Monday, November 26, 2007

செய்தி: மாணவி மீது கத்திக்குத்து!

தொழில்நுட்பப் பயிற்சி வகுப்புக்கு சென்று திரும்பிய மாணவி ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி ஆபத்தான நிலையில் பதுளை வைத்தியசாலை அதிவிசேட சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்।இச்சம்பவம் நேற்று முன்தினம் மாலை லுணுகலையிலுள்ள அடாவத்தை தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.இந்தத் தோட்டத்தைச் சேர்ந்த சிவநாதன் பவானி (வயது 20) என்பவரே கத்திக்குத்துக்கு இலக்கானவராவார்.இச்சம்பவம் தொடர்பாக லுணுகலைப் பகுதியைச் சேர்ந்த யப்பாமை அரச பாடசாலையின் காவலாளியான சுந்தரம் விநாயகமூர்த்தி என்பவரை, அப்பகுதி மக்கள் பிடித்து, லுணுகலைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.லுணுகலைப் பொலிஸ் பிரிவிலுள்ள இச் சந்தேக நபருக்கும், கத்திக்குத்திற்கிலாக்கான மாணவிக்குமிடேயே ஏற்கனவே கருத்து முரண்பாடுகள் இருந்துவந்தன எனவும், இதையடுத்து இச் சந்தேகநபர் தொழில்நுட்பப் பயிற்சி வகுப்பிற்கு அம்மாணவியை செல்லவேண்டாமென்று தடை விதித்தார் எனவும், இத் தடையை மீறி அம் மாணவி வகுப்பிற்குச் சென்று திரும்பியபோதே, இம் மாணவி கத்திக்குத்திற்கு இலக்கானார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள இந்த மாணவியின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது எனவும் இந்த மாணவியின் உடம்பில் நான்கு பெரிய கத்திக்குத்து காயங்கள் உள்ளன எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

Monday, November 12, 2007

வெளிச்சம் தராத தீபங்கள்

இலங்கையின் மலையகப்பகுதிகளில் இம்முறை தீபாவளி வெறும் மெளனச் சடங்காகவே ஆகியிருந்தது। நாளுக்கு நாள் அதிகரித்துச்செல்லும் பொருட்களின் விலை மற்றும் பொருளாதாரச்சுமைகளில் தீபாவளியும் தேவையில்லை ஒன்றும் தேவையில்லை என்பது போலத்தான் மக்கள் சந்தோசங்களைத் தொலைத்து வெளிப்படுத்த முடியாத ஆதங்கங்களுடன் தீபாவளி நாளை நகர்த்தினர்।

தேங்காய் ஒன்றும் அரிசி ஒரு கிலோவும் தேங்காயெண்ணெய் அரை லீற்றரும் வாங்கினால் தொழிலாளர்களில் ஒருநாள் சம்பளம் தீர்ந்துவிடுகிறது। இந்நிலையில் எப்படி தீபாவளியைக் கொண்டாடுவது? கொடுமை அரக்கனை கொன்றொழித்த நாளான தீபாவளியில் கொடியவர்கள் தான் இன்பம் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்। கடவுள் நின்று கொல்லும் என்பதும் பொய்யாகவே தெரிகிறது என்கிறார்கள் மலையகத் தொழிலாளர்கள்।

காலம் பதில்சொல்லுமா?

Thursday, November 1, 2007

இது அமைச்சர் சொன்னதுப்பா!


இலங்கை மலையகத்தின் கட்சியொன்றிலிருந்து பிரிந்துசென்று அமைச்சுப்பொறுப்பை ஏற்றுக்கொண்டு புதிய தொழிற்சங்கமொன்றையும் ஆரம்பித்துள்ள அமைச்சர் ஒருவர் அண்மையில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றினார்। அவரது உரையிலுள்ள சில முக்கிய தகவல்களை மக்கள்(அவர்) அறிந்துகொள்ள வேண்டியவற்றை தருகிறேன்।


*எமது சமூகத் தலைவர்கள் மத்தியில் போட்டி, பொறாமை, பிரிவினைகள் தலைதூக்கியுள்ளன।இந்நிலை மாறவேண்டும்। எம்மிடையே ஒன்றுபட்ட சக்தி வலிமைபெறவேண்டும்.

* எம்மவர் மத்தியில் காட்டிக்கொடுப்புகள், பழிவாங்கல்கள், போட்டி, பொறாமைகள் தொடர்கின்றன. இத்தகைய செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் .

* தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் ஏனைய பிரச்சினைகளுக்கும் பாரம்பரிய நிலையை விட்டு நவீன முறையில் தீர்வினை ஏற்படுத்துவேன்।

* தோட்டத் தொழிலாளர் பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டிருப்பதற்கு நான் இடமளியேன்। அவர்களின் பிரச்சினைகள் உடனுக்குடன் தீர்க்கப்படல்வேண்டும்.

* அன்று தொட்டிருந்து எமது தலைமைகள் செய்த தவறுகளினாலேயே எமது நிலையில் மாற்றங்களைக்காண முடியவில்லை। இன்னும் அந்த நிலை தொடர்ந்த வண்ணமாகவேயுள்ளது. தனக்கு இருகண் போனால் பரவாயில்லை. மற்றவனுக்கு ஒரு கண்ணாவது போகவேண்டு மென்ற நிலையிலேயே எமது தலைமைகள் உள்ளன.

* எமது சமூகத்திற்கு எதிரி வெளியிலிருந்து வரத் தேவையில்லை। நமக்கு நாமே எதிரிகளாக இருந்து வருகின்றோம்.


நல்ல விடயங்களைத்தான் ஐயா கூறியிருக்கிறீர்கள்। இவற்றில் சில விடயங்களை நீங்கள் கண்ணாடி முன் நின்று கூறிப்பார்க்கவும் மறந்துவிட வேண்டாம்। தலைமை தவறு செய்வதாக ஒப்புக்கொள்கிறீர்களானால் நீங்களும் தவறுசெய்கிறீர்கள் என்பதை மறக்கவேண்டாம்.