Tuesday, July 10, 2012

அமைச்சர் ஆறுமுகனுக்கு...!

ஒட்டுமொத்த மலையக மக்களும் சௌமியமூர்த்தி தொண்டமான் என்ற மாபெரும் குடையின் கீழ் திரண்டிருந்த அந்தக் காலத்தை நினைவுபடுத்தியவனாக இந்த மடலை வரைகிறேன்.

சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தல் நெருங்கியிருக்கிறது. இந்த மாகாணத்தைப் பற்றி புதிதாய் ஒன்றும் உங்களுக்கு விளக்கத் தேவையில்லை. அங்கு வாழும் தமிழர்கள் செறிவு, வாழ்க்கை நிலை, எதிர்நோக்கும் பிரச்சினைகள், சவால்கள் என அத்தனையும் நீங்கள் நன்றாக அறிவீர்கள்.

குறிப்பிட்ட தொகை தமிழர்கள் வாழ்ந்தும்கூட மாகாண சபைக்கு தமிழர் ஒருவரையேனும் பிரதிநிதித்துவப்படுத்த முடியாத நிலையில் இருப்பதும் தங்களுக்குத் தெரிந்ததே. என்னதான் பெரும்பான்மை இனத்தவர்கள் தலைமை வகித்தாலும் தமிழர்களுடைய தேவைகள் அனைத்தையுமே அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. அத்துடன் தமிழ்த் தலைவர்களுக்கு மாத்திரமே அம்மக்களின் அடிப்படைத் தேவைகளைப் புரிந்துகொள்ளக்கூடிய மனநிலைஉண்டு.

மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான தொழிற்சங்கம் என்ற வகையிலும் அதற்குத் தலைமை வகிக்கும் பொறுப்புள்ள தலைவர் என்ற வகையிலும் சப்ரகமுவ மாகாணத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை உருவாக்குவதற்கான கடப்பாட்டினை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடனோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியுடனோ இணைந்து போட்டியிடுவதால் தமிழ்ப் பிரதிநிதித்துவம் ஒன்றைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பது நமக்கு வரலாறு கற்பித்த பாடம். அதேபோல் சிறுபான்மைக் கட்சிகள் அனைத்துமே பிளவுபட்டு அவரவர் சின்னத்தில் போட்டியிடுவதன் மூலமும் பிரதிநிதித்துவத்தைப் பெற முடியாது என்பது நிதர்சனமான உண்மை.

இந்நிலையில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்ள அனைத்துச் சிறுபான்மைக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டியது அவசியமாகும். காலத்தின் கட்டாயமாகவுள்ள இந்தத் தேவைக்கு தங்களின் ஒத்துழைப்பு வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும்.

மலையகத்தில் தேர்தல் என்றாலே சொல்லத் தேவையில்லை. அரசியல் அரங்கில் கட்சிகள் நடத்தும் திருவிழா போல பரபரப்பும் வேகமும் காணப்படும். ஒவ்வொரு முறை தேர்தலிலும் அரசியல்வாதிகள் தாம் அள்ளி வழங்கும் வாக்குறுதிகளில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலவற்றைச் செய்து முடிப்பதும் அதற்கு மேலதிகமாக வார்த்தைகளைக் கோர்த்து அறிக்கை விடுவதும் நீங்கள் அறியாத விடயமல்ல.

மலையக தொழிலாளர்கள் என்றால் எதிர்க்கேள்வி கேட்காத கூட்டம் என்றுதான்; தமது தலைமைகளால் இதுவரை நோக்கப்பட்டு வந்தனர். ஆனால் தற்போது அந்த நிலை மாறி யதார்த்த அரசியலை விளங்கிக்கொண்டு சிந்தித்து செயற்படும் தூரநோக்குள்ளவர்களாக அந்த மக்கள் மாறியிருக்கிறார்கள்.

இந்நிலையில் தமது எதிர்காலத்தைத் தாமே தீர்மானிக்கப்போகும் மிகத்தீர்க்கமான வரலாற்றின் மிகத்தேவையான தேர்தலுக்கு மக்கள் முகங்கொடுக்கப்போகின்றனர். தேர்தல் காலங்களில் பொய்முகங்களோடு நடமாடிய அரசியல்வாதிகளுக்கும் உண்மையான, நேர்மையான சேவை உள்ளம்கொண்ட அரசியல்வாதிகளுக்கும் தாம் யார் என்பதைச் சொல்லப்போகும் தேர்தல் அண்மித்திருக்கிறது.

