Saturday, October 26, 2013

காட்டுக்குள் தனிமைப்படுத்தப்பட்ட சோகம்: விடுதலை கேட்கும் தமிழ்த் தொழிலாளர்கள்


"எட்டு வரு­டங்­க­ளாக காட்­டுக்குள் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கிறோம். பட்­டப்­ப­கலில் நடந்து செல்­வ­தற்குக் கூட பய­மாக இருக்­கி­றது. எந்தக் குற்­றமும் செய்­யாமல் திறந்த வெளியில் சிறை­ப் ப­டுத்­தப்­பட்­டது போலத்தான் எங்­க­ளது வாழ்க்கை" - இது களுத்­துறை மாவட்­டத்தில் அரம்­ப­ஹே­னவில் வசிக்கும் மக்­களின் சோகக்­குரல்.
ஹொரணை பெருந்­தோட்டக் கம்­ப­னியின் ஹில்ஸ்ட்றீம் தோட்­டத்தின் ஒரு பிரிவே அரம்­ப­ஹேன. அங்­குள்ள மக்கள் காட்­டுக்குள் வாழ்­வ­தா­கவும் அடிப்­படை வச­திகள் எது­வு­மின்றி பெரும்­பி­ரச்­சி­னை­க­ளுக்கு முகங்­கொ­டுத்து வரு­வ­தா­கவும் 'கேச­ரி'க்கு கடிதம் மூலம் அறி­வித்­தி­ருந்­தனர்.
ஆம்! புளத்­சிங்­ஹல நக­ரி­லி­ருந்து சுமார் 15 கிலோ­மீற்றர் தூரத்தில் கர­டு­மு­ர­டான பாதையில் அரம்­ப­ஹே­ன­வுக்கு பய­ணித்தோம். சுமார் 10 கிலோ­மீற்றர் பய­ணத்தின் பின்னர் இரு­பு­றமும் அடர்ந்த காடுகள் நிறைந்­தி­ருக்க வேறெங்கோ தேசத்­துக்கு வந்­து­விட்­ட­து­போன்ற உணர்வு.
ஆங்­காங்கே காணப்­படும் இறப்பர் மரங்­க­ளுக்கு நடுவே மனி­தர்கள் உள்ளே போக முடி­யா­த­ள­வுக்கு உயர்­வான காட்டு மரங்­களும், செடி­கொ­டி­களும் நிறைந்­தி­ருந்தன.
அடர்ந்த காடு­க­ளுடன் கூடிய சிறு மலைக்­குன்­று­க­ளுக்­கி­டையே அமைந்­தி­ருக்­கி­றது லயன் குடி­யி­ருப்பு. அங்கு 14 தமிழ்க் குடும்­பங்­களைச் சேர்ந்த 50 பேர் வசித்து வரு­கி­றார்கள்.
இந்தத் தோட்டம் மூடப்­பட்டு 8 வரு­டங்கள் ஆகின்­றன. அன்று முதல் தொழி­லா­ளர்­க­ளுக்கு வேலை இல்லை. தோட்ட நிர்­வா­கத்­தினால் வழங்­கப்­பட வேண்­டிய கொடுப்­ப­ன­வுகள் தரப்­ப­ட­வில்லை. மேலும் இதர வச­திகள் எதுவும் செய்­து­கொ­டுக்­கப்­ப­ட­வில்லை.
இக்­கட்­டான சூழ்­நி­லைக்குத் தள்­ளப்­பட்ட அந்த மக்கள் அன்­றாட தேவை­களை பூர்த்தி செய்­வ­தற்­காக கூலித் தொழில் செய்து வரு­கின்­றனர்.
வள­மான தோட்­ட­மாக இருந்த அரம்­ப­ஹேன, நிர்­வா­கத்தின் கவ­ன­யீனம் கார­ண­மாக காடாகிப் போனது. அந்தத் தோட்டம் 165 ஹெக்­ரெயர் நிலப்­ப­ரப்பை கொண்­ட­தா­கவும் இறப்பர் மரங்கள் மீள்­ந­டுகை செய்­யப்­ப­டாத கார­ணத்­தினால் தோட்டம் முழு­வதும் காடாகிப் போன­தா­கவும் அங்­குள்ள மக்கள் கூறு­கி­றார்கள்.
