Thursday, August 15, 2019

ஆறுமுகனின் கௌரவப் பிச்சை – திகாவின் கொலை அச்சுறுத்தல் - இவர்கள் தலைவர்களா? துரோகிகளா?


சர்வதேச தொழிற்சங்க சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அண்மையில் தொழிற்சங்க சந்தாப் பணத்தை 83 ரூபாவால் அதிகரித்துள்ளது. இதனை அந்தக் கட்சியின் அரசியல் பிரமுகர்கள் நியாயப்படுத்தி கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால் ஆறுமுகன் தொண்டமான், வழமைபோல தனது விசுவாசிகளின் மீது பாரத்தைச் சுமத்திவிட்டு அமைதியாய் தப்பிக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறார்.

வெகு இலாவகமாகத் தப்பித்துக்கொள்ளும் வழி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சிக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனபோதும் அந்தக் கட்சி செய்துள்ள மாபெரும் நம்பிக்கைத் துரோகம் அதன் தொடர் பயணத்துக்கு இன்னுமின்னும் தடையாக அமையும் என்பதே உண்மை.

ஆறுமுகன் என்ற நபருக்கு, தொழிலாளர்கள் எனப்படுகின்றவர்கள் எப்போதும் மூன்றாம் பட்சம் தான். தொழிலாளர்களைப் பயன்படுத்தி எந்தளவுக்கு நன்மை அனுபவிக்க முடியுமோ அந்தளவுக்கு அதன் உச்சத்தை அடைவதுதான் அவருடைய எண்ணம் என்பதற்கு கடந்த கால நடவடிக்கைகளே கண்கூடு.

கூட்டு ஒப்பந்தம் பற்றியதான தொழிலாளர்களின் கோபமும் வேகமும் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மாத்திரமே என்பதை ஆறுமுகன் நன்றாக அறிந்து வைத்திருக்கிறார். அதற்கு ஏற்றாற் போல தொழிலாளர்களும் அவரை நம்பி, நம்பியே ஏமாற்றமடைந்து வருகிறார்கள்.

நிற்க,
கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரமே சந்தாப்பணம் (மூன்றில் ஒன்றாக) அதிகரிக்கப்பட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் அறிக்கைகளுக்குப் பெயர்போனவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் எந்தவொரு இடத்திலும் அவ்வாறனதொரு சரத்து இடம்பெறவில்லை.

இறுதியாக முழுமைப்படுத்தப்பட்ட 2003 ஆண்டு கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் பாகம் 2, இரண்டாம் பகுதியில் அ. பிரிவில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அ. உறுப்பினர் ஒருவரிடமிருந்து அறவிடப்படக் கூடிய சந்தாப் பண விபரத்தை, சந்தா தொடர்பான விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிட்டு, தொழிற்சங்கத்தின் தலைமையகம் வாயிலாக மாதத்தில் 25ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அறியத்தருவதுடன் எந்த மாதத்திலிருந்து அந்தத் தொகையை கழிக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
இதற்கு அடுத்ததான பிரிவுகளில் ஏனைய விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆக, இங்கே தொழிலாளர்களின் அனுமதி இல்லாமல் சந்தாவை அதிகரிக்க வாய்ப்பு இல்லை. அதேவேளை, தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுக்காமல் அதிகரிக்கவும் வாய்ப்பு இல்லை.

அவ்வாறெனின் யார் யாரை ஏமாற்றுகிறார்கள்? யாரால் யார் ஏமாற்றப்படுகிறார்கள்?

தொழிலாளர்கள், தங்கள் தலைமை மீது வைத்துள்ள நம்பிக்கை என்ற ஆயுதத்தை அவர்களுக்கு எதிராகவே திருப்பியிருக்கிறது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ். தொழிற்சங்க ரீதியில் தங்களை விட்டால் யாருமில்லை என்ற இறுமாப்பும் அதீத கர்வமும்தான் இதற்குக் காரணம்.

கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தி, மக்களை வீதியில் இறக்கி, இறுதியில் நிலுவைப் பணத்தைக் கூட பெற்றுக்கொடுக்காமல் வெறும் 20 ரூபாவை அதிகரித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தங்களுடைய சுய இருப்பு கருதி 63 ரூபாவை கௌரவப் பிச்சையாக எடுத்துக்கொண்டுள்ளது.

சந்தாவை மாத்திரம் அதிகரித்துக்கொண்ட இ.தொ.கா., கூட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட தொழிற்சங்கம் சார்பில் மேற்கொள்ள வேண்டிய தொழிலாளர்களின் நலன்கள் தொடர்பிலும் உற்பத்தி அதிகரிப்பில் பங்களிப்பு தொடர்பிலும் எடுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கை என்ன?

மக்களின் இயலாமையையும் பலவீனத்தையும் சாதகமாகப் பயன்படுத்துவதில் ஆறுமுகனுக்கு நிகர் ஆறுமுகனே தான் என்றால், அது சாலப் பொருத்தமாகும்.

