Monday, December 31, 2018

பண முதலைகளின் வலையில் சிக்கியுள்ள தொழிலாளர் வர்க்கம்!


-நிர்ஷன் இராமானுஜம்-

புதிய மலையகம் வாசகர்களுக்கு வணக்கம். புதிய மலையகம் வலைத்தளமானது, சமீபகாலமாக மேற்கொண்ட ஆய்வுகளின் பிரகாரம் சில தகவல்களை வழங்குவதற்குக் கடமைப்பட்டுள்ளது.

லையகப் பெருந்தோட்டப் பகுதிகளில், தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு பல்வேறு பரிணாமங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் கிடைக்குமா என்பது ஒருபுறமிருக்க, பணம் படைத்த முதலாளிமார் முதலைகளின் வலையில் தொழிலாளர்கள் சிக்க வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களது போராட்டத்தை மழுங்கடிக்கும் வகையிலான சூட்சுமமான திட்டங்களும் தீட்டப்படுகின்றன.

இதில், மக்கள் சார்பான ஊடகம் எனத் தம்மை காட்டிக்கொள்ளும் பண முதலைகளின் சித்து விளையாட்டுக்களும் இடம்பெற்று வருகின்றன.

நிற்க, கிளைபோசேட் எனப்படும் களை நாசினி, மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளிலும் ஏனைய விவசாயத் துறைகளிலும் பயன்படுத்தப்படுவது நாம் அறிந்த விடயமாகும். இது, மாபெரும் வர்த்தகச் சந்தையிலும் தொழிலாளர் போராட்டங்களிலும் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை இங்கு கவனிப்போம்.

கிளைபோசேட் கிருமிநாசினியை உபயோகப்படுத்துவதால் சிறுநீரக நோய் உள்ளிட்ட பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாகக் குறிப்பிட்டு 2015, ஒக்டோபர் 23 ஆம் திகதி இலங்கை அரசாங்கம் அதற்குத் தடை விதித்தது.

இது பெருந்தோட்டப் பகுதிகளில் உற்பத்திக்குப் பெரும் பாதிப்பாக அமைவதாக பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் தொடர்ச்சியாக குறிப்பிட்டு வந்தது. தேயிலை, இறப்பர் தொழிற்துறைகளில் இதன் பாவனை தடை செய்யப்பட்டதால் வருடாந்தம் 20 கோடி ரூபாவரை நட்டம் ஏற்படுவதாக முதலாளிமார் சம்மேளனம் 2018, ஏப்ரல் 19 ஆம் திகதி அறிவித்திருந்தது.

இது இவ்வாறிருக்க, கிளைபோசேட் கிருமிநாசினி மீதான தடையால் இலங்கையில் அதன் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனம் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. இது, மாமன்னர் (மாத்தி யோசி!) எனும் பணம் படைத்த முதலாளியின் மற்றுமொரு நிறுவனமாகும். SorcraH (மாத்தி யோசி!) என்ற இந்த நிறுவனம் முற்றுமுழுதாக மாமன்னரின் கண்காணிப்பின் கீழ் இயங்கி வரும் பேரளவு இலாபமீட்டும் நிறுவனம்.

ஒருபுறம் கிளைபோசேட்டை தேயிலை, இறப்பருக்கு மாத்திரம் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்ற அழுத்தத்தை முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்து வந்த நிலையில் மறுபுறம் SorcraH நிறுவனமும் பல்வேறு வகையில் அழுத்தம் கொடுத்து வந்தது.

இந்த நிறுவனத்துக்கு சொந்தமான இரசாயனவியல் தயாரிப்பு தொழிற்சாலையொன்று ஜா-எல பகுதியில் இயங்கி வருகிறது. கிளைபோசேட்டை ஏனைய கிருமிநாசினிகளில் கலந்து விற்பனை செய்துவரும் செயற்பாடுகளும் அங்கு இடம்பெற்று வந்தன.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் தொடர்ச்சியாக கிடைக்கப்பெற்ற அழுத்தம் காரணமாக 2018, மார்ச் 27 ஆம் திகதி சுகாதார அமைச்சு, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு, விவசாய அமைச்சு ஆகியன இணைந்து ஆராய்ச்சிக் குழுவொன்றை அமைத்தன.

அந்தக் குழுவுக்கும் மேற்படி மாமன்னர் நிறுவனம் தொடர்ச்சியாக அழுத்தங்களைக் கொடுத்து வந்தது. பெருந்தோட்டத் துறைக்குப் பொறுப்பாக இருந்த அமைச்சர், முதலாளிமார் சம்மேளனத்துடனும் மாமன்னர் நிறுவனத்துடனும் மிக நெருக்கமான உறவினைப் பேணி வருகிறார்.

இந்நிலையில், 2018, ஜுலை 11 ஆம் திகதி புதன் கிழமை 2079/37 இலக்கம் கொண்ட  விசேட வர்த்தமானியின் மூலம் தேயிலை, இறப்பர் பயன்பாட்டுக்கான கிளைபோசேட் பயன்பாட்டுத் தடை நீக்கப்பட்டது. தேயிலை, இறப்பர் துறைக்கு மாத்திரம் தடை நீக்கப்பட்டதற்கான காரணங்களை மேற்சொன்ன தகவல்களில் வெளிச்சமாகும்.

2017 ஆம் ஆண்டு செம்டம்பர் மாதத்தில் இலங்கை தேயிலைச் சபையின் உயர் அதிகாரி ஒருவர் வெளியிட்ட தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதாவது, கிளைபோசேட் தடை செய்யப்பட்டுள்ள போதும் அதற்கு இணையான வகையில் பல்வேறு களைநாசினிகள் பெருந்தோட்டப் பகுதிகளில் பயன்படுத்தப்படுவதாகவும் அந்த நாசினிகளுக்கு அனுமதி பெறப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த அனுமதி பெறாத களைநாசினியை பெருந்தோட்டப் பகுதிகளுக்கு விநியோகம் செய்ததும் நாம் மேற்சொன்ன தனியார் நிறுவனம் தான்.

