Friday, November 14, 2008

இந்திய தூதரகத்தின் மற்றுமொரு கேளிக்கூத்து..!

"பிச்சை எடுக்கிறானாம் பெருமாளு, அதப் புடுங்குறானாம் அனுமானு" என்றொரு கிராமியப் பழமொழி உண்டு. அதற்கேற்றாற்போல் தான் இலங்கைக்கான இந்தியத் தூதரகத்தின் செயற்பாடும் உள்ளது.
இலங்கையிலுள்ள இந்திய வமிசாவளியினர் இந்தியாவில் தமது சொந்த பந்தங்கள் பற்றித் தகவல் தெரிந்துகொள்ள வேண்டுமாயின் 20000 இந்திய பெறுமதிப் பணத்தை செலுத்தி அறிந்துகொள்ளலாம் என தூதரகம் அறிவித்துள்ளது. இந்தியப் பெறுமதியில் 20ஆயிரம் என்றால் இலங்கைப் பெறுமதிப்படி 44 ஆயிரத்து 800 ரூபா செலுத்த வேண்டும்.

இலங்கை மலையக மக்கள் (இந்திய வமிசாவளியினர்) இந்தத் தொகையை செலுத்துவதானால் கிட்டத்தட்ட 8மாதங்கள் உழைக்க வேண்டும். அதாவது சனி ஞாயிறு தினங்கள் உட்பட 8மாதச் சம்பளத்தையும் செலவுசெய்யாமல் சேமித்தால் தான் இந்தப்பணத்தை செலுத்த முடியும்.ஏனென்றால் அவர்களின் நாளாந்த வருமானம் 195ரூபா. இந்திய வமிசாவளியினருக்கு செய்யும்பேருதவி என இந்தியத் தூதரகம் இலவசமாக இந்தச் சேவையினை வழங்கியிருக்கலாம். அல்லது தொகையை குறைத்திருக்கலாம்.

இருப்பினும் மலையகத்தில் கால்வயிறு அரைவயிறு என வாழும் மக்கள் தமது பொருட்களை எல்லாம் விற்றாவது தமது இந்திய உறவுகளைப் பற்றி அறிய வேண்டும் என ஆர்வம் கொண்டுள்ளனர்.

இந்தியத் தூதரகத்தின் இந்தத் திட்டம் பற்றி தினக்குரல் பத்திரிகையில் வெளியான செய்தியை இங்கு தருகிறேன்.

இலங்கையிலுள்ள இந்திய வம்சாவளியினர் தமது மூதாதையர்கள் தொடர்பாகவும் பூர்வீக இடம் குறித்தும் அறிந்துகொள்ள விரும்பினால் அதற்கான உதவிகளை வழங்கும் திட்டமொன்றை கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் நேற்று முன்தினம் புதன்கிழமை அறிவித்துள்ளது.

"வேர்களை கண்டறிதல்' என்ற தலைப்பிடப்பட்ட இத்திட்டத்தின் பிரகாரம் தமது பூர்வீகத்தை அறிந்துகொள்ள விரும்பும் இந்திய வம்சாளியினர் விண்ணப்பிக்க முடியும். ஆனால், இதற்கு குறிப்பிட்ட கட்டணமும் உதவி ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இது தொடர்பாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிக்கையொன்றை விடுத்துள்ளது. இந்தத் திட்டமானது விண்ணப்பதாரியின் முன்னோர்கள் பற்றிய தகவலை திரட்டி வழங்குவது மட்டுமே என்றும் விண்ணப்பதாரி தனது பூர்வீக இடத்திற்குச் செல்வதற்கான எந்தவொரு ஏற்பாடும் வழங்கப்படாது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"தமது மூதாதையரின் இடங்களுக்குச் செல்வதற்கு விண்ணப்பதாரர் விரும்பினால் அமைச்சு/ இன்டிரூட்ஸ் (அரசசார்பற்ற தொண்டர் நிறுவனம்) அதற்கான வசதிகளை செய்துகொடுக்கும். ஆனால், அதற்கான சகல செலவுகளையும் விண்ணப்பதாரரே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இந்திய நாணயம் 20 ஆயிரம் ரூபாவை விண்ணப்பதாரர்கள் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் விண்ணப்பங்களுடன் வைப்பிலிட முடியும். இலங்கை ரூபாவில் காசோலை அல்லது காசுக் கட்டளையை "இந்திய உயர் ஸ்தானிகராலயம், கொழும்பு' என்ற பெயருக்கு செலுத்த முடியும். அமைச்சு விண்ணப்பங்களை "இன்டிரூட்ஸு'க்கு பாரப்படுத்தும்.

உயிருடன் இருக்கும் நெருங்கிய உறவினர்கள், தந்தை அல்லது தாய்வழி முன்னோர்களின் பூர்வீக இடம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் விபரம் என்பனவற்றை "இன்டிரூட்ஸ்' தயாரிக்கும் அதன் பின் அந்த விபரம் அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்படும். விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்ட சுமார் 3 மாத காலத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இன்டிரூட்ஸிடமிருந்து பெற்றுக்கொண்ட தகவல் பின்னர் உயர் ஸ்தானிகராலயத்துக்கு அனுப்பபடும். பின்னர் அது துரிதமாக விண்ணப்பதாரிக்கு தெரிவிக்கப்படும்.

Thursday, November 6, 2008

பிரார்த்தனையும் வேண்டுதலும்..!

எல்லாரும் இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்। நான் நல்லாயிருக்கனும், வீட்டார் நல்லாயிருக்கனும், பக்கத்துவீடு, முன்வீடு எல்லாம் சந்தோஷத்துல நிறையனும், கல்வி வேணும், காசு வேணும் என (இன்னும் ஏகப்பட்ட) பிரார்த்திக்கிறோம்।
ஏதோ கடைசியா வாயில் வந்தா எல்லாரும் நல்லாயிருக்கனும் என்று பிரார்த்திப்போம்। இதுவரை எனது பிரார்த்தனைகள் எல்லாம் அப்படித்தான் இருந்துவந்தன।
ஆனால் எமது நாடு, எமது மக்கள், எமது மொழி இதைவைத்து அரசியல் அரங்கில் முளைவிட்டுக் காய்க்க எண்ணும் கலைஞர்கள் ( இங்கு கலைஞர்கள் எனக் குறிப்பிட்டது நடிப்பில் தேர்ந்தவர்கள் என்பதால்) , தீவிரமாக பின்பற்றப்பட்டுவரும் கொலைக்கலாசாரம், யாராலும் தண்டிக்கப்டாத வெறியர்களின் அடாவடித்தனம், கொன்றுகுவிக்கப்படும் பிணங்கள் என இத்தனையும் பார்த்து எனது பிரார்த்தனையை மாற்றிக்கொண்டேன்।
எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கவேண்டும் என்பதிலிருந்து விலகி இப்போது குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றே பிரார்த்திக்கிறேன்।
சமூகத்துரோகிகள்,மொழித்துரோகிகள்,தேசத்துரோகிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட்டால் மற்றவர்களுக்கு வாழ்வு கிடைக்குமல்லவா?
எனது கோரிக்கைகளை இறைவன் ஏற்றுக்கொள்வாரா என்பதுதான் சந்தேகம்॥!
*****************************************
இலங்கைத் தமிழர்களுக்கான இந்திய உறவுகளின் எழுச்சி, உணர்வுகளைத் தீண்டி இழுத்து பயமின்றி நிமிர்ந்து நிற்கச் செய்கிறது। இருப்பினும் குறிப்பிட்ட சிலர் இந்த விடயத்தில் தெளிவில்லாததால் பதிவிடல் என்ற பெயரில் ஏதேதோ எழுதி வருகிறார்கள்।
இலங்கைப்பிரச்சினை பற்றி எழுதினாலும் பின்னூட்டம் தந்தாலும் புலி ஆதரவாளர்கள் என்றும் நாம் வடிப்பது முதலைக்கண்ணீர் என்றும் கூறி மனம் நோகச்செய்கிறார்கள்। இவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது ஒன்று மட்டும்தான்। (எனது வேண்டுதலாகவும் எடுத்துக்கொள்ளலாம்).
தமிழ் மக்கள் வடிக்கும் கண்ணீரை தயவுசெய்து உங்கள் எழுத்துக்களால் கொச்சைப்படுத்தாதீர்கள்।

( யுத்தத்தினால் மட்டுமல்ல। யுத்தம் சாராத எத்தனையோ இழிநிலைப் பிரச்சினைகளுக்கு தமிழர்கள் முகங்கொடுத்து வருகின்றமை வெளிவராத உண்மைகளாக மறைந்து காய்ந்து போகின்றன।
சரியாக இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் தமிழர்களை கொன்றொழிக்க வேண்டும் என்ற தீவிரம் அதிதீவிரமாக தலைதூக்கத்தொடங்கியது। இதே காலகட்டத்தில் அப்போது நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெண்களின் மார்புகள் இனவெறிக்காடையர்களால் அறுக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டார்கள்। இது தொடர்ந்தும் இடம்பெற்றது। இவ்வாறான கசப்பான கறைபடிந்த வரலாறு உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? கணவரைக் கண்முன் கொல்லுவோம் என அச்சுறுத்தி மனைவியை பலவந்தமாக பாலியல் குற்றத்துக்கு உட்படுத்தியது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? )

*****************************************
நான் முதல் சொன்ன விடயத்துக்கும் பின்சொன்ன விடயத்துக்கும் ஏதோ ஒருவகையில் தொடர்பு உள்ளதாக நினைத்தாலும் தவறில்லை।

Thursday, October 30, 2008

திலகருடனான நேர்காணல்: இந்திய வமிசாவளி தமிழர்களைப்பற்றி உங்களில் எத்தனைப் பேருக்குத் தெரியும்?


வலை நண்பர் சேவியர் இன் மல்லியப்பூசந்தி திலகருடனான நேர்காணலை தமிழோசை பத்திரிகை பிரசுரித்திருந்தது। ஈழத்து இலக்கிய ஆர்வலர்களில் ஒருவர், சமூக ஆர்வலர், சிறந்த நண்பர் என நிறைய விடயங்களை திலகர் பற்றிக் கூறலாம்। சேவியருடானான பதிவுத் தகவல் பரிமாற்றங்கள் தான் இந்த நேர்காணலுக்கு வழிவகுத்தது எனலாம்।
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட,அநேக இந்தியர்களால் அறியப்படாத ஒரு சமுதாயம் பற்றிய குறிப்பாகவும் அவருடைய நேர்காணல் அமைந்துள்ளது। அந்த நேர்காணலை இங்கு தருகிறேன்। படத்தை சொடுக்கியும் பார்க்கலாம்।


உங்கள் ‘மல்லியப்பு சந்தி’ கவிதை நூலின் பாடுபொருள் என்ன?

ஒரு உழைப்பாளர் வர்க்கத்தின் வாழக்கைப்பரிமாணத்தையும் அதன் வலிகளையும், அவலங்களையும் பாடுபொருளாகக் கொண்டதே ‘மல்லியப்பு சந்தி’ ஆகும்। இதில் முக்கிய விடயம் இந்த உழைப்பாளர் வர்க்கம் யார் என அடையாளம் கண்டு கொள்வதில்தான் இருக்கிறது।இலங்கையில் மத்திய மலைநாட்டுப் பகுதிகளிலும் தென்பகுதியிலும் தேயிலை இறப்பர் தோட்டங்களில் ‘தினக்கூலிகளாக’ வேலைசெய்யும் தொழிலாளர்களும் அவர்கள் சார்ந்த சமூகமும்தான் ‘மல்லியப்பு சந்தி’ எடுத்துக்காட்டும் மக்களாகும். இவர்கள் ஏறக்குறைய 220 ஆண்டுகளுக்கு முன்பு தெனிந்தியாவிலருந்து குறிப்பாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து (திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர்) ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் இந்திய அரசாங்கத்தின் ஒப்புதலோடு அழைத்துவரப்பட்டு கூலிகளாக அமர்த்தப்பட்டுள்ளனர்.

என் பாட்டனார் இவ்வாறு வந்தவராவார். இவர்கள் இலங்கைக்கு நடக்கவைத்தே அழைத்துவரப்பட்டனர் என்றும் அவ்வாறு வருகையில் பசியினாலும், நோயினாலும் பாதைகளிலேயே செத்து மடிந்ததைச் சொல்லும் சோக வரலாறும் உண்டு. (பதிவு- மரணத்தில் தொடங்கும் வாழ்வு- மல்லியப்பு சந்தி). இவர்கள்தான் இலங்கையில் பெருந்தோட்டங்களை உருவாக்குவதற்கு உதிரத்தைக் கொடுத்துள்ளனர். இவர்களின் வாழிடமாக 10 ஒ 12 அடிகள் பரப்பளவான அறைகளைக் கொண்டதான தொடர் ல(h)யங்கள் வழங்கப்பட்டன. இன்றும் கூட ழுழு குடும்பமுமே அந்த அவலம் நிறைந்த லைன் அறையில் வாழந்து கொண்டு ( பதிவு – வரையப்படாத லைன்கள் - மல்லியப்பு சந்தி) தினக்கூலிகளாக இருக்கிறார்கள் என்பது அங்கே நிகழ்ந்து கொண்டிருக்கிற மிகப்பெரிய மனித அவலமாகும்.


இந்த மக்கள் எல்லோரும் தமிழர்களா? அவர்களின் இலங்கையின் குடியுரிமை நிலை என்ன?

இவர்களுள் 99வீதமானோர் தென்னிந்திய தமிழர்களே. ஏனையோர் மலையாளிகள் மற்றும் தெலுங்கர் ஆவர். இலங்கையில் அரசியலமைப்பின் பிரகாரம் அங்கு வாழும் மக்கள் தொகையினரின் அளவின்படி இனங்களுக்கு இலக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தவகையில் சிங்களவர் (01), இலங்கை தமிழர் (2), முஸ்லீம்கள் (3), இந்திய தமிழர் (4) ஏனையோர் (5) எனவும் பாகுபடுத்தப்பட்டுள்னர். அரச பொது படிவங்களில் ‘இனம்’ என ஒதுக்கப்ட்டிருக்கும் கூட்டில் நாம் (4) என பதிதல் வேண்டும். அந்தளவுக்கு இந்திய வம்சாவளி தமிழர்கள் தனியொரு இனமாக தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளோம். இதேநேரம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பூர்வீகமாக வாழும் இலங்கை தமிழர்கள் (2) என குறிப்பிடுதல் வேண்டும். இவர்களை மையப்படுத்தியே ஈழப்போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இலங்கைத் தமிழர்கள் பொதுவான வழக்கில் “ஈழத்தமிழர்கள்” என்றும் இந்திய வம்சாவளி தமிழர்கள் “ மலையகத் தமிழர்கள்” என்றும் அழைக்கப்படுகிறார்கள். இனத்தால், மொழியால், பண்பாட்டினால், மதவழிபாடுகளால் (பெருமளவில் இந்துக்கள், அடுத்து கிறிஸ்தவர்கள்) இவர்கள் ஒட்டுமொத்தமாக தமிழர்களே. ஆனால் இவர்கள் வேறுபடுவது “இலங்கையின் குடிமக்கள்” என்ற விடயத்தில்தான்.

இலங்கையில் உள்ள ஏனைய இனங்களில் இருந்து மலையகத்தமிழர்கள் வேறுபடுவது இவர்கள் இன்றும் குறித்த ஒரு சட்டத்தின் கீழ் இலங்கையில் வதிவிட பிரஜைகளாக ( By Registration) பதியப்பட்டிருப்பதுதான். குடியுரிமை (By Decent) உள்ளவர்களாக இல்லை. இவர்களின் பதிவுக்காக இவர்களுக்கு ஒரு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அது கிழிந்தாலோ, தொலைந்தாலோ இம்மக்கள் கிழிந்த அல்லது தொலைந்த பிரஜைகள்தான். அதன் பின் தங்களை அடையாளப்படுத்த பல பிரயத்தனங்களை செய்யவேண்டியிருக்கும். அந்த பிரயத்தனங்களில் தோற்றுப்போன எத்தனையோ பாமரமக்கள் அவர்களின் பிள்ளைகள் அநாதைகளாக வாழ்கின்றனர். அண்மையில் (ஆகஸ்ட் 23 2008) நடந்த மாகாண சபை தேர்தலில் கூட ஏறக்குறைய 10000 பேர் வாக்களிக்க முடியாமல் போன துரதிஸ்டமெல்லாம் நடந்துகொண்டுதான இருக்கிறது. தவிர அபிவிருத்தித்திட்டங்கள் எனும் போர்வையிலும், கட்டாய குடும்பக் கட்டுப்பாட்டுத்திட்டங்கள் மூலமும் மலையக மக்களின் செறிவைக் குறைக்கும் அடக்குமுறைகளும் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். (பதிவு: கூடைபுராணம், நமது கதை, விடிவு, மரணத்தில் தொடங்கும் வாழ்வு – மல்லியப்பு சந்தி)

மலையக மக்கள் குடியுரிமை பெறுவதற்கான வழிகள் உண்டா?

நிச்சயமாக உண்டு. இந்தியாவிலிருந்து இந்த மக்கள் இந்திய அரசின் உடன்பாட்டோடுதான் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டார்கள். பின்னர் 1948ம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த அதேவருடத்தில் மலையக மக்களுக்கான இலங்கை குடியுரிமை சட்டம் இயற்றப்பட்டு பறிக்கப்பட்டது. இவர்கள் நாடற்றவர்களாயினர். பின்னர் அப்போதைய இந்நதிய பிரதமர் சாஸ்திரி அவர்களுக்கும் இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா அவர்களுக்கும் செய்யப்பட்ட “சிறிமா- சாஸ்திரி” ஒப்பந்தம் மூலம் ஒரு தொகுதி மக்கள் இந்தியாவுக்கு மீண்டும் திருப்பிப் பெற்றுக்கொள்ளப்பட்டனர்.

