இன்னுமா சுயபுத்தி இல்லாமலிருக்கிறது?


பொம்மைகளைப் போல தலையாட்டி மக்களை ஏமாற்றிவரும் மலையக அரசியல்வாதிகள் சிலரின் கபட நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக மலையக இளைஞர் யுவதிகள் அரசியல்வாதிகளுக்கு வால்பிடிக்கும் வெட்கங்கெட்ட வேலையைச்செய்துவருவது எந்தவிதத்தில் நியாயம் என்று தெரியவில்லை।


அண்மையில் இலங்கை அரசாங்கத்தினால் புலிப்பயங்கரவாதிகளை தேடுதல் என்ற கருப்பொருளில் அப்பாவி தமிழ்மக்களை வகைதொகையின்றி கைது செய்து ஆட்டு மந்தைகளைப் போல பஸ் வண்டிகளில் ஏற்றி அழைத்துச்சென்றனர்। குறிப்பாக பெண்கள் தாம் உடுத்தியிருந்த உடையுடன் பலரதும் காமப்பார்வைக்கு உள்ளாகி அடிபட்ட நாய்களைப்போல இராணுவ பஸ்ஸில் உட்கார்ந்திருந்ததை நான் பார்த்தேன்।


இந்நிலையில் குறிப்பிட்ட ஒரு தொகுதியினர் நேற்று வியாழக்கிமை விடுவிக்கப்பட்டனர்। விடுவிக்க்பபட்ட மலையகப் பெண்ணொருவர் இலங்கை தொலைக்காட்சியொன்றுக்கு இப்படி தகவல் தந்தார்।


'உண்மய சொன்னா எங்களுக்கு அங்க (பூசா சிறை) ஒரு பிரச்சினையும் இருக்கல। நல்லா கவனிச்சிக்கிட்டாங்க। ஒரு கேள்வியும் கேட்கல। நாங்க எல்லாரும் சந்தோஷமா இருந்தோம்। அதனால ஒரு பயமும் இருக்கல' என்றார்।


என்னைப்பொருத்தவரையில் இந்தப் பெண் உயிருள்ள ஜடம்। இவ்வாறு இனத்துவேச விஷமிகளுக்கு சாதகமாக கதைக்கும் இவர்களைப் போன்றவர்கள் ஏன் விடுவிக்கப்படவேண்டும்। சிறைவாசம் தான் சுதந்திரமே। அரசியல்வாதிகள் எவ்வளவுதான் மக்கள் தலையில் மிளகாய் அரைத்தாலும் அந்த மிளகாயை எடுத்து தன் கண்ணில் தானே பூசிக்கொள்ளும் அறிவிலிகளும் இருக்கிறார்கள்।


இவர் இப்படிக்கூறுகிறார் என்றால் இந்தக் கேவலத்தை இன்னும் அனுபவிக்க ஆவலாய் இருக்கிறார் என்றே அர்த்தம்। பட்டபின்னுமா புத்தி பேதலிக்கிறது?

மந்தைகளாக்கப்படும் இலங்கைத் தமிழர்களும் தமிழகத்தின் தொடர்மெளனமும் !