இன்னும் ஒருபடி மேலே சென்றுச் சொல்வதானால், முதலாளிமார் சம்மேளனத்தின் இயக்கமும் அந்தச் சம்மேளனம் பெறும் இலாபமும் இந்த மாமன்னர் நிறுவனத்துக்கு அவசியமாகும். இதனை ஆங்கிலத்தில்  Corporate Crime  என்று சொல்லுவோம், White-collar crime  என்ற வகைப்பாட்டுக்குள்ளும் அடக்கலாம்.

கிளைபோசேட் எனும் களைநாசினியினால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகள் சிலவற்றை (பிரதானமானவை) பார்ப்போம்.

01. சிறுநீரகப் பாதிப்பு
02. தோல் வியாதிகள்
03. விந்து உற்பத்திப் பாதிப்பு
04. கர்ப்பிணிகளின் குழுந்தை வளர்ச்சியில் பாதிப்பு
05. சுவாசம் மற்றும் தொண்டை தொடர்பான நோய்கள்
06. அத்துடன் தேனீக்களின் பரவலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இவ்வாறான தாக்கங்கள் ஏற்படும் சூழல்நிலையில் மேற்படி தனியார் நிறுவனத்துக்கு முதலாளிமார் சம்மேளனத்தை அரவணைத்துச் செல்லும் கடப்பாடு இயல்பாக ஏற்படுகிறது. இலாபத்தை மாத்திரம் நோக்கமாகக் கொண்டு செயற்படுவதால் எந்தவொரு முதலாளியும் மக்கள் நலன்குறித்துச் சிந்திப்பதில்லை. அத்துடன் மாமன்னர் நிறுவனமானது, தனக்கு இலாபம் என்றால் எந்தவகையிலான சூழ்ச்சியையும் செய்வதற்குத் தயாராக இருக்கும் என்பது நாடறிந்த உண்மை.

சரி, மலையக பெருந்தோட்ட மக்களின் போராட்டத்தை திசை திருப்புவதற்கு ஏன் இந்த கோர்ப்பரேட் கம்பனிகள் முன்வர வேண்டும்?

ஆம்! பெரும் இலாபமீட்டும் பண முதலைகளான இவர்களுக்கு மக்கள் ஒற்றுமையாக இருப்பதோ அல்லது தனியொரு சக்தியாக உருவெடுப்பதோ விரும்பத்தகாத ஒன்றாகும். இங்கே ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் வழங்கப்படும் பட்சத்தில் கம்பனிகள் அடையும் சிறு இழப்பினையும் இழக்கவிடாமல் பாதுகாப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அந்த முயற்சிகள் என்னவென்பதை, அண்மைக்காலப் போக்குகளைக் கொண்டு கணிக்க முடியும். மாமன்னரின் கைக்குழந்தையான நிகழ்ச்சி அரசியல்வாதியொருவருக்கு இதுவொன்றும் தெரியாத விடயமல்ல. ஆனாலும் வெளிவேசம் போடும் இவர்கள் போன்றோரை இனங்காண நம் சமூகமும் இளைஞர்களும் முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறான விடயங்கள், பின்புலத் திட்டமிடல்கள், சதி, சூழ்ச்சிகள் என்பவை சாதாரண பொதுமக்களுக்கு விளங்குவதில்லை. அவர்கள் எப்போதும் விசுவாசமுடையவர்களாகவும் உழைப்பை மாத்திரம் நம்புபவர்களாகவும் இருக்கிறார்கள்.

எவ்வாறெனினும் இவை குறித்து முழு உழைப்பாளர் வர்க்கமும் தெளிவுபெற வேண்டும். நன்றியுள்ள நாய் வடிவத்தில் நம்முன்னே செயற்பட்டுக்கொண்டிருக்கும் குள்ளநரிகளை இனங்காணுவது காலத்தின் கட்டாயமாகும்.

(கூட்டுக் களவானிகளின் சூழ்ச்சியை இந்தக் கட்டுரை ஓரளவுக்கேனும் தெளிவுபடுத்தும் என நம்புகிறேன். விழித்துக்கொள்ளுதல் என்பது எழுந்துகொள்ளல் மாத்திரமல்ல, அறிந்துகொள்ளுதலும் தான்!)

Friday, December 28, 2018

இறப்பர் தொழிலாளர்களை கைவிடும் தொழிற்சங்கங்கள் - நிர்ஷன் இராமானுஜம்


லங்கை ஏற்றுமதி வர்த்தகத்தில் இறப்பர் தொழிற்துறைக்கு பிரதான இடம் உண்டு. தேயிலை பெருந்தோட்டங்களைப் போலவே இறப்பர் பெருந்தோட்டங்களிலும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் தொழில்புரிந்து வருகிறார்கள்.

ஆயினும் இந்தத் தொழிலாளர்கள் குறித்த அக்கறையை, பெருந்தோட்ட மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் முற்றுமுழுதாக கைவிட்ட நிலையே இன்று காணப்படுகிறது.

http://puthiyamalayagam.blogspot.com
அண்மைக்காலமாக கூட்டு ஒப்பந்தம் பற்றிய பேச்சு அதிகமாகவே பேசுபொருளாகியுள்ளது. இதில் பங்கேற்கும் தொழிற்சங்கங்களாயினும் சரி, பங்கேற்காத தொழிற்சங்கங்களாயினும் சரி இறப்பர் தொழிற்துறையைப் பற்றி வாய்திறப்பதில்லை. முதலாளிமார் சம்மேளனம் என்ன சொல்கிறதோ,  அதை அவ்வாறே கேட்டுக்கொள்ளும் போக்கிலேயே செயற்படுகின்றன. கூட்டு ஒப்பந்தம் பற்றி எத்தனையோ ஊடகவியலாளர் மாநாடுகளை நடத்தி சம்பள விவகாரத்தைத் தெளிவுபடுத்தும் தொழிற்சங்கங்கள் இதுவரை இறப்பர் தொழிலாளர்கள் பற்றி எந்தவித கருத்தையுமே வெளியிடாதது வேதனைக்குரிய விடயமாகும்.

