Friday, November 13, 2009

கலைஞர் கருணாநிதிக்கு!

பேரன்புக்குரிய கலைஞர் கருணாநிதிக்கு,
வணக்கம்.

பாழடைந்துபோன எங்களுர் மாரியம்மனுக்கு ஒருவேளை கூழ் ஊற்றக்கூட வழியில்லாத துர்பாக்கியர்களாய் சோதனை சுமந்து கொண்டிருக்கிறோம்। ஏதோ உயிர்வாழ்கிறோம் என்பதைத் தவிர குறிப்பிட்டுச்சொல்லும்படியாக எதுவுமில்லை। உலகத்தமிழரின் தலைவர் என்று புகழப்படும் நீங்கள் நலமாயிருந்தால் தான் எம்மைப்போன்ற தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்பதால் உங்கள் நலத்துக்கு ஏக இறைவனை பிரார்த்திக்கிறேன்।

நிற்க:
பட்ட கஷ்டமெல்லாம் சற்றும் விலகாமல் ஒட்டியுறைந்து தினமும் மனதை தைத்துக்கொண்டிருக்கின்றன। தாகம்தீர்க்க மழையில்லை। இரத்தம் குடிக்க குண்டு மட்டும் பொழிகிறது என்றிருந்த காலமும் மாறி நாமும் கொஞ்சம் மாறியிருக்கிறோம்.

குடும்பத் தலைவன் உயிருடன் இல்லை. பிள்ளை கண்ணிவெடியில் சிக்கி கால்களை இழந்திருக்கிறது, தங்கை சித்தப்பிரம்மையாய் அலைகிறாள், மனைவியோ எதிர்காலத்தை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டு.... என பலருடைய காலம் நகர்ந்துகொண்டிருக்கிறது.

மீளக் குடியமர்த்துகிறார்கள். உண்மைதான். வேதனைகளின் ஈரம் இன்னும் காயாமல் இருக்கும்போது பழைய கிராமத்தை பார்க்க முடியவில்லை. அரசமரத்தடிப் பிள்ளையார் முதல் அஞ்சலகம் வரை எதுவுமில்லை. அடையாளமும் இல்லை. அ

தே சந்தோசத்தை, அதே நினைவுகளை இனிவரும் காலம் மீளப்பெற்றுத்தருமா என்பதில் எனக்குச் சந்தேகம் உண்டு.

ஆம்! நாம் மீளக்குடியமர்த்தப்பட்டோம் குடிதண்ணீர் இல்லாமல்...
மீளக்குடியமர்த்தப்பட்டோம் மின்சாரம் இல்லாமல்...

எல்லாரும் ஏமாற்றுகிறார்கள்। ஏன் நீங்கள் கூடத்தான்।
எம்மைப்பற்றி ஆக்ரோஷமாக பேசும்போதெல்லாம் எல்லாவற்றையும் மறந்து மனம்நிறைந்து களிக்கிறேன்। காலம் தள்ளிப்போகும்போது உங்கள் வார்த்தைகளும் புளித்துப்போகின்றன। ஆயிரம் நுண் ஈட்டிகள் சேர்ந்து ஆழ்கலங்களை துளையிட்டு, நகரும் ஒவ்வொரு நிமிடங்களிலும் மரண வேதனை தருவதுபோன்ற உணர்வுகள்... அதைத் தாங்க முடியாமல்...

உங்களுக்குத் தெரியாது ஐயா।
அனுபவித்தால் தான் தெரியும்। கண்ணீர் வடித்து வடித்து ஒருவேளை தண்ணீருக்கே தாய் தவித்திருக்க வற்றிப்போன அவள் மார்முலையை ஏக்கத்துடன் பார்க்கும் பிஞ்சுக்கு காலம் சொல்லப்போகும் பதில்தான் என்ன?
நாம் யாருக்கு என்ன கொடுமை செய்தோம்? யார்நிலத்தை நாம் பறித்தோம்?யார் உரிமைக்கு இடம்கொடுக்க மறுத்தோம்? சோதனை மாறிமாறி வரும் என்பார்கள்। வருவதெல்லாம் இங்கு சோதனையாகத்தான் இருக்கிறது।

போகட்டும்।
இலங்கை அரசாங்கத்துக்கு நீங்கள் இருவார காலக்கெடு கொடுத்தீர்கள்। அப்பாவி மக்கள் மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் தமிழ் அமைச்சர்கள் பதவிவிலகுவார்கள் என்றும் அறிவித்தீர்கள்। ஏன் ஆனால் மௌனம் காத்தீர்கள்?
இந்தியப் பிரதமரை சந்தித்தீர்கள்। தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை கூறினீர்கள்।
ஆனால் பதில்கேட்க மறுத்தீர்கள்.
போராட்டத்துக்கு அழைத்தீர்கள்। சங்கிலியாய் இணைந்த எம்சொந்தங்களைக் கண்டு அகமகிழ்ந்து ஆனந்தமடைந்தோம்। இடைநிறுத்தினீர்கள்.

எமது பிரச்சினை பற்றி நீங்கள் ஆற்றிய உரையை நெய்வேலி, அருப்புக்கோட்டை, பாலையப்பட்டி, மேட்டுப்பாளையம், விருதுநகர், சாத்தூர், சிவகாசி, இராசபாளையம், திருவில்லிப்புத்தூர் என எல்லா ஊர்களிலும் பிரசாரம் செய்து அந்த உரையை போட்டுக்காட்டினீர்கள்। என்ன பயனாயிற்று?

எமது நாட்டின் தமிழ் அமைச்சர்கள் மீது எனக்கு துளியளவும் நம்பிக்கையும் இல்லை। அதனால் தான் உரிமையோடு உங்களிடம் கேட்கிறேன்।

நான் மட்டுமல்ல। இங்கு இலட்சக்கணக்கானோர் உங்களின் மறுமொழிக்காகவும் அடுத்த அடிக்காகவும் காத்திருக்கிறோம்। பனைமரங்களுக்குள் நாம் அடைகாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம். அந்தகாடு அழியும் நிலை என்று வருகிறதோ அன்று இடுகாட்டில்தான் நாம் தூங்கிக்கொண்டிருப்போம்।
அப்போது எமக்காக ஒரு கவிதை எழுதி தப்பித்துவிடாதீர்கள்।

எம்மை ஏமாற்றத்துணிந்து எதிர்பார்ப்புகளை ஏமாற்றங்களாக்கிய ஒவ்வொருவருக்கும் இறந்தபின்னும் எம் ஆன்மா சாபமிடும்। இது நிச்சயமான உண்மை।

கலைஞரே,
எமக்கான தேவையை இந்த வரிகளுக்குள் அடக்கிவிட முடியாது. முடியுமானால் எம்மை நீங்கள் வந்து பாருங்கள். நீங்கள் தவறு செய்தீர்களா இல்லையா என்பதை அப்போது உணர்வீர்கள்.

ஐயா,
நீங்கள் தூங்கிக்கொண்டிருப்பதாக பலர் சொல்லிக்கொள்கிறார்கள்। எமது ஓலக்குரல் உங்களுக்கு தாலாட்டாய் கேட்கும் என நான் நினைக்கவில்லை। எம்மைக் காப்பாற்ற முடியாவிட்டால் சொல்லிவிடுங்கள்। கறைபடிந்த எமது வாழ்க்கைப் பயணத்தை அந்தக் கறையைக்கொண்டே புள்ளிவைத்து முடித்துவிடுகிறோம்। கோரத்தின் கைகளில் சிக்குண்டு அகோரமாய் கொடுமைப்படுத்தப்படுவதை விட மரணம் எவ்வளவோ சுகமானது।

இந்தக் கடிதத்தை நீங்கள் வாசிக்கும்போது நான் உயிரோடு இல்லாமலிருக்கலாம்। ஆனாலும் உயிருள்ள இந்த வரிகள் உங்கள் பதிலுக்காக காத்திருக்கும்।

அன்பான நன்றிகள் எங்கள் மண் சார்பிலும் மக்கள் சார்பிலும் உங்களுக்கு!
எங்களுர் மாரியம்மன் உங்களுக்கு என்றும் துணைநிற்கட்டும்।

இப்படிக்கு,
ஓர் ஈழத்தமிழன்

அச்சுவலைச் சந்திப்பு 03


Wednesday, November 11, 2009

“அது அவரோட ஸ்டைல்”

குரு இலிங்க சங்கம வழிபாடு என்பார்கள். இந்து மதத்தைப் பொறுத்தவரை இந்த மூன்றும் இறைவன் தான். அஞ்ஞானத்தை அகற்றும் ஆசாரியன், வழிபாட்டுக்குரிய இலிங்கம், சங்கமம் எனப்படும் சிவனடியார்கள் ஆகிய மூன்று பகுதியினருக்கும் சமமான மதிப்பு உண்டு.

இலிங்கத்துக்கு முதலாக ஏன் குரு சொல்லப்படுகிறார் என்றால், இறைவன் தான் குருவாக வந்து தன்னைப் பற்றியும் மும்மலங்கள், பஞ்சபூதங்கள் பற்றியும் விளக்குகிறார் என்பதால் தான். ஆசாரியன் எனப்படும் ஆசிரியர்கள், தாம் அந்த நிலையில் தான் இருக்கிறோமா என்பதை எப்போதும் சுயமதிப்பீடு செய்துகொள்ளல் அவசியமாகும்.

இலங்கை தலைநகர் கொழும்பில் தமிழர்கள் அதிகமாக வாழும் கொட்டாஞ்சேனை என்றொரு பகுதி இருக்கிறது. அங்கு பிரபலமான தனியார் கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. அந்தக் கல்வி நிறுவனத்தில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரின் லீலைகள் குறித்தான பதிவுதான் இது.

காலத்துக்குத் தேவையான மிக முக்கியமான பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர் அவர். வெள்ளவத்தையிலுள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் கற்பிப்பதுடன் பிரத்தியேக வகுப்புகளையும் நடாத்துகிறார்.

வயதுடைய அவர் தனது வகுப்புகளில் கற்பிக்கும்போது இரட்டை அர்த்த வசனங்களைத் தான் அதிகம் உபயோகிக்கிறார்.
கையில் பேனையை வைத்துக்கொண்டு மாணவியரின் அந்தரங்கப் பகுதியை குத்தி பிழைதிருத்தும் பழக்கத்தைக் கொண்டிருக்கும் இவர்,
மாணவன் ஏதாவது பிழைவிட்டால், “வா… இங்க வா… உனக்கெல்லாம் என் மேசைக்குக் கீழ் இருக்கும் வேலை தான் சரி” என்பாராம்.

மாணவரியர் பலரின் கையடக்கத் தொலைபேசி இலக்கங்களை வாங்கிக்கொண்டு இரவுவேளைகளில் குறுஞ்செய்தி அனுப்புவதுதான் இவரது பொழுதுபோக்கு.

இதுபற்றி அந்த கல்விநிறுவனத்தின் நிர்வாகத்தினர் அக்கறை எடுப்பாக இல்லை. அது அவரோட ஸ்டைல் என்கிறார்கள் அனுபவத்தில் முதிர்ந்த ஆசிரியர்கள்.

ஆசிரியரின் பெயரோடு நான் எழுதவேண்டும் என்றிருந்தேன். ஆனால் நான் அவ்வாறு எழுதிய பிறகு, அந்த ஆசிரியரிடம் கல்விகற்க தமது பிள்ளைகளை அனுப்பிய பெற்றோர் வருத்தப்படுவார்கள்.

மாணவர்களின் கட்டிளமைப் பருவம் வித்தியாசமானது. எது நல்லவழி எது தீயவழி என்பதை சரியாக தேர்ந்தெடுக்க முடியாமல் ஒரு புள்ளியில் ஊஞ்சல்போல் ஆடிக்கொண்டிருப்பார்கள். ஆசியர்கள் தான் அவர்களை சரியான வழிக்கு இட்டுச்செல்ல வேண்டும்.

சில அநாவசியமான வார்த்தைகள் அவர்கள் மனதில் காம எண்ணத்தை தூண்டுவதாக இருந்தால் அதன் பிரதிபலன் அதிமோசமாக இருக்கும் என்பதை இவ்வாறான ஆசிரியர்கள் உணராதவர்களா?

பெண்களின் உள்ளாடைகளைப் பற்றியே வகுப்பில் பேசிக்கொண்டிருக்கும் இவர்கள் சமுதாயத்துக்கு செய்யும் சேவை இதுதானா?

