Wednesday, November 28, 2018

ஆறுமுகனின் 1000 தந்திரங்கள்!


-நிர்ஷன் இராமானுஜம்-



தொழிலாளர் நலனுக்காக, உரிமைகளைப் பேணுவதற்காக ஆரம்பிக்கப்படுகின்ற தொழிற்சங்கங்கள் அரசியல் ரீதியாக மாத்திரம் செயற்படும் துரதிர்ஷ்டமான காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

இலங்கையில் மலையகத்தைப் பொறுத்தவரையில், தொழிற்சங்கங்கள் முற்று முழுதாக ‘அரசியல்’ செய்வதையும் அதனைத் தவிர்க்க முடியாத சூழலுக்குள் இயங்கிக் கொண்டிருப்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

இதன் உச்ச கட்டமாக, அரசியல் இருப்புக்காக ‘ஆயிரம் ரூபா’ நாடகம் அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது. இதனை வெளிப்படையாகத் தெரிந்தே, எதிர்க்க முடியாத சக்தியற்றவர்களாக தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவர்களை ‘சக்தியற்றவர்களாக’ மாற்றியதும் இந்தத் தொழிற்சங்கங்கள்தான் என்பதும் இங்கு வெளிப்படை.

ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தைக் கோரி 26 ஆம் திகதி திங்கட்கிழமை போராட்டம் நடத்துமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் கோரிக்கை விடுத்திருந்தார். அதனை ஏற்றுக்கொண்டு தொழிலாளர்களும் வீதியில் இறங்கி உரிமைக்காக போராடினார்கள். அதன்பின்னர், நேற்று (27) ஆறுமுகனின் அறிவிப்பு வெளியாகியது. அதாவது, போராட்டத்தின் காரணமாக நிதியமைச்சில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

ஆட்சி அதிகாரத்தில் இருப்பதாக மார்தட்டிக்கொள்ளும் ஆறுமுகன் தொண்டமானால் நிதி அமைச்சில் பேச்சுவார்த்தைக்கான கோரிக்கையை விடுக்க முடியாதா? இது இயல்பாக எழுகின்ற கேள்வி. ஆனாலும் ஆறுமுகனின் இராஜதந்திரம் எவ்வாறு அமைந்தது பாருங்கள்.

தொழிலாளர்களை வீதிக்கு இறக்கி, அதன்காரணமாகத் தான் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடு நடைபெற்றது என்ற நாடகம் அரங்கேற்றப்பட்டது. நிதி அமைச்சு அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை ஏற்கனவே திட்டமிடப்பட்டது என்பது இங்கே எத்தனை தொழிலாளர்கள் அறிவார்கள்?

இரு வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளரின் கேள்வியும் ஆறுமுகன் தொண்டமானின் பதிலும் இவ்வாறு அமைந்தது.

கேள்வி: உங்களது பேச்சுவார்த்தையில் வெளிப்படைத் தன்மை இல்லையே?

பதில்: எனது அலுவலகத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையை நான் ஏன் வெளியில் சொல்ல வேண்டும். அவ்வாறானதொரு தேவை எனக்கில்லை. உங்கள் சொந்த வீட்டில் மனைவியுடன் நடைபெறும் கலந்துரையாடல்களை வெளியில் சொல்வீர்களா? உங்கள் நிறுவன எம்.டி. உங்களுடன் பேசும் விடயங்களை வெளியில் சொல்வீர்களா? அதேபோல் எனக்கும் எனது அலுவலகத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளை வெளியில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

மலையகத்தில் மூத்த தொழிற்சங்க வரலாறு கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொறுப்பற்ற பதிலை உற்று நோக்குவோம். ஒரு இலட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வா, சாவா பிரச்சினை. அவர்கள் சார்ந்த 20 இலட்சம் பொதுமக்களின் பிரச்சினை என்பதை எந்தளவுக்கு சாதாரணமாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். பொது விடயத்தை, தான்சார்ந்த மக்களின் பட்டினியுடன் தொடர்புடைய விடயத்தை இரகசியமாகப் பேசுவதும் அதனை வெளியிட முடியாது எனக் கூறுவதும் எந்த வகையில் நியாயம்?

கேள்வி: பெருந்தோட்டக் கம்பனிகள் நட்டத்திலா இயங்குகின்றன?

