Friday, March 19, 2010

கந்தா…கண் திறந்து பார்..!

யுத்தத்தின் கோரப்பிடியிலிருந்து விலகி கொஞ்சம் கொஞ்சமாக வழமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது யாழ். குடாநாட்டுச் சூழல். எங்கு பார்த்தாலும் தென்னிலங்கை சுற்றுலா வாசிகள் இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தக் காட்சி மெய்சிலிர்க்க வைக்கின்றது எம்மை.

நாட்டைவிட்டு வெறொரு தனித் தீவுக்கு வந்துவிட்டதான ஆச்சரியம் அனைவரது கண்களிலும் நிறைந்திருக்கிறது.

குடாநாட்டின் தற்போதைய நிலவரத்தை வெளியுலகுக்கு எடுத்துக் காட்டுவதற்காக நாம் அங்கு சென்றிருந்தோம்...

'உயர் பாதுகாப்பு வலயம்' என்ற தடைவட்டம் நீக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்ட மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம்....உள்ளே சென்ற போது ஓர் ஆச்சரியம்....!.

ஈழத்தில் மிகவும் தொன்மையான ஆலயங்களில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலும் ஒன்றாகும். அங்கு எம்மை வரவேற்ற ஆலயத்தின் பெயர்ப்பலகையை எமது கமராவுக்குள் அடக்கிக் கொண்டோம்.


தமிழ்க் கடவுளாம் கந்தன் ஆலயத்தில் தமிழில் வரவேற்க ஒரு சொல் கூட அங்கிருக்கவில்லை.... வெறும் சிங்கள - ஆங்கில மொழிகளில் பெயர்ப்பலகை..... ஏமாற்றத்தின் விளிம்பில் நாம்.....!

தமிழ்மொழி இருட்டடிப்பு

தமிழர்கள் வாழும் பகுதியில், இந்துத் தெய்வத்தின் ஆலயத்தில் இப்படியொரு பெயர்ப்பலகை அவசியம் தானா என எண்ணத் தோன்றியது.

உண்மையில் இது இனவாதத்தை தூண்டுவதற்காகவோ இனவாதம் பேசுவதற்காகவோ எழுதப்படும் விடயமல்ல. மனதில் எழுந்த ஆதங்கத்தின் வெளிப்பாடு...

ஏனைய மொழிகள் பயன்படுத்தப்படுவதில் தவறில்லை. ஆனால்.....தமிழர்களுக்கே உரிய இடத்தில், தமிழ்மொழி மறு(றை)க்கப்பட்டதேன் என்பது தான் எமது கேள்வி.

இத்தனை நாள் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்தபோதுதான் இந்த 'மறைப்பு' அரங்கேற்றப்பட்டிருக்கிறது.

ஓர் இனத்தை அழிப்பதற்குப் புதிதாக ஆயுதம் வாங்க வேண்டியதில்லை. அந்த இனம் பயன்படுத்தும் மொழியை அழித்தாலே போதும் என்பார்கள். மொழி இல்லையெனின் தமிழ், தமிழர்கள் என்ற அடையாளத்துக்கே இடமிருக்காது.

இவ்வாறான திட்டமிடப்பட்ட செயற்பாடுகளைத் தடுப்பதற்கு உரியவர்கள் நிச்சயம் நடவடிக்கை எடுக்கத்தான் வேண்டும். இது அவசியமானது...அவசரமானது.

அது சரி... இந்த ஆலயத்துக்கு இதுவரை தமிழ் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருமே செல்லவில்லையா...? அவர்களின் கண்களுக்கு இந்தப் பெயர்ப் பலகை புலப்படவில்லையா...? ஒருவேளை கண்டும் காணாமல்.......

ஆலய வரலாறு


அது போகட்டும்...மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தைப் பற்றி அறிந்திராதவர்களுக்கு அது பற்றிய தகவலையும் சுருக்கமாக தருகிறோம்.

யாழ் - காங்கேசன்துறை வீதியில் சுமார் 9மைல் தொலைவில் உள்ளது மாவிட்டபுரம்.

சோழநாட்டு இளவரசி மாருதபுரவீகவள்ளிக்கு குதிரை முகம் இருந்துள்ளது. எங்கு தேடியும் அதனை மாற்றுவதற்கு மருந்து கிடைக்கவில்லை. மாவிட்டபுரத்துக்கு வந்து புனிதத் தீர்த்தத்தில் நீராடிய பின்னர் முருகன் அருளால் அவள் குதிரை முகம் நீங்கி அழகு பெற்றதாக வரலாறு கூறுகிறது.

