Wednesday, September 17, 2008

இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையகத் தமிழ் மக்கள் பற்றி...

மல்லியப்பூ சந்தி திலகர் மலையக மக்களின் பிரச்சினைகளை வெளியுலகுக்கு கொண்டுவருவதில் பெரும் பங்காற்றிக்கொண்டிருப்பவர்। தன்னலம், அரசியல்அடிபணிவுகள் இல்லாமல் சுயமாக இயங்கும் திலகர் புதிய மலையகத்துக்கு எழுதிய பின்னூட்டம் ஒன்றை பதிவாக இங்கு தருகிறேன்।

"..................... மலையக மக்களின் போராட்டங்கள், அவர்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சினைகள் குறித்துப் பதிவாவதென்பது குதிரைக் கொம்பாகத்தானிருக்கின்றது। இன்று இலங்கையில் வெளிவரும் ஒரு சில பத்திரிகைகளின் வாயிலாக கிடைக்கின்ற செய்திகளைத் தவிர வேறு வழியில் மலையக தேசத்தின் பிரச்சினைகள் வெளிவருவதில்லை. இலங்கைக்கு வெளியே சொல்லவே வேண்டாம். எத்தனைபேருக்கு ஈழப் பிரச்சினை குறித்து தெரிந்திருக்குமளவுக்கு மலையகப் பிரச்சினை பற்றித் தெரிந்திருக்கிறது ? ......................"

"..................... அவர்களை கடுமையாக சுரண்டிக் கொழுக்கும் வர்த்தக சமூகத்தினர், அவர்களின் பிரச்சினைகளை வெறும் தமது பிழைப்பு அரசியலுக்கு பயன்படுத்திவரும் அரசியல் சக்திகள், சாதியக் கட்டமைப்பை நிலைநிறுத்துவதில் போட்டியிடும் ஆதிக்க சாதிக் குழுக்கள், பேரினவாத மயப்படுத்தப்பட்டுள்ள சிங்கள சிவில் சமூகத்தவரால் எதிர்கொண்டு வரும் வன்முறைகள் என எத்தனை எத்தனையோ கொடுமைகள் தினந்தோறும் நடக்கையில் அவர்களுக்காக பேசுவதையோ போராடுவதையோ அல்லது தார்மீக ஆதரவையோ தாம் தர வேண்டாம் அவர்களின் பிரச்சினைகளை வெளி உலகுக்கு கொணர்வதில் எமது பங்களிப்பு என்ன? ............"

"..................... இந்த சைபர் ஸ்பேஸ் என்று நாம் கூறுகின்ற வெட்டவெளிக்குள் சகல கொடுக்கல் வாங்கல்களையும் செய்து இன்று பெரும் மாநாட்டையே நடத்துகின்றோம். ................."

"..................... ஆனால் இன்று மின்சார வசதிகளைக் கூட அடையாமல், கல்வி hPதியில் வளாச்சியடைய விடாமல், வெறும் 1 ரூபா சம்பள உயர்வுக்காக போராடிக் கொண்டிருக்கும் மலையக மக்கள் குறித்து எந்தவித விபரங்களையும் உலகமறியாத வண்ணம் உள்ளன. ........."

"..................... ஈழத் தமிழர்கள் கொண்டுள்ள வளங்கள், ஆற்றல்கள், வாய்ப்புக்கள் மலையக மக்களுக்கு இல்லை. சக தேசத்தை சேர்ந்தவர்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர்கின்ற போக்கை ஈழப் போராட்ட சார்புத் தகவல் தொட்பூடகங்களில் கூட காணமுடிவதில்லை. அப்படியும் வெளிவந்து விட்டால் அவை எதிரியை அம்பலப்படுத்துவதற்கான வழிமுறையாகத் தான் இருக்கின்றதே ஒழிய, மலையக தேசத்தின் பிரச்சினையில் கொண்டுள்ள பிரக்ஞையால் அல்லவென்றே கூறலாம். ........."

"..................... தமிழகத்தை மையமாகக் கொண்டும் சிங்கப்பூர், மலேசியா மற்றும் வேறு புகலிட நாடுகளில் இருந்தும் பல இணையத்தளங்கள் கூட அதிகரித்தவண்ணம் உள்ளன. ஆனால் இதில் எத்தனை தூரம் மலையகத்தவர் பற்றிய குறைந்தபட்ட போராட்டங்கள், கோரிக்கைகள் கூட பதிவாகின்றன?..................."