இது இவ்வாறிருக்க, சப்ரகமுவவில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்வதற்காக மதகுருமார், சமூக அமைப்புகளைச் சார்ந்தோர், புத்திஜீவிகள் எனப் பலரும் திரண்டு அண்மைக்காலமாக ஆலோசனை நடத்திவந்தார்கள். தனியானதொரு சின்னத்தில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளையும் இணைத்துக்கொண்டு தமிழர்கள் போட்டியிடுவது என்ற ஏகோபித்த தீர்மானத்துடன் அவர்கள் செயற்பட்டு வந்தார்கள். தங்களுடைய கட்சியின் சேவல் சின்னத்தில் போட்டியிடுவதே பொருத்தமானது என்பது பெரும்பாலானோரின் அவாவாகும். எனினும் இது தொடர்பில் தங்களுடைய நிலைப்பாடு வெளிப்படுத்தப்படாமை வேதனைக்குரியதே.

தமிழர்களின் வாக்குகளைச் சிதறடிக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை என நம்புவதோடு அவ்வாறான நோக்கம் கொண்டோரிடம் கூட்டுச்சேர மாட்டீர்கள் என்றும் எதிர்பார்க்கிறேன்.

சப்ரகமுவவில் பேரினவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகும் தொழிலாளர்கள் கேட்பார் யாருமின்றி வேதனைகளைத் தங்களுக்குள்ளேயே புதைத்துக்கொள்கிறார்கள். வாழ்க்கைச் சுமையைத் தாங்கிக்கொள்ள முடியாத அவர்கள் நாளாந்தம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஏராளம். தமிழர்களுக்கென சரியானதொரு அரசியல் களம் அமைக்கப்பட்டு மக்களின் குரலாய் ஒலிப்பதற்கு தமிழர் தெரிவுசெய்யப்படுவாராயின் அது தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் வெற்றியாகவே கருத முடியும்.

மாகாண சபையில் தமிழ் படும் பாட்டை அச்சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. அதனை உங்கள் பார்வைக்காக இங்கே தருகிறேன்.




அமைச்சர் அவர்களே, ஆகக்குறைந்தது மாகாண சபையிலாவது தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை உருவாக்கி அரசியல் அநாதைகள் என்ற அவப்பெயரிலிருந்து அந்த மக்களுக்கு விடுதலை பெற்றுக்கொடுப்பதன் ஆக்கபூர்வமான பங்களிப்பை நீங்கள் வழங்க வேண்டும். அவ்வாறு தமிழ்ப் பிரதிநிதித்துவம் கிடைக்குமாயின் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் தூர நோக்குகளில் சிறிதளவேனும் சப்ரகமுவ மக்கள் அடையக் கூடியதாக இருக்கும்.

அதேபோன்று மக்களின் பலவீனத்தைத் தலைவர்கள் தமது பலமாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். சமுதாயத்தின் மீது தார்மிகப்பொறுப்புடன் செயற்பட்டு நியாயமான அரசியலில் ஈடுபட்டிருந்தால் உண்மையில் மலையக சமுதாயம் அத்தனை துறைகளிலும் முன்னேறி மிளிர்ந்திருக்கும் .ஆனால் எதற்கெடுத்தாலும் அப்பாவித் தொழிலாளர்களையே குறைசொல்லி அவர்களின் அறியாமையையும் கல்வியின்மையையும் சுட்டிக்காட்டியே பலர் வளர்ந்துவிட்டார்கள்.

மக்களின் தேவை அறிந்து மக்கள் சேவையுடன் அரசியலில் ஈடுபடும் நல்ல தலைமையை இனியும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்தத் தலைமைத்துவத்தை வழங்கி வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாழ்ந்துகொண்டிருக்கும் மலையக சமுதாயத்தை முன்னேற்றகரமான வழியில் இட்டுச்செல்லும் தலைவர்களை மலையகம் இருகரம் கூப்பி வரவேற்கத் தயாராக இருக்கிறது. அதேவேளை, மக்களின் இயலாமையைப் பயன்படுத்தி அரசியல் இலாபம் தேட முனையும் எந்தத் தலைமையும் வரலாற்றுக்கு பதில்சொல்லியே ஆக வேண்டும்.

மலையகத்தில் ஒற்றுமையின்றி சிதறிப்போயுள்ள தமிழ்க் கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டு வாக்குகளைச் சிதறடிக்காமல் ஒரே குடையின் கீழ் நின்று ஒற்றுமையின் பலத்தை நிரூபிப்பதற்கு உதவிக்கரம் நீட்டுவீர்கள் என்று முழுமையாக நம்புகிறோம். தீர்க்கமான இத்தருணத்தில் மக்களின் நலனுக்காக சரியான தீர்மானத்தை எடுத்து சப்ரகமுவவில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் கிடைக்க வழிசெய்ய வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும்.

