Friday, April 10, 2020

கானல் நீராகிப்போன ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம்! பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார்?

லையக பெருந்தோட்ட மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் கறுப்புச் சரித்திரத்தில் மற்றுமொரு நாள் இன்று உதயமாகியிருக்கிறது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் இன்றுமுதல் வழங்கப்படும் என்ற, அரசாங்கத்தின் பொறுப்புமிக்க அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் வாக்குறுதி மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.

தொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச சம்பளம் என்பதற்கும் அடிப்படைச் சம்பளம் என்பதற்கும் வித்தியாசம் உண்டு. அரசியல்வாதிகளின் சாணக்கியமான காய்நகர்த்தலில் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை பல தடவைகள்,பலரும் சுட்டிக்காட்டியிருந்தார்கள்.

கொரோனா அச்சுறுத்தலிலும் தேயிலைத் தேசத்தைக் காக்கும் மக்கள் இன்று சகலராலும் கைவிடப்பட்டிருக்கிறார்கள்.

மலையக பெருந்தோட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம் எனச் சொல்லும் தலைவர்களின் கையாலாகத்தனத்தின் வெளிப்பாட்டை இன்று நாம் காண்கிறோம்.

இந்த விடயத்தில் அரசாங்கத்தின் நழுவல்போக்கு, அரசியல்வாதிகளின் ஏமாற்று நாடகம் ஆகியவற்றின் சிலதுளிகளை விபரிக்க முயற்சிக்கிறேன்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா அடிப்படைச் சம்பளம் வழங்குவதில் அரசாங்கத்துக்கு உள்ள சவால்கள் என்ன?
இலங்கை தேயிலையிலையில் 24.5 வீதமான உற்பத்தியை மாத்திரமே பெருந்தோட்டங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன. மிகுதி 75.5 வீதமானவை சிறு தோட்டங்களில் உற்பத்தியாகின்றன.

ஒப்பீட்டு ரீதியில் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் வழங்கப்படுமாயின் அதற்கு ஒத்தாற்போல சிறுதோட்ட உரிமையாளர்கள், தொழிலாளர்களுக்கும் சலுகைகள், நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டிய கட்டாயச் சூழல் எழுந்துள்ளது.

சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபை, சிறுதோட்ட உரிமையாளர்கள் சங்கம், இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர் சங்கம், தேயிலை ஏற்றுமதியாளர் சங்கம் ஆகியன இதற்கான அழுத்தங்களை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றன.

இதனால் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளது.

மறுபுறம் தேயிலை உற்பத்தி விலையேற்றம், தொழிலாளர்களிடம் வினைத்திறன் இன்மை (குறிப்பாக ஆண்கள்), தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி, ஏற்றுமதியில் உள்ள தடைகள் ஆகியவற்றை முதலாளிமார் சம்மேளனம் காரணங்களாக முன்வைத்தது.

இதனால் 1000 ரூபா அடிப்படைச் சம்பளத்தை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டது.
(இன்னும் பல காரணங்கள் உண்டு)

இதேவேளை, தொழிலாளர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கும் தொழிற்சங்கங்கள் அதற்கான பொறிமுறைகளை சரியான முறையில் முன்வைக்கவில்லை.

2015 ஆம் ஆண்டு, பொது மேடையில் ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் பெற்றுக்கொடுப்போம் என உறுதியளித்தார் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்.

ஆனால் 2019 ஆம் ஆண்டு, “ஆயிரம் ரூபா எப்படி கொடுக்கப் போறீங்கனு ஜனாதிபதிகிட்ட கேட்டேன்” என்கிறார். இதன் மூலம் அடிப்படை பிரச்சினை என்னவென்பது தெளிவு.

இதேவேளை, இராஜாங்க அமைச்சர் ரொமேஷ் பத்திரனவின் கருத்துக்கும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் கருத்துக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்பட்டன.

கம்பனிகளுடன் பேச்சுவார்த்தையில் இழுபறியில் இருக்கிறது, பேச்சுவார்த்தை நடத்துகிறோம், சாதகத்தன்மைகள் குறித்து ஆராய்கிறோம் என ரொமேஷ் பத்திரன கூறும்போது,
மறுநாள்
ஏப்ரல் 10 ஆம் திகதி உங்களுக்கு 1000 ரூபா சம்பளம் கைக்கு கிடைக்கும். இது நிச்சயம், நேத்தும் ஜனாதிபதியோட பேசினேன், பிரதமருக்கும் சொன்னேன் என்கிறார் ஆறுமுகன் தொண்டமான்.

(ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் தொழிலாளர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதால் பல தடவைகள், அமைச்சுப் பொறுப்பையும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜினாமா செய்தவர்தானே? என மனதில் கேள்வி உதித்தால் நான் பொறுப்பல்ல தோழர்களே!)

வடக்கில் ஒருவிதமான தோரணையில் ஒரு கருத்தையும் நுவரெலியாவில் இன்னொரு விதமான தோரணையில் இன்னொரு கருத்தையும் அவர் முன்வைத்து வந்தார்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் அமைச்சர் ஆறுமுகனின் தெளிவற்ற பேச்சு, சம்பள அதிகரிப்புக்கான நியாயத்தை எடுத்துக்காட்டவில்லை.

தொழிலாளர்களின் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கு இவ்விந்த சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என நிறுவுவதற்கு பலம்பொருந்திய (சொல்லப்படுகின்ற) இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் முடியவில்லை.

நிற்க,
இந்நிலையில், முதலாளிமார் சம்மேளனத்தினால் ஏன் அடிப்படைச் சம்பளம் ஆயிரத்தை வழங்க முடியாது என்ற கேள்வியும் எழுகிறதல்லவா?

இலாபத்தை நோக்காகக் கொண்ட எந்தவொரு நிறுவனமும் அந்த நோக்கத்திலிருந்து பின்வாங்குவதைத் தவிர்க்கின்றன.

இறுதியாக முதலாளிமார் சம்மேளனம் அரசாங்கத்திடம் முன்வைத்த முன்மொழிவு பரிந்துரையின் அடிப்படையில் தொழிலாளி ஒருவருக்கு மொத்த சம்பளமாக மாதாந்தம் 25,000 வழங்க முடியும் எனத் தெரிவித்திருந்தது.

அதுவும் ஊழியர் சேமலாப நிதி, நம்பிக்கை நிதி அடங்கலாக வரவுக் கொடுப்பனவையும் உள்ளடக்கியது.
அந்த பரிந்துரை வருமாறு,


இங்கே, அடிப்படைச் சம்பளத்தில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்த முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் தெரிவிக்கவில்லை.

அத்துடன் தேயிலை, இறப்பர் தோட்டங்கள் காடாகிப் போயுள்ளமைக்கு தொழிலாளர்களையே குறை கூறி வருகின்றன.

அதேவேளை, தற்போதைய சூழ்நிலையில் கொரோனா ஆபத்து குறித்து அதிக அவதானம் செலுத்தப்பட்டு வருவதால் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இது வாய்ப்பாக அமைந்து விடுகிறது.

அதுமாத்திரமன்றி கடந்த காலங்களில் தொடர்ச்சியாக கடும் வெயில் காலநிலை காணப்பட்டது. இதனால் தேயிலை தொழிற்சாலைகள் பல இயங்காமால் போயின. தேயிலை உற்பத்தியிலும் சிறு அளவிளான வீழ்ச்சி ஏற்பட்டது.

இவையும் முதலாளிமார் சம்மேனளத்தால், சம்பள அதிகரிப்பு சாத்தியமற்றதற்கான காரணங்களாக முன்வைக்கப்படுகின்றன.
கடந்த மார்ச் 20 ஆம் திகதி வரையில் முதலாளிமார் சம்மேளனத்துடன் அரச தரப்பினர், தொழிற்சங்க தரப்பினர் ஆகியோர் 18 சுற்று பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தனர்.

கொழும்பு ஏல விற்பனையில் தேயிலைக்கு உரிய கேள்வி விலை நிர்ணயம் கிடைக்காமையை சுட்டிக்காட்டிய முதலாளிமார் சம்மேளனம், ஒரு சில நாடுகளுக்கான ஏற்றுமதியில் வீழ்ச்சி குறித்தும் வாதாடியிருந்தது.

அதேவேளை, கடந்த டிசம்பர் (2019) மாதத்தில் ஒரு கிலோ தேயிலைக்கான உற்பத்திச் செலவு 631 ரூபாவாக இருந்த வேளை, விற்பனை விலை 508 ஆக இருந்ததாகவும் சுட்டிக்காட்டியது.

வெளியார் உற்பத்தி முறைமை நடைமுறைப்படுத்தப்படுமாயின் அதிக சம்பளத்தை வழங்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அதனை ஊக்குவிப்பதற்கு தொழிற்சங்கள் முன்வரவேண்டும் எனவும் முதலாளிமார் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதேவேளை, ஆண் தொழிலாளர்களின் செயற்திறனில் முதலாளிமார் சம்மேளனம் திருப்தியை வெளிப்படுத்தவில்லை.