அரம்­ப­ஹே­னவில் தனித்­து­வி­டப்­பட்­டுள்ள இந்த மக்­க­ளுக்கு போக்­கு­வ­ரத்து வச­திகள் இல்லை, வைத்­தி­ய­சாலை இல்லை, மல­ச­ல­கூ­டங்கள் இல்லை, தண்­ணீரைக் கூட காத தூரத்தில் உள்ள கிணற்­றி­லி­ருந்­துதான் பெற்­றுக்­கொள்­கி­றார்கள்.
"யாருக்­கா­வது சுக­யீனம் என்­றால்­கூட நோயா­ளியை காட்­டு­வ­ழியே தூக்­கிக்­கொண்­டுதான் போக வேண்டும். மலைப்­பாம்­புகள் அதி­க­மாக நட­மாடும் இந்தக் காட்­டுப்­ப­கு­தியில் எங்கே கால் வைப்­பது என்ற அச்­சமே மர­ணத்தின் விளிம்­பு­வரை எம்மைக் கொண்டு சென்­று­விடும்" என்­கிறார் சங்கர் என்ற குடும்­பஸ்தர்.
பி.பால்ராஜ் (53) என்ற குடும்­பஸ்தர் தமது பிரச்­சி­னை­களை இவ்­வாறு விப­ரிக்­கிறார்.
"நாம் பரம்­பரை பரம்­ப­ரை­யாக இங்கே வசிக்­கிறோம். 1924 ஆம் ஆண்டு இந்த தோட்­டத்­துக்கு எங்­க­ளு­டைய குடும்­பத்தார் வந்­தி­ருக்­கி­றார்கள். நல்ல இலா­பத்­துடன் தோட்டம் இயங்­கி­வந்­தது.
2005 ஆம் ஆண்­டி­லிருந்­துதான் இந்த நிலைக்கு நாம் தள்­ளப்­பட்டோம். இறப்பர் மரங்­களை பிடுங்­கி­விட்­டார்கள். கிட்­டத்­தட்ட 1600 மரங்கள் இருந்­தன. இப்­போது 500 மரங்கள் கூட இல்லை. மற்­றைய இடங்­க­ளெல்லாம் காடா­கி­விட்­டது.
தோட்ட முகா­மை­யா­ள­ரிடம் பல தட­வைகள் முறை­யிட்டோம். ஆனால் எமது அழு­கு­ர­லுக்கு யாருமே செவி­சாய்க்­க­வில்லை. திடீ­ரென வேலை நிறுத்­தி­விட்­டார்கள். சம்­பளம் தரா­ததால் வரு­மா­னத்­துக்கு வழியும் இல்­லாமல் திண்­டா­டினோம். இறப்பர் மரத்தின் உச்­சி­வரை பால் வெட்டி தோட்­டத்­துக்குக் கொடுத்தோம். ஆனால் எந்தப் பிர­தி­ப­லனும் கிடைக்­க­வில்லை.
நாம் தமி­ழர்கள் என்­ப­தால்தான் ஒடுக்­கப்­ப­டு­கிறோம். இங்­குள்ள சிங்­கள அர­சி­யல்­வா­தி­க­ளிடம் போனால், நீங்கள் தமி­ழர்­க­ளுக்­குத்­தானே வாக்­க­ளித்­தீர்கள், அவர்­க­ளி­டமே போய் கேளுங்கள் என்­கி­றார்கள்.
நாம் ஏமாற்­றப்­பட்­டு­விட்டோம். கட­வுளும் எம்மை கைவிட்­டு­விட்­ட­தா­கத்தான் தோன்­று­கி­றது" என்றார்.
எஸ்.சரோ­ஜினி(66) என்பவர் கூறு­கையில்,
"நாங்கள் இந்தத் தோட்­டத்­துக்கு சேவை­யாற்­றி­யி­ருக்­கிறோம். வியர்வை சிந்தி உழைத்த இட­மெல்லாம் இப்­போது காடா­கிப்­போய்­விட்­டது. காட்டு வழி­யா­கத்தான் எங்­க­ளு­டைய லய­னுக்கு வர­வேண்டும் என்­பதால் யாரும் இங்கே வர­மாட்­டார்கள்.
வேலை இல்­லா­ததால் கால்­வ­யிறு,அரை­வ­யிறு என்­றுதான் வாழ்ந்­து­வ­ரு­கிறோம். ஒவ்­வொரு நாளும் நித்­தி­ரை­யின்றித் தவிக்­கிறோம்" என்றார்.
அரம்­ப­ஹே­ன­யி­லுள்ள சிறு­வர்கள் அரு­கி­லுள்ள குட­கங்கை என்ற தோட்­டத்­தி­லுள்ள பாட­சா­லைக்குச் செல்­கி­றார்கள். அந்தப் பாட­சாலை தரம் 9 வரை மாத்­திரமே கொண்டு இயங்­கு­கி­றது.