இவர்கள் இன்று தமிழகத்தின் தென்மாவட்டங்களிலும் ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில் தேயிலைத் தோட்டங்களிலும் வாழ்கிறார்கள். அதேநேரம் மலையக மக்களின் ஒரு தொகுதியினரும் இந்தியாவில் அகதியாக முகாம்களில் வாழ்கின்றனர் என்பது ஈழத்தமிழ் அகதிகள் பற்றி தெரிந்த பலரும் அறியாத செய்தி. இந்தியா திருப்பி;பெற்றுக்கொண்டாலும் இந்த மக்களுக்கான புனர்நிர்மாண பணிகளை மேற்கொள்ளாமையினாலேயே இவர்கள் அகதியாக வாழ்கின்றனர்.
நான் இந்தியா வரும்போதெல்லாம் இவ்வாறு திரும்பி வந்த எங்கள் உறவுகளை பார்க்கத் தவறுவதில்லை. என் “மல்லியப்பு சந்தி” தொகுதிக்கான முன்னுரையைக்கூட இவ்வாறு இந்தியா வந்து சேர்ந்த என் உறவுக்காரரான என் குருவிடமே பெற்றுக்கொண்டுள்ளேன் என்பதை குறிப்பிட விரும்புகிறேன். அத்துடன் இந்த உறவுகள் இலங்கையிலிருந்து திரும்பி வருகையில் இந்தியாவை தமது தாய்நாடாக கருதி பெற்றதாயைக் கூட அங்கே தவிக்கவிட்டு வந்த அவல நிலையும் உண்டு.(பதிவு- பொட்டு, மீண்டும் குழந்தையாகிறேன்- மல்லியப்புசந்தி).
மலையக மக்கள் குடியுரிமை பெறுவதற்கான ஒரே வழி அவர்கள் இலங்கையின் குடியுரிமையாளர்களாக பிரகடனப்படுத்தப்படவேண்டியதுதான். இதற்காக சான்றிதழ் வழங்கப்படகூடாது. இதனை இலங்கை அரசாங்கமே செய்யவேண்டும். இதற்காக இந்திய அரசு தனது அழுத்தத்தைக் கொடுக்கவேண்டும். அதனைச் செய்யவேண்டிய கடப்பாடு இந்தியாவுக்கு உண்டு. இப்போது இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக மக்கள் 15 லட்சம் பேறும் இலங்கையின் வதிவிடபிரஜைகளாகவும் இந்திய பிரஜையாக அல்லாமலும் இந்து சமுத்திரத்தில் தத்தளிக்கும் “பார்க்கு நீரிணை”பிரஜைகளாகவுள்ளனர். இந்தியா எங்களைத் திருப்பிப்பெறவேண்டாம். குறைந்த பட்சம் இலங்கை குடியுரிமையாளர்களாக பிரகடப்படுத்துவதற்கான ஏற்பாடுகளையாவது செய்யவேண்டும் என்பதுதான் இந்த மக்களின் எதிர்பார்ப்பாகும்.
இலங்கை எழுத்தாளர்கள் என்றாலே “ஈழப்பிரச்சினையையும்” அதன் பாதிப்புக்களையும் தான் எழுதுவார்கள் எனும் நிலை தமிழகத்தில் உண்டு. அதன் காரணம் என்ன நினைக்கிறீர்கள்?
நான் மேலே சொன்ன விடயங்கள் பற்றிய தெளிவின்மை ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது ஈழப்பிரச்சினையின் வியாபகமாக இருக்கலாம்.

அதேநேரம் மலையக மக்களுக்கும் ஈழப்பிரச்சினைக்கும் தொடர்பில்லை என சொல்லிவிடமுடியாது. ‘தமிழர்கள்’ என்ற பொது அடையாளத்தினால் ஈழப்பிரச்சினையின் பாதிப்புக்களில் மலையக மக்களும் அடங்குகின்றனர். மலையகத் தமிழர்களில் ஒரு பகுதியினர் 1970களில் இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளில் குடியேறிவாழ்கின்றனர்.

அவர்கள் நேரடியாக யுத்தத்தினால் பாதிப்படைகின்றனர். தவிர நான் சொன்ன பிரஜாவுரிமை பிரச்சினை காரணமாக ஆள் அடையாள அட்டை வழங்கப்படாத அல்லது அடையாள அட்டை இருந்தாலும் தமிழர்களென்ற காரணத்தினால் சந்தேகத்தின் பேரிலும் ஏராளமான மலையக இளைஞர் யுவதிகள் ஈழப்பிரச்சினையின் பெயரில் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுகின்றனர்.

மலையக மக்களின் வாழ்க்கையைபற்றி மட்டும் பாடுவது ஈழம் என்ற முதன்மை பிரச்சினையின் தீவிரத்தை நீர்க்கச்செய்யாதா?

நிச்சயமாக இல்லை. பாரதி சாதியத்துக்கு எதிராகவும் பெண்விடுதலைக்காகவும் பாடியதனால் அதேகாலத்தில் அவனது சுதந்திரத்துக்கான பாடுகை நீர்த்துப்போனதா என்ன? முதலில் ஈழத்து தமிழ் இலக்கியம் பற்றி புரிந்துகொள்ளுதல் வேண்டும். பேராசியர் கா.சிவத்தம்பி அவர்கள் இப்படி கூறுகிறார். ‘ஈழத்து இலக்கிய நதி என்பது பல ஓடைகளின் சங்கமிப்பாகும். இதில் யாழப்பாணம் வரும், மட்டக்களப்பு வரும்,( வடக்கு, கிழக்கு) கொழும்பு வரும், இஸ்லாமிய வாழ்க்கை வரும், மலையக வரும். இந்த எல்லா ஓடைகளினதும் சங்கமிப்புதான் ஈழத்து தமிழ் இலக்கிய நதியின் பிரவாகமாகும்’.(மூலம்- ‘மல்லியப்பு சந்தி’ இறுவட்;டு அறிமுக உரை).எனவே ஈழத்து இலக்கியப்பபரப்பில் மலையக இலக்கியத்துக்கு தனியான ஒரு இடமுண்டு. மலையக இலக்கியம் என்று வரும்போது மலையக மக்களின் வாழ்க்கையையும் வலிகளையும் பாடுவதுதான பொருந்தும். அதுதானே சரியானதும் கூட.

அதனையே மல்லியப்பு சந்தி யும் செய்கிறது. அதே நேரம் பொதுப்படையான அடக்குமுறைகளுக்கு எதிராகவும் நாம் பாடாமலில்லை. (பதிவு:- வேள்வி தீயொன்று வேண்டும், பிரிவு, - மல்லியப்பு சந்தி)அடிப்படையில் குடியுரிமை என்ற கோவணத்தடனாவது வாழும் இலங்கைத் தமிழர்கள்களோடு வாழும் மலையக மக்கள் அந்;த குடியுரிமை என்ற கோவணம் கூட இல்லாமல் நிர்வாணமாக நிற்கையில் அதுபற்றி தனியாக பேசுவது, பாடுவது எந்தவகையிலும் ஈழப்பிரச்சினையை நீர்க்கச்செய்யாது என நினைக்கிறேன். ஈழப்பிரச்சினைக்கு தீர்வாக முன்வைக்கப்பட்ட ‘திம்பு கோட்பாட்டில்’ (பூட்டான் நாட்டில் நடைபெற்றது) இந்தியா வம்சாவளி மக்களுக்கு குடியுரிமை வழங்கப்படவேண்டும் எனும் கோரிக்கை தமிழர் தரப்பில் முன்வைக்கப்பட்டமையை நன்றியுடன் நினைவு கூரக்கடமைப்பட்டுள்ளேன்.

இலங்கையில் மலையக மக்களின் நாட்கூலி 170 ரூபா அரிசி 65 ரூபா என்று அறிகிறோம். இந்த நிலை தமிழர்களுக்கு மட்டும் தானா?

இல்லை. விலைவாசி உயர்வு என்பது எல்லோருக்கும் பொதுவான பிரச்சினைதான். ஆனால் மலையக மக்களுக்கான பிரச்சினை வருவாய் சம்பந்தப்பட்டதுதான். ஏனைய சமூகங்களைவிட இந்த மக்களின் வருவாய் அளவு மிகக்குறைவாகும். மலையகத்தமிழர் பதினைந்து லட்சம் பேரில் 90 வீதமானோர் தொழிலாளர் சார்ந்த குடும்பங்களாகும். ஏனையோர் அரச, தனியார் துறைகளிலும் வியாபாரத்துறையிலும் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளி ஒருவருக்கான நாளொன்றுக்கான அடிப்படை சம்பளம் 170 ரூபா. சராசரியாக ஒரு குடும்பத்தில் ஐந்துபேராகும். குடும்பத்தலைவன், தலைவி இருவரினதும் உழைப்பு ஒருநாளைக்கு 340 ரூபா (இந்திய மதிப்பில் 125ரூபா). இப்போது இந்த குடும்பத்தின் உணவு கல்வி, சுகாதாரம் ஏனைய நலன்களின் நிலையை நீங்களே புரிந்துகொள்ளலாம். (பதிவு – ஒப்பந்தம்- மல்லியப்பு சந்தி)

இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகமக்கள் சட்டத்திற்கு உட்பட்ட வகையில் என்ன செய்யலாம் என நினைக்கிறீர்கள்?

இலங்கைப்பிரச்சினை தொடர்பாக தமிழகத்தில் சிலரினது அரசியல் விளையாட்டுக்களை தவிர்த்து விட்டுப்பாரத்தால் தமிழக மக்களிடையே இருக்கும் ஆத்மார்த்தமான ஆதரவினையும் பற்றுதலையும் எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடமுடியாது. அதனையும் தாண்டி உங்கள் சட்டவரையறைக்குள் என்ன செய்யலாம் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் மலையக மக்கள் தொடர்பில் தமிழக மக்கள் அறிந்து கொள்ளவேண்டும் என எதிர்பாரக்கிறோம். நாங்கள் நேரடியாக தமிழகத்தில் உறவுகளைக் கொண்டுள்ளதோடு இன்றும் கூட இந்திய வம்சாவளியினர் என்றே பதியப்பட்டும் அழைக்கப்பட்டும் வருகிறோம். இந்தியாவின் ஆதரவை நாங்கள் எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லாமலில்லை.

தமிழக வணிக சஞ்சிகை ஒன்று 10 வருடங்களுக்கு முன்பு ஒரு குறிப்பு எழுதியிருந்தது. அதில் ‘இலங்கையில் மலைசாதி மக்கள் ஒரு தொகுதியினர் வாழ்கின்றனர். அவர்களும் தமிழ்தான் பேசுகிறார்கள்’ என குறிப்பிடப்பட்டிருந்தது கண்டு மனம் நொந்துபோனேன். இந்திய வம்சாவளி தமிழர்களாக மலையக மக்கள் என தமது தேசியத்தை வலியுறுத்தி நிற்கும் ஒரு சமூகத்தை இது கேவலப்படுத்தும் செயலாகும். நடைமுறையில் தங்கள் வீட்டுசுவரில் காந்தி முதல் எம்.ஜி.ஆர் வரை படமாக தொங்கவிட்டுக்கொண்டும் ‘வடிவேலு’வின் பேச்சு நடையை ஒப்புவித்துக்கொண்டும், மலையக தமிழரான முரளிதரன் பந்து வீசும்போது கூட அதற்கு டெண்டுல்கர் சிக்ஸர் அடிக்கவேண்டும் என ஆசைப்பட்டுக்கொண்டிருக்கும் இந்திய வம்சாவளி தமிழர்களை இந்தியா அடையாளம் காணாமல் இருப்பது துரதிஸ்டமே. இந்தியாவில் மலையக தமிழர்கள் இன்றும் ‘அகதியாக’ வாழ்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களெனில், இலங்கையில் எமக்கு குடியுரிமை கிடைக்கவேண்டும் என வலியுறுத்துவீர்களெனில் அதுவே நீங்கள் எமக்கு தரும் தார்மீக ஆதரவாகும்.
இந்தியா மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையின் எதிர்பார்ப்பும் இதுவேயாகும்.

ஒட்டுமொத்தமாக மலையக மக்களின் வாழ்க்கை தரம் உயர என்ன செய்யலாம் என நினைக்கிறீர்கள்?

இயல்பான போக்கில் அயராத முயற்சியினால் இந்த மக்கள் தமது வாழக்ககைத் தரத்தை உயர்த்த முயற்சித்துக்கொண்டுதான இருக்கிறார்கள். இப்போது கணிசமான அளவில் படைப்பாளிகள், பட்டதாரிகள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள்,ஒரு சில பேராசியர்கள் என விரிந்து செல்கிறார்கள். இலக்கியதுறையில் காத்திரமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளனர். ஆனால் அரசியல் ரீதியாக காத்திரமான தலைமைத்துவத்துக்கான தேவை நிலவுகிறது. அரசியல் ரீதியாக பலம் உறுதிப்படுத்தப்படுகின்றபோது வாழ்க்கைத்தரம் உயர வாயப்புகள் இருக்கின்றன. அதற்கு ‘குடியுரிமை’ என்கிற பிரகடனம் இன்றியமையாதது. இல்லாத பட்சத்தில் இந்த வளர்ச்சி இரட்டிப்பாக இன்னும் இருநு}று ஆண்டுகள் தேவைப்படலாம்.

சந்திப்பு: சேவியர்

Friday, October 3, 2008

ஓர் அனுபவப்பகிர்வு - கசப்பான அப் "பொழுது"

எழுதக்கூடாது என நான் நினைத்திருந்த விடயத்தை எனது அன்பு நண்பர் ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்க எழுதுகிறேன்। இலங்கையின் மிகச்சிறந்த அறிவிப்பாளர்களில் பெரிதும் பேசப்படும் நான் அதிகம் நேசிக்கும் லோஷன் அண்ணாவின் ஒரு பதிவு கூட இதனை எழுதுவதற்கு ஒரு காரணம்।
ஊடகத்துறை என்னுடைய இலட்சியத் துறை।வீரகேசரி ஆசிரிய பீடத்தில் இணைவதற்கு முன்னர் நேர்முகத்தேர்வுக்காக நான் ஏறி இறங்கிய ஊடக நிறுவனங்கள் ஏராளம்। தமிழ்மொழிக்கு தாம்தான் என ஆங்கிலத்தால் அலங்கரித்து தம்மை முதல்தரம் என இப்போது சொல்லிக்கொள்ளும் நிறுவனம் ஒன்றுக்கு அப்போது மவுசு அதிகம்।
2002ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி அந்த நிறுவனத்துக்கு நேர்முகத்தேர்வுக்கு சென்றேன்। உயர்தரம் எழுதிவிட்டு முதன்முறையாக செல்லும் நேர்முகத்தேர்வு அது। ஊடக நிறுவனம் என்பதால் நான் எழுதிய அனைத்து பத்திரிகை ஆக்கங்களையும் சான்றிதழ்களையும் எடுத்துச்சென்றேன்।
என்னை தேர்வுக்குட்படுத்தியவர் "அழகு" அண்ணா என அழைக்கப்பட்ட அப்போது உயர்பதவியில் இருந்த அறிவிப்பாளர்।
ஒரு மணிநேரம் எனக்கு மொழிபெயர்ப்பு வேலைகள் தரப்பட்டன। என்னால் முடிந்தளவு சிறப்பாக செய்துமுடித்தேன்। அவருக்கு சந்தோஷமாய் இருந்தது। அதனை முகத்தில் கண்டுகொண்டேன்। தமிழில் தட்டச்சு செய்ய முடியுமா எனக்கேட்டார்। ஒரு மாதத்தில் பழகிக்கொள்வேன் என நம்பிக்கையுடன் கூறினேன்।
மீண்டும் எனது சான்றிதழ்கள் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு சொன்னார்। எங்களுக்கு பத்து நாட்களுக்குள் ஒருவரை எடுத்தாக வேண்டும்। உங்களுக்கு ஒரு வாரத்தில் தொழில் உறுதிப்பத்திரமும் வேலைக்கு வரவேண்டிய நாள் குறிப்பிட்டு ஒரு கடிதமும் வீட்டு விலாசத்துக்கு வரும்। அதை எடுத்துக்கொண்டு குறிப்பிட்ட திகதியில் வேலையில் இணையுங்கள் என்றார்।
எல்லா தெய்வத்தையும் ஒருமுறை மனதில் பிரார்த்தித்தேன்। எனது இலட்சியத்தில் முதலடி எடுத்துவைக்கப்போகிறேன் என்ற சந்தோஷத்தில் என்ன பேசுவது என்றே தெரியவில்லை। அந்த தரமான நல்ல நிகழ்ச்சிபடைக்கக்கூடிய சிறந்த அறிவிப்பாளரிடம் வேலை செய்யப்போகிறேன் என்பதே பெருமை தந்தது।
இன்னும் சற்று நேரத்தில் கேட்டார்,

அவர்: தம்பி கேட்க மறந்திட்டன்। உமது சொந்த இடம் எங்கே?
நான்: இறக்குவானை
அவர்:றக்குவானையா? அது எங்கே இருக்கிறது? எந்த மாவட்டம்?
நான்: இரத்தினபுரி மாவட்டம்। இரத்தினபுரியிலிருந்து 53கிலோ மீற்றர் தூரத்தில
அவர்: (தலையை பேனையால் சுரண்டிக்கொண்டார்।மற்றைய கை வழமைபோல் தாடையை உரசிக்கொண்டிருந்தது)
இரத்தினபுரி மலையகமே?
நான்: ஆமாம் சார்
அவர்: ஓ... முதலிலேயே சொல்லியிருக்கலாமல்லோ? ..............................................ம்ம் சரி பிரச்சினையொன்டும் இல்ல. உங்களுக்கு கடிதம் வரும்

கடைசியாகச் சொன்ன வசனங்களில் ஏதோ வெறுப்பும் ஏன் இவ்வளவு நேரத்தை செலவுசெய்தோம் என்ற மனநிலையும் தெரிந்தது. முகமும் மாற்றமுற்றது.ஒன்றும் புரியாதவனாக இருந்தேன். சரி தம்பி கடிதம் வரும் என்றார் சற்று எரிச்சல் தொனியில்.

நம்பிக்கையுடன் திரும்பினேன். நண்பர்கள் உறவினர்களிடம் சொல்லி மகிழ்ந்தேன். தொழில் என்பதை விட எனது இலட்சியம் என்பதில் தான் அளவில்லா களிப்பு எனக்கு.