பதில்: அதை தெரிந்துகொள்ள நான் எக்கவுன்டன்ட் இல்லை. அதுபற்றி எனக்குத் தெரியாது. எனது மக்களுக்கு ஆயிரம் ரூபா அவர்கள் தர வேண்டும்.அதுதான் எனது கோரிக்கை.

இந்தப் பொறுப்பற்ற பதிலையும் கவனியுங்கள். பெருந்தோட்ட நிறுவனங்கள் இலாபத்தில் இயங்குகின்றனவா? எந்தளவு இலாபம்? அந்த இலாபப் பங்கை தொழிலாளர்களுக்கு எவ்வாறு பெற்றுக்கொடுக்கலாம்? அதற்கான சாத்தியப்பாடுகள் என்ன? என்பது குறித்தான எந்தத் தகவலும் இந்தத் தலைவரிடம் இல்லை. அந்தப் பதிலை வெளிப்படையாகக் கூறாமல் தந்திரமாகச் சொல்லி சமாளிக்கிறார்.

அதேவேளை, மற்றுமொரு விடயத்தையும் ஆறுமுகன் தொண்டமான் சுட்டிக்காட்டுகிறார். முதலாளிமார் சம்மேளனத்துடன் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னர் தோட்டத் தலைவர்களுக்கு அது தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது  என்பதுதான் அது. இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பொய்களைக் கணக்கிட்டால் அதில் இதுவும் உள்ளடங்கும். இது குறித்த உண்மை நிலையை தொழிலாளர்கள் நன்கறிவார்கள்.

இதுவரைகாலமும் மூடிய அறைக்குள் பேச்சுவார்த்தை, யாருக்கும் சொல்லிக்கொள்ளாமல் கையொப்பமிடும் வழக்கம் இருந்துவந்ததை மக்கள் அறியாமல் இல்லை. நாம் என்ன சொன்னாலும் அதனை தொழிலாளர்கள் எனும் அடிமைகள் கேட்டுக்கொள்ள வேண்டும் என்ற எதேச்சதிகார செயற்பாட்டின் விளைவுகள் தான் இவை.

மக்களுக்குச் சேவை செய்வதில் நீயா?நானா? எனப் போட்டிபோட்டுக்கொண்டாலும் பரவாயில்லை. இங்கு அதிகாரத்துக்கான போட்டியே மேலோங்கிக் காணப்படுகிறது. வெறும் பொன்னாடைகளுக்கு மாத்திரம் ஆசைப்படும் அளவுக்குத்தான் அரசியல் மாற்றம் கண்டிருக்கிறதா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

உதாரணத்துக்கு ஒரு சம்பவத்தை குறிப்பிடலாம்.

ஒக்டோபர் 26 ஆம் திகதி மகிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர், மறுநாள் ஹட்டன் நகருக்குச் சென்றார் ஆறுமுகன் தொண்டமான். அங்கு அமோக  வரவேற்புக்கான ஏற்பாடுகள் நடைபெற்றிருந்தன. வாகன நெரிசல் ஒருபுறம் இருக்க மறுபுறம் பட்டாசுச் சத்தத்துக்கும் பொன்னாடைக்கும் குறைவில்லாமல் ஆறுமுகன் வரவேற்கப்பட்டார். (இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?)

இதோ, ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் கிடைத்துவிட்டது என்பதுபோல இ.தொ.கா. ஆதரவாளர்கள் கொண்டாடினார்கள். ஆனால் இவை அனைத்தும் எதற்காக? யாருக்கு எதிராக? என்பதெல்லாம் நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இருக்கட்டும். கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையின் போது ஆயிரம் ரூபா சம்பளக் கோரிக்கை உண்மையாகவே முன்வைக்கப்பட்டுள்ளதா?

ஆயிரம் ரூபா கோரிக்கை வெறும் பேச்சளவிலேயே உள்ளது. தற்போது தொழிலாளர்களுக்கு கிடைக்கும் அடிப்படைச் சம்பளம் 500 ரூபாவை நூறு மடங்காக அதிகரிக்க வேண்டியுள்ளது. இன்னுமொரு 500 ரூபா அடிப்படைச் சம்பளத்தோடு சேர்க்கப்படுவதாயின் அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்ற சூத்திரம் தொழிற்சங்கங்கள் முன்வைக்கவில்லை. அதாவது மேலதிகமான 500 ரூபாவை எவ்வெந்த வழிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்பது குறித்து ஆராயப்படவில்லை என்பதே உண்மை.