அதற்கு மேல் கல்வி கற்­ப­தற்கு மத்­து­கமை நக­ருக்கு மாண­வர்கள் செல்ல வேண்டும். அவ்­வா­றெனின் பல கிலோ­மீற்றர் தூரம் காட்­டு­வ­ழியே நடந்து சென்­றுதான் பஸ்ஸில் பய­ணிக்க வேண்டும்.
அவ்­வாறு பாட­சா­லைக்கு செல்வோர் வீடு திரும்பும் வரை நிம்­ம­தி­யின்றிக் காத்­தி­ருப்­ப­தாக பெற்றோர் கூறு­கின்­றனர். நீண்­ட­தூரம் நடக்க வேண்­டி­யதால் பாட­சாலைக் கல்­வியை இடை­நி­றுத்­தி­யோரும் உள்­ளனர்.
தோட்ட மக்கள் பகலில் நட­மா­டு­வ­தற்கும் அச்சம் கொண்­டி­ருக்­கி­றார்கள். குடி­யி­ருப்பைச் சூழ சிறு­குன்­று­களில் காட்டுப் பன்­றி­களும் மலைப்­பாம்­பு­களும் விஷப்­பூச்­சி­களும் இருப்­ப­தா­கவும் இரவில் நட­மாட முடி­யாத நிலை உள்­ள­தா­கவும் மக்கள் கூறு­கின்­றனர்.
தோட்­டத்தில் உள்­ள­வர்­க­ளுக்கு யாரா­வது கடிதம் அனுப்­பினால் கூட அது உரி­ய­வர்­களை சென்­ற­டை­வ­தில்லை. தபால்­கா­ரரே இல்­லாத தோட்­டத்தில் எப்­படி கடிதம் கிடைக்கும் எனக் கேள்வி எழுப்­பு­கி­றார்கள்.
அரம்­ப­ஹேன தோட்டம் மூடப்­ப­டு­வ­தற்கு முன்னர் இறப்பர் மரங்கள் குத்­தகை அடிப்­ப­டையில் மக்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டன. எனினும் தோட்ட மக்கள் புறக்­க­ணிக்­கப்­பட்டு பெரும்­பான்­மை­யி­னத்­த­வ­ருக்கே வழங்­கப்­பட்­ட­தாக மக்கள் குற்றம் சுமத்­து­கின்­றனர்.
தோட்டக் குடி­யி­ருப்­பி­லி­ருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் பால் சேக­ரிக்கும் நிலையம் இருக்­கி­றது. உள்ளே போக­மு­டி­யாத அள­வுக்கு காடுகள் வளர்ந்துள்ளதுடன் உடைந்தும் சேத­ம­டைந்தும் பாழ­டைந்­தி­ருக்­கி­ருக்­கி­றது அந்த நிலையம்.
அரம்­ப­ஹேன தோட்ட மக்கள் தாம் எதிர்­கொண்­டுள்ள அபாயம் மற்றும் சிர­மங்கள் குறித்து தமிழ் அர­சி­யல்­வா­திகள் பல­ரி­டமும் முறை­யிட்­டி­ருக்­கி­றார்கள். இது­வரை விமோ­சனம் கிடைக்­க­வில்லை.
அர­சி­யல்­வா­திகள் பலர் தேர்தல் காலங்­களில் மாத்­திரம் வந்து போயி­ருக்­கி­றார்கள். இந்த மக்­களின் குறை­களை தீர்ப்­ப­தாக உறு­தி­ய­ளித்­தி­ருக்­கி­றார்கள். ஆனாலும் இது­வரை எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை.
அரம்பஹேன தோட்டத்திலுள்ள தொழிலாளர்களுக்கு வேலை இல்லாத காரணத்தினால் அவர்களுக்குரிய கொடுப்பனவுகள் எதனையும் வழங்குவதற்கு தோட்ட நிர்வாகம் மறுப்பு தெரிவிப்பதாக பாதிக்கப்பட்டோர் கூறுகிறார்கள்.