கொழும்பு நகரிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கைது செய்யப்பட்டு இவர்களில் பல நூற்றுக்கணக்கானோர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அண்மைக்காலங்களில் என்றுமில்லாதளவுக்கு கொழும்பின் அனைத்துப் பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான படையினரும் பொலிஸாரும் இணைந்து நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் நேற்று மாலை வரை இந்தத் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.
இதன் போது கொழும்பு மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் வத்தளை மற்றும் நீர்கொழும்பு பகுதிகளிலும் 3000 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலி பூஸா முகாம் கடந்த இரு நாட்களில் தமிழர்களால் முற்றாக நிறைந்து விட்டதால் நேற்று முழுநாளும் கைது செய்யப்பட்டவர்களில் பெருமளவானோர் தெற்கில் களுத்துறைச் சிறைக்கும் கொழும்பிலுள்ள ஏனைய சிறைச்சாலைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர்.
கொழும்பு நகரிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் நேற்றுக்காலை வீதிகளில் இறங்கியவர்கள் அனைவரும் ஏதோவொரு பகுதியில் படையினரின் தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் அனைத்து நுழைவாயில்களிலும் அதிகாலை முதல் பிற்பகல் வரை அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டு அவற்றில் வந்தவர்கள் ஒருவர் விடாது பலத்த சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.
இதனால் நேற்று அதிகாலை முதல் பிற்பகல் வரை கொழும்பு நகரில் நுழைவாயில் பகுதிகள் ஒவ்வொன்றிலும் பல மைல் தூரத்திற்கு வாகனங்கள் பல மணிநேரம் வரிசையாகக் காத்திருந்தன.
கொழும்பு நகருக்குள் பிரவேசித்த தமிழர்கள் அனைவரும் தீவிர சோதனைக்குட்படுத்தப்பட்டதுடன் அவர்களில் பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டு, படையினர் அந்தந்தப் பகுதிகளில் நிறுத்திவைத்திருந்த பஸ்களில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் போது பெற்றோரும் உறவினர்களும் பொலிஸ் நிலையங்களுக்கு படையெடுத்ததால், நேற்று முழுவதும் கைது செய்யப்பட்டவர்கள் மறைவான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின் பலர் சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்பட்டனர்.
கொழும்பின் மேற்குப் பகுதியில் பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி, வெள்ளவத்தைப் பகுதிகளில் வீடுகள், வீதிகளில் கைது செய்யப்பட்ட நானூறுக்கும் மேற்பட்டோர் ஐந்துக்கும் மேற்பட்ட பஸ்களில் ஏற்றப்பட்டு கொள்ளுப்பிட்டி சென்.மைக்கல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு நண்பகல் வரை விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின் பெரும்பாலானோர் சிறைச்சாலைகளுக்கும் தடுப்பு முகாம்களுக்கும் அனுப்பப்பட்டனர்.
ஆண், பெண் வேறுபாடின்றியும் வயது வேறுபாடின்றியும் தமிழர்கள் என்ற காரணத்திற்காக நூற்றுக்கணக்கானோர் இப்பகுதிகளில் கைது செய்யப்பட்டனர்.
நேற்று மாலை வெள்ளவத்தை ஈ.எஸ்.பெர்னாண்டோ மாவத்தையிலுள்ள சிங்களப் பாடசாலை ஒன்றுக்குள் 300 க்கும் மேற்பட்ட தமிழர்கள் மிக நீண்டநேரம் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களை விடுவித்துச் செல்வதற்காக பெற்றோரும் உறவினர்களும் மணித்தியாலக் கணக்கில் காத்திருந்தனர்.
இதேநேரம், கொழும்பு பாலத்துறை (தொட்டலங்கா) பகுதியிலும் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த சோதனை நிலையமூடாக கொழும்பு நகருக்குள் நுழைய ஆயிரக்கணக்கான வாகனங்கள் நேற்றுக் காலையிலிருந்து ஐந்து மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்தன.
இதனால், கொழும்பு - நீர்கொழும்பு வீதியல் பல மைல் தூரத்திற்கு வாகனநெரிசல் ஏற்பட்டு பல மணிநேரம் போக்குவரத்துத் தடையுமேற்பட்டது.
கொழும்பு நகருக்குள் வரும் நுழைவாயில்களிலெல்லாம் இவ்வாறு தீவிர சோதனைகளும் கைதுகளும் நடைபெற்றுக் கெண்டிருந்தபோது, கொழும்பு நகருக்குள் கொழும்பு-1 முதல் கொழும்பு-15 வரையான அனைத்துப் பகுதிகளிலும் முப்படையினரும் பொலிஸாரும் இணைந்து தீவிர தேடுதல்களையும் சோதனைகளையும் மேற்கொண்டனர். இதன் போதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பஸ்களில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர்.
கொழும்பு நகருக்குள் இந்தத் தேடுதல்களும் சோதனைகளும் நடைபெற்றுக் கொண்டிருந்த போது நகருக்கு வெளியே வத்தளை, ஹெந்தளை, மாபொல, தெஹிவளை, கல்கிசை பகுதிகளிலும் பலத்த தேடுதல்களும் சோதனைகளும் நடைபெற்றன.
காலை, மாலையெனப் பாராது மட்டக்குளி, முகத்துவாரம், அளுத்மாவத்தை, கொட்டாஞ்சேனை, கொஞ்சிக்கடை, கோட்டை, புறக்கோட்டை பகுதிகளிலும் பலத்த தேடுதல்களும் சோதனைகளும் நடத்தப்பட்டன.
கோட்டை ரயில் நிலையம், புறக்கோட்டை பஸ்நிலையம், குணசிங்கபுர தனியார் பஸ் நிலையத்திலும் முப்படையினரும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பாதுகாப்பு அமைச்சின் விஷேட உத்தரவின் பேரிலேயே இந்தத் தேடுதல்களும் சோதனைகளும் கைதுகளும் இடம்பெறுவதாக படைத்தரப்பு தெரிவித்தது.
கிழமை நாட்களில் வெளியிடங்களிலிருந்து பெரும்பாலும் சிங்கள மக்களே கொழும்பு நகருக்குள் வருவர். ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் கொழும்பு நகரில் பெரும்பாலும் தமிழ் பேசும் மக்களே இருப்பதால் நேற்று இந்தத் தேடுதல்களும் கைதுகளும் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
நேற்று மட்டும் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவித்தன. பல்லாயிரக்கணக்கானோர் தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இந்தத் தேடுதல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது நீர்கொழும்பு நகரிலும் நேற்றுக் காலை தேடுதல்களும் சோதனைகளும் இடம்பெற்றன.
இங்கு மட்டும் முந்நூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கைது செய்யப்பட்டு பல லொறிகளில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்தத் தேடுதல்கள் மற்றும் கைதுகளுக்கு அஞ்சி நேற்று கொழும்பு நகரில் பெரும்பாலான மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை। வந்தவர்கள் பல இடங்களில் மறிக்கப்பட்டு பலத்த விசாரணைக்குட்படுத்தப்பட்டனர்।கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டவர்களால் சிறைக் கூடங்கள் நிரம்பி வழிவதாகத் தெரிவிக்கப்படுகிறது। கைது செய்யப்பட்டவர்களில் வடக்கு கிழக்கு தமிழர்கள் பெரும் சித்திரவதைகளுக்கும் அவசியமற்ற கேள்விகளுக்கும் உள்ளாக்கப்படுவதை யாரால் தடுக்க முடியும்?. தமிழர்கள் தொடர்பாக அக்கறை செலுத்துவதாக கூறும் கலைஞர் கருணாநிதி இந்த விடயத்தில் மட்டும் மெளனம் காப்பது ஏன்? .