அதுமாத்திரமல்லாது, இலங்கையில் சராசரியாக நாளொன்றுக்கு 18 முதல் 21 கிலோ கிராம் தேயிலைக் கொழுந்து பறிக்கப்படும் அதேவேளை, இந்தியாவில் அது 40 கிலோ கிராமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அரச தரப்பினர் கூறுவதுபோல ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் வழங்க முடியும் என்றால், அரசாங்கத்துக்குச் சொந்தமான பெருந்தோட்ட நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு ஏன் அதனை வழங்க முடியாது என்ற கேள்வியும் முதலாளிமார் சம்மேளனத்தினால் எழுப்பப்படுகிறது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் உலகம் கொரோனா என்ற கொடிய நோய்க்கு முகங்கொடுத்திருக்கிறது. இதனால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பேச்சுவார்த்தைகளுக்கும் தடைகள் ஏற்பட்டுள்ளன.
2020, பெப். 20 - பேச்சுவார்த்தை

2020, பெப்.20 - பேச்சுவார்த்தை
தேயிலை ஏற்றுமதியில் சலுகைகளைக் கொடுத்து, அதன் மூலமான பணத்தை தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு பயன்படுத்தும் யோசனை ஆராயப்பட்ட போதும் அதன் சாத்தியப்பாடுகள் குறைவாகவே காணப்படுகின்றன.

ஏனென்றால் அதன் விளைவு அரச ஏற்றுமதி வருமானத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் (தற்போதைய சூழ்நிலை போல) பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனால் தேயிலை ஏற்றுமதி பெரும் சவால்களை எதிர்கொள்ள நேரிடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆக, யதார்த்தங்களைப் புரிந்துகொண்டு தேயிலை ஏற்றுமதிகள் பாதிக்கா வண்ணம் தொழிற்சங்கங்கள் சாதகமான முன்மொழிவுகளை சமர்ப்பிக்க வேண்டும்.

இங்கே, இந்த விடயத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை மாத்திரம் குறைகூறுவது நியாயமற்றது. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும்  தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களிடம் சந்தா பெற்றுக்கொள்ளும் ஏனைய தொழிற்சங்களும் இந்த விடயத்தில் அக்கறை கொள்ள வேண்டும்.

பெரும்பான்மை இனப் பலத்தோடு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் சிறுபான்மையினரின் கோரிக்கைகளுக்கான தீர்வுகளை தாம்பாளத்தில் வைத்துத் தந்துவிடப்போவதில்லை. அதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.

வெறுமனே அறிக்கைகளால் மாத்திரம் சம்பள விடயத்தை வெற்றிகொள்ள முடியாது என்பதை  உணர்ந்து செயல்திறன் மிக்க நடவடிக்கைகளில் ஈடுபடும் வரை இந்தப் பிரச்சினை தொடர்ந்துகொண்டே இருக்கும் என்பதுதான் கண்கூடு.

-நிர்ஷன் இராமானுஜம்-
10.04.2020

(இலங்கைத் தேயிலை ஏற்றுமதித்துறை எதிர்நோக்கியிருக்கும் சவால்கள், உள்நாட்டில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள், தேயிலை மலைகள் தரிசு நிலமாகியதன் விளைவுகள் குறித்து புள்ளி விபரங்களோடு அடுத்த கட்டுரையில் சந்திக்கிறேன்)

Saturday, March 28, 2020

COVID 19 - எதிர்வரும் 10 நாட்களில் நாம் எதிர்கொள்ளப்போகும் அபாயம்! Dr. வாசனுடன் தமிழ் ஊடகத்துறையினரின் கலந்துரையாடல்!

நாட்டில் தற்போது, சிகிச்சை பெறுவோர், மறைமுகமாக வாழ்வோர் என கொரோனா தொற்றுடைய 550 பேர் இருப்பதாக கணிப்பீடுகள் மூலம் நம்புகிறோம்.
எதிர்வரும் ஏப்ரல் முதல் வாரத்தில், அதாவது 7,8ஆம் திகதி ஆகும்போது நாட்டில் மொத்தமாக 19 ஆயிரம்பேர் இந்தத் தொற்றுக்கு ஆளாவர் என்ற ஊகமும் எமக்கு உண்டு.
நாட்டு மக்கள் ஒற்றுமையாக இணைந்து எதிர்ப்பதன் மூலம் பேரபாயத்தைத் தவிர்க்கக் கூடியதாக இருக்கும்
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினரும் சிரேஷ்ட வைத்திய அதிகாரியுமான வாசன் இரத்தினசிங்கம் நேற்று (27) மாலை பகிர்ந்துகொண்ட கருத்துகள் இவை.