அது ஒருபுறமிருக்க, தற்போதைய அரசாங்கத்தில் பலம் மிக்க அமைச்சராக இருக்கும் பழனி திகாம்பரத்தின் செயற்பாடு தமிழ் ஊடகவியலாளர்கள் மத்தியில் பெரும் எதிர்வினையை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் அவரது அலுவலர் ஒருவர் நடந்துகொண்ட விதம் அமைச்சர் மீதான நம்பிக்கையீனத்தை மேலும் வலுப்படுத்தியிருக்கிறது.

என்ன நடந்தது?

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள், சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட இந்திய வீடமைப்புத் திட்டம் தொடர்பான தகவல்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டமூலத்தின் மூலம் பெறப்பட்டு தினக்குரல் பத்திரிகையில் கட்டுரை வெளியாகியிருந்தது.

அந்தச் சட்டத்தின் வாயிலாக கிடைக்கப்பெற்ற தகவல்களை முன்னிறுத்தி ஊடகவியலாளர் கருப்பையா பிரசன்னகுமார் கட்டுரையை எழுதியிருந்தார். இந்நிலையில் கட்டுரையில் உள்ள தகவல்கள் பிழை எனக் கூறி அமைச்சர் திகாம்பரம், ஊடகவியலாளருக்கு கடும் தொனியில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அது மாத்திரமன்றி மிக மோசமான வார்த்தைப் பிரயோகங்களால் சாடியுள்ளார்.

தலைவனின் வழியில் தொண்டன் என்ற வகையில் அமைச்சரின் ஊழியர் ஒருவரும் அவரது பங்கை விட்டு வைக்கவில்லை. தினக்குரல் ஆசிரிய பீடத்துக்கு வந்து விசாரிப்போம் எனவும் ஊடகவியலாளரின் வீட்டுக்குச் சென்று அங்கிருந்து அழைப்பை எடுப்பதாகவும் மிரட்டியிருக்கிறார்.

சமூகத்துக்கான தகவல் அறியும் உரிமையை உறுதி செய்வது ஓர் ஊடகவியலாளனின் கடமைகளில் ஒன்றாகும். கடமையைச் செய்த ஊடகவியலாளருக்கு அமைச்சர் கொடுத்த பரிசு தான் ‘கொலை அச்சுறுத்தல்’.

'சரி... மலையகத்தைச் சார்ந்த ஊடகவியலாளன் தானே? மிரட்டினால் இனி எழுத மாட்டான்' என அமைச்சர் நினைத்திருப்பார் போலும்.

இங்கே ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன், இதே கட்டுரையை எழுதிய பிரசன்னா என்ற ஊடகவியலாளர் தான் - இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினத்துக்கான ஒருநாள் செலவு 50 இலட்சம் என்ற உண்மையையும் வெளிக்கொண்டு வந்தார்.

தினக்குரல் வெளியிட்ட தகவல் பிழை என்றால் அந்த ஊடகத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம், அல்லது தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஊடகவியலாளருக்கு வழங்கப்பட்ட தகவல்கள் பிழை என்றால் அது தொடர்பில் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்திருக்கலாம். அதைவிடுத்து ஊடகவியலாளரை மிரட்டும் சிறுபிள்ளைத்தனமான செயலைச் செய்ததை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த விடயத்தை சுதந்திர ஊடக இயக்கம் வன்மையாகக் கண்டித்திருந்தது.

ஊடகவியலாளர் ஏன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவில்லை என்று சமூக வலைத்தளங்களில் பலர் கேள்வி எழுப்பியிருந்தனர். அதன் பின்னணியில் சமுதாய அக்கறை உண்டு என்பதையும் சில காரணங்களையும் காலம் வரும்போது அவர் முன்வைப்பார் என நம்புகிறோம்.

மிக அண்மைக்காலத்தில் நடைபெற்ற இவ்விரு விடயங்களையும் உற்று நோக்கும் போது மனதில் பல கேள்விகள் எழுவதைத் தடுக்க முடியவில்லை.

அதில் முதலாவது, “இவர்கள் தலைவர்களா?” என்பதே.

தலைவர் எனப் பெயர் வைத்துக்கொண்டவர்கள் எல்லோரும் மக்களின் மனதில் தலைமைத்துவ இடத்தை நிரப்பிவிட முடியாது. மலையகத்தைப் பொருத்தவரையில் அராஜக அரசியல் இடம்பெற்றுள்ளதை நாம் அறியாமல் இல்லை.

அது தொடர வேண்டும் என சம்பந்தப்பட்டவர்கள் நினைத்தார்களேயானால் அதன் பிரதிவிளைவுகள், பெரும் பாடம் புகட்டுவதைத் தவிர்க்க முடியாது. அத்தோடு மக்கள் தம்மீது வைத்துள்ள நம்பிக்கையை சுயநலனுக்காகப் பயன்படுத்தி, அவர்களுடைய வாழ்வாதாரத்துக்கு இடையூறு ஏற்படுத்தினால் அது எத்தனை பெரிய துரோகம்?

எங்கள் ஊரில் வாய்மொழி வழக்கு ஒன்று  உண்டு.

“முனியாண்டி வேணாம்னு மாடன்கிட்ட போனோம். அவனும் பலி கேக்குறான்”

இது ஆறுமுகனுக்கும் திகாம்பரத்துக்கும் புரியுமா?

-நிர்ஷன் இராமானுஜம்-