வால்பிடிக்கும் வாலாட்டிகள்...!


கொழும்பில் பெரும்புள்ளிகளுக்கு வால்பிடித்துத்திரியும் சில வாலாட்டிகள் தமது வால்புத்தியை ஏழை மக்களிடம் காட்டத்தொடங்கியிருக்கிறார்கள்।
கொழும்பில் ஏழைமக்களின் பிள்ளைகளுக்கு இத்தாலி வீசா எடுத்துத்தருவதாகக் கூறி இருவர் ஏமாற்று நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாக பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் கூறினார்। கொட்டாஞ்சேனை, வெள்ளவத்தைப் பகுதிகளில் இந்த வாலாட்டிகள் தமது ஏமாற்று வித்தைகளில் ஈடுபட்டுவருவதாகவும் தகவல் கிடைத்தது।
சிவகாமி என்பவர் வெள்ளவத்தையில் வசிக்கும் வயதான அம்மா। யுத்தத்தில் அனைத்தையுமே இழந்து வருமானமில்லாமல் வாடகை வீட்டில் தங்கியிருக்கும் இவர் தனது பேரனை வெளிநாட்டுக்கு அனுப்ப பெரும் பாடுபட்டுள்ளார்।
அவரது பேரன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பெரும்புள்ளியொருவரின் உதவியால் விடுவிக்கப்பட்டுள்ளார்। அச்சந்தர்ப்பத்தில் அந்தப்பெரும்புள்ளியின் நெருங்கிய நபர் எனச்சொல்லிக்கொண்டவர் அந்த இளைஞரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக வாக்குறுதி கொடுத்து பணம் வாங்கியுள்ளார்। இவர்களுடைய சந்திப்பு கொட்டாஞ்சேனைப் பகுதியிலுள்ள பிரபல உணவகத்தில் இடம்பெற்றுள்ளது।
ஒருமாத காலப்பகுதியில் ஐந்து இலட்சம் பணம்பெற்றுக்கொண்ட அந்த நபரை இப்போது தொடர்புகொள்ள முடிவதில்லை என கவலையுடன் கூறுகிறார் அந்த அம்மா।
யார் எப்படியென்றாலும் பரவாயில்லை தன்பிழைப்புக்கு பணம்கிடைத்தால் போதும் என இயங்கும் இவ்வாறான பூனை வேஷம்போட்ட நரிகளிடமிருந்து சம்பந்தப்பட்டவர்கள் தம்மை காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.

எந்த ரூபத்திலும் வரலாம்!

இலங்கையிலிருந்து மத்திய கிழக்குக்கு தொழில்தேடிச்செல்லும் இளம் பெண்கள் ஏராளம்। இவர்களில் பலருக்கு எமது நாட்டிலேயே ஏற்படும் அக்கிரமங்கள் குறித்து தகவல் அறியக்கிடைத்தது।

விழிப்பாயிருங்கள்.... இதோ விடயத்தை சொல்கிறேன்।
பெரும்பாலும் வெளிநாட்டு வேலைகள் குறித்து அதிகம் தெரிந்திராத பெண்கள் தரகர்களை நாடுகின்றனர்। எல்லா வேலையும் செய்து முடித்த பின்னர் அந்தப் பெண்களை அவர்களுடைய ஊரிலிருந்து தரகர்களே அழைத்து வருகின்றனர்। அப்படி அழைத்து வரும்போது அவர்கள் கைக்கொள்ளும் தந்திரம் இதுதான்।
இரவில் பெண்களை அழைத்து வரும் தரகாகள் ,விமான நிலையத்துக்கு வந்தவுடன் இன்று உங்களுக்கான பயணம் இல்லையாம் நாளை காலை தானாம் என்று சொல்கின்றனராம்। அதாவது முன்திட்டமிட்டு செய்யும் செயல் இது।
சரி இப்போது வீட்டுக்கும் போய் வர முடியாது। இங்கேயே நின்றுகொண்டிருந்தால் பொலிஸார் விசாரணை செய்வார்கள் எனக் கூறி ஏதாவது சொல்லி அங்குள்ள ஹோட்டல்களுக்கு அழைத்துச்செல்கின்றனர்। எப்படியாவது போய்ச்சேர வேண்டும் என்பதால் எல்லாவற்றையும் சமாளித்துச்செல்கின்றனர் இந்த அப்பாவிப் பெண்கள்।
வெளிநாடு செல்லும் பெண்கள் இனியாவது கவனமாக இருப்பார்களா? காம விஷமிகள் எந்த ரூபத்திலும் வரலாம்.

கோயிலுக்குள் மாடு வெட்டப்பட்டது... சிலைகளில் இரத்தம்!!!