மாவிட்டபுரம் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானை நூற்றாண்டு காலமாக பக்தியுடன் மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

வடக்கு எல்லையில் காங்கேசன் துறையையும் தெற்கு எல்லையில் தெல்லிப்பழையையும் கொண்டுள்ளதால் இவ்வூருக்கு சிறப்பு அதிகம்.

முருக பக்தரான மறைந்த கிருபானந்த வாரியார் இலங்கை வந்தபோதெல்லாம் ஒருமுறைகூட மாவிட்டபுரத்துக் கந்தனை தரிசிக்காமல் சென்றதில்லை என அவரே சொல்லியிருக்கின்றார். மாவிட்டபுரம் கந்தனின் அருளாட்சிக்கு இவரைவிட சான்றுபகர்பவர் வேறு எவராக இருக்க முடியும்?

-என். அஞ்சனா

Friday, February 26, 2010

கலைத் தாயின் குழந்தைக்கு ஈழக் கலைஞர்களின் பிரியாவிடை (01)











கலைத்தாயின் முழுமையான அருளை தன்னகத்தே பெற்ற மாபெரும் கலைஞனை ஈழம் இழந்திருக்கிறது. கலைஞன் என்பதற்கு அப்பால் நட்புள்ளமும் உதவி செய்யும் மனப்பான்மையையும் கொண்டிருந்த உதாரவாதியை கலையுலகம் இழந்திருக்கிறது.

ஆம்!ஸ்ரீதர் பிச்சையப்பா என்ற கலைச்சரிதத்துக்கு காலன் முற்றுப்புள்ளி வைத்து ஒரு வாரம் ஆகப்போகிறது.

எதைக் கொண்டும் யாராலும் எப்போதும் ஈடுசெய்ய முடியாத இழப்பினை தாங்கிக் கொள்ள முடியாதவனாய் தவித்திருந்த பொழுதுகளை நினைவூட்ட விரும்பவில்லை.

எனினும் ஸ்ரீதரின் இறுதிச் சடங்குகள் தொடர்பான விடயங்களை வெளியுலகுக்கு கொண்டுவரவேண்டிய கடமை எனக்கு இருக்கிறது என நினைக்கிறேன்.

அமரர் ஸ்ரீதர் பிச்சையப்பாவின் பூதவுடல் கடந்த புதன்கிழமை கொழும்பு – கலாபவனத்தில் கலைஞர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அனைத்துத் துறை சார்ந்த கலைஞர்களும் வருகை தந்து ஸ்ரீதரை கண்ணீருடன் வழியனுப்பி வைத்தனர்.

அவர்கள் ஸ்ரீதருடனான நினைவுகளை கலாபவனத்தில் பகிர்ந்துகொண்டனர்.

பீ.எச்.அப்துல் ஹமீட்:
ஸ்ரீதர் பிச்சையப்பா, பன்முகத் திறமைகள் வாய்ந்த கலைஞன், தந்தைக்கு தப்பாமல் பிறந்த தனயன். முதல் தலைமுறையை விட அடுத்துவரும் தலைமுறை அதைவிட சாதிக்கும் என நான் அடிக்கடி சொல்லுவதுண்டு. அதற்கொரு நல்ல உதாரணம் தான் ஸ்ரீதர். தந்தை நடிப்புக் கலையில் தன்னை வளர்த்துக்கொண்டார். ஸ்ரீதர் நடிப்புக் கலை மட்டுமல்லாது ஏனைய துறைகளிலும் மிளிர்ந்தார்.
பல்துறை அறிவையும் திரட்டி சிறந்த கட்டுரைகளாக எழுதக்கூடிய திறமை வாய்ந்தவர்.

பொதுவாக இதுபோன்ற புகழ்சார்ந்த துறைகளில் திடீரென்று அவர்கள் நம்மைவிட்டுப் பிரியும் போது பேரிழப்பு என்கிறோம். சிலர் சம்பிரதாயமாக அதைச் சொல்வார்கள். ஆனால் எம்மைப் பொறுத்தவரையில் உண்மையில் இது பேரிழப்பு தான்.

