Friday, December 7, 2007

இன்னுமா சுயபுத்தி இல்லாமலிருக்கிறது?


பொம்மைகளைப் போல தலையாட்டி மக்களை ஏமாற்றிவரும் மலையக அரசியல்வாதிகள் சிலரின் கபட நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக மலையக இளைஞர் யுவதிகள் அரசியல்வாதிகளுக்கு வால்பிடிக்கும் வெட்கங்கெட்ட வேலையைச்செய்துவருவது எந்தவிதத்தில் நியாயம் என்று தெரியவில்லை।


அண்மையில் இலங்கை அரசாங்கத்தினால் புலிப்பயங்கரவாதிகளை தேடுதல் என்ற கருப்பொருளில் அப்பாவி தமிழ்மக்களை வகைதொகையின்றி கைது செய்து ஆட்டு மந்தைகளைப் போல பஸ் வண்டிகளில் ஏற்றி அழைத்துச்சென்றனர்। குறிப்பாக பெண்கள் தாம் உடுத்தியிருந்த உடையுடன் பலரதும் காமப்பார்வைக்கு உள்ளாகி அடிபட்ட நாய்களைப்போல இராணுவ பஸ்ஸில் உட்கார்ந்திருந்ததை நான் பார்த்தேன்।


இந்நிலையில் குறிப்பிட்ட ஒரு தொகுதியினர் நேற்று வியாழக்கிமை விடுவிக்கப்பட்டனர்। விடுவிக்க்பபட்ட மலையகப் பெண்ணொருவர் இலங்கை தொலைக்காட்சியொன்றுக்கு இப்படி தகவல் தந்தார்।


'உண்மய சொன்னா எங்களுக்கு அங்க (பூசா சிறை) ஒரு பிரச்சினையும் இருக்கல। நல்லா கவனிச்சிக்கிட்டாங்க। ஒரு கேள்வியும் கேட்கல। நாங்க எல்லாரும் சந்தோஷமா இருந்தோம்। அதனால ஒரு பயமும் இருக்கல' என்றார்।


என்னைப்பொருத்தவரையில் இந்தப் பெண் உயிருள்ள ஜடம்। இவ்வாறு இனத்துவேச விஷமிகளுக்கு சாதகமாக கதைக்கும் இவர்களைப் போன்றவர்கள் ஏன் விடுவிக்கப்படவேண்டும்। சிறைவாசம் தான் சுதந்திரமே। அரசியல்வாதிகள் எவ்வளவுதான் மக்கள் தலையில் மிளகாய் அரைத்தாலும் அந்த மிளகாயை எடுத்து தன் கண்ணில் தானே பூசிக்கொள்ளும் அறிவிலிகளும் இருக்கிறார்கள்।


இவர் இப்படிக்கூறுகிறார் என்றால் இந்தக் கேவலத்தை இன்னும் அனுபவிக்க ஆவலாய் இருக்கிறார் என்றே அர்த்தம்। பட்டபின்னுமா புத்தி பேதலிக்கிறது?

Tuesday, December 4, 2007

மந்தைகளாக்கப்படும் இலங்கைத் தமிழர்களும் தமிழகத்தின் தொடர்மெளனமும் !