தோட்ட நிர்வாகத்தின் அசமந்தப் போக்கினால் முழுத் தொழிலாளர்களுமே பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் குரல் வெளியு லகுக்கு கேட்காவண்ணம் திட்டமிட்ட வகையில் இச்செயற்பாடு இடம்பெற்றுள்ளதாகவே எண்ணத் தோன்றுகிறது.
ஏனென்றால் தோட்டத்தில் தொழில் வழங்கப்படாத தருணத்தில் நிர்வாகம், வேறு தோட்டங்களில் இவர்களுக்கு அதனைப் பெற்றுக்கொடுத்திருக்க முடியும். அல்லது ஏதாவது மாற்றீடான திட்டங்களை அமுல்படுத்தியிருக்கலாம். ஆனபோதும் தொழிலாளர்கள் குறித்த எந்த அக்கறையும் இங்கு வெளி க்காட்டப்படாமை கவலையளிக்கிறது.
பெரும்பான்மையினத்தோர் அதிகமாக வசிக்கும் பகுதிக்கு மத்தியில் இத்தோட்டம் அமைந்திருக்கிறது. இந்நிலையில் இந்தத் தோட்டத்தையும் பெரும்பான்மையினருக்கு விற்கும் முயற்சி இடம்பெற்று வருவதாகவும் ஒருபுறம் குற்றம் சுமத்தப்படுகிறது.
தாங்கள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதால் தங்களுடைய கலை,கலாசார,விழுமியங்களையும் பாதுகாக்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாக குறிப்பிடுகின்றனர்.
தோட்டம் மறுசீரமைக்கப்பட்டு மீண்டும் தொழில் வழங்கப்பட வேண்டும் அல்லது வேறு இடத்தில் தமக்கு காணிகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
ஆக,தோட்டம் முழு­வதும் காடாக மாறி­ய­மைக்கு யார் பொறுப்பு? ஒவ்­வொரு நிமி­டத்­தையும் அச்­சத்­துடன் கழித்­துக்­கொண்­டி­ருக்கும் மக்­களை இந்த நிலைக்கு ஆளாக்­கி­ய­வர்கள் யார்? பெரும்­பான்மை இனத்தோர் வாழ்­கின்ற தோட்­டங்கள் சரி­யாக நிர்­வ­கிக்­கப்­ப­டு­கின்ற போது, இந்தத் தோட்டம் மாற்­றாந்தாய் மனப்­பான்­மை­யுடன் நோக்­கப்­பட்­டது ஏன்? போன்ற கேள்­விகள் இயல்பாய் எழுகின்றன.
உண்மையில் வெளியுலகத் தொடர்புகள் இல்லாமல் காட்டுக்கு நடுவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள இந்த மக்களுக்கு தோட்ட நிர்வாகம் உரிய தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமாகும்.
அதேபோன்று பருவத்தில் பூக்கும் காளான்கள் போல தேர்தல் காலங்களில் மாத்திரம் மக்களிடம் சென்று வாக்கு கேட்டுக் கெஞ்சும் அரசியல்வாதிகள் இவ்விடயத்தில் இனிமேலும் மௌனம் சாதிக்கக் கூடாது.
ஒரு சமூகம் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் ஒதுக்கப்பட்டிருப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. உலகம் நொடிக்கு நொடி மாற்றம் கண்டுகொண்டிருக்க இங்கே ஒரு சமூகம் அடுத்த நிமிடத்தை நினைத்து ஏங்கிக்கொண்டிருக்கிறது. ஆதலால் உரிய தரப்பினர் இணைந்து தீர்வினை பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும்.