இலங்கை இதழியல் கல்லூரியின் ஏற்பாட்டில் வைத்தியர் வாசன் இரத்தினசிங்கத்துடன் தமிழ் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்ட இணைய வழி கலந்துரையாடல் இன்று மாலை 4 மணிமுதல் 6 மணிவரை இடம்பெற்றது.

இதன்போது பல்வேறு முக்கியமான கருத்துகளை வைத்தியர் வாசன் பகிர்ந்துகொண்டதோடு ஊடகவியலாளர்களின் பங்களிப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கும் பதில் வழங்கினார்.

வைத்தியர் வாசன் இரத்தினசிங்கம் எம்மோடு பகிர்ந்துகொண்டவற்றை இரத்தினச் சுருக்கமாக இங்கே பதிவிடுகிறேன் (இயலுமானவரை முயற்சிக்கிறேன்)

சீனாவுக்குப் பிறகு, இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா நாடுகளில் நாம் எதிர்பாராத வகையில் நோயாளர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பு வீதமும் அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த நாளில் 17 ஆயிரம் பேர் தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

எமது நாட்டுடன் ஒப்பிடும்போது இந்த நாடுகள் அனைத்தும் மருத்துவத் துறையில் சிறந்து விளங்குகின்றன. ஆனால் ஏன், எவ்வாறு இதனைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது என்ற கேள்விகள் எமக்குள் எழுகின்றன.

அதேவேளை, இந்தப் பேராபத்தை எவ்வாறு நமது நாடு எதிர்கொள்ளப் போகிறது என்ற சவாலையும் நாம் ஒவ்வொருவரும் எதிர்கொண்டிருக்கிறோம்.

சீனாவைத் தவிர ஏனைய நாடுகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை ஆரம்ப காலத்தில் எவ்வாறு இருந்ததோ அதே நிலைமை தான் நம் நாட்டிலும் இருந்தது.


ஆனால் வாரங்கள் தள்ளிப்போகும்போது அந்த நாடுகள் எதிர்நோக்கியுள்ள சவால்கள் எமக்கும் ஏற்படாது என்பதற்கு எந்தவித நிச்சயமும் இல்லை.

எமது கணிப்பு, ஆய்வுகளின் பிரகாரம் இன்று முதல் எதிர்வரும் ஏப்ரல் 7 ஆம் திகதி வரையான காலப்பகுதி மிகத் தீர்க்கமானதாகும்.

இங்கே சுமார் 550 பேர் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கலாம் என்பதே எமது கணிப்பாகும். இவ்வாறு பாதிப்புக்கு உள்ளான நோய்க் காவிகளால் ஏப்ரல் மாத முற்பகுதியில் நோயாளர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை எட்டக் கூடிய சாத்தியம் உள்ளது.

எயிட்ஸ் போன்ற பாலியல் நோய் ஏற்பட்டிருப்பதாக பலர் மறைந்து வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் வெளியில் வந்து தங்களையும் காத்து பிறரையும் காக்க முன்வரவேண்டும்.

இந்த வைரஸ் வேகமாக பரவுவதற்கான சாத்தியக் கூறுகள் என்ன?
பதில்: உலக சுகாதார அமைப்பின் தகவலின் பிரகாரம் கொவிட் 19 வைரஸ், காற்றில் 8 முதல் 10 மணித்தியாலங்களும் மரம், செடி போன்றவற்றில் சுமார் 10 மணித்தியாலங்களும் உலோகப் பொருட்களில் 14 முதல் 15 மணித்தியாலங்களும் உயிர்வாழக் கூடியது எனச் சொல்லப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி, பிளாஸ்டிக் பொருட்களில் 72 மணித்தியாலங்களும் பால் வகைகளில் 2 நாட்களும் உயிர் வாழக்கூடியது.

அதேபோன்று நாம் மேற்கொள்ளும் சுயபாதுகாப்பு முறைகளும் இதற்கு தாக்கத்தை செலுத்துகின்றன.

உதாரணமாக நாணயத்தாள் பரிமாற்றங்களிலும் அவதானம் தேவை. பிஸ்கட் போன்ற பொதியிடப்பட்ட உற்பத்திகளைக் கழுவி சுத்தம் செய்ய முடியுமாயின், அது சிறந்தது.

மரக்கறிவகைகளை நன்றாகக் கழுவ வேண்டும். அதிக வெப்ப நிலையில் வேக வைத்து உண்ண வேண்டும்.