ஆனாலும் எதிர்பார்த்திருந்த எனக்குக் கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே. ஒருமாதத்திற்குப் பிறகு அந்த நிறுவனத்துக்கு அழைப்பினை எடுத்து தட்டச்சுப் பிரிவில் தொழில்செய்த அண்ணாவின் நண்பர் ஒருவரிடம் கேட்டேன்.
அவர் சொன்ன பதில் இதுதான்.
"தம்பி கவலப்படாதீங்க.நீங்க தோட்டத்திலருந்து(மலையகம்) வந்தனாலதான் வேலை கிடைக்கல. இங்க இன்னொருத்தர எடுத்திட்டாங்க. இன்னொரு நாள் சந்தர்ப்பம் வரும். ட்ரை பண்ணுங்க. இன்னும் நிறைய பேப்பருக்கு எழுதுங்க. சரி எனக்கு இப்ப கதைக்க முடியாது. பிறகு எல்லா விஷயத்தையும் அண்ணாகிட்ட சொல்றேன்" என்றார்.
இறுதியில் நான் நிறைய விடயங்களை படித்தேன். மலையக மக்களின் வாழ்க்கையை விரிவாக படிக்கவேண்டும் என நினைத்தேன்.
துறைசார்ந்த பலவற்றை பலருக்கு சொல்லிக்கொடுத்து ஊக்கப்படுத்திய இவரா இப்படி நடந்துகொண்டார் என நினைக்கையில் கவலையாகத்தான் இருந்தது. உண்மையில் இன்னும் அதை நினைத்து வேதனைபட்ட பொழுதுகள் நிறைய இருக்கின்றன.
சரி பிரச்சினையில்லை. ஆனாலும் தோட்டப்பகுதி(மலையகம்) என்னை வெறுத்ததால் அதனை உடைத்தெரிந்து ஊடகத்தில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நிறையவே அடிபட்டு வீரகேசரியில் இணைந்தேன். எத்தனையோ விடயங்களை வெளிப்படுத்தியதால் வீரகேசரியும் மெட்ரோ நியூஸ் பத்திரிகையும் நல்ல களமாக அமைந்தன.ஆசிரிய பீடத்தின் நல்ல ஒத்துழைப்பு எனக்கு ஊக்கம் தந்தது.
எனக்கு நடந்த இந்தக் கசப்பான சம்பவம் பற்றி மூத்த அறிவிப்பாளரும் அரச ஒலிபரப்பு நிறுவனத்தின் பணிப்பாளருமான மதிப்பின் பாத்திரமான விஸ்வநாதன் அவர்களிடம் கூறியபோது அவர் சொன்னார்
என்ன தம்பி?இப்படி கவலைப்பட்டிருந்தால் நானும் எப்போதோ விழுந்திருப்பேன்.எல்லாரும் நாம் எதிர்பார்ப்பதுபோல் இல்லை. எமக்கான வழியை நாம்தான் அமைத்துக்கொள்ள வேண்டும்.

Wednesday, September 17, 2008

இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையகத் தமிழ் மக்கள் பற்றி...

மல்லியப்பூ சந்தி திலகர் மலையக மக்களின் பிரச்சினைகளை வெளியுலகுக்கு கொண்டுவருவதில் பெரும் பங்காற்றிக்கொண்டிருப்பவர்। தன்னலம், அரசியல்அடிபணிவுகள் இல்லாமல் சுயமாக இயங்கும் திலகர் புதிய மலையகத்துக்கு எழுதிய பின்னூட்டம் ஒன்றை பதிவாக இங்கு தருகிறேன்।

"..................... மலையக மக்களின் போராட்டங்கள், அவர்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சினைகள் குறித்துப் பதிவாவதென்பது குதிரைக் கொம்பாகத்தானிருக்கின்றது। இன்று இலங்கையில் வெளிவரும் ஒரு சில பத்திரிகைகளின் வாயிலாக கிடைக்கின்ற செய்திகளைத் தவிர வேறு வழியில் மலையக தேசத்தின் பிரச்சினைகள் வெளிவருவதில்லை. இலங்கைக்கு வெளியே சொல்லவே வேண்டாம். எத்தனைபேருக்கு ஈழப் பிரச்சினை குறித்து தெரிந்திருக்குமளவுக்கு மலையகப் பிரச்சினை பற்றித் தெரிந்திருக்கிறது ? ......................"

"..................... அவர்களை கடுமையாக சுரண்டிக் கொழுக்கும் வர்த்தக சமூகத்தினர், அவர்களின் பிரச்சினைகளை வெறும் தமது பிழைப்பு அரசியலுக்கு பயன்படுத்திவரும் அரசியல் சக்திகள், சாதியக் கட்டமைப்பை நிலைநிறுத்துவதில் போட்டியிடும் ஆதிக்க சாதிக் குழுக்கள், பேரினவாத மயப்படுத்தப்பட்டுள்ள சிங்கள சிவில் சமூகத்தவரால் எதிர்கொண்டு வரும் வன்முறைகள் என எத்தனை எத்தனையோ கொடுமைகள் தினந்தோறும் நடக்கையில் அவர்களுக்காக பேசுவதையோ போராடுவதையோ அல்லது தார்மீக ஆதரவையோ தாம் தர வேண்டாம் அவர்களின் பிரச்சினைகளை வெளி உலகுக்கு கொணர்வதில் எமது பங்களிப்பு என்ன? ............"

"..................... இந்த சைபர் ஸ்பேஸ் என்று நாம் கூறுகின்ற வெட்டவெளிக்குள் சகல கொடுக்கல் வாங்கல்களையும் செய்து இன்று பெரும் மாநாட்டையே நடத்துகின்றோம். ................."

"..................... ஆனால் இன்று மின்சார வசதிகளைக் கூட அடையாமல், கல்வி hPதியில் வளாச்சியடைய விடாமல், வெறும் 1 ரூபா சம்பள உயர்வுக்காக போராடிக் கொண்டிருக்கும் மலையக மக்கள் குறித்து எந்தவித விபரங்களையும் உலகமறியாத வண்ணம் உள்ளன. ........."

"..................... ஈழத் தமிழர்கள் கொண்டுள்ள வளங்கள், ஆற்றல்கள், வாய்ப்புக்கள் மலையக மக்களுக்கு இல்லை. சக தேசத்தை சேர்ந்தவர்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர்கின்ற போக்கை ஈழப் போராட்ட சார்புத் தகவல் தொட்பூடகங்களில் கூட காணமுடிவதில்லை. அப்படியும் வெளிவந்து விட்டால் அவை எதிரியை அம்பலப்படுத்துவதற்கான வழிமுறையாகத் தான் இருக்கின்றதே ஒழிய, மலையக தேசத்தின் பிரச்சினையில் கொண்டுள்ள பிரக்ஞையால் அல்லவென்றே கூறலாம். ........."

"..................... தமிழகத்தை மையமாகக் கொண்டும் சிங்கப்பூர், மலேசியா மற்றும் வேறு புகலிட நாடுகளில் இருந்தும் பல இணையத்தளங்கள் கூட அதிகரித்தவண்ணம் உள்ளன. ஆனால் இதில் எத்தனை தூரம் மலையகத்தவர் பற்றிய குறைந்தபட்ட போராட்டங்கள், கோரிக்கைகள் கூட பதிவாகின்றன?..................."

"..................... நிச்சயமாக மலையகத்தவர் பற்றி எமது அக்கறையின்மையையும், அசட்டையையும் நாம் ஒப்புக் கொண்டாக வேண்டும். ................"

"..................... இத்தகைய பின்னணியில் இருந்து மலையக மக்களின் இன்றைய நிலைமைகள் பதிவாகாததையும் நோக்க வேண்டும். இன்று தமிழ் தேசப் பிரச்சினையை சர்வதேச அளவில் கரிசனைக்குரியதாக்கிய தகவல் தொழிநுட்பத்தின் பங்கை நோக்க வேண்டும். இன்று தமிழர்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் இன அழிப்புக் குறித்த செய்திகள் வேகமாக உலகெங்கும் சென்றடைகின்றன. உலகின் பலமான நாடுகளின் உதவியுடனும் ஒரு அரசையும் கொண்டிருக்கின்ற சிங்கள பேரினவாதம், தமிழரின் தகவல் தொழிநுட்ப ஆற்றல், வளங்கள் என்பவற்றை எதிர்கொள்ளமுடியாத அளவிற்கு, தடுமாறி நிலைகுலைந்து போகும் அளவிற்கு, தமிழர்கள் தகவல் தொழிநுட்பத்தை அடைந்திருக்கின்றார்கள் ................."

"..................... தமிழ் தேச போராட்ட சக்திகளால் அல்லது அவர்களது ஆதரவாளர்களால் நடத்தப்படுகின்ற ஆயிரக்கணக்கான இணையத்தளங்களிலும் மலையக மக்கள் குறித்த எந்தவித பதிவுகளும் இடம்பெறாதது மிகவும் கவலை தரும் விடயமாகும். சக தேசம் ஒன்று தமது எதிரிகளாலேயே ஒடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதைக் கரிசனை கொள்ளாததை நாம் குறித்துக் கொள்ளுதல் அவசியம்............"

"..................... மலையக தேசத்தவரைப் பொறுத்தவரை அவர்கள் ஏலவே எதிர்கொள்ளும் அடிமை வாழ்க்கையை விட தமிழ் தேசப் போராட்டத்தின் விளைவாக ஒட்டுமொத்த தமிழர்கள் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அரச பயங்கரவாதத்திற்கும் பலியாகிவரும் தேசமாக மலையக தேசம் உள்ளாவதைக் கவனித்தாதல் வேண்டும். இந்தியாவின் மீதும் இவர்கள் நம்பிக்கை இழந்து பல வருடங்கள் ஆகி விட்டது. ........"

"..................... இலங்கையில் செயல்படும் தமிழ் தொடர்பூடகங்கள் அனைத்திலும் மலையக மக்களுக்கு எதிரான பாரபட்சங்கள் நிலவுவதை காணமுடியும். மலையக மக்களின் பிரச்சினை குறித்த பிரக்ஞை என்பதை விட மலையக சந்தையை இலக்காகக் கொண்டு தான் இருக்கும். .........."

இரண்டாயிரமாம் (2000) ஆண்டு செப்டெம்பர் மாதம் சென்னையில் இடம்பெற்ற தமிழினி மாநாட்டில் இலங்கை பத்திரிகையாளர் 'சரிநிகர்' என். சரவணன் (தற்போது புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடொன்றில் வாழ்வதாக அறிகிறேன்). அவர்களால் வாசிக்கப்பட்ட மலையகத்தவர் பற்றிய ஒரே ஒரு கட்டுரையின் மேற்கோள்களே மேலே காட்டப்பட்டன. (விரிவான கட்டுரையை தொடர்ச்சியாக வரும் பதிவுகளில் தர முயற்சிக்கிறேன்)

-திலகர்

(நன்றி திலகர்)

Thursday, September 4, 2008

இந்தியத்தாய் உதைத்துத்தள்ளிய மலையகக் குழந்தைகள்!!!

நண்பர் சேவியரினால் எழுதப்பட்ட ஈழக்கவிஞருடனான சந்திப்பு http://xavi.wordpress.com/2008/09/01/malliyappu_santhi/ என்ற பதிவும் அதில் மல்லியப்பூ சந்தி திலகரின் http://www.malliyappusanthi.com/ பின்னூட்டமும் தான் இந்த ஆக்கத்துக்கு வித்திட்டன।
திலகருடன் கதைத்தபோது அவர்கூறிய யதார்த்தத்துக்குள் மூழ்கிப்போன சில விடயங்கள் எமது இருப்பிற்கான கேள்வியை என்னுள் எழுப்பியது।

இலங்கையிலுள்ள மலையக மக்கள் பற்றிய இந்தியாவின் ஈடுபாடு மிகவும் குறைந்து வருவதை அவதானிக்க முடிகிறது। இலங்கையை முழுமையாக அவதானித்து வருவதாக கூறும் இந்தியத்தலைவர்கள் மலையக மக்கள் குறித்தும் அவர்களது அன்றாட பிரச்சினைகள் குறித்தும் பாராமுகமாக செயற்படுவது ஏன் என்ற கேள்வி இப்போது மக்களிடையே எழத் தொடங்கியுள்ளது।
மலையக மக்கள் எந்தளவுக்கு வாழ்க்கைச்சுமையை அனுபவிக்கிறார்கள் என்பதனை விட அவர்களின் வருகை வரலாற்றை மீள்நினைவூட்டுவது அவசியம் என நினைக்கிறேன்.

மலையக மக்கள்
மலையத்தொழிலாளர்கள் என்போர் யார்? என்ற கேள்விக்கு எத்தனை பேருக்கு பதில் தெரியும்। இந்திய வமிசாவளியினர், இந்தியத் தமிழர்கள் என ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட குறிப்பிட்டதொரு தொழிலாளர் சமுதாயம் மலைநாட்டார் என்றும் நாடற்றோர் என்றும் பின்னிலை படுத்தி பல புல்லுறுவிகளால் விமர்சிக்கப்பட்டு மலையகத் தமிழர்கள் என தற்போது அடையாளப்படுத்தும் இந்த மக்களின் கசப்பான வரலாற்றை தமிழர்களே மறந்துவிட்டார்கள்।

இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சி நடத்திக்கொண்டிருந்தபோது 1844ஆம் ஆண்டு மத்தியமலைப் பகுதியில் தேயிலைத் தோட்டப்பயிர்ச்செய்கைக்கென இந்தியாவிலிருந்து 14பேர் (கம்பளை என்ற இடத்துக்கு )அழைத்துவரப்பட்டனர்। இதுவே இந்தியாவிலிருந்து தொழிலாளர் என்ற ரீதியில் உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட முதல் தமிழர்களாவர்।

இருப்பினும் அதற்கு முன்னரும் இந்தியத் தொழிலார்கள் மலையகப் பகுதிகளில் தோட்ட வேலைகள் செய்ததாக வரலாறு கூறுகிறது। கோப்பி பயிர்களுக்கு ஏற்பட்ட நோய் காரணமாக தேயிலை பயிரிடப்பட்டது।
தேயிலைப் பயிர்ச்செய்கைக்காக ஏராளமான தொழிலாளர்கள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர்। 1827ஆம் ஆண்டு 10,000 ஆக இருந்த தொழிலாளர் தொகை 1877ஆம் ஆண்டு 1,45,000 ஆக அதிகரித்தது.
1933ஆம் ஆண்டுவரை பல இலட்சக்கணக்கான மக்கள் இங்கு வந்து சேர்ந்தனர்। இவ்வாண்டின் பின்னர் இந்திய அரசு இலங்கைக்குத் தொழிலாளர் அனுப்பப்படுவதைத் தடைசெய்தது.

ஒரு சோக வரலாறு
தென்னிந்தியாவிலிருந்து கால்நடையாக இராமேஸ்வரம் வந்த மக்கள் கடல்மார்க்கமாக தலைமன்னாரை வந்தடைந்து அங்கிருந்து கால்நடையாகவே மலையகப் பகுதிகளுக்கு அழைத்து வரப்பட்டனர்। போதியளவு உணவு, சுகாதாரம், தங்குமிட வசதிகள் இன்றி பல மாதகாலமாக கால்நடையாக வந்ததால் ஆயிரக்கணக்கான தொழிலாளார்களும் குழந்தைகளும் உயிரிழந்ததாகவும் அப்போதைய கதைகள் உண்டு.

வாக்குரிமை
1931ஆம் ஆண்டு 1,00,000 மலையக மக்கள் வாக்குரிமை பெற்றிருந்தனர்। மு ।நடேசு ஐயர் எனப்படும் மலையக மக்களின் முதற் தொழிற்சங்கத் தலைவர் அத் தேர்தலிலே தெரிவு செய்யப்பட்டார்।
புதுக்கோட்டை அரசமரபினர் வழிவந்த அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் மக்களின் நலனுக்காக ஆரம்பத்திலிருந்தே குரல்கொடுத்து வந்தார்। அவரோடு இணைந்து முஹம்மது அஸீஸ் என்ற தொழிற்சங்கத் தலைவரும் பலவகையிலும் போராட்டத்துக்குக் கைகொடுத்து தலைமைதந்தார்।

நாடற்றவர்களாயினர்
1948இல் இலங்கையிலிருந்து பிரித்தானியர் வெளியேறியதும், பல தமிழ்ப் பிரதிநிதிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொண்டுவரப்பட்ட இலங்கை பிரஜாவுரிமை சட்டத்துக்கு அமைவாக தங்களது குடியுரிமையை நிரூபிக்க முடியாமல் போனமையால் இவர்களில் மிகப்பெரும்பாலோர் இலங்கை அரசாங்கதால் நாடற்றவர் நிலைக்குத் தள்ளப்பட்டனர்।

இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னர் அனைத்து மக்களும் பிரித்தானியர்கள் எனக் கொள்ளப்பட்ட போதிலும் சுதந்திரத்தின் பின்னர் இந்த மக்களுக்கு தாம் இலங்கையர்கள் என்பதை நிரூபிக்கவேண்டிய நிர்ப்பந்த நிலை ஏற்பட்டது। அதாவது தமது தந்தைவழியில் அல்லது தாய்வழியில் இலங்கை பிரஜை என்பதை ஆதாரப்படுத்தவேண்டியிருந்தது। போதியளவு கல்வித்தகைமை இல்லாததால் பிறப்புச்சான்றிதழ் உட்பட ஏனைய அத்தியாவசிய ஆவணங்களை பெறத்தவறிய அப்பாவி மக்கள் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று கோரப்பட்டனர்। இவர்களில் பலர் சிங்களப் பெயர் கொண்டிருந்தமையால் தப்பித்தனர்। எனினும் அதிகமானோர் தாமாக மீண்டும் இந்தியாவுக்கு சென்றனர்.
சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம்
அடுத்து வந்த காலங்களில் இலங்கை அரசு இந்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் மூலம் ஏற்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் பெருமளவு மலையகத் தமிழரை இந்தியாவுக்குத் திருப்பியனுப்ப இலங்கை அரசு முயற்சித்தது। இவ்வாறான ஒப்பந்தங்களில் ஒன்றான சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் மேற்படி தமிழர்களில் அரைப் பகுதியினருக்கு இலங்கைப் குடியரிமை வழங்குவதெனவும், ஏனையோரை இந்தியா ஏற்றுக்கொள்வதெனவும் முடிவானது, பல காரணங்களால் இது திட்டமிட்டபடி நடைபெறாது போனது। மேலும் 1983 இல் இலங்கையில் ஏற்பட்ட பாதுகாப்பற்ற சூழ்நிலைக்காரணமாகவும் பலர் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தனர்। பெரும்பாலானோர் இலங்கை மலையகப் பகுதிகளிலேயே தங்கிவிட்டனர்।

தொடர்குடியிருப்பும் வாழ்வும்
அக்காலத்தில் தொழிலாளர்களுக்கென அமைத்துக்கொடுக்கப்பட்ட தொடர்குடியிருப்புகளில் (லயன்கள் என அழைக்கப்படுகிறது) தங்கியிருந்த மக்கள் சுமார் 160ஆண்டுகள் கழிந்த நிலையிலும் அதே லயன் குடியிருப்புகளில் தான் வாழ்ந்து வருகின்றனர்। இவர்களின் நலன்கள் தொடர்பாக பல இந்திய தலைவர்கள் அக்கறை எடுத்துக்கொண்ட போதிலும் அவை நிரந்தரமான தீர்வினைத்தரவில்லை எனலாம்।

