Monday, November 13, 2017

வாய்ச் சொல்லில் வீரர்கள்

இரத்தினபுரி மாவட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட தமிழ்ப் பாடசாலைக்கான கோரிக்கை மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. எனினும் இதுவரை எதுவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.  
தேர்தல் காலங்களில் இந்த விடயம் பிரதான பேசுபொருளாகவும் முதலாவது வாக்குறுதியாகவும் அமைந்திருந்ததை யாரும் மறுத்துவிட முடியாது.  
ஆனால், அதற்குப் பின்னரான காலத்தில் தமிழ்ப் பாடசாலை குறித்து, வாக்குறுதியளித்தவர்களும் பொறுப்புக் கூற வேண்டியவர்களும் மௌனமாகவே இருந்து வருகின்றனர்.  
இரத்தினபுரி மாவட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட தமிழ்ப் பாடசாலையொன்று ஏன் அவசியமாகிறது?  
இந்த மாவட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட பாடசாலை எதுவும் இல்லை. ஆகக்குறைந்தது விளையாட்டு மைதானம் கூட இல்லாத பாடசாலைகள் ஏராளமாக இருக்கின்றன. வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கோ, பயற்சி பெறுவதற்கோ பொது விளையாட்டு மைதானங்களையே நாட வேண்டியுள்ளது.   
அதைத்தவிர, நீச்சல், டென்னிஸ் போன்ற இதர விளையாட்டுகளுக்கான ஆகக்குறைந்த வாய்ப்புகள் கூட எந்தப் பாடசாலையிலும் இல்லை. அத்துடன் வாசிகசாலை, விஞ்ஞான கூடம், மனையியற்கூடம், கணினி பயிற்சிக்கூடம், கேட்போர் கூடம் என அடிப்படை வசதிகள் இல்லாத பாடசாலைகளும் இருக்கின்றன.   
இந்த மாவட்டத்தின் சிங்கள பாடசாலைகளின் வளர்ச்சி, அபிவிருத்தி, வளங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்ப் பாடசாலைகளில் பாரிய பின்னடைவு காணப்படுகிறது. குறிப்பாக நகர பாடசாலைகளை விட பெருந்தோட்ட பாடசாலைகளின் அபிவிருத்தியில் மாகாண அமைச்சு உரிய கவனம் எடுப்பதில்லை. பெருந்தோட்டப் பாடசாலைகளில் ஆரம்பக் கல்வியைக் கற்கும் மாணவர்கள், அதன்பின்னர் நகரப் பாடசாலைகளில் இடைநிலை, உயர்தரக் கல்வியைத் தொடர்கின்றனர். ஆரம்பக் கல்வியைத் தொடருவதற்கான அடிப்படை வசதிகள் தோட்டப் பாடசாலைகளில் இல்லாமை காரணமாக கல்வி, விளையாட்டு மற்றும் இதர திறன்களில் அடைவு மட்டம் குறைவாகவே காணப்படுகிறது.  
இவை அத்தனை காரணங்களுக்காகவும் இரத்தினபுரி மாவட்டத்தில் மத்திய நகரம் ஒன்றில் தமிழ்ப் பாடசாலையொன்று சகல வசதிகளுடனும் அமையப்பெற வேண்டும் என்ற கோரிக்கை மிக நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது.  
கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் இரத்தினபுரியில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், இரத்தினபுரியில் சகல வசதிகளையும் கொண்ட தமிழ்ப் பாடசாலையை அமைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தார்.  
அதற்காக, இரத்தினபுரி புதிய நகரத்தில் காணியைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் விரிவான கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.   
ஆயினும் தேர்தலுக்குப் பின்னர் அவர் அதனை முற்றாகவே மறந்துவிட்டார். அப்போதைய தேர்தல் கூட்டங்களில், இந்த விடயம் மிக முக்கியமாகப் பேசப்பட்டது.  
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கணபதி இராமச்சந்திரனும் இது பற்றி வாய்திறக்கவில்லை. ஆக, தேர்தல் வெற்றி என்ற ஒன்றுக்காக மாத்திரமே இந்த விடயத்தை பேசுபொருளாக்கி, மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள் என்பது வெளிச்சமாகிறது.  
