Friday, April 10, 2020

கானல் நீராகிப்போன ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம்! பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார்?

லையக பெருந்தோட்ட மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் கறுப்புச் சரித்திரத்தில் மற்றுமொரு நாள் இன்று உதயமாகியிருக்கிறது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் இன்றுமுதல் வழங்கப்படும் என்ற, அரசாங்கத்தின் பொறுப்புமிக்க அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் வாக்குறுதி மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.

தொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச சம்பளம் என்பதற்கும் அடிப்படைச் சம்பளம் என்பதற்கும் வித்தியாசம் உண்டு. அரசியல்வாதிகளின் சாணக்கியமான காய்நகர்த்தலில் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை பல தடவைகள்,பலரும் சுட்டிக்காட்டியிருந்தார்கள்.

கொரோனா அச்சுறுத்தலிலும் தேயிலைத் தேசத்தைக் காக்கும் மக்கள் இன்று சகலராலும் கைவிடப்பட்டிருக்கிறார்கள்.

மலையக பெருந்தோட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம் எனச் சொல்லும் தலைவர்களின் கையாலாகத்தனத்தின் வெளிப்பாட்டை இன்று நாம் காண்கிறோம்.

இந்த விடயத்தில் அரசாங்கத்தின் நழுவல்போக்கு, அரசியல்வாதிகளின் ஏமாற்று நாடகம் ஆகியவற்றின் சிலதுளிகளை விபரிக்க முயற்சிக்கிறேன்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா அடிப்படைச் சம்பளம் வழங்குவதில் அரசாங்கத்துக்கு உள்ள சவால்கள் என்ன?
இலங்கை தேயிலையிலையில் 24.5 வீதமான உற்பத்தியை மாத்திரமே பெருந்தோட்டங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன. மிகுதி 75.5 வீதமானவை சிறு தோட்டங்களில் உற்பத்தியாகின்றன.

ஒப்பீட்டு ரீதியில் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் வழங்கப்படுமாயின் அதற்கு ஒத்தாற்போல சிறுதோட்ட உரிமையாளர்கள், தொழிலாளர்களுக்கும் சலுகைகள், நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டிய கட்டாயச் சூழல் எழுந்துள்ளது.

சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபை, சிறுதோட்ட உரிமையாளர்கள் சங்கம், இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர் சங்கம், தேயிலை ஏற்றுமதியாளர் சங்கம் ஆகியன இதற்கான அழுத்தங்களை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றன.

இதனால் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளது.

மறுபுறம் தேயிலை உற்பத்தி விலையேற்றம், தொழிலாளர்களிடம் வினைத்திறன் இன்மை (குறிப்பாக ஆண்கள்), தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி, ஏற்றுமதியில் உள்ள தடைகள் ஆகியவற்றை முதலாளிமார் சம்மேளனம் காரணங்களாக முன்வைத்தது.

இதனால் 1000 ரூபா அடிப்படைச் சம்பளத்தை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டது.
(இன்னும் பல காரணங்கள் உண்டு)

இதேவேளை, தொழிலாளர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கும் தொழிற்சங்கங்கள் அதற்கான பொறிமுறைகளை சரியான முறையில் முன்வைக்கவில்லை.

2015 ஆம் ஆண்டு, பொது மேடையில் ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் பெற்றுக்கொடுப்போம் என உறுதியளித்தார் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்.

ஆனால் 2019 ஆம் ஆண்டு, “ஆயிரம் ரூபா எப்படி கொடுக்கப் போறீங்கனு ஜனாதிபதிகிட்ட கேட்டேன்” என்கிறார். இதன் மூலம் அடிப்படை பிரச்சினை என்னவென்பது தெளிவு.

இதேவேளை, இராஜாங்க அமைச்சர் ரொமேஷ் பத்திரனவின் கருத்துக்கும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் கருத்துக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்பட்டன.

