Wednesday, May 28, 2008

அரசியல்வாதியும் அம்மாவும் ! ( ஓர் உண்மை உரையாடல்)



தமிழ் அரசியல்வாதி: "ம்ம்ம்... என்ன செய்யலாம்...? பத்திரிகையில் நாளைக்கு அறிக்கை ஒன்று விடுறேன்। அதுக்குப்பிறகு பார்ப்போம் என்ன நடக்குதென்று। நீங்க பயப்படாமல் போய்வாங்க।


வயதான அம்மா: ஐயா॥உங்களை நம்பித்தான் வந்தோம்। தயவு செய்து என் மகனை மீட்டுத்தாங்க।


தமிழ் அரசியல்வாதி: இப்போ உள்ள அரசாங்கம் அப்படியம்மா। என்ன நடக்குதுன்னு எங்களுக்கு புரியுதில்ல॥ இன்னைக்கே என்னோட செக்ரடரிகிட்ட சொல்லி பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்ன எழுதி அனுப்புறன்। அதுவும் நாளைக்கு பத்திரிகையில வரும்।


வயதான அம்மா: என் மகன் ஒருத்தன்ட பிழப்ப நம்பித்தானய்யா நாங்க வாழ்றோம்। நான் அப்பவே தலையில அடிச்சிகிட்டேன் இந்த நாடே வேணாம் மகன வெளியூருக்கு அனுப்பிடுவம் னு॥ எங்கயாவது கடல்கடந்த ஊர்ல கண்காணாம இருந்தாலும் உயிரோட இருக்கானு நம்பிக்கையாவது இருக்கும்। ஆனா இங்க காணாம போன பிறகு எப்படி ஐயா மனச தேத்துறது?


தமிழ் அரசியல்வாதி: இத பாருங்கம்மா॥ இப்படி ஒருநாளைக்கு நாலைஞ்சு பேர் வந்து அழுது ஒப்பாரி வக்கிறாங்க। அதுக்காக என்னதான் செய்ய முடியும்?


வயதான அம்மா: யார் கடத்தினாங்க? எதுக்காக? என்ன கேக்குறாங்க? என் மகன எங்க வச்சிருக்காங்க ன்னாவது கண்டுபிடிச்சு சொல்ல முடியுமாங்க?


தமிழ் அரசியல்வாதி: ம்ம்ம் அதெல்லாம் முடிஞ்சா நாங்க ஏனம்மா சிறிலங்கா பார்லிமன்ட்ல இருக்கோம்? சரி சரி பார்க்கலாம் நீங்க போய் வாங்க।


வயதான அம்மா: ஐயா பொலிஸ் உடுப்புல வந்தவங்கதான் கடத்தினாங்கனு சொல்றாங்க। அதையாவது கேட்டுப்பாக்க முடியாதா?


தமிழ் அரசியல்வாதி: சரி விசாரிச்சு சொல்றேன்। இப்போ போங்க।


இலங்கையில் ஆட்கடத்தல்கள் கொலைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுக்கொண்டிருக்க அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் தமிழ் அரசியல்வாதிகளின் சேவை நாடகம் இப்படித்தான் அமைந்திருக்கிறது। ஐயா உதவி செய்வார் என்ற நம்பிக்கையுடன் தினமும் அழுதுகொண்டிருக்கும் அம்மாமார் , மனைவிமார் எத்தனையோ பேர்।

தாம் விதவையானதை கூட தெரியாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் மனைவியர் எத்தனையோ பேர்?

இத்தனை நடந்தும் அரசாங்கத்தில் அங்கம் வகித்து மக்கள் சேவகர்கள் என்று சொல்லிக்கொள்ளத்தான் வேண்டுமா?


(படங்கள்: கடத்தப்பட்ட மகனை விடுவி்க்கக்கோரி கதறியழும் பெற்றோர்। படஉதவி: ஏபி)

Tuesday, May 13, 2008

"மல்லிகை" யில் மலர்ந்தது எனது வலைப்பூ !