அந்தப் பொறுப்புக்குரியவர்கள் அரசாங்க பாடசாலை ஆசிரியர்கள் மட்டுமல்ல என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும். தன் உயிரிலும் மேலாக அன்புசெலுத்தி ஆசிரியர்களை நம்பி வகுப்புகளுக்கு பிள்ளைகளை அனுப்பும் பெற்றோருக்கு சம்பந்தப்பட்டவர்கள் செய்யும் பிரதியுபகாரமா இது?

திருடனாய்ப் பார்த்து திருந்த வேண்டும்.

Tuesday, November 10, 2009

அச்சுவலைச் சந்திப்பு 02

இளையதம்பி தயானந்தா – ஆசிரியர் - இருக்கிறம்

நான் இல்லாதபோதும் கூட அச்சுவலைச் சந்திப்பு நன்றாக நடந்துகொண்டிருக்கிறது. பதிவர்கள், ஊடகவியலாளர்கள் நான் நினைத்ததற்கும் அதிகமானோர் வந்திருக்கிறார்கள்.

இது வெறும் சந்திப்புதான்.

எமது விழுமியங்களையும் மொழியையும் காக்கவேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இன்றைய உலகம் இணையத்தின் பங்களிப்போடு தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆதலால் இணையத்தையும் ஊடகத்தையும் இணைக்கவேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டது.

நாம் எழுதுகிறோம் என்பது முக்கியமில்லை. என்ன எழுதுகிறோம்? எதற்காக எழுதுகிறோம்? நாம் எழுதுவதானால் ஏற்படும் அனுகூலங்கள் என்ன என்பது பற்றி சிந்தித்து எழுதுபவர்களை நான் குறைவாகவே காண்கிறேன். ஆகையால் நமது மொழிசார்ந்த அக்கறையாளர்கள் என்ற வகையில் இதற்குத் தீர்வு காணும் அடிப்படையாக இந்த சந்திப்பினை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

இனியும் நாங்கள் சந்திப்போம். இருக்கிறம் எப்போதும் உங்களுக்காக இருக்கிறது.

இந்திய சஞ்சிகைகளின் ஆதிக்கம் மேலோங்கியிருந்த காலத்தில் பல சவால்களுடன் இந்தப் பெயர்கொண்டு ஆரம்பித்தோம். பத்திரிகைகளையும் இந்திய சஞ்சிகைகளையும் பார்த்துப்பழகிய நம்மவர்களை ஓர் ஈழத்துச் சஞ்சிகை எவ்வாறு கவரவேண்டும்? எவ்வாறான தகவல்களை உள்ளடக்கலாம் என பல மாதங்களாக திட்டமிட்டோம். ஏன் இன்னும்கூட அது நடக்கிறது.

தமிழனாக இருந்து தமிழனுக்காக சஞ்சிகை நடாத்துவதன் சிரமங்களை நான் நிறையவே அனுபவித்திருக்கிறேன். ஆனாலும் நாம் உழைக்கப் பிறந்தவர்கள். ஏதோ ஒருவகையில் இந்தத் துறைக்குள் ஈர்க்கப்பட்டு இன்றுவரை அதற்காக பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம்.

எழுத்தாளர்கள், படைப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நமது சமுதயாம், மொழிக்காக பாடுபடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மீண்டும் பேசிய விடயங்கள் :

முன் அட்டை, இந்திய சினிமா போன்ற விடயங்களை சந்தைப்படுத்தலுக்காக கையாள வேண்டிய கட்டாயம் உண்டு. வருமானத்தினூடாகத்தான் இதனை நடாத்திச்செல்ல முடியும்.

மொழி வழக்கைப் பற்றி நான் குறிப்பிட்டாக வேண்டும். சில எழுத்துப்பிழைகள், தவறுகள் இருக்கின்றன என்பதற்கான நாம் மொழிப்பற்றற்றவர்கள் என்ற நிலைப்பாடு கொள்ளலாகாது.

நமக்கென உரிய மொழிச்சொற்கள் வழக்கொழிந்து வருகின்றன. அவற்றை மொழிப்பயன்பாட்டோடு பாதுகாக்க முதுசரம் சஞ்சிகையை வெளியிட நினைத்தோம்.

இனிவரும் காலம் பல நல்ல முயற்சிகளுக்கு வழிசமைக்கும் என்ற நம்பிக்கை உண்டு.

நடராஜா குருபரன் - ஊடகவியலாளர்

காலத்தின் சோதனையால் நாம் இன்று பிரிந்துநிற்கிறோமே தவிர மனதால் ஒன்றுபட்டிருக்கிறோம். உங்களை எல்லாம் நேரில் சந்திக்கவில்லையே என்ற ஆதங்கத்தை இருக்கிறம் போக்கியிருக்கிறது. தயானந்தா அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

என்னுடன் ஊடகங்களில் பணியாற்றிய நிறைய நண்பர்களை, எனக்குத் தலைமைப் பொறுப்பு வகித்தவர்களை இன்று பார்க்கிறேன்.

தயா அண்ணா கூறியதுபோல எதைவேண்டுமானாலும் எழுதலாம் என்றில்லாமல் நன்றாக சிந்தித்து, அது பொழுதுபோக்கு அமிசமாயினும் சரி, நடைமுறைவிடயங்களாயினும் சரி காத்திரமாக வழங்கப்படல் வேண்டும்.

குறிப்பாக பால்நிலை சமத்துவத்தை நாம் பேணவேண்டும். பல வலைத்தளங்களிலும் இணையத்தளங்களிலும் இழிநிலை வார்த்தைப் பிரயோகங்களை நான் பார்த்துவருகிறேன். இது நமது சமுதாயத்தை மேலும் கீழ்தரத்துக்கு தள்ளும் செயலாகும்.

நாம் ஏன் இன்று இவ்வாறிருக்கிறோம்? நமக்கான களம் என்ன? என்றெல்லாம் சிந்திப்பவர்கள் இவ்வாறு எழுதுவதில்லை.

குறிப்பாக ஊடக தர்மம் குறித்து சிந்திப்பவர்கள் குறைவாகத்தான் இருக்கிறார்கள். இதனை ஒரு குறையாக நினைத்துக்கொள்ள வேண்டாம். செம்மைப்படுத்தலின் அவசியம் காலத்தின் தேவை என்பதாலேயே நான் இதைக் குறிப்பிடுகிறேன்.

ஒரு விடயத்தை எழுதும்போது அதனால் மற்றொரு சமூகமோ, வர்க்கமோ, மொழியோ அல்லது இதர விடயங்களோ பாதிக்கப்படக்கூடாது. அதனால் நாம் எழுதுவதன் காத்திரத்தன்மையை இழந்துவிடுகிறோம்.

ஒரு தளத்தில் வருவதை அவ்வாறே பிரதிபண்ணி தமது இணைங்களிலும் வலைத்தளங்களிலும் பதிந்துவிடுபவர்கள் இருக்கிறார்கள். நான் எழுதும் பல கட்டுரைகள் பெயர்கூட குறிப்பிடப்படாமல் பல தளங்களில் பார்த்திருக்கிறேன்.

இவ்வாறானவற்றைத் தவிர்த்து தரமான தகவல்களை நாங்கள் வழங்க முன்வரவேண்டும். தமிழால் சாதனை படைப்பதற்கு நிறைய இருக்கிறது. அந்த சாதனை படைப்பதற்கான வழியை நாம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த சந்திப்பு அதற்கான ஏற்பாடாக அமையட்டும்.

எழில்வேந்தன் - ஊடகவியலாளர்

இணையத்தளங்களில் நாம் எழுதும் விடயங்கள் குறித்து இங்கு பல்வேறு கருத்துகள் பரிமாறப்பட்டன. தமிழில் விடப்படுகின்ற தவறுகள் பற்றி வித்தியாதரன் நன்றாக எடுத்துக்கூறினார்.

இவ்வாறான பிழைகளைத் தவிர்த்து முறையாக எழுதவேண்டியது நமது கடமையாகும்.

நான் ஒரு விடயத்தை இங்கு முன்வைக்க விரும்புகிறேன்.
நமது கலாசாரம், நமது மொழி என பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இந்தியச் சொற்கள், இந்திய படங்களை ஏன் நாம் நம்பியிருக்க வேண்டும். இருக்கிறம் சஞ்சிகையில் தற்போது அவ்வாறான போக்கு காணப்படுகிறது. எனக்குத் தந்த சஞ்சிகையில் கூட இந்திய சினிமாவுக்கே அட்டைப்படத்துடன் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறீர்கள்.

இதற்கான விளக்கத்தை நான் இருக்கிறம் நிர்வாகத்தினரிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

…………………………………………………………..
முகுந்தன் (வலைப்பதிவரல்லாமல் ஆர்வத்தின் காரணமாக வந்தவர்), சட்டத்தரணி மர்சூம், அறிவிப்பாளர் முகுந்தன், பிரதீப், ஒளிபரப்பாளர் முஷாரப் என ஒரு பட்டாளமே அங்கு தமது கருத்துக்களை முன்வைத்தது.
அனைவரினதும் பேச்சுக் குறிப்புகள் என்னிடம் இருக்கின்றன.

எனினும் அது இருக்கிறம் சஞ்சிகையின் வளர்ச்சிகான விமர்சனங்கள் என்பதால் நான் இங்கு எழுதவில்லை.
(தொடரும்)

சுவாமி ஆத்மகனானந்தா

துறவிகள் என்றவுடன் இறைதியானத்திலும் பூஜைகளிலும் எப்போதும் ஈடுபட்டிருப்பார்கள் என்ற பொதுநிலைப்பாடு நம் அனைவரிடத்திலும் உண்டு. ஆனால் அதனையும் தாண்டி சமூகத் தொண்டுதான் இறைவனுக்கான தொண்டு. ஏழையின் சிரிப்பும் தியானத்தின் ஈற்றும் ஒன்று. மற்றவர் மனம்நோகாதபடி நடந்துகொள்ளுதல் தான் நமது முதற்கடமை என வாழ்ந்துகொண்டிருப்பவர் சுவாமி ஆத்மகனானந்தா.

------------------------------------------------------------------
சமயம்சார்ந்த மூட நம்பிக்கைகளை அடியோடு வெறுப்பவன் நான். சாமி பார்த்தல் என நாம் பொதுவாக குறிப்பிடும் “குறி சொல்லுதல்” பற்றி சிறுவயதுமுதலே எனக்கு அறியும் ஆவல் இருந்தது. 1995 ஆம் ஆண்டில் ஒரு நாள் சுவாமிஜி பரியோவானுக்கு (எனது பாடசாலை) வருகை தந்திருந்தார். அவருடைய பணிவான நடத்தையும், அன்பான ஆறுதலான பேச்சும் எனக்குள் ஏதோ மாற்றத்தை ஏற்படுத்தியது.

அவர் வந்துசென்ற பின்னர் குறிசொல்லுதல் உண்மையா? கடவுள் உண்மையாகவே மனித உடம்புக்குள் வருகிறாரா? எனக் கேள்விகள் கேட்டு சுவாமிக்கு கடிதம் எழுதினேன். அப்போதுதான் அவர் இராமகிருஷ்ண மிஷனின் பீடாதிபதி என அறிந்தேன்.
குறிசொல்லுதலானது மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையிலான ஒரு சக்தியே. அது தீய சக்திகளினாலேயே பெரும்பாலும் நிகழ்த்தப்படுகிறது. தூய்மையான மனதும் உடலும் இருந்து கடவுளை மனப்பூர்வமாக தியானித்தால் அந்தப் பரம்பொருள் நமக்குள் காட்சியளிக்கும். உலகத்தை தாண்டிய அமைதியைத் தரும். அது சிரமப்படுத்தாது. அதிகம் பேசவைக்காது என விரிவான கடிதம் எழுதி நேரம் கிடைத்தால் சந்திக்கும்படி வேண்டினார்.

நான் முதன்முதல் சுவாமியைப் பார்க்க வந்தபோது பல சிறுவர்கள் சுவாமியைச் சுற்றி நின்றுகொண்டு கதை கேட்டுக்கொண்டிருந்தார்கள். சுவாமி அவர்களுக்கு இனிப்பு கொடுத்த வண்ணம் (எப்போதும் சிறுவர்களுக்காக இனிப்பு வைத்திருப்பார்) பேசிக்கொண்டிருந்தார்.

என்னை அவர் நேரடியாக பார்த்தபோதே உள்ளம் சிலிர்த்தது. எழுத்துக்களால் சொல்லமுடியாதளவுக்கு அமைதி அந்த முகத்தில்.