இலங்கை மட்டக்களப்பு ஆரையம்பதியில் இனவெறிகொண்ட விஷமிகள் சிலர் ஆரையம்பதி நரசிம்மர் ஆலயத்தில் மாடு வெட்டி இரத்தத்தை கடவுள் சிலைகளில் ஊற்றியிருக்கின்றனர்। மாட்டின் உடல் பாகங்கள் கோயிலுக்குள் அங்காங்கே வீசப்பட்டுள்ளன।

ஆரையம்பதி செல்வநகர் பள்ளிவாசலுக்கருகில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் முஸ்லிம்கள் மூவர் துப்பாக்கிப் பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளனர்। யார் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்பதை அறியாத சிலர் இதுவரை மூடி மறைத்து வந்த தமது இனவெறியை இவ்வாறு காட்டியுள்ளனர்। கும்பாபிஷேகத்துக்கு தயாராக இருந்த ஆலயத்தில் இவ்வாறு இடம்பெற்றுள்ளது। தமிழ் மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று ஹர்த்தால் இடம்பெற்ற போதிலும் இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் இனங்காணப்படவில்லை।

இதற்கு முஸ்லிம் அரசியல்வாதியொருவர் துணைபோனதாயும் நம்பத்தகுந்த தகவல் தெரிவித்தது। உண்மை தெரிந்தும் தமிழ் ஊடகங்கள் இதனை வெளிப்படையாக குறிப்பிடாதது வருத்தம் தருகிறது। தனது மதத்தை நேசிக்கும் எந்த மதத்தினனும் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டான்।
யுத்தத்தால் உரிமைகள் ஒருபுறம் சிதைக்கப்பட மறுபக்கம் மனதாலும் தமிழர்கள் புண்படுத்தப்படுகின்றனர்। யார் தீர்வினைத் தரப்போகிறார்கள்? வழமைபோல இந்துகலாசார அமைச்சும் இந்து நிறுவனங்களும் மெளம் சாதிக்கப் போகின்றனவா?

எனது வலைப்பூ பத்திரிகையில் மலர்ந்தது!


இலங்கையில் வெளிவரும் மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் எனது புதிய மலையகம் வலைத்தளம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது। காலையில் பத்திரிகையை பார்த்தவுடன் என்னுள் இனம்புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது। இலங்கையில் வலைப்பதிவர்கள் மற்றும் அவர்களின் வலைப்பதிவுகள் பற்றி அறிமுகப்படுத்துவது வரவேற்கத்தக்கது।


மெட்ரோவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்।
இலங்கை பதிவர்களாகிய ( அறிந்தவரையில்)
1 ] உடுவைத்தில்லை 2 ] டொக்டர்.எம்.கே.முருகானந்தன்3 ] மேமன்கவி 4 ] மயூரேசன்5 ] ஊரோடி பகீ 6 ] 'ரேகுப்தி' நிவேதிதா7 ] கோவையூரான் 8 ] காண்டிபன் 9 ] மருதமூரான் 10 ] வந்தியத்தேவன்11 ] பாவை 12 ] தாசன் 13 ] மு.மயூரன் 14 ] மாயா 15 ] தேனாடான் 16] சேரன்கிரிஷ் 17] மப்றூக்18] Hairath 19] உதய தாரகை 20] ஹயா 21] பஹீமாஜஹான் 22 ] சு.முரளிதரன் 23 ] வவுனியா தமிழ் 24 ] யாழ் வானம்பாடி 25 ] M.RISHAN SHAREEF 26 ] சி.மது 27 ] Paheerathan 28 ] வியாபகன் 29] அபர்ணா ३०] வர்மா
இவர்களுடனும் அனைத்து இணைய நண்பர்கள் வலைத்தள நண்பர்களுடனும் எனது சந்தோஷத்தை பகிர்ந்துகொள்கிறேன்।

"தமிழனாய் பிறந்துவிட்டோமய்யா"

கொழும்பு கொட்டாஞ்சேனையில் கடந்த சனிக்கிழமை மாலை இடம்பெற்ற சம்பவம் இது। ஆலயத்துக்கு சென்று திரும்பிக்கொண்டிருக்கையில் ஜிந்துப்பிட்டி சந்திக்கருகில் ஐந்து பொலிஸாரும் இரண்டு இராணுவத்தினரும் இணைந்து வயதான அம்மாவை அதட்டி விசாரித்துக்கொண்டிருந்தனர்।

எனது நடையின் வேகத்தைக் குறைத்து என்ன நடக்கிறது எனப் பார்த்த போது எத்தனை பிள்ளைகள் புலிகள் இயக்கத்தில் இருக்கின்றனர் என சிங்களத்தில் அவர்கள் கேட்க பாஷை தெரியாத அம்மா அழாத குறையாக தடுமாறினார்।

அவரிடமிருந்த பையை வாங்கிய அவர்கள் அதிலிருந்த துணிகளை எல்லாம் எடுத்துக் கீழே போட்டு துருவி ஆராய்ந்தனர்। சற்று நேரத்தில் அவர்கள் அங்கிருந்து சென்றவுடன் அந்த அம்மாவிடம் சென்று நடந்ததை விசாரித்தேன்।