பொதுவாக மலையகம் என்றால் மத்திய, ஊவா மாகாணங்களை மாத்திரமே குறி வைக்கும் தொழிற்சங்கங்கள் இறப்பர் பயிர்ச்செய்கை இடம்பெறும் ஏனைய மாவட்டங்கள் குறித்து கரிசனை கொள்வதில்லை. அவர்களுக்கு இடம்பெறும் அநீதிகள் குறித்தும் குரல்கொடுப்பதில்லை. ஆனால் தொழிலாளர்களின் மாதாந்த சந்தாப்பணம் மாத்திரம் தொழிற்சங்கக் கணக்குகளில் வரவில் வைக்கப்படுகின்றன.

சரி, ஏன் இந்தத் தொழிற்சங்கங்கள் இறப்பர் தொழிலாளர்களைப் புறக்கணிக்கின்றன? இதற்குப் பிரதான காரணியொன்று உள்ளது. தொழிலாளர்களின் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் அனைத்தும் முற்றுமுழுதாக அரசியல் நோக்கத்தைக் கருதியே இயங்கிக்கொண்டிருக்கின்றன. தமது அரசியல் இருப்பை உறுதி செய்துகொள்ளவே தினந்தோறும் போராட வேண்டியிருக்கிறது. இந்நிலையில் எங்கு தமக்கான வாக்கு வங்கியை தக்க வைத்துக்கொள்ள முடியுமோ அங்குதான் இவை அரசியல் ரீதியாக இயங்குகின்றனவே தவிர சந்தா செலுத்தும் தொழிலாளர்களின் நலன் குறித்து சிந்திப்பதில்லை.

பெருந்தோட்டக் கம்பனிகளைப் பொறுத்தவரையில் இறப்பர் தொழிற்துறை தொடர்ந்தும் நட்டத்தில் இயங்குவதாக சுட்டிக்காட்டுகின்றன. இந்த நட்டத்திலிருந்து மீள்வதற்காக முள்ளுத்தேங்காய் உற்பத்தியில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றன.

ஏற்கனவே, இறப்பர் உற்பத்தி தொழிற்சாலைகள் பல மூடப்பட்டுள்ளன. பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் தொழில்வாய்ப்பை இழந்துள்ளார்கள். இவற்றுக்கு யார் பொறுப்புக் கூறுவார்கள்? பெருந்தோட்ட தொழிற்துறையின் வினைதிறனை அதிகரிப்பதாக கடந்த கூட்டு ஒப்பந்தத்தில் சம்மதம் தெரிவித்து கையொப்பமிட்ட தொழிற்சங்கங்களின் பதில்தான் என்ன?
இறப்பர் தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் அரசியல் ரீதியாகவும் தொழிற்சங்க ரீதியாகவும் அநாதைகளாக்கப்பட்டுள்ளார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

உண்மையில் மலையகத் தொழிற்சங்கங்கள் மக்கள் நலனுக்காக இயங்குகின்றன என்றால் இறப்பர் தொழிலாளர்கள் குறித்தும் அக்கறை செலுத்த வேண்டும். பெரும்பாலான தோட்டப்பகுதிகளில் நிர்வாகத்தினால் பெரும் அநீதிகள் இழைக்கப்படுகின்றன. ஆனால் அவர்கள் தமது நியாயங்களை எடுத்துரைப்பதற்குரிய தலைமைத்துவம் இல்லாமல் இருக்கிறார்கள்.

வெறுமனே வாய்ப்பேச்சில் வீரர்களாக இருக்கும் தொழிற்சங்கத் தலைமைகள் இது குறித்து சிந்தித்து களத்தில் இறங்கிப் பணியாற்ற முன்வர வேண்டும் என்பதே தொழிலாளர்களின் கோரிக்கையாகும்.
குறிப்பாக, களுத்துறை, இரத்தினபுரி, குருநாகல், காலி உள்ளிட்ட மாவட்டங்களில் இறப்பர் தொழிற்துறையைக் கைவிட வேண்டிய சூழ்நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

உரிய பராமரிப்பின்றி காடாகிப்போயுள்ள பெருந்தோட்டங்களை அரசியல்வாதிகள் தாம் நினைத்தாற்போல பெரும்பான்மையின மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் திட்டமும் மறைமுகமாக நடைபெற்று வருகிறது. இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் அதிகாரப்போட்டிக்காக நீயா? நானா? என தலைவர்கள் சண்டையிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

எங்களுடைய மண், எங்களுடைய தொழிற்துறை ஒருசிலரின் அரசியல் அபிலாஷைகளுக்காகவும் சுய தேவைக்காகவும் பறிபோவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு அதிகாரத்துக்காகப் போட்டிபோடுபவர்கள் கட்டாயம் மக்களின் இந்த நிலைமைக்குப் பதில் கூறியே ஆக வேண்டும். அல்லாவிடின் ஒரு சமூகத்தை அதன் நிலத்திலிருந்தும் கலாசாரத்திலிருந்தும் அந்நியப்படுத்தியவர்கள் என்ற கறுப்புப் புள்ளி என்றுமே மறையாமல் நிலைத்திருக்கும் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.