-இராமானுஜம் நிர்ஷன் 
_

அமைச்சர் ஆறுமுகனுக்கு!

ஒட்டுமொத்த மலையக மக்களும் சௌமியமூர்த்தி தொண்டமான் என்ற மாபெரும் குடையின் கீழ் திரண்டிருந்த அந்தக் காலத்தை நினைவுபடுத்தியவனாக இந்த மடலை வரைகிறேன்.

சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தல் நெருங்கியிருக்கிறது. இந்த மாகாணத்தைப் பற்றி புதிதாய் ஒன்றும் உங்களுக்கு விளக்கத் தேவையில்லை. இங்கு வாழும் தமிழர்கள் செறிவு, வாழ்க்கை நிலை, எதிர்நோக்கும் பிரச்சினைகள், சவால்கள் என அத்தனையும் நீங்கள் நன்றாக அறிவீர்கள்.

குறிப்பிட்ட தொகை தமிழர்கள் வாழ்ந்தும்கூட மாகாண சபைக்கு தமிழர் ஒருவரையேனும் பிரதிநிதித்துவப்படுத்த முடியாத நிலையில் இருப்பதும் தங்களுக்குத் தெரிந்ததே. என்னதான் பெரும்பான்மை இனத்தவர்கள் தலைமை வகித்தாலும் தமிழர்களுடைய தேவைகள் அனைத்தையுமே அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. அத்துடன் தமிழ்த் தலைவர்களுக்கு மாத்திரமே அம்மக்களின் அடிப்படைத் தேவைகளைப் புரிந்துகொள்ளக் கூடிய மனநிலை உண்டு.

மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான தொழிற்சங்கம் என்ற வகையிலும் அதற்குத் தலைமை வகிக்கும் பொறுப்புள்ள தலைவர் என்ற வகையிலும் சப்ரகமுவ மாகாணத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை உருவாக்குவதற்கான கடப்பாட்டினை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் அல்லது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதால் தமிழ்ப் பிரதிநிதித்துவம் ஒன்றைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பது நமக்கு வரலாறு கற்பித்த பாடம். அதேபோல் சிறுபான்மைக் கட்சிகள் அனைத்துமே பிளவுபட்டு அவரவர் சின்னத்தில் போட்டியிடுவதன் மூலமும் பிரதிநிதித்துவத்தைப் பெற முடியாது என்பது நிதர்சனமான உண்மை.

இந்நிலையில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்ள அனைத்துச் சிறுபான்மைக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டியது அவசியமாகும். காலத்தின் கட்டாயமாகவுள்ள இந்தத் தேவைக்கு தங்களின் ஒத்துழைப்பு வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும்.

மலையகத்தில் தேர்தல் என்றாலே சொல்லத் தேவையில்லை. அரசியல் அரங்கில் கட்சிகள் நடத்தும் திருவிழா போல பரபரப்பும் வேகமும் காணப்படும். ஒவ்வொரு முறை தேர்தலிலும் அரசியல்வாதிகள் தாம் அள்ளி வழங்கும் வாக்குறுதிகளில் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலவற்றைச் செய்து முடிப்பதும் அதற்கு மேலதிகமாக வார்த்தைகளைக் கோர்த்து அறிக்கை விடுவதும் நீங்கள் அறியாத விடயமல்ல.

மலையகத் தொழிலாளர்கள் என்றால் எதிர்க்கேள்வி கேட்காத கூட்டம் என்றுதான் தமது தலைமைகளால் இதுவரை நோக்கப்பட்டு வந்தனர். ஆனால், தற்போது அந்த நிலை மாறி யதார்த்த அரசியலை விளங்கிக்கொண்டு சிந்தித்து செயற்படும் தூரநோக்குள்ளவர்களாக அந்த மக்கள் மாறியிருக்கிறார்கள்.

இந்நிலையில் தமது எதிர்காலத்தைத் தாமே தீர்மானிக்கப் போகும் மிகத் தீர்க்கமான வரலாற்றின் மிகத் தேவையான தேர்தலுக்கு மக்கள் முகங்கொடுக்கப் போகின்றனர். தேர்தல் காலங்களில் பொய்முகங்களோடு நடமாடிய அரசியல்வாதிகளுக்கும் உண்மையான,நேர்மையான சேவை உள்ளம் கொண்ட அரசியல்வாதிகளுக்கும் தாம் யார் என்பதைச் சொல்லப்போகும் தேர்தல் அண்மித்திருக்கிறது.