கரட், வல்லாறை போன்ற பச்சையாக உணவில் சேர்த்துக்கொள்ளும் மரக்கறி வகைகளை அவ்வாறு உண்பதிலிருந்து கட்டாயம் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

இலங்கையில் தற்போதுள்ள நிலைமையின் அடிப்படையில் கொரோனாவைக் கட்டுப்படுத்தக் கூடிய சாத்தியம் உண்டா?
நிச்சயமாக உண்டு. அது பொதுமக்களின் கைகளில் தான் இருக்கிறது. ஒவ்வொரு பொதுமகனும் இந்த நோய் குறித்து விளக்கமாக அறிந்திருத்தல் அவசியமாகும்.

உதாரணத்துக்கு சிங்கப்பூரை எடுத்துக்கொண்டால் சிறுவர்கள் கூட அறிந்து வைத்திருக்கிறார்கள். அந்தளவுக்கு கட்டமைப்பில் மாற்றம் இருக்கிறது.

நாம் அனைவரும் இணைந்து போராடினால்தான் இந்த வைரஸ் அபாயத்தைத் தவிர்க்க முடியும். கொவிட் 19 உடைய ஒருவர், மேலும் 8 பேருக்கு நோயைக் காவுவார் என்ற நிலைப்பாட்டின் அடிப்படையில் தான் கணிப்பீடுகள் இடம்பெறுகின்றன.

SOCIAL DISTANCE என்று சொல்லப்படுகின்ற சமூக இடைவெளி மிக அவசியமானதாகும். அதனை நாம் அனைவரும் கட்டாயமாகக் கடைபிடிக்க வேண்டும். அதனை முறையாகக் கடைபிடிக்கும்போது கொரோனா எனும் ஆபத்தை மிக இலகுவாக எதிர்கொள்ளலாம்.

இலங்கையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு வைத்தியசாலையில் கண்காணிக்கப்படுவோரின் நிலை?
இலங்கையில் நோய்த் தொற்று உள்ளானவருக்கு மருத்துவம் வழங்குதல், அவர் சார்ந்தோரைக் கண்காணித்தல், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்தல் போன்ற செயற்பாடுகள் மிக வினைத்திறனுடன் நடைபெறுகின்றன.

தற்போது நால்வர் தீவிர கண்காணிப்புப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் நீண்டகாலமாக வேறு நோய்களால் பீடிக்கப்பட்டிருப்பதால் தாக்கம் அதிகரித்துள்ளது என்றே கூற முடியும்.

உயர் குருதி அழுத்தம், மாரடைப்பு, மாற்று அவயம் பொருத்தியிருத்தல், புற்று நோய் ஆகியவற்றில் எதுவேனும் ஒன்றால் பாதிக்கப்பட்டோருக்கு அவதானம் அதிகமாகத் தேவை. அத்துடன் வயது முதிர்ந்தோரும் கர்ப்பிணிப் பெண்களும் இதில் அடங்குவர்.

இந்த நோய்த் தொற்றில் காலநிலை தாக்கத்தை செலுத்துகிறதா?

ஆரம்பத்தில் அப்படிக் குறிப்பிட்டாலும் கூட காலநிலை தாக்கத்தை செலுத்துவதில்லை என்றே குறிப்பிட முடியும். வெப்ப, குளிர் பிரதேசங்கள் எதுவானாலும் மனித உடலின் வெப்பநிலை ஒரே நிலையில் தான் காணப்படும்.

மனித உடலின் வெப்பநிலை 60 டிகிரி செல்சியஸ் ஆகும்போது, அது வைரஸை கொல்லும். ஆனால் நமது உடல் வெப்பநிலை அந்தளவுக்கு உயர்வாக இருப்பதற்கான சாத்தியம் இல்லை.

கொரோனா தொற்று உடைய ஒருவருக்கான பிரதான அறிகுறிகள் எவை?

உயர் காய்ச்சல் - சுவாசப்பாதை உலர்ந்திருத்தல் - சுவாசிக்க சிரமமாயிருத்தல்.

கட்டாய தனிமைப்படுத்தலில் 14 நாட்கள் இருக்க வேண்டியது அவசியம் தானா?
நிச்சயமாக அவசியம்.

கொவிட் 19 தொற்றுடையவர்களுக்கு 5 முதல் 14 நாட்களுக்குள் தான் அறிகுறிகள் தென்படத் தொடங்கும். ஒரு சிலருக்கு இறுதி ஓரிரு நாட்களிலேயே அறிகுறிகள் தென்படுகின்றன.

கொரோனா தொற்றுடைய ஒருவர் உயிரிழந்துவிட்டால் எவ்வாறான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்?

இறுதிச் சடங்கில் இயலுமானவரை பங்கேற்காமல் இருப்பதே சிறந்தது. உயிரிழந்தவரின் சடலத்தை நல்லடக்கம் செய்வதை விட தகனம் செய்வது மிக நன்மை பயக்கும்.

