Friday, June 20, 2008

இலங்கை யுத்தம் சாதிப்பிரச்சினையை இல்லாமல் செய்ததா?

குறிப்பிட்ட சில நண்பர்களுடன் சேரும்போது சில காத்திரமான விடயங்கள் பற்றிக் கலந்துரையாடுவதுண்டு।அவ்வாறு எமக்குள் பரிமாறப்படும் பல தகவல்கள் இதுவரை அறிந்திராத புதியனவற்றை புகுத்துவதாக இருந்துள்ளதையும் நான் உணர்ந்திருக்கிறேன்।
யுத்தத்தினால் பொதுமக்களுக்கு ஏற்படும் உளத்தாக்கங்கள் பற்றி நண்பர் ஒருவருடன் நேற்றுமுன்தினம் வாதித்துக்கொண்டிருந்த போது அவர் சொன்ன கருத்து இதுதான்।
யுத்தத்தில் எத்தனையோ பிரதிவிளைவுகள் ஏற்படுகின்றன என்பது உண்மை। ஆனால் இலங்கையில் குறிப்பாக ஈழத்தில் சாதிப் பிரச்சினை ஒழிவதற்கு யுத்தம் பிரதான காரணமாக இருந்துள்ளது। வெவ்வேறு சாதிப்பிரிவினரிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தியது என்று தனது வாதத்தை தொடங்கினார்। யாழ் தீவுப் பகுதியைச் சேர்ந்த அந்த நண்பர்சொன்ன தகவல்கள் அறியும் ஆவலை என்னுள் தூண்டின।
சாதி மோகம் என்று யாராவது பேசினால் எதிர்த்து நாலு வார்த்தை கேட்டுவிட வேண்டும் என்பதுதான் எனது ஆவல்। ஆனால் நண்பர் கூறிய சில கருத்துக்கள் என்னை யோசிக்க வைத்தன। இந்தளவுக்கு, ஏன் இப்படியும் இருந்ததா என சிந்தித்தேன்।
அவர் சொன்ன கருத்துக்கள் இதுதான்।
ஈழப் போராட்டம் ஆரம்பிக்கும் முன்னர் வடபகுதியில் பல்வேறு சாதிப்பிரிவுகள் இருந்தன। அந்தப் பிரிவினையால் பூதாகரமான பிரச்சினை உருவாகி கொலைக்கலாசாரம் நிலவியதும் உண்டு। தீண்டாமை உட்பட கீழ்சாதிக்காரனின் வயலில் கால்வைத்து நடந்து சென்றால் கூட மறுபுரத்தில் சுடுநீரும் மஞ்சளும் கலந்து நீராடித்தான் செல்வது வழக்கம் என்ற சாதியினரும் இருந்தனர்। மீனவர்களை, குயவர்களை, தொழிலாளர்களை மதிக்காதவர்கள் ஏராளமாக இருந்தனர்। ஆனால் என்று ஈழப் போராட்டம் தொடங்கியதோ அன்றிலிருந்து இந்தச் சாதிப்பிரச்சினை குறைந்தது। இப்போதும் இல்லை என்றில்லை। ஆனால் ஓரளவுக்கு குறைந்திருக்கிறது।
போராட்டத்தின் போது அதிலும் குறிப்பிட்ட சில காலப்பகுதிக்கு பின்னர் இயக்கத்தில் சேர்ந்தவர்கள் சாதி பார்க்கவில்லை। அதிலும் சாதி என்ற ஒன்றுக்கு இயக்கத்தால் தடைவிதிக்கப்பட்டது। தமது சாதியினரின் நிலங்களுக்கு மட்டும் வேற்று சாதியினரின் நிழல்,காற்று கூட படாமல் பலர் பாதுகாத்து வந்தனர்। யுத்தத்தால் இடம்பெயர இடம்பெயர அவர்களது பேராசையில் மண் விழுந்தது।
ஈழமண் என்ற எண்ணம் பலரிடையே துளிர்விட ஆரம்பித்தபோது சாதிக்கு இடமில்லாமல் போனது। எனினும் இன்னும் பலர் சாதி சாதி என அலைந்து கொண்டிருக்கிறார்கள்। சாதி என்று பார்த்து நாற்பது வயது வரை தமது மகளை திருமணம் முடித்துக்கொடுக்காதவர்கள் இருக்கிறார்கள்। என்னதான் இழப்புகள் ஏற்பட்டாலும் சாதி பிரச்சினை குறைந்தது இந்த யுத்தத்தால் தான்। அப்படி இல்லாவிடின் சாதி என்ற பெயரால் ஈழமே பிளவுபட்டு மக்கள் பிரிவுகள் பல உண்டாகியிருக்கும் என்றார்।

ஆம்... இதுபற்றி நிறைய ஆராய வேண்டும்। எனக்கு அந்தளவுக்கு தகவல் தெரியாது। மலையகப் பகுதிகளைப் பொருத்தவரையில் சாதி என்று பார்க்கப்பட்டாலும் அது பெரிதாக பேசப்படுவதில்லை। வறுமை,ஏழ்மை என்பன அவற்றை மறக்கவைத்துவிட்டன।
இந்த நண்பர் குறிப்பிட்டதைப் போல யுத்தம் இல்லாவிட்டால் சாதிமுறையால் எமது சமுதாயம் பிளவுபட்டிருக்குமா என்ற கேள்வி எழுகிறது। பதிவர்களே பதில் தெரிந்தால் சொல்லுங்கள்।

ஈழத்தில் (எனக்குத் தெரிந்தவரையில்)
அம்பட்டர்,
இடையர்,
கடையர்,
கரையார்,
கன்னார்,
கள்வர்,
குயவர்,
குறவர்,
கைக்கோளர்,
கொல்லர்,
கொத்தர்,
கோவியர்,
சக்கிலியர்,
சான்றார்,
சிவியார்,
செட்டியார்,
சேணியர்,
தச்சர்,
தட்டார்,
தவசிகள்,
திமிலர்,
துரும்பர்,
நளவர்,
பரதேசிகன்,
பரம்பர்,
பரவர்,
பள்ளர்,
பறையர்,
பாணர்,
பிராமணர்,
மடைப்பள்ளியர்,
மறவர்,
முக்கியர்,
வண்ணார்,
வேளாளர்,
இத்தனை சாதிப்பிரிவுகள் (இன்னும் இருக்கலாம்) இருந்துள்ளன। இப்போது எவ்வாறான நிலை இருக்கிறது என்பதை யாழ் நண்பர்கள் தான் சொல்ல வேண்டும்.

Friday, June 6, 2008

யுத்தத்தின் மற்றுமொரு கோரத் தாண்டவம் (படங்கள்)


இலங்கையில் ஒரு வாரம் நிறைவடைவதற்குள் மற்றுமொரு குண்டுத்தாக்குதல்.... இன்றைய (தெஹிவளை) குண்டுவெடிப்பில் அப்பாவிகள் 26பேர் பலியானதுடன் 60இற்கும் மேற்பட்டோர் காயப்பட்டனர்। யுத்தத்துக்கு இனவெறியை சந்தர்ப்பமாக வைத்து தெஹிவளை பகுதியில் தமிழர்கள் கண்டபடி தாக்கப்பட்டும் உள்ளனர்।

இன்றைய சம்பவப் படங்கள்தான் இவை। யுத்தத்தின் மற்றுமொரு கோரத்தாண்டவம்!!!