கொழும்பு நகரிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கைது செய்யப்பட்டு இவர்களில் பல நூற்றுக்கணக்கானோர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அண்மைக்காலங்களில் என்றுமில்லாதளவுக்கு கொழும்பின் அனைத்துப் பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான படையினரும் பொலிஸாரும் இணைந்து நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் நேற்று மாலை வரை இந்தத் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.
இதன் போது கொழும்பு மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் வத்தளை மற்றும் நீர்கொழும்பு பகுதிகளிலும் 3000 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலி பூஸா முகாம் கடந்த இரு நாட்களில் தமிழர்களால் முற்றாக நிறைந்து விட்டதால் நேற்று முழுநாளும் கைது செய்யப்பட்டவர்களில் பெருமளவானோர் தெற்கில் களுத்துறைச் சிறைக்கும் கொழும்பிலுள்ள ஏனைய சிறைச்சாலைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர்.
கொழும்பு நகரிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் நேற்றுக்காலை வீதிகளில் இறங்கியவர்கள் அனைவரும் ஏதோவொரு பகுதியில் படையினரின் தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் அனைத்து நுழைவாயில்களிலும் அதிகாலை முதல் பிற்பகல் வரை அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டு அவற்றில் வந்தவர்கள் ஒருவர் விடாது பலத்த சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.
இதனால் நேற்று அதிகாலை முதல் பிற்பகல் வரை கொழும்பு நகரில் நுழைவாயில் பகுதிகள் ஒவ்வொன்றிலும் பல மைல் தூரத்திற்கு வாகனங்கள் பல மணிநேரம் வரிசையாகக் காத்திருந்தன.
கொழும்பு நகருக்குள் பிரவேசித்த தமிழர்கள் அனைவரும் தீவிர சோதனைக்குட்படுத்தப்பட்டதுடன் அவர்களில் பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டு, படையினர் அந்தந்தப் பகுதிகளில் நிறுத்திவைத்திருந்த பஸ்களில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் போது பெற்றோரும் உறவினர்களும் பொலிஸ் நிலையங்களுக்கு படையெடுத்ததால், நேற்று முழுவதும் கைது செய்யப்பட்டவர்கள் மறைவான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின் பலர் சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்பட்டனர்.
கொழும்பின் மேற்குப் பகுதியில் பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி, வெள்ளவத்தைப் பகுதிகளில் வீடுகள், வீதிகளில் கைது செய்யப்பட்ட நானூறுக்கும் மேற்பட்டோர் ஐந்துக்கும் மேற்பட்ட பஸ்களில் ஏற்றப்பட்டு கொள்ளுப்பிட்டி சென்.மைக்கல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு நண்பகல் வரை விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின் பெரும்பாலானோர் சிறைச்சாலைகளுக்கும் தடுப்பு முகாம்களுக்கும் அனுப்பப்பட்டனர்.
ஆண், பெண் வேறுபாடின்றியும் வயது வேறுபாடின்றியும் தமிழர்கள் என்ற காரணத்திற்காக நூற்றுக்கணக்கானோர் இப்பகுதிகளில் கைது செய்யப்பட்டனர்.
நேற்று மாலை வெள்ளவத்தை ஈ.எஸ்.பெர்னாண்டோ மாவத்தையிலுள்ள சிங்களப் பாடசாலை ஒன்றுக்குள் 300 க்கும் மேற்பட்ட தமிழர்கள் மிக நீண்டநேரம் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களை விடுவித்துச் செல்வதற்காக பெற்றோரும் உறவினர்களும் மணித்தியாலக் கணக்கில் காத்திருந்தனர்.
இதேநேரம், கொழும்பு பாலத்துறை (தொட்டலங்கா) பகுதியிலும் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த சோதனை நிலையமூடாக கொழும்பு நகருக்குள் நுழைய ஆயிரக்கணக்கான வாகனங்கள் நேற்றுக் காலையிலிருந்து ஐந்து மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்தன.
இதனால், கொழும்பு - நீர்கொழும்பு வீதியல் பல மைல் தூரத்திற்கு வாகனநெரிசல் ஏற்பட்டு பல மணிநேரம் போக்குவரத்துத் தடையுமேற்பட்டது.
கொழும்பு நகருக்குள் வரும் நுழைவாயில்களிலெல்லாம் இவ்வாறு தீவிர சோதனைகளும் கைதுகளும் நடைபெற்றுக் கெண்டிருந்தபோது, கொழும்பு நகருக்குள் கொழும்பு-1 முதல் கொழும்பு-15 வரையான அனைத்துப் பகுதிகளிலும் முப்படையினரும் பொலிஸாரும் இணைந்து தீவிர தேடுதல்களையும் சோதனைகளையும் மேற்கொண்டனர். இதன் போதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பஸ்களில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர்.
கொழும்பு நகருக்குள் இந்தத் தேடுதல்களும் சோதனைகளும் நடைபெற்றுக் கொண்டிருந்த போது நகருக்கு வெளியே வத்தளை, ஹெந்தளை, மாபொல, தெஹிவளை, கல்கிசை பகுதிகளிலும் பலத்த தேடுதல்களும் சோதனைகளும் நடைபெற்றன.
காலை, மாலையெனப் பாராது மட்டக்குளி, முகத்துவாரம், அளுத்மாவத்தை, கொட்டாஞ்சேனை, கொஞ்சிக்கடை, கோட்டை, புறக்கோட்டை பகுதிகளிலும் பலத்த தேடுதல்களும் சோதனைகளும் நடத்தப்பட்டன.
கோட்டை ரயில் நிலையம், புறக்கோட்டை பஸ்நிலையம், குணசிங்கபுர தனியார் பஸ் நிலையத்திலும் முப்படையினரும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பாதுகாப்பு அமைச்சின் விஷேட உத்தரவின் பேரிலேயே இந்தத் தேடுதல்களும் சோதனைகளும் கைதுகளும் இடம்பெறுவதாக படைத்தரப்பு தெரிவித்தது.
கிழமை நாட்களில் வெளியிடங்களிலிருந்து பெரும்பாலும் சிங்கள மக்களே கொழும்பு நகருக்குள் வருவர். ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் கொழும்பு நகரில் பெரும்பாலும் தமிழ் பேசும் மக்களே இருப்பதால் நேற்று இந்தத் தேடுதல்களும் கைதுகளும் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
நேற்று மட்டும் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவித்தன. பல்லாயிரக்கணக்கானோர் தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இந்தத் தேடுதல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது நீர்கொழும்பு நகரிலும் நேற்றுக் காலை தேடுதல்களும் சோதனைகளும் இடம்பெற்றன.
இங்கு மட்டும் முந்நூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கைது செய்யப்பட்டு பல லொறிகளில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்தத் தேடுதல்கள் மற்றும் கைதுகளுக்கு அஞ்சி நேற்று கொழும்பு நகரில் பெரும்பாலான மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை। வந்தவர்கள் பல இடங்களில் மறிக்கப்பட்டு பலத்த விசாரணைக்குட்படுத்தப்பட்டனர்।கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டவர்களால் சிறைக் கூடங்கள் நிரம்பி வழிவதாகத் தெரிவிக்கப்படுகிறது। கைது செய்யப்பட்டவர்களில் வடக்கு கிழக்கு தமிழர்கள் பெரும் சித்திரவதைகளுக்கும் அவசியமற்ற கேள்விகளுக்கும் உள்ளாக்கப்படுவதை யாரால் தடுக்க முடியும்?. தமிழர்கள் தொடர்பாக அக்கறை செலுத்துவதாக கூறும் கலைஞர் கருணாநிதி இந்த விடயத்தில் மட்டும் மெளனம் காப்பது ஏன்? .

என்னதான் நடந்தாலும் இவ்வாறான விடயங்கள் குறித்து கருணாநிதி மெளனம் சாதிப்பது கவலைக்குரியதாகவே உள்ளது।