இலங்கையில் கொரோனா தொற்றுடையவர்கள் என அரசாங்கத்தால் அறிவிக்கப்படுகின்ற எண்ணிக்கை சரியானதா என்பதை வெளிப்படையாகச் சொல்லுங்கள்?
சரியானவை.
கொரோனா தொற்றைக் கண்டறியும் பிசிஆர் பரிசோதனைக்கு சுமார் 18,000 ரூபா செலவாகிறது. ஆதலால் சந்தேகிக்கப்படும் எல்லோருக்கும் இந்தச் சோதனை செய்ய முடியாது, 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு அறிகுறிகள் தென்படுமாயின் மாத்திரமே அதற்கான பரிசோதனை செய்யப்படுகிறது.

ஊடகவியலாளர்கள் களத்தில் இருந்து பணியாற்றும் போது எவ்வாறான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்?
PPE என்று சொல்லப்படுகின்ற PERSONAL PROTECTIVE EQUIPMENT ஐ உபயோகிக்கலாம். அது சிரமமாகத் தோன்றும் பட்சத்தில் ஏனைய உடைகள் பரவாயில்லை.

எவ்வாறெனினும் வீட்டுக்குச் சென்ற பிறகு உடைகளை நன்றாக சவர்க்காரமிட்டுத் துவைக்க வேண்டும். நீங்களும் குளித்து சுத்தமாக வேண்டும்.

துவைத்த துணிகளை நேரடி சூரிய வெளிச்சம் படும்படியாக உலர வைக்க வேண்டியது அவசியமாகும்.

ஊடகவியலாளர்கள் உபயோகிக்கும் கமரா, மைக் போன்றவற்றை, பணி நிறைவடைந்ததும் செனிடைசர்ஸ் கொண்டு நன்றாகத் துடைத்துவிடலாம்.

இலங்கையில் கொவிட் 19 ஐ முற்றாக ஒழிக்க எவ்வளவு காலம் எடுக்கும்?

அதனை உறுதியாகச் சொல்ல முடியாது. சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் ஆரம்பித்து இன்னும் ஆட்டிப்படைக்கிறது.

இலங்கையில் இதனை ஒழிப்பதற்கு மேலும் 5 அல்லது 6 மாதங்கள் ஆகலாம் என ஊகிக்கிறோம்.
அதற்கு முக்கியமாக,
01. தற்காப்பு நடவடிக்கைகளை மக்கள் கட்டாயம் கையாள வேண்டும்.
02. அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியரை நாட வேண்டும்.
03. சமூக இடைவெளியைப் பேண வேண்டும்.

இந்த வைரஸை நீக்குவதில் செனிடைசர்கள் பாதுகாப்பானவையா? அதில் எல்கஹோல் இருக்கிறது என்பதை அறிந்தவுடன் அதனைப் பயன்படுத்துவதற்கு எனது நண்பர் ஒருவர் தயங்கினார். இந்நிலையில் இந்த வைரஸைக் கட்டுப்படுத்துவதில் சவால்கள் உண்டல்லவா?
செனிடைசர்கள் முழுமையான பாதுகாப்பை வழங்குகின்றன என உத்தரவாதம் அளிக்க முடியாது. 65 முதல் 75 வீதமான எல்கஹோலுடன் ஏனைய தொற்றுநீக்கி பதார்த்தங்கள் அதில் சேர்ந்திருக்க வேண்டும். அப்போதுதான் கிருமிகளை ஒழிக்கக் கூடியதாக இருக்கும்.

எனினும் செனிடைசர்களை நாம் மிகக் குறைவாகவே பயன்படுத்துவதால் முழுமையாக தொற்றினை நீக்கி விட முடியும் என கருத முடியாது.

செனிடைசர்கள் பயன்படுத்துவதைத் தவிர்ப்பவர்கள் சவர்க்காரத்தை உபயோகிக்கலாம். சவர்க்காரத்தைக் கொண்டு உலக சுகாதார ஸ்தாபனம் எவ்வாறு பரிந்துரைத்துள்ளதோ அதன்பிரகாரம் கைகளைக் கழுவினால் தொற்று அண்டாது.

தொடர்ச்சியாக செனிடைசர்களைப் பயன்படுத்துவதால் பின்விளைவுகள் ஏதும் ஏற்படுமா?
எமது தோல்களில் நன்மை பயக்கும் நுண்ணுயிர்களும் உண்டு. அடிக்கடி செனிடைசர்கள் பயன்படுத்துவதன் மூலம் அவை மரணிக்கக் கூடும்.