"மல்லிகை" இதழ்பற்றி அறியாத தமிழ்விரும்பிகள் இருக்க முடியாது। உலகத் தமிழரிடத்தில் பிரசித்தி பெற்ற இதழ் இது। கடந்த 45 வருடங்களுக்கு அதிகமாக தமிழ், இலக்கியப் பணியாற்றிவரும் மாதாந்த சிற்றிதழில், இந்த வெளியீட்டில் (மே மாதம் - ३४८ ஆவது இதழ்) எனது "புதிய மலையகம்" வலைத்தளத்தில் வெளியான செய்தி "மின்வெளிதனிலே" பகுதியில் பிரசுரமாகியுள்ளது।

உண்மையில் எனது அளவில்லா குதூகலத்தை சொல்ல வார்த்தைகள் வரவில்லை। அந்தளவுக்கு என்னையறியாமல் ஆனந்தப்படுகிறேன்। தமிழ் இலக்கிய உலகில் மல்லிகைக்குத் தனியிடம் உண்டு। இலக்கியம், தமிழ்,பண்பாடு,கலாசாரம்,கருத்தாக்கம்,புதியன பற்றி பலவற்றையும் சுவைபட தந்து மனதில் மல்லிகையாய் மலர்ந்து மணம்பரப்பும் இதழ் மல்லிகை। டொமினிக் ஜீவா அவர்களின் மாபெரும் தமிழ்ப்பணி இது।

இவரது அங்கீகாரத்துடன் பிரசுரமான எனது வலைத்தள தகவலால் நான் பெருமை கொள்வதுடன் பழைமை நற்பெயர் கொண்ட எழுத்தாளர் மேமன் கவி எழுதிய ஆக்கம் என்னை மேலும் மெய்சிலிர்க்க வைத்தது। மல்லிகைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்।

எழுத்துத்துறையில் சாதிக்க பல்வேறு தடைகளைப் போட்டு உண்மைகளைச் சொல்லவிட முடியாதளவுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தி எனது இலட்சிய ஊடகத்துறையிலிருந்து என்னை சிலர் தூக்கியெறிய முற்பட்டனர்। ஏதானாலும் பரவாயில்லை எப்படியாவது உண்மையை உலகறியச் செய்ய வேண்டும் என வலைத்தளத்தில் எழுதத் தொடங்கினேன்। அதற்கும் எதிர்ப்புகள் ஏராளம்। ஆனால் அவை எல்லாவற்றையும் பொடியாக்குமளவுக்கு இராஜசந்தோஷத்தை வாசனையுடன் தந்தது மல்லிகை। நன்றிகள்।

உடனடியாக இது பற்றி எனக்கு அறியத்தந்த "ஆரவாரம்" தாசன் அண்ணாவுக்கும் நன்றிகள் உரித்தாகட்டும்।

யாழ் மாணவன் என்றால் அகதியா?

வடக்குப் போர் முனை சூடுகண்டுள்ளதை நாம் நன்கறிவோம்। துப்பாக்கிச் சத்தத்துக்கு அடங்கிப்போய் பாடசாலைக்குச் செல்லாமல் பள்ளி வாழ்க்கைக்காக ஏங்கித்தவிக்கும் சிறுவர்கள் ஏராளம் என்பதும் எமக்கு நன்றாகத் தெரியும்।
இந்நிலையில் பிள்ளைகளை எப்படியாவது படிப்பிக்க வேண்டும் என்ற தாகத்துடன் அங்கிங்கு கடன்பட்டு கொழும்புக்கு அழைத்துவருகின்றனர் பெற்றோர்। கொழும்புக்கு வருவதென்றால் விமானப் பயணம் தான்। ஒருவழிப் பயணத்துக்கு ஒருவருக்கு १०,००० ரூபா செலவாகிறது। அத்துடன் அங்கு ஆள் அடையாளப்படுத்தி உறுதிப்படுத்துவதற்கு பல்வேறு ஆவணங்கள் பெறவேண்டும்।
இப்படி கஷ்டப்பட்டு பிள்ளைகளை கொழும்புக்கு அழைத்து வந்து படாத பாடுபட்டு பாதுகாப்புப் பிரச்சினைகளுக்கு மத்தியில் வாடகை வீடு தேடி வீட்டு உரிமையாளர்களின் தகாத கேள்விகளுக்கு (சொந்த இடம் யாழ்ப்பாணம் என்றால் வேற்று கிரக வாசியைப் போல சந்தேகத்துடன் பார்ப்பது வழமை) அழுகையைக் கட்டுப்படித்தி பதில் கூறி சாதாரண வாழ்க்கைக்கு திரும்புவதற்கு ३ மாதங்கள் கழிந்துவிடும்।
பின்னர் பிள்ளைகளைப் பாடசாலைக்கு சேர்ப்பதற்கோ பெருங்கஷ்டம்। யாழ் அரச அதிபரின் கையொப்பத்துடனான கடிதம் பெற்று அங்குள்ள பொலிஸ் உயரதிகாரி அதனை உறுதிப்படுத்தி இராணுவத்தினர் அதனை சரிபார்த்துதான் கடிதம் இங்கு வரும்।
இருந்தாலும் பாடசாலையில் சேர்ப்பதற்கு பிரத்தியேக பணமும் செலுத்தவேண்டி வருகிறது। இவை அத்தனையும் செய்துமுடித்து பிள்ளையைப் பாடசாலைக்கு சேர்க்கும் போது சுமார் எட்டு மாதங்கள் பிள்ளையின் கல்வி பின்னடைவைச் சந்தித்திருப்பதுடன் தந்தைக்கு தலைமயிர் பாதி கொட்டியிருக்கும்।
சரி விதிதான் அப்படி விளையாடுகிறது என்றால் சில பாடசாலைகளில் இவ்வாறு சேர்ந்த மாணவர்களை அகதி என்று கூறிப் புண்படுத்தும் ஆசிரியர்களை என்னவென்று கூறுவது? ஆசிரியத் தொழில் புனிதமானது। ஓர் ஆசான் இறைவனுக்கு சமன் என இந்துமதம் கூறுகிறது।