கம்பனிகளுடன் பேச்சுவார்த்தையில் இழுபறியில் இருக்கிறது, பேச்சுவார்த்தை நடத்துகிறோம், சாதகத்தன்மைகள் குறித்து ஆராய்கிறோம் என ரொமேஷ் பத்திரன கூறும்போது,
மறுநாள்
ஏப்ரல் 10 ஆம் திகதி உங்களுக்கு 1000 ரூபா சம்பளம் கைக்கு கிடைக்கும். இது நிச்சயம், நேத்தும் ஜனாதிபதியோட பேசினேன், பிரதமருக்கும் சொன்னேன் என்கிறார் ஆறுமுகன் தொண்டமான்.

(ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் தொழிலாளர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதால் பல தடவைகள், அமைச்சுப் பொறுப்பையும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜினாமா செய்தவர்தானே? என மனதில் கேள்வி உதித்தால் நான் பொறுப்பல்ல தோழர்களே!)

வடக்கில் ஒருவிதமான தோரணையில் ஒரு கருத்தையும் நுவரெலியாவில் இன்னொரு விதமான தோரணையில் இன்னொரு கருத்தையும் அவர் முன்வைத்து வந்தார்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் அமைச்சர் ஆறுமுகனின் தெளிவற்ற பேச்சு, சம்பள அதிகரிப்புக்கான நியாயத்தை எடுத்துக்காட்டவில்லை.

தொழிலாளர்களின் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கு இவ்விந்த சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என நிறுவுவதற்கு பலம்பொருந்திய (சொல்லப்படுகின்ற) இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் முடியவில்லை.

நிற்க,
இந்நிலையில், முதலாளிமார் சம்மேளனத்தினால் ஏன் அடிப்படைச் சம்பளம் ஆயிரத்தை வழங்க முடியாது என்ற கேள்வியும் எழுகிறதல்லவா?

இலாபத்தை நோக்காகக் கொண்ட எந்தவொரு நிறுவனமும் அந்த நோக்கத்திலிருந்து பின்வாங்குவதைத் தவிர்க்கின்றன.

இறுதியாக முதலாளிமார் சம்மேளனம் அரசாங்கத்திடம் முன்வைத்த முன்மொழிவு பரிந்துரையின் அடிப்படையில் தொழிலாளி ஒருவருக்கு மொத்த சம்பளமாக மாதாந்தம் 25,000 வழங்க முடியும் எனத் தெரிவித்திருந்தது.

அதுவும் ஊழியர் சேமலாப நிதி, நம்பிக்கை நிதி அடங்கலாக வரவுக் கொடுப்பனவையும் உள்ளடக்கியது.
அந்த பரிந்துரை வருமாறு,


இங்கே, அடிப்படைச் சம்பளத்தில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்த முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் தெரிவிக்கவில்லை.

அத்துடன் தேயிலை, இறப்பர் தோட்டங்கள் காடாகிப் போயுள்ளமைக்கு தொழிலாளர்களையே குறை கூறி வருகின்றன.

அதேவேளை, தற்போதைய சூழ்நிலையில் கொரோனா ஆபத்து குறித்து அதிக அவதானம் செலுத்தப்பட்டு வருவதால் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இது வாய்ப்பாக அமைந்து விடுகிறது.

அதுமாத்திரமன்றி கடந்த காலங்களில் தொடர்ச்சியாக கடும் வெயில் காலநிலை காணப்பட்டது. இதனால் தேயிலை தொழிற்சாலைகள் பல இயங்காமால் போயின. தேயிலை உற்பத்தியிலும் சிறு அளவிளான வீழ்ச்சி ஏற்பட்டது.

இவையும் முதலாளிமார் சம்மேனளத்தால், சம்பள அதிகரிப்பு சாத்தியமற்றதற்கான காரணங்களாக முன்வைக்கப்படுகின்றன.
கடந்த மார்ச் 20 ஆம் திகதி வரையில் முதலாளிமார் சம்மேளனத்துடன் அரச தரப்பினர், தொழிற்சங்க தரப்பினர் ஆகியோர் 18 சுற்று பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தனர்.

கொழும்பு ஏல விற்பனையில் தேயிலைக்கு உரிய கேள்வி விலை நிர்ணயம் கிடைக்காமையை சுட்டிக்காட்டிய முதலாளிமார் சம்மேளனம், ஒரு சில நாடுகளுக்கான ஏற்றுமதியில் வீழ்ச்சி குறித்தும் வாதாடியிருந்தது.