வீரத்துறவி விவேகானந்தர் தான் என்னுடைய மானசீகக் குரு. கோயிலைத் தவிர்த்து மக்களின் விடிவுக்காக போராடிய துறவியைப் பற்றி எந்த புத்தகங்கள் இருந்தாலும் வாங்கிப் படிப்பேன் (இப்போதும் வீட்டில் விவேகானந்தரின் பெரிய படம் இருக்கிறது).

விவேகானந்தரைப் பற்றி சுவாமியிடம் கூறியபோது அவர் இராமகிருஷ்ணரைப் பற்றி தெளிவுபடுத்தி அவர்தான் தமக்குக் கடவுளும் குருவும் எனக் கூறினார். அந்த சந்தர்ப்பங்களை மறக்க முடியாது.

அதன்பிறகு ஏற்பட்ட சந்திப்பு பல வருடங்களாக தொடர்ந்தது. எங்கேயோ ஊர்சுற்றிக்கொண்டு உலகம் இதுதான் என ஒரு வட்டத்துக்குள் இருந்த என்னை இப்படியும் ஒரு உலகம் இருக்கிறது என பார்க்கவைத்தார்.

எப்படி தியானம் செய்வது? எவ்வாறான விடயங்களை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும், மாணவர்களிடம் எவ்வாறு அணுக வேண்டும் என்பதிலிருந்து பலவற்றையும் படிப்படியாக கற்றுக்கொடுத்தார்.

ஏழைகளுக்கு உதவுவதில் அப்படியொரு அக்கறை அவருக்கு உண்டு. எத்தனையோ சிறுவர் இல்லங்களை இலங்கை முழுவதும் நிறுவி அதற்குத் தேவையான சகல உதவிகளையும் செய்திருக்கிறார்.

அவரிடம் எனக்குப் பிடித்த குணங்களில் ஒன்றுதான் சகிப்புத் தன்மை. சுவாமி இன்று வாகனம் எதுவும் இல்லை. பஸ்ஸில் பயணிக்கலாம் என்றால் உடனடியாக சரி எனக்கூறிவிடுவார்.

முகுந்தன் அண்ணாவை (கிருத்தியம் - தங்க முகுந்தன்) மூளாயில் வைத்து சுட்டுவிட்டார்கள். துரதிர்ஷ்டவசமாக அந்தச் செய்தியை பொலிஸாரிடமிருந்து நான் திரட்டுகிறேன். செய்தியை எழுதிவிட்டு மீண்டும் வாசித்துப் பார்த்தபோதுதான் தங்க முகுந்தன் அண்ணாவைத் தானே…. ஏன நினைவுக்கு வந்தது. (சம்பவத்தை கூறியதற்கு முகுந்தன் அண்ணா மன்னிக்க வேண்டும்)

உடனே நான் என்னுடைய உறவினர்களுக்கு அறிவித்துவிட்டு சுவாமிக்கு சொன்னேன்.

நிர்ஷன், இன்று உங்களால் வரமுடியுமா எனக் கேட்டார். அதிக வேலைகள் காரணமாக முடியாது எனச் சொன்னதும் அவர் சொன்ன பதில் இதுதான்.
நான் முகுந்தனுக்காக பிரார்த்தனை செய்யப்போகிறேன். நீங்கள் மனதுக்குள் பிரார்த்தனை செய்யுங்கள் என்றார். அதேபோல் நாம் பிரார்த்தனை செய்தோம்.

இப்படி பல அனுபவங்கள் சுவாமியுடன்…..

அந்த அளவுக்கு உயிர்கள் மீது பற்றுக்கொண்டவர். அவரைப் பற்றி நிறையவே கூறிக்கொண்டு போகலாம்.

ஒருவகையில் சுவாமியைப்போன்ற குரு எனக்கு வாய்த்தமைக்கு இறைவனுக்கு நன்றியுடையவனாய் இருக்கும் அதேவேளை பிரிவுக்கு வித்திட்டதால் கோபமும் கொண்டுள்ளேன்.

சுமார் 13 வருடங்களாக சேவை செய்து மீண்டும் இந்தியாவுக்கு செல்லப்போகிறார் என்பதைக் கேள்விப்பட்டவுடன் உண்மையில் கண்கள் கலங்கியவண்ணம் தான் மிஷனுக்கு சென்றேன்.

இதை எழுதும்போதுகூட நான் உணர்கிறேன்.

அங்கே முதியவர்கள், இளையவர்கள், சிறுவர்கள் என சுவாமியின் கைகளையும் கால்களையும் தொட்டு பலர் அழுதுகொண்டிருந்தார்கள். சுவாமியோ அமைதியாக புன்முறுல் பூத்துக்கொண்டிருந்தார்.

சுவாமி, நீங்கள் இந்தியாவுக்கு போகும்வரை தினமும் நான் உங்களை வந்து பார்ப்பேன் எனக்கூறினேன். அவர் அதனை மறுத்துவிட்டார்.

சுவாமி விவேகானந்தரின் புத்தகம் ஒன்றைத் தந்து ஏராளமான விடயங்களைக் கூறி அப்போதும் சிரிப்போடு தான் என்னை வழியனுப்பி வைத்தார்.

சுவாமி இப்போது இந்தியாவின் விவேகானந்தா ஆச்சிரமத்தில் இருக்கிறார்.

Monday, November 9, 2009

நட்சத்திர நாளில் சந்தோசமான செய்தி!

யாழ்தேவியின் நட்சத்திரப் பதிவராக தெரிவு செய்த அதன் நிர்வாகத்தினருக்கு நன்றிகள். இந்த நட்சத்திர நாளில் சந்தோசமான செய்தியொன்றை உங்களோடு பகிர்கிறேன். உங்களுடைய ஆக்கபூர்வமான கருத்துக்களை பின்னூட்டத்தினூடாக பகிர்ந்துகொள்ளுங்கள்.
................................................................................

பதிவுலக நண்பர்களுக்கு அன்பு வணக்கங்கள்,
வேகமாக இயங்கிக்கொண்டிருக்கும் உலகில் தகவல்களை உடனுக்குடன் வழங்குவதில் இணையத்தளங்கள், வலைத்தளங்கள் பிரதான பங்குவகிக்கின்றன. எழுத்துத் துறையில் சரியான களம் கிடைக்காத காத்திரமான நல்ல படைப்பாளிகள் இன்று தமது படைப்புகளை வலைத்தளங்களினூடாக வெளியிட்டு வருவது மகிழ்ச்சிக்குரியது.

அவ்வாறான எழுத்தாளர்களையும் வளரும் எழுத்தாளர்களையும் ஊக்குவிக்கும் முகமாக பதிவர்களின் ஆக்கங்களை வீரகேசரி இணையத்தளத்தில் பிரசுரிக்க அதன் ஆசிரியபீடம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக வெளிநாடுகளில், உள்நாட்டில் (கிடைக்கப்பெறாத) கலைத்துறை தொடர்பான தகவல்கள், நிகழ்வு விமர்சனங்கள், கட்டுரை ஆக்கங்கள், சினிமா விமர்சனங்கள், சுய படைப்புகள் என குறிப்பிட்ட சில வரையறைகளுக்குள் ஆக்கங்களை நீங்கள் எழுதக்கூடியதாக இருக்கும்.

உலகெங்கிலும் பரந்துவாழும் தமிழ்மக்களை இணையத்தினூடாக இணைப்பதற்கு இதன்மூலம் சந்தர்ப்பம் கிடைப்பதுடன்,ஆக்கங்கள் அனைத்தும் வரைமுறையன்றி அனைவரையும் சென்றடையக்கூடிய வாய்ப்பும் ஏற்படுவதுடன் சர்வதேச விருதுகளை பெற்றுக்கொள்ளவும் வாய்ப்பாக அமையும்.

தமிழுலகோடு கடந்த 79 வருடங்களாக இணைந்திருக்கும் வீரகேசரி, தனது இணையத்தளத்தினூடாக செம்மைத் தகவல்களை வழங்குவதற்காக புதிய திட்டமிடல்களை நடைமுறைப்படுத்தவுள்ளது.

அதன் ஓரங்கமாகவே இந்த முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது.

உங்கள் அனைவரினதும் பதில்களும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கிறோம்.

அன்புடன்
ஆசிரியபீடம்
வீரகேசரி இணையம்
கொழும்பு
இலங்கை.

Saturday, November 7, 2009

அச்சுவலைச் சந்திப்பு 01

வலைப்பதிவுகளில் சூடான வாதங்கள் சில நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது ஒதுங்கி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்து எனது கருத்துகளை சொல்வதை சில மாதங்களாக வழமையாக்கிக்கொண்டிருக்கிறேன். என்னுடைய பதிவுகளுக்கு வரும் அனானிகளின் அம்புத் தொல்லைகள் தான் இதற்குப் பிரதான காரணம்.

தாமதமான பதிவுக்கு மன்னிக்கவேண்டும். வலைப்பக்கம் வரமுடியாதளவுக்கு வேலைகள் அதிகம்.

ம்ம்ம்ம்……
இருக்கிறம் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்த அச்சுவலைச் சந்திப்புக்கு எனது உள்ளம் நிறைந்த நன்றிகள். இதுபற்றி பதிவர்களிடையே பல்வேறு வகையான விமர்சனங்களை காணக்கூடியதாக இருந்தது. என்னதான் இருந்தாலும் ஏதோ ஒருவகையில் எமது ஒன்றுகூடலுக்கு களம் அமைத்துக்கொடுத்து முகம்தெரியாத சகோதரர்களை சந்திக்கச் செய்தமைக்கு இருக்கிறம் நிர்வாகத்தினருக்கு என் அன்பை பகிர்கிறேன்.

எனது கருத்துகளை சொல்லுமுன்னர் அன்றைய சந்திப்பில் நடந்த முழுமையான விபரங்களை முடியுமானளவு சரியாக தர முயற்சிக்கிறேன்.

சந்திப்புஅச்சுவலைச் சந்திப்பானது நவம்பர் மாதம் 2ஆம் திகதி மாலை 3 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்த போதும் தவிர்க்க முடியாத காரணங்களால் மாலை 4.06 மணிக்கு ஆரம்பமானது. இருக்கிறம் சஞ்சிகையின் இணை ஆசிரியர் அருளானந்தம் சஞ்சீத் “மன்னிக்கவேண்டும்” என ஆரம்பித்து தனது அறிமுக உரையினை நிகழ்த்தி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து அங்கு வருகை தந்திருந்த பதிவர்கள் தம்மை அறிமுகம்செய்துகொண்டனர்.

பின்னர் உரையாற்றிய வைத்தியர், பதிவர் எம்.கே. முருகானந்தன்
“வலைப்பதிவுகளை சுதந்திரமான ஊடகங்கள் என்றுகூட குறிப்பிடலாம். ஆனால் முழுமையான சுதந்திரத்துடன் அவற்றை வெளியிட முடியுமா என்பதில் கவனம்கொள்ள வேண்டும்.
உலகம் முழுவதிலுமுள்ள இணையவாசகர்கள் எமது வலைத்தளங்களை பார்வையிடுகிறார்கள். சில கட்டுப்பாடுகளை பேணுவது பல சந்தர்ப்பங்களில் அவசியமாகிறது.
எனக்கு ஆரம்பகாலங்களில் வலைப்பதிவு குறித்த போதிய அறிவு இல்லை. ஏன் இப்போதும் கூட இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
வலைப்பதிவுகளை வாசகரிடத்தில் கொண்டு சேர்ப்பதற்கு திரட்டிகள் பிரதான இடம் வகிக்கின்றன. அவற்றில் தமிழ்மணம், யாழ்தேவி, தமிழ்வெளி போன்ற வலைத்திரட்டிகளை புதிய பதிவர்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும்.

என்னைப்பொறுத்தவரை ஏனைய பொழுதுபோக்கு அமிசங்களைவிட வலைப்பதிவுகளில் எழுதுவது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. ஒரு பதிவை எழுதிவிட்டு என்ன பின்னூட்டம் வருகிறது என அடிக்கடி பார்த்த முதற்கால அனுபவங்களை இப்போதும் மறக்க முடியாது. பின்னூட்டங்கள் தான் எம்மை மேலும் மேலும் எழுதத் தூண்டுகின்றன.

நான் வைத்தியத் துறையை சேர்ந்தவன். எனக்கு தொழில்நுட்ப அறிவு குறைவு. ஆனாலும் என்னுடைய சொந்த அனுபவங்களை, வைத்தியம் குறித்தான தகவல்களை எமது மக்களுக்கு கொடுப்பதில் நான் பெரிதும் மகிழ்வடைகிறேன். என்னிடம் பல்வேறு விதமான நோய்களையுடைய, குறைபாடுகளையுடைய நோயாளிகள் வருகின்றனர். அவர்களின் பெயர் குறிப்பிடாமல் அவர்களின் தவறுகள், பிரதிபலன்கள், வைத்திய முறைகள் ஆகியன பற்றி பதிவிட்டு வருகிறேன்.