ஆனால் சாதாரண பொதுமக்கள் வீட்டிலிருக்கும் போது அடிக்கடி செனிடைசர்கள் உபயோகிக்க வேண்டியதில்லை. மருத்துவத் துறைக்கு கட்டாயமாக அது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆனபோதும் நன்மை பயக்கும் நுண்ணுயிர்களை விட கொரோனாவைக் கட்டுப்படுத்துவது நமக்கு மிக முக்கியம் தானே?

கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்த ஒருவருக்கு மீண்டும் அந்நோய் தொற்றக் கூடிய வாய்ப்புகள் உண்டா?
மிகக் குறைவு அல்லது இல்லை என்றே சொல்லலாம். ஏனென்றால் அவர் குணமாகிய பின்னர் நோய் எதிர்ப்பு சக்தி மிக அதிகமாக இருக்கும். ஆதலால்தான் ஏனைய நோயாளிகளுக்கு இரத்தம் வழங்குவதற்குக் கூட பரிந்துரைக்கப்படுகிறது.

கொவிட் 19 ஐ, L வகை – S வகை என இரு வகைப்படுத்துகிறார்கள். இலங்கையில் பரவுவது எந்த வகையான வைரஸ்?
அது பற்றி ஆய்வுகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. நாம் ஆரம்பகட்ட பரிசோதனைகளை மேற்கொள்கிறோம்.

இந்த வகைகளைக் கூட கண்டறிய முடியாவிடின் அது எமது சுகாதாரத்துறை அல்லது மருத்துவ நிபுணர்களின் தேர்ச்சி மீது கேள்வி எழுப்புகிறதல்லவா? அல்லது ஆய்வுகளை நடத்துவதற்காக அரசாங்கத்திடம் தூர நோக்கத் திட்டமிடல்கள் இல்லையா?

அவ்வாறு சொல்ல முடியாது. இப்போதைக்கு அதற்கான தேவை இல்லை என்றே கூற முடியும்.

- நிர்ஷன் இராமானுஜம் - 28.03.2020 - 

(இந்தக் கலந்துரையாடலை காலத்தின் தேவை கருதி ஏற்பாடு செய்த இலங்கை இதழியல் கல்லூரியின் பிரதம நிர்வாகி குமார் லோப்பஸ் மற்றும் விரிவுரையாளர், திரை இயக்குநர், நண்பர் நடராஜா மணிவானன் ஆகியோருக்கு புதிய மலையகத்தின் நன்றிகள் உரித்தாகட்டும்)

Thursday, February 27, 2020

தியகலையில் அமைச்சர் ஆறுமுகனின் மகனும் கூட்டாளிகளும் போதையில் வெறியாட்டம்!

மைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மகன் ஜீவன் தொண்டமான் தனது சகாக்கள் சகிதம் கினிகத்தேனை, தியகல தோட்டத்தில் இளைஞர்களைக் கடுமையாகத் தாக்கி, துப்பாக்கி முனையில் மரண அச்சுறுத்தல் விடுத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 25ஆம் திகதி இரவு இச்சம்பவம் நடைபெற்றதாகவும் தாக்குதல் நடத்தியவர்கள் அனைவரும் போதையில் இருந்ததாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனை மூடி மறைப்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் நாம் நேற்றிரவு (26) களத்துக்குச் சென்று நிலைமைகளைக் கேட்டறிந்தோம்.

கினிகத்தேனை நகரிலிருந்து சுமார் 3.5 கிலோ மீற்றர் தூரத்தில் சிவனொளிபாதமலை வீதியையொட்டி இருக்கிறது தியகல தோட்டம். அங்கு 110 குடும்பங்களைச் சேர்ந்த 400 க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள்.

அந்தத் தோட்டத்துக்கு மைதானம் ஒன்றின் அவசியப்பாடு நீண்டகாலமாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் முத்தையா பிரபாகரன் எனும் நபர் அங்கு வருகை தந்து 50 ஆயிரம் ரூபா பணம் தருவதாகவும் உடனடியாக மைதானத்தை அமைக்கும் பணிகளை ஆரம்பிக்குமாறும் இளைஞர்களிடம் கூறியுள்ளார்.

முத்தையா பிரபாகரன் என்பவர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப்போவதாக அனுமானிக்கப்படுகின்ற நிலையில் இந்த விடயம் குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான பின்னணியில் 26ஆம் திகதி இரவு 7.15 மணிக்கு என்ன நடந்தது என்பதை எஸ்.சரவணன் (32), எஸ். சசிகுமார் (44) ஆகியோர் இவ்வாறு விளக்குகின்றனர்.