கொழும்பிலுள்ள ஒரு பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் தனது வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருக்கும் போது அகதியாக கொழும்புக்கு வந்தவர்கள் எத்தனை பேர் எனக் கேட்டிருக்கிறார்। நீங்கள் வகுப்புக்கு ஆறு மாதத்தின் பின்னர் சேர்ந்ததால் ஒழுங்காக பாடம் விளங்குவதில்லை என்று சொல்லியிருக்கிறார்। அது பிரச்சினையில்லை। இங்கு அகதி என்ற சொல் எதற்காக உபயோகிக்கப்பட வேண்டும்? நாங்கள் அகதிகளா என அந்தப் பிஞ்சுப் பிள்ளை தன் பெற்றோரிடம் கேட்டபோது அவர்கள் அடைந்த வலி யார் உணர்ந்திருக்கிறார்கள்? சக மாணவர்கள் அகதி அகதி என விளையாட்டாக அழைக்கும் போது பிள்ளையின் மனம் கொள்ளும் ரணத்தை ஆற்றப்போகும் மருந்துதான் என்ன?
கொழும்பு பாடசாலைகளில் சேர்க்க முடியாமல் ஒருவருடம் பின்னின்று கீழ் வகுப்பில் கல்வி கற்கும் நிறைய மாணவர்கள் இருக்கிறார்கள்। எவ்வாறிருப்பினும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மாணவர்கள் நடத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது। போர்ச்சூழலில் பாதிக்கப்பட்டவர்கள் இப்படியும் துன்புறுத்தப்படவேண்டுமா?
சம்பந்தப்பட்டவர்கள் இதனை உணர வேண்டும்। மாணவர்களுக்கு சிறுவயதில் ஏற்படும் துளியளவு மனக்காயம் கூட எதிர்காலத்தை வீணடித்துவிடும் என்பதை அறியவேண்டியது அவசியம்.

Friday, May 9, 2008

தமிழர் தலைவிதியை தீர்மானிக்கும் நாள் நாளை !

இலங்கையின் ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களினதும் வாழ்வு நிலையையும் சுதந்திரத்தையும் தீர்மானிக்கும் நாள் நாளையாகும் விடுதலை,சுதந்திரம்,உரிமைகள் என்பன தமிழர்களுக்கு இருப்பதாகவும் அது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பறிக்கப்படவில்லை என்றும் கூறிக்கொள்ளும் அரசியலாளர்களுக்கு தமிழர்கள் நாளை கொடுக்கப்போகும் பதில்தான் என்ன?

ஆம்! இரண்டு தசாப்த காலத்துக்குப் பிறகு கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நாளை १० ஆம் திகதி நடைபெறுகிறது। முழு இலங்கை வாழ் தமிழ்பேசும் மக்களின் எதிர்காலத்தையும் இத்தேர்தல் தீர்மானிக்கப்போவது உண்மை.