ஈழப்போராட்டமும் மலையகத் தமிர்களும்
அத்துடன் ஈழப்போராட்டம் ஆரம்பித்தபின்னர் அது பூதாகரமாக வெடித்ததைத் தொடர்ந்து இந்த அப்பாவி மக்களின் பட்டினிப் போராட்டம் வெளிக்கொண்டுவரப்பாடமலே போனது। வடக்குக் கிழக்குப் பிரச்சினைக்கு மலையக மக்கள் அந்தக்காலம் முதல் ஆதரவை வெளிப்படுத்தி வந்தனர். ஆரம்பகாலத்தில் தந்தை செல்வா மலையக மக்கள் மீது அக்கறை கொண்டு அவர்களின் துன்ப துயரங்களை வெளியுலகுக்கு வெளிக்காட்டவும் செய்ததுடன் வாக்குரிமை நீக்கும் முயற்சிக்கு எதிராக கடுமையாகப் போராடிக் குரல்கொடுத்தார்।
1989ஆம் ஆண்டு இ।இரத்தினசபாபதி பாராளுமன்றி்ல் ஆற்றிய உரையொன்றில்,
"இச்சந்தர்ப்பத்தில் மலையகம் சார்ந்த எமது பிரதிநிதித்துவம் பற்றி சில விடயங்களை அழுத்தமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது.இதற்காக சில ஆண்டுகள் பின்னோக்கிப் பார்க்க விழைகின்றேன்.
இலங்கை பிரிட்டிஷாரிடம் இருந்து விடுபட்டபோது மலையக மக்களின் வாக்குரிமையும் பிரஜா உரிமையும் பறிக்கப்பட்ட ஆண்டான 1948-ஆம் ஆண்டையே ஆரம்பமாகக் கொண்டு இதை நோக்க வேண்டியுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்கினை ஈட்டிக் கொடுத்த இம்மக்கள் இந்திய விஸ்தரிப்புவாதிகளாகக் கொச்சைப்படுத்தப்பட்டனர்.
இவர்கள் இங்கிருப்பது சிங்கள இனத்துக்கே ஆபத்தானதென இனவெறி கிளப்பி விடப்பட்டது. இவர்களை வெளியேற்றுவதற்காக 1964-இல் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தமும் கைச்சாத்தாகியது.
இதுவே இனவாதத்தின் முதலாவது அடையாளமாகவும், இலங்கை வாழ் தமிழ்த் தேசிய இனத்தின் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரான அச்சுறுத்தலாகவும் விளங்கியிருக்கிறது" எனக் குறிப்பிட்டு நீண்ட உரையாற்றினார்। இது தவிற யாழ்த்தலைவர்கள் பலரும் மலையக மக்களுக்காக போராடினர்।

மக்களின் எதிர்பார்ப்பு
என்னதான் இருந்தாலும் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட தமிழர்கள் இந்தியாவையே தமது தாய்நாடு என இன்னும் கொள்கின்றனர்। அன்று முதல் இன்று வரை இந்தத் தொழிலாளர்களின் நலன்காக்க எத்தனையோ தொழிற்சங்கங்கள் அரசியல்கட்சிகள் இருந்துவருகின்ற போதிலும் இன்னும் அவர்களின் தேவைகள் முழுமையாக பூர்த்திசெய்யப்படவில்லை।
இப்போது ஏறத்தாள 10இலட்சத்துக்கும் அதிகமான மலையக தமிழ் மக்கள் இலங்கையில் வாழ்கின்றனர்। மூன்றாவது தலைமுறையிலும் தோட்டத் தொழிலாளர்களாகவே இருக்கின்றனர்।

தமது கோரிக்கைக்காக நித்தமும் போராடி பட்டினியுடனும் போதியளவு வசதிகள் இன்றியும் வாழ்ந்துகொண்டிருக்கும் இவர்களை அந்நியப்படுத்தி பலரும் "தோட்டகாட்டான்" என அழைப்பது வேதனைக்குரியது। பலவீனங்களையும் இயலாமைகளையும் அப்பாவித்தனத்தையும் சாதகமாகப் பயன்படுத்தி குறிப்பிட்டதொரு வர்க்கத்தினை கீழ்நிலையில் உதாசீனப்படுத்தி உதறித்தள்ளுவதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்। ஆனால் நிகழ் சமுதாயத்தில் இவ்வாறானதொரு நிலை இருப்பதை இந்தியா உட்பட சர்வதேசக் கல்விச்சமூகம் உணரவேண்டும்। தமது குழந்தைகளை தாமே அந்நியப்படுத்தி உதைக்கும் வரலாற்றுக் கறையை இந்தியா ஏற்படுத்திவிடக்கூடாது।

Monday, August 25, 2008

நல்லதொரு அடி!!!!!


இலங்கையின் சப்ரகமுவ மற்றும் வடமத்திய மகாணங்களுக்கான மாகாணசபை தேர்தல் பாரிய பிரச்சினைகள் எதுவுமின்றி நடந்துமுடிந்தது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதிகபட்ச ஆசனங்களைப் பெற்று வெற்றிபெற்றது.

தமிழர்களுக்கு தங்களை விட்டால் யாருமில்லை என்ற தோரணையில் தேர்தலில் போட்டியிட்ட மலையக தமிழ் அரசியல் கட்சிகளுக்கு தமிழ்பேசும் மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர். இவர்களால் எந்தவொரு ஆசனத்தையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

சம்பளப் போராட்டத்தின்போது துரோகம் இழைத்த தலைவர்களுக்கு இப்போது இரத்தினபுரி மக்கள் தகுந்த பாடம் கற்பித்துள்ளனர். அறுபதாயிரத்துக்கும் அதிகமான தமிழ்வாக்காளர்களில் இரத்தினபுரியில் பிரதான மலையக தமிழ்க் கட்சி பெற்றுக்கொண்டது வெறும் 5135வாக்குகளே.

மக்களை ஏமாற்றும் தமிழ்த்தலைவர்களுக்கு இரத்தினபுரி மக்கள் பாடம் கற்பிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என தேர்தல் தொடர்பான கடந்த பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

சேவை செய்யாமல் தேர்தல்காலத்தில் மட்டும் எட்டிப்பார்க்கும் நம்ம தலைவர்களுக்கு இதைவிட வேறு எப்படி கவனிக்க முடியும்?

Tuesday, August 19, 2008

சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில் மாடாக்கப்படும் தமிழர்கள் !


இலங்கையின் சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களில் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் இந்த வேளையில் தமிழர்கள் மீண்டும் அரசியல்வாதிகளின் சாட்டையடிக்கு மாடாய் மாறி மானம்போக்கும் அவலம் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.

தமது எதிர்காலத்தை தாமே தீர்மானிக்கும் தீர்க்கமான,வரலாற்றின் மிகத்தேவையான தேர்தலுக்கு வரும் 23 ஆம் திகதி சப்ரகமுவ தமிழ்பேசும் மக்கள் முகங்கொடுக்கின்றனர். ஆனால் தமிழ் பிரிவினைவாதத்திற்கு தமிழர்களே வித்திட்டு தமக்குத்தாமே எதிர்விளைவுப் பாதை வகுக்கும் வழமையான நிலையில் மக்கள் உள்ளதை காணக்கூடியதாக இருக்கிறது.
இலங்கை மலையகத் தமிழ் அரசியல்வாதிகள் சிலருக்கு பதவிப் பேராசை ஏராளமாய் உண்டு. தேர்தல் காலத்தில் மக்களை ஏமாற்றி அவர்களை தெய்வம் எனக்கூறி அரசியல் இலாபம் தேட நல்ல ஆசாமிகளாக மாறிவிடுவார்கள்.

ஏமாற்றத்துக்குத் தயாரானது போலவே எமது மக்களும் அவர்களின் ஊதுகுழலுக்கு தேவைக்கு அதிகமாகவே ஆடுவார்கள். இறுதியில் அந்தத் தலைவர்களைப் பார்ப்பதற்குக் கூட சந்தர்ப்பம் கிடைக்காது. அப்படி கிடைத்தாலும் மரியாதையில்லாமல் நடத்தப்படுவதும் கீழ்த்தரமாக ஒதுக்கப்படுவதும் வரலாறு படிப்பித்த உண்மை.
இரத்தினபுரி மாவட்டம் தமிழர்கள் செறிந்துவாழும் அரசியலின் பிரதான இடம் என்பதால் தமிழ்த் தலைவர்கள் அனைவரும் அங்கு வாடகை வீடு வாங்கித் தங்கியிருந்து மக்களை ஏமாற்றத் தொடங்கியிருக்கிறார்கள்.

பிரதான அரசியல் கட்சிகள் முதல் சிறிய கட்சிகள் வரையில் தமிழர்கள் அளவுக்கு அதிகமாகவே வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழர்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு பெரும்பான்மையினரின் ஆட்சி நிரூபணமாகி தமிழர் அபிலாஷைகள் அனைத்தும் உடைத்தெறியப்படவேண்டும் என்ற பெரும்பான்மையின் விருப்பிற்கிணங்க தேர்தல் முடிவு இருக்கப்போவது உண்மை.

இறக்குவானைக்கு கடந்த தேர்தலின் போது வந்த அரசியல்வாதிகள் இப்போதுதான் மீண்டும் வந்திருக்கிறார்கள். நீங்கள் தான் எங்கள் உயிர். உங்களுக்காகத்தான் நாங்கள் என்கிறார்கள்.
தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து பட்டினியுடன் பலவாரங்கள் போராட்டம் நடத்திய தொழிலாளர்களுக்கு ஏமாற்றம் தந்த அரசியல்வாதிகள் இப்போது எந்த முகத்துடன் வாக்கு கேட்டு மண்டியிடுகிறார்கள்?
சப்ரகமுவ தமிழ்மாணவர்களுக்கு வரலாற்றிலேயே உயர்தர விஞ்ஞான,கணித பிரிவினை ஏற்படுத்தித்தராமல் அதைவைத்தே வாக்கு கேட்கும் இவர்களுக்கு வெட்கம் எங்கே போனது?

இந்த அரசியல்வாதிகளின் முகமூடி தெரிந்தும் அவர்கள் பக்கம்சார்ந்து வாக்கு கேட்கும் வேட்பாளர்களுக்கு இதுவரை அந்தக் கட்சிகள் செய்தது என்ன? தமிழர்களின் வாக்குகளை சிதறடிக்கச்செய்து வரலாற்றுத்தவறினை செய்யப்போவதை எப்போது இவர்கள் உணரப்போகிறார்கள்.

மலையக அரசியல்வாதிகளின் வேஷம் மலையக மக்களாலேயே களைக்கப்படும் என்ற நம்பிக்கை இன்னும் இரத்தினபுரி தமிழ் இளைஞர்களிடம் உண்டு.

காலம் பதில்சொல்லும் நிச்சயமாக.

மலையகத் தொழிலாளர்கள் பற்றிய
பாவையின் பதிவொன்று, http://paavais.blogspot.com/2006/12/blog-post_13.html

Friday, June 20, 2008

இலங்கை யுத்தம் சாதிப்பிரச்சினையை இல்லாமல் செய்ததா?

குறிப்பிட்ட சில நண்பர்களுடன் சேரும்போது சில காத்திரமான விடயங்கள் பற்றிக் கலந்துரையாடுவதுண்டு।அவ்வாறு எமக்குள் பரிமாறப்படும் பல தகவல்கள் இதுவரை அறிந்திராத புதியனவற்றை புகுத்துவதாக இருந்துள்ளதையும் நான் உணர்ந்திருக்கிறேன்।
யுத்தத்தினால் பொதுமக்களுக்கு ஏற்படும் உளத்தாக்கங்கள் பற்றி நண்பர் ஒருவருடன் நேற்றுமுன்தினம் வாதித்துக்கொண்டிருந்த போது அவர் சொன்ன கருத்து இதுதான்।
யுத்தத்தில் எத்தனையோ பிரதிவிளைவுகள் ஏற்படுகின்றன என்பது உண்மை। ஆனால் இலங்கையில் குறிப்பாக ஈழத்தில் சாதிப் பிரச்சினை ஒழிவதற்கு யுத்தம் பிரதான காரணமாக இருந்துள்ளது। வெவ்வேறு சாதிப்பிரிவினரிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தியது என்று தனது வாதத்தை தொடங்கினார்। யாழ் தீவுப் பகுதியைச் சேர்ந்த அந்த நண்பர்சொன்ன தகவல்கள் அறியும் ஆவலை என்னுள் தூண்டின।
சாதி மோகம் என்று யாராவது பேசினால் எதிர்த்து நாலு வார்த்தை கேட்டுவிட வேண்டும் என்பதுதான் எனது ஆவல்। ஆனால் நண்பர் கூறிய சில கருத்துக்கள் என்னை யோசிக்க வைத்தன। இந்தளவுக்கு, ஏன் இப்படியும் இருந்ததா என சிந்தித்தேன்।
அவர் சொன்ன கருத்துக்கள் இதுதான்।
ஈழப் போராட்டம் ஆரம்பிக்கும் முன்னர் வடபகுதியில் பல்வேறு சாதிப்பிரிவுகள் இருந்தன। அந்தப் பிரிவினையால் பூதாகரமான பிரச்சினை உருவாகி கொலைக்கலாசாரம் நிலவியதும் உண்டு। தீண்டாமை உட்பட கீழ்சாதிக்காரனின் வயலில் கால்வைத்து நடந்து சென்றால் கூட மறுபுரத்தில் சுடுநீரும் மஞ்சளும் கலந்து நீராடித்தான் செல்வது வழக்கம் என்ற சாதியினரும் இருந்தனர்। மீனவர்களை, குயவர்களை, தொழிலாளர்களை மதிக்காதவர்கள் ஏராளமாக இருந்தனர்। ஆனால் என்று ஈழப் போராட்டம் தொடங்கியதோ அன்றிலிருந்து இந்தச் சாதிப்பிரச்சினை குறைந்தது। இப்போதும் இல்லை என்றில்லை। ஆனால் ஓரளவுக்கு குறைந்திருக்கிறது।
போராட்டத்தின் போது அதிலும் குறிப்பிட்ட சில காலப்பகுதிக்கு பின்னர் இயக்கத்தில் சேர்ந்தவர்கள் சாதி பார்க்கவில்லை। அதிலும் சாதி என்ற ஒன்றுக்கு இயக்கத்தால் தடைவிதிக்கப்பட்டது। தமது சாதியினரின் நிலங்களுக்கு மட்டும் வேற்று சாதியினரின் நிழல்,காற்று கூட படாமல் பலர் பாதுகாத்து வந்தனர்। யுத்தத்தால் இடம்பெயர இடம்பெயர அவர்களது பேராசையில் மண் விழுந்தது।
ஈழமண் என்ற எண்ணம் பலரிடையே துளிர்விட ஆரம்பித்தபோது சாதிக்கு இடமில்லாமல் போனது। எனினும் இன்னும் பலர் சாதி சாதி என அலைந்து கொண்டிருக்கிறார்கள்। சாதி என்று பார்த்து நாற்பது வயது வரை தமது மகளை திருமணம் முடித்துக்கொடுக்காதவர்கள் இருக்கிறார்கள்। என்னதான் இழப்புகள் ஏற்பட்டாலும் சாதி பிரச்சினை குறைந்தது இந்த யுத்தத்தால் தான்। அப்படி இல்லாவிடின் சாதி என்ற பெயரால் ஈழமே பிளவுபட்டு மக்கள் பிரிவுகள் பல உண்டாகியிருக்கும் என்றார்।

ஆம்... இதுபற்றி நிறைய ஆராய வேண்டும்। எனக்கு அந்தளவுக்கு தகவல் தெரியாது। மலையகப் பகுதிகளைப் பொருத்தவரையில் சாதி என்று பார்க்கப்பட்டாலும் அது பெரிதாக பேசப்படுவதில்லை। வறுமை,ஏழ்மை என்பன அவற்றை மறக்கவைத்துவிட்டன।
இந்த நண்பர் குறிப்பிட்டதைப் போல யுத்தம் இல்லாவிட்டால் சாதிமுறையால் எமது சமுதாயம் பிளவுபட்டிருக்குமா என்ற கேள்வி எழுகிறது। பதிவர்களே பதில் தெரிந்தால் சொல்லுங்கள்।

ஈழத்தில் (எனக்குத் தெரிந்தவரையில்)
அம்பட்டர்,
இடையர்,
கடையர்,
கரையார்,
கன்னார்,
கள்வர்,
குயவர்,
குறவர்,
கைக்கோளர்,
கொல்லர்,
கொத்தர்,
கோவியர்,
சக்கிலியர்,
சான்றார்,
சிவியார்,
செட்டியார்,
சேணியர்,
தச்சர்,
தட்டார்,
தவசிகள்,
திமிலர்,
துரும்பர்,
நளவர்,
பரதேசிகன்,
பரம்பர்,
பரவர்,
பள்ளர்,
பறையர்,
பாணர்,
பிராமணர்,
மடைப்பள்ளியர்,
மறவர்,
முக்கியர்,
வண்ணார்,
வேளாளர்,
இத்தனை சாதிப்பிரிவுகள் (இன்னும் இருக்கலாம்) இருந்துள்ளன। இப்போது எவ்வாறான நிலை இருக்கிறது என்பதை யாழ் நண்பர்கள் தான் சொல்ல வேண்டும்.

Friday, June 6, 2008

யுத்தத்தின் மற்றுமொரு கோரத் தாண்டவம் (படங்கள்)


இலங்கையில் ஒரு வாரம் நிறைவடைவதற்குள் மற்றுமொரு குண்டுத்தாக்குதல்.... இன்றைய (தெஹிவளை) குண்டுவெடிப்பில் அப்பாவிகள் 26பேர் பலியானதுடன் 60இற்கும் மேற்பட்டோர் காயப்பட்டனர்। யுத்தத்துக்கு இனவெறியை சந்தர்ப்பமாக வைத்து தெஹிவளை பகுதியில் தமிழர்கள் கண்டபடி தாக்கப்பட்டும் உள்ளனர்।

இன்றைய சம்பவப் படங்கள்தான் இவை। யுத்தத்தின் மற்றுமொரு கோரத்தாண்டவம்!!!