மேமன் கவி:
நண்பன் ஸ்ரீதர் பிச்சையப்பாவை கடந்த 30 வருட காலமாக அவருடன் நேசமிருந்தது. நான் நினைக்கிறேன். ஒரு கலைஞனின் பன்முக ஆற்றல் என்பதற்கு அப்பால் எல்லா கலைஞர்களுக்கும் எல்லா படைப்பாளிகளுக்கும் தன்னை ஆழமாக வெளிப்படுத்த முடிவதில்லை. ஆனால் ஸ்ரீதரைப் பொறுத்தவரையில் எல்லா துறைகளிலும் தனது தனித்துவத்தைப் பேணி, பதித்து வந்தவன்.
அவனுடைய பாடல், நாடகம் இவ்வாறு பலதுறைகளைப் பற்றியும் பேசும் போது நான் முக்கியமாக ஓவியத்தை கவனம் செலுத்தியிருக்கிறேன். ஏனென்றால் அவனுடைய கோட்டோவியங்கள் மிக முக்கியமானவை.

சந்தனராஜ், வீரசந்தானம்,ஆதிமூலம் இப்படி பலருடைய ஓவியங்களை நாம் பார்த்திருக்கிறோம். அந்த கோட்டோவியங்களினூடாக இவை ஸ்ரீதருடைய ஓவியங்கள் தான் என தனித்துவமாக சொல்லக்கூடியவை.
இப்படியான கலைஞர்கள் ஒரு கால இடைவெளிக்குள்ளே தான் தோன்றுவார்கள். பன்முக ஆற்றல் எனும்போது இயந்திரத் தனமாக இல்லாமல் ஆத்மார்த்தமாக தூய்மையாக அதனை ஸ்ரீதர் செய்துவந்தார்.

ஸ்ரீதருடைய எல்லா பார்வையிலும் படைப்பிலும் ஒரு நவீனத்துவம், ஒரு புதுமை, மக்களைக் கவர்கின்ற வெளிப்பாட்டுத் தன்மை இருந்திருக்கிறது. இனிவரும் காலங்களில் ஸ்ரீதரின் இழப்பினை நாம் அதிகமாக உணர்வோம் என்பதில் சந்தேகமில்லை. அவனுடைய ஆத்மா சாந்தியடைவதாக.

சீத்தாராமன்:
இலங்கைக் கலையுலகம் சகலகலா வல்லவனை இழந்திருக்கிறது.அவரும் நானும் ஒரே நிகழ்ச்சியில் 1979ஆம் ஆண்டு அறிமுகமானோம். இருவரும் நாடகங்கள், நிகழ்ச்சிகளில் பங்குபற்றினோம்.

ஸ்ரீதருக்கு அப்போது சிறந்த பாடும் திறமை இருந்தது. அப்போதிலிருந்து ஓர் இசைக்குழுவை ஆரம்பிக்க வேண்டும் என அவரும் நானும் முழுமூச்சாக செயற்பட்டு வந்தோம்.
1980ஆம் ஆண்டில் எமது இசைக்குழுவினூடாக அவர் பாடிய முதல் பாடல் வாழ்வே மாயம் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வந்தனம் வந்தனம்’ என்ற பாடல் தான். உலகுககே வந்தனம் சொல்லி கலைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்தார். அப்போது ஸ்ரீதர் மிகச்சிறந்த அளவில் பேசப்பட்டார். உலகம் முழுதும் அவர் சென்றார்.

அதேபோல கடைசி இசை நிகழ்ச்சியும் என்னோடு தான் செய்தார். கடைசியாக தென்பாண்டிச் சீமையிலே என்ற துக்ககரமான பாடலைப் பாடினார். அது அவரது வாழ்வின் இறுதிக்காலத்தைச் சொல்லும் என நான் நினைக்கவில்லை.

மோகன்ராஜ்:
என்னுடைய ஆத்ம நண்பனும் இலங்கையின் புகழ்பெற்ற கலைஞனுமான ஸ்ரீதர் பிச்சையப்பா ஒரு பல்துறைக் கலைஞன். கிட்டத்தட்ட 37 வருடங்கள் ஒரே தெருவில் ஒன்றாக சாப்பிட்டு ஒன்றாக இருந்து வளர்ந்தவர்கள்.
அவனிடமிருந்த மனிதப் பண்பானது ஏனைய கலைஞர்களுக்கு படிப்பினையாகும். ஆழந்த கவலையுடன் இந்த சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியிருக்கிறோம்.

இராஜேஸ்வரி சண்முகம்:
என் மகன் ஸ்ரீதரின் அந்திமக்கிரியைகளில் கலந்துகொண்டிருக்கிறோம். பிறந்தோம் வாழ்ந்தோம் என்றில்லாமல் உலகுக்கு எதையாவது விட்டுச்செல்ல வேண்டும் என வாழ்ந்தவர் ஸ்ரீதர். அவர் என்னோடு பல்வேறு நாடகங்களில் நடித்திருக்கிறார்.