வன்முறைக்களம் என்றும் தேர்தல் அட்டூழியங்களுக்கும் களவாடல்களுக்கும் இடம்தந்து நடைபெறப்போகும் தேர்தல் என்று இலங்கை எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்ட ஜனநாயகத்துக்காக தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமையை பெற்றுக்கொடுப்பதற்காக ஜனநாயக ரீதியில் நடைபெறப்போகும் நியாயமான தேர்தலாக இருக்கும் என்று அரச தரப்பும் , வன்முறைகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது ஆயுதக்குழுக்களின் அச்சுறுத்தல்கள் மக்களுக்கு உள்ளன என்று தேர்தல் கண்காணிப்பாளர்களும் ,அரச ஊழியர்கள் ५०० பேரை தேர்தல் உதவிக்காக அரசாங்கம் அமர்த்தியுள்ளது என அரச அதிருப்தியாளர்களும் கூறிவரும் நிலையில் நாளைய தேர்தல் இடம்பெறவிருக்கிறது।

இலங்கையின் கிழக்குப் பகுதி இயற்கை அழகு நிறைந்தது। மக்களும் அளவில்லா அன்புள்ளம் படைத்தவர்கள்। இனத்தை இனத்தால் அழித்து மக்கள் வாழ்வியலையும் வாழ்வாதாரத்தையும் சீர்குலைத்த போர்ச்சூழலின் இரத்தம் தோய்ந்த வரலாறு அந்த மக்களின் ஒட்டுமொத்த உணர்வலைகளையும் உயிருடன் பிடுங்கி எறிந்தது।

போர் காரணமாக இடம்பெயர்ந்து கால்வயிறு சோறுக்குக் கூட காலைப்பிடிக்கும் நிலைக்கு மட்டக்களப்பு திருகோணமலை மக்கள் தள்ளப்பட்டிருந்த போது இலங்கை இதழியல் கல்லூரியினால் நான் மட்டக்களப்புக்கு அனுப்பப்பட்டேன்।

கைகழுவ தண்ணீர் இல்லை,உடுதுணியில்லை,உணவில்லை என்றிருந்த போதும் மாமாங்கர் ஆலய முகாமிலுள்ள வயதான அம்மா எனக்குச் சோறூட்டிய நினைவு இன்னும் கண்ணை நனைக்கிறது। அந்தளவுக்கு அன்பானவர்கள் அவர்கள்।

எந்தப் பிழைக்கும் துணைபோகாமல் எந்தப் பிணியையும் தாங்கிக் கொண்டிருக்கும் இவர்களை பகடைக்காய்களாகப் பயன்படுத்தி சர்வதேசத்துக்கு படம்காட்ட முயலும் சக்திகளுக்கு பாடம் புகட்டக் கூடிய நிலையில் மக்கள் இல்லை என்பது தெளிவு।

ஒரே நோக்கம் எனக் கூறும் தமிழர்களே பிளவுபட்டு தேர்தல் களத்தில் குதித்திருக்கிறார்கள்। நியாயத்துக்காக எனக் கூறி முஸ்லிம்கள் பிளவுபட்டு போட்டியிடுகிறார்கள்।

ஓர் இனத்தவர்களே தம் இனத்தவர்களை காட்டிக்கொடுக்கிறார்கள்। தன் இரத்தத்தையே அது சார்ந்த இன்னொரு இரத்தம் குடிக்கிறது। தன் மொழியையே அதுசார்ந்த மற்றொரு மொழி கொல்கிறது। யாரிடமும் சொல்லி அழ முடியாமல் தலையணை நனைத்து அமைதியாக அடங்கிப்போனவர்கள் எத்தனை பேர்? தமிழ் வளர்த்து கலை வளர்த்து கல்விமான்களையும் கலாசார காவலர்களையும் முன்னுதாரணதாரர்களையும் உருவாக்கிய கிழக்கு களையிழந்து காணப்படுவதற்கு யார் காரணம்?