இது இவ்வாறிருக்க, சப்ரகமுவவில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்வதற்காக மதகுருமார், சமூக அமைப்புகளைச் சார்ந்தோர், புத்திஜீவிகள் எனப் பலரும் திரண்டு அண்மைக்காலமாக ஆலோசனை நடத்தி வந்தார்கள். தனியானதொரு சின்னத்தில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளையும் இணைத்துக்கொண்டு தமிழர்கள் போட்டியிடுவது என்ற ஏகோபித்த தீர்மானத்துடன் அவர்கள் செயற்பட்டு வந்தார்கள். தங்களுடைய கட்சியின் சேவல் சின்னத்தில் போட்டியிடுவதே பொருத்தமானது என்பது பெரும்பாலானோரின் அவாவாகும். எனினும் இது தொடர்பில் தங்களுடைய நிலைப்பாடு வெளிப்படுத்தப்படாமை வேதனைக்குரியதே.

தமிழர்களின் வாக்குகளைச் சிதறடிக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை என நம்புவதோடு அவ்வாறான நோக்கம் கொண்டோரிடம் கூட்டுச்சேர மாட்டீர்கள் என்றும் எதிர்பார்க்கிறேன்.

சப்ரகமுவவில் பேரினவாதிகளின் தாக்குதலுக்குள்ளாகும் தொழிலாளர்கள் கேட்பார் யாருமின்றி வேதனைகளைத் தங்களுக்குள்ளேயே புதைத்துக்கொள்கிறார்கள். வாழ்க்கைச் சுமையைத் தாங்கிக்கொள்ள முடியாத அவர்கள் நாளாந்தம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஏராளம். தமிழர்களுக்கென சரியானதொரு அரசியல் களம் அமைக்கப்பட்டு மக்களின் குரலாய் ஒலிப்பதற்கு தமிழர் தெரிவுசெய்யப்படுவாராயின் அது தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் வெற்றியாகவே கருத முடியும்.

மாகாண சபையில் தமிழ் படும் பாட்டை அச்சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. அதனை உங்கள் பார்வைக்காக இங்கே தருகிறேன்.

அமைச்சர் அவர்களே, ஆகக்குறைந்தது மாகாண சபையிலாவது தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை உருவாக்கி அரசியல் அநாதைகள் என்ற அவப்பெயரிலிருந்து அந்த மக்களுக்கு விடுதலை பெற்றுக்கொடுப்பதன் ஆக்கபூர்வமான பங்களிப்பை நீங்கள் வழங்க வேண்டும். அவ்வாறு தமிழ்ப் பிரதிநிதித்துவம் கிடைக்குமாயின் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் தூர நோக்குகளில் சிறிதளவேனும் சப்ரகமுவ மக்கள் அடையக் கூடியதாக இருக்கும்.

அதேபோன்று மக்களின் பலவீனத்தைத் தலைவர்கள் தமது பலமாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். சமுதாயத்தின் மீது தார்மிகப் பொறுப்புடன் செயற்பட்டு நியாயமான அரசியலில் ஈடுபட்டிருந்தால் உண்மையில் மலையக சமுதாயம் அத்தனை துறைகளிலும் முன்னேறி மிளிர்ந்திருக்கும். ஆனால் எதற்கெடுத்தாலும் அப்பாவித் தொழிலாளர்களையே குறை சொல்லி அவர்களின் அறியாமையையும் கல்வியின்மையையும் சுட்டிக்காட்டியே பலர் வளர்ந்து விட்டார்கள்.

மக்களின் தேவை அறிந்து மக்கள் சேவையுடன் அரசியலில் ஈடுபடும் நல்ல தலைமையை இனியும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்தத் தலைமைத்துவத்தை வழங்கி வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாழ்ந்துகொண்டிருக்கும் மலையக சமுதாயத்தை முன்னேற்றகரமான வழியில் இட்டுச்செல்லும் தலைவர்களை மலையகம் இருகரம் கூப்பி வரவேற்கத் தயாராக இருக்கிறது. அதேவேளை, மக்களின் இயலாமையைப் பயன்படுத்தி அரசியல் இலாபம் தேட முனையும் எந்தத் தலைமையும் வரலாற்றுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

மலையகத்தில் ஒற்றுமையின்றி சிதறிப்போயுள்ள தமிழ்க் கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டு வாக்குகளைச் சிதறடிக்காமல் ஒரே குடையின் கீழ் நின்று ஒற்றுமையின் பலத்தை நிரூபிப்பதற்கு உதவிக்கரம் நீட்டுவீர்கள் என்று முழுமையாக நம்புகிறோம். தீர்க்கமான இத்தருணத்தில் மக்களின் நலனுக்காக சரியான தீர்மானத்தை எடுத்து சப்ரகமுவவில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும்.

-இராமானுஜம் நிர்ஷன் _
__
வீரகேசரி -