இதேவேளை, தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ஷ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்கப்போவதாக குறிப்பிடவும் இல்லை.

மகிந்த ராஜபக்ஷ, இது தொடர்பில் சகோதர மொழி ஊடகவியலாளரிடம் தெரிவித்த கருத்து இதுதான் “ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் அல்ல. மொத்தமாக தொள்ளாயிரம் கணக்கு வருகிறது. அவ்வாறானதொரு தொகையைத் தான் முதலாளிமார் சம்மேளனம் தருவதாகக் கூறியிருக்கிறார்கள். அவர்களுக்கும் நட்டம் ஏற்படாத வகையில் தொழிலாளர்களுக்கும் அநீதி இழைக்கப்படாத வகையில் மொத்தமாக ஆயிரத்தை எவ்வாறு பெறலாம் என்பதை ஆராயுமாறு நிதி அமைச்சின் செயலாளருக்கும் அதிகாரிகளுக்கும் பணித்துள்ளேன்”.

இதேவேளை, தோட்டங்கள் காடாகிப்போயுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அடிக்கடி குற்றம் சுமத்துவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. கடந்த முறை கூட்டு ஒப்பந்தத்தில் (பிரிவு இல:3), தொழிலாளர்களின் வினைத்திறனை அதிகரிப்பது, தொழிற்துறையை விருத்தி செய்வது தொடர்பில் தொழிற்சங்கங்களும் பங்களிப்பு செய்வதாக இணங்கி கையொப்பம் இடப்பட்டுள்ளது. அவ்வாறாயின் தொழிற்துறை பின்னடைவுக்கு தொழிற்சங்கங்களும் பொறுப்புக் கூறக்கூடிய தரப்பினர்தானே?

ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்துக்காக மூன்றரை வருடங்களாக மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். கடந்த முறை காலம் இழுத்தடிக்கப்பட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதில் தொழிலாளி ஒருவருக்கு சுமார் 70 ஆயிரம் ரூபா முதல் 80 ஆயிரம் ரூபா வரை நட்டம் ஏற்பட்டது. அவ்வாறாயின் அந்த பெருத்த இலாபத்தை கம்பனிகளுக்கு பெற்றுக்கொடுத்தது தொழிற்சங்கங்கள் தானே?

இந்த முறையும் இது நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

கூட்டு ஒப்பந்தம் என்பது தொழிற்சங்களின் அரசியல் இருப்பைத் தீர்மானிக்கின்ற துருப்புச் சீட்டு. இதனை சரியான நேரத்தில் பொருத்தமாகப் பயன்படுத்தாவிட்டால் அடுத்த நகர்வுகள் கேள்விக்குறியாகிவிடும். ஆதலால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நிதானமான காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருகிறது.

எவ்வாறாயினும், அதிகாரத்துக்காகவும் அரசியல் இருப்புக்காகவும் தொழிலாளர்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்தை எவ்வெந்த முறைகளில் பெறலாம் என்ற வழிமுறைகளை முதலில் ஆராயுங்கள். அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினரோடு கலந்துரையாடி தீர்மானத்துக்கு வாருங்கள்.

அதனை விடுத்து எத்தனை காலத்துக்குத் தான் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்க முடியும்? நாளொன்றுக்கு 5 ரூபா ஏன் தர முடியாது என தொழிலாளர்களிடம் உரிமையாக கேட்க முடியுமென்றால், உறுதியளித்த தொகையை ஏன் பெற்றுத்தர முடியாது என தொழிலாளர்கள் கேட்பதற்கு ஆயிரம் மடங்கு உரிமை உண்டு என்பதையும் மறவாதீர்கள்.

ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்தைப் பெற்றுத்தருவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுதியளித்திருந்தது. அந்தத் தொகை மக்கள் மனதில் அழுத்தமாக நிறைந்துவிட்டது.