இனிவரும் காலங்களிலும் நல்ல காத்திரமான பதிவுகளை வழங்கமுடியும் என எதிர்பார்க்கிறேன். இந்தச் சந்திப்பினூடாக பலரை நான் சந்திக்கக்கூடியதாக இருந்தது. அதனால் மகிழ்ச்சியடைகிறேன். தொடர்ந்தும் நல்ல பதிவுகளை வழங்குமாறு கூறி விடைபெறுகிறேன்.

திருமதி சாந்தி சச்சிதானந்தம் (நிர்வாக ஆசிரியர்- இருக்கிறம்)


இணைய உலகைப் பொறுத்தமட்டில் வலைத்தளங்கள் பிரதான இடத்தை வகிக்கின்றன. உலகம் எங்கிலும் பரந்துவாழும் எமது மக்களிடையே எமது கருத்தினை சுதந்திரமாக கொண்டுசெல்லக்கூடியளவுக்கு வலைத்தளங்கள் இருப்பதையிட்டு நான் மகிழ்வடைகிறேன்.
எனினும் எனக்கு இதில் தனிப்பட்ட ரீதியில் உள்ள கருத்துதான் பெண்களின் பங்களிப்பு என்பது.

இங்கு எத்தனை பெண் வலைப்பதிவாளர்கள் வந்திருக்கிறார்கள்? குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய சிலர் தான் இருக்கிறார்கள். ஆனால் ஆண்களுடன் ஒப்பிடுகையில் இணையத்தளங்களில் பெண்களின் வருகையும், பங்களிப்பும் குறைவாகவே இருக்கிறது. விழுதுகள் - ஆற்றல் மேம்பாட்டு மையத்தினூடாகவும் அகவிழி சஞ்சிகையினூடாகவும் எம்மால் இயன்ற பல்வேறு விழிப்புணர்வூட்டல் நிகழ்வுகளை செய்துவருகிறோம்.

பெண்களும் ஜனநாயக நீரோட்டத்தில் இணையவேண்டும். எத்தனையோ பெண் சாதனையாளர்கள் போல வளரவேண்டும். நல்ல சிந்தனைகள், சமூகம்சார் அனுபவங்கள் போன்றன காத்திரமான ஆக்கங்களை எழுதுவதற்கு வழிவகுக்கின்றன. பெண் எழுத்தாளர்கள் இவற்றை கருத்திற்கொள்ள வேண்டும். இங்கு வருகைதந்துள்ளவர்கள் எல்லோரும் ஏதோ ஒருவகையில் எழுத்தாளர்கள் தான்.
ஆகையால் சரியான கருத்துருவாக்கத்துடன் கூடிய பெண்களின் தனித்துவத்தினை பேணக்கூடிய பெண் எழுத்தாளர்களை வளர்க்க வேண்டியது எமது பொறுப்பாகும்.

இரகுபதி பாலஸ்ரீதரன் வாமலோஷனன் - முகாமையாளர் வெற்றி எப்.எம்
இருக்கிறம் நிர்வாகத்தினர், அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகவியலாளர்களுக்கும் வலைப்பதிவாளர்களுக்கும் இடையில் எற்படுத்திய சந்திப்பு வரவேற்கத்தக்கது. ஊடகங்கள் எனும்பொழுது பல்வேறு சிந்தனை நோக்கு கொண்ட, பல்வேறு வயதெல்லைகொண்ட, வித்தியாசமான நேயர்கள், வாசகர்கள் இருப்பதால் நடுநிலைமையுடன் நடந்துகொள்ளவேண்டிய பொறுப்பு இருக்கிறது. அதுதான் கடமையும்கூட என்று சொல்லலாம்.

ஆனால் வலைப் பதிவுகளைப் பொறுத்தவரை ஊடகம் என்ற நடுநிலைமைக்கு அப்பால் எமது சொந்த கருத்துக்கள் இதுதான் என்பதை சுயமாக சொல்லக்கூடிய நிலை இருக்கிறது.இதனை பலரும் தவறாக நினைப்பதானது அதில் சரியான தெளிவினைக் கொண்டிருப்பதில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இவ்வாறான சந்திப்புகள் நம் மத்தியில் மிக அவசியமாகும். நமது சமூகம், நமது மொழி, நமது கலாசாரம் ஆகியவற்றை எம்மால் முடிந்தளவு காத்திரமாக பேணுவதில் வலைப்பதிவாளர்களுக்கும் பங்குண்டு என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.

என்.வித்தியாதரன் - பிரதம ஆசிரியர் – சுடர் ஒளி, உதயன்

நான் ஆரம்பகாலங்களிலிருந்தே வலைப்பதிவுகளை வாசித்துவருகிறேன். குறிப்பாக நமது நாட்டு பதிவர்கள் எவ்வாறு பதிவிடுகிறார்கள், அவர்கள் ஒருவிடயத்தை எந்த நோக்கில் கையாளுகிறார்கள் என்பதை உற்றுக் கவனித்திருக்கிறேன்.இனிவரும் காலங்களில் எமது பதிவர்களின் நல்ல படைப்புகளை எனது பத்திரிகையிலும் பிரசுரிக்க தீர்மானித்துள்ளேன்.

ஆனாலும் ஒருவிடயத்தை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இதை எனது வேண்டுகோளாகவும் நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். தயவுசெய்து தமிழை கொல்லாதீர்கள். தமிழ்க் கொலையாளி என்ற பட்டத்தை வாங்கிக்கொள்ளாதீர்கள்.

வலைப்பதிவு என்ற பெயரில் பலரும் இன்று அதனை செய்துகொண்டிருக்கிறார்கள்.ஒரு வசனம் எழுதும்போது எங்கே “ஒரு” போட வேண்டும் எங்கே “ஓர்”போட வேண்டும் என்பதை இங்கு எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? அதேபோன்று இரு,ஈர் என்ற பதங்கள் இங்கு எத்தனை பேருக்குத் தெரியும்?

பதற்றம் என்கிறோம். பதட்டம் என்கிறோம். எது சரியானது? பதறு என்ற வினையடியிலிருந்து வருகின்ற சொல்லாதலால் பதற்றம் என்பதே சரி.

சைக்கிளில் வந்த நபர், துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச்சென்றார். என்பதில் உள்ள தவறென்ன?சைக்கிள் என்பதை விடுவோம். அது நாம் ஆரம்பத்திலிருந்தே பயன்படுத்திவரும் சொல். வந்த என்பது அஃறிணையை குறிப்பது.

இன்று இலங்கையிலுள்ள பல பத்திரிகைகள் இவ்வாறான தவறுகளை சுமந்துதான் வெளிவருகின்றன. ஏன் எமது பத்திரிகையிலும் இடம்பெறுவதை ஏற்றுக்கொள்கிறேன். அங்கு நான்தான் பத்திரிகை ஆசிரியர், எழுத்தாளர், செய்தியாளர்,ஒப்புநோக்காளர் என எல்லாம். சில வேளைகளில் பக்கத்தை வடிவமைப்பதும் நான்தான்.

செய்திப் பத்திரிகைகளில் எழுதுவதற்கும், சஞ்சிகைகளில் எழுதுவதற்கும், இணையத்தளங்களில் எழுதுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அதனை நாங்கள் நன்றாக கற்றுக்கொள்ள வேண்டும். தமிழை வளர்க்கிறோம் என்றுகூறி கண்டதையும் எழுதி மொழிக்குற்றம் செய்யாதீர்கள். இதுதான் நம்மை வாழவைத்துக்கொண்டிருக்கும் மொழி.

(வந்தார் பிரபாகரன்! என்று தலைப்பிட்ட கதை, இந்திய ஊடக அனுபவங்கள் குறித்து வித்தியாதரன் பேசிய விடயங்களை தனிப்பதிவாக தருகிறேன்)

(தொடரும்)

Wednesday, October 28, 2009

கம்பவாரிதிக்கு ஒரு மடல்

பேரன்பும் பெருமதிப்புக்கும் உரிய கம்பவாரிதி ஐயாவுக்கு,
வணக்கம்.

ஏகனாகவும் அநேகனாகவும் எங்கும் எதிலும் எல்லாமாகவும் வியாபித்து அண்டங்கள் அனைத்திற்கும் கர்த்தாவான மூலப்பரம்பொருளின் பேரருள் தங்கள் நலனை என்றும் காக்க வேண்டி மடலைத் தொடர்கிறேன்.

இலங்கைத் தமிழர்களிடையே தங்களுடைய பெயரும் புகழும் எவ்வாறு பரவப்பெற்று எந்தளவுக்கு மதிப்புநிறைந்து விளங்குகின்றது என்பதை நான் சொல்லி அறியவேண்டியதில்லை. தமிழ்,சமயம்,சமூகத்துக்கு உங்களுடைய அர்ப்பணிப்புடனான சேவையும் அயராத உழைப்பினூடான பங்களிப்பும் மக்கள் உள்ளத்தில் நம்பிக்கை நாற்றுகளை விதைத்திருக்கின்றன என்றால் மிகையில்லை.

ஐயா,
உங்கள் புகழை தமிழ் உலகம் அறிந்திருக்கும் இவ்வேளையில், நான் இதைக் குறிப்பிட்டது வெறும் வார்த்தைப் புகழ்ச்சிக்காகவல்லாது இணையவாசகர்கள் தங்களைப் பற்றி அறிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே.

நமது நாட்டில் மொழிப்பற்று மதப்பற்று கொண்டவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் சமூக சேவகர்களா அல்லது சமூக ஆர்வலர்களா என்று சிந்தித்தால் எனக்கென்னவோ திருப்திகரமான பதில் கிடைப்பதில்லை.

பெரும்பாலான கல்விமான்கள் மேடைப்பாராட்டுக்காகவும் தற்புகழ்ச்சிக்காவும் மாத்திரமே “சேவை” என்ற பெயரில் ஆங்காங்கே சில நிகழ்ச்சிகளுக்கு தலைமைதாங்கி வருகிறார்கள். ஆனால் தங்களைப் போன்ற குறிப்பிடத்தக்க சிலர் தான் சமுதாயம் இழிவழியில் செல்லக்கூடாது என்பதில் அக்கறை கொண்டுள்ளார்கள். இதற்கு, கடந்த அக்டோபர் 14ஆம் திகதி புதன்கிழமை தினக்குரல் நாளேட்டில் வெளியான “கந்த சஷ்டி விரத ஆரம்பம் 19ஆம் திகதியே” என்ற கட்டுரை ஒரு சமீபத்திய சான்றாகும்.
விரத தின நிர்ணயம் குறித்து ஏற்கனவே நமக்குள் எழுந்த பல்வேறு சிக்கல்களுக்கு ஊடகங்கள் வாயிலாக தாங்கள் அளித்திருந்த பதில்கள் முறையான விளக்கங்களாக அமைந்திருந்தன என்பதில் நிறைவுண்டு.

விரதங்கள் மற்றும் விழாக்கள் குறித்து அவ்வப்போது இவ்வாறான பிரச்சினைகள் எழுவது சாதாரணமாகிவிட்ட நிலையில் கந்த சஷ்டி குறித்த தங்களது ஆக்கம் கல்வியாளர்களிடத்தில் நல்லதொரு புரிந்துணர்வை ஏற்படுத்தியதே தவிர அடிமட்ட மக்களை சென்றடையவில்லை என்பதே என்னுடைய ஆதங்கமாகும். இதுவே இந்த மடலை எழுதுவதற்குக் காரணமாயும் அமைந்தது.

கொழும்பில் இயங்கும் பல தலங்களை அடியொட்டியே ஏனைய பல பிரதேச ஆலயங்களில் விழாக்கள் நிர்ணயமாவதை பல சந்தர்ப்பங்களில் நோக்கியிருக்கிறேன். அப்படியிருக்கையில் முறையான விரதநெறியை தலைநகர ஆலயங்களில் பின்பற்றப்படுவது மிகஅவசியமாகும்.

கந்த சஷ்டியானது பிரதமையில் ஆரம்பிப்பதே மரபு. அதற்கமைவாக அக்டோபர் 19ஆம் திகதியே கந்த சஷ்டியின் ஆரம்ப தினமாகும் என்பதை சகல ஆதாரங்களோடும் குறிப்பிட்டிருந்தீர்கள். அதனை எல்லா ஆலய நிர்வாகங்களும் பின்பற்றவில்லை. பல ஆலயங்களில் 18ஆம் திகதியே பின்பற்றப்பட்டன.

