Sunday, October 24, 2021

Digital மோசடி - நிர்ஷன் இராமானுஜம்
“மிகப்பெரியதொரு தொகை கிடைக்கப்போகிறது என்ற நம்பிக்கையில் மனைவியின் நகைகளை அடகுவைத்து பணம் அனுப்பினேன். ஆயினும் ஏமாற்றம் மட்டுமே எஞ்சியது”. –இணையத்தள ஏமாற்றுப்பேர்வழியிடம் பணத்தை தொலைத்த நவீன் கண்ணீருடன் கூறிய வார்த்தைகள் இவை.

நவீன், தனியார் நிறுவனத்தில் உயர்ந்த பதவி வகிப்பவர். வட்ஸ்அப் இல் ஆசைவார்த்தைகாட்டி ஒரு நயவஞ்சகனால் ஏமாற்றப்பட்டிருக்கிறார். அவருக்கு நேர்ந்தவற்றை இப்படிப் பகிர்ந்துகொள்கிறார்.

“ஆறு மாதங்களுக்கு முன்னர் வட்ஸ்அப் இல் எனக்கு ஒருவரிடமிருந்து மெசேஜ் வந்தது. வெறும் Hi மட்டுந்தான், பதிலுக்கு நானும் ர்i என மெசேஜ் பண்ணினேன்.

அவரை கேன் என அறிமுகப்படுத்திக்கொண்டார். அவர் யாரென எனக்குத் தெரியாது. ஆனாலும் Hi என்று ஆரம்பித்த எமது உரையாடல் நீண்ட நாட்களாக தொடர்ந்தது. நானும் எனது மனைவியும் அம்மாவும் ஒரு வீட்டில் வசிக்கிறோம். எனது குடும்பம் பற்றியும் எனது தொழில் பற்றியும் அந்த நபருடன் உரையாடியபோது தெரிவித்தேன். அதேபோல அவர் தபுதாரன் என்றும் பெண் குழந்தையுடன் லண்டனில் தனிமையாக வசிப்பதாகவும் என்னிடம் கூறினார்.

கொரோனா காலம், வாழ்க்கை, எதிர்கொள்ளும் பிரச்சினைகள், காதலித்த தருணங்கள் இப்படி எல்லாவற்றையும்மெசேஜ் ஊடாகவே பேசினோம். முகம் பார்த்துக்கொள்ளவில்லையெனினும், அவரது அன்பான உரையாடலுக்கு நான் அடிமையாகிப் போனேன்.

இப்படியே நாட்கள் நகர்ந்தபோது, எனக்கொரு சப்ரைஸ் தருவதாக அவர் கூறினார்.

அவர் சேமித்துவைத்த பணமும் சில பரிசுப் பொருட்களும் எனக்காக அனுப்பிவைப்பதாக என்னிடம் கூறினார். எனக்கு அளவில்லா மகிழ்ச்சி. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு இப்படியான தருணங்கள் மிக அரிதானவை. அவர் அப்படிக்கூறியபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

ஐபோன் ஒன்று, மனைவிக்கு தங்கச்சங்கிலி, கைப்பைகள் என எனக்காக அவர் வாங்கிய பொருட்களின் படங்களை அனுப்பினார். அதுமாத்திரமல்ல, 45 ஆயிரம் அமெரிக்க டொலர் பணம் அனுப்புவதாகவும் உறுதியளித்தார்.

இத்தனைநாள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் தீரப்போகின்றன. எனக்கென வீடொன்றைக் கட்டிக்கொண்டு மனைவிக்குப் பிடித்தமான வாகனமொன்றை வாங்க வேண்டும். ஏதாவது வியாபாரம் ஒன்றை ஆரம்பித்து வாழ்க்கையை கொண்டுசெல்ல வேண்டுமென எண்ணினேன்.

எமது வட்ஸ்அப் உரையாடல் தொடர்ந்தது. அவரிடம் மேலும் நெருக்கமாக கதைக்கத்தொடங்கினேன். எனது நண்பர்களிடமும் இதுபற்றிக் கூறினேன்.

எனக்கு அனுப்புவதற்காக அவர் தயார்படுத்திய பொருட்களின் படங்களை அனுப்பினார். அதற்கென கொரியர் சேவைக்கு அவர் பாரப்படுத்தியமைக்கான பற்றுச்சீட்டையும் அனுப்பினார்.

நான் ஏமாறப்போகிறேன் என்பதை அப்போதும் நான் அறிந்திருக்கவில்லை.

கொரியர் சேவைக்கு 70 ஆயிரம் பணம் செலுத்த வேண்டும். அதனைச் செலுத்தி பொருட்களை பெற்றுக்கொள்ளுங்கள் என கேன் என்னிடம் சொன்னார். கொரியர் சேவை நிறுவனத்தின் கணக்கு இலக்கங்களையும் மெசேஜ் பண்ணியிருந்தார்.

மிகப்பெரியதொரு தொகை கிடைக்கப்போகிறது என்ற நம்பிக்கையில் மனைவியின் நகைகளை அடகுவைத்து பணம் அனுப்பினேன். இரண்டு நாட்கள் அவரிடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

மூன்றாவது நாள் அவரிடமிருந்து மெசேஜ் வந்தது. ‘நான் அனுப்பிய பைக்குள் பணம் இருப்பதை கொரியர்காரர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள். நான் அவர்களுடன் பேசி ஒரு செட்டில்மன்ட்டுக்கு வந்துவிட்டேன். இன்னும் 90 ஆயிரம் பணம் அனுப்புங்கள். அதன் பின்னர் பொதி உங்களை வந்துசேரும்’ என எனக்குச் சொன்னார்.