-நிர்ஷன் இராமானுஜம்-

Tuesday, December 11, 2018

'அடிப்படை 600 ரூபாவுக்கு மேல் வழங்க முடியாது'- முதலாளிமார் சம்மேளனம் அறிவிப்பு

'அடிப்படை 600 ரூபாவுக்கு மேல் வழங்க முடியாது' 'நாளாந்தம் 250 மில்லியன் ரூபா நட்டம்' 'நாம் இனி பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ள மாட்டோம்' - முதலாளிமார் சம்மேளனம் அறிவிப்பு (நிர்ஷன் இராமானுஜம்) மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை வேதனமாக 600 ரூபாவை வழங்கும் தமது தீர்மானத்தில் மாற்றமில்லை எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ள முதலாளிமார் சம்மேளனம்இ இனிவரும் காலங்களில் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப்போவதில்லை எனவும் தெரிவித்தது. அத்துடன் பேச்சுவார்த்தை இடம்பெறும் காலப்பகுதியில் வேலைநிறுத்தம் செய்வது கூட்டுஒப்பந்த மீறல் எனவும் இதனால் நாள் ஒன்றுக்கு 250 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டிய அச் சம்மேளனம்இ தமக்கு எதிரான கொலை அச்சுறுத்தல்களுக்கு அரசாங்கம் தலையிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தது.

PICTURE BY. V. Harendran
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பாக தெளிவுபடுத்தும் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் ஊடகவியலாளர் மாநாடு கொழும்பில் இன்று (11) இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த முதலாளிமார் சம்மேளனத்தின் பேச்சாளர் ரொஷான் இராஜதுரை மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்தாவது, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்ளம் 600 ரூபாவுடன் மொத்த சம்பளமாக 940 ரூபாவழங்குவதற்கு நாம் தீர்மானித்துள்ளோம். தற்போதைய அடிப்படை சம்பளத்துடன்(500ரூபா) ஒப்பிடும் போது நாம் 20 வீத அதிகரிப்பை வழங்குகின்றோம். இது தொடர்பில் தொழிற்சங்களுக்கும் நாம் அறிவித்துள்ளோம். இலங்கையில் பெருந்தோட்ட தொழிற்துறையை பாதுகாக்க வேண்டியது எமது பொறுப்பாகும். ஆயினும் எம்மால் இயன்றளவு சம்பளத்தை மாத்திரமே வழங்க முடியும்.தற்போது ஜப்பானுக்கு தேயிலை ஏற்றுமதி செய்யப்படுவதில்லை. இது எமக்கு பாரிய இழப்பாகும். அதுமாத்திரமல்லாது மத்திய கிழக்கு நாடுகளும் ரஷ்யாவும் எமது தேயிலையை புறக்கணிக்கும் பாரிய அச்சுறுத்தலுக்கு நாம் முகம் கொடுத்துள்ளோம். கடந்த 150 வருடங்களாக வளர்ந்து வரும் இத்துறை மேலும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதே எமது எண்ணமாகும். ஆயினும்இ தொழிற்சங்கங்கள் அடிப்படைச் சம்பளமாக 1000 ரூபா என்ற கோரிக்கையை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றனர். இதனால் வேலை நிறுத்தமும் மேற்கொள்ளப்படுகின்றது. வேலைநிறுத்தம் செய்வது தொழிலாளர்களின் அடிப்படை உரிமையாகும். எனினும் இதன் காரணமாக தேயிலை துறையில் மாத்திரம் நாள் ஒன்றுக்கு 250 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுவதுடன் வாரத்திற்கு 1.25 பில்லியன் ரூபாவும் மாதம் ஒன்றுக்கு 6.25 பில்லியன் ரூபாவும் இழப்பு ஏற்படும். இது எமது பொருளாதாரத்துக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்த கூடியதாக அமைந்துள்ளது. இதேவேளை முதலாளிமார் சம்மேளனத்தின் அதிகாரிகளுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் தொழிலாளர்களால் பகிரங்க கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாம் சட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளோம். எமது தொழிற்துறையை பாதுகாப்பதற்காகவும் இவ்வாறான அச்சுறுத்தல்களை தடுப்பதற்கும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கேள்வி (ஆர். நிர்ஷன்) : தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என தொழிற்சங்கங்களால் எழுத்து மூலமான கோரிக்கை முன்வைக்கப்பட்டதா? பதில்: (எஸ். ஸ்ரீகுமார்- ஆலோசகர் முதலாளிமார் சம்மேளனம்) ஆமாம். ஆனால் இதர கொடுப்பனவுகள் பற்றி முன்மொழியப்படவில்லை. கேள்வி: முதலாளிமார் சம்மேளனம் இனி பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளாதற்கான காரணம் என்ன? பதில்: எமக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொழிற்சங்கங்கள் எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இனிவரும் காலங்களில் இலங்கை தொழில் வழங்குனர் சம்மேளனமே பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும். கேள்வி (ஆர்.நிர்ஷன்) : பெருந்தோட்டங்கள் காடாகிப் போயுள்ளதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். உதாரணமாக, டிப்டீன், ஓபாத உள்ளிட்ட தோட்டங்கள் தொடர்பான ஆதாரங்கள் உண்டு. மாதம்பை தோட்ட தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. இதற்கு நீங்கள் பொறுப்புக் கூற வேண்டும் அல்லவா? பதில்: ஆமாம். இதற்கு நாம் மாத்திரம் பொறுப்பாளியாகி விடமுடியாது. அரசாங்கத்தினால் குறிப்பிட்டதொரு களைநாசினிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 3 இலட்சத்து 27 ஆயிரமாக இருந்த தொழிலாளர் எண்ணிக்கை இன்று ஒரு இலட்சத்து 56 ஆயிரமாக குறைவடைந்துள்ளது. இதுவும் இந்நிலைமைக்கு காரணமாகும். கேள்வி: இலங்கை ரூபாவுக்கு எதிரான அமெரிக்க டொலரின் அதிகரிப்பு காரணமாக ஏற்றுமதி வருமானம் அதிகரிக்கின்றதல்லவா? பதில்: அவ்வாறு கூறப்பட்டாலும் தேயிலையில் விலை வீழ்ச்சியடைந்து வருகின்றது. ஒரு கிலோ தேயிலைக்கான செலவு 630 ரூபாவாக இருக்கும் அதேவேளை 570 ரூபாவுக்கே தேயிலை விற்பனை செய்யப்படுகின்றது. கேள்வி (ஆர்.நிர்ஷன்): பெருந்தோட்ட பகுதிகளில் வெளிவாரி உற்பத்தி முறை மூலமாக உற்பத்தியையும் செயன் திறனையும் அதிகரிப்பதற்கு கடந்த ஒப்பந்தத்தில் இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதே? பதில் : ஆமாம். இருந்த போதிலும் தொழிற்சங்கங்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை. கேள்வி (வி.ஹரேந்திரன்): இவ்வாறானதொரு நிலை தொடர்ந்தால் தொழிற்துறை பாதிப்பு ஏற்படுமல்லவா? பதில்: அவ்வாறு இடம்பெறக் கூடாது என்பதே எமது எண்ணம். கேள்வி (வி.ஹரேந்திரன்): ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் வழங்குவதில் உள்ள சிக்கல்கள் என்ன? பதில்: அது நூறுவீத அதிகரிப்பாகும். உலகில் எந்தவொரு தொழிற்துறையிலும் இவ்வாறு இடம்பெறுவதில்லை. நாம் எமது இயலுமைக்கேற்ற வகையில் தான் வழங்குவதாக உறுதியளித்திருக்கிறோம். கேள்வி: உங்களால் முடியாவிட்டால் பெருந்தோட்டங்களை அரசாங்கத்துக்கு பாரப்படுத்துமாறு தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனவே? பதில்: அரசாங்கத்துக்கு முடியாது என்பதால் தான் எம்மிடம் அந்தப் பொறுப்பை தந்தார்கள். அரசாங்கத்துக்குக் கீழ் இயங்கும் பெருந்தோட்ட நிறுவனங்கள் ஊழியர் சேமலாப நிதியைக் கூட செலுத்துவதில்லை.