என்னதான் நடந்தாலும் இவ்வாறான விடயங்கள் குறித்து கருணாநிதி மெளனம் சாதிப்பது கவலைக்குரியதாகவே உள்ளது।

செய்தி: மாணவி மீது கத்திக்குத்து!

தொழில்நுட்பப் பயிற்சி வகுப்புக்கு சென்று திரும்பிய மாணவி ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி ஆபத்தான நிலையில் பதுளை வைத்தியசாலை அதிவிசேட சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்।இச்சம்பவம் நேற்று முன்தினம் மாலை லுணுகலையிலுள்ள அடாவத்தை தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.இந்தத் தோட்டத்தைச் சேர்ந்த சிவநாதன் பவானி (வயது 20) என்பவரே கத்திக்குத்துக்கு இலக்கானவராவார்.இச்சம்பவம் தொடர்பாக லுணுகலைப் பகுதியைச் சேர்ந்த யப்பாமை அரச பாடசாலையின் காவலாளியான சுந்தரம் விநாயகமூர்த்தி என்பவரை, அப்பகுதி மக்கள் பிடித்து, லுணுகலைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.லுணுகலைப் பொலிஸ் பிரிவிலுள்ள இச் சந்தேக நபருக்கும், கத்திக்குத்திற்கிலாக்கான மாணவிக்குமிடேயே ஏற்கனவே கருத்து முரண்பாடுகள் இருந்துவந்தன எனவும், இதையடுத்து இச் சந்தேகநபர் தொழில்நுட்பப் பயிற்சி வகுப்பிற்கு அம்மாணவியை செல்லவேண்டாமென்று தடை விதித்தார் எனவும், இத் தடையை மீறி அம் மாணவி வகுப்பிற்குச் சென்று திரும்பியபோதே, இம் மாணவி கத்திக்குத்திற்கு இலக்கானார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள இந்த மாணவியின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது எனவும் இந்த மாணவியின் உடம்பில் நான்கு பெரிய கத்திக்குத்து காயங்கள் உள்ளன எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

