Monday, March 31, 2008

மெகா சீரியலால் சிறுமி தற்கொலை!!!

சின்னத்திரைகளில் ஒளிபரப்பாகிவரும் தொடர்நாடகங்கள் பல பிரதிகூலமான விளைவுகள் ஏற்படுத்தி வருவதை பலரும் பல்வேறு வகையில் தெளிவுபடுத்தி வந்தனர்। இந்நிலையில் அவர்களின் கூற்றை உண்மையாக்கும் முகமாக சிறுமியொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்।
தொலைக்காட்சி நாடகத்தில் இடம்பெற்ற தற்கொலைக்காட்சியை பார்த்துவிட்டு அதேபோல் தானும் முயற்சி செய்து சிறுமி தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இலங்கை,கொழும்பு பாலத்துறை பகுதியிலுள்ள 12 ஆம் இலக்கத் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது।ரிகாசா (வயது 12) என்ற முஸ்லிம் சிறுமியே இச்சம்பவத்தில் இறந்தவராவார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,சம்பவ தினமான சனிக்கிழமை மேற்படி சிறுமியின் பெற்றோர் தொழில் நிமித்தம் வெளியில் சென்றுள்ளனர். தனது பாட்டியுடன் வீட்டிலிருந்த சிறுமி வீட்டின் மேல்மாடியிலுள்ள தனது அறையில் விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அப்போது மாலை 4.30 மணியளவில் அங்குவந்த, சிறுமியின் மச்சாள் முறையான மற்றொறு சிறுமி மேல்மாடியின் அறைக்குச்சென்று பார்த்தபோது, குறித்த சிறுமி கழுத்தில் சுருக்கிடப்பட்ட நிலையில் கூரைக்கம்பியில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். இதனைப் பார்த்த மற்ற சிறுமி, அச்சத்தில் அலறியவாறு பாட்டியிடம் ஓடிச்சென்று கூறியுள்ளார். உடனடியாக சிறுமி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளைமேற்கொண்டு வருகின்றனர்.கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகமொன்றில் பெண்ணொருவர் சேலையினால் கழுத்தில் சுருக்கிட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயற்சிப்பதைப்போன்ற காட்சி படமாக்கப்பட்டிருந்ததாகவும் அதைப்பார்த்த குறித்த சிறுமி விளையாட்டுத்தனமாக அதேபோன்று செய்து பார்க்க முயற்சித்தவேளையே இவ்வாறு உயிரிழந்திருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது. சிறுமி தான் அணிந்திருந்த துப்பட்டாவின் ஒரு பகுதியை சிறிய மேசையொன்றின் மேல் ஏறி தாழ்வாகக் காணப்படும் கூரைக்கம்பில் கட்டி மற்றைய பகுதியை தனது கழுத்தில் கட்டிக்கொண்டு மேசையிலிருந்து குதித்ததினாலேயே கழுத்துப்பகுதி இறுகி சிறுமி உயிரிழந்திருப்பதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து சிறுமியின் பாட்டியிடமும் சிறுமி தூக்கில் தொங்கியதை முதலில் கண்ட சிறுமியிடமும் பொலிஸார் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர். சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.சம்பவத்தை நேரில் கண்ட பயந்த நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது।

பெண்களை மையப்படுத்தியே சில தொடர்நாடகங்கள் இயக்கப்படுகின்றன। குடும்பச்சச்சரவுகளில் பெண்களே வில்லிகளாக சித்தரிக்கப்படுகின்றனர்। இதனால் வீடுகளில் தாய்மார்களைக் கூட பிள்ளைகள் எதிரியாகவே பார்க்கின்றனர் என்றால் தயாரிப்பாளர்கள் நம்பமாட்டார்கள்। நண்பரின் உறவினர் ஒருவரது வீட்டில் நடந்த சம்பவம் இது,
தாயார் சற்று தாமதமாக வர மகன் தாயைப்பார்த்துக் கூறுகிறான் இப்படி, எங்கடி அவனபார்க்கவா போயிட்டு வார?அவன் சோறுபோட்டு வளர்ந்த உடம்பா இது? எனக் கேட்டுள்ளான்। இதற்குக்காரணம் என்னவென்றால் இந்த வசனம் அப்போதுதான் தொலைக்காட்சி நாடகமொன்றில் ஒளிபரப்பாயுள்ளது। அதில் தாமதமாகிவரும் மனைவியைப் பார்த்துக் கணவன் கேட்கும் இக்கேள்வியை இங்கு மகன் கேட்கிறான்। இவ்வாறு நிறையவே சம்பவங்கள் உள்ளன। எதிர்மறை விடயங்களை காட்டுவதால் சிறுபிள்ளைகள் நியாயத்திலிருந்து விடுபட்டுச் செல்கிறார்கள்। அவ்வாறே இந்தச்சிறுமியின் உயிரும் பிரிந்துள்ளது। இதற்கு யார் பதில்சொல்லப்போகிறார்கள்???