-இராமானுஜம் நிர்ஷன்

Wednesday, May 29, 2013

முறையற்ற வானொலிக் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளியிடுங்கள்..!


இலங்கை இலத்திரனியல் ஊடகங்களில் வானொலிகளுக்கென தனியான இடம் உண்டு. அதிலும் குறிப்பாக தனியார் வானொலிகள் மீது தமிழ்பேசும் மக்களிடையே அதிக வரவேற்பு இருந்தது, இருந்து கொண்டிருக்கிறது.

எனினும் தனியார் வானொலி அறிவிப்பாளர்கள் சிலரின் தற்போதைய போக்கு, ஆரோக்கியமான வானொலிக் கலாசாரத்தின் எதிர்காலம் குறித்து சிந்திக்க வைக்கிறது.

நான் இவ்வாறு வெளிப்படையாகக் கூறுவது என்னுடைய ஊடக நண்பர்கள் பலரை காயப்படுத்துவதாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. காத்திரமாக மிளிர்ந்து வளர வேண்டிய ஊடகத்துறையில் தினமும் காழ்ப்புணர்ச்சியுடன் கூடிய விடயங்களை கேட்டுச் சகிக்க முடியாத நிலைமையிலேயே இதனை எழுதத் துணிந்திருக்கிறேன்.

தனியார் வானொலிகளில் கடமையாற்றிய அறிவிப்பாளர்கள் சிலர் அங்குமிங்குமாக தாவி தற்போது நிகழ்ச்சி படைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

தாம் எதிர்பார்க்கும் களம் மற்றும் தமது எதிர்கால இலட்சியத்தை நோக்காக் கொண்டு மாற்றிடத்தில் தொழில் பெற்றுக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. ஆயினும் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்வது போல தாம் முதலில் பணியாற்றிய ஊடகங்களை கேலி செய்து கேவலமாகக் கிண்டலடிக்கும் பாணி வருந்தச் செய்கிறது.

ஒரு சில வாரங்களாக இதனைக் கவனித்து வருகிறேன். இப்படியே சென்றால் நிலைமை என்னாவது?

ஆரோக்கியமான வானொலிக் கலாசாரத்தை எவ்வாறு வளர்க்க முடியும்?

ஆசியாவில் முதன்முறையாக வானொலி ஆரம்பிக்கப்பட்டது இலங்கையில் தான். காலத்துக்குக் காலம் தொழில்நுட்பத்திலும் சரி, நிகழ்ச்சிப் படைப்பிலும் சரி, இதர விடயங்களிலும் சரி வானொலித்துறை வளர்ச்சி கண்டு வருகிறது என்பது பெருமை தருகின்ற போதிலும் ஒருவருக்கொருவர் முட்டி மோதிக் கொள்ளும் சொல்லாடல்களை சகிக்க முடியாமல் உள்ளது.

ஊடகங்களுக்கிடையில் போட்டித்தன்மை என்பது அவசியமானதாகும். அது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். 

அதைவிடுத்து ஒரு சில அறிவிப்பாளர்கள் தமது போட்டி வானொலி அறிவிப்பாளர்களை மோசமான முறையில் இரட்டை அர்த்தங்களுடன் திட்டித் தீர்ப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

சிலர் மற்றையவர்களின் தனிப்பட்ட தகவல்களைக் கூட பெயரைக் குறிப்பிடாமல் கூறுகிறார்கள். இது எந்த வகையில் நியாயம் என்பது எனக்குப் புலப்படவில்லை.