"..................... நிச்சயமாக மலையகத்தவர் பற்றி எமது அக்கறையின்மையையும், அசட்டையையும் நாம் ஒப்புக் கொண்டாக வேண்டும். ................"

"..................... இத்தகைய பின்னணியில் இருந்து மலையக மக்களின் இன்றைய நிலைமைகள் பதிவாகாததையும் நோக்க வேண்டும். இன்று தமிழ் தேசப் பிரச்சினையை சர்வதேச அளவில் கரிசனைக்குரியதாக்கிய தகவல் தொழிநுட்பத்தின் பங்கை நோக்க வேண்டும். இன்று தமிழர்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் இன அழிப்புக் குறித்த செய்திகள் வேகமாக உலகெங்கும் சென்றடைகின்றன. உலகின் பலமான நாடுகளின் உதவியுடனும் ஒரு அரசையும் கொண்டிருக்கின்ற சிங்கள பேரினவாதம், தமிழரின் தகவல் தொழிநுட்ப ஆற்றல், வளங்கள் என்பவற்றை எதிர்கொள்ளமுடியாத அளவிற்கு, தடுமாறி நிலைகுலைந்து போகும் அளவிற்கு, தமிழர்கள் தகவல் தொழிநுட்பத்தை அடைந்திருக்கின்றார்கள் ................."

"..................... தமிழ் தேச போராட்ட சக்திகளால் அல்லது அவர்களது ஆதரவாளர்களால் நடத்தப்படுகின்ற ஆயிரக்கணக்கான இணையத்தளங்களிலும் மலையக மக்கள் குறித்த எந்தவித பதிவுகளும் இடம்பெறாதது மிகவும் கவலை தரும் விடயமாகும். சக தேசம் ஒன்று தமது எதிரிகளாலேயே ஒடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதைக் கரிசனை கொள்ளாததை நாம் குறித்துக் கொள்ளுதல் அவசியம்............"

"..................... மலையக தேசத்தவரைப் பொறுத்தவரை அவர்கள் ஏலவே எதிர்கொள்ளும் அடிமை வாழ்க்கையை விட தமிழ் தேசப் போராட்டத்தின் விளைவாக ஒட்டுமொத்த தமிழர்கள் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அரச பயங்கரவாதத்திற்கும் பலியாகிவரும் தேசமாக மலையக தேசம் உள்ளாவதைக் கவனித்தாதல் வேண்டும். இந்தியாவின் மீதும் இவர்கள் நம்பிக்கை இழந்து பல வருடங்கள் ஆகி விட்டது. ........"

"..................... இலங்கையில் செயல்படும் தமிழ் தொடர்பூடகங்கள் அனைத்திலும் மலையக மக்களுக்கு எதிரான பாரபட்சங்கள் நிலவுவதை காணமுடியும். மலையக மக்களின் பிரச்சினை குறித்த பிரக்ஞை என்பதை விட மலையக சந்தையை இலக்காகக் கொண்டு தான் இருக்கும். .........."

இரண்டாயிரமாம் (2000) ஆண்டு செப்டெம்பர் மாதம் சென்னையில் இடம்பெற்ற தமிழினி மாநாட்டில் இலங்கை பத்திரிகையாளர் 'சரிநிகர்' என். சரவணன் (தற்போது புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடொன்றில் வாழ்வதாக அறிகிறேன்). அவர்களால் வாசிக்கப்பட்ட மலையகத்தவர் பற்றிய ஒரே ஒரு கட்டுரையின் மேற்கோள்களே மேலே காட்டப்பட்டன. (விரிவான கட்டுரையை தொடர்ச்சியாக வரும் பதிவுகளில் தர முயற்சிக்கிறேன்)

-திலகர்

(நன்றி திலகர்)

Thursday, September 4, 2008

இந்தியத்தாய் உதைத்துத்தள்ளிய மலையகக் குழந்தைகள்!!!