ஆயினும்,
கந்த சஷ்டி விரதாரம்பம் 19ஆம் திகதி என்பதை தாங்கள் 14ஆம் திகதிதான் குறிப்பிட்டிருந்தீர்கள். அவ்வேளையில் பெரும்பாலான ஆலயங்களில் திகதி நிர்ணயிக்கப்பட்டு விளம்பரப்படுத்தலும் நடாத்தியாயிற்று. சில ஆலயங்களில் உண்மை நிலை தெரியவந்தபோதும் தமது ஏற்பாடுகள் காரணமாக சரியான முறையினை பின்பற்ற முடியவில்லை. இதற்கு தாமதமான விளக்கமே காரணமாகும்.

இது இவ்வாறிருக்க,
நாட்டில், இந்துகலாசார அலுவல்கள் திணைக்களம், அகில இலங்கை இந்துமாமன்றம் உட்பட பல்வேறு ஆலய அமைப்புகள் மற்றும் பலம்மிக்க கழகங்கள் மன்றங்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. இவர்கள் யாருமே இதுகுறித்து அக்கறை கொள்ளாதபோது தாங்கள் முன்வந்து விளக்கமளித்ததை, பாராட்டுவதற்கு தகுதியற்றவனாய் அதனை அன்போடு வரவேற்கிறேன்.

ஆக,
இவ்வாறான விளக்கங்கள் காலதாமதமின்றி வெளியிடப்படுதல் அவசியமாகும். இந்து சமயம் சுதந்திரமான சமயம் என்பதால் எப்படியும் இருந்துவிடலாம் என்றில்லை. அதற்கென ஆகம,வேத முறைகள் உண்டு என்பதை சரியான நேரத்தில் விளக்கமளிப்போமானால் தவறான நடத்தைகளை தவிர்க்கக் கூடியதாக இருக்கும்.

தங்களைப்போன்றவர்கள் வெளியுலகுக்கு உண்மையை உரைக்கும்போது மக்கள் அதனை ஏற்றுக்கொள்கிறார்கள். இனியொரு நிலைமை இவ்வாறு தோன்றும்பட்சத்தில் அனைத்து மக்களுக்கும் சென்றடையும் விதத்தில் முன்கூட்டியே அறிவிப்பது தேவையாகும். அத்துடன் நாட்டில் இயங்கும் அனைத்து இந்து மன்றங்கள் கலகாங்களினு}டாக விழிப்புணர்வை ஏற்படுத்தினால் அனைவரையும் சென்றடையும் விதத்திலும் அமையும்.

அடியேனின் கருத்துக்களை தாங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்ற எண்ணத்துடனும் பலருக்கு குருவாய் இருக்கும் உங்களிடம் சாதாரண குடிமகான் என்ற நேசத்திலும் உரிமையோடு இந்த வேண்டுகோளை முன்வைக்கிறேன்.

பத்து சமயக் கட்டுரைகள் பத்திரிகைகளுக்கு எழுதி பொதுமண்டபத்தில் பொன்னாடை போர்த்திக்கொள்ளும் பலருக்கு நமது சமூகம், நமது சமுதாயத்தின் எதிர்காலம் குறித்து அக்கறையே இல்லை. இவ்வாறிருக்கும்போது தங்களைப்போன்ற முன்னோடிகளின் காத்திரமான முன்னுதாரண விளக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

மேற்சொன்னது போல உரிமையோடு சொல்கிறேன். இது தங்களுக்கான இந்தச் சிறியேனின் தனிப்பட்ட மடல் தான். தனிப்பட்ட கழகங்களை நான் இங்கு குறிப்பிடவில்லை. விழா என்ற பெயரில் வேற்று நாட்டு அறிஞர்களுக்கு பணத்தை வாரியிறைத்து பேருக்காவும் புகழுக்காகவும் மட்டும் நிகழ்ச்சி நடாத்துபவர்களுக்கு இதைச் சொல்லுங்கள்.

குறிப்பிட்ட ஒருசாரார் நல்ல பண பலத்துடனும் கல்வித்தகுதியுடனும் இருந்துகொண்டிருக்கிறார்கள். பாமரர்களுக்கு யார் உதவுவார்கள்? என்று கேளுங்கள்.

இந்து என்ற பெயரில் எங்கோ ஒரு மூலையில் பல குடும்பங்கள் அடிப்படையே தெரியாமல் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. வாழ்காலத்தில் அவர்களுக்கு நாம் என்ன செய்தோம் என்பதை மனச்சாட்சியோடு கேட்கச் சொல்லுங்கள்.

எல்லாவற்றையும் விட ஏழைகளுக்காக உழைப்பதே மேல் என்பதை எடுத்துச்சொல்லுங்கள்.

அவ்வாறில்லையெனின்,
யாரையும் நம்பியிருக்கத் தேவையில்லை. சமூக அக்கறைமிக்கவர்களோடு வாருங்கள். வீதிக்கு இறங்குவோம். இதுதான் உண்மை என்பதை தக்க தருணத்தில் உரைப்போம்.

இந்த மடலினை எனது வலைத்தளத்தில் பிரசுரித்தமைக்கு மன்னிக்க வேண்டுகிறேன்.

உள்ளம் நிறைந்த நன்றிகள்.

இவ்வண்ணம்,
இறைதிருநாமங்களோடு
பணிவன்புடன்,

இராமானுஜம் நிர்ஷன்

Thursday, October 22, 2009

இலங்கை ஊடகங்களில் செய்தித் தவறுகள்…!?


வந்தியின் அடுத்த முதல்வன் யார்? என்ற பதிவே இந்தப் பதிவையும் எழுதக் காரணமானது.நமது தொலைக்காட்சிகளில் பயனுள்ள நிகழ்ச்சிகளைத் தவிர ஏனைய நிகழ்ச்சிகளை பார்ப்பதை நான் தவிர்த்துவருகிறேன். அதனால் நிகழ்ச்சிகளைப் பற்றி அவ்வளவாக குறிப்பிடத் தெரியாது.

ஆனாலும் சாமானியன் என்ற வகையிலும் நாட்டு நடப்புகளை அறிந்துகொள்ளவேண்டிய குடிமகன் என்ற ரீதியிலும் செய்திகளை பார்ப்பதும் கேட்பதும் உண்டு।

செய்தி எழுதுவதும் தொகுப்பதும் தனியொரு கலை. படித்தவருக்கும் பாமரருக்கும் விளங்கும் வகையிலும் பிழைகளைத் தவிர்த்தும் கருத்துப் பிசகாமலும் எழுத வேண்டும். அதனால் தான் செய்தியாசிரியர்களுக்கும் தொகுப்பாசிரியர்களுக்கும் (இருவருக்கும் வித்தியாசம் உண்டு) அதிக மதிப்பு இருக்கிறது.

செய்திகளில் அடிக்கடி இடம்பெற்ற சில தவறுகளை நான் குறிப்பெடுத்துக்கொள்வேன். ஏனென்றால் அடுத்தமுறை நான் அந்தப் பிழையை விடக்கூடாது என்பதற்காக.

நான் குறிப்பெடுத்துக்கொண்டதில் சிலவற்றை மட்டும் (பெயர், இடங்களை மாத்திரம் மாற்றி) இங்கு தருகிறேன்.
நான் தமிழ்ப்புலமை பெற்றவன் அல்ல. எனக்குப் பட்டவற்றை சொல்கிறேன்.

பிழையிருப்பின் அடியேனையும் மன்னித்தருள்க.


*நேற்றுமாலை புறக்கோட்டையில் இடம்பெற்ற விபத்தொன்றில் முன்னாள் கொழும்பு மாநகரசபையின் உறுப்பினர் பெயரிலி படுகாயமடைந்தார்.

அநேகமான இலங்கை ஊடகங்களில் இந்தத் தவறு இடம்பெறுவதை கவனிக்கக் கூடியதாக உள்ளது.

சம்பவங்களைக் குறிப்பிடும்போது இடத்திற்குப் பிறகுதான் காலத்தைச் சொல்ல வேண்டும். அது தவிர கொழும்பு மாநகரசபையை முன்னாள், இந்நாள் என இருவேறாக குறிப்பிட முடியாது. அது எப்போதும் அப்படியே தான் இருக்கிறது. இங்கு உறுப்பினரின் பதவிக்காலம் தான் குறிப்பிடுபொருள்.

சரியாயின்,
புறக்கோட்டையில் நேற்றுமாலை இடம்பெற்ற விபத்தொன்றில் கொழும்பு மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் பெயரிலி படுகாயமடைந்தார்.

(சிலருக்கு முன்னாள் என்பதற்கும் முன்னால் என்பதற்கும் வித்தியாசம் தெரியாமலிருப்பது கவலைக்குரியது).

*விபத்தில் உயிரிழந்தோருக்கு நஷ்ட ஈடு வழங்குவதாக அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

உயிரிழந்தவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க முடியாது என்பதை எழுதுபவர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

*நீர்கொழும்பு கடற்கரைப்பகுதி நீர்நிலைகளில் கிருமிநாசினிகள் கலந்துள்ளமையால் மீன்கள் அதிகமாக உயிரிழந்து கரையொதுங்குவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் உயிரிழந்த மீன்களை விற்பனை செய்ய அப்பகுதியில் தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.

உயிரிழப்பதில் அதிகமாக குறைவாக என்று சொல்ல முடியாது. இங்கு மீன்களின் எண்ணிக்கையை சுட்ட பயன்படும் அதிகமாக என்ற சொல் தவறான இடத்தில் குறிக்கப்பட்டுள்ளது. சரியாயின் அதிகமான மீன்கள் உயிரிழந்து கரையொதுங்குவதாக…. என தொடர வேண்டும்.

அத்துடன்,
உயிரிழந்த மீன்கள் தான் அனைத்து இடங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதற்கு யாரும் தடைவிதிக்க முடியாது. ஆதலால் செய்தி இவ்வாறு தொகுக்கப்பட வேண்டும்.

நீர்கொழும்பு கடற்கரைப்பகுதி நீர்நிலைகளில் கிருமிநாசினிகள் கலந்துள்ளமையால் அதிகமான மீன்கள் உயிரிழந்து கரையொதுங்குவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அப்பகுதியில் கிருமிநாசினி காரணமாக உயிரிழந்த மீன்களை விற்பனை செய்ய தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.

*மட்டக்களப்பு நகரில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். குறித்த நபர் மேலும் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எந்தவொரு வாக்கியத்தையும் குறித்த என்ற பதத்துடன் ஆரம்பிப்பது தவறாகும். குறித்த என்ற பதத்துக்கு பதிலாக அந்த என்ற பதத்தை உபயோகிக்கலாம்.

அல்லது,
மட்டக்களப்பு நகரில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் குறித்த நபர் மேலும் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
(வசனத்தின் நீளம் வாசகர்/நேயர்களை சங்கடத்துக்குள்ளாக்கும் என்பதால் சுருக்குதல் சிறந்தது)

*வெலிகமவில் இன்று காலை தனியார் பயணிகள் பஸ் ஒன்றுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நான்கு வயது குழந்தையொன்று வீதியில் நடந்து கொண்டிருந்த சமயம் விபத்துக்குள்ளான சம்பவத்தை அடுத்தே இந்தத் தீ வைப்பு இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
அவ்வாறு குழந்தைமீது மோதிய பஸ் தீ வைக்கப்பட்டுள்ளது.

இங்கு இறுதி வசனம் தேவையற்ற ஒன்று என்பது நான் சொல்லித்தான் புரியவேண்டும் என்றில்லை.

*……………. செவ்வாய்க்கிழமை கொழும்பில் உள்ள அமைச்சு அலுவலகத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இச்சந்திப்பின் போது இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களின் சுகாதார நிலைமைகள் மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின்போது இடம்பெயர்ந்து என்பதில் உள்ள மயக்கத்தை கவனிக்க வேண்டும். சந்திப்பின்போது யாரும் இடம்பெயரவில்லை.
சரியாயின்,
……இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களின் சுகாதார நிலைமைகள் மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பில் இச்சந்திப்பின்போது விரிவாக ஆராயப்பட்டது.

*எதிர்வரும் பருவப் பெயர்ச்சி மழைக் காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் இடம்பெயர்ந்தோரை வேறு இடங்களில் பாதுகாப்பாக தங்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

தங்கவைக்க வேண்டுமென… என்பதே சரியானதாகும்.

*இடம்பெயர் மக்களை வேறு இடங்களில் தங்க வைக்கும் செயன்முறையின் போது மக்களின் சுதந்திரமான நடமாட்டத்தினயும் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களிற்கான பொறுப்பாளர் ஜோன் ஹோல்ம்ஸ் தெரிவித்துள்ளார்.