Monday, December 3, 2018

"ஏமாற்றும் நோக்கம் எமக்கில்லை" – அமைச்சர் செந்தில் தொண்டமான் விளக்கம்

புதிய மலையகம் தளத்தில் பதிவுசெய்யப்பட்டிருந்த  ஆறுமுகனின் 1000 தந்திரங்கள்!  என்ற  கட்டுரைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் ஊவா மாகாண அமைச்சருமான செந்தில் தொண்டமான் விளக்கமளித்தார். அந்தக் கட்டுரையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தாகவும் சம்பள விவகாரத்தில் முழுமையான அக்கறையுடன் தமது கட்சி செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.



அவரது விளக்கம் சுருக்கமாக வருமாறு,

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எப்போதும் மக்கள் நலன் குறித்தே சிந்திக்கிறது. பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது? அது நியாயமான கோரிக்கை தானே?

பெருந்தோட்டத்தில் வெளியாள் ஒருவர் தொழில்புரிகையில் அவருக்கு ஆயிரம் ரூபா சம்பளம் கொடுக்க முடியுமாயின் ஏன் எமது தொழிலாளர்களுக்கு கொடுக்க முடியாது?

ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் கொடுப்பதற்கான சகல இயலுமைகளும் கம்பனிகளுக்கு உண்டு. ஆனால் அவர்கள் இலாபம் கருதி, அதாவது பன்மடங்கு இலாபம் கருதி இதனைத் தவிர்க்கிறார்கள்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விமர்சிப்பவர்கள் நான் இங்கே குறிப்பிடும் ஒரு விடயம் குறித்து சிந்திக்க வேண்டும்.

பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் நூறு புள்ளிகள் பெற வேண்டும் எனப் படிக்கிறார்களா? அல்லது 50-60 புள்ளிகள் பெற வேண்டும் எனப் படிக்கிறார்களா? ஒவ்வொருவரினதும் நோக்கம் 100 புள்ளிகள் பெற வேண்டும் என்பதே. பரீட்சை எழுதும்போது அதில் மாற்றங்கள் உண்டாகலாம்.

இதேபோல நாமும் ஆயிரம் ரூபா கோரிக்கையை முன்வைத்திருக்கிறோம். அதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்கிறோம். இதில் வெற்றியும் உண்டாகலாம், தோல்வியும் உண்டாகலாம். ஆனாலும் நாம் எமது முயற்சியைக் கைவிடுவதாக இல்லை. இங்கு எம்மை விமர்சிப்பவர்கள், இந்த விடயத்தில் எதிர்மறையான சிந்தனைகளை விடுத்து, எவ்வாறு ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்கலாம் என சிந்திக்க வேண்டும்.

இந்த விடயங்களை மக்களுக்கும் ஊடகங்களுக்கும் தெளிவுபடுத்துவதற்கு எம்மில் சில குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் அதற்காக நாம் எமது முயற்சிகளை கைவிடவில்லை. எமது தலைவர் ஆறுமுகன் தொண்டமான் இந்த விடயத்தில் மிகவும் பொறுப்புடன் செயற்படுகிறார்.

நாம், அண்மையில் போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருந்தோம். அதனை வெற்றிகரமாக செயற்படுத்தினோம். அதன்பிறகுதான் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. மக்களை வீதிக்கு இறக்காமல் பேச்சுவார்த்தைக்குச் சென்றிருக்கலாம்.

இங்கே இ.தொ.கா. அரசியல் இருப்புக்கான நாடகம் ஆடுகிறது என கட்டுரையில் குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனாலும் எமது போராட்டம் மக்களின் பலத்தை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. அவர்கள் தமது தேவை குறித்த குரலை எழுப்பியிருக்கிறார்கள். அதனால் தான் நாம் இன்னும் உத்வேகத்துடன் செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

நாம் மக்களை ஏமாற்றுகிறோம் என நீங்கள் நினைப்பீர்களேயானால் அது முற்றுமுழுதாக தவறு. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மக்கள் நலனை விட்டுக்கொடுத்ததில்லை. கட்சி பேதங்கள் இன்றி அனைவருக்குமாகத் தான் நாங்கள் குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறோம், போராடிக்கொண்டிருக்கிறோம்.