சமுதாயத்தை விழிப்புணர்வூட்டி காத்திரமான முறையில் கட்டியெழுப்பும் பணியை செய்ய வேண்டிய கடப்பாடு பொறுப்புள்ள ஊடகம் என்ற வகையில் வானொலிகளையும் சார்ந்திருக்கிறது.

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகத்தில் பிரதான வகிபாகத்தை கொண்டு இயங்கும் வானொலியில் பணியாற்றுபவர்கள் முறையற்ற விதத்தில் நடந்து கொள்ளக் கூடாது.

வானொலியொன்றின் பெண் அறிவிப்பாளர் ஒருவரது குரல் இப்படிச் சொல்கிறது - 

"கிளிகளைப் பற்றிக் கதைக்காதீர்கள், அதுவும் கலர் கலரான கிளிகளைப் பற்றி பேசவே வேணாம். அந்தக் கிளிகள் நாளைக்கு எங்கு பறக்குமோ, யார் வீட்டப் போகுமோ? யார் கண்டார்?"

மற்றுமொரு வானொலியொன்றின் ஆண் அறிவிப்பாளர் ஒருவர் இப்படிக் கூறுகிறார்-

"எல்லாரும் நிகழ்ச்சி செய்யலாம். ஆனா வித்தியாசமான நிகழ்ச்சி நம்மகிட்டதான் இருக்கு. கட கடனு ட்ரெய்ன் ஓடுற மாதிரி பேசினா யார்தான் கேட்பாங்க? அது நிலைக்காது - தம்பி இது உங்களுக்குத்தான் - நான் தம்பி னு சொன்னது யாருக்குனு தம்பிக்குப் புரிஞ்சா போதும்.

இதுமட்டுமல்ல இன்னும் நிறைய விடயங்கள் இருக்கின்றன. அவற்றை இங்கே எழுதுவதற்கு ஊடகத்துறை சார்ந்தவன் என்ற ரீதியில் வெட்கப்படுகிறேன்.

அறிவிப்பாளர்களுக்குள் தனிப்பட்ட ரீதியில் பிரச்சினை இருக்கலாம். அதற்காக ஒருவருக்கொருவர் பொதுவான இடத்தில் அதுவும் நேயர்களிடம் கேவலமாக திட்டித் தீர்த்துக் கொள்வது தீர்வைக் கொண்டு வருமா???

வானொலித் துறைக்குள் நுழைய வேண்டும் என்ற அவாவில் காத்திருக்கும் இளையோருக்கு நீங்கள் கற்றுக் கொடுக்கும் பாதை இதுதானா???

வானொலி அறிவிப்பாளர்கள் என்றால் தங்களுடைய ஹீரோக்கள் என்று நினைத்துப் பழகும் நேயர்கள் இன்னும் இருக்கிறார்கள். ஆனால் அதற்கு தாம் தகுதியுடையவர்கள் தானா என நான் மேற்சொன்ன அறிவிப்பாளர்கள் சிந்திக்க வேண்டும்.

(தற்போதைய நிலைவரப்படி - இன்று தாம் திட்டித் தீர்க்கும் அறிவிப்பாளர்கள் நாளை தங்களோடு இணைந்து நிகழ்ச்சி படைக்கவும் கூடும் அல்லது அவர்கள் பணியாற்றும் வானொலியில் இணையும் வாய்ப்பும் இருக்கிறது என்பதை மறக்கக் கூடாது.அதாவது இன்று உங்களுடைய எதிரி நாளை உங்களுக்கு நண்பராகலாம். அதேபோல் இன்று உங்களுடைய நண்பர் நாளை எதிரியாகலாம்.)

அண்மையில் நிகழ்ச்சியொன்றுக்கு சென்றிருந்தேன். அங்கு வானொலியொன்றின் அறிமுகம் குறித்த குறிப்பு ஒன்றில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.