இடம்பெயர் என்ற சொல் நிகழ்காலத்தை குறிப்பிடும் தொக்கிநிற்கும் சொல்லாக இருக்கிறது. இதன் அர்த்தம் தற்போது இடம்பெயர்ந்து கொண்டிருக்கும் மக்களை …. எனக்கொள்ளலாம்.

இடம்பெயர்ந்துள்ள மக்களை..... என ஆரம்பிப்பதே சிறந்தது.

*புத்தளம் நிவ்செட்ல்மென்ட் வீதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவமொன்றில் ஒருவர் வாள்வெட்டு காயங்களுக்குள்ளான நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாள்வெட்டு சம்பவம் என்றால் வாள்வெட்டுக் காயம் தான். ஏற்கனவே வாள்வெட்டு என்ற சொல் உபயோகித்துள்ள படியால் வெட்டுக்காயங்களுக்குள்ளான நிலையில்…. என தொடர்தல் பொருத்தமானதாகும்.

----------------------------------------------------------------------------------------------
இந்தப் பதிவு எந்தவொரு ஊடகத்தையும் தாக்கும் எண்ணத்தில் எழுதப்பட்டதல்ல. ஊடகங்களைப் பொறுத்தவரையில் சில சில தவறுகள் இடம்பெறுவதை ஏற்றுக்ககொள்ள வேண்டும். ஆயினும் அது தொடர்கதையாயின் ஏற்றுக்கொள்ள முடியாது. நேரமிருப்பின் முழுமையான விபரப் பதிவினைத் தர முயற்சிக்கிறேன்.

Tuesday, September 29, 2009

நான் படித்துக்கொண்டிருக்கிறேன்..!


நான் படித்துக்கொண்டிருக்கிறேன்…

ஊருக்கே ஒன்றென
ஒப்பாரி வைக்கும்
ரேடியோ

கையில் சிகரட்டோடும்
கசிப்பு போத்தலோடும்
வாசலில் அப்பா

எதிர்த்துப்பேச நாவில்லாமல்
வெற்றிலை தின்று
இடைவிடாமல்
காறித்துப்பும் அம்மா

பகல்முழுதும் கூத்தடித்து
பாதிப்போதையோடு
கதவைத் தட்டும் அண்ணா

உதவி ஒத்தாசையென்றுகூறி
ஓரமாய் ஒளிந்திருந்து
மாரை வெறித்துப்பார்க்கும் மாமா

இத்தனைக்கும் மத்தியில்…

நான் படித்துக்கொண்டிருக்கிறேன்…

மடியில் உட்காரச்சொல்லி
மல்லுக்கட்டும்
வாத்தியாரின் பாடங்களை!

-இராமானுஜம் நிர்ஷன்

Thursday, September 24, 2009

வன்னி மக்களுக்கு உதவுகிறார் அம்மாபகவான்

யுத்தம் எனும் கொடூர அரக்கனிடமும் கடத்தல் என்ற பிசாசிடமும் ஆகக்குறைந்தது தமது குடும்பத்தில் ஒருவரையேனும் இழந்துவிட்ட நம் மக்களின் துயரை அம்மாபகவான் முற்றாக நீக்கப்போகிறார்.

இதுபற்றி அவரது சீடர்களுக்கு கனவில் காட்சியளித்து கூறியிருக்கிறார்.

இந்த செய்தியுடன் கொழும்பிலிருந்து வன்னி,திருகோணமலை ஆகிய பகுதிகளுக்குச் செல்ல கொழும்புச் சீடர்கள் தயாராகிவிட்டார்கள். அதற்கான கூட்டம் அண்மையில் நடைபெற்றிருப்பது எனக்கு நேற்று தான் தெரியவந்தது.

நம்ம பாஷையில கதய சொல்றேன் -

அம்மா பகவான் சீடர்கள்னு சொல்லிக்கிட்டு இங்க பலபேர் சுத்துறாங்க. தீட்சை கொடுக்கிறதா சொல்லி பள்ளிப் பசங்களையும் வீணாக்கிய நெறய பேரோட கள்ளத்தனம் வெளிய கசிய தொடங்கிருக்கு.

இப்படி சீன் நடந்துக்கிட்டு இருக்கிற நேரம்,

கொழும்புல உள்ள தனவந்தரோட கனவுல (அவர் அம்மா பகவானின் சீடராம்) அம்மாபகவான் வந்திருக்காரு. அதுவும் காலையில 4 மணிக்காம்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமயம் பார்த்து உதவ இருப்பதாவும் தன்ன ஆழமா மனசுல நினைச்சு வழிபடுறவங்கள சீக்கிரம் சொந்த இடத்துக்கு அனுப்பி பணக்கார வாழ்க்கை வாழவைப்பதாவும் அம்மாபகவான் சொல்லியிருக்காரு.
அதுமட்டுமா, அந்த தனவந்தரோட தலைமையில சீடர் குழுவ நியமிச்சு தான் சொன்ன செய்திய மக்கள் காதுக்கு எட்டச் செய்யனும் னு வேற சொல்லியிருக்காரு.

மறுநாள் காலையில எழுந்ததும் தன்னோட சகவாசி(யர்)களுக்கு விசயத்த சொன்ன உடன எல்லாரும் ஆனந்தக் கண்ணீர் வடிச்சாங்களாம். பகவானோட உத்தரவு னு சொல்லித்தான் கூட்டம் நடந்திருக்கு.

காலம் போற போக்கப் பாருங்க….

சரி,
இதுவரைக்கும் வராத அம்மாபகவான் இப்போ எப்படி வந்தாரு?
பசி பட்டினியோட வாடும்போது இவர் எங்கே போனாரு?

ஆகட்டும்.
பிந்திக்கிடைச்ச செய்தியின் படி,
பாதிக்கப்பட்டவங்கள பார்க்கப்போற உறவினர்களோட சேர்ந்து இந்த சீடர்கள் போய் குருவின் உத்தரவை செயலில் காட்டப்போறாங்களாம்।

(இதுக்குப் பொருத்தமான பாட்டு ஒன்னு நினைவுக்கு வருது)

மிச்சம் சொச்சம் காதுக்கு எட்டியவுடன் சொல்றேன்.

Tuesday, September 22, 2009

“தாம் நினைத்ததைப்போல நாடகமாடுவதற்கு மக்களின் வாழ்க்கை திறந்த மேடையல்ல”

மலையக மக்களின் வாழ்க்கைப் பயணம் ஆரம்பம் முதலே போராட்டமாகத்தான் இருந்துவருகிறது. மலைகளில் கொழுந்துக்கூடையும் மண்வெட்டியும் சுமக்கும் இவர்கள் மனிதில் அதற்கும் மேலான சுமைகளைத் தாங்கியவர்களாகவே வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்களின் வாழ்க்கை ஜீவனத்தையும் நாளாந்த நடைமுறையினையும் ஒரு மூன்றாவது மனிதனின் பார்வையிலன்றி அவர்களுக்குள் ஒருவராக இருந்து பார்த்தலின் பிரதிபலன் நிச்சயம் கண்ணீராகத்தான் இருக்க முடியும். ஏனென்றால் அந்தளவுக்கு வலிகள் நிறைந்த வாழ்க்கை அவர்களுடையது.

“தங்க இடமும் தங்கக் காசும் இலவசமாம், தேயிலைக்கடியில் மாசியும் தேங்காயும் கிடைக்குமாம்” என நம்பிவந்து ஏமாற்றப்பட்டவர்கள் என நாட்டார் பாடல்கள் உட்பட இன்னும் கேளிக்கையாகக் கூறுவதுண்டு. அப்படியென்றால் இவர்களின் ஆரம்பமே ஏமாற்றம் என்பது தெளிவாகிறது. இதன் தொடக்கமோ தெரியவில்லை அவர்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக யாரோ ஒருவரால் காலம் காலமாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.

வறுமை என்னும் தீயின் அணல் மக்களை வாட்டி வதைத்துக்கொண்டிருக்க அரசியல் இலாபம் தேடும் சில தொழிற்சங்கங்களும் அரசியல்தலைவர்களும் மாற்றுப்புறத்தில் குளிர்காய்ந்துகொண்டிருக்கிறார்கள்.

எந்தவொரு தொழிற்சங்கமாயினும் சரி அரசியல்கட்சியாயினும் சரி மக்களின் நன்மைகருதி ஆரம்பிக்கப்பட்டதென்றால், அது இறுதிவரை நிறைவேற்றப்பட வேண்டும். தாமே ஒட்டுமொத்த மலையக மக்களின் பிரதிநிதிகள், சேவைக்கு முன்னுதாரணமானவர்கள் எனச் சொல்லிக்கொள்பவர்கள் தமது வாழ்நாள் காலத்தில் பேச்சில்போன்று செயலிலும் தீரத்தை காட்டுவார்களாயின் வரலாற்றில் அவர்களுடைய பெயர் நிச்சயமாக எழுதப்படும்.

ஆனால் அதற்கு மாறான சம்பவங்களே இங்கு நடைபெற்று வருகின்றன. அப்பாவி தமிழர்களின் வாழ்க்கையை திறந்த மேடையாக்கிக்கொள்ள முனையும் பலர் அதில் நாடகமாடி வெளித்தோற்றத்தில் சிறந்தவர்கள் என காட்ட முற்படுகிறார்கள். மலையகத்தில் இயங்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆயினும் மலையக மக்கள் முன்னணி உள்ளிட்ட ஏனைய தொழிற்சங்கங்களாயினும் அவற்றுக்கென்று தனிக்கொள்கை, தனிச்செயற்பாடு, தனிநோக்கங்கள் உண்டு. அந்த நோக்கங்களை அவை எந்தளவுக்கு அடைந்துள்ளன என்பதை சுயமதிப்பீடு செய்தல் அவசியமாகும்.

குறிப்பாக மலையக தொழிலாளர்களின் சம்பள விவகாரத்துக்கு பிற்போக்குடைய கொள்கைகள் பின்பற்றப்பட்டமைக்கான காரணத்தை பொறுப்புக்கூறவேண்டிய அனைத்து தொழிற்சங்கங்களும் பதிலளிக்க முன்வரவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

ஐந்நு}று ரூபா சம்பள உயர்வை பெற்றுத்தருவோம். எந்தவொரு தொழிற்சங்கமும் எமது நோக்கத்துக்கு தடையாக இருக்கக்கூடாது என ஆரம்பத்தில் கூறிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அமைச்சர்கள் தொழிலாளர்களுக்கு கூறும் பதில் என்ன? பொது நலனுக்காக அரசியலில் ஈடுபடுவதாக கூறும் அனைத்து தமிழ் அரசியல்தலைவர்களும் மக்களின் நலனுக்காக இணைந்து குரல்கொடுக்காமைக்கு காரணம் என்ன?

பாதைசெப்பனிடுவதும்,கூரைத் தகடுகள் கொடுப்பதும் மட்டுமே மலையக அபிவிருத்தியும் மக்களுக்கான சேவையும் என்ற பிரதான எண்ணத்தினை அரசியல்தலைவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையை தீர்த்துவைப்பதன் மூலம் மலையகத்தில் பலகாலமாக இருந்துவரும் நிரந்தரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம்.

மலையகத்தில் கல்வியில் பாரியதொரு மாற்றத்தை ஏற்படுத்தவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு. சிறுபராயத்தில் குழந்தைகளுக்கு போஷாக்கான உணவு கிடைக்காததனால் அவர்களின் கல்வி வளர்ச்சியும் குன்றுகிறது. தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் வழங்கப்படுமானால் இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடலாமல்லவா?

அதேபோன்று “சிறுவர் தொழிலாளர்கள்” என்ற கொடுமை மலையகமெங்கும் பாரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இதற்குப் பெற்றோர் விழிப்புணர்ச்சி கொள்ளாதது முக்கியமான காரணம் எனினும் வறுமையே து}ண்டுகோலாக அமைகிறது. இங்கு சம்பள அதிகரிப்பின் தேவை உள்ளதை நம் தலைவர்கள் உணர்வார்களா?

வேதனையோடு தொடரும் மக்களின் வாழ்க்கையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் அரசியல்தலைவர்கள் வரலாற்றுக்கு கட்டாயம் பதில்சொல்லியாக வேண்டும். அல்லது கறைபடிந்த மக்களின் வாழ்க்கையில் ஒரு கறுப்புப் புள்ளியாக அவர்களின் பெயர் என்றும் அவமானத்தை குறித்துக்காட்டிக்கொண்டிருக்கும்.