உதயசூரியனுக்காக காத்திருந்த போது குண்டுவிழுந்து கண்ணையிழந்தவர்கள் எத்தனை பேர்? பார்க்கும் தூரத்தில் பள்ளியிருக்க பட்டாம்பூச்சியாய் பள்ளிக்குச் சென்று கருகிப்போன பிஞ்சுகள் எத்தனை? யுத்தச் சத்தத்தில் மனநோயாளியாகியோர் எத்தனை பேர்? வெறிபிடித்த இன விஷமிகளின் காமக் கரங்களால் மானபங்கப்படுத்தப்பட்டோர் எத்தனை பேர்? வாழ்ந்தும் மரணித்துக்கொண்டிருப்போர் எத்தனை பேர்? சொந்தங்களை சுற்றங்களை இழந்து எதிர்காலத்தை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருப்போர் எத்தனை பேர்?

இத்தனை கேள்விகளுக்குள்ளும் சுமை தாங்கிகளாய் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்குள் மக்கள் சேவகர்கள் நாளை தேர்ந்தெடுக்கப்படப் போகிறார்கள்। தமிழர்களே அதிக பிரிவினைவாதத்துடன் கிழக்கில் நடந்துகொண்டிருக்கிறார்கள்। இந்நிலையில் அப்பாவி மக்கள் என்ன செய்யப் போகிறார்கள்?
இந்தக்கட்டுரை யாரையும் காயப்படுத்துவதற்காகவோ அரசியல் பின்னணியுடனோ எழுதப்படுவதல்ல। சொந்தங்களுக்காக எழுதுகிறேன்।
எனது வேண்டுகோள் இதுதான்। மக்களை துன்புறுத்தி பலவந்தப்படுத்தாமல் சுயமாக வாக்களிக்க விடுங்கள்। அவர்களுக்குத் தெரியும்। யார் உண்மையானவர்கள் என்று। சுதந்திரமான தேர்தல் நடத்த அனைவரும் ஒத்துழையுங்கள்। அதைவிடுத்து தமிழ்பேசும் மக்களை காட்டிக்கொடுக்கும் வரலாற்றுத் தவறுக்கு இடமளிக்க வேண்டாம்।
இதுவரை அந்த மக்கள் பட்ட துன்பங்கள் போதும்। தொடர்ந்தும் அவர்கள் பகடைக்காய்களாக பயன்படுத்தப்படக்கூடாது என்பதே எனது தாழ்வான வேண்டுகோள்.

Wednesday, May 7, 2008

கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் !!! (படங்கள்)






இலங்கைத் தலைநகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று காலை வெகு கோலாகலமாக இடம்பெற்றது। காலை ५ மணிமுதல் கிரியைகள் இடம்பெற்றதுடன் ६.३२ மணிமுதல் சகல விமானங்களுக்கும் அபிஷேகம் இனிதே நடைபெற்றது।

கடந்த २ ஆம் திகதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேகக் கிரியைகள் ஆரம்பமாயின।

எங்கும் எதற்கும் எதிலும் ஆட்படாத சக்தி சிவம்। இந்நிலையான்,இவ்வண்ணத்தான்,இப்படியிருப்பான், இக்குணமுடையான்,இவ்வருளுடையான்,இப்பேருடையான் எனச் சொல்ல முடியாதவனுக்கு அநேகனாகி முடிவிலா வியாபகன்। அருட்சக்தி நிறைந்த சிவன் ஆன்மாக்களுக்காக படியிறங்கி அருள்பாலிக்கும் இடம் ஆலயமாகும்। தலைநகர் கொழும்பிலுள்ள சிவாலயங்களில் புகழ்பெற்ற இவ்வாலம் பழமை வாய்ந்த தலவரலாற்றைக் கொண்டது।