அதற்காக தொழிலாளர்கள் மாத்திரமன்றி ஆசிரியர்கள், இளைஞர்கள், பல்கலை மாணவர்கள், மதகுருமார்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டங்கள் அனைத்துமே வீணாகிப் போய்விடாது என்ற நம்பிக்கை இந்த நிமிடம் வரையிலும் நெஞ்சில் நிறைந்திருக்கிறது என்பதே உண்மை.

இதனை மறுத்து இம்முறையும் துரோகம் இழைக்கப்படுமானால் அடுத்த கட்ட பின்விளைவுகள் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் உரிய தரப்பினர் நினைவிற்கொள்ள வேண்டும்.

Sunday, November 18, 2018

மலையகத் தொழிலாளியின் மரண வாக்குமூலம் - நிர்ஷன் இராமானுஜம்

ஏமாற்றங்களையும் வலிகளையும் தாங்கிய ஒரு மலையகத் தொழிலாளியின் மரண வாக்குமூலம் இது!

Image from Internet
மகனே,

இந்தத் தளர்ந்த வயதில், மரணம் அழைக்கும் தருவாயில் உனக்காக இந்த மடலை வரைகிறேன். வாய்திறக்க முடியாத எனது சோகங்கள் அனைத்தையும் நீ பாடமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே எனது அவா.

அடர்ந்த காடுகளை அழகிய தேசமாக்கிய தன்னம்பிக்கை மிக்க சமூகம் நம்முடையது. எமது விதியோ என்னவோ குதிரைகளின் கொட்டகைக்குள் அடைக்கப்பட்டு வெள்ளையனுக்குச் சேவகம் செய்வதிலேயே காலம் கழிந்தது. மீசை முறுக்கிய அஜானுபாகுவான தோற்றத்தோடு உன் தாத்தா பீடியொன்றை பற்றவைத்துக்கொண்டு தன்னந்தனியாக இந்த மலைகளில் நடந்துவருவார். அவரோடு நடைபயின்றதால் என்னவோ எனக்கும் கொஞ்சம் திமிரும் இறுமாப்பும் கூடவே ஒட்டிக்கொண்டன. என்னதான் இருந்தாலும் வெள்ளையனின் பிரம்புக்குள் அத்தனையும் தொலைத்துப்போனதுதானனே உண்மை.

மகனே, இவற்றையெல்லாம் நீ மறந்துவிடக் கூடாது. வெள்ளையனின் ஆதிக்கத்தின் பின்னரும் எமக்கு நல்லகாலம் பிறக்கும் என நம்பியிருந்தோம். அதுவும் இந்த நிமிடம் வரை நடக்கவில்லை என்பதே பெருந்துயரம். எமது மக்களின் விடிவுக்காக குரல் கொடுக்கப்போகிறோம் என்று எழுந்துநின்றவர்கள் எல்லாம் இன்று அரசியல் சாக்கடைக்குள் விழுந்து விட்டார்கள். அதில் இன்பம் காணும் அவர்களை அங்கிருந்து மீட்டெடுப்பது என்பது, நீரில் இருந்து ஈரத்தைப் பிரித்தெடுப்பது போன்று சிரமமானது.

ஆகட்டும், எனக்கு 50 ரூபா சம்பளம் கிடைத்த நாள் முதல் உன்னைப் படிக்க வைத்திருக்கிறேன். ஆனாலும் நம் தலைவர்களின் உண்மையான முகம் பற்றி நான் உனக்குக் கற்றுத்தரவில்லை. ‘தோட்டகாட்டான்’ எனும் பெயரோடு நீ கொழும்பில் தொழில்புரிகிறாய், ஆனால் உன்னால் தெரிவானவனோ ‘தலைவன்’ எனும் பெயரில் சுகம் அனுபவிக்கிறான்.

நீ ஒன்றைப் புரிந்துகொள், மலையகத்தில் அரசியல் எனும் பெயரில் நடத்தப்படும் அத்தனையும் நாடகம்தான். நாம் வெறும் கோமாளிகள் போல நாடகத்தைப் பார்த்து ஏமாந்துகொண்டிருக்கிறோம். நம் தோட்டத்தில் காத்தவராயன் கூத்தில் உன் தாத்தா வெறியோடு ஆடியதைக் கண்டு ஒரு வாரம் நான் அவரிடமிருந்து ஒதுங்கி நின்றேன். ஆயினும் அதைவிட ஒப்பற்ற வகையில் நாடகங்கள் தான் எம் தலைவர்களால் இன்று அரங்கேற்றப்படுகிறது.