தற்போதைய கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணனிடமும் இது குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும் அது, எந்தளவுக்குச் சாத்தியமான தீர்மானங்களாக அமையும் என்பதில் கேள்விக்குறியே நீளுகிறது.  
இரத்தினபுரியில் புதிய தமிழ்ப் பாடசாலை அமையப்பெற வேண்டும் அல்லது ஏற்கெனவே உள்ள பாடசாலையொன்று தரமுயர்த்தப்பட்டு, அந்தப் பாடசாலைக்குச் சகல வசதிகளையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.  
இரத்தினபுரி நகரப் பகுதியில் அமைந்துள்ள இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தைத் தரம் உயர்த்த முடியும் என்றாலும் கூட, பாடசாலையை விஸ்தரிப்பதற்கான இட வசதிகள் அங்கு காணப்படவில்லை.   
பலாங்கொடை கனகநாயகம் பாடசாலை மற்றும் இறக்குவானை பரியோவான் கல்லூரி ஆகியவற்றைத் தரமுயர்த்தி, மத்திய அமைச்சின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகிறது. அந்தப் பாடசாலைகள் இரத்தினபுரி மாவட்டத்தின் மையப்பகுதிகளாக, அனைவருக்கும் வசதியான சூழலில் அமையாததும் காரணமாகும்.  
ஆகையால், சப்ரகமுவ மாகாணத்தின் தலைநகரான இரத்தினபுரி நகரில் புதிதாகப் பாடசாலையொன்று அமையப்பெறுவதே சாலப் பொருத்தமானதாகும்.  
இதற்காக, அனைத்துத் தரப்பினரும் முன்வந்து செயற்பட வேண்டியதும் அவசியமாகும்.  
இரத்தினபுரியில், தமிழ் மொழிமூலமான பாடசாலைகளில் கணித, விஞ்ஞான பிரிவுகள் ஆரம்பிக்கப்படாமையும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.
கடந்த காலங்களில் இதற்காகப் பல்வேறு விதமான போராட்டங்கள் இடம்பெற்ற போதிலும் உரியவர்கள் கவனமெடுக்காமையால் இன்னும் எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. இராஜாங்க கல்வி அமைச்சு, கிடைக்கப்பெற்றவுடன் இரத்தினபுரி மாவட்டத்துக்கு விடியல் கிடைக்கப்போகிறது என்ற நம்பிக்கையையும் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் இழந்து வருகிறார்கள்.  
இரத்தினபுரி மாவட்டத்தில் உயர்தர கணித, விஞ்ஞான பாடநெறிகளை ஆரம்பிப்பதற்கு மாகாண அமைச்சு மந்த கதியிலேயே செயற்பட்டு வந்தது. சப்ரகமுவ மாகாண கல்வி, கலாசாரம், தகவல் தொழில்நுட்பத்துறை முன்னாள் அமைச்சர் பானு முனிப்பிரிய, தமிழ்ப் பாடசாலைகளின் வளர்ச்சியில் போதிய அக்கறையுடன் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. சப்ரகமுவ மாகாண சபையில் இருந்த தமிழ் உறுப்பினர்கள் இருவரும் இது தொடர்பில் உரிய அழுத்தங்களைப் பிரயோகிக்காமையும் இதற்குக் காரணமாகும்.  
இரத்தினபுரி மாவட்டத்தில் உயர்தர கணித, விஞ்ஞான பிரிவுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை கல்வி இராஜாங்க அமைச்சரிடம் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகிறது. இரத்தினபுரியில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் மாணவர்கள், உயர்தரத்தில் கணித, விஞ்ஞான பாடநெறிகளைத் தொடர்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்ற துர்ப்பாக்கிய நிலையே காணப்படுகிறது.  
கடந்த காலங்களில் இந்த மாணவர்கள் மத்திய மாகாண பாடசாலைகளில் உள்வாங்கப்பட்ட போதிலும், கடந்த வருடம், மத்திய மாகாண முதலமைச்சர் மற்றும் அரசியல் பிரமுகர்களால் அதற்கான கதவும் அடைக்கப்பட்டது.  
இதன்காரணமாக, உயர்தரத்தில் தாம் விரும்பிய பாடநெறியைத் தொடர முடியாமல் மாணவர்கள் பெரும் இக்கட்டான சூழ்நிலைக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.  