நண்பர் சேவியரினால் எழுதப்பட்ட ஈழக்கவிஞருடனான சந்திப்பு http://xavi.wordpress.com/2008/09/01/malliyappu_santhi/ என்ற பதிவும் அதில் மல்லியப்பூ சந்தி திலகரின் http://www.malliyappusanthi.com/ பின்னூட்டமும் தான் இந்த ஆக்கத்துக்கு வித்திட்டன।
திலகருடன் கதைத்தபோது அவர்கூறிய யதார்த்தத்துக்குள் மூழ்கிப்போன சில விடயங்கள் எமது இருப்பிற்கான கேள்வியை என்னுள் எழுப்பியது।

இலங்கையிலுள்ள மலையக மக்கள் பற்றிய இந்தியாவின் ஈடுபாடு மிகவும் குறைந்து வருவதை அவதானிக்க முடிகிறது। இலங்கையை முழுமையாக அவதானித்து வருவதாக கூறும் இந்தியத்தலைவர்கள் மலையக மக்கள் குறித்தும் அவர்களது அன்றாட பிரச்சினைகள் குறித்தும் பாராமுகமாக செயற்படுவது ஏன் என்ற கேள்வி இப்போது மக்களிடையே எழத் தொடங்கியுள்ளது।
மலையக மக்கள் எந்தளவுக்கு வாழ்க்கைச்சுமையை அனுபவிக்கிறார்கள் என்பதனை விட அவர்களின் வருகை வரலாற்றை மீள்நினைவூட்டுவது அவசியம் என நினைக்கிறேன்.

மலையக மக்கள்
மலையத்தொழிலாளர்கள் என்போர் யார்? என்ற கேள்விக்கு எத்தனை பேருக்கு பதில் தெரியும்। இந்திய வமிசாவளியினர், இந்தியத் தமிழர்கள் என ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட குறிப்பிட்டதொரு தொழிலாளர் சமுதாயம் மலைநாட்டார் என்றும் நாடற்றோர் என்றும் பின்னிலை படுத்தி பல புல்லுறுவிகளால் விமர்சிக்கப்பட்டு மலையகத் தமிழர்கள் என தற்போது அடையாளப்படுத்தும் இந்த மக்களின் கசப்பான வரலாற்றை தமிழர்களே மறந்துவிட்டார்கள்।

இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சி நடத்திக்கொண்டிருந்தபோது 1844ஆம் ஆண்டு மத்தியமலைப் பகுதியில் தேயிலைத் தோட்டப்பயிர்ச்செய்கைக்கென இந்தியாவிலிருந்து 14பேர் (கம்பளை என்ற இடத்துக்கு )அழைத்துவரப்பட்டனர்। இதுவே இந்தியாவிலிருந்து தொழிலாளர் என்ற ரீதியில் உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட முதல் தமிழர்களாவர்।

இருப்பினும் அதற்கு முன்னரும் இந்தியத் தொழிலார்கள் மலையகப் பகுதிகளில் தோட்ட வேலைகள் செய்ததாக வரலாறு கூறுகிறது। கோப்பி பயிர்களுக்கு ஏற்பட்ட நோய் காரணமாக தேயிலை பயிரிடப்பட்டது।
தேயிலைப் பயிர்ச்செய்கைக்காக ஏராளமான தொழிலாளர்கள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர்। 1827ஆம் ஆண்டு 10,000 ஆக இருந்த தொழிலாளர் தொகை 1877ஆம் ஆண்டு 1,45,000 ஆக அதிகரித்தது.
1933ஆம் ஆண்டுவரை பல இலட்சக்கணக்கான மக்கள் இங்கு வந்து சேர்ந்தனர்। இவ்வாண்டின் பின்னர் இந்திய அரசு இலங்கைக்குத் தொழிலாளர் அனுப்பப்படுவதைத் தடைசெய்தது.

ஒரு சோக வரலாறு
தென்னிந்தியாவிலிருந்து கால்நடையாக இராமேஸ்வரம் வந்த மக்கள் கடல்மார்க்கமாக தலைமன்னாரை வந்தடைந்து அங்கிருந்து கால்நடையாகவே மலையகப் பகுதிகளுக்கு அழைத்து வரப்பட்டனர்। போதியளவு உணவு, சுகாதாரம், தங்குமிட வசதிகள் இன்றி பல மாதகாலமாக கால்நடையாக வந்ததால் ஆயிரக்கணக்கான தொழிலாளார்களும் குழந்தைகளும் உயிரிழந்ததாகவும் அப்போதைய கதைகள் உண்டு.