Wednesday, May 28, 2008

அரசியல்வாதியும் அம்மாவும் ! ( ஓர் உண்மை உரையாடல்)தமிழ் அரசியல்வாதி: "ம்ம்ம்... என்ன செய்யலாம்...? பத்திரிகையில் நாளைக்கு அறிக்கை ஒன்று விடுறேன்। அதுக்குப்பிறகு பார்ப்போம் என்ன நடக்குதென்று। நீங்க பயப்படாமல் போய்வாங்க।


வயதான அம்மா: ஐயா॥உங்களை நம்பித்தான் வந்தோம்। தயவு செய்து என் மகனை மீட்டுத்தாங்க।


தமிழ் அரசியல்வாதி: இப்போ உள்ள அரசாங்கம் அப்படியம்மா। என்ன நடக்குதுன்னு எங்களுக்கு புரியுதில்ல॥ இன்னைக்கே என்னோட செக்ரடரிகிட்ட சொல்லி பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்ன எழுதி அனுப்புறன்। அதுவும் நாளைக்கு பத்திரிகையில வரும்।


வயதான அம்மா: என் மகன் ஒருத்தன்ட பிழப்ப நம்பித்தானய்யா நாங்க வாழ்றோம்। நான் அப்பவே தலையில அடிச்சிகிட்டேன் இந்த நாடே வேணாம் மகன வெளியூருக்கு அனுப்பிடுவம் னு॥ எங்கயாவது கடல்கடந்த ஊர்ல கண்காணாம இருந்தாலும் உயிரோட இருக்கானு நம்பிக்கையாவது இருக்கும்। ஆனா இங்க காணாம போன பிறகு எப்படி ஐயா மனச தேத்துறது?


தமிழ் அரசியல்வாதி: இத பாருங்கம்மா॥ இப்படி ஒருநாளைக்கு நாலைஞ்சு பேர் வந்து அழுது ஒப்பாரி வக்கிறாங்க। அதுக்காக என்னதான் செய்ய முடியும்?


வயதான அம்மா: யார் கடத்தினாங்க? எதுக்காக? என்ன கேக்குறாங்க? என் மகன எங்க வச்சிருக்காங்க ன்னாவது கண்டுபிடிச்சு சொல்ல முடியுமாங்க?


தமிழ் அரசியல்வாதி: ம்ம்ம் அதெல்லாம் முடிஞ்சா நாங்க ஏனம்மா சிறிலங்கா பார்லிமன்ட்ல இருக்கோம்? சரி சரி பார்க்கலாம் நீங்க போய் வாங்க।


வயதான அம்மா: ஐயா பொலிஸ் உடுப்புல வந்தவங்கதான் கடத்தினாங்கனு சொல்றாங்க। அதையாவது கேட்டுப்பாக்க முடியாதா?


தமிழ் அரசியல்வாதி: சரி விசாரிச்சு சொல்றேன்। இப்போ போங்க।


இலங்கையில் ஆட்கடத்தல்கள் கொலைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுக்கொண்டிருக்க அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் தமிழ் அரசியல்வாதிகளின் சேவை நாடகம் இப்படித்தான் அமைந்திருக்கிறது। ஐயா உதவி செய்வார் என்ற நம்பிக்கையுடன் தினமும் அழுதுகொண்டிருக்கும் அம்மாமார் , மனைவிமார் எத்தனையோ பேர்।

தாம் விதவையானதை கூட தெரியாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் மனைவியர் எத்தனையோ பேர்?

இத்தனை நடந்தும் அரசாங்கத்தில் அங்கம் வகித்து மக்கள் சேவகர்கள் என்று சொல்லிக்கொள்ளத்தான் வேண்டுமா?


(படங்கள்: கடத்தப்பட்ட மகனை விடுவி்க்கக்கோரி கதறியழும் பெற்றோர்। படஉதவி: ஏபி)

Tuesday, May 13, 2008

"மல்லிகை" யில் மலர்ந்தது எனது வலைப்பூ !"மல்லிகை" இதழ்பற்றி அறியாத தமிழ்விரும்பிகள் இருக்க முடியாது। உலகத் தமிழரிடத்தில் பிரசித்தி பெற்ற இதழ் இது। கடந்த 45 வருடங்களுக்கு அதிகமாக தமிழ், இலக்கியப் பணியாற்றிவரும் மாதாந்த சிற்றிதழில், இந்த வெளியீட்டில் (மே மாதம் - ३४८ ஆவது இதழ்) எனது "புதிய மலையகம்" வலைத்தளத்தில் வெளியான செய்தி "மின்வெளிதனிலே" பகுதியில் பிரசுரமாகியுள்ளது।

உண்மையில் எனது அளவில்லா குதூகலத்தை சொல்ல வார்த்தைகள் வரவில்லை। அந்தளவுக்கு என்னையறியாமல் ஆனந்தப்படுகிறேன்। தமிழ் இலக்கிய உலகில் மல்லிகைக்குத் தனியிடம் உண்டு। இலக்கியம், தமிழ்,பண்பாடு,கலாசாரம்,கருத்தாக்கம்,புதியன பற்றி பலவற்றையும் சுவைபட தந்து மனதில் மல்லிகையாய் மலர்ந்து மணம்பரப்பும் இதழ் மல்லிகை। டொமினிக் ஜீவா அவர்களின் மாபெரும் தமிழ்ப்பணி இது।

இவரது அங்கீகாரத்துடன் பிரசுரமான எனது வலைத்தள தகவலால் நான் பெருமை கொள்வதுடன் பழைமை நற்பெயர் கொண்ட எழுத்தாளர் மேமன் கவி எழுதிய ஆக்கம் என்னை மேலும் மெய்சிலிர்க்க வைத்தது। மல்லிகைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்।

எழுத்துத்துறையில் சாதிக்க பல்வேறு தடைகளைப் போட்டு உண்மைகளைச் சொல்லவிட முடியாதளவுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தி எனது இலட்சிய ஊடகத்துறையிலிருந்து என்னை சிலர் தூக்கியெறிய முற்பட்டனர்। ஏதானாலும் பரவாயில்லை எப்படியாவது உண்மையை உலகறியச் செய்ய வேண்டும் என வலைத்தளத்தில் எழுதத் தொடங்கினேன்। அதற்கும் எதிர்ப்புகள் ஏராளம்। ஆனால் அவை எல்லாவற்றையும் பொடியாக்குமளவுக்கு இராஜசந்தோஷத்தை வாசனையுடன் தந்தது மல்லிகை। நன்றிகள்।

உடனடியாக இது பற்றி எனக்கு அறியத்தந்த "ஆரவாரம்" தாசன் அண்ணாவுக்கும் நன்றிகள் உரித்தாகட்டும்।

யாழ் மாணவன் என்றால் அகதியா?

வடக்குப் போர் முனை சூடுகண்டுள்ளதை நாம் நன்கறிவோம்। துப்பாக்கிச் சத்தத்துக்கு அடங்கிப்போய் பாடசாலைக்குச் செல்லாமல் பள்ளி வாழ்க்கைக்காக ஏங்கித்தவிக்கும் சிறுவர்கள் ஏராளம் என்பதும் எமக்கு நன்றாகத் தெரியும்।
இந்நிலையில் பிள்ளைகளை எப்படியாவது படிப்பிக்க வேண்டும் என்ற தாகத்துடன் அங்கிங்கு கடன்பட்டு கொழும்புக்கு அழைத்துவருகின்றனர் பெற்றோர்। கொழும்புக்கு வருவதென்றால் விமானப் பயணம் தான்। ஒருவழிப் பயணத்துக்கு ஒருவருக்கு १०,००० ரூபா செலவாகிறது। அத்துடன் அங்கு ஆள் அடையாளப்படுத்தி உறுதிப்படுத்துவதற்கு பல்வேறு ஆவணங்கள் பெறவேண்டும்।
இப்படி கஷ்டப்பட்டு பிள்ளைகளை கொழும்புக்கு அழைத்து வந்து படாத பாடுபட்டு பாதுகாப்புப் பிரச்சினைகளுக்கு மத்தியில் வாடகை வீடு தேடி வீட்டு உரிமையாளர்களின் தகாத கேள்விகளுக்கு (சொந்த இடம் யாழ்ப்பாணம் என்றால் வேற்று கிரக வாசியைப் போல சந்தேகத்துடன் பார்ப்பது வழமை) அழுகையைக் கட்டுப்படித்தி பதில் கூறி சாதாரண வாழ்க்கைக்கு திரும்புவதற்கு ३ மாதங்கள் கழிந்துவிடும்।
பின்னர் பிள்ளைகளைப் பாடசாலைக்கு சேர்ப்பதற்கோ பெருங்கஷ்டம்। யாழ் அரச அதிபரின் கையொப்பத்துடனான கடிதம் பெற்று அங்குள்ள பொலிஸ் உயரதிகாரி அதனை உறுதிப்படுத்தி இராணுவத்தினர் அதனை சரிபார்த்துதான் கடிதம் இங்கு வரும்।
இருந்தாலும் பாடசாலையில் சேர்ப்பதற்கு பிரத்தியேக பணமும் செலுத்தவேண்டி வருகிறது। இவை அத்தனையும் செய்துமுடித்து பிள்ளையைப் பாடசாலைக்கு சேர்க்கும் போது சுமார் எட்டு மாதங்கள் பிள்ளையின் கல்வி பின்னடைவைச் சந்தித்திருப்பதுடன் தந்தைக்கு தலைமயிர் பாதி கொட்டியிருக்கும்।
சரி விதிதான் அப்படி விளையாடுகிறது என்றால் சில பாடசாலைகளில் இவ்வாறு சேர்ந்த மாணவர்களை அகதி என்று கூறிப் புண்படுத்தும் ஆசிரியர்களை என்னவென்று கூறுவது? ஆசிரியத் தொழில் புனிதமானது। ஓர் ஆசான் இறைவனுக்கு சமன் என இந்துமதம் கூறுகிறது।

கொழும்பிலுள்ள ஒரு பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் தனது வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருக்கும் போது அகதியாக கொழும்புக்கு வந்தவர்கள் எத்தனை பேர் எனக் கேட்டிருக்கிறார்। நீங்கள் வகுப்புக்கு ஆறு மாதத்தின் பின்னர் சேர்ந்ததால் ஒழுங்காக பாடம் விளங்குவதில்லை என்று சொல்லியிருக்கிறார்। அது பிரச்சினையில்லை। இங்கு அகதி என்ற சொல் எதற்காக உபயோகிக்கப்பட வேண்டும்? நாங்கள் அகதிகளா என அந்தப் பிஞ்சுப் பிள்ளை தன் பெற்றோரிடம் கேட்டபோது அவர்கள் அடைந்த வலி யார் உணர்ந்திருக்கிறார்கள்? சக மாணவர்கள் அகதி அகதி என விளையாட்டாக அழைக்கும் போது பிள்ளையின் மனம் கொள்ளும் ரணத்தை ஆற்றப்போகும் மருந்துதான் என்ன?
கொழும்பு பாடசாலைகளில் சேர்க்க முடியாமல் ஒருவருடம் பின்னின்று கீழ் வகுப்பில் கல்வி கற்கும் நிறைய மாணவர்கள் இருக்கிறார்கள்। எவ்வாறிருப்பினும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மாணவர்கள் நடத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது। போர்ச்சூழலில் பாதிக்கப்பட்டவர்கள் இப்படியும் துன்புறுத்தப்படவேண்டுமா?
சம்பந்தப்பட்டவர்கள் இதனை உணர வேண்டும்। மாணவர்களுக்கு சிறுவயதில் ஏற்படும் துளியளவு மனக்காயம் கூட எதிர்காலத்தை வீணடித்துவிடும் என்பதை அறியவேண்டியது அவசியம்.

Friday, May 9, 2008

தமிழர் தலைவிதியை தீர்மானிக்கும் நாள் நாளை !

இலங்கையின் ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களினதும் வாழ்வு நிலையையும் சுதந்திரத்தையும் தீர்மானிக்கும் நாள் நாளையாகும் விடுதலை,சுதந்திரம்,உரிமைகள் என்பன தமிழர்களுக்கு இருப்பதாகவும் அது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பறிக்கப்படவில்லை என்றும் கூறிக்கொள்ளும் அரசியலாளர்களுக்கு தமிழர்கள் நாளை கொடுக்கப்போகும் பதில்தான் என்ன?

ஆம்! இரண்டு தசாப்த காலத்துக்குப் பிறகு கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நாளை १० ஆம் திகதி நடைபெறுகிறது। முழு இலங்கை வாழ் தமிழ்பேசும் மக்களின் எதிர்காலத்தையும் இத்தேர்தல் தீர்மானிக்கப்போவது உண்மை.

வன்முறைக்களம் என்றும் தேர்தல் அட்டூழியங்களுக்கும் களவாடல்களுக்கும் இடம்தந்து நடைபெறப்போகும் தேர்தல் என்று இலங்கை எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்ட ஜனநாயகத்துக்காக தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமையை பெற்றுக்கொடுப்பதற்காக ஜனநாயக ரீதியில் நடைபெறப்போகும் நியாயமான தேர்தலாக இருக்கும் என்று அரச தரப்பும் , வன்முறைகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது ஆயுதக்குழுக்களின் அச்சுறுத்தல்கள் மக்களுக்கு உள்ளன என்று தேர்தல் கண்காணிப்பாளர்களும் ,அரச ஊழியர்கள் ५०० பேரை தேர்தல் உதவிக்காக அரசாங்கம் அமர்த்தியுள்ளது என அரச அதிருப்தியாளர்களும் கூறிவரும் நிலையில் நாளைய தேர்தல் இடம்பெறவிருக்கிறது।

இலங்கையின் கிழக்குப் பகுதி இயற்கை அழகு நிறைந்தது। மக்களும் அளவில்லா அன்புள்ளம் படைத்தவர்கள்। இனத்தை இனத்தால் அழித்து மக்கள் வாழ்வியலையும் வாழ்வாதாரத்தையும் சீர்குலைத்த போர்ச்சூழலின் இரத்தம் தோய்ந்த வரலாறு அந்த மக்களின் ஒட்டுமொத்த உணர்வலைகளையும் உயிருடன் பிடுங்கி எறிந்தது।

போர் காரணமாக இடம்பெயர்ந்து கால்வயிறு சோறுக்குக் கூட காலைப்பிடிக்கும் நிலைக்கு மட்டக்களப்பு திருகோணமலை மக்கள் தள்ளப்பட்டிருந்த போது இலங்கை இதழியல் கல்லூரியினால் நான் மட்டக்களப்புக்கு அனுப்பப்பட்டேன்।

கைகழுவ தண்ணீர் இல்லை,உடுதுணியில்லை,உணவில்லை என்றிருந்த போதும் மாமாங்கர் ஆலய முகாமிலுள்ள வயதான அம்மா எனக்குச் சோறூட்டிய நினைவு இன்னும் கண்ணை நனைக்கிறது। அந்தளவுக்கு அன்பானவர்கள் அவர்கள்।

எந்தப் பிழைக்கும் துணைபோகாமல் எந்தப் பிணியையும் தாங்கிக் கொண்டிருக்கும் இவர்களை பகடைக்காய்களாகப் பயன்படுத்தி சர்வதேசத்துக்கு படம்காட்ட முயலும் சக்திகளுக்கு பாடம் புகட்டக் கூடிய நிலையில் மக்கள் இல்லை என்பது தெளிவு।

ஒரே நோக்கம் எனக் கூறும் தமிழர்களே பிளவுபட்டு தேர்தல் களத்தில் குதித்திருக்கிறார்கள்। நியாயத்துக்காக எனக் கூறி முஸ்லிம்கள் பிளவுபட்டு போட்டியிடுகிறார்கள்।

ஓர் இனத்தவர்களே தம் இனத்தவர்களை காட்டிக்கொடுக்கிறார்கள்। தன் இரத்தத்தையே அது சார்ந்த இன்னொரு இரத்தம் குடிக்கிறது। தன் மொழியையே அதுசார்ந்த மற்றொரு மொழி கொல்கிறது। யாரிடமும் சொல்லி அழ முடியாமல் தலையணை நனைத்து அமைதியாக அடங்கிப்போனவர்கள் எத்தனை பேர்? தமிழ் வளர்த்து கலை வளர்த்து கல்விமான்களையும் கலாசார காவலர்களையும் முன்னுதாரணதாரர்களையும் உருவாக்கிய கிழக்கு களையிழந்து காணப்படுவதற்கு யார் காரணம்?

உதயசூரியனுக்காக காத்திருந்த போது குண்டுவிழுந்து கண்ணையிழந்தவர்கள் எத்தனை பேர்? பார்க்கும் தூரத்தில் பள்ளியிருக்க பட்டாம்பூச்சியாய் பள்ளிக்குச் சென்று கருகிப்போன பிஞ்சுகள் எத்தனை? யுத்தச் சத்தத்தில் மனநோயாளியாகியோர் எத்தனை பேர்? வெறிபிடித்த இன விஷமிகளின் காமக் கரங்களால் மானபங்கப்படுத்தப்பட்டோர் எத்தனை பேர்? வாழ்ந்தும் மரணித்துக்கொண்டிருப்போர் எத்தனை பேர்? சொந்தங்களை சுற்றங்களை இழந்து எதிர்காலத்தை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருப்போர் எத்தனை பேர்?

இத்தனை கேள்விகளுக்குள்ளும் சுமை தாங்கிகளாய் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்குள் மக்கள் சேவகர்கள் நாளை தேர்ந்தெடுக்கப்படப் போகிறார்கள்। தமிழர்களே அதிக பிரிவினைவாதத்துடன் கிழக்கில் நடந்துகொண்டிருக்கிறார்கள்। இந்நிலையில் அப்பாவி மக்கள் என்ன செய்யப் போகிறார்கள்?
இந்தக்கட்டுரை யாரையும் காயப்படுத்துவதற்காகவோ அரசியல் பின்னணியுடனோ எழுதப்படுவதல்ல। சொந்தங்களுக்காக எழுதுகிறேன்।
எனது வேண்டுகோள் இதுதான்। மக்களை துன்புறுத்தி பலவந்தப்படுத்தாமல் சுயமாக வாக்களிக்க விடுங்கள்। அவர்களுக்குத் தெரியும்। யார் உண்மையானவர்கள் என்று। சுதந்திரமான தேர்தல் நடத்த அனைவரும் ஒத்துழையுங்கள்। அதைவிடுத்து தமிழ்பேசும் மக்களை காட்டிக்கொடுக்கும் வரலாற்றுத் தவறுக்கு இடமளிக்க வேண்டாம்।
இதுவரை அந்த மக்கள் பட்ட துன்பங்கள் போதும்। தொடர்ந்தும் அவர்கள் பகடைக்காய்களாக பயன்படுத்தப்படக்கூடாது என்பதே எனது தாழ்வான வேண்டுகோள்.