வெளிமாவட்ட மாணவர்களை நுவரெலியா மாவட்டத்துக்கு உள்வாங்கக் கூடாது என நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.   
அந்தச் சந்தர்ப்பத்தில் இரத்தினபுரி மாவட்ட மாணவர்களின் நிலையை எடுத்துக் கூற, மாணவர்களின் பெற்றோரும் ஆசிரியர்களும் மத்திய மாகாண முதலமைச்சரைச் சந்திக்கச் சென்றிருந்தனர். அப்போது, “மாகாண பாடசாலைகள் அவ்வந்த மாகாண நிர்வாகத்தின் கீழேயே செயற்படுகின்றன. ஆதலால் எமக்கு ஒன்றும் செய்ய முடியாது” எனக் கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்திருந்தார்.   
அதேபோன்று, “எந்தக் காரணம் கொண்டும் வெளிமாவட்ட மாணவர்களை இணைத்துக்கொள்ள மாட்டோம். இது நான் எடுத்த தீர்மானம் அல்ல, தமிழ் அரசியல் பிரமுகர்கள் எடுத்த தீர்மானமே” என முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார்.  
தமது கனவுகள் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பில் சென்ற மாணவர்களும் பெற்றோரும் ஆசிரியர்களும் ஏமாற்றத்தில் திரும்பினர்.  
இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், கடந்த காலங்களில் இரத்தினபுரி மாவட்டத்துக்கு விஜயம் செய்தபோது, இதற்கான உறுதிமொழிகளை வழங்கியிருந்தார்.  
குறிப்பாக, சப்ரகமுவ மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் பானு முனுப்பிரிய மற்றும் கல்வி அதிகாரிகள், அதிபர்களுடனான சந்திப்பின் போது இந்த உறுதிமொழி வழங்கப்பட்டது. ஆயினும் இராஜாங்க அமைச்சர், இது குறித்தான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பின்னிற்பதாகவே தெரிகிறது.  
இங்கே, மலையக அரசியல் பிரமுகர்களிடத்தில் பொதுவாகவே ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. அதாவது, மலையகம் என்றால் நுவரெலியா மாவட்டத்தை மாத்திரமாகக் கொண்டுதான் அபிவிருத்திப் பணிகள் இடம்பெறுவதாகக் கூறப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் அது உண்மைதான் என்பதை ஏற்றுக்கொள்ளும் விதமாகவே அனைத்தும் நடைபெறுகின்றன.  
மத்திய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் அமைச்சர்கள், நுவரெலியா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினாலும் கூட, மலையக மக்கள் பல மாவட்டங்களில் வாழ்கிறார்கள் என்பதை உணர வேண்டும்.  
அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் ஒரே மாவட்டத்துக்குச் சென்றடைவது இங்கு கவனிக்கப்பட வேண்டியதாகும். ஒப்பீட்டு ரீதியில், இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலி, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கான அபிவிருத்திப் பணிகள் மந்த கதியிலேயே இடம்பெறுகின்றன.  
கல்வித் துறையைப் பொறுத்தவரையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவர், அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் காலத்தில், இரத்தினபுரி மாவட்டம் பெரும் வளர்ச்சி கண்டுவந்தது.  
பேதங்களைத் தவிர்த்து, மலையக மக்கள் வாழும் சகல மாவட்டங்களுக்கும் சேவைகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், அவருக்குப் பின்னரான காலத்தில் வெறும் தேர்தலுக்கு மாத்திரமான சேவையாகவே பலர் தமது திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.  
மேடைகளிலும் முகநூலிலும் தமக்கு எதிரானவர்களைத் திட்டித்தீர்ப்பதிலும் மக்கள் பணத்திலான சேவைகளைச் சொந்தப் பணத்தில் செய்வதைப் போல காட்டிக்கொள்வதிலும் ஆர்வம் காட்டும் அரசியல் தலைமைகள், உண்மையாகவே ஒடுக்கப்பட்ட சமூகத்துக்குக் குரல் கொடுக்க முன்வர வேண்டும்.  