(ஆலய வரலாற்றின் பின்னர் இன்று நடந்த கும்பாபிஷேகத்தின் படங்கள்। படங்களைத் தந்து உதவிய அன்பு நண்பருக்கு நன்றிகள்)
ஸ்ரீ பொன்னம்பலவாணேசர் ஆலய தல வரலாறு :
தென்னிந்தியாவில் உள்ள பிரம்மாண்டமான கருங்கல் ஆலயங்கள் யாவும் மூவேந்தராலும் நாயக்க பல்லவ மன்னர்களாலுமே கட்டப்பெற்றது. அதேமாதிரியான அமைப்பில் இலங்கையில் முற்றிலும் கருங்கற்களில் பொளிந்த சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த அழகிய கலைக்கோவிலை 1856ஆம் ஆண்டு் யாழ்ப்பாணம் மானிப்பாயில் பிறந்து கொழும்பு செட்டியார் தெருவில் வசித்து வந்த கொடைவள்ளலும் தேசபிமானியுமான பொன்னம்பலம் முதலியாரால் ஸ்தாபிக்கப்பட்டது. பின்னர் அவரது புதல்வர் சேர் பொன் இராமநாதன்இ ஸ்ரீ பொன்னம்பலவாணேசர் கோயில் எழுந்தருளிய இடத்திலே புதியதொரு கோயிலை 1907 ஆம் ஆண்டு கருங்கற் பணியாக ஆரம்பித்து 1912 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி கும்பாபிஷேகம் செய்வித்தார்.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் வீற்றிருக்க சிவகாமி அம்பாள் - அம்பாள் சந்நிதானத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கின்றாள். நடராஜர்இ மூலப் பிள்ளையார், சோமஸ்கந்தர், பஞ்சலிங்கம், விஷ்ணு, சுப்பிரமணியர், ஷண்முகர், பைரவர், சுவர்ண பைரவர், நவக்கிரகம் ஆகியோருக்குத் தனித்தனி ஆலயங்கள் உள. கோஷ்டத்தில் நர்த்தன கணபதிஇ தட்சணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை முதலானோர் வீற்றிருக்கின்றனர். சனீஸ்வரன் தனியாக வீற்றுள்ளார்.
வெளிவீதியில் கோவிலின் முன்னே நர்த்தன கணபதியும்இ தென்புறத்தே ஸ்ரீ மாரி அம்மன், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீமுனியப்பர் ஆகியோர் தனி ஆலயங் கொண்டுள்ளனர். வடக்கே கோமாதாவின் கோகுலம் உள்ளது.
நித்தியஇ நைமித்திய பூசைகளும் ஆறு காலப் பூசைகளும் விரதங்களும்இ அபிஷேகங்களும்இ பொங்கல்களும் குளிர்ச்சி போன்றவையும் சிவாகாம முறைப்படி நடைபெற்று வருகின்றன. ஆலய மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து பத்தாம் நாள் பங்குனி உத்தரத்தன்று நிறைவு பெறும். தேர்த்திருவிழா அன்று சோமாஸ்கந்தர்இ அம்பாள்இ சண்டேஸ்வரர் தம் தம் அழகிய சிற்பத் தேர்களிலும் விநாயகர்இ முருகன் தம் வாகனங்களிலும் ஆரோகணித்து வீதி வலம் வருவர். அம்பாளின் தேரைப் பெண்களே இழுப்பது வழக்கம். சுவாமி வெளிவீதி வரும்பொழுதில் நவசந்தித் திருமுறைகள் ஓதப்படுகின்றன. அதிகாலையில் திருப்பள்ளியெழுச்சிப் பராயணத்துடன் பூசைகள் ஆரம்பமாகின்றன. காலை 7:00 மணிக்கும் மாலை 7:00 மணிக்கும் நடைபெறும் பூசையில் நித்தியாக்கினி வளர்க்கப்படும்.
ஆடிப்பூரத்தை அந்தமாகக் கொண்டு ஸ்ரீ சிவகாம சௌந்தரி அம்பாளுக்கு லட்சார்ச்சனை, விசேஷ ஹோமம் என்பன நிகழ்ந்து வருகின்றன. நவராத்திரி காலத்தில் விசேடஷ கொலுபூஜை, ஸ்ரீ சக்ரபூஜை என்பன நடைபெறுகின்றன. நவராத்திரிகால மாலைப் பூஜையைத் தொடர்ந்து ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வர தேவஸ்தானத்தில் அறநெறிப்பாடசாலை இடம்பெற்றுவருவதும் குறிப்பிடத்தக்கது. தமது குஞ்சிதபாதத்தால் அருள் நல்கும் ஸ்ரீ நடராஜப் பெருமானின் அபிஷேக தினங்கள் அபிஷேக பூஜைகளுடன் சிறப்புற இடம்பெறுகின்றன.

Friday, May 2, 2008

ஓர் ஊடகவியலாளர் சொல்லும் கதை...!