அதேவேளை, கடந்த டிசம்பர் (2019) மாதத்தில் ஒரு கிலோ தேயிலைக்கான உற்பத்திச் செலவு 631 ரூபாவாக இருந்த வேளை, விற்பனை விலை 508 ஆக இருந்ததாகவும் சுட்டிக்காட்டியது.

வெளியார் உற்பத்தி முறைமை நடைமுறைப்படுத்தப்படுமாயின் அதிக சம்பளத்தை வழங்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அதனை ஊக்குவிப்பதற்கு தொழிற்சங்கள் முன்வரவேண்டும் எனவும் முதலாளிமார் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதேவேளை, ஆண் தொழிலாளர்களின் செயற்திறனில் முதலாளிமார் சம்மேளனம் திருப்தியை வெளிப்படுத்தவில்லை.

அதுமாத்திரமல்லாது, இலங்கையில் சராசரியாக நாளொன்றுக்கு 18 முதல் 21 கிலோ கிராம் தேயிலைக் கொழுந்து பறிக்கப்படும் அதேவேளை, இந்தியாவில் அது 40 கிலோ கிராமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அரச தரப்பினர் கூறுவதுபோல ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் வழங்க முடியும் என்றால், அரசாங்கத்துக்குச் சொந்தமான பெருந்தோட்ட நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு ஏன் அதனை வழங்க முடியாது என்ற கேள்வியும் முதலாளிமார் சம்மேளனத்தினால் எழுப்பப்படுகிறது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் உலகம் கொரோனா என்ற கொடிய நோய்க்கு முகங்கொடுத்திருக்கிறது. இதனால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பேச்சுவார்த்தைகளுக்கும் தடைகள் ஏற்பட்டுள்ளன.
2020, பெப். 20 - பேச்சுவார்த்தை

2020, பெப்.20 - பேச்சுவார்த்தை
தேயிலை ஏற்றுமதியில் சலுகைகளைக் கொடுத்து, அதன் மூலமான பணத்தை தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு பயன்படுத்தும் யோசனை ஆராயப்பட்ட போதும் அதன் சாத்தியப்பாடுகள் குறைவாகவே காணப்படுகின்றன.

ஏனென்றால் அதன் விளைவு அரச ஏற்றுமதி வருமானத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் (தற்போதைய சூழ்நிலை போல) பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனால் தேயிலை ஏற்றுமதி பெரும் சவால்களை எதிர்கொள்ள நேரிடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆக, யதார்த்தங்களைப் புரிந்துகொண்டு தேயிலை ஏற்றுமதிகள் பாதிக்கா வண்ணம் தொழிற்சங்கங்கள் சாதகமான முன்மொழிவுகளை சமர்ப்பிக்க வேண்டும்.

இங்கே, இந்த விடயத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை மாத்திரம் குறைகூறுவது நியாயமற்றது. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும்  தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களிடம் சந்தா பெற்றுக்கொள்ளும் ஏனைய தொழிற்சங்களும் இந்த விடயத்தில் அக்கறை கொள்ள வேண்டும்.

பெரும்பான்மை இனப் பலத்தோடு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் சிறுபான்மையினரின் கோரிக்கைகளுக்கான தீர்வுகளை தாம்பாளத்தில் வைத்துத் தந்துவிடப்போவதில்லை. அதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.

வெறுமனே அறிக்கைகளால் மாத்திரம் சம்பள விடயத்தை வெற்றிகொள்ள முடியாது என்பதை  உணர்ந்து செயல்திறன் மிக்க நடவடிக்கைகளில் ஈடுபடும் வரை இந்தப் பிரச்சினை தொடர்ந்துகொண்டே இருக்கும் என்பதுதான் கண்கூடு.

-நிர்ஷன் இராமானுஜம்-
10.04.2020

(இலங்கைத் தேயிலை ஏற்றுமதித்துறை எதிர்நோக்கியிருக்கும் சவால்கள், உள்நாட்டில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள், தேயிலை மலைகள் தரிசு நிலமாகியதன் விளைவுகள் குறித்து புள்ளி விபரங்களோடு அடுத்த கட்டுரையில் சந்திக்கிறேன்)