இரத்தினபுரி மாவட்டத்தில் உழைக்கும் தொழிலாளர்களிடமிருந்து சந்தா பெற்றுக்கொள்ளும் அரசியல் தொழிற்சங்கங்கள், ஏன் இதுகுறித்துச் சிந்திப்பதில்லை?  
காலம் காலமாக தொழிற்சங்கங்களுக்குச் சந்தா செலுத்தும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு இது குறித்துக் கேட்பதற்கு உரிமை இல்லையா?  
வெறுமனே வாய்ச்சொல்லில் மாத்திரம் உறுதி வழங்கிவிட்டு, தங்களுடைய பகுதிகளுக்கு மாத்திரம் அபிவிருத்திகளை மேற்கொள்வது எந்த வகையில் நியாயம்?  
மாதாந்தம் தொழிற்சங்க சந்தாவைப் பெற்றுக்கொள்ளும் கட்சிகள், அந்தப் பணத்துக்காக மனச்சாட்சியுடன் சேவையாற்றுகிறோமா என்பதைச் சிந்திக்கின்றனவா?  
ஆதலால், இரத்தினபுரி மாவட்ட மக்களின் இந்தக் கோரிக்கை குறித்து, உரியவர்கள் பொருத்தமான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.  
மலையகம் அபிவிருத்தியடைய வேண்டும் என உண்மையாக நேசிக்கும் தலைவர்கள் இதுபற்றிய அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்வார்கள் என மக்கள் நம்புகிறார்கள்.  
சப்ரகமுவ மாகாண சபையின் ஆட்சிக்காலம் நிறைவுக்கு வந்துள்ளதுடன் அதன் அதிகாரங்கள் அனைத்தும் ஆளுநரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்நிலையில் மாகாண சபை, உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பேச்சுகள் இரத்தினபுரியில் அதிகமாகவே உருவாகத் தொடங்கிவிட்டன.  
இந்நிலையில், இரத்தினபுரிக்குப் படையெடுக்கும் தமிழ் அரசியல் கட்சிகள் மீண்டும் தமிழ்ப் பாடசாலை குறித்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.  
ஏற்கெனவே இந்த விடயத்தைத் தேர்தலின் வெற்றி வியூகமாக்கி அதன்பின்னர் மறந்துபோன தலைவர்கள் இப்போது எந்த நோக்கில் மக்களை சந்திக்கப்போகிறார்கள்? 
இரத்தினபுரியில் சகல வசதிகளையும் கொண்டு தமிழ்ப் பாடசாலை என்ற கருப்பொருளை மையமாக வைத்தே தொடர்ச்சியாக வாக்குக் கேட்டவர்களுக்கு இந்தமுறை, அந்த வாக்குறுதியை வழங்குவது ஒன்றும் புதிதாக இருக்காது.  
ஆனாலும், போலி முகங்களோடு வாக்குறுதியளித்துவிட்டு காணாமல் போகும் தலைவர்களுக்குத் தக்க பாடம் புகட்டுவதற்கும் மக்கள் தயாராக உள்ளார்கள்.  
பருவத்துக்குப் பூக்கும் காளான்கள் போல, தேர்தல் காலங்களில் முகாம் அமைத்து எண்ணிலடங்கா உறுதிகள் வழங்கும் தலைவர்கள், தமது பெயர் கறுப்புப் புள்ளியாக வரலாற்றில் இடம்பெறாதவண்ணம் செயற்படுவார்கள் என நம்புகிறோம்.  