கொழுந்து மாலைகளால் நாம் அவர்களை அலங்கரிக்கின்றோம். ஆனால் ஒரு சிறு தூசுக்கேனும் எம்மை அவர்கள் கவனிப்பதில்லை.

அரசியல் என்றும் அவன்தான் தலைவன் என்றும் கொடிபிடித்துத் திரிந்து கொண்டாடிக் களித்தது போதும் மகனே! இன்னும் எத்தனை நாளைக்குத் தான் நாம் “ஐயா” போட்டுக்கொண்டே வாழ்வது? நமக்கென்று சுயமாய் ஒரு பாதையை நாம் வகுத்துக்கொள்ளக் கூடாதா?

ஐயாவின் வீட்டு மாட்டுத் தொட்டிலில் அதிகாலை 4 மணிக்கு பசும்பால் கறந்து கொடுத்திருக்கிறேன். சம்பளம் பெற்றுக்கொண்டதில்லை. கால் போத்தல் பாலுடன் வீட்டுக்கு வந்து உனக்கும் தங்கைக்கும் கொடுத்துவிட்டு மலைக்குப் போயிருக்கிறேன். அப்போதெல்லாம் வலிக்கவில்லை. வலிகளை நான் உணர்ந்ததும் இல்லை.

சின்னத்துரை எனக்கு ஒருநாள் பேர் போடவில்லை என முறைப்பாடு செய்ய ஐயாவின் அலுவலகத்துக்குச் சென்றேன். ஐயா என்னிடம் கேட்டாரே ஒரு கேள்வி…

“நீயெல்லாம் சம்பளம் எடுத்து என்ன செய்யப்போற? உன் புள்ள என்ன டொக்டராவா வரப்போறான்? அவனும் புல்லு வெட்டத்தானே போறான். போயிட்டு வேலயப்பாரு” என்றார்.

அப்போதுதான் வலித்தது மகனே. உன்னை என்னிலும் மேலாக உருவாக்க வேண்டும் என அப்போது நினைத்தேன். நான் இங்கே பிறந்ததும் இப்படி வளர்ந்ததும் என் தவறில்லையே? இறைவனின் தவறன்றோ என முச்சந்தி மாடசாமியிடம் விழுந்து விழுந்துக் கதறினேன்.

இவற்றையெல்லாம் நான் இதுவரை உன்னிடம் சொன்னதில்லை. என் வாழ்க்கையும் மரணமும் உனக்கு ஒரு பாடமாகட்டும். நீ எதற்கும் அஞ்சாதே, இளைஞன் என்ற நெஞ்சு நிமிர்த்திய பலம் உனக்கிருக்கிறது. அயராத உழைப்பும், விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் உனக்கிருக்கிறது. இனி எதற்கு, யாருக்கு பயப்பட வேண்டும்?

பயங்கரமான மிருகங்கள், விஷ ஜந்துக்கள், பேய், பிசாசுகள் என அத்தனையையும் தாண்டி அடர்ந்த வனங்களை அழித்து தேயிலை செய்தோம்.

இந்த நிலம், இந்தக் கோயில், இந்த லயம், இந்த ஆறு என அனைத்துமே எமக்கே சொந்தம். எங்களுடைய கலாசாரம், எங்களுடைய பண்பாடு, எங்களுடைய விழுமியங்கள், எங்களுடைய தனித்துவங்கள் என அத்தனையயும் காக்க வேண்டியதும் பேண வேண்டியதும் உன்னுடைய பொறுப்புதான் மகனே.

அப்போதைய காலத்தில், கடும் மழையிலும் வெயிலிலும் எங்கள் களைப்பு தீர நாம் பாட்டு பாடுவோம். அந்தப் பாடல்கள் சுற்றியுள்ள மலைகளில் எதிரொலிக்கும்.

“வாரான்டி வாரான்டி சின்னத்தொர
பெரம்பெடுத்து வாரான்டி கட்டத்தொர
சுண்ணாம்பு செவக்கவில்ல – அவன்
கோவந்தான் செவந்திருக்கு”
இப்படி பாடினோம்.