கவிதைகளில் கருவாகி நின்றவனே
கலைகளில் உருவாகி நின்றவனே
நாடகங்களில் பாத்திரமாகி நின்றவனே

நான் உனக்கு கண்ணீரை மட்டுமே காணிக்கையாக்குகிறேன் ஐயா.
விடைபெறுகிறேன் ஐயா.

நீ போகும் இடத்திலாவது இறைவன் உனக்கு நிம்மதியைத் தரட்டும்.

கமலினி செல்வராஜன்:
நான் அதிகமான சந்தர்ப்பங்களில் ஸ்ரீதரை என் வீட்டுக்கு அழைத்து கதைத்துக்கொண்டிருப்பேன். பல விடயங்கள் கதைப்போம். எல்லாவற்றையும் பேசி முடித்த பிறகு கலைகளைப் பற்றித் தான் அதிகம் சொல்லிக்கொண்டிருப்பார்.

கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கண்ணை இழந்த போதிலும் அந்த சோகத்தை மறைப்பதற்காக கலைகளோடு வாழ்ந்து வந்தார். கலையோடு மிக்க ஆர்வம் இருந்தது.

ஆனால் குடும்பம் சரியாக இருக்கவில்லை என்பதனால் தன்னை மறந்து வாழக்கூடிய ஒருவனாக இருந்தார். என்னதான் இருந்தாலும் ஆற்றுப்படுத்தல்போல அன்பாக கதைப்பார்.

மல்லிகை ஜீவா
மிகச்சிறந்த ஓவியன், மிகச்சிறந்த நடிகன்,அற்புதமான நடிகன். இவை எல்லாவற்றையும் விட எல்லாரையும் நேசிக்கும் அன்பான நண்பன். இந்த அற்புதமான கலைஞனை கடந்த 30 ஆண்டுகளாக நான் அறிவேன். யாழ். கலைஞர்கள், எழுத்தாளர்கள் சார்பில் ஆழ்ந்த துக்கத்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.
எத்தனையோ கலைஞர்கள், துறை சார்ந்தவர்கள் இன்று கூடியிருக்கிறார்கள். ஸ்ரீதர் மற்றவர்கள் மீதிருந்த பாசம் இப்போது விளங்குகிறது.

(தொடரும்)

(ஊடகம் சார்ந்தபடியால் முன் அனுமதியின்றி படங்களை பயன்படுத்த வேண்டாம்)

Saturday, February 20, 2010

ஸ்ரீதர் ஒரு சகாப்தம்


ஏதோ என்னில் ஒரு பாகத்தை இழந்து தவிப்பதாய் ஓர் உணர்வு. இல்லை… இல்லை…ஸ்ரீதர் இறந்திருக்கமாட்டார் என்ற துர்நம்பிக்கை அவ்வப்போது துளிர்விட்டு மறைந்துகொண்டிருக்கிறது.

ஆம். ஒரு மகத்தான கலைஞனை நான் மட்டுமல்ல. நாடே இழந்திருக்கிறது.

ஸ்ரீதர் பிச்சையப்பா – 1990 களில் நான் பாடசாலை செல்லும்போது ஆச்சரியப்பட்ட கலைஞன். இப்போதும்தான். அந்தக்காலத்தில் இருந்த துடிப்பு, ஈடுபாடு என்பன இந்தச் சிகரத்தையும் நெருங்க முடியுமா என்ற ஆச்சரியத்தை தோற்றுவித்திருந்தது.

பாடல்,எழுத்து,நடிப்பு,இயக்கம்,இசை,ஓவியம்,கவிதை என கலைத்துறையின் அத்தனைப் பரிமாணங்களையும் தொட்ட கலைஞனை இழந்திருக்கிறோம்.

ஸ்ரீதருடனான சந்திப்பு தொடர்பு அத்தனையும் மனதில் நிழலாடிக்கொண்டிருக்கிறது.

இந்தக் கலைஞனை அவனது திறைமையை வெளிப்படையாகச் சொல்ல எவ்வெந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவது?

ஸ்ரீதருடனான பழக்கம் பற்றி எழுதுவதற்கு அடியெடுத்து வைக்கிறேன். நெஞ்சில் சோக அழுத்தங்களுடன்….

இராமானுஜம் நிர்ஷன்