//வானொலி நேயர்களின் ரசனையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப தமது நிகழ்ச்சிகளில் மாறுதல்களை ஏற்படுத்த அவை தவறியுள்ளன. இந்நிலையில் வானொலி நேயர்கள் மத்தியில் மாற்றத்துக்கான தேவை அதிகளவில் உணரப்படுகின்ற காலமே இது//

அப்படியாயின் இதுவரை காலமும் மாறுதல்களை ஏற்படுத்த சம்பந்தப்பட்டவர்களே தவறிவிட்டார்கள் என்றுதானே அர்த்தம்?

போட்டித் தன்மை இருக்கட்டும். அது ஆரோக்கியமான வானொலிச் சூழலை வளர்க்கட்டும். மாறாக கேவலமான வார்த்தைகளால் திட்டித் தீர்த்து கோபங்களை வெளிக்காட்டும் களமாக வானொலி நிகழ்ச்சிகளை மாற்றியமைக்காதீர்கள் என்பதே அன்பான வேண்டுகோள்.

நான் ஊடகவியலாளனாக அன்றி சாதாரண பொதுமகனாகவே எனது கருத்துக்களை முன்வைத்திருக்கிறேன். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் இது எழுதப்பட்டதல்ல என்பதை பணிவுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
-இராமானுஜம் நிர்ஷன்

Tuesday, April 23, 2013

நியாயத்தை ஆட்டிப்படைக்கிறதா அதிகாரம்?


ஓர் ஊடகவியலாளனாக அன்றி சாதாரண பொதுமகனாக ஆதங்கம் நிறைந்தவனாய் எழுதுகிறேன்.

கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏப்ரல் 21 ஆம் திகதி மலையக தொழிற்சங்க கூட்டமைப்பினர் கொட்டகலையில் ஆர்ப்பாட்டம் நடத்தத் தீர்மானித்திருந்தனர்.
அவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தத் தயாரானபோது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்கள் அவ்விடத்துக்கு வந்து குழப்பம் விளைவித்தனர் என்பது செய்தி.
ஆம்! மலையக தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படைச் சம்பள அதிகரிப்பு போதுமானது அல்ல என்பது வெட்டவெளிச்சமானதாகும். இரண்டு வருடங்களுக்கு வெறும் 70 ரூபா (நாளொன்றுக்கு)அதிகரிப்பில் அவர்களால் என்ன செய்துவிட முடியும்?

இந்த இரண்டு வருடங்களுக்குள் எரிபொருளோ, மின்கட்டணமோ, போக்குவரத்துச் செலவோ, இதர அத்தியாவசிய செலவுகளோ அதிகரிக்க மாட்டாது என்பதை ஒப்பந்தக்காரர்களால் நிச்சயித்துக் கூறமுடியுமா?
ஐந்து பேர் உள்ள குடும்பம் ஒன்றுக்கு இந்த அதிகரிப்பு போதுமானது என கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கத் தலைவர்கள் தீர்மானித்தமையை எண்ணி தலைமைகளை உருவாக்கியவர்கள் என்ற வகையில் மலையகம் வெட்கம் கொள்கிறது.
அதிகரிக்கப்பட்டுள்ள சம்பளத்தை மக்கள் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறார்கள் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மார்தட்டிக்கொள்கிறது. ஆனால் மக்களோடு மக்களாக இருந்து பார்த்தவன் என்ற வகையில் அவர்களின் வேதனையை வரிகளுக்குள் அடக்கிவிட முடியாது.
இதைத் தட்டிக்கேட்க திராணியற்றவர்களாக தொழிலாளர்கள் மனதுக்குள் குமுறி அல்லல் படுகிறார்கள் என்பதே யதார்த்தமான உண்மை.
அவர்கள் ஆரம்பம் முதலே அடக்கியாளப்பட்டவர்கள். ஆதலால் கூச்ச சுபாவம் அவர்களைத் தட்டிக்கேட்க விடுவதில்லை என்பது ஒருபுறமிருக்க நியாயமான சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுக்க வேண்டியது மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களின் கடமையல்லவா?

சரி… ஆகட்டும்.

