற்போல் தான் இலங்கைக்கான இந்தியத் தூதரகத்தின் செயற்பாடும் உள்ளது.
இலங்கையிலுள்ள இந்திய வமிசாவளியினர் இந்தியாவில் தமது சொந்த பந்தங்கள் பற்றித் தகவல் தெரிந்துகொள்ள வேண்டுமாயின் 20000 இந்திய பெறுமதிப் பணத்தை செலுத்தி அறிந்துகொள்ளலாம் என தூதரகம் அறிவித்துள்ளது. இந்தியப் பெறுமதியில் 20ஆயிரம் என்றால் இலங்கைப் பெறுமதிப்படி 44 ஆயிரத்து 800 ரூபா செலுத்த வேண்டும்.

இலங்கை மலையக மக்கள் (இந்திய வமிசாவளியினர்) இந்தத் தொகையை செலுத்துவதானால் கிட்டத்தட்ட 8மாதங்கள் உழைக்க வேண்டும். அதாவது சனி ஞாயிறு தினங்கள் உட்பட 8மாதச் சம்பளத்தையும் செலவுசெய்யாமல் சேமித்தால் தான் இந்தப்பணத்தை செலுத்த முடியும்.ஏனென்றால் அவர்களின் நாளாந்த வருமானம் 195ரூபா. இந்திய வமிசாவளியினருக்கு செய்யும்பேருதவி என இந்தியத் தூதரகம் இலவசமாக இந்தச் சேவையினை வழங்கியிருக்கலாம். அல்லது தொகையை குறைத்திருக்கலாம்.

இருப்பினும் மலையகத்தில் கால்வயிறு அரைவயிறு என வாழும் மக்கள் தமது பொருட்களை எல்லாம் விற்றாவது தமது இந்திய உறவுகளைப் பற்றி அறிய வேண்டும் என ஆர்வம் கொண்டுள்ளனர்.

இந்தியத் தூதரகத்தின் இந்தத் திட்டம் பற்றி தினக்குரல் பத்திரிகையில் வெளியான செய்தியை இங்கு தருகிறேன்.

இலங்கையிலுள்ள இந்திய வம்சாவளியினர் தமது மூதாதையர்கள் தொடர்பாகவும் பூர்வீக இடம் குறித்தும் அறிந்துகொள்ள விரும்பினால் அதற்கான உதவிகளை வழங்கும் திட்டமொன்றை கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் நேற்று முன்தினம் புதன்கிழமை அறிவித்துள்ளது.

"வேர்களை கண்டறிதல்' என்ற தலைப்பிடப்பட்ட இத்திட்டத்தின் பிரகாரம் தமது பூர்வீகத்தை அறிந்துகொள்ள விரும்பும் இந்திய வம்சாளியினர் விண்ணப்பிக்க முடியும். ஆனால், இதற்கு குறிப்பிட்ட கட்டணமும் உதவி ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இது தொடர்பாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிக்கையொன்றை விடுத்துள்ளது. இந்தத் திட்டமானது விண்ணப்பதாரியின் முன்னோர்கள் பற்றிய தகவலை திரட்டி வழங்குவது மட்டுமே என்றும் விண்ணப்பதாரி தனது பூர்வீக இடத்திற்குச் செல்வதற்கான எந்தவொரு ஏற்பாடும் வழங்கப்படாது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"தமது மூதாதையரின் இடங்களுக்குச் செல்வதற்கு விண்ணப்பதாரர் விரும்பினால் அமைச்சு/ இன்டிரூட்ஸ் (அரசசார்பற்ற தொண்டர் நிறுவனம்) அதற்கான வசதிகளை செய்துகொடுக்கும். ஆனால், அதற்கான சகல செலவுகளையும் விண்ணப்பதாரரே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இந்திய நாணயம் 20 ஆயிரம் ரூபாவை விண்ணப்பதாரர்கள் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் விண்ணப்பங்களுடன் வைப்பிலிட முடியும். இலங்கை ரூபாவில் காசோலை அல்லது காசுக் கட்டளையை "இந்திய உயர் ஸ்தானிகராலயம், கொழும்பு' என்ற பெயருக்கு செலுத்த முடியும். அமைச்சு விண்ணப்பங்களை "இன்டிரூட்ஸு'க்கு பாரப்படுத்தும்.

உயிருடன் இருக்கும் நெருங்கிய உறவினர்கள், தந்தை அல்லது தாய்வழி முன்னோர்களின் பூர்வீக இடம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் விபரம் என்பனவற்றை "இன்டிரூட்ஸ்' தயாரிக்கும் அதன் பின் அந்த விபரம் அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்படும். விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்ட சுமார் 3 மாத காலத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இன்டிரூட்ஸிடமிருந்து பெற்றுக்கொண்ட தகவல் பின்னர் உயர் ஸ்தானிகராலயத்துக்கு அனுப்பபடும். பின்னர் அது துரிதமாக விண்ணப்பதாரிக்கு தெரிவிக்கப்படும்.