“மாடசாமிக்கு ஆடு வெட்ட வாங்கடியோ –
அந்த மலச்சாமிக்கு கோழி கொண்டு வாங்கடியோ
வாழ எல சோறு
வாழ வைக்கும் பாரு
சோகமெல்லாம் போகும் - நம்ம
சொந்தமெல்லாம் சேரும்”

இப்படியும் பாடினோம்.

ஆனாலும், வாய்வழி வந்த இந்தப் பாட்டுப் போல நம்ம வரலாறும் மறைந்து போகிறது மகனே. அந்தக் கவலை மட்டுந்தான் என் நெஞ்சை அடைக்கிறது.

நான் போய் வருகிறேன் மகனே.

இனி உன் வாழ்க்கை உன் கையில் தான் இருக்கிறது. போலித் தலைவனை நம்பி பின்னால் செல்வதா அல்லது நீயே தலைவனாகி உன் தலைமுறையைக் காப்பதா என்பதை சிந்தித்துத் தீர்மானித்துக்கொள். உன் எதிர்கால பாதையை முறையாகத் திட்டமிடு. யாருக்கும் எந்த வஞ்சகமும் ஏமாற்றமும் துரோகமும் செய்யாமல் தற்துணிவோடு முன்னோக்கிச் செல்.

எமது மக்களுக்கான நியாயமான எந்தவொரு பயணமும் தோற்றதாய் இதுவரை சரித்திரமில்லை மகனே. உன் வாழ்க்கையும் பயணமும் சரித்திரமாகட்டும். நம்மூர் மாடசாமி எப்போதும் உன் துணை நிற்பான்.

இப்படிக்கு,
உன் அன்பு அப்பா
எஸ். சிங்காரம்

Sunday, November 11, 2018

“ஆயிரம் ரூபா இயலாத காரியம் அரசியல் நலனுக்கான வாக்குறுதிகளுக்கு நாம் பொறுப்பாக முடியாது”

-நிர்ஷன் இராமானுஜம்-

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாவைப் பெற்றுக்கொடுக்க முடியாதென்றும் அரசியல்வாதிகள், அரசியல் நலனுக்காக மன்னர்கள் போல வாக்குறுதியளித்தமைக்கு தாம் பொறுப்பல்ல என்றும் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் பேச்சாளர் ரொஷான் இராஜதுரை தெரிவித்தார்.

கேள்வி: பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கோரும் 1000 ரூபா அடிப்படைச் சம்பளத்தை உங்களால் வழங்க முடியுமா? முடியாதா?
பதில்: முடியாது. அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற எமக்கும் விருப்பம் உண்டு. ஆனாலும் அது சாத்தியமற்றது.

கேள்வி: அவ்வாறாயின் உங்களால் தர இயலுமான, இறுதிப்படுத்தப்பட்ட தொகை என்ன?
பதில்: அடிப்படைச் சம்பளம் 600 ரூபா உள்ளடங்களாக மொத்தமாக 940 ரூபா என்பதே இறுதிப்படுத்தப்பட்டதாகும்.

கேள்வி: அடிப்படைச் சம்பளமாக 1000 ரூபா பெற்றுக்கொடுக்க முடியாமைக்கான காரணம் என்ன?
பதில்: அடிப்படைச் சம்பளம் 1000 ரூபா என்பது 100 வீத அதிகரிப்பாகும். எந்தவொரு தொழிற்துறையிலும் 100 வீத சம்பள அதிகரிப்பை வழங்குவது சாத்தியமற்றது. அவ்வாறு வழங்கினால் நாம் நிறுவனத்தை கொண்டு நடத்த முடியாதல்லவா? எமது தேயிலைக்கு உரிய விலை சர்வதேச சந்தையில் கிடைப்பதில்லை. அத்துடன் உற்பத்திச் செலவு உள்ளிட்ட இதர செலவினங்களின் அதிகரிப்பையும் இங்கு நோக்க வேண்டும். தொழிலாளர் செலவு 67 வீதமாகவும் எரிபொருள், உரம் உள்ளிட்ட ஏனையவை 15 வீதமாகவும் சுகாதாரம், நலன்புரி, மின்சாரம், வரிகள் உள்ளிட்டவை 5 வீதமாகவும் உத்தியோகத்தர்கள், தொழிற்சாலை, மனிதவளம், அலுவலகம், முகாமைத்துவ செலவுகள் 9 வீதமாகவும் இதர செலவுகள் 4 வீதமாகவும் காணப்படுகின்றன. இந்நிலையில் ஒரே தடவையில் பாரியதொரு தொகையை சம்பளமாக வழங்க முடியாத சூழ்நிலையே உள்ளது.