-இராமானுஜம் நிர்ஷன்-

Saturday, May 20, 2017

முஸ்லிம்கள் குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் ஞானசார தேரர்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர் கண்டி, அஸ்கிரிய மல்வத்து பீடத்துக்கான விஜயத்தினை இன்று மேற்கொண்டிருந்தனர்..
இதன்போது தற்போதைய நிலைமை தொடர்பாக பீடாதிபதிகளுக்கு விளக்கமளித்ததாக ஞானசார தேரர் தெரிவித்ததுடன் முஸ்லிம்கள் தொடர்பில் மகிழ்ச்சியடைவதாகவும் குறிப்பிட்டார்.

அங்கு சந்திப்பின் பின்னர் ஞானசார தேரர் தெரிவித்த கருத்துக்கள் இவை,

நாட்டின் தற்போதைய நிலைமை தெடர்பாக நாம் விளக்கமளித்தோம் விசேடமாக இந்த நாட்களில் தீவிரவாத போக்குடைய முஸ்லிம் பிரிவினரால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்தோம்.

அவர்கள் இந்த அரசியலுக்குள் இருந்துகொண்டு எங்களுடைய மூத்த அண்ணாமாராக, தந்தையராக, சித்தப்பாமாராக நடந்துகொள்ள முயற்சிக்கின்றனர்.

இதனை நல்லவிதமாக அல்லது கெட்டவிதமாக நாம் தீர்த்துக்கொள்ள வேண்டும். மறுபுறத்தில் நாம் இன்று பாரதூரமான பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளோம்.

நாட்டில் நீதி, சமாதானம், சகவாழ்வு, நல்லிணக்கம் இன்று வேறு திசையை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது.

அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் அடாவடித்தனமான நடவடிக்கைகளே இதற்கு காரணம். இந்த ஆட்சிக்காலத்தில் அவர்களால் எவற்றை பெற்றுக்கொள்ள முடியுமோ, அவற்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என தீர்மானித்திருக்கிறார்கள்.

அதன் கட்டங்களாகத்தான், கிழக்கில் தேசிய சொத்துகளை அழித்தல், நல்லிணக்க பெயர்ப்பலகையின் கீழே புத்தர் சிலையை நிறுவவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த தேசிய சொத்துக்களால் எமக்கு எந்தப் பயனும் இல்லை என அந்த மக்கள் சொல்லுமளவுக்கு இன்று காலம் மாற்றமடைந்திருக்கிறது.

அங்கு காடழித்தல் தொடர்பாக பொலிஸ்மா அதிபருக்கு நாம் நேற்று அறிவித்தோம்.

இந்த நிலையில் முஸ்லிம் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஞானசார உள்ளிட்ட தேரர்கள், அமைப்புகளுக்கு எதிராக ஜனாதிபதி, பிரதமரிடம் முறையிடப்போவதாக நாம் கேள்விப்பட்டோம். ஞானசார உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால் முஸ்லிம் உறுப்பினர்கள் கடும் நடவடிக்கை எடுப்பார்களாம். நான் கேட்கிறேன், அதென்ன கடும் நடவடிக்கை? அதனை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

மறுபுறத்தில் நான் கவலையையும் வெளிப்படுத்துகிறேன்.

பாராளுமன்றத்தில் 225 பேர் இருக்கிறார்கள். முஸ்லிம்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்படுமாயின் எவ்வாறான இன உணர்வுடன் முஸ்லிம்கள் ஒன்றிணைகிறார்கள்? இதே உணர்வு பாராளுமன்றத்தில் உள்ள சிங்களவர்களுக்கு இல்லை என்பதை நினைத்து கவலையடைகிறேன்.

முஸ்லிம்களின் ஒற்றுமை குறித்து நாம் மகிழ்ச்சியடைகிறோம். முஸ்லிம்கள் ஒன்றிணைவது குறித்து மகிழ்ச்சியடைகிறோம்.

அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர்களுக்கென பிரச்சினை வரும்போது ஒற்றுமையாக இருப்பதை இன்று உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஆனால், எங்களுடைய உறுப்பினர்கள், ஆகக்குறைந்தது 10,12 பேராவது ஒன்றிணைந்து எமது பிரச்சினைகள் பற்றி இதுவரை பேசவில்லை.

ஆதலால் இந்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு நீதியை நிலைநாட்டுமாறு நாம் கோரி நிற்கின்றோம். எமக்கு வேறு எந்த பிரச்சினையும் இல்லை.
அதனை, வில்பத்துவை அழித்த பதியுதீனிடமிருந்து ஆரம்பியுங்கள். எங்களை கொன்றுவிட்டு தானும் இறப்பதாக கூறிய அசாத் ஸாலியிடமிருந்து ஆரம்பியுங்கள். மூத்த அண்ணனைப் போல இருந்துகொண்டு, தீவிரவாத எண்ணத்துடன் எங்களுடன் மோதவரும் முஜிபுர் ரஹ்மானிடமிருந்து நீதியை நிலைநாட்டிக்கொண்டு வாருங்கள்.