Wednesday, May 7, 2008

கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் !!! (படங்கள்)


இலங்கைத் தலைநகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று காலை வெகு கோலாகலமாக இடம்பெற்றது। காலை ५ மணிமுதல் கிரியைகள் இடம்பெற்றதுடன் ६.३२ மணிமுதல் சகல விமானங்களுக்கும் அபிஷேகம் இனிதே நடைபெற்றது।

கடந்த २ ஆம் திகதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேகக் கிரியைகள் ஆரம்பமாயின।

எங்கும் எதற்கும் எதிலும் ஆட்படாத சக்தி சிவம்। இந்நிலையான்,இவ்வண்ணத்தான்,இப்படியிருப்பான், இக்குணமுடையான்,இவ்வருளுடையான்,இப்பேருடையான் எனச் சொல்ல முடியாதவனுக்கு அநேகனாகி முடிவிலா வியாபகன்। அருட்சக்தி நிறைந்த சிவன் ஆன்மாக்களுக்காக படியிறங்கி அருள்பாலிக்கும் இடம் ஆலயமாகும்। தலைநகர் கொழும்பிலுள்ள சிவாலயங்களில் புகழ்பெற்ற இவ்வாலம் பழமை வாய்ந்த தலவரலாற்றைக் கொண்டது।

(ஆலய வரலாற்றின் பின்னர் இன்று நடந்த கும்பாபிஷேகத்தின் படங்கள்। படங்களைத் தந்து உதவிய அன்பு நண்பருக்கு நன்றிகள்)
ஸ்ரீ பொன்னம்பலவாணேசர் ஆலய தல வரலாறு :
தென்னிந்தியாவில் உள்ள பிரம்மாண்டமான கருங்கல் ஆலயங்கள் யாவும் மூவேந்தராலும் நாயக்க பல்லவ மன்னர்களாலுமே கட்டப்பெற்றது. அதேமாதிரியான அமைப்பில் இலங்கையில் முற்றிலும் கருங்கற்களில் பொளிந்த சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த அழகிய கலைக்கோவிலை 1856ஆம் ஆண்டு் யாழ்ப்பாணம் மானிப்பாயில் பிறந்து கொழும்பு செட்டியார் தெருவில் வசித்து வந்த கொடைவள்ளலும் தேசபிமானியுமான பொன்னம்பலம் முதலியாரால் ஸ்தாபிக்கப்பட்டது. பின்னர் அவரது புதல்வர் சேர் பொன் இராமநாதன்இ ஸ்ரீ பொன்னம்பலவாணேசர் கோயில் எழுந்தருளிய இடத்திலே புதியதொரு கோயிலை 1907 ஆம் ஆண்டு கருங்கற் பணியாக ஆரம்பித்து 1912 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி கும்பாபிஷேகம் செய்வித்தார்.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் வீற்றிருக்க சிவகாமி அம்பாள் - அம்பாள் சந்நிதானத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கின்றாள். நடராஜர்இ மூலப் பிள்ளையார், சோமஸ்கந்தர், பஞ்சலிங்கம், விஷ்ணு, சுப்பிரமணியர், ஷண்முகர், பைரவர், சுவர்ண பைரவர், நவக்கிரகம் ஆகியோருக்குத் தனித்தனி ஆலயங்கள் உள. கோஷ்டத்தில் நர்த்தன கணபதிஇ தட்சணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை முதலானோர் வீற்றிருக்கின்றனர். சனீஸ்வரன் தனியாக வீற்றுள்ளார்.
வெளிவீதியில் கோவிலின் முன்னே நர்த்தன கணபதியும்இ தென்புறத்தே ஸ்ரீ மாரி அம்மன், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீமுனியப்பர் ஆகியோர் தனி ஆலயங் கொண்டுள்ளனர். வடக்கே கோமாதாவின் கோகுலம் உள்ளது.
நித்தியஇ நைமித்திய பூசைகளும் ஆறு காலப் பூசைகளும் விரதங்களும்இ அபிஷேகங்களும்இ பொங்கல்களும் குளிர்ச்சி போன்றவையும் சிவாகாம முறைப்படி நடைபெற்று வருகின்றன. ஆலய மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து பத்தாம் நாள் பங்குனி உத்தரத்தன்று நிறைவு பெறும். தேர்த்திருவிழா அன்று சோமாஸ்கந்தர்இ அம்பாள்இ சண்டேஸ்வரர் தம் தம் அழகிய சிற்பத் தேர்களிலும் விநாயகர்இ முருகன் தம் வாகனங்களிலும் ஆரோகணித்து வீதி வலம் வருவர். அம்பாளின் தேரைப் பெண்களே இழுப்பது வழக்கம். சுவாமி வெளிவீதி வரும்பொழுதில் நவசந்தித் திருமுறைகள் ஓதப்படுகின்றன. அதிகாலையில் திருப்பள்ளியெழுச்சிப் பராயணத்துடன் பூசைகள் ஆரம்பமாகின்றன. காலை 7:00 மணிக்கும் மாலை 7:00 மணிக்கும் நடைபெறும் பூசையில் நித்தியாக்கினி வளர்க்கப்படும்.
ஆடிப்பூரத்தை அந்தமாகக் கொண்டு ஸ்ரீ சிவகாம சௌந்தரி அம்பாளுக்கு லட்சார்ச்சனை, விசேஷ ஹோமம் என்பன நிகழ்ந்து வருகின்றன. நவராத்திரி காலத்தில் விசேடஷ கொலுபூஜை, ஸ்ரீ சக்ரபூஜை என்பன நடைபெறுகின்றன. நவராத்திரிகால மாலைப் பூஜையைத் தொடர்ந்து ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வர தேவஸ்தானத்தில் அறநெறிப்பாடசாலை இடம்பெற்றுவருவதும் குறிப்பிடத்தக்கது. தமது குஞ்சிதபாதத்தால் அருள் நல்கும் ஸ்ரீ நடராஜப் பெருமானின் அபிஷேக தினங்கள் அபிஷேக பூஜைகளுடன் சிறப்புற இடம்பெறுகின்றன.

Friday, May 2, 2008

ஓர் ஊடகவியலாளர் சொல்லும் கதை...!

இலங்கையின் குளிர்ச்சியான பகுதியிலிருந்து சூடான வானலைக்கு செய்தி வழங்கும் பிரதேச ஊடகவியலாளர் ஒருவரை அண்மையில் துரதிர்ஷ்டவசமாக சந்திக்க நேரிட்டது। நான் என்ற அகங்காரம் இதுதானோ என வியக்கும் அளவுக்கு தற்புகழ்ச்சியுடன் தன்னையறியாமல் எல்லாவற்றையும் அள்ளிக்கொட்டினார்। தனது செய்திப் பிரதேசத்தில் அரசியல்வாதிகள் சிலருக்கு வக்காளத்து வாங்குவதற்காகவும் சுயலாபத்துக்காகவும் தான் செய்தி அனுப்புவதாக அவரே சொன்னார்.
அவர் சொன்னதை அவ்வாறே (சிவவற்றைத் தவிர்த்து) தருகிறேன்।

நாங்க செய்றது ஊடகத்தொழில் அல்ல। நாங்க ஊடகவியலாளர் அல்ல। நாங்க நியூஸ் புரோக்கர்ஸ்। அதாவது செய்தி தரகர்கள்। ஊடகவியலாளராயிருந்தா நடுநிலைமை இருக்கும்। நாங்க எங்கள முதல்ல பார்க்கனும்। நான் செய்தி அனுப்புற ஸ்டேஷன்ல எல்லாரோடயும் தண்ணி அடிச்சிருக்கேன்। என்ன செய்தியென்டாலும் போடுவாங்க। இப்போ கிட்டத்தில எங்கட பகுதியில பட்டாசு வெடிக்கவச்சு கோலகலமா ஒரு விஷயத்தை காட்டனும் னு சொன்னாங்க।

நான் என்னோட சொந்தக் காசில பட்டாசு வாங்கி ரெண்டு நண்பர்கள போடச்சொல்லிட்டு நேரடியா தொகுத்து வழங்கினேன் எப்படித் தெரியுமா? இங்க மக்கள் எல்லாரும் சந்தோஷமா வரவேற்கிறதுக்காக திரண்டு வந்து சுமார் १०० இற்கும் அதிகமானோர் பட்டாசு கொளுத்தி பாட்டுப்பாடி குதூகலிக்கிறதா சொன்னேன்। முழு இலங்கையும் நம்பிடுச்சி।( இன்னும் நிறைய விஷயம் சொன்னார்।)
சுமார் அதிகாலை १.३० மணியிருக்கும்। ஒரு பிரபலமான (எனக்குப் பிடித்த,தரமாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும்) அறிவிப்பாளரை கையடக்கத் தொலைபேசியில் அழைத்து, பாருங்கள் இங்கு யாருக்காவது இந்த நேரத்தில் இவருக்கு அழைப்பினை ஏற்படுத்த முடியுமா என இராஜதோரணையில் சத்தமிட்டார்। அந்த வானலை சேவையிலுள்ள பலருக்கு பல விடயங்களை கற்றுக்கொடுத்ததும் தான்தான் எனச் கர்ஜனைத் தொனியில் கூறினார்। இத்தனைக்கும் அந்த இடத்தில் பிரச்சினை ஒன்றும் நடக்கவில்லை।

ஊடகவியலாளர்கள் மக்களுக்கானவர்கள்। மக்கள் நேசகர்கள்। இவ்வாறான அரசியல் ஒட்டுண்ணிகளால் ஊடகத்துறையே கலங்கமடைகிறது। அதுவும் தனது புனிதமான தொழில் நிலையையும் தனது தொழில்தாபனத்தையும் பகிரங்கமான தாழ்விறக்கும் இவ்வாறானவர்கள் ஊடகத்துக்குத் தேவைதானா?

இவர் சொல்லும் வானலைச் சேவை சிறப்பான சேவையை இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கி வருகிறது। நேயர்கள் விரும்பும் நிகழ்ச்சிகளை கவரும் விதத்தில் தொகுத்து வழங்குகிறார்கள் அறிவிப்பாளர்கள்। இந்நிலையில் சுயதம்பட்டம் அடித்து இழிநிலை ஊடகத்துக்கு வழிகோலும் இவ்வாறானவர்களை ஒதுக்கி தூரப்படுத்தி சமுதாயத்தை தூய்மைப்படுத்த வேண்டும்.

Monday, April 21, 2008

எங்கள் ஊர்த் திருவிழா!!! (படங்கள்)

இறக்குவானை சிறீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா சிறப்பாக இடம்பெற்றுவருகிறது। மகோற்சவத்தின் பிரதான அங்கமான இரதபவனியின் போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு தந்துள்ளேன்। கடந்த சனிக்கிழமை இரதபவனி இடம்பெற்றது।
இறக்குவானை இளைஞர்கள் நாம் ஒன்றிணைந்து ஒவ்வொரு வருடமும் சப்தம் விசேட ஒலியலைச்சேவையை திருவிழா காலத்தில் செய்வதுண்டு। இறக்குவானையிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் மகோற்சவ காலங்களில் சப்தம் எப்।எம் தான் வானொலிகளில் தவழும்। ஆனால் இவ்வருடம் பேரினவாதிகளின் சதியால் எமக்கு அந்த வானொலிச் சேவையை செய்ய முடியவில்லை। அந்தக் கவலையைத் தவிர திருவிழா சிறப்பாக நடைபெற்றது। இது தொடர்பான எனது கட்டுரையை வெளியிட்ட வீரகேசரி ஆசிரிய பீடத்துக்கு எனது நன்றிகள்।
( எமது ஆலய திருவிழா பற்றிய வீரகேசரியில் கடந்த १९ ஆம் திகதி பிரசுரமாகிய கட்டுரையை இங்கு தருகிறேன்)

இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தேர்பவனி இன்று

இரத்தினபுரியின் இரத்தின நகரம் என்றழைக்கப்படும் இறக்குவானையில் எழுந்தருளி அருள்பாலித்து சர்வ வளங்களையும் அள்ளி வழங்கிக்கொண்டிருக்கிறாள் அன்னை அகிலாண்டேஸ்வரி. அன்னை என்று அருள்வேண்டி வருவோருக்கு இன்னல் தீர்க்கும் இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு மகோற்சவப் பெருவிழா சிறப்புடன் நடைபெற்று வருகிறது. கடந்த 10 ஆம் திகதி வியாழக்கிழமை கணபதி ஹோமத்துடன் ஆரம்பமாகிய மகோற்சவப் பெருவிழா தொடர்ந்து இடம்பெற்று வருவதுடன் மகோற்சவத்தின் பிரதான அங்கமாகிய தேர்பவனி இன்று சனிக்கிழமை இடம்பெறுகிறது.
வேறுபட்;ட குணங்களுடைய ஆன்மாவை நன்முறையில் நெறிப்படுத்தி, தீய குணங்களினின்று நீக்கி, அன்பு அறம் அருள் நிறைந்ததாக்கும் தத்துவமே சமயமாகும். சமயத்துக்கு ஆற்றுப்படுத்தல் என்றொரு வியாக்கியானப் பொருளும் உண்டு. அன்பின் வழியாக ஆன்மாவை ஆற்றுப்படுத்தும் சமயங்களில் காலத்தால் முற்பட்டது இந்து சமயம். ஆன்மாவை அஞ்ஞான வழியிலிருந்து அகற்றி து}ய்மைத்தன்மையை அருளுடன் வழங்கும் இந்து சமயத்தில் ஆலயங்கள் இன்றியமையாதன. ஆன்மாவை லயப்படுத்தும் ஆலயங்களில் ஆன்மாக்களின் ஈடேற்றத்துக்காகவே பல்வேறு கிரியைகள் இடம்பெறுகின்றன.
ஆலயங்களில் தினந்தோறும் நடைபெறும் கிரியைகள் நித்தியக்கிரியைகள் என்றும் விசேட காலங்களில் நடைபெறும் கிரியைகள் நைமித்தியக் கிரியைகள் என்றும் கொள்ளப்படுகின்றன. நைமித்தியக் கிரியைகளில் சிறப்புடன் குறிப்பிடப்படுவது மகோற்சவப் பெருவிழாவாகும். உற்சவங்களில் மகோன்னதமானதும் விழாக்களில் பெரியதாகவும் பெயர்பெற்ற மகோற்சவங்கள் கொடிமரம் உள்ள அனைத்து ஆலயங்களிலும் முக்கியத்துவம் பெறுகின்றன.
இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும் இந்தப் பெருவிழா வருடந்தோறும் சிறப்பாக நடைபெறுவது வழமையாகும். வுpழாவின் ஆரம்பமாக துவஜாரோகணம் எனப்படும் கொடியேற்றத் திருவிழா கடந்த 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. உலகமாகிய பந்தத்திலிருந்து ஆன்மாவை விடுவித்தி இறைவன்பால் சேர்த்து இன்பம் அனுபவிக்கும் உயிர்நிலைத் தத்துவத்தை விளக்கும் இக்கிரியையில் பெரும்பாலானோர் கலந்து கொண்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து அம்பிகைக்கு தினமும் விசேட பூஜைகள் இடம்பெற்று வந்ததுடன் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வேட்டைத்திருவிழாவும் அதனைத் தொடர்ந்து இரவு சப்பரத்திருவிழாவும் இனிதே நிறைவுபெற்றன.
இறைவனின் ஐந்தொழில்களையும் அதன் தத்துவங்களையும் விளக்கும் கிரியையாகவே மகோற்சவங்கள் ஆலயங்களில் நடைபெறுகின்றன. இதில் சிறப்புப் பெறுவது தேர்பவனியாகும். இறைவனின் அழித்தல் தொழிலைக் குறிக்கும் தேர்பவனி இன்று நண்பகல் 12 மணிக்கு இடம்பெறுகிறது. சர்வலோக நாயகியான அன்னை அம்பிகை சர்வ அலங்கார நாயகியாக வீற்று தேரில் ஆரோகணித்து அடியார்களுக்கு அருள்பாலிப்பதற்காக வீதியுலா செல்கிறாள்.
சிவனில் பாதியாகி இயக்கத்துக்குக் காரணமாகி நாடிவருவோருக்கு நயம்,நலம் தரும் அம்பிகைக்கு மணிமகுடம் சூட்டி ஆலய வாசலில் கடவுளர்கள் தேவர்கள் ரிஷிகள் குங்குமம் சூட்டி ஆசிர்வதிக்க நாயகியவள் நகர்வலம் வருகிறாள். அதனைத் தொடர்ந்து இரவு அம்பிகைக்கு குங்குமார்ச்சனை இடம்பெறுவதுடன் அடுத்துவரும் நாட்களில் பூங்காவனத் திருவிழா, தீர்த்தத்திருவிழா, கொடியிறக்கத் திருவிழா ஆகியன நடைபெற்று எதிர்வரும் 22 ஆம் திகதி வைரவர் மடையுடன் மகோற்சவம் இனிதே நிறைவடையும். திருவிழாவின் அனைத்துக் கிரியைகளும் இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பிரதம குரு பிரம்மஸ்ரீ மகேந்திர குருக்களின் தலைமையில் இடம்பெறுகின்றன.
இந்துமதம் மட்டுமே இறைவனை தயாகவும், தந்தையாகவும், தலைவனாகவும், தோழனாகவும், தான் விரும்பிய எந்த வடிவத்திலும் வணங்கும் சுதந்திரத்தை தந்திருக்கிறது. இந்நிறத்தான் இவ்வண்ணத்தான், இப்படியிருப்பான், இன்ன குணங்கள் உடையான், இன்ன நிலையில் இருப்பான் என்று சற்றேனும் குறிப்பிட்டுக் கூற முடியாமல் இருக்கும் இறைவன் ஆன்மாக்களுக்கு இறைமோட்சம் கிடைக்க கீழிறங்கி வந்து உருவம் கொண்டு அனைத்துமாகி அருளாட்சி நடத்தும் இடமே ஆலயம். சகலரும் தன்முன் பொதுவெனக் காட்டும் ஆலயத்தில் நடைபெறும் கிரியைகள் அனைத்துமே பொருள் தருவன, தத்துவம் உடையன.
நான் என்ற அகங்காரமும் எனது என்ற மமகாரமும் நிறைந்த ஆணவ இருள் மலத்தை அருள் என்னும் ஒளியால் அகற்றும் தத்துவமே தேர்பவனியின் பொருளாகும். அதுமட்டுமன்றி ஊர்த்து}ய்மை, ஊரவர்களின் ஒற்றுமை, சேர்ந்து செயற்படும் தன்மை, அனைவரும் அன்னையின் நிழலில் ஒடுங்கும் நிலையை நெறியெனக் கூறும் இப்பெருவிழா சமய சடங்குகளில் தனித்துவம் நிறைந்தது. ஆகவே அம்பிகை அடியார்கள் து}ய ஆசார சீலர்களாக ஆலயத்துக்கு வருகை தந்து எல்லாம் வல்ல அன்னை அம்பிகையின் அருளைப் பெற்று சிறப்புப் பெறுவீர்களாக.
- இறக்குவானை நிர்ஷன்

நன்றி வீரகேசரி

Friday, April 4, 2008

விஷம் கறக்கும் பசுக்களுக்கு ஒரு வேண்டுகோள்!!!