கேள்வி:  பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் வெளியகப் பயிரிடல் முறைமையை அறிமுகப்படுத்துவதன் ஊடாக தொழிலாளர்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்குவதாக கூறப்படுகிறதே?
பதில்: அசௌகரியம் கிடையாது. அது போலியான பரப்புரை. அதுதான் சிறந்த முறை. அந்த முறையின் ஊடாக 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொகையை தொழிலாளர்கள் வருமானமாகப் பெறுகிறார்கள். வெளிநாடுகளிலும் இந்த முறைதான் பின்பற்றப்படுகிறது.

கேள்வி: பெருந்தோட்ட கம்பனிகளுக்கு மானியம் வழங்கப்படுவதாகவும் அதனால் சம்பளம் அதிகரிப்பதற்கான சாத்தியங்களை மறுக்க முடியாது என்றும் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் குறிப்பிட்டுள்ளமை பற்றி..?
பதில்: பெருந்தோட்ட கம்பனிகளுக்கு மானியங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. அவை சிறுதோட்ட உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட மானியங்கள். அமைச்சர் இதனை ஆராய்ந்து பார்த்து கருத்துகளை வெளியிட்டிருக்க வேண்டும்.

கேள்வி: ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் கொடுக்க முடியாவிட்டால், தோட்டங்களை விட்டு வெளியேறுமாறு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பகிரங்கமாகக் கூறியிருக்கிறாரே?
பதில்: நாம் எமது தரவுகளையும் தகவல்களையும் வெளிப்படையாகப் பேணுகிறோம். அரசியல்வாதிகள், அரசியல் நலனுக்காக மன்னர்கள் போல வாக்குறுதியளித்தமைக்கு தாம் பொறுப்பல்ல, அதற்கு நாம் பொறுப்பாக முடியாது. அவ்வாறெனின், நாம் தோட்டங்களை விட்டு வெளியேறத் தயார். மறுபுறம், இவ்வாறு குறிப்பிடும் தொழிற்சங்கவாதிகளும் பணம் படைத்தவர்கள்தான். அவர்களால் தோட்டங்களைக் கொண்டு நடத்த முடியும்தானே? அவ்வாறு தோட்டங்களை நிர்வகித்து ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் பெற்றுக்கொடுக்கலாம் தானே?

கேள்வி: தொழிலாளர்களின் கோரிக்கை நியாயமற்றது என நினைக்கிறீர்களா? அவ்வாறியின் தொழிலாளர்பக்கம் உள்ள பாதகத் தன்மை என்ன?
பதில்: நியாயமானதுதான். நாங்கள் கையில் வைத்துக்கொண்டு இல்லை என்று சொல்லவில்லை. தொழிலாளர்களைப் பொறுத்தவரையில், ஆண் தொழிலாளர்களின் பங்களிப்பு மிக மிகக் குறைவாக காணப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 4 மணித்தியாலங்களே தொழில்புரிகிறார்கள். அதனால் உற்பத்தித் திறனும் குறைவடைகிறது.

கேள்வி: தேயிலை மற்றும் இரப்பர் தோட்டங்கள் உங்களது நிர்வாகத்தின் பின்னர் காடாகிப் போயுள்ளதை கண்கூடாக அவதானிக்கக் கூடியதாக இருக்கிறதே? நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளுக்கு ஏன் தொழிலாளர்கள் மீது குற்றம் சுமத்துகிறீர்கள்?
பதில்: தொழிலாளர்கள் பற்றாக்குறை மற்றும் வேலைக்கு வருகை தராமை தான் காரணம். தற்போதைய இளைஞர்கள் தோட்டங்களில் தொழில்புரிவதை விரும்புவதில்லை. தொழிலாளர் வருகையீனம் காரணமாக தோட்டங்களை பராமரிப்பதில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளோம். இதுவே, அரச நிர்வாகத்தின் கீழ் உள்ள தோட்டங்களைப் பாருங்கள். அவர்களுக்கு ஊழியர்சேமலாப, நம்பிக்கை நிதியங்கள் வழங்கப்படுவதில்லை. முறையாக சம்பளம் கூட வழங்கப்படுவதில்லை.