இதனை அனைவரும் உணர வேண்டும். நாம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது எமது கட்சிக்காரர்களுக்கு மாத்திரமல்ல. இதனைப் பலர்  புரிந்துகொள்வதில்லை.

எது எவ்வாறாயினும் நாம் எமது நோக்கத்தில் உறுதியாக இருக்கிறோம். அதற்கான அத்தனை முயற்சிகளையும் நாம் மேற்கொண்டு வருகிறோம். எம்மை யார் விமர்சனம் செய்தாலும் எமது கடமையிலிருந்து பின்வாங்க மாட்டோம்.

மனித வடிவில் கொடிய விஷம்; நாட்டை அச்சுறுத்தும் HIV




எனக்குத் திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. அதனைப் பெரிது படுத்தாமல் வீட்டில் இரண்டு நாட்கள் ஓய்வில் இருந்தேன்.
காய்ச்சல் குறைவடைந்தது.
 எனினும் எனது ஆண் உறுப்பிலும் அதனைச் சுற்றிலும் சிவப்புப் புள்ளிகள் தோன்றியிருந்ததை நான் அவதானித்தேன்.
அப்போது ஒருவித பயம்
என்னைப் பற்றிக்கொண்டது

-நிர்ஷன் இராமானுஜம்-

லங்கையில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை மறைமுகமாக அதிகரித்து வருகிறது. யார்? எங்கே? எவ்வாறு? இதனைப் பரப்புகிறார்கள் என்பதை அறியவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்பதையும் வெற்றுக் கண்களுக்குப் புலப்படாத விஷம் சமூகத்தில் ஏற்படுத்திவரும் தாக்கம் தொடர்பிலும் இந்தக் கட்டுரையினூடாக முன்வைக்க முயற்சிக்கிறோம்.

எயிட்ஸ் இனால் பாதிக்கப்பட்ட இளைஞர், யுவதிகள் உள்ளிட்ட பலர் கொழும்பை அண்மித்த பகுதிகளில் இரண்டு வீடுகளில் வசித்து வருகிறார்கள். பெரும் மன உளைச்சலுக்கு மத்தியில் மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் பலர் எம்மிடம் மனம் விட்டுப் பேசினார்கள். அவர்களில் சிலருடைய வாழ்க்கை அனுபவங்களை சுருக்கமாக இங்கே தருகிறோம்.

எயிட்ஸ் நோயாளிகள் பகிரும் அனுபவங்கள்

“எனக்குத் திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. அதனைப் பெரிது படுத்தாமல் வீட்டில் இரண்டு நாட்கள் ஓய்வில் இருந்தேன். காய்ச்சல் குறைவடைந்தது, எனினும் எனது ஆண் உறுப்பிலும் அதனைச் சுற்றிலும் சிவப்புப் புள்ளிகள் தோன்றியிருந்ததை நான் அவதானித்தேன். அப்போது ஒருவித பயம் என்னைப் பற்றிக்கொண்டது” - குருநாகலைச் சேர்ந்த 34 வயது இளைஞர் இவ்வாறு பேசத்தொடங்கிய போதே கண்ணீரும் கன்னத்தை நனைத்தது.

நீண்ட தாடி, நலிவடைந்த உடலுடன் இருந்த அவர் தரையைப் பார்த்தபடியே எம்மோடு உரையாடினார்.

“வைத்தியசாலைக்குச் சென்றவுடன் காய்ச்சல் அதிகம் என்பதால் என்னை தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் என வைத்தியர்கள் கேட்டுக்கொண்டார்கள். நான் மூன்று நாட்கள் தங்கியிருந்தேன். காய்ச்சலுக்கான மருந்து வகைகளை தந்து தாதியர்கள் என்னைக் கவனமாகப் பார்த்துக்கொண்டார்கள்.

நான்காவது நாள் நான் தனிமைப்படுத்தப்பட்டேன். அடிக்கடி இரத்தமாதிரிகளைப் பெற்றுக்கொண்டார்கள். எனது அம்மாவும் தங்கையும் அடிக்கடி வைத்தியசாலைக்கு வந்து என்னைப் பார்ப்பதுண்டு.

ஐந்தாவது நாள் காலை வைத்தியர் ஒருவர் என்னிடம் வந்து என்னை ஆறுதலாக இருக்கும் படியும் மனதைத் தளரவிடாது தான் சொல்வதை புரிந்துகொள்ளும் படியும் கேட்டுக்கொண்டார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை, வைத்தியரின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

உங்களுக்கு எச்.ஐ.வி. பொசிட்டிவ். இன்னும் பல இரத்த மாதிரிகளைப் பரிசோதனை செய்து கட்டுப்படுத்த முடியுமா என நாம் ஆராய வேண்டியுள்ளது என்றார். என் உடம்பு கொதித்தது. பேரிடி விழுந்து நான் சுக்குநூறாகச் சிதறிப் போனதாய் உணர்ந்தேன். மூச்சும் வார்த்தையும் ஒரு கணம் நின்றுபோயிருந்தன. கழிவறைக்குச் சென்று கதறிக் கதறி அழுதேன். அம்மா, தங்கை, உறவினர்கள் எல்லாம் என் கண்முன் தோன்றி மறைந்தார்கள். அந்தச் சோகத்தை என்னால் சொல்ல முடியவில்லை.

அது 2016 ஆரம்ப காலப்பகுதி இருக்கும். உடற்பயிற்சி நிலையத்துக்குச் சென்று உடலை கட்டாகப் பேணி வந்தேன். பெண்கள் பலருடன் உடலுறவு கொண்டிருக்கிறேன். என்னை முதலில் பரிசோதித்த வைத்தியர்கள், ஆறு மாதகாலத்துக்கு முன்னரே எனக்கு தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் இப்போதே அது வெளிப்பட்டிருப்பதாகவும் கூறினார்கள். அந்த ஆறு மாத காலப்பகுதியில் நான் பலருடன் உறவு வைத்திருந்தேன். அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியாது” என்றார்.