இதேவேளை, தங்களுக்கு நிகழ்ந்த இந்த மோசமான அனுபவங்கள் குறித்துதனது மன ஆதங்கத்தைப் பகிர்ந்துகொள்கிறார் கே. சரோஜா (54).


இந்த சம்பவத்தின் பின்னர் தாக்கப்பட்ட நபர்கள் எனக் கூறப்படுகின்ற ஒருசிலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தியதாகவும் வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யாமையில் அரசியல் செல்வாக்கு உள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.

இந்தச் சம்பவத்தில் தியகல தோட்டத்தைச் சேர்ந்த எஸ். சரவணன் (32), எஸ். சசிகுமார் (44), எஸ். சுpவகாந்தன் (32), எஸ். ஜீவா (29), டபிள்யு. ஜி. பிரியந்த (35) ஆகியோர் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

"ஜீவன் சேர்ட கால்ல விழுந்து பொம்பளைங்க நாம கெஞ்சினோம்"
"எல்லாரும் போதையில இருந்தாங்க"
"சசிய வெட்டி கொன்னுட்டுதான் போவோம்னு துடிச்சாங்க"
"நாங்க இல்லனா, இன்னைக்கு எங்க தோட்டத்துல மூனு சாவு விழுந்திருக்குங்க"
"கத்திய எடு, இவன வெட்டுவோம்னு அவங்க கத்தும்போது… என் அர உசுரு போயிருச்சிங்க தம்பி”

இப்படியான அனுபவங்களை அழுகையோடு அந்த மக்கள் சொல்லும்போது மனம் ரொம்பவும் பாரமாகிப்போனது.

இருக்கட்டும்.

மைதானம் அமைப்பதில் கருத்து முரண்பாடுகள் இருந்தால் அதனை முதலில் பேசித் தீர்த்திருக்கலாம். அடாவடித்தனம்தான் அதற்கு தீர்வு என்பதை ஜீவன் தொண்டமான் வெளிநாட்டில் கற்றுத் தேர்ந்திருக்கிறார் போல!

இந்த நாட்டில் யாருக்கும் எங்கும் அரசியல் செய்வதற்கும், யாரும் யாருக்காவது வாக்களிப்பதற்கும் உரிமை இருக்கிறது. அதனை துப்பாக்கி முனையில் மாற்றியமைக்க தீர்மானிப்பதானது மடைமையின் உச்சம் என்றே சொல்ல வேண்டும்.

ஒரு சாதாரண பொதுமகனாக என் மனதில் உதிக்கும் கேள்விகள் இவை,

* நான்கு வாகனங்கள், 18 முதல் 22 பேர் வரையான அடியாட்கள், துப்பாக்கிகள், கூரிய ஆயுதங்கள் இவற்றோடு வலம் வருவதற்கான அதிகாரத்தை ஜீவன் தொண்டமான் எனும் நபருக்கு யார் வழங்கினார்கள்?
* நம் நாட்டுப் பிரஜைகளை, தொழிலாளர்களைத் தாக்குவதற்கு ஜீவன் எனும் நபர் யார்?
* அந்த மக்களின் சந்தாப்பணத்தில் ஒரு துளி உப்பேனும் உங்கள் சாதத்தில் கலக்கவில்லையா?
* அந்த மக்களின் வியர்வையில் ஒரு துளியேனும் உங்கள் தேநீர் கோப்பையில் இருந்ததில்லையா?
* அதிகாரம் எனும் பயமற்ற தன்மையா? தந்தையின் வழிநடத்தலா அல்லது என்ன செய்தாலும் தொழிலாளர்கள் தங்களை திருப்பி அடிக்க மாட்டார்கள் என்ற அசட்டு நம்பிக்கையா?

உண்மையில் அந்த மக்களின் நிலைமை, அன்றைய சம்பவம் தொடர்பாக அவர்கள் பகிர்ந்துகொண்ட தகவல்களைக் கேட்டபோது தொண்டமான் பரம்பரையில் இரத்தம் உறிஞ்சும் அடுத்த நரி உருவாகியுள்ளது என்பது உறுதிப்படுத்தப்படுவதை தவிர்க்க முடியவில்லை.

இனியாவது திருந்துங்கள் - அல்லது மாற்று நடவடிக்கைகளுக்கு மக்கள் தள்ளப்படுவார்கள் என்பதை உணர்வதற்கான காலம் வெகுதூரத்தில் இல்லை என்பதை நிச்சயம் உணர்வீர்கள்.

-நிர்ஷன் இராமானுஜம்-
தியகலையிலிருந்து 27.02.2020