அப்படியென்றால் நாம் நீதிக்கு கட்டுப்படுகிறோம்.

அதைவிடுத்து அரசியல் பலத்தை உபயோகித்துக்கொண்டு எங்களை கட்டுப்படுத்த நினைத்தால் அது அவர்களின் தவறாகும் என்றே நான் சொல்ல வேண்டியிருக்கிறது.

இந்தப் பிரச்சினைகளை சொல்வதற்கு யாரும் இல்லை. இதை கேட்பதற்கு தலைவர் ஒருவர் இல்லை.

சிங்களவர்களுக்கு தலைவர் இல்லை, பௌத்தர்களுக்கு தலைவர் இல்லை. ஆனால் அரசியல் கட்சிகளுக்கு தலைவர்கள் இருக்கிறார்கள். ஏனைய இனங்களுக்கு தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.

இன்று நாங்கள் அராஜகங்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். உண்மையை சொல்வதானால் வீட்டு உரிமையாளர்கள், வாடகைக்கு இருக்கும் ஒருவருக்கு பயந்துகொண்டு இருப்பது போன்ற நிலைமைதான் இன்று.

நாம் இதை உணர்வுபூர்வமாக கதைப்பதற்கு காரணம், நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள இளைஞர்கள் உணர்வுபூர்வமாக இருப்பதால் தான். அவர்களை கட்டுப்படுத்துவதற்காகவே நாம் செயற்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

அமைச்சர் மனோ கணேசன் போன்றோர் இந்த நாட்டுக்கு குடிபெயர்ந்து வந்தவர்கள். அவர்கள் இன்று அமைச்சர்களாக இருக்கிறார்கள். என்ன புதுமை என்றால், உலகில் இப்படியானதொரு சகவாழ்வு உள்ள நாடு இருக்கிறதா? இப்படியானதொரு பௌத்த சூழல் இருக்கின்ற நாட்டில், இருவேளையும் பிரித் கேட்கின்ற மக்கள் வாழ்கின்ற நாட்டில் எந்தக் கள்ளத்தோணிகள் இல்லாமல் இருக்கிறார்கள். சகவாழ்வை பற்றி கற்றுக்கொடுத்த எங்களுக்கு வெளி இடங்களிலிருந்து வந்தவர்கள் எமக்கே கற்றுக்கொடுக்க பார்க்கிறார்கள்.

அறநெறிப்பாடசாலைகளில் எங்களுடைய பிள்ளைகளுக்கு மாத்திரம் சகவாழ்வை கற்றுக்கொடுக்கிறார்கள். முஸ்லிம்களின் மத்ரசாக்களில் தீவிரவாதத்தை கற்றுக்கொடுக்கிறார்கள்.

அது இங்கே சரிவாராது என்பதை தான் எளிமையாக என்னால் சொல்ல முடியும்.

-இராமானுஜம் நிர்ஷன்-

Monday, May 1, 2017

இனியொரு புதுத் தேசம் மலரட்டும்!

இனியொரு புதுத் தேசம் மலரட்டும்


அன்புக்குரிய மகனே,
துரோகிகளும் ஏமாற்றுவித்தைக்காரர்களும் நிறைந்து வாழும் தேசம் இது. சுற்றுச்சூழ நாம் காணும் இயற்கையை கொண்டு சுவர்க்க பூமி என எடைபோட்டு விடாதே. மலைக்காட்டை அழித்து தேயிலை விதைத்து பச்சை தேசத்தை சமைத்தார்கள் எங்கள் மூதாதையர்கள்.


காடழிக்கும் பணிக்கு சென்ற ஆயிரக்கணக்கான மூதாதையர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை. பகடைக்காய்களாய் அங்குமிங்கும் அடிபட்டிருக்கிறோம். எம்மை வைத்து இலாபம் தேடிய முதலாளிமார் இன்னும் சுகமாகத்தான் வாழ்கிறார்கள்.
நாம் இதயசுத்தியானவர்கள். எங்களுக்கு ஏமாற்றம், துரோகம் என்பதெல்லாம் வெறும் வார்த்தைகளாகத்தான் தெரியும். காமன் கூத்தில் மாத்திரம் தான் எங்கள் கிராமத்து மக்கள் நடிப்பார்கள்.