பதுளை, இரத்தினபுரி மற்றும் வவுனியா பகுதிகளைச் சேர்ந்த இளம் பெண்கள் மூவரை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

பதுளையைச் சேர்ந்த பெண், தரகர் ஒருவரால் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறாள். ஆடைத் தொழிற்சாலையில் தொழில் செய்துகொண்டிருந்த சமயம், அந்தத் தரகரால் மூளைச்சலவை செய்யப்பட்டு மசாஜ் நிலையத்திலும் பகுதி நேரமாக தொழில் புரிந்திருக்கிறாள். இதன்போது ஏற்பட்ட தவறான உறவு காரணமாக இப்போது வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள்.

இரத்தினபுரியிலிருந்து கம்பஹா பகுதிக்கு தனது 20 வயதில் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில்புரிவதற்கு அவள் வந்திருக்கிறாள். அங்கு வேறொரு ஆடவருடன் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த விடயம் இரு வீட்டாருக்கும் தெரிந்து திருமண ஏற்பாடுகளுக்கான திகதியும் குறிக்கப்பட்டது. இதனிடையில் இருவரும் பாலியல் தொடர்பு வைத்துக்கொண்டுள்ளனர்.

அதன்பின்னர் சில மாதங்களில் அந்த இளம் யுவதி நோயுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளாகியது தெரியவந்துள்ளது.

வைத்தியசாலை ஊழியர்களால் ஊருக்குக் கதை பரப்பப்பட்டதாகவும் இதனால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியதாகவும் கூறுகிறாள் அப்பெண். பல தடவைகள் தற்கொலைக்கு முயன்று தற்போது ஏனையோருக்கு உதவுவதற்காக இந்த வீட்டில் அடிக்கடி வந்து தங்கியிருந்து சேவகம் புரிவதாகவும் குறிப்பிட்டார்.

வவுனியாவில் குடும்பச் சுமை காரணமாக திருமணமாகாத 42 வயது பெண்ணொருவர் தனது தூரத்து உறவினர் ஒருவரின் வேண்டுகோளின் பேரில் சமையல் உதவிக்காக ஹோட்டல் ஒன்றில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார். கல்கிசை பகுதியில் உள்ள அந்த ஹோட்டலில் இருந்து பலரது தொடர்பு கிடைத்திருக்கிறது. இதனால் ஏற்பட்ட பின்விளைவு காரணமாக நான்கு வருடங்களாக தனது வீட்டுக்குச் செல்ல முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறாள்.

இவர்கள் மாத்திரமல்ல, அங்கு தங்கியிருந்த பலரும் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். தமக்கு இந்தத் தொற்று ஏற்பட்டிருக்கிறது என அறிந்து அவர்கள் சிகிச்சை பெறுகின்றனர். ஆனால் இவர்களோடு பாலியல் உறவு வைத்துக்கொண்ட இன்னும் பலர் வெளியுலகத்தில் நடமாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதுதான் அச்சம் தரக்கூடிய விடயம்.

நாம் மேலே குறிப்பிட்ட வீடுகளில் தங்கிருப்போர் உட்பட மேலும் பலருக்கு உதவிகள் புரிந்து பராமரிப்பு செய்து வருவதும் ஒரு பெண்மணிதான். அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் இவர் சமூக சேவையைச் செய்து வருகிறார். பிரின்சி மங்களிகா (அனுமதியுடன் பெயரும் புகைப்படமும் பிரசுரிக்கப்படுகிறது) என்ற 58 வயதுடைய இந்தப் பெண் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான எயிட்ஸ் நோயாளிகளுக்கு உதவி செய்துகொண்டிருக்கிறார். அது மாத்திரமல்லாது எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வுகளையும் நடத்தி வருகிறார்.
Princy Mangalika
இவரது பராமரிப்பின் கீழ் எச்.ஐ.வி. இனால் பாதிக்கப்பட்ட 362 ஆண்களும் 354 பெண்களும் 41 சிறுவர்களும் சிகிச்சை மற்றும் ஆலோசனைகளைப் பெற்று வருகின்றனர்.

பிரின்சி மங்களிகா, இந்த நோய்த் தொற்றுக்கு உள்ளானது எப்படி? ஆம்! அவருக்கு எச்.ஐ.வி. தொற்று உண்டாகி 18 வருடங்களாகின்றன. ஜெர்மனியில் தொழில்புரிந்த கணவருக்கு எச்.ஐ.வி. தொற்றியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிராமத்து மக்களின் தொந்தரவை தாங்கிக்கொள்ள முடியாமல் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அதன் பின்னர் பிரின்சியையும் இரத்த மாதிரியை பரிசோதனை செய்துகொள்ளுமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதன்பிரகாரம் பரிசோதனை செய்துகொண்டபோது தான் அந்த அதிர்ச்சி காத்திருந்தது.

“எனது பரிசோதனை முடிந்து சில மணி நேரங்களிலேயே எமது வீட்டை கிராமத்தவர்கள் எரித்துவிட்டார்கள். எனது இரண்டு பெண் பிள்ளைகளுடன் நடுத்தெருவில் நின்றேன். கிராமத்தாரின் தூற்றுதல்கள், உறவினர்களின் நகைப்புக்கு மத்தியில் சில காலம் நாம் தனித்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

எனது பிள்ளைகளுக்கு இந்த நோய் தொற்றியிருக்கிறதா என்பதை ஆராயும் வரை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இரு பிள்ளைகளினதும் இரத்த மாதிரிகளைப் பரிசோதித்த பின்னரே நான் பெருமூச்சு விட்டேன். அவர்களுக்கு எச்.ஐ.வி. தொற்றியிருக்கவில்லை.