கேள்வி: சர்வதேச சந்தையில் இலங்கைத் தேயிலைக்குக் கிராக்கி இருக்கிறதல்லவா?
பதில்: ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் ஏலத்தில் உரிய விலை கிடைப்பதில்லை. இது பற்றி அநேகர் அறிந்திருக்காததன் காரணமாகத்தான் எம்மீது குற்றம் சுமத்துகின்றனர். ஏற்கனவே, ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் எமது தேயிலைக்கான கேள்வியை நாம் இழந்திருக்கிறோம். எதிர்வரும் காலம் எமக்கு மிகவும் சவாலாக அமையக்கூடும்.

கேள்வி: தொழிலாளர்களின் மனிதாபிமானம் சார்ந்த விடயங்களிலும் அவர்களின் நலன்களிலும் கம்பனிகள் அக்கறை செலுத்துவதில்லையே?
பதில்: தவறு. தொழிளார்கள் மற்றும் அவர்கள்சார்ந்த ஒரு மில்லியன் மக்களுக்கு எமது சேவைகள் கிடைக்கின்றன. குறிப்பாக இயற்கை அனர்த்தங்களின்போது நாம் மக்களின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருக்கிறோம். உதாரணமாக, 61 வைத்தியசாலைகள், ஆயிரத்து 474 சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் இயங்குகின்றன. இன்னும் பல்வேறு விடயங்களைக் குறிப்பிடலாம்.

கேள்வி: ஆங்காங்கே, தொழிலாளர்சார்ந்த விடயங்களில் கூட்டு ஒப்பந்தம் மீறப்படுவதாக குற்றம் சுமத்தப்படுகிறதே?
பதில்: நாம் நியாயமாகவும் வெளிப்படையாகவும் செயற்படுகிறோம். குற்றங்கள் முன்வைப்பவர்கள் யார் என்பதை மக்கள் அறிவார்கள். இங்கே மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

கேள்வி: இறப்பர் தொழிலாளர்கள் குறித்து தொழிற்சங்கங்களும் அதேபோல் முதலாளிமார் சம்மேளனமும் வாய்திறப்பதில்லை. ஏன்?
பதில்: இறப்பர் தொழிற்துறை பெரும் நட்டத்தில் இயங்குகிறது. காலநிலை மாற்றம், வெளிநாடுகளில் உள்ள கேள்வி உள்ளிட்டவை இதில் தாக்கத்தை செலுத்துகின்றன. எவ்வாறாயினும் நாம் உறுதியளித்த சம்பளத் தொகையை வழங்கி வருகிறோம்.

கேள்வி: இலங்கையில் பெருந்தோட்டத்துறை வீழ்ச்சிக்கு பெருந்தோட்டக் கம்பனிகளும் காரணம் என்பதை ஏற்றுக்கொள்வீர்களா?
பதில்: நீங்கள் யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும். 1992 ஆம் ஆண்டு 3 இலட்சத்து 27 ஆயிரம் தொழிலாளர்கள் தொழிலில் ஈடுபட்டார்கள். இப்போது அந்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 50 ஆயிரமாகக் குறைவடைந்துள்ளது. இளைஞர், யுவதிகள் பெரும்பாலும் இடம்பெயர்ந்து வெளியிடங்களுக்குச் சென்றுவிடுகிறார்கள். தொழிற்துறை பாதிப்புக்கு இதுவே பிரதான காரணியாகும்.

கேள்வி: ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளமாக கொடுக்காவிட்டால் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளனவே?
பதில்: எமது நிலைப்பாடு குறித்து தொழிற்சங்கங்கத் தலைவர்களும் நன்கறிவார்கள். நாம் விளக்கமளித்துள்ளோம்.

கேள்வி: சம்பள விவகாரம் தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளர் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தாரா?
பதில்: ஆமாம். இதே நிலைப்பாட்டைத்தான் நாம் அவரிடமும் எடுத்துரைத்தோம்.

நன்றி தினக்குரல்
11.11.2018