வாக்குரிமை
1931ஆம் ஆண்டு 1,00,000 மலையக மக்கள் வாக்குரிமை பெற்றிருந்தனர்। மு ।நடேசு ஐயர் எனப்படும் மலையக மக்களின் முதற் தொழிற்சங்கத் தலைவர் அத் தேர்தலிலே தெரிவு செய்யப்பட்டார்।
புதுக்கோட்டை அரசமரபினர் வழிவந்த அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் மக்களின் நலனுக்காக ஆரம்பத்திலிருந்தே குரல்கொடுத்து வந்தார்। அவரோடு இணைந்து முஹம்மது அஸீஸ் என்ற தொழிற்சங்கத் தலைவரும் பலவகையிலும் போராட்டத்துக்குக் கைகொடுத்து தலைமைதந்தார்।

நாடற்றவர்களாயினர்
1948இல் இலங்கையிலிருந்து பிரித்தானியர் வெளியேறியதும், பல தமிழ்ப் பிரதிநிதிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொண்டுவரப்பட்ட இலங்கை பிரஜாவுரிமை சட்டத்துக்கு அமைவாக தங்களது குடியுரிமையை நிரூபிக்க முடியாமல் போனமையால் இவர்களில் மிகப்பெரும்பாலோர் இலங்கை அரசாங்கதால் நாடற்றவர் நிலைக்குத் தள்ளப்பட்டனர்।

இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னர் அனைத்து மக்களும் பிரித்தானியர்கள் எனக் கொள்ளப்பட்ட போதிலும் சுதந்திரத்தின் பின்னர் இந்த மக்களுக்கு தாம் இலங்கையர்கள் என்பதை நிரூபிக்கவேண்டிய நிர்ப்பந்த நிலை ஏற்பட்டது। அதாவது தமது தந்தைவழியில் அல்லது தாய்வழியில் இலங்கை பிரஜை என்பதை ஆதாரப்படுத்தவேண்டியிருந்தது। போதியளவு கல்வித்தகைமை இல்லாததால் பிறப்புச்சான்றிதழ் உட்பட ஏனைய அத்தியாவசிய ஆவணங்களை பெறத்தவறிய அப்பாவி மக்கள் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று கோரப்பட்டனர்। இவர்களில் பலர் சிங்களப் பெயர் கொண்டிருந்தமையால் தப்பித்தனர்। எனினும் அதிகமானோர் தாமாக மீண்டும் இந்தியாவுக்கு சென்றனர்.
சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம்
அடுத்து வந்த காலங்களில் இலங்கை அரசு இந்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் மூலம் ஏற்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் பெருமளவு மலையகத் தமிழரை இந்தியாவுக்குத் திருப்பியனுப்ப இலங்கை அரசு முயற்சித்தது। இவ்வாறான ஒப்பந்தங்களில் ஒன்றான சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் மேற்படி தமிழர்களில் அரைப் பகுதியினருக்கு இலங்கைப் குடியரிமை வழங்குவதெனவும், ஏனையோரை இந்தியா ஏற்றுக்கொள்வதெனவும் முடிவானது, பல காரணங்களால் இது திட்டமிட்டபடி நடைபெறாது போனது। மேலும் 1983 இல் இலங்கையில் ஏற்பட்ட பாதுகாப்பற்ற சூழ்நிலைக்காரணமாகவும் பலர் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தனர்। பெரும்பாலானோர் இலங்கை மலையகப் பகுதிகளிலேயே தங்கிவிட்டனர்।

தொடர்குடியிருப்பும் வாழ்வும்
அக்காலத்தில் தொழிலாளர்களுக்கென அமைத்துக்கொடுக்கப்பட்ட தொடர்குடியிருப்புகளில் (லயன்கள் என அழைக்கப்படுகிறது) தங்கியிருந்த மக்கள் சுமார் 160ஆண்டுகள் கழிந்த நிலையிலும் அதே லயன் குடியிருப்புகளில் தான் வாழ்ந்து வருகின்றனர்। இவர்களின் நலன்கள் தொடர்பாக பல இந்திய தலைவர்கள் அக்கறை எடுத்துக்கொண்ட போதிலும் அவை நிரந்தரமான தீர்வினைத்தரவில்லை எனலாம்।