அரசியல், தொழிற்சங்க பேதங்கள் தேவையில்லை, யார் பெரியவர் என்ற நிலையும் அவசியமில்லை, மக்களுக்காக ஒன்றிணைந்தால் நிச்சயமாக சாதிக்க முடியும். அது எமது மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வாக அமைவதுடன் ஆரோக்கியமான, காத்திரமான எதிர்காலத்துக்கு நல்ல அடித்தளமாகவும் அமையும்.

மக்களால் மக்களுக்காக தெரிவுசெய்யப்பட்ட தலைவர்கள் இதுபற்றி சிந்திக்க வேண்டும். வலிமை மிக்க மனித உணர்வுகளை சுயலாபத்துக்காக கிள்ளிக் கொலைசெய்யாது அரசியலின் உண்மையான சேவையை வழங்க முன்வருதலே காலத்தின் தேவையாகும்.


அமைச்சர் ஆறுமுகனுக்கு:

* உங்களால் 500ரூபா சம்பளம் பெற்றுத்தரமுடியாது என்று ஆரம்பத்திலிருந்து நீங்கள் அறிந்துகொண்டீர்கள். ஆனாலும் மக்களை ஏமாற்றுவதற்காக ஏன் போலி வாக்குறுதிகளை கொடுத்தீர்கள்?

* வேறு தொழிற்சங்கங்கள் தலையிடாமல் இருந்தால் நிச்சயமாக 500ரூபா சம்பளம் பெற்றுக்கொடுக்க முடியும் என்று உறுதிபடச்சொன்ன நீங்கள் இப்போது சாதாரண தொழிலாளியின் முகத்தை எந்த மனச்சாட்சி கொண்டு பார்க்கப்போகிறீர்கள்?

* தலைமைத்துவம் என்பதை உங்களுடைய மக்களுக்கு சரியாகச் செய்தீர்கள் என்பதில் நு}று வீதம் உடன்பாடு உங்களுக்கு உண்டா?

அமைச்சர் முத்துசிவலிங்கத்துக்கு:
*“உன்னை வெள்ளைவேனில் து}க்குவேன்। நாய்களை வைக்கவேண்டிய இடத்தில் தான் வைக்கவேண்டும்” என்று பாரவத்தை தோட்டத்தில் பகிரங்கமாக ஒரு தொழிலாளரைப் பார்த்துக் கேட்ட உங்களையும் மக்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்களே என்பதை நினைக்கும்போது வெட்கப்படுகிறேன்।

* ரூபா 285 என்பது நியாயமான சம்பள உயர்வுதான் என நாகூசாமல் சொல்லும் நீங்கள், உண்மையில் அந்த மக்களோடு வாழ்ந்திருக்கிறீர்களா என்பதில் சந்தேகம் எழுகிறது?

ஊவா மாகாணசபை உறுப்பினர் வேலாயுதத்துக்கு:
*ரூபா। 285 என்பது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன் தனிப்பட்ட முடிவாகும். ஆதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 500 ரூபா பெற்றுக்கொடுக்க தொடர்ந்து பேச்சுநடத்துவோம் என்று வெளிப்படையாக ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்துவிட்டு மறுபுறம் கபடநாடகம் ஆடிய உங்களுக்கும் சாதாரண துரோகிகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

* முதலாளிமார் இணைந்து உங்கள் அனைவருக்கும் கொடுத்த மதுபானத்தில் மனச்சாட்சி கரைந்துபோய் சுயநினைவற்றுதான் மறுபக்கம் சாய்ந்தீர்கள் என வெளியில் பேசிக்கொள்ளவதை உங்கள் மௌனம் ஏற்றுக்கொள்கிறதா?

* அடுத்த தேர்தலிலும் சம்பள உயர்வை கருப்பொருளாக வைத்து போட்டியிட எண்ணம் கொண்டிருப்பதால் தான் இந்தத் துரோகத்தை மக்களுக்கு செய்தீர்களா?

வேதனையோடு தொடரும் மக்களின் வாழ்க்கையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் அரசியல்தலைவர்கள் வரலாற்றுக்கு கட்டாயம் பதில்சொல்லியாக வேண்டும். அல்லது கறைபடிந்த மக்களின் வாழ்க்கையில் ஒரு கறுப்புப் புள்ளியாக அவர்களின் பெயர் என்றும் அவமானத்தை குறித்துக்காட்டிக்கொண்டிருக்கும்.

-இராமானுஜம் நிர்ஷன்

Sunday, May 3, 2009

"எமது பிணத்தின் மீது தேரினை செலுத்துங்கள்" - இன வெறியர்கள்

இறக்குவானை மகோற்சவம் நிறுத்தப்பட்ட சம்பவம்
பேரினவாதிகளால் தொடரும் அச்சுறுத்தல்


வடக்கு கிழக்கில் அல்லது கொழும்பில் பாரிய தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்தில் ஒரு தமிழராவது தாக்கப்படுவது வழமையாகிவிட்டது. பெரும்பான்மை விஷமிகளின் துவேச எண்ணங்களும் தமக்கு அடிமையாய் தமிழர்கள் இருக்கவேண்டும் என்ற விடாப்பிடியான நிலைப்பாடும் அவர்களை விட்டகல்வதாய் தெரியவில்லை.

தொடரும் பெரும்பான்மையின அச்சுறுத்தல்களின் மற்றுமொரு அவலம் இறக்குவானையில் நடைபெற்றுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலிலே மிகப் பிரசித்தி பெற்ற இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகோற்சவம் சிங்கள இனவாதிகளால் தடுக்கப்பட்டமை தமிழ்பேசும் மக்களிடையே கவலையையும் வெறுப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ஒவ்வொரு வருடமும் குறித்த அதே திகதியில் மகோற்சவம் மிகச்சிறப்பாக நடைபெறுவது வழமை. இறக்குவானை நகரைப் பொருத்தவரையில் தேர் பவனி மற்றும் ஆலய உற்சவங்களில் பெருந்திரளானோர் கலந்துகொள்வர். இந்நிலை தொடருமானால் சிங்களவர்களின் ஆதிக்கத்துக்கு பிரச்சினை ஏற்படும் என எண்ணி கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ச்சியாக ஆலயத்துக்கும் ஆலய நிர்வாக்தினருக்கும் சிக்கல்களை ஏற்படுத்தத் தொடங்கினர்.

கடந்த வருட மகோற்சவப் பெருவிழாவின்போது ஒலிபெருக்கிகளை உபயோகித்தால் அவற்றை உடைத்தெறிவோம் என அச்சுறுத்தியதால் ஆலய நிர்வாக வேண்டுகோளின்பேரில் அவை உபயோகிக்கப்படவில்லை. ஆயினும் வீதியெங்கும் கட்டப்பட்ட வாழைமரங்களும் தோரணங்களும் பெரும்பான்மையினத்தவரால் அழிக்கப்பட்டன.

இவ்வருடம் ஏப்ரல் 28 ஆம் திகதி கொடியேற்ற நிகழ்வுடன் ஆலய மகோற்சவம் ஆரம்பிக்கப்படவிருந்தது. எனினும் கடந்த 26ஆம் திகதி ஆலய முன்றலில் கூடிய பெருந்திரளான சிங்களவர்கள் ஆலயத்தை உடைக்கப்போவதாகவும் தமிழர்கள் அனைவரையும் விரட்டியடிக்கப்போவதாகவும் கோஷம் எழுப்பினர்.

“திருவிழாவை நடாத்த புலிகள் பணம் கொடுக்கிறார்கள். இது எங்களுக்கு சொந்தமான நாடு. நாம் சொல்வதைத்தான் கேட்க வேண்டும்” என அதிகாரத் தோரணையில் சத்தமிட்டவர்களின் கண்களில் இனவெறி தெரிந்தது.

பின்னர் பொலிஸார் சமாதானப்படுத்தினர். தேர்த்திருவிழா நடைபெறும் தினத்தில் பூரண பொலிஸ் பாதுகாப்பு வழங்குவதாக உறுதியளித்தனர். எனினும் பொலிஸார் இருக்கும்போதே தமிழர்கள் இருவர் தாக்கப்பட்டதாக இறக்குவானை மக்கள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், “உங்களுடைய ஆலயத்திலிருந்து தேர் புறப்படுமானால் அது எமது பிணங்களின் மீதுதான் செல்லும். முடியுமானளவு தமிழர்களை கொன்றுவிட்டுத்தான் நாமும் சாவோம்” என அதன் பின்னர் ஆண்கள் பெண்கள் என நு}ற்றுக்கணக்கானோர் மீண்டும் ஆலயத்திற்கருகில் கூடினர். ஆலய தலைவரையும் பொருளாளரையும் தாக்கவேண்டும் என இரண்டு குழுக்கள் அங்கிருந்து பிரிந்து சென்றனர்.

இந்நிலையில் அவசரமாக கூடிய ஆலய நிர்வாகம் மகோற்சவத்தை நிறுத்துவதென முடிவு செய்தது. சுமார் 40 ஆயிரம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மாபெரும் பெயர்த் பதாகை இளைஞர்களால் அகற்றப்படும்போது அனைத்து தமிழர்களின் கண்களிலும் நீர் நிரம்பியது. பெரும்பான்மையினத்தவர்கள் தமது நோக்கம் நிறைவேறியதாய் குது}கலித்தனர்.

இறக்குவானையில் தமிழ்,கிறிஸ்தவ, முஸ்லிம் இளைஞர்களுக்கிடையே புரிந்துணர்வும் ஒற்றுமையும் இருக்கிறது. மகோற்சப் பெருவிழாவின் போது ஏனைய மத இளைஞர்களே பெரும்பாலும் வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். சிங்கள மக்களின் ஆவேசத்திற்கு இதுவும் காரணமாக இருக்கலாம்.

கொழும்பில் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறும் வேளையில் இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள தோட்டத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். பம்பேகம, நிவித்திகல, பொத்துப்பிட்டிய, எந்தானை, கலவானை ஆகிய தோட்டங்களிலுள்ள மக்கள் இந்த அச்சுறுத்தல்களுக்கு தொடர்ந்தும் முகங்கொடுத்து வருகின்றனர். பொத்துப்பிட்டிய தோட்டப்பகுதிகளில் தமிழர்களை அடிமைகளாக்கி தமது தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளும் அரக்கப்போக்குடைய சிங்களவர்கள் இன்னும் தமது ஆதிக்கத்தை செலுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

இது பற்றி அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்தபோதும் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. பாரியளவில் சொத்துக்கள் சேதமாக்கப்பட்ட பம்பேகம தோட்ட மக்கள் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.

எந்தானை தோட்டப்பகுதியில் தமிழ் மக்களிடம் பலவந்தமாக பணம் வாங்கும் அவல நிலையை போக்க யாரும் முன்வரவில்லை. அந்தப் பகுதியினு}டாக செல்லும் பஸ் வண்டிகள் அடிக்கடி இடைமறிக்கப்பட்டு தமிழர்கள் தாக்கப்படும் சம்பவங்களும் அங்குள்ள ஆலய சொத்துகள் களவாடப்படுவதும் தொடர்கதையாகியுள்ளது.

இறக்குவானைப் பகுதியில் இவ்வாறான நிலை காணப்பட்டபோதிலும் சிங்களவர்களால் பெரிதாக ஒன்றும் சாதிக்க முடியாமல் இருந்தது. ஆனால் இம்முறை ஒன்றுதிரண்டு தாமே பெரியவர்கள் என்று இனத்துவேசத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இதில் மிகக் கேவலமான விடயம் என்னவென்றால் அப்பகுதி பிக்குமார் இணைந்து இதற்கு முன்மாதிரியாய் விளங்கியதுதான். அன்பை, அஹிம்சையை போதிக்கும் மதகுருமார் அன்றைய தினம் இனத்துவேசத்தை மேலும் ஆதரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். தாங்கள் முதல் தடவையாக வெசாக் வாரம் கொண்டாடவிருப்பதாகவும் ஆலய தீர்த்தம் நடைபெறு

இந்தப் பிரச்சினை தொடர்பாக இந்துகலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கும், ஜனாதிபதிக்கும் எழுத்துமூலம் அறிவிக்கப்படவுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

ஒருபுறம் யுத்தத்தின் கோரப்பிடியிலிருந்து மீளமுடியாமல் தமிழர்கள் தவித்துக்கொண்டிருக்க மறுபுறம் இனத்துவேச வலையில் சிக்கி பல்வேறு இன்னல்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் இவ்வாறான சம்பவங்களை தடுக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பாரா? ஒருதாய் மக்கள் என்ற ஜனாதிபதியின் பிரசாரம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் கட்டாயம் உணரப்பட வேண்டும்.