Monday, March 10, 2008

சிவராத்திரியும் சிவத்துரோகமும்...! (மனித முகத்துடன் நாய்களின் அட்டகாசம்)

சிவனுக்கே உரிய தனித்துவமான விரதம்தான் சிவராத்திரி। மாதம்,பட்சம்,நித்தியம்,யோகம் என சிவராத்திரி அனுட்டிக்கப்பட்டாலும் மகா சிவராத்திரிக்கு தனி மதிப்புண்டு। மாயையாகிய உலகம் மகாசக்தியாகிய இறைவனிடத்தில் ஒடுங்கும் மகாபிரணய காலம் மகா சிவராத்திரியில் தான் வருகிறது। அதனால் இதன் தனித்துவம் மேலும் வலுவடைகிறது।
இவ்வாறிருக்க இலங்கையின் தலைநகரமாகிய கொழும்பில் சிவராத்திரி விரதம் சிறப்பாக அனுட்டிக்கப்பட்டது। ஆனாலும் வழமை போலவே இளசுகளின் லீலைகளும் மூலை முடுக்கெங்கும் அரங்கேறின। கடந்த ஆண்டு சிவராத்திரியின்போது கொழும்பில் இடம்பெற்ற காம வெறியாட்டங்கள் பற்றி மெட்ரோ நியூஸ் பத்தரிகையில் தகுந்த ஆதாரங்களுடன் எழுதியிருந்தேன்। அதற்காக வாசகர்களின் சூடான கருத்துப்பறிமாற்றங்களும் இடம்பெற்றன। அதேவேளையில் வெலியமுனை குருசாமி தினகரன் பத்திரிகையில் சில விடயங்களை தெளிவாகவே குறிப்பிட்டிருந்தததுடன் தினக்குரல் பத்திரிகையும் இந்தக் கீழ்த்தரம் குறித்து செய்தி வெளியிட்டிருந்தது।
என்னதான் ஊசியேற்றினாலும் உலக்கை நிலை மாறாததுபோல இந்தத்தடவையும் காம மழையில் நனைந்து காதல் நெருப்பில் குளிர்காய்ந்த நாயகர்களின் நிலையும் மாறவில்லை।
ஒருபுறம் பூசைநடைபெற மறுபுறம் பசை போல் ஒட்டிக்கொண்டிருந்தார்கள் காதலர்கள்। கொழும்பில் பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கு அருகில் லீலைகள் அரங்கேறின। இலவச காட்சியாக கண்டுகளித்தனர் பலர்।
விவேகானந்தா மேட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் ஒன்றுக்குள் இரண்டு காதல் ஜோடிகள் சில்மிஷங்களில் ஈடுபட்டிருந்த போது வேறு இளைஞர்கள் தொந்தரவு செய்தனர்। கோபத்தில் காருக்குள் இந்த இளைஞன் ஒருவன் ஓடிவந்தான்। மேலாடை கூட இல்லாமல்!!! ( என்ன கொடுமை சார் இது?)
அதுமட்டுமல்ல இரவுக்காட்சி திரையரங்குகள் நிறைந்திருந்தன।
நல்ல வேளை முகத்துவார கடற்கரைக்கு பொலீசார் யாரையும் அனுமதிக்கவில்லை। இல்லையென்றால் கடலே சகிக்காமல் பொங்கியிருக்கும்॥
ஆள் நடமாட்டம் என்றுகூட பார்க்காமல் காதலியின் இடையை நசுக்கிப்பிடிப்பதும் காலநேரத்தை நோக்காமல் அவளும் அவனது உடலை வருடிவிடுவதுமாக தொடர்ந்த பல கதைகள் விடியும் வரையில் ஓயவில்லை। இதுபற்றி நிறைய எழுதலாம்। ஆனால் வலைக்கலாசாரத்தை மீறி வெறித்தனமாக எழுதக்கூடாது என்பதால் தவிர்க்கிறேன்। இந்த அனுபவங்கள் பலவற்றை நேரில் கண்டு சளித்துப்போன சமூக நலன்விரும்பியொருவரது தகவல்களை அடுத்த பதிவில் தருகிறேன்।( அவருடன் தொடர்புகொள்ள சற்றுத்தாமதமாகிறது)
சிவராத்திரியில் சிவத்துரோகம் செய்யும் இவர்களை அவனும் பார்த்துக்கொண்டுதானே இருந்திருப்பான்? நாய்தானே நடுவீதியில் செய்யும் என ஒருவர் அப்போது கூறியது இப்போது நினைவுக்கு வருகிறது।சரி,இந்த விஷமிகளின் சமூகத்துரோகத்துக்கு முடிவு கிட்டாதா? என்ன செய்யலாம் என்று பதிலுக்காக உங்களிடம் விடுகிறேன்।

Monday, March 3, 2008

தினக்குரல் வாரமலரில் எனது வலைப்பூ


இலங்கையில் வெளிவரும் தினக்குரல் பத்திரிகையில் வாராவாராம் பதிவர்களில் வலைத்தள அறிமுகம் இடம்பெற்றுவருகிறது। தாசன் அண்ணா எழுதும் இக்கட்டுரையில் நேற்று ஞாயிறன்று எனது புதிய மலையகம் வலைத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது।

பத்திரிகையை பார்த்தவுடன் பெரிதும் குதூகலம் கொண்டேன்। எனது வலைத்தளத்துக்கு ஆதரவு அளித்துவரும் பதிவர்களுக்கு பணிவுடன் நன்றிகூருவதுடன் அனைத்து நண்பர்களுடன் இதனைப் பகிர்கிறேன்। தாசன் அண்ணாவுக்கும் தினக்குரலுக்கும் நன்றிகள்।