ஈழப்போராட்டமும் மலையகத் தமிர்களும்
அத்துடன் ஈழப்போராட்டம் ஆரம்பித்தபின்னர் அது பூதாகரமாக வெடித்ததைத் தொடர்ந்து இந்த அப்பாவி மக்களின் பட்டினிப் போராட்டம் வெளிக்கொண்டுவரப்பாடமலே போனது। வடக்குக் கிழக்குப் பிரச்சினைக்கு மலையக மக்கள் அந்தக்காலம் முதல் ஆதரவை வெளிப்படுத்தி வந்தனர். ஆரம்பகாலத்தில் தந்தை செல்வா மலையக மக்கள் மீது அக்கறை கொண்டு அவர்களின் துன்ப துயரங்களை வெளியுலகுக்கு வெளிக்காட்டவும் செய்ததுடன் வாக்குரிமை நீக்கும் முயற்சிக்கு எதிராக கடுமையாகப் போராடிக் குரல்கொடுத்தார்।
1989ஆம் ஆண்டு இ।இரத்தினசபாபதி பாராளுமன்றி்ல் ஆற்றிய உரையொன்றில்,
"இச்சந்தர்ப்பத்தில் மலையகம் சார்ந்த எமது பிரதிநிதித்துவம் பற்றி சில விடயங்களை அழுத்தமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது.இதற்காக சில ஆண்டுகள் பின்னோக்கிப் பார்க்க விழைகின்றேன்.
இலங்கை பிரிட்டிஷாரிடம் இருந்து விடுபட்டபோது மலையக மக்களின் வாக்குரிமையும் பிரஜா உரிமையும் பறிக்கப்பட்ட ஆண்டான 1948-ஆம் ஆண்டையே ஆரம்பமாகக் கொண்டு இதை நோக்க வேண்டியுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்கினை ஈட்டிக் கொடுத்த இம்மக்கள் இந்திய விஸ்தரிப்புவாதிகளாகக் கொச்சைப்படுத்தப்பட்டனர்.
இவர்கள் இங்கிருப்பது சிங்கள இனத்துக்கே ஆபத்தானதென இனவெறி கிளப்பி விடப்பட்டது. இவர்களை வெளியேற்றுவதற்காக 1964-இல் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தமும் கைச்சாத்தாகியது.
இதுவே இனவாதத்தின் முதலாவது அடையாளமாகவும், இலங்கை வாழ் தமிழ்த் தேசிய இனத்தின் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரான அச்சுறுத்தலாகவும் விளங்கியிருக்கிறது" எனக் குறிப்பிட்டு நீண்ட உரையாற்றினார்। இது தவிற யாழ்த்தலைவர்கள் பலரும் மலையக மக்களுக்காக போராடினர்।

மக்களின் எதிர்பார்ப்பு
என்னதான் இருந்தாலும் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட தமிழர்கள் இந்தியாவையே தமது தாய்நாடு என இன்னும் கொள்கின்றனர்। அன்று முதல் இன்று வரை இந்தத் தொழிலாளர்களின் நலன்காக்க எத்தனையோ தொழிற்சங்கங்கள் அரசியல்கட்சிகள் இருந்துவருகின்ற போதிலும் இன்னும் அவர்களின் தேவைகள் முழுமையாக பூர்த்திசெய்யப்படவில்லை।
இப்போது ஏறத்தாள 10இலட்சத்துக்கும் அதிகமான மலையக தமிழ் மக்கள் இலங்கையில் வாழ்கின்றனர்। மூன்றாவது தலைமுறையிலும் தோட்டத் தொழிலாளர்களாகவே இருக்கின்றனர்।

தமது கோரிக்கைக்காக நித்தமும் போராடி பட்டினியுடனும் போதியளவு வசதிகள் இன்றியும் வாழ்ந்துகொண்டிருக்கும் இவர்களை அந்நியப்படுத்தி பலரும் "தோட்டகாட்டான்" என அழைப்பது வேதனைக்குரியது। பலவீனங்களையும் இயலாமைகளையும் அப்பாவித்தனத்தையும் சாதகமாகப் பயன்படுத்தி குறிப்பிட்டதொரு வர்க்கத்தினை கீழ்நிலையில் உதாசீனப்படுத்தி உதறித்தள்ளுவதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்। ஆனால் நிகழ் சமுதாயத்தில் இவ்வாறானதொரு நிலை இருப்பதை இந்தியா உட்பட சர்வதேசக் கல்விச்சமூகம் உணரவேண்டும்। தமது குழந்தைகளை தாமே அந்நியப்படுத்தி உதைக்கும் வரலாற்றுக் கறையை இந்தியா ஏற்படுத்திவிடக்கூடாது।