மக்கள் பிரதிநிதிகள் என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பொறுப்புள்ளவர்கள் கூட இவ்விடயத்தில் பின்நிலை நோக்கத்தில் இருப்பது கண்டிக்கப்படவேண்டியதுடன், மக்களின் பாதுகாப்புக்கென அமர்த்தப்பட்ட பொலிஸார் பாரபட்சமற்று செயற்படவேண்டியது வலியுறுத்தப்படவேண்டும்.

இந்த மதம் பெரியது, இந்த மதம் சிறியது என்று இல்லை. ஒவ்வொரு தனி மனிதனும் மற்றையவரின் மதத்துக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும். மதங்கள் கோட்பாடுகள் வேறுபடினும் அதன் ஆழ்கொள்கையும் வலியுறுத்தல்களும் ஒன்றாகவே இருக்கின்றன. அவற்றை அதற்குரிய மதத் தலைவர்கள் போதனை செய்வார்களா?

மதத் தலைவர்களின் தவறான வழிகாட்டுதல்களால் பாரது}ரமான எதிர்விளைவான சிந்தனைகளை மக்கள் மத்தியில் விதைக்கப்படுகின்றன.

எவ்வாறாயினும் இரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான கீழ்த்தரமான, இனத்துவேசத்தை து}ண்டிவிடக்கூடியவகையில் செயற்படுபவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அவ்வாறில்லாவிடின் அதன் பின்விளைவுகள் தொற்றுநோய்போல் பரவக்கூடிய அபாயமும் உண்டு.

-இராமானுஜம் நிர்ஷன்
நன்றி வீரகேசரி வாரவெளியீடு -03.05.2009

Thursday, February 26, 2009

இலங்கையில் பிரபல தமிழ் ஊடகவியலாளர் கடத்தப்பட்டார் !


தமிழ்ச் சமூகத்துக்கு ஆதரவாக துணிச்சலோடு உண்மைக் கருத்துக்களை எழுதி வெளியிட்டு வந்த 'சுடர் ஒளி' ,'உதயன்' பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் வித்தியாதரன் இன்று காலை இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டுள்ளார்.

புலிகளின் ஆதரவுப் பத்திரிகைகள் என பலராலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் கூறப்பட்டு விமர்சனங்களுக்கும் தாக்குதலுக்கும் முகங்கொடுத்து வந்த பத்திரிகைகள் என்றாலும் எத்தனை தடைகள் வந்தபோதிலும் உண்மைகளை தயக்கமின்றி வெளியிட்டு வந்தது. வித்தியாதரனின் யதார்த்தமான தமிழ்ப்பிழைகள் எதுவுமற்ற ஆசிரியர் தலையங்கங்களுக்கு எப்போதுமே தனி மதிப்பு உண்டு.

இந்தச்செய்தி கேட்டு தமிழ் ஊடகவியலாளர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். மேலதிக தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை.

Wednesday, February 11, 2009

"அம்மா என்னையும் அழைத்துச்செல்லுங்கள்"


தாய்மார் தொழில்வாய்ப்புக்கென வெளிநாடுகளுக்கு செல்வதால் பிள்ளைகள் அனுபவிக்கும் துன்பங்கள் ஏராளம். சிறுவயதுமுதலே சொல்லமுடியாத பல்வேறு வேதனைகளை அவர்கள் அனுபவிக்கிறார்கள். அவ்வாறு தாய் வெளிநாட்டுக்கு சென்று நீண்டகாலம் நாடு திரும்பாததால் கவலையுற்ற சிறுமியின் வேதனைக் கடிதமாக கடந்த பெப்ரவரி 01ஆம் திகதி வீரகேசரி வார வெளியீட்டில் பிரசுரமான எனது ஆக்கம்.

அன்பின் அம்மாவுக்கு,
சுவாசிக்கக் காற்றிருக்கிறது. உண்ண ஒருவேளை சோறு கிடைக்கிறது. துன்பங்களின் மத்தியிலும் உங்கள் மடியில் சாய்ந்துறங்கிய நிம்மதியான நினைவுகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். நீங்கள் நலமாயிருக்கிறீர்களா? உங்களின் நலத்திற்கு என்றும் குறைவரக்கூடாது என்பதுதான் எனது முதல் பிரார்த்தனையும் வேண்டுதலும். நம் குலதெய்வம் உங்களின் நலன் காக்கட்டும்.

நிற்க:
நீங்கள் குவைத் சென்று ஐந்து வருடங்கள் கழிந்துவிட்டன. இரண்டு வருடங்களில் வருவதாக சொல்லிச்சென்றீர்கள். ஒன்றும் அறியாத எட்டுவயது சிறுமியாய் இருந்தபோது நீங்கள், கடைசியாய் தந்த அன்பு முத்தம் இன்னும் இனிக்கிறது அம்மா. ஆனாலும் பல விடயங்களை பரிமாறி துன்பங்களைச் சொல்லி அழ என் அருகில் அம்மா இல்லையென்று நித்தமும் அழுது வாடுகிறேன்.

அப்பா சரியாக வீட்டுக்கு வருவதேயில்லை. அப்படி வந்தாலும் குடித்துவிட்டுத்தான் வருகிறார். நானும் தம்பியும் உயிரோடு இருக்கிறோமா இல்லையா என்று கூட அவர் கவலைப்படுவதில்லை. நீங்கள் பணம் அனுப்புகிறீர்களோ இல்லையோ எனக்குத் தெரியாது. ஆனால் கிடைக்கும் பணத்தில் எல்லாம் அப்பா கசிப்பு குடிக்கிறார். நேற்று அவர் வீட்டுக்கே வரவில்லை. காலையில் வீட்டு வாசலில் விழுந்து கிடந்தார். அவருக்கருகில் கிழிந்த தாளில் எழுதப்பட்ட உங்களுடைய விலாசம் இருந்தது. இது உண்மையான விலாசமோ எனக்குத் தெரியாது. ஆனாலும் எழுதுகிறேன். வெளிநாட்டில் தங்களுடைய அம்மா வேலை செய்ய, என்னைப்போன்ற எத்தனை குழந்தைகள் இந்தத் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்காறார்களோ தெரியவில்லை.

நீங்கள் சொல்லிவிட்டு சென்றது போலவே நான் இன்னும் பாடசாலைக்கு சென்றுகொண்டுதான் இருக்கிறேன். முடிந்தளவு படிக்கிறேன். தம்பி பாடசாலைக்கு செல்வதில்லை. பார்ப்பார் யாருமின்றி அங்குமிங்கும் சுற்றிக்கொண்டிருக்கிறான். அவனுடைய எதிர்காலத்தை நினைத்தால்தான் எனக்குப் பயமாக இருக்கிறது.

நான் பாடசாலையிலிருந்து வந்தவுடன்; பெரிய ஐயாவின் வீட்டுக்கு வேலை செய்யச் சென்றுவிடுவேன். அடிக்காத குறையாக என்னிடம் வேலை வாங்குகிறார்கள். ஐயா ஒரு நாளைக்கு 20 ரூபா தருவார். அங்கேயே எனக்கும் தம்பிக்கும் சாப்பாடும் கிடைக்கும். அந்தப் பணத்தை வைத்துத்தான் என்னுடைய தேவைகளை நிறைவேற்றுகிறேன். எனக்கு சமைக்கத் தெரியாது அம்மா. ஐயா வீட்டில் சாப்பாடு கிடைக்காவிட்டால் பட்டிணியாகத்தான் இருப்போம்.

அம்மா,
உண்மையைச் சொன்னால் நான் வயதுக்கு வந்தது கூட எனக்குத் தெரியாது. அதையெல்லாம் சொல்லித்தரத்தான் நீங்கள் அருகில் இல்லையே? எனக்கென உடுதுணிகள் வாங்கியதுகூட இல்லை. அப்பாவுடன் வரும் அவருடைய நண்பர்கள்கூட என்னை குரூரப்பார்வையால் தான் பார்க்கிறார்கள். எனக்குப் பயமாக இருக்கும். வீட்டில் தனியாக இருக்கவே பிடிக்கவில்லை.

இந்த வருடம் நான் ஒன்பதாம் ஆண்டு. ஆனாலும் இதுவரை புத்தகங்கள் வாங்கவில்லை. நண்பிகள் கொடுக்கும் பழைய கொப்பிகளில் தான் எழுதி வருகிறேன். இருந்தாலும் நான் எப்போதும் வகுப்பில் முதலாம் பிள்ளைதான். அதனால்தான் இந்தளவுக்கு உங்களுக்கு கடிதம் எழுத முடிகிறது. இந்தக் கடிதம் உங்கள் கையில்கிடைத்தவுடன் இலங்கைக்கு வர முயற்சி செய்யுங்கள். ஏனைய குழந்தைகளைப்போலவே தாய்ப்பாசத்தை நானும் முழுமையாய் அனுபவிக்க வேண்டும்.

எங்களுடைய தோட்டத்தில் நிறைய மாற்றங்கள் நடந்திருக்கின்றன அம்மா. நாங்கள் மட்டுமே அதே பழைய வீட்டில் இருக்கிறோம். டி.வி பார்ப்பதென்றால்கூட பக்கத்து வீட்டுக்குத் தான் செல்ல வேண்டும். கிழிந்த சட்டையுடன் அங்கு செல்ல எனக்கு வெட்கமாயிருக்கிறது. என்னால் முடியவில்லை அம்மா. உங்கள் மடியில் கிடந்து கண்ணீர்விட்டு இதுவரையான அத்தனை சோகங்களையும் கரைக்கவேண்டும். என்னையும் உங்களோடு அழைத்துச்சென்றிருக்கலாம்தானே?

சொல்ல மறந்துவிட்டேன். கடந்த வாரம் தம்பிக்கு கடுமையான காய்ச்சல். அப்போது உங்களது ஞாபகம் தான் எனக்கு வந்தது. எனக்கு ஓரளவு கிடைத்த தாய்ப்பாசம் கூட தம்பிக்குக் கிடைக்கவில்லையே என அழுதேன். நல்ல வேளையாக தோட்ட வைத்தியசாலையில் வைத்தியம்பார்த்தார்கள்.

ஏன் அம்மா நீங்கள் இங்கு வருவதில்லை. நாங்கள் உயிரோடு இருப்பதை நீங்கள் மறந்துவிட்டீர்களா? இங்கு கழியும் ஒவ்வொரு நிமிடமும் முட்து}ரிகையாய் மனதை குத்திக் குடைகின்றன. அடுத்த நாளை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்றுகூட தெரியாமல் வாழ்கிறோம். உண்மையில், வெளிநாட்டில் வசிக்கும்தாய்மாரின் குழந்தைகளெல்லாம் இப்படித்தான் நொந்து வாழ்கிறார்கள் என நினைக்கும்போது கண்ணீர் நிறைந்து மனதும் ஈரமாகிறது.

நீங்கள் இங்கு வரும்போது சிலவேளைகளில் நான் மரணித்திருக்கக்கூடும். வீட்டின் மூலைமுடுக்கெங்கும் இருக்கும் என் சுவடுகளில் உங்கள் பாதம்படும்போது என் ஆன்மா குது}கலிக்கும். ஆனாலும் நான் அழுதுத் தவித்த ஓலக்குரல்கள் அப்போதும் சுவர் இடுக்குகளில் ஒலித்து, உங்களுக்கு சாபமிடுவதாய் உணர்வீர்கள்.

இந்தக்கடிதம் உங்களைப் போய் சேராவிட்டால், தாயை து}ரதேசத்துக்கு அனுப்பித் தவிக்கும் ஒவ்வொரு குழந்தையின் வேதனை மடலாகவும் ,அந்தத் தாய்மாருக்கு நான் எழுதிய கடைசி வேண்டுகோள் மடலாகவும் இது இருக்கட்டும்.

அம்மா என்ற ஒரு வார்த்தையில் அனைத்துமே இருக்கின்றதென்கிறார்கள். எனக்கும் அதை அனுபவிக்க சந்தர்ப்பம் ஒன்று தாருங்கள். அல்லால் சாபங்கள் நிறைந்த இந்த வாழ்க்கையை இப்படியே மரணத்தின் எல்லை வரை கடந்து உங்கள் அன்புக்குக் காணிக்கையாக்குகிறேன். அதில் உங்கள் உள்ளம் களிப்படையட்டும்.

விடைபெறுகிறேன் அம்மா.

இப்படிக்கு,
தாய்மடிக்காக ஏங்கும்
உங்கள் மகள்
லட்சுமி.


-ஆர்.நிர்ஷன்