கொட்டும் மழையில் அதிகமாய் நனைந்துவிட்ட துணிகளை எடுத்து பையில் திணித்தவாறு பதில் சொன்னார்॥ "தமிழனாய் பிறந்துவிட்டோமய்யா"

தான் தங்கியிருந்த லொட்ஜை தேடமுடியாததால் தான் இத்தனை சிரமம்।
கொலை செய்யும் குற்றத்துக்கு சமனாக வார்த்தைகளால் காயப்படுத்தும் படையினர் சிலரின் நடவடிக்கையை யாரும் கண்டுகொள்ளாதது ஏன்? அரசாங்கத்தில் அங்கம் வகித்து தமிழ்விரோதத்துக்கு துணைபோகும் தமிழ் அமைச்சர்கள் சிலர் வாய்திறந்து பதில் சொல்வார்களா?

கவலையுடன் பதிவிடுகிறேன்...!இலங்கையில் இன்னும் ஜாதிப்பிரச்சினை தலைவிரித்தாடிக்கொண்டிருக்கிறது என்பதற்கு நல்லதொரு உதாரணத்தை இங்கு குறிப்பிடுகிறேன்। உண்மையில் இந்தச்சம்பவம் என்னை எந்தளவு கவலைக்குள்ளாக்கியது என்பதை வெளிப்படுத்த முடியாதவனாக இருக்கிறேன்।

வடக்குப் பகுதியை பிறப்பிடமாகக் கொண்ட எனது தோழியொருத்தியும் மலையக இளைஞன் ஒருவனும் காதலிக்கிறார்கள்। இந்த விடயம் அவளுடைய வீட்டுக்கு தெரியவந்துள்ளது। அவளுடைய அம்மா கண்டபடி திட்டி அடித்து கடைசியில் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

நாடு வீடில்லாத நாதாரிப் பரம்பரை ஒருத்தனை லவ் பண்றியே। அங்க போய் கொழுந்தெடுக்கப் போறாயா? எங்கள கொல்ற ஆமி காரனுக்கு உன்ன கட்டி வச்சாலும் கட்டி வப்பபேன்। அந்த வடக்கத்தையானுக்கு ( என்ன அர்த்தம் என்று நீங்க தான் சொல்லனும்) கட்டி வைக்க மாட்டேன்டி। அங்க உள்ள எல்லாருமே படிக்காதவனுங்க। தோட்டகாட்டானுங்க,நாகரீகம் தெரியாதவனுங்க.கீழ்ஜாதிக்காரனுங்க.... உனக்கு புத்தி எங்கேயடி போனிச்சு.... என்றாராம்.

கண்ணீருடன் அவள் என்னிடம் கூறியபொழுது உண்மையில் என்ன பதில்சொல்வதென்றே தெரியவில்லை. வட,கிழக்கு மலையகம் என்ற பாகுபாட்டில் தற்போதைய இளைஞர்கள் இல்லை. ஆனால் சிலர் அதை வைத்துக்கொண்டே தம்பட்டம் அடிக்கிறார்கள். இதுவரை நானோ என் சார்ந்த நண்பர்களோ அப்படியில்லை. ஏன் இவர்கள் மட்டும் இப்படி?

மலையகம் என்றால் கீழானவர்களா? மலையகத்தில் உள்ள அனைவருமே லயன்களில் பிறந்து வளர்ந்தவர்கள் அல்லவே? ஏன் படித்தவர்கள் இல்லை? பெரும்பாலான அப்பாவி மக்களுக்கு அடிப்படைக் கல்வியறிவும் பொருளாதாரமும் இல்லையே தவிர அனைவரிடமும் உண்மையான அன்பிருக்கிறது. இங்கு காதலை எதிர்த்தல் சாதராண விடயம் அதற்காக இப்படியெல்லாம் அவர் பேசியிருக்க கூடாது.

அந்த இளைஞனை விட தமிழினத்தையே அழிக்கநினைக்கும் மூச்சில் கூட போர்வாசம் வீசும் ஆமி காரன் நல்லவனா? ஏனம்மா இந்த சிந்தனை?

தமிழர்களே இப்படி பாகுபடாக நினைக்கும் போது தமிழர்களால் தமிழர்கள் தலைகுனிய நேரிடும் போது ஆறுதலுக்காவது அடுத்தவன் வரமாட்டான்।

உயிருள்ளவரை தமிழ்மூச்சு,தமிழ்ஜாதி,தமிழ்நேசம் என வாழ்ந்து பிரிவினைகளைத்தவிர்த்திருக்கும் இணைய நண்பர்களிடம் இப்பதிவை பதிலுக்காக சமர்ப்பிக்கிறேன்।

(நண்பர் அருணின் வலைப்பக்க உண்மைச்சம்பவத்தை படிக்க,

http://hongkongeelavan.blogspot.com/2008/01/blog-post_1160.ह्त्म्ल )