வெளிச்சம் தராத தீபங்கள்

இலங்கையின் மலையகப்பகுதிகளில் இம்முறை தீபாவளி வெறும் மெளனச் சடங்காகவே ஆகியிருந்தது। நாளுக்கு நாள் அதிகரித்துச்செல்லும் பொருட்களின் விலை மற்றும் பொருளாதாரச்சுமைகளில் தீபாவளியும் தேவையில்லை ஒன்றும் தேவையில்லை என்பது போலத்தான் மக்கள் சந்தோசங்களைத் தொலைத்து வெளிப்படுத்த முடியாத ஆதங்கங்களுடன் தீபாவளி நாளை நகர்த்தினர்।

தேங்காய் ஒன்றும் அரிசி ஒரு கிலோவும் தேங்காயெண்ணெய் அரை லீற்றரும் வாங்கினால் தொழிலாளர்களில் ஒருநாள் சம்பளம் தீர்ந்துவிடுகிறது। இந்நிலையில் எப்படி தீபாவளியைக் கொண்டாடுவது? கொடுமை அரக்கனை கொன்றொழித்த நாளான தீபாவளியில் கொடியவர்கள் தான் இன்பம் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்। கடவுள் நின்று கொல்லும் என்பதும் பொய்யாகவே தெரிகிறது என்கிறார்கள் மலையகத் தொழிலாளர்கள்।

காலம் பதில்சொல்லுமா?

இது அமைச்சர் சொன்னதுப்பா!


இலங்கை மலையகத்தின் கட்சியொன்றிலிருந்து பிரிந்துசென்று அமைச்சுப்பொறுப்பை ஏற்றுக்கொண்டு புதிய தொழிற்சங்கமொன்றையும் ஆரம்பித்துள்ள அமைச்சர் ஒருவர் அண்மையில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றினார்। அவரது உரையிலுள்ள சில முக்கிய தகவல்களை மக்கள்(அவர்) அறிந்துகொள்ள வேண்டியவற்றை தருகிறேன்।


*எமது சமூகத் தலைவர்கள் மத்தியில் போட்டி, பொறாமை, பிரிவினைகள் தலைதூக்கியுள்ளன।இந்நிலை மாறவேண்டும்। எம்மிடையே ஒன்றுபட்ட சக்தி வலிமைபெறவேண்டும்.

* எம்மவர் மத்தியில் காட்டிக்கொடுப்புகள், பழிவாங்கல்கள், போட்டி, பொறாமைகள் தொடர்கின்றன. இத்தகைய செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் .

* தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் ஏனைய பிரச்சினைகளுக்கும் பாரம்பரிய நிலையை விட்டு நவீன முறையில் தீர்வினை ஏற்படுத்துவேன்।

* தோட்டத் தொழிலாளர் பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டிருப்பதற்கு நான் இடமளியேன்। அவர்களின் பிரச்சினைகள் உடனுக்குடன் தீர்க்கப்படல்வேண்டும்.