நான் தவறான பாலியல் தொடர்பு கொள்ளவில்லை. ஆதலால் நான் யாருக்கும் பயப்படவும் இல்லை. இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து எவ்வாறு மீள்வது என சிந்தித்து எனக்கு நானே ஆறுதல் கூறி என்னை மாற்றிக்கொண்டேன்.

இப்போது,எச்.ஐ.வி. இனால் பாதிக்கப்பட்ட பலருக்கும் நான் ஆறுதலாக இருக்கிறேன் என்பது எனக்குப் பெருமிதம் தான். இந்த நோயால் பாதிக்கப்பட்டோரை சமூகமும் குடும்பமும் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவர்கள் இன்னும் சில காலம் உயிர்வாழ்வார்கள் என்பதே நான் எனது அனுபவத்தில் கண்ட உண்மை” என்றார்.

‘விழிப்புடன் இருப்போம் - இருமுறை சிந்திப்போம்’

நாட்டில் அண்மைக்காலமாக கிடைக்கப்பெற்ற புள்ளி விபரங்களின் அடிப்படையில் இரு ஆண்களுக்கிடையே இடம்பெறும் சமபால் உறவின் காரணமாகவே அதிகமானோர் எயிட்ஸ் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர். இதனை சுகாதார அமைச்சின் தேசிய எயிட்ஸ் தடுப்பு நிகழ்ச்சித் திட்டம் உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரையில் இது மிகவும் ஆபத்தான சமிக்ஞையாக இருப்பதாக சுட்டிக்காட்டிய தேசிய எயிட்ஸ் தடுப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் ஆலோசகர் வைத்தியர் கே.ஏ.எம். ஆரியரத்ன, இது குறித்து விழிப்புணர்வு அவசியம் என்பதையும் தினக்குரலிடம் சுட்டிக்காட்டினார்.

சிறைக் கைதிகள், பாலியல் தொழிலாளர்கள், போதைப்பொருள் பாவனையாளர்கள், கடற்கரை இளைஞர்கள் என பலதரப்பட்டோரிடம் மேற்கொண்ட ஆய்வுகளில் ஆண்களுக்கிடையே இடம்பெறும் பாலியல் உறவு காரணமாகவே அதிகமாக இந்நோய் பரவியுள்ளமை தெரியவந்துள்ளது.

இவர்களில் 25 முதல் 49 வயதுக்கு இடைப்பட்டோரே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2017 ஆம் ஆண்டு 186 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதுடன் 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் ஆயிரத்து 500 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாண்டில் எயிட்ஸ் நோயாளிகள் 475 பேர் மரணத்தைத்  தழுவியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளான சிலருக்கு சில மாதங்களிலேயே அறிகுறிகள் தென்படத் தொடங்குவதுடன் சிலருக்கு பல வருடங்கள் ஆகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய எயிட்ஸ் தடுப்பு நிகழ்ச்சித் திட்டத்தைச் சேர்ந்த வைத்தியர்கள் தெரிவித்த கருத்துகளின் பிரகாரம் ஒரு சிலருக்கு 10 முதல் 12 ஆண்டுகளின் பின்னரே நோய் அறிகுறிகள் தென்படுகின்றன. அப்போது காலம் கடந்திருப்பதுடன் அதுவரை அவர்களால் மேலும் பலருக்கு நோய் தொற்றுவதற்கான வாய்ப்புகளே அதிகம்.

இதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது?

இலங்கையைப் பொறுத்தவரையில் பாலியல் ரீதியிலான தொடர்பு காரணமாகவே அதிகமாக எச்.ஐ.வி. தொற்று ஏற்படுகிறது.

பாதுகாப்பற்ற உடலுறவு இதற்கு முக்கிய காரணமாகும். கணவனும் மனைவியும் காதலிக்கும் போது அல்லது திருமணத்தின்போது எவ்வாறான அன்புடனும் புரிந்துணர்வுடனான உறவுடனும் இருக்கின்றனரோ, அதேபோல் வாழ்நாள் முழுவதும் தொடரும்போது இவ்வாறான பிரச்சினைகள் தடுக்கப்படுகின்றன எனக் கூறுகிறார்கள் எயிட்ஸ் இனால் பாதிக்கப்பட்டோர்.

ஆண்கள் பல சந்தர்ப்பங்களில் வேலைப்பளு காரணமாக பெண்களின் தேவைகளைப் புரிந்துகொள்ளாமையும் பெண்கள் சிலர் ஆண்களின் தேவைகளைப் புரிந்துகொள்ளாமையும் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

எது எவ்வாறாயினும் மனச்சாட்சியுடன் இருமுறை சிந்தித்தல் அவசியமாகும். மிகப் பழைமையான கலாசார பின்னணி கொண்ட நாம், அது தொடர்பில் சிந்திக்காமல் சிற்றின்பத்துக்கான நாட்டத்தில் வாழ்க்கையைத் தொலைத்துக்கொள்கிறோம். நாம் சந்தித்த எயிட்ஸ் நோயாளிகளைத் தவிர அவர்களுக்குப் பரப்பியோரும் அவர்களால் பாதிக்கப்பட்டோரும் இன்னும் எமது சமூகத்தின் மத்தியில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

கண்ணுக்குப் புலப்படாமல் கொடிய விஷத்தை ஏந்திக்கொண்டு சிற்றின்பத் தாகத்தோடு எங்கேயோ தமது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்கிறார்கள். இவை தொடர்பில் விழிப்புணர்வு கொண்டாலேயொழிய இந்த நோய்த் தாக்கத்திலிருந்து எம்மைக் காப்பாற்றிக்கொள்வது சிரமமான காரியமாகவே அமையும் என்பதுதான் உண்மை.

(நாட்டில் பெரும்பாலான வைத்தியசாலைகளில் எச்.ஐ.வி. பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படுவதுடன் இரகசியம் பேணப்படுகிறது. தொடர்பு: 0703 533633)

-நன்றி தினக்குரல் 02.12.2018-