Thursday, November 6, 2008

பிரார்த்தனையும் வேண்டுதலும்..!

எல்லாரும் இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்। நான் நல்லாயிருக்கனும், வீட்டார் நல்லாயிருக்கனும், பக்கத்துவீடு, முன்வீடு எல்லாம் சந்தோஷத்துல நிறையனும், கல்வி வேணும், காசு வேணும் என (இன்னும் ஏகப்பட்ட) பிரார்த்திக்கிறோம்।
ஏதோ கடைசியா வாயில் வந்தா எல்லாரும் நல்லாயிருக்கனும் என்று பிரார்த்திப்போம்। இதுவரை எனது பிரார்த்தனைகள் எல்லாம் அப்படித்தான் இருந்துவந்தன।
ஆனால் எமது நாடு, எமது மக்கள், எமது மொழி இதைவைத்து அரசியல் அரங்கில் முளைவிட்டுக் காய்க்க எண்ணும் கலைஞர்கள் ( இங்கு கலைஞர்கள் எனக் குறிப்பிட்டது நடிப்பில் தேர்ந்தவர்கள் என்பதால்) , தீவிரமாக பின்பற்றப்பட்டுவரும் கொலைக்கலாசாரம், யாராலும் தண்டிக்கப்டாத வெறியர்களின் அடாவடித்தனம், கொன்றுகுவிக்கப்படும் பிணங்கள் என இத்தனையும் பார்த்து எனது பிரார்த்தனையை மாற்றிக்கொண்டேன்।
எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கவேண்டும் என்பதிலிருந்து விலகி இப்போது குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றே பிரார்த்திக்கிறேன்।
சமூகத்துரோகிகள்,மொழித்துரோகிகள்,தேசத்துரோகிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட்டால் மற்றவர்களுக்கு வாழ்வு கிடைக்குமல்லவா?
எனது கோரிக்கைகளை இறைவன் ஏற்றுக்கொள்வாரா என்பதுதான் சந்தேகம்॥!
*****************************************
இலங்கைத் தமிழர்களுக்கான இந்திய உறவுகளின் எழுச்சி, உணர்வுகளைத் தீண்டி இழுத்து பயமின்றி நிமிர்ந்து நிற்கச் செய்கிறது। இருப்பினும் குறிப்பிட்ட சிலர் இந்த விடயத்தில் தெளிவில்லாததால் பதிவிடல் என்ற பெயரில் ஏதேதோ எழுதி வருகிறார்கள்।
இலங்கைப்பிரச்சினை பற்றி எழுதினாலும் பின்னூட்டம் தந்தாலும் புலி ஆதரவாளர்கள் என்றும் நாம் வடிப்பது முதலைக்கண்ணீர் என்றும் கூறி மனம் நோகச்செய்கிறார்கள்। இவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது ஒன்று மட்டும்தான்। (எனது வேண்டுதலாகவும் எடுத்துக்கொள்ளலாம்).
தமிழ் மக்கள் வடிக்கும் கண்ணீரை தயவுசெய்து உங்கள் எழுத்துக்களால் கொச்சைப்படுத்தாதீர்கள்।

( யுத்தத்தினால் மட்டுமல்ல। யுத்தம் சாராத எத்தனையோ இழிநிலைப் பிரச்சினைகளுக்கு தமிழர்கள் முகங்கொடுத்து வருகின்றமை வெளிவராத உண்மைகளாக மறைந்து காய்ந்து போகின்றன।
சரியாக இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் தமிழர்களை கொன்றொழிக்க வேண்டும் என்ற தீவிரம் அதிதீவிரமாக தலைதூக்கத்தொடங்கியது। இதே காலகட்டத்தில் அப்போது நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெண்களின் மார்புகள் இனவெறிக்காடையர்களால் அறுக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டார்கள்। இது தொடர்ந்தும் இடம்பெற்றது। இவ்வாறான கசப்பான கறைபடிந்த வரலாறு உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? கணவரைக் கண்முன் கொல்லுவோம் என அச்சுறுத்தி மனைவியை பலவந்தமாக பாலியல் குற்றத்துக்கு உட்படுத்தியது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? )

*****************************************
நான் முதல் சொன்ன விடயத்துக்கும் பின்சொன்ன விடயத்துக்கும் ஏதோ ஒருவகையில் தொடர்பு உள்ளதாக நினைத்தாலும் தவறில்லை।