நமது சோகமெல்லாம் மலைக்காற்றிடையே மறைந்திருக்கிறது. எமது கண்ணீர்கூட தேயிலைக்கு உரமாகியிருக்கிறது.

இங்கே தலைவர்கள் என சொல்லிக்கொள்வோர் வந்துபோவதுண்டு. எம்மை ஆளப்பிறந்தவர்களாகவும் அன்பின் இருப்பிடமாகவும் அவர்கள் காட்டிக்கொள்வதுண்டு. அவர்களின் புன்னகைக்குப் பின்னால் போலித்தனத்தின் உச்சம் மறைந்திருக்கிறது.

நாம் இதை கண்டுகொள்ள காலம் எடுத்தது குழந்தையே. நீ எங்கள் வரலாற்றை முதலில் கற்றுக்கொள். அவை சொல்லித் தரும் பாடத்தை விட எந்தத் தத்துவங்களும் உணர்த்திவிடப் போவதில்லை.

கூடை சுமந்து கூனிப் போனேன், கொழுந்து கிள்ளிக் களைத்துப் போனேன்
ஒரு ரொட்டித் துண்டில் வயிற்றை நிரப்பி உன்னை கருவாய் சுமந்தேன். கால்கிலோ குறைந்ததென்று அரைநாள் சம்பளத்தோடு வீடு திரும்பிய நாட்கள் அதிகமாகவே உண்டு.


பசியும் ஏமாற்றமும் கல்நெஞ்சக்காரக் கடவுள் எமக்கு கொடுத்த வரங்கள். நாம் பணத்தால் ஏழைகளே தவிர மனதால் மிக உயர்ந்தவர்கள்.

நான் சிறுபராயத்தில் இருக்கும்போது பௌர்ணமி இரவில் ஊரார் இணைந்து கதை பேசுவார்கள். அப்போது மூத்தவர்கள் பலரும் தாங்களே இயற்றிய பாடல்களை பாடுவார்கள். அந்த ஒவ்வொரு வார்த்தைகளிலும் ஏராளமான வலிகள் புதைந்திருக்கும். ஆனால் அதே பாடல்கள்தான் வலிகளை போக்கும் மருந்தாகவும் இருந்தன.

அந்தக்காலம் இப்போதில்லை. காலம் முழுவதும் கடவுளைத் தூற்றிக்கொண்டே காலமாகிப் போகிறோம்.

உன்னைப் போல எத்தனையோ குழந்தைகள் கொழும்பில் பணக்காரர்கள் வீட்டில் வளர்க்கப்படுகிறார்கள். அவர்களுக்கு உலகம் தெரியாது. பாத்திரம் தேய்ப்பதைத் தவிர வேறொன்றும் சாதித்தது கிடையாது.

என் உதிரம் கொடுத்து உனக்கு உயிர்கொடுத்திருக்கிறேன். உன்னை கடைசிவரை உயிராகக் காக்கும் வரம் எனக்கு கிடைக்குமோ தெரியாது. எனக்கு பொன்,பொருள்,மாளிகையொன்றும் தேவையில்லை. 

என்னைப்போல எத்தனையோ தாய்மாருக்கு மகனாக வளர்ந்து இந்த தேசத்துக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்திடு.
எனக்கு ஆயிரமாயிரம் கனவுகள் உண்டு. என் உயிர் துறக்கும் தருவாயில் அவையும் என்னுடனேயே இந்த மண்ணுக்குள் புதைந்து போகும். அரசியலில் நல்லவர்கள் இருப்பார்கள், சமூகத்தில் துரோகிகளல்லாத நல்லுள்ளம் படைத்தவர்கள் இருப்பார்கள் என்பதை இந்த உலகுக்கு காட்டு.

தூய சிந்தனையுடனான உன் வளர்ச்சி கண்டு இந்த மண்ணுக்குள் புதைந்துபோன எங்கள் மூதாதையர்களின் ஆத்மா சாந்தியடையட்டும். இனியொரு புதுத் தேசம் உன்னிலிருந்து மலரட்டும்!

அன்புடன் அம்மா.

எழுத்து: இராமானுஜம் நிர்ஷன்
படங்கள்: சொரின் பர்ஸோய் (அல்-ஜசீரா)