* அன்று தொட்டிருந்து எமது தலைமைகள் செய்த தவறுகளினாலேயே எமது நிலையில் மாற்றங்களைக்காண முடியவில்லை। இன்னும் அந்த நிலை தொடர்ந்த வண்ணமாகவேயுள்ளது. தனக்கு இருகண் போனால் பரவாயில்லை. மற்றவனுக்கு ஒரு கண்ணாவது போகவேண்டு மென்ற நிலையிலேயே எமது தலைமைகள் உள்ளன.

* எமது சமூகத்திற்கு எதிரி வெளியிலிருந்து வரத் தேவையில்லை। நமக்கு நாமே எதிரிகளாக இருந்து வருகின்றோம்.


நல்ல விடயங்களைத்தான் ஐயா கூறியிருக்கிறீர்கள்। இவற்றில் சில விடயங்களை நீங்கள் கண்ணாடி முன் நின்று கூறிப்பார்க்கவும் மறந்துவிட வேண்டாம்। தலைமை தவறு செய்வதாக ஒப்புக்கொள்கிறீர்களானால் நீங்களும் தவறுசெய்கிறீர்கள் என்பதை மறக்கவேண்டாம்.

அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் அவர்களை நன்றியுடன் நினைவுகூருகிறோம்..!


இந்திய மண்ணில் பிறந்து இந்திய வமிசாவளி மக்களான மலையகத் தமிழர்களுக்கு தம்மால் இயன்றவரை சேவைகள் செய்துள்ள அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் எட்டாவது ஆண்டு நினைவுதினம் இன்றாகும்। தொழிலாளர் வர்க்கத்துக்குரிய உரிமைகளை போராட்டத்தின் மூலமாகவும் தன்னார்வமிக்க தொண்டின் மூலமாகவும் பெற்றுக்கொடுக்க முனைந்து பலசவால்களைச் சந்தித்து பல சமூகப்பணிகளை மக்களுக்காக செய்த மக்கள் தொண்டரை நன்றியுடன் நினைவுகூருகிறோம்।

வலைப்பயணர்கள் அறிந்துகொள்வதற்காகவும் பொதுமக்களின் தகவலுக்காகவும் அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை நான் அறிந்தவரையில் திரட்டித்தருகிறேன்।
ஆரம்பவாழ்க்கை
சௌமியமூர்த்தி தொண்டமான் (ஆகஸ்ட் ३०- 1913 - அக்டோபர் ३०- 1999) இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களது முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராவார்। 86 வது வயதில் இவர் இறக்கும் போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவராகவும் இலங்கை அரசின் அமைச்சரவையில் வயது கூடிய அமைச்சராகவும் காணப்பட்டார். இவர் தொடர்ந்து 21 வருடங்கள் இலங்கை பாராளுமன்றில் அமைச்சராகப் பதவி வகித்தார்.

ஆரம்ப வாழ்க்கைதொண்டமானின் தந்தையார் இந்தியாவின் புதுக்கோட்டை பகுதியில் இருந்த அரச பரம்பரை வழி வந்தவராவார்। இவர் முன்ன புத்தூர் என்ற கிராமத்தில் வசித்து வந்தார்। எனினும் அவரது தந்தையின் காலத்தில் அவர்களது குடும்பம் ஏழ்மையில் வாடியது। இதனால் கருப்பையா இலங்கையில் கோப்பி தோட்டத்துக்கு வேலை செய்ய சென்றவர்களுடன் கூடஇ இலங்கை சென்று அங்கு வேலை செய்து செல்வம் சேர்த்தார். பின்னர் இந்தியா திரும்பிய அவர் தமது கிராமத்தில் சீதாம்மை என்பரை 1903 இல் திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு பிறந்த முதல் பெண் குழந்தை சிறிது காலத்தில் இறந்து போனது. மறுபடி இலங்கை திரும்பிய கருப்பையா இலங்கையில் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள வெவண்டன் என்னும் தேயிலை தோட்டத்தை விலைக்கு வாங்கினார். ஒருவருடத்துக்கு பிறகு இந்தியா திரும்பிய கருப்பையாவுக்கு மூன்று பெண் குழந்தைகளுக்கு பிறகு ஐந்தாவது குழந்தையாக சௌமியமூர்த்தி 1913 அக்டோபர் 30 இல் பிறந்தார்.

சௌமியமூர்த்தியின் பிறப்புக்கு பின்னர் உடனடியாக இலங்கை திரும்பிய கருப்பையா சௌமியமூர்த்தியின் ஏழாவது வயதில் தமது கிராமத்துக்கு திரும்பினார் அவ்வேளையில் தமது தந்தையாருடன் நெருங்கிய தொடர்பை வளர்த்துக் கொண்டார்। இலங்கை திரும்பிய கருப்பையா நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சௌமியமூர்த்தியை இலங்கைக்கு தம்முடன் அழைத்துக் கொண்டார். 1924 ஆம் ஆண்டு தமது 11வது அகவையில் இலங்கை வந்த சௌமியமூர்த்தி தமது 14வது அகவை தொடக்கம் கம்பளை புனித அந்திரேயர் கல்லூரியில் சேர்ந்து தமது கல்வி கற்றார்.

1927இல் கம்பளை புனித அந்திரேய கல்லூரியில் சௌமியமூர்த்தி இணைந்த அதே வருடத்தில்இ மகாத்மா காந்தி இலங்கை வந்திருந்தார்। அவரில் உரைகளால் சௌமியமூர்த்தி மிகவும் கவரப்பட்டார். முக்கியமாக காந்தி தமது கண்டி உரையில் தோட்ட உரிமையாளர்கள் தங்களது தோட்டங்களில் வேலை செய்யும் பணியாளர் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி அவர்களது தேவைகளை கவனிக்குமாறு கேட்டுக் கொண்டமையானது சௌமியமூர்த்தியின் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்திய விடுதலை இயக்கத்தில் சௌமியமூர்த்தி நாட்டம் அதிகமாக தொடங்கியது.

திருமணமும் குடும்பமும்
அச்சமயம் நோய்வாய்ப்பட்டிருந்த தந்தையார் அவருக்கு திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்தார்। இதன்படி 1932 ஆம் ஆண்டு இந்தியாவில் வசித்த சௌமியமூர்த்தியின் தாயாரும் சகோதரியும் பார்த்த பெண்ணான கோதை என்பவரோடு, மணமகன் இல்லாமலேயே சௌமியமூர்த்தியின் சகோதரி தாலிக்கட்ட திருமணம் முடிந்தது। அதே ஆண்டு இந்தியா திரும்பிய சௌமியமூர்த்தி ஒரு வருடமளவில் அங்கு தங்கியிருந்தார். அக்காலப்பகுதியில் அவரது மகன் இராமநாதன் பிறந்தார். பின்னர் குழந்தையையும் மனைவியையும் இந்தியாவில் விட்டுவிட்டு இலங்கை திரும்பிய சௌமியமூர்த்தி தந்தையாரின் உடல் நிலை பாதிப்பு காரணமாக வெவண்டன் தோட்ட நிர்வாகத்தை தானே பார்த்து வந்தார். 1939ஆம் ஆண்டு உடல் நிலை மிக மோசமாக காணப்பட்ட கருப்பையாவின் வேண்டுகோளுக்கு இணங்க சௌமியமூர்த்தியின் மனைவி கோதையும் மகன் இராமநாதனும் இலங்கை வந்தனர். 1940 இல் கருப்பையா காலமானார். பின்னாளில் இராமநாதன் இலங்கை மத்திய மாகண அமைச்சராக தேர்தெடுக்கப்பட்டார்.

அரசியல் பிரவேசம்
1930களின் ஆரம்ப காலப்பகுதியில் அட்டன் நகரில் காந்தி சேவா சங்கம் என்ற சங்கமொன்று இயங்கி வந்தது। இராசலிங்கம்இ வெள்ளையன் போன்ற இளைஞர்கள் அதில் முக்கிய பங்காற்றி வந்தனர்। காந்திய வழிச்சென்ற செல்வந்த வாலிபனான சௌமியமூர்த்தியை இவர்கள் அச்சங்கக் கூட்டம் ஒன்றுக்கு அழைத்தனர்। சௌமியமூர்த்தி தனது தந்தைக்கு அரசியல் மீது இருந்த வெறுப்பு காரணமாக முதலில் பங்கு பற்ற மறுத்தாலும் பின்னர் அதில் பங்கேற்றார். மேலும் அப்போது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வழிசென்ற இயக்கமான போஸ் சங்க கூட்டங்களிலும் பங்கேற்றார். இவற்றில் சௌமியமூர்த்தி உரையாற்றத் தொடங்கினார்.

ஜூலை २४- 1939 இல் ஜவஹர்லால் நேருவின் கருத்துக்கேற்ப ஆரம்பிக்கப்பட்ட இலங்கை இந்திய காங்கிரசின் கம்பளைக் கிளையின் தலைவராகஇ ஆகஸ்ட் 13 1939 இல் சௌமியமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்। இது தனது தந்தையின் விருப்பத்துக்கு மாறாகக் காணப்பட்டாலும் இந்தியாவில் இருந்து இலங்கை வந்த வேலையாட்கள் படும் துயரங்களை அறிந்திருந்தபடியால் அவர்களுக்கு சேவை செய்யும் பொருட்டு அப்பதவியை ஏற்றுக் கொண்டார்.

இலங்கையில் 1930களின் கடைசி பகுதியில் ஏற்பட்ட இந்திய எதிர்ப்பு அலைகள் காரணமாக அதிகளவான தோட்டத் தொழிலாளர்கள் இலங்கை இந்திய காங்கிரசில் இணைந்தனர்। இதனால் அவர்களது பிரச்சினைகளை பேச வேண்டிய தேவை இலங்கை இந்திய காங்கிரசுக்கு ஏற்பட்டது. ஆனால் இலங்கை இந்திய காங்கிரஸ் இந்திய தொழிலாளரது பிரச்சினைகளை தோட்ட நிர்வாகத்திடம் கொண்டு சென்ற போது அவர்கள் அரசியல் கட்சியுடன் பேச மறுத்தனர். மாறாக தொழிற்சங்கத்துடன் மட்டுமே பேச முடியுமென வாதிட்டனர். இதனால் 1940 மே மாதம் இலங்கை இந்திய காங்கிரசின் தொழிற்சங்க கிளை ஆம்பிக்கப்பட்டது. இதன் ஆரம்ப தலைவராக சௌமியமூர்த்தியும்இ செயளாலராக பம்பாய் பல்கலைக்கழகத்தின் வர்த்தக பட்டதாரியும்இ இடதுசாரி கருத்து கொண்டவரான அப்துல் அசீசும் தெரியப்பட்டனர். 1940 செப்டம்பர் 7 - 8 இல் இலங்கை இந்திய காங்கிரசின் தொடக்க விழாவை தலைமை தாங்கி நடத்தினார். இந்நிகழ்வே இவரது வாழ்வின் முதலாவது பிரதான அரசியல் நிகழ்வாகும்.

இலங்கை இந்திய காங்கிரசின் இரண்டாவது பொதுக்குழு கூட்டம் கண்டியில் 1942 இல் கூடியபோது தலைமைக்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சௌமியமூர்த்தி அஸீசிடம் தோல்வி கண்டார்। எனினும் 1945 ஆம் ஆண்டு நுவரெலியா பொதுக்குழுவில் இலங்கை இந்திய காங்கிரசினதும் அதன் தொழிற்சங்கத்தினதும் தலைவராக தெரிந்தெடுக்கப்பட்டார்.

முதலாவது தொழிற்சங்க போராட்டம்
1946 இல் கேகாலையில் உள்ள தேயிலை தோட்டமொன்றான நவிஸ்மியர் தோட்டத்தில் இருந்த 360 தமிழ் தோட்ட தொழிலாளார் குடும்பங்கள் அருகில் இருந்த சிங்கள கிராமத்தவருக்கு நிலம் பகிர்ந்து கொடுக்கப்பட வேண்டும் எனக் கூறி தோட்டத்தில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு அரசால் பணிக்கப்பட்டனர்இ அவர்களுக்கு வேலையும் மறுக்கப்பட்டது। தோட்டத் தொழிலாளர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த இடத்தில் இருந்து வெளியேற மறுத்தனர்। தோட்ட நிர்வாகம் இக்குடும்பத்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டது। உடனடியாக செயலில் இறங்கிய சௌமியமூர்த்தி தொண்டமான் சட்ட நடவடிக்கையில் இறங்கியதோடுஇ இலங்கை இந்திய காங்கிரசின் அட்டன்இ இரத்தினபுரிஇ எட்டியாந்தோட்டைஇ கேகாலை பிரதேச தலைவர்களை அழைத்து அப்பிரதேச தேயிலைஇ இறப்பர்இ கோப்பி தோட்டங்களில் வேலை நிறுத்தத்தை அறிவித்தார்। மேலும் முழுத்தோட்டத்துறையையும் முடக்க போவதாக அறிவித்தார்। வேலை நிறுத்தம் 21 நாட்கள் நீடித்தது। அப்போது விவசாயத்துறை அமைச்சராக இருந்த டி। எஸ்। சேனநாயக்கா இந்தியப் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களுக்கு இணங்கினார்। பேச்சுக்களில் ஏற்பட்ட இணக்கப்பாடுகளுக்கு ஏற்ப ஆளுனர் மூர் 360 குடும்பங்களையும் மன்னிக்குமாறு பணித்தார்.

பாராளுமன்ற அங்கத்தவர்
1947 இல் 95 பாராளுமன்ற அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்காக பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது। இலங்கை இந்திய காங்கிரஸ் எட்டு ஆசனங்களுக்கு போட்டியிட்டு ஏழு இடங்களை கைப்பற்றியது. சௌமியமூர்த்தி தொண்டமான் நுவரெலியா ஆசனத்தில் போடியிட்டுஇ 9386 வாக்குகள பெற்றார். இது இரண்டாவதாக வந்த ஜேம்ஸ் இரத்தினத்தை விட 6135 வாக்கு அதிகமாகும். அவர் பாராளுமன்றத்தில் இடசாரி கட்சிகளோடு எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்தார். தொண்டமான் இலங்கையில் முக்கிய அரசியல் சக்தியாக வளரத் தொடங்கிய போது 1948 பெப்ரவரி 4 இல் இலங்கை சுதந்திரம் பெற்றது.

இந்திய பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டம்
இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்தின் பிரதமரான டி। எஸ்। சேனநாயக்கா இலங்கையில் பிரித்தானிய ஆட்சியின் போது இலங்கை வந்து குடியேறிய இந்திய பாகிஸ்தானிய மக்களது குடியுரிமையை பறிக்கும் சட்டம் ஒன்றை முன்வைத்து நிறைவேற்றினார். சௌமியமூர்த்தி தொண்டமான் இதற்கு எதிராக பாராளுமன்றில் வாதப்பிரதிவாதங்களை செய்தும் பலனற்றுப் போனது. குடியுரிமையைப் பறித்த பின்னர் டி. எஸ். சேனநாயக்கா இந்திய பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டம்-1949 என்ற புதிய சட்டத்தை கொண்டு வந்தார். இதன் படி இலங்கை குடியுரிமையை பெற பல தகைமைகள் முன்மொழியப்பட்டிருந்தது. இது சரியான சட்டமாக தெரிந்தாலும் பல நடைமுறைச் சிக்கல்களை கொண்டிந்தது. இதனால் அச்சிக்கல்களைச் சுட்டிக்காட்டி தொண்டமான் இதனைப் பாராளுமன்றில் எதிர்த்தார். இலங்கை இந்திய காங்கிரசின் மத்தியக் குழு யாரும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க கூடாது என தீர்மானித்தது. இதன்படி பெரும்பான்மையான இந்தியர்கள் விண்ணப்பிக்கவில்லை. ஆனால் இலங்கை இந்திய காங்கிரசின் ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் தமது பாராளுமன்ற ஆசனங்களை காