Sunday, November 3, 2019

சூரியன் வானொலியின் செய்திகள்- ஒரு சாமானியனின் பார்வை!


லங்கையில் சூரியன் வானொலிக்கு என்று தனியிடம் உண்டு. ஊடகப் பரப்பிலும் சூரியன் என்ற பெயருக்கு களங்கம் எதுவும் இல்லை.

அண்மைக் காலமாக சூரியனை நான் மிக அதிகமாகவே விமர்சித்து வந்திருக்கிறேன். சூரியன் இணையத்தளச் செய்திகளின் மிக மோசமான போக்கு குறித்து அதன் ‘பாஷை’யில் குறிப்பிட்டிருந்தேன்.

அந்தக் காலப்பகுதியில் சூரியனுக்கு எதிரான பதிவுகள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்திருந்தன. சுருக்கமாகச் சொல்லப்போனால், பொழுதுபோகாத சந்தர்ப்பங்களில் சூரியன் செய்திகளுக்கு பேஸ்புக்கில் வரும் பின்னூட்டங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதும் உண்டு.

நான் சூரியன் வானொலியின் அபிமானி. ஆரம்ப காலத்தில் பிரதி வெள்ளிக் கிழமைகளில் காலை நேரத்தில் இலக்கியம் பற்றிய நிகழ்ச்சி இடம்பெறும். அந்த நிகழ்ச்சியை நான் பெரும்பாலும் தவறவிட்டதில்லை. செய்தி அறிக்கைகளையும் அப்படித்தான்.

இப்போது அடிக்கடி வானொலி கேட்பதில்லை. காலை நேர நிகழ்ச்சியில் 7.30 மணி, பொற்காலப் புதனில் பெரும்பாலும்- அவ்வப்போது செய்தியறிக்கைகள் எனக் கேட்பதுண்டு.

சூரியன் செய்திகள் பக்கசார்பாக இருப்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அது பெரும் பணக்கார முதலையின் சொத்து என்பதால் அநேகமாக அலட்டிக் கொள்வதில்லை.

ஆனாலும் செய்தி அறையில் தொழில்புரியும் ஊடகவியலாளர்களின் நேர்மையை நான் நன்கறிவேன்.

ஆயினும் என்னதான் செய்திகளை எழுதினாலும் அதனை மக்களிடம் கொண்டு சேர்ப்பது வாசிப்பாளர்கள்தான். அவர்களுடைய அண்மைக்கால போக்கு மிக மோசமாக இருக்கிறது.

உச்சரிப்பு என்ற பெயரில் நச்சரிக்கிறார்கள். அதை சூரியனின் மேலிடம் தான் ஒரு ட்ரெண்டுக்காக உருவாக்கிப் பின்தொடர வைக்கிறார்களோ தெரியவில்லை. ஆனால் அதனைக் கேட்கும்போது நெஞ்சு அழுத்துகிறது.

எல்லா அறிவிப்பாளர்களுடைய வாசிப்பும் அல்ல. ஒருசிலரின் வாசிப்பு….. ம்ம்ம் வார்த்தைகள் இல்லை.

தமிழில் ஒரு மாத்திரைச் சொற்களை மூன்றரை மாத்திரைக்கு இழுத்துச் செல்வதும், தங்களுடைய பெயரை உச்சரிப்பதில் காட்டும் அழுத்தத்தை ஏனைய முக்கியமான வரிகளுக்கு வழங்காமல் இருப்பதையும் நான் அவதானிக்காமல் இல்லை.

இதை, சூரியனின் பாஷையில் கூறியதற்கு விளக்கம் கேட்டு அழைப்புகள் பல வந்திருந்தன. அதன் விளக்கமாகவே இந்தப் பதிவை மேற்கொள்கிறேன்.
இது மோசமான பதிவு என்று, இன்று விமர்சிப்பவர்கள் - கடந்த காலங்களில் நான் ஏனைய வானொலிகளை, தொலைக்காட்சியை கடுமையாக விமர்சித்தபோது கூடிப் பேசி மகிழ்ந்தவர்கள் என்பதையும் நான் அறியாதவனில்லை.

நிற்க:
வானொலி என்பது ஒரு வீட்டின் குழந்தை போல, அறிவிப்பாளர்கள் எனச் சொல்லிக் கொள்ளுகின்ற பெரும்பாலானவர்களுக்கு இந்த விடயம் தெரிந்திருப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு.

மயான அமைதியிலும் எங்கோ ஒரு மூலையில் தன்னந்தனியாக ஒலித்துக்கொண்டிருக்கும் வானொலியை நேசிப்பவர்கள் மிக அதிகம். அந்தக் குழந்தை சிரிக்கும் போது சிரிப்பதும் அழும்போது அழுவதுமாக நாம் பழக்கப்பட்டிருக்கிறோம்.