எனது வலைத்தளம் அரசியல் இலாபம் கருதியோ சுயலாபம் கருதியோ செய்யப்படும் ஒன்றல்ல। யாராவது தவறாக புரிந்துகொண்டிருந்தால் தயவு செய்து என்னிடம் கேளுங்கள்। அதைவிடுத்து எனக்கு எதிரான கேவலப் பிரசாரங்களில் ஈடுபடவேண்டாம் எனத் தாழ்மையுடன் வேண்டுகிறேன்।
இது ஒரு வலைப்பதிவே தவிர இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட ஓர் ஊடகமல்ல। நான் சுதந்திரமாக எனது கருத்துக்களை வெளியிடுகிறேன்।யார் மனதையும் புண்படுத்தவேண்டும் என்பது என்னுடைய நோக்கமல்ல।
என்னுடைய பதிவுகளில் தமிழர்களின் நலனைத்தவிர்த்து சுயலாபத்துடன் செயற்பட்டிருக்கிறேனா என்பதை என்மீது குற்றம் சுமத்தும் அரசியல்வாதிகள்,நபர்கள் சொல்லட்டும்। என்னிடம் நன்றாக கதைத்துப் பழகி வலைத்தளத்தைப் பற்றி பெருமையாகச் சொல்லும் சிலர் வெளியில் கேவலமாகப் பேசுவது உண்மையில் கவலையாக இருக்கிறது। பெரும்பாலான பதிவர்களின் பதிவுகள் சுயலாபம் கொண்டவையல்ல। என்னுடையதும் அவ்வாறே। பத்திரிகைத்துறையில் சில உண்மைகளை வெளிக்காட்டப் போய் எனக்கு ஏற்பட்ட பிரச்சினைகளால் உடைந்துபோய் முச்சடைத்து தமிழை சுவாசிக்க முடியாது குற்றுயிராக இருப்பதாக பேசுகிறீர்கள்।
ஆம்! ஊடகம் என்னும் என்னுடைய இலட்சியத்துறையில் சாதிக்கத்துடித்தபோது சிலர் சிரித்துக்கொண்டே என்னைக் கத்தரித்தார்கள்। நெருப்பால் சுடப்பட்ட புழுவாய் துடித்து அதனையே அந்த வேதனையையே ஆணிவேராய்க் கொண்டு எழுந்து நடந்தபோது உண்மையை வெளிக்காட்டுவதாய் பிரச்சினை। தமிழர்களே குழுக்களாய் பிரிந்திருந்து எனக்கு அபாய சமிக்ஞை எழுப்பிக்கொண்டிருந்தார்கள்। எனக்காகவல்ல என்சார்ந்தவர்களுக்காகத்தான் ஊடகத்துறையிலிந்து விலகுகிறேன் என்பது அவ்வாறானவர்களுக்கு புரிந்திருக்கும்।
ஆனால் அரசியல்சேவை என்ற பெயரில் சமுதாய இரத்தத்தை உறிஞ்சிக் குடித்து பசுத்தோல் போர்த்தி விஷம் கறக்கும் சிலரின் சுயலாப வெறிக்கு நான் பலியாக மாட்டேன்। நீங்கள் எந்த இடத்தில் யாருக்கு என்ன துரோகம் செய்தீர்கள் என்பதை ஆதாரத்துடன் வெளிப்படுத்தவும் பின்னிற்க மாட்டேன்। உங்களை நியாயப்படுத்துவதற்காக பக்கசார்பின்றி இயங்கும் ஊடகவியலாளர்களை அசிங்கப்படுத்தாதீர்கள்।
அரசியல்வாதிகளின் பின்னால் வால்பிடித்துத் திரியும் சில ஊடகவியலாளர்களும் இருக்கிறார்கள்।
அவர்கள் எனக்கிட்ட பின்னூட்டங்கள் இவை:

Anonymous said...
யேண்டா டுபாகூருங்களா... அவ அவன் நாட்டில வாழ்வா சாவான்னு தவிச்சுக்கிட்டிருக்கிறான்... உங்களுக்கு ஒவ்வொருத்தன்ட கோவணத்துக்குள்ளையும் நோண்டணும்னு அரிப்பா இருக்கு இல்ல...? முதல்ல உங்கடய அவுத்துப் பாருங்கடா எத்தன பீத்தல் இருக்குன்னு தெரியும்...


Anonymous said...
தம்பிஅதிகமாத்தான் பேசுறியள்।அடங்கலன்னா அடக்கிடுவோம்.


அனானி said...
//வாழ்வா சாவானு தவிச்சிட்ருக்கும்போது இதுவும் தேவைதானா தானய்யா நானும் கேட்கிறன்।//இப்பிடியெல்லாம் எல்லாரும் யோசிக்க ஆரம்பிச்சுட்டா மனித குல விருத்தி என்னாகிறது? வாழ்வோ சாவோ காதலும் கூடலும் அவசியம்ப்பா...கூடிக் குலவுறதுன்றது மனுஷ சுபாவம்... சைவருக்கும் சரி மற்றவையளுக்கும் சரி... ஆக, சிவராத்திரி தினத்துல புனிதமா இருக்கோணும் என்றதெல்லாம் சிவனத் தொழுறவங்களுக்கு மட்டும் தான்... நீங்க மட்டும் பெரிய உத்தமமோ? சிவராத்திரி முழிக்கப்போய்ட்டு சிவசிந்தனை இல்லாம அவசிந்தனையில தான் இருந்திருக்கிறீங்க... சிவராத்திரி அன்னிக்கு கோயிலில என்ன நடந்திச்சுன்னு ஒரு பதிவு போடத் தோணிச்சா? சும்ம போலீஸ் வேல பாத்துக்கிட்டு... டுபாகூருங்களா... மற்றது, தாந்திரீகத்தில எல்லாம் சிவனும் காளியும் உடலுறவு கொள்ளுற திருப்படங்கள வணங்குறாங்க தெரியுமா? காதலும் கடவுளும் ஒண்ணுப்பா... காதல் ஜோடிகள இப்படி காயுறதுதான் சிவத்துரோகம்... பரமசிவன்ல இருந்து அவர் பையன் முருகன் வரைக்கும் இந்த விசயத்துல கில்லாடிங்க தானே?


Anonymous said...
பேசாத வார்த்தை யாரையும் துன்புறுத்துவதில்லைதொடர்மௌனமும் எதுவித பயனையும் தரப்போவதில்லைகடமையை செய்வோம்உரிமையை பெற்றுக்கொள்வோம்தடையை தகர்த்தெறிவோம்-அதுமற்றவரின் தலையாய்இருந்தாலும்பரவாயில்லை!--------இது உங்களுடைய கவிதை। யதார்த்தத்துக்கு ஒத்துவராது என நினைக்கிறேன். எவ்வளவுதான் முயற்சி செய்யுங்கள். என்னதான் சொல்லுங்கள். சமுதாயத்தை திருத்த முடியாது. கடைசியில் நாடற்றவர்களாக வெளிநாட்டில் வசிக்க வேண்டிவரும்.நீர் பலதும் பேசுகிறீர்.விழலுக்கிறைத்ததாக கவலைப்படுவீர்.


எனது பதிவுகளில் எவையேனும் அரசியல்சாயம்பூசப்பட்டவை என எண்ணினால் சொல்லுங்கள்। மற்றும் இவ்வாறான பின்னூட்டங்கள் தருவதன் மூலமோ அல்லது கல்வியியலாளர்களின் சந்திப்பின்போதோ என்னைப்பற்றி தவறாக பேசி ஒன்றையும் சாதிக்க முடியாது என்பதை உணருங்கள்। என்னை முழுமையாக கவிழ்ப்பதற்கு மலையத்தைச் சேர்ந்த சிலரும் படாதபாடாய் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்। சம்பந்தப்பட்டவர்களுக்கு நான் எழுதியுள்ளவை அனைத்தும் புரியும் என நினைக்கிறேன்।

Monday, March 31, 2008

மெகா சீரியலால் சிறுமி தற்கொலை!!!

சின்னத்திரைகளில் ஒளிபரப்பாகிவரும் தொடர்நாடகங்கள் பல பிரதிகூலமான விளைவுகள் ஏற்படுத்தி வருவதை பலரும் பல்வேறு வகையில் தெளிவுபடுத்தி வந்தனர்। இந்நிலையில் அவர்களின் கூற்றை உண்மையாக்கும் முகமாக சிறுமியொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்।
தொலைக்காட்சி நாடகத்தில் இடம்பெற்ற தற்கொலைக்காட்சியை பார்த்துவிட்டு அதேபோல் தானும் முயற்சி செய்து சிறுமி தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இலங்கை,கொழும்பு பாலத்துறை பகுதியிலுள்ள 12 ஆம் இலக்கத் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது।ரிகாசா (வயது 12) என்ற முஸ்லிம் சிறுமியே இச்சம்பவத்தில் இறந்தவராவார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,சம்பவ தினமான சனிக்கிழமை மேற்படி சிறுமியின் பெற்றோர் தொழில் நிமித்தம் வெளியில் சென்றுள்ளனர். தனது பாட்டியுடன் வீட்டிலிருந்த சிறுமி வீட்டின் மேல்மாடியிலுள்ள தனது அறையில் விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அப்போது மாலை 4.30 மணியளவில் அங்குவந்த, சிறுமியின் மச்சாள் முறையான மற்றொறு சிறுமி மேல்மாடியின் அறைக்குச்சென்று பார்த்தபோது, குறித்த சிறுமி கழுத்தில் சுருக்கிடப்பட்ட நிலையில் கூரைக்கம்பியில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். இதனைப் பார்த்த மற்ற சிறுமி, அச்சத்தில் அலறியவாறு பாட்டியிடம் ஓடிச்சென்று கூறியுள்ளார். உடனடியாக சிறுமி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளைமேற்கொண்டு வருகின்றனர்.கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகமொன்றில் பெண்ணொருவர் சேலையினால் கழுத்தில் சுருக்கிட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயற்சிப்பதைப்போன்ற காட்சி படமாக்கப்பட்டிருந்ததாகவும் அதைப்பார்த்த குறித்த சிறுமி விளையாட்டுத்தனமாக அதேபோன்று செய்து பார்க்க முயற்சித்தவேளையே இவ்வாறு உயிரிழந்திருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது. சிறுமி தான் அணிந்திருந்த துப்பட்டாவின் ஒரு பகுதியை சிறிய மேசையொன்றின் மேல் ஏறி தாழ்வாகக் காணப்படும் கூரைக்கம்பில் கட்டி மற்றைய பகுதியை தனது கழுத்தில் கட்டிக்கொண்டு மேசையிலிருந்து குதித்ததினாலேயே கழுத்துப்பகுதி இறுகி சிறுமி உயிரிழந்திருப்பதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து சிறுமியின் பாட்டியிடமும் சிறுமி தூக்கில் தொங்கியதை முதலில் கண்ட சிறுமியிடமும் பொலிஸார் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர். சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.சம்பவத்தை நேரில் கண்ட பயந்த நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது।

பெண்களை மையப்படுத்தியே சில தொடர்நாடகங்கள் இயக்கப்படுகின்றன। குடும்பச்சச்சரவுகளில் பெண்களே வில்லிகளாக சித்தரிக்கப்படுகின்றனர்। இதனால் வீடுகளில் தாய்மார்களைக் கூட பிள்ளைகள் எதிரியாகவே பார்க்கின்றனர் என்றால் தயாரிப்பாளர்கள் நம்பமாட்டார்கள்। நண்பரின் உறவினர் ஒருவரது வீட்டில் நடந்த சம்பவம் இது,
தாயார் சற்று தாமதமாக வர மகன் தாயைப்பார்த்துக் கூறுகிறான் இப்படி, எங்கடி அவனபார்க்கவா போயிட்டு வார?அவன் சோறுபோட்டு வளர்ந்த உடம்பா இது? எனக் கேட்டுள்ளான்। இதற்குக்காரணம் என்னவென்றால் இந்த வசனம் அப்போதுதான் தொலைக்காட்சி நாடகமொன்றில் ஒளிபரப்பாயுள்ளது। அதில் தாமதமாகிவரும் மனைவியைப் பார்த்துக் கணவன் கேட்கும் இக்கேள்வியை இங்கு மகன் கேட்கிறான்। இவ்வாறு நிறையவே சம்பவங்கள் உள்ளன। எதிர்மறை விடயங்களை காட்டுவதால் சிறுபிள்ளைகள் நியாயத்திலிருந்து விடுபட்டுச் செல்கிறார்கள்। அவ்வாறே இந்தச்சிறுமியின் உயிரும் பிரிந்துள்ளது। இதற்கு யார் பதில்சொல்லப்போகிறார்கள்???

Monday, March 10, 2008

சிவராத்திரியும் சிவத்துரோகமும்...! (மனித முகத்துடன் நாய்களின் அட்டகாசம்)

சிவனுக்கே உரிய தனித்துவமான விரதம்தான் சிவராத்திரி। மாதம்,பட்சம்,நித்தியம்,யோகம் என சிவராத்திரி அனுட்டிக்கப்பட்டாலும் மகா சிவராத்திரிக்கு தனி மதிப்புண்டு। மாயையாகிய உலகம் மகாசக்தியாகிய இறைவனிடத்தில் ஒடுங்கும் மகாபிரணய காலம் மகா சிவராத்திரியில் தான் வருகிறது। அதனால் இதன் தனித்துவம் மேலும் வலுவடைகிறது।
இவ்வாறிருக்க இலங்கையின் தலைநகரமாகிய கொழும்பில் சிவராத்திரி விரதம் சிறப்பாக அனுட்டிக்கப்பட்டது। ஆனாலும் வழமை போலவே இளசுகளின் லீலைகளும் மூலை முடுக்கெங்கும் அரங்கேறின। கடந்த ஆண்டு சிவராத்திரியின்போது கொழும்பில் இடம்பெற்ற காம வெறியாட்டங்கள் பற்றி மெட்ரோ நியூஸ் பத்தரிகையில் தகுந்த ஆதாரங்களுடன் எழுதியிருந்தேன்। அதற்காக வாசகர்களின் சூடான கருத்துப்பறிமாற்றங்களும் இடம்பெற்றன। அதேவேளையில் வெலியமுனை குருசாமி தினகரன் பத்திரிகையில் சில விடயங்களை தெளிவாகவே குறிப்பிட்டிருந்தததுடன் தினக்குரல் பத்திரிகையும் இந்தக் கீழ்த்தரம் குறித்து செய்தி வெளியிட்டிருந்தது।
என்னதான் ஊசியேற்றினாலும் உலக்கை நிலை மாறாததுபோல இந்தத்தடவையும் காம மழையில் நனைந்து காதல் நெருப்பில் குளிர்காய்ந்த நாயகர்களின் நிலையும் மாறவில்லை।
ஒருபுறம் பூசைநடைபெற மறுபுறம் பசை போல் ஒட்டிக்கொண்டிருந்தார்கள் காதலர்கள்। கொழும்பில் பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கு அருகில் லீலைகள் அரங்கேறின। இலவச காட்சியாக கண்டுகளித்தனர் பலர்।
விவேகானந்தா மேட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் ஒன்றுக்குள் இரண்டு காதல் ஜோடிகள் சில்மிஷங்களில் ஈடுபட்டிருந்த போது வேறு இளைஞர்கள் தொந்தரவு செய்தனர்। கோபத்தில் காருக்குள் இந்த இளைஞன் ஒருவன் ஓடிவந்தான்। மேலாடை கூட இல்லாமல்!!! ( என்ன கொடுமை சார் இது?)
அதுமட்டுமல்ல இரவுக்காட்சி திரையரங்குகள் நிறைந்திருந்தன।
நல்ல வேளை முகத்துவார கடற்கரைக்கு பொலீசார் யாரையும் அனுமதிக்கவில்லை। இல்லையென்றால் கடலே சகிக்காமல் பொங்கியிருக்கும்॥
ஆள் நடமாட்டம் என்றுகூட பார்க்காமல் காதலியின் இடையை நசுக்கிப்பிடிப்பதும் காலநேரத்தை நோக்காமல் அவளும் அவனது உடலை வருடிவிடுவதுமாக தொடர்ந்த பல கதைகள் விடியும் வரையில் ஓயவில்லை। இதுபற்றி நிறைய எழுதலாம்। ஆனால் வலைக்கலாசாரத்தை மீறி வெறித்தனமாக எழுதக்கூடாது என்பதால் தவிர்க்கிறேன்। இந்த அனுபவங்கள் பலவற்றை நேரில் கண்டு சளித்துப்போன சமூக நலன்விரும்பியொருவரது தகவல்களை அடுத்த பதிவில் தருகிறேன்।( அவருடன் தொடர்புகொள்ள சற்றுத்தாமதமாகிறது)
சிவராத்திரியில் சிவத்துரோகம் செய்யும் இவர்களை அவனும் பார்த்துக்கொண்டுதானே இருந்திருப்பான்? நாய்தானே நடுவீதியில் செய்யும் என ஒருவர் அப்போது கூறியது இப்போது நினைவுக்கு வருகிறது।சரி,இந்த விஷமிகளின் சமூகத்துரோகத்துக்கு முடிவு கிட்டாதா? என்ன செய்யலாம் என்று பதிலுக்காக உங்களிடம் விடுகிறேன்।

Monday, March 3, 2008

தினக்குரல் வாரமலரில் எனது வலைப்பூ


இலங்கையில் வெளிவரும் தினக்குரல் பத்திரிகையில் வாராவாராம் பதிவர்களில் வலைத்தள அறிமுகம் இடம்பெற்றுவருகிறது। தாசன் அண்ணா எழுதும் இக்கட்டுரையில் நேற்று ஞாயிறன்று எனது புதிய மலையகம் வலைத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது।

பத்திரிகையை பார்த்தவுடன் பெரிதும் குதூகலம் கொண்டேன்। எனது வலைத்தளத்துக்கு ஆதரவு அளித்துவரும் பதிவர்களுக்கு பணிவுடன் நன்றிகூருவதுடன் அனைத்து நண்பர்களுடன் இதனைப் பகிர்கிறேன்। தாசன் அண்ணாவுக்கும் தினக்குரலுக்கும் நன்றிகள்।

Wednesday, February 27, 2008

இலங்கைப் பதிவர்களுக்கு பைத்தியமாம்...!