இலங்கையின் குளிர்ச்சியான பகுதியிலிருந்து சூடான வானலைக்கு செய்தி வழங்கும் பிரதேச ஊடகவியலாளர் ஒருவரை அண்மையில் துரதிர்ஷ்டவசமாக சந்திக்க நேரிட்டது। நான் என்ற அகங்காரம் இதுதானோ என வியக்கும் அளவுக்கு தற்புகழ்ச்சியுடன் தன்னையறியாமல் எல்லாவற்றையும் அள்ளிக்கொட்டினார்। தனது செய்திப் பிரதேசத்தில் அரசியல்வாதிகள் சிலருக்கு வக்காளத்து வாங்குவதற்காகவும் சுயலாபத்துக்காகவும் தான் செய்தி அனுப்புவதாக அவரே சொன்னார்.
அவர் சொன்னதை அவ்வாறே (சிவவற்றைத் தவிர்த்து) தருகிறேன்।

நாங்க செய்றது ஊடகத்தொழில் அல்ல। நாங்க ஊடகவியலாளர் அல்ல। நாங்க நியூஸ் புரோக்கர்ஸ்। அதாவது செய்தி தரகர்கள்। ஊடகவியலாளராயிருந்தா நடுநிலைமை இருக்கும்। நாங்க எங்கள முதல்ல பார்க்கனும்। நான் செய்தி அனுப்புற ஸ்டேஷன்ல எல்லாரோடயும் தண்ணி அடிச்சிருக்கேன்। என்ன செய்தியென்டாலும் போடுவாங்க। இப்போ கிட்டத்தில எங்கட பகுதியில பட்டாசு வெடிக்கவச்சு கோலகலமா ஒரு விஷயத்தை காட்டனும் னு சொன்னாங்க।

நான் என்னோட சொந்தக் காசில பட்டாசு வாங்கி ரெண்டு நண்பர்கள போடச்சொல்லிட்டு நேரடியா தொகுத்து வழங்கினேன் எப்படித் தெரியுமா? இங்க மக்கள் எல்லாரும் சந்தோஷமா வரவேற்கிறதுக்காக திரண்டு வந்து சுமார் १०० இற்கும் அதிகமானோர் பட்டாசு கொளுத்தி பாட்டுப்பாடி குதூகலிக்கிறதா சொன்னேன்। முழு இலங்கையும் நம்பிடுச்சி।( இன்னும் நிறைய விஷயம் சொன்னார்।)
சுமார் அதிகாலை १.३० மணியிருக்கும்। ஒரு பிரபலமான (எனக்குப் பிடித்த,தரமாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும்) அறிவிப்பாளரை கையடக்கத் தொலைபேசியில் அழைத்து, பாருங்கள் இங்கு யாருக்காவது இந்த நேரத்தில் இவருக்கு அழைப்பினை ஏற்படுத்த முடியுமா என இராஜதோரணையில் சத்தமிட்டார்। அந்த வானலை சேவையிலுள்ள பலருக்கு பல விடயங்களை கற்றுக்கொடுத்ததும் தான்தான் எனச் கர்ஜனைத் தொனியில் கூறினார்। இத்தனைக்கும் அந்த இடத்தில் பிரச்சினை ஒன்றும் நடக்கவில்லை।

ஊடகவியலாளர்கள் மக்களுக்கானவர்கள்। மக்கள் நேசகர்கள்। இவ்வாறான அரசியல் ஒட்டுண்ணிகளால் ஊடகத்துறையே கலங்கமடைகிறது। அதுவும் தனது புனிதமான தொழில் நிலையையும் தனது தொழில்தாபனத்தையும் பகிரங்கமான தாழ்விறக்கும் இவ்வாறானவர்கள் ஊடகத்துக்குத் தேவைதானா?

இவர் சொல்லும் வானலைச் சேவை சிறப்பான சேவையை இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கி வருகிறது। நேயர்கள் விரும்பும் நிகழ்ச்சிகளை கவரும் விதத்தில் தொகுத்து வழங்குகிறார்கள் அறிவிப்பாளர்கள்। இந்நிலையில் சுயதம்பட்டம் அடித்து இழிநிலை ஊடகத்துக்கு வழிகோலும் இவ்வாறானவர்களை ஒதுக்கி தூரப்படுத்தி சமுதாயத்தை தூய்மைப்படுத்த வேண்டும்.