அதேபோன்று குழந்தை நல்லது செய்யும் போது பாராட்டுவதும் முறை தவறும்போது கண்டிப்பற்குமான அத்தனை உரிமையும் நமக்கிருக்கிறது.

இதனை யாரும், எந்த வகையிலும் மறுக்க முடியாது.

சூரியன் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்துவிடலாம் மக்கள் எதிர்த்துக் கேட்க மாட்டார்கள் என்ற மனநிலை ஒருசிலருக்கு இருக்குமானால் அது மிக மோசமான பின்விளைவை ஏற்படுத்தும். சூரியனை விரும்பாத பலர் மாற்று வானொலிகளைக் கேட்பதில்லையா? இணைய வானொலிகளைச் செவிமடுப்பதில்லையா?

சூரியனோடு நெடுங்காலம் பணிபுரியும் பலருக்கு அதன் தற்போதைய போக்கு பற்றிய விவாதத்தைக் கருப்பொருளாகக் கொள்ளும்போது என்னுடைய பதிவுகள் நிச்சயமாக மனதைப் புண்படுத்திவிடாது.

அறிவும், பண்புகளுக்குமான தேவைகளைத் தாண்டி காசு, காசு என்று - பணம்தான் முக்கியம் என்பதைத் தூண்டிவிட்டதும் சூரியன்தானே? என்று என் நண்பர் ஒருவர் ஆதங்கப்பட்டுக்கொண்டார்.

அந்தக் கேள்விக்கு என் பதில் மௌனமாகவே இருந்தது.

இங்கே அறிவிப்பாளர்கள், நிகழ்ச்சிகளைப் பற்றிய எந்தக் கவலையும் எனக்கு இல்லை. நான் முழுவதுமாக ஆதங்கப்படுவது செய்தி அறிக்கைகள் பற்றித்தான் என்பதை திருத்தமாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

மூத்தவர்களிடம் கற்று அறிந்த அறிவிப்பாளர்கள் சூரியனில் இருக்கிறார்கள். அவர்கள் ஒருநாளைக்கு செய்தி வாசிக்கட்டும். வித்தியாசத்தை நேயர்கள் நிச்சயம் உணர்வார்கள்.

நேயர்களின் இரசனையை மாற்றி, இப்படித்தான் தமிழ் மொழிநடை இருக்க வேண்டும் என ஒரு மாயை ஏற்படுத்தப்படுவது ஆரோக்கியமானதல்ல.

அடுத்ததாக, எனது பேஸ்புக் கணக்கு தனிப்பட்டது. அது, இறக்குவானையில் பிறந்த நிர்ஷன் இராமானுஜம் என்ற சாமானியனின் கணக்கு. அதில் எனக்குத் தெரிந்ததை, நான் அறிந்ததை, கிண்டல், குழப்பங்களை, கவிதைகளை, இரசனைகளை என எல்லாவற்றையும் பதிவிடுவேன்.

அதனையும் ஊடகத் தொழிலையும் இணைத்துப் பேசுவது விமர்சிப்பது… அடடா…. ஒரு சிலருக்கு இது தொழிலாகிப் போய்விட்டது.

ஊடகவியலாளர்களாக நாம் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். தொழிலில் போட்டித்தன்மை இருக்கலாம், அதற்காக நமது சுயமான அன்பை, பிணைப்பை எப்போதும் விட்டுக்கொடுத்ததில்லை.

எனது பேஸ்புக் கணக்கு, ஊடகவியல் தொடர்புபட்டது என்றால் எனது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை நான் எங்கே பதிவிடுவது? இது நியாயமான கேள்விதானே தோழர்களே?

ஆக, சூரியன் மீதான என் அண்மைய பதிவை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டோரும் இல்லாமல் இல்லை. காற்றுள்ள போதே தூற்றிக் கொண்டு, அந்தக் காற்றில் தீயையும் மூட்ட முயற்சித்தவர்கள் இருக்கிறார்கள். இதுதானே உலகம்?

இனியும் என் பயணம் இதேபோன்று தொடரும். இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. நாம் பக்கசார்பற்ற செய்தியறிக்கையைத் தருகிறோம், தமிழ்ப் புலமைமிக்க அறிவிப்பாளர்கள்தான் செய்தி வாசிக்கிறார்கள் என நியாயம் வழங்கப்படுமாக இருந்தால், அதனைக் கடந்து செல்லவும் பிரயத்தனப்படுகிறேன். ஏனென்றால், இங்கே எல்லாமே சிலகாலம் தான்.

-நிர்ஷன் இராமானுஜம்-
இறக்குவானை.
03.11.2019