எனக்கு 45 ஆயிரம் டொலர்கள் கிடைக்கப்போகின்றனவே? நண்பர்களிடம் கடன்வாங்கி அனுப்புவோம் என என் உள்மனது சொன்னது.

அவ்வாறே கடன்வாங்கி 90 ஆயிரம் ரூபா பணம் அனுப்பினேன்.

அவ்வளவுதான். எங்கள் உறவு அத்தோடு முற்றுப்பெற்றது. வட்ஸ்அப் இல் அவர் என்னை ப்ளொக் செய்திருந்தார்.

நான் உடைந்துபோனேன். எத்தனைபெரிய நம்பிக்கை துரோகம் இது?

அன்பாக பழகி, ஆசைவார்த்தைகாட்டி இப்படிச் செய்துவிட்டானே என ஆதங்கப்பட்டேன். எல்லாவற்றுக்கும் மேலாக என்னையே நான் நொந்துகொண்டேன். யாரென்று தெரியாத ஒருவரிடம் நட்பு பாராட்டி, நம்பி இன்று பணத்தை இழந்திருக்கிறேன் என்பதை நினைக்கும்போதே மனம் ரணம்கொள்வதை வார்த்தைகளால் விபரிக்க முடியாமற்போகிறது”

இப்படிச் சொல்லி முடிக்கிறார் நவீன்.

இதுவொரு சூட்சுமமான கொள்ளை. நவீன உலகம் நல்லவற்றுக்குப்போல தீயவற்றுக்கும் களம் வழங்கியிருக்கிறது. யார்? எந்த உருவத்தில்? எப்படி ஏமாற்றுவார்கள்? என்பதை பெரும்பாலும் நாம் அறிந்திருப்பதில்லை.

நவீனைப்போல இன்னும் பலர் இவ்வாறு ஏமாற்றமடைந்திருக்கிறார்கள்.

இது பற்றி பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் வினவினோம். அவர்களிடமிருந்து கிடைத்த பதில் மேலும் ஆச்சரியத்தை தந்தது.

இப்படி ஏமாற்றமடைந்தவர்கள் நாளாந்தம் பொலிஸில் முறைப்பாடு செய்கிறார்கள். பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது தான் இதனைத் தடுப்பதற்கான முதல்கட்ட செயற்பாடு என குற்றப் புலனாய்வுப் பிரிவினர்கள் தெரிவிக்கிறார்கள்.

பொலிஸார் எமக்களித்த தகவல்களின் பிரகாரம், இவ்வாறு ஏமாற்றுபவர்கள் பெரும்பாலும் நைஜீரியர்கள். உயிரிழந்த நபர்கள், கைத்தொலைபேசியை தொலைத்தவர்கள் என பலருடைய பெயர்களில் மொபைல் இலக்கங்களைப் பெற்றுக்கொண்டு இவ்வாறு ஏமாற்று நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.


இவர்களைத் தேடுவது மிகச் சிரமமானது. எந்த நாட்டிலிருந்து செயற்படுகிறார்கள்? எத்தனைபேர் இயங்குகிறார்கள் என்பதை கண்டறிவதெல்லாம் இலகுவான காரியமல்ல.

இலங்கையில் இவ்வாறு ஏமாற்றமடைந்து பணத்தை, சொத்துகளை இழந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அரசியல் பெரும்புள்ளிகள், பிரபலமான வர்த்தகர்களும் இந்தப் பட்டியலில் உள்ளடங்குகிறார்கள்.

இராணுவ உயரதிகாரியொருவர் 8 கோடி ரூபா பணத்தை இவ்வாறு இழந்திருக்கிறார். இன்னும் ஏராளமான முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏமாற்றுக்காரர்கள் எந்த வடிவத்திலும் வரலாம். இணையத்தளத்தின் ஊடாக குற்றங்கள் இடம்பெறுகின்றபோது அதனை உடனடியாக கண்டுபிடிப்பதில் ஏராளமான சிக்கல்கள் உண்டு. ஆதலால் நாம் விழிப்பாக இருப்பதே இவ்வாறானவர்களிடமிருந்து எம்மை பாதுகாத்துக்கொள்வதற்கான வழி.

அன்பான வார்த்தைகள் பரிமாறுவதில் ஏமாற்றுக்காரர்கள் கைதேர்ந்தவர்கள்.

அவர்களுக்கு தேவையானது பணம் என்ற ஒன்றுமட்டுந்தான். அதற்காக எந்த எல்லையையும் தொடுவதற்கு அவர்கள் தயாராக இருப்பார்கள்.

அவதானம்!

(இவ்வாறானசம்பவங்கள்,உரையாடல்கள் இடம்பெற்றிருந்தால் 119, 011 2444480, 011 2444483 ஆகிய இலக்கங்களை தொடர்புகொண்டு பொலிஸாருக்கு அறிவியுங்கள்) 

-நிர்ஷன் இராமானுஜம்-
நன்றி தமிழன் 24.10.2021