நிலைமை இப்படியிருக்கையில் கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிரான போராட்டத்தை அமைச்சர் ஆறுமுகனின் கோட்டையாகக் கருதப்படும் கொட்டகலையில் நடத்துவதற்கு எதிர்ப்புக் கூட்டணி தீர்மானித்து அதற்கான திகதியை முன்னரே அறிவித்திருந்தது.
எனினும் அன்றைய தினத்தில் அதே இடத்தில் கூட்டு ஒப்பந்தத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக இ.தொ.கா. அறிவிக்கவில்லை.
மக்களாகவே சந்தோசத்தை வெளிப்படுத்துவதற்காக கூடினார்கள் என இ.தொ.கா. கூறினாலும் தலைமைத்துவம் வழங்கப்படாமல் மக்கள் கூடினார்கள் என்பதை நியாயப்படுத்த முடியுமா?

எந்தவொரு முன்னறிவித்தலும் இன்றி கூடிய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பொலிஸார் ஆதரவு வழங்கியதன் பின்னணி என்ன?

கூட்டு ஒப்பந்தத்தில் நியாயமான சம்பள உயர்வு கிடைத்ததற்காக ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள் என்றால் அதை ஏன் ஒப்பந்தம் கைச்சாத்திட்ட மறுநாளோ அல்லது ஒரு வாரத்திற்குள்ளோ நடத்தியிருக்கக் கூடாது?

ஆர்ப்பாட்டக்காரர்களில் பெரும்பாலானோர் அதிக மதுபோதையில் இருந்துள்ளார்கள். அவர்கள் சொந்தக் காசில் தான் மதுபானம் வாங்கி அருந்திவிட்டு ஆர்ப்பாட்டத்துக்கு வந்தார்களா?
அங்கு கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன், அம்பகமுவ பிரதேச சபை முன்னாள் தலைவர் நகுலேஸ்வரன், நுவரெலிய பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சக்திவேல், மத்திய மாகாண சபை உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் இருந்ததாக பொதுமக்கள் தகவல் வழங்கினார்கள். இவர்கள்தான் ஆர்ப்பாட்டக்காரர்களை வழிநடத்தியதாகவும் சிலர் கூறினார்கள்.
"ஆறுமுகனின் கோட்டைக்குள் எந்த நாயும் வரக் கூடாது. வரவும் விடமாட்டோம்" என அதிகாரத் தொனியில் இந்த மக்கள் பிரதிநிதிகள் அங்கு பேசினார்கள்.




அவ்வாறெனின் இவர்களுக்கும் இ.தொ.கா.வுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தலைமைபீடத்தால் கூற முடியுமா?
ஆக, நியாயத்தை அதிகாரம் ஆட்டிப்படைக்கிறதா? என மக்கள் கேட்கிறார்கள். அமைச்சர் ஆறுமுகரே என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?

அரசியல் தலைமை என்பது மக்கள் சேவை என்பதில் மாத்திரம் வரையறுத்துக்கொள்ளாது ஒட்டுமொத்த சமூகத்துக்கும் உதாரணமாக செயற்பட வேண்டியது அவசியமாகும். அப்படி ஒரு தலைமைத்துவத்தை மலையகம் எதிர்பார்க்கிறது.
தொழிலாளர்கள் அப்பாவிகள் என்பதால் சில சந்தர்ப்பங்களில் எதைச் சொன்னாலும் ஏற்றுக்கொள்கிறார்கள். அதற்காக கொட்டகலையில் கொம்பு முளைத்த வெள்ளைக் காகம் நான்கு கால்களுடன் பறக்கிறது பாருங்கள் எனச் சொன்னால் யார்தான் ஏற்றுக்கொள்வார்கள்?
கொட்டகலையில் மலையக தொழிற்சங்க கூட்டமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தை குழப்புவதற்காக வேறொரு ஆர்ப்பாட்டம் திட்டமிட்டு செயற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கும் தொடர்பில்லை என்று அறிக்கை விட்டுக்கொள்ளலாம்.

ஆனால் அமைச்சர் ஆறுமுகனின் கோட்டையில் அவருக்குத் தெரியாமல் எதுவும் நடந்திருக்க வாய்ப்பில்லை என்பதும் வெளிப்படையே.
-இராமானுஜம் நிர்ஷன்