கொழும்பு வெள்ளவத்தை தமிழ்ச்சங்கத்துக்கு கடந்த சனிக்கிழமையன்று போயிருந்தேன்। வாசிகசாலைக்கு அருகில் இரண்டு பெரியவர்கள் ( பார்ப்பதற்கு அப்படித்தான் தெரிந்தது) வலைத்தளங்கள் பற்றி உரையாடிக்கொண்டிருந்தார்கள்। தவறென்று தெரிந்தும் காதுகொடுத்தேன்।
இளைஞர்கள் தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகளுக்கு பெரும்பாலும் வருவதில்லை என்ற வாதத்தின் தொடர்ச்சியாக இப்படி பேசப்பட்டது.

ஒருவர் : இப்போ புதுசா வலைப்பதிவர் என்று ஒரு கூட்டம் அலையுது। என்ன வேலை செய்றியள் என்று கேட்டால் நான் புளொக் செய்றன் என்று பதில் சொல்லுதுகள்

மற்றவர்: சண்டே தினக்குரல் பார்க்கிறியளே॥ புதுசா வலைப்பதிவராம் என்று அரைப்பக்கத்தை வீணடிக்கினம்। சாமிய கண்டா( தினக்குரல் அதிபர்) கேட்கவேணும்। அவனவன் சுயநலத்துக்காக புளொக் என்று வச்சுக்கொள்றான்। அதை தம்பட்டம் அடிக்கிறதுக்கு மற்றொரு கூட்டம்॥

ஒருவர்: எல்லாம் பைத்தியங்கள்... வேலையில்லாம நெட் நெட் என்று கஃபே ல உட்கார்ந்திட்டு நெட்ல கொப்பி பண்ணி புது விஷயம்னு போடுதுகள்... முருகானந்தன் ட கொஞ்சம் பார்க்கலாம்...

இதுவரை தான் என்னால் கேட்க முடிந்தது. இதற்கு மேல் கேட்டால் நான் பதில் சொல்ல வேண்டிவரும் என்பதால் அங்கிருந்து வந்துவிட்டேன். இருந்தாலும் இவர்களுடைய உரையாடல் எனக்குள் இனம்புரியாத கவலையை பிரசவித்தது. வெள்ளை உடையில் தன்னைத் தூய்மையானவர்கள் எனக் காட்டிக்கொள்ளும் இவர்களா இப்படிப் பேசுகிறார்கள் என்றும் எண்ணத் தோன்றியது.
இலங்கை பதிவர்கள் பலர் எத்தனை சிரமத்துக்கு மத்தியில் பதிவிடுகிறார்கள் என்பது யாருக்கு புரியப் போகிறது? ( தமிழ்ச்சங்க நிகழ்ச்சிக்கு அடுத்த முறை சென்றால் அந்தப் பெரியவர்கள் யாரென்பதை அறிந்து பெயருடன் தர முயற்சிக்கிறேன்).
மற்றும் பதிவர்களை அறிமுகப்படுத்துவதில் ஒரு பத்திரிகை முந்திக்கொள்ள அதனை ஏற்றுக்கொள்ள மனமில்லாத மற்றை பத்திரிகை ஊடகவியலாளர் ஒருவர் தனிப்பட்ட ஒருவரை அறிமுகப்படுத்துவது ஊடகதர்மத்தை மீறும் செயல் என்று விளக்கம் கூறுகிறார்। இப்படியெல்லாம் நடக்கிறது பாருங்கள்...
என்னதான் இருந்தாலும் வலைப்பதிவர்கள் நாம் இணைந்து ஆரோக்கியமான மாற்றத்தை உண்டுபண்ணுவோம் என்பது மட்டும் உண்மை।

Monday, January 28, 2008

வால்பிடிக்கும் வாலாட்டிகள்...!


கொழும்பில் பெரும்புள்ளிகளுக்கு வால்பிடித்துத்திரியும் சில வாலாட்டிகள் தமது வால்புத்தியை ஏழை மக்களிடம் காட்டத்தொடங்கியிருக்கிறார்கள்।
கொழும்பில் ஏழைமக்களின் பிள்ளைகளுக்கு இத்தாலி வீசா எடுத்துத்தருவதாகக் கூறி இருவர் ஏமாற்று நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாக பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் கூறினார்। கொட்டாஞ்சேனை, வெள்ளவத்தைப் பகுதிகளில் இந்த வாலாட்டிகள் தமது ஏமாற்று வித்தைகளில் ஈடுபட்டுவருவதாகவும் தகவல் கிடைத்தது।
சிவகாமி என்பவர் வெள்ளவத்தையில் வசிக்கும் வயதான அம்மா। யுத்தத்தில் அனைத்தையுமே இழந்து வருமானமில்லாமல் வாடகை வீட்டில் தங்கியிருக்கும் இவர் தனது பேரனை வெளிநாட்டுக்கு அனுப்ப பெரும் பாடுபட்டுள்ளார்।
அவரது பேரன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பெரும்புள்ளியொருவரின் உதவியால் விடுவிக்கப்பட்டுள்ளார்। அச்சந்தர்ப்பத்தில் அந்தப்பெரும்புள்ளியின் நெருங்கிய நபர் எனச்சொல்லிக்கொண்டவர் அந்த இளைஞரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக வாக்குறுதி கொடுத்து பணம் வாங்கியுள்ளார்। இவர்களுடைய சந்திப்பு கொட்டாஞ்சேனைப் பகுதியிலுள்ள பிரபல உணவகத்தில் இடம்பெற்றுள்ளது।
ஒருமாத காலப்பகுதியில் ஐந்து இலட்சம் பணம்பெற்றுக்கொண்ட அந்த நபரை இப்போது தொடர்புகொள்ள முடிவதில்லை என கவலையுடன் கூறுகிறார் அந்த அம்மா।
யார் எப்படியென்றாலும் பரவாயில்லை தன்பிழைப்புக்கு பணம்கிடைத்தால் போதும் என இயங்கும் இவ்வாறான பூனை வேஷம்போட்ட நரிகளிடமிருந்து சம்பந்தப்பட்டவர்கள் தம்மை காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.

Wednesday, January 23, 2008

எந்த ரூபத்திலும் வரலாம்!

இலங்கையிலிருந்து மத்திய கிழக்குக்கு தொழில்தேடிச்செல்லும் இளம் பெண்கள் ஏராளம்। இவர்களில் பலருக்கு எமது நாட்டிலேயே ஏற்படும் அக்கிரமங்கள் குறித்து தகவல் அறியக்கிடைத்தது।

விழிப்பாயிருங்கள்.... இதோ விடயத்தை சொல்கிறேன்।
பெரும்பாலும் வெளிநாட்டு வேலைகள் குறித்து அதிகம் தெரிந்திராத பெண்கள் தரகர்களை நாடுகின்றனர்। எல்லா வேலையும் செய்து முடித்த பின்னர் அந்தப் பெண்களை அவர்களுடைய ஊரிலிருந்து தரகர்களே அழைத்து வருகின்றனர்। அப்படி அழைத்து வரும்போது அவர்கள் கைக்கொள்ளும் தந்திரம் இதுதான்।
இரவில் பெண்களை அழைத்து வரும் தரகாகள் ,விமான நிலையத்துக்கு வந்தவுடன் இன்று உங்களுக்கான பயணம் இல்லையாம் நாளை காலை தானாம் என்று சொல்கின்றனராம்। அதாவது முன்திட்டமிட்டு செய்யும் செயல் இது।
சரி இப்போது வீட்டுக்கும் போய் வர முடியாது। இங்கேயே நின்றுகொண்டிருந்தால் பொலிஸார் விசாரணை செய்வார்கள் எனக் கூறி ஏதாவது சொல்லி அங்குள்ள ஹோட்டல்களுக்கு அழைத்துச்செல்கின்றனர்। எப்படியாவது போய்ச்சேர வேண்டும் என்பதால் எல்லாவற்றையும் சமாளித்துச்செல்கின்றனர் இந்த அப்பாவிப் பெண்கள்।
வெளிநாடு செல்லும் பெண்கள் இனியாவது கவனமாக இருப்பார்களா? காம விஷமிகள் எந்த ரூபத்திலும் வரலாம்.

Friday, January 18, 2008

கோயிலுக்குள் மாடு வெட்டப்பட்டது... சிலைகளில் இரத்தம்!!!

இலங்கை மட்டக்களப்பு ஆரையம்பதியில் இனவெறிகொண்ட விஷமிகள் சிலர் ஆரையம்பதி நரசிம்மர் ஆலயத்தில் மாடு வெட்டி இரத்தத்தை கடவுள் சிலைகளில் ஊற்றியிருக்கின்றனர்। மாட்டின் உடல் பாகங்கள் கோயிலுக்குள் அங்காங்கே வீசப்பட்டுள்ளன।

ஆரையம்பதி செல்வநகர் பள்ளிவாசலுக்கருகில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் முஸ்லிம்கள் மூவர் துப்பாக்கிப் பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளனர்। யார் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்பதை அறியாத சிலர் இதுவரை மூடி மறைத்து வந்த தமது இனவெறியை இவ்வாறு காட்டியுள்ளனர்। கும்பாபிஷேகத்துக்கு தயாராக இருந்த ஆலயத்தில் இவ்வாறு இடம்பெற்றுள்ளது। தமிழ் மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று ஹர்த்தால் இடம்பெற்ற போதிலும் இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் இனங்காணப்படவில்லை।

இதற்கு முஸ்லிம் அரசியல்வாதியொருவர் துணைபோனதாயும் நம்பத்தகுந்த தகவல் தெரிவித்தது। உண்மை தெரிந்தும் தமிழ் ஊடகங்கள் இதனை வெளிப்படையாக குறிப்பிடாதது வருத்தம் தருகிறது। தனது மதத்தை நேசிக்கும் எந்த மதத்தினனும் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டான்।
யுத்தத்தால் உரிமைகள் ஒருபுறம் சிதைக்கப்பட மறுபக்கம் மனதாலும் தமிழர்கள் புண்படுத்தப்படுகின்றனர்। யார் தீர்வினைத் தரப்போகிறார்கள்? வழமைபோல இந்துகலாசார அமைச்சும் இந்து நிறுவனங்களும் மெளம் சாதிக்கப் போகின்றனவா?

Wednesday, January 16, 2008

எனது வலைப்பூ பத்திரிகையில் மலர்ந்தது!


இலங்கையில் வெளிவரும் மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் எனது புதிய மலையகம் வலைத்தளம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது। காலையில் பத்திரிகையை பார்த்தவுடன் என்னுள் இனம்புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது। இலங்கையில் வலைப்பதிவர்கள் மற்றும் அவர்களின் வலைப்பதிவுகள் பற்றி அறிமுகப்படுத்துவது வரவேற்கத்தக்கது।


மெட்ரோவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்।
இலங்கை பதிவர்களாகிய ( அறிந்தவரையில்)
1 ] உடுவைத்தில்லை 2 ] டொக்டர்.எம்.கே.முருகானந்தன்3 ] மேமன்கவி 4 ] மயூரேசன்5 ] ஊரோடி பகீ 6 ] 'ரேகுப்தி' நிவேதிதா7 ] கோவையூரான் 8 ] காண்டிபன் 9 ] மருதமூரான் 10 ] வந்தியத்தேவன்11 ] பாவை 12 ] தாசன் 13 ] மு.மயூரன் 14 ] மாயா 15 ] தேனாடான் 16] சேரன்கிரிஷ் 17] மப்றூக்18] Hairath 19] உதய தாரகை 20] ஹயா 21] பஹீமாஜஹான் 22 ] சு.முரளிதரன் 23 ] வவுனியா தமிழ் 24 ] யாழ் வானம்பாடி 25 ] M.RISHAN SHAREEF 26 ] சி.மது 27 ] Paheerathan 28 ] வியாபகன் 29] அபர்ணா ३०] வர்மா
இவர்களுடனும் அனைத்து இணைய நண்பர்கள் வலைத்தள நண்பர்களுடனும் எனது சந்தோஷத்தை பகிர்ந்துகொள்கிறேன்।

Monday, January 14, 2008

"தமிழனாய் பிறந்துவிட்டோமய்யா"

கொழும்பு கொட்டாஞ்சேனையில் கடந்த சனிக்கிழமை மாலை இடம்பெற்ற சம்பவம் இது। ஆலயத்துக்கு சென்று திரும்பிக்கொண்டிருக்கையில் ஜிந்துப்பிட்டி சந்திக்கருகில் ஐந்து பொலிஸாரும் இரண்டு இராணுவத்தினரும் இணைந்து வயதான அம்மாவை அதட்டி விசாரித்துக்கொண்டிருந்தனர்।

எனது நடையின் வேகத்தைக் குறைத்து என்ன நடக்கிறது எனப் பார்த்த போது எத்தனை பிள்ளைகள் புலிகள் இயக்கத்தில் இருக்கின்றனர் என சிங்களத்தில் அவர்கள் கேட்க பாஷை தெரியாத அம்மா அழாத குறையாக தடுமாறினார்।

அவரிடமிருந்த பையை வாங்கிய அவர்கள் அதிலிருந்த துணிகளை எல்லாம் எடுத்துக் கீழே போட்டு துருவி ஆராய்ந்தனர்। சற்று நேரத்தில் அவர்கள் அங்கிருந்து சென்றவுடன் அந்த அம்மாவிடம் சென்று நடந்ததை விசாரித்தேன்।

கொட்டும் மழையில் அதிகமாய் நனைந்துவிட்ட துணிகளை எடுத்து பையில் திணித்தவாறு பதில் சொன்னார்॥ "தமிழனாய் பிறந்துவிட்டோமய்யா"

தான் தங்கியிருந்த லொட்ஜை தேடமுடியாததால் தான் இத்தனை சிரமம்।
கொலை செய்யும் குற்றத்துக்கு சமனாக வார்த்தைகளால் காயப்படுத்தும் படையினர் சிலரின் நடவடிக்கையை யாரும் கண்டுகொள்ளாதது ஏன்? அரசாங்கத்தில் அங்கம் வகித்து தமிழ்விரோதத்துக்கு துணைபோகும் தமிழ் அமைச்சர்கள் சிலர் வாய்திறந்து பதில் சொல்வார்களா?

Friday, January 11, 2008

கவலையுடன் பதிவிடுகிறேன்...!இலங்கையில் இன்னும் ஜாதிப்பிரச்சினை தலைவிரித்தாடிக்கொண்டிருக்கிறது என்பதற்கு நல்லதொரு உதாரணத்தை இங்கு குறிப்பிடுகிறேன்। உண்மையில் இந்தச்சம்பவம் என்னை எந்தளவு கவலைக்குள்ளாக்கியது என்பதை வெளிப்படுத்த முடியாதவனாக இருக்கிறேன்।

வடக்குப் பகுதியை பிறப்பிடமாகக் கொண்ட எனது தோழியொருத்தியும் மலையக இளைஞன் ஒருவனும் காதலிக்கிறார்கள்। இந்த விடயம் அவளுடைய வீட்டுக்கு தெரியவந்துள்ளது। அவளுடைய அம்மா கண்டபடி திட்டி அடித்து கடைசியில் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

நாடு வீடில்லாத நாதாரிப் பரம்பரை ஒருத்தனை லவ் பண்றியே। அங்க போய் கொழுந்தெடுக்கப் போறாயா? எங்கள கொல்ற ஆமி காரனுக்கு உன்ன கட்டி வச்சாலும் கட்டி வப்பபேன்। அந்த வடக்கத்தையானுக்கு ( என்ன அர்த்தம் என்று நீங்க தான் சொல்லனும்) கட்டி வைக்க மாட்டேன்டி। அங்க உள்ள எல்லாருமே படிக்காதவனுங்க। தோட்டகாட்டானுங்க,நாகரீகம் தெரியாதவனுங்க.கீழ்ஜாதிக்காரனுங்க.... உனக்கு புத்தி எங்கேயடி போனிச்சு.... என்றாராம்.

கண்ணீருடன் அவள் என்னிடம் கூறியபொழுது உண்மையில் என்ன பதில்சொல்வதென்றே தெரியவில்லை. வட,கிழக்கு மலையகம் என்ற பாகுபாட்டில் தற்போதைய இளைஞர்கள் இல்லை. ஆனால் சிலர் அதை வைத்துக்கொண்டே தம்பட்டம் அடிக்கிறார்கள். இதுவரை நானோ என் சார்ந்த நண்பர்களோ அப்படியில்லை. ஏன் இவர்கள் மட்டும் இப்படி?

மலையகம் என்றால் கீழானவர்களா? மலையகத்தில் உள்ள அனைவருமே லயன்களில் பிறந்து வளர்ந்தவர்கள் அல்லவே? ஏன் படித்தவர்கள் இல்லை? பெரும்பாலான அப்பாவி மக்களுக்கு அடிப்படைக் கல்வியறிவும் பொருளாதாரமும் இல்லையே தவிர அனைவரிடமும் உண்மையான அன்பிருக்கிறது. இங்கு காதலை எதிர்த்தல் சாதராண விடயம் அதற்காக இப்படியெல்லாம் அவர் பேசியிருக்க கூடாது.

அந்த இளைஞனை விட தமிழினத்தையே அழிக்கநினைக்கும் மூச்சில் கூட போர்வாசம் வீசும் ஆமி காரன் நல்லவனா? ஏனம்மா இந்த சிந்தனை?

தமிழர்களே இப்படி பாகுபடாக நினைக்கும் போது தமிழர்களால் தமிழர்கள் தலைகுனிய நேரிடும் போது ஆறுதலுக்காவது அடுத்தவன் வரமாட்டான்।

உயிருள்ளவரை தமிழ்மூச்சு,தமிழ்ஜாதி,தமிழ்நேசம் என வாழ்ந்து பிரிவினைகளைத்தவிர்த்திருக்கும் இணைய நண்பர்களிடம் இப்பதிவை பதிலுக்காக சமர்ப்பிக்கிறேன்।

(நண்பர் அருணின் வலைப்பக்க உண்மைச்சம்பவத்தை படிக்க,

http://hongkongeelavan.blogspot.com/2008/01/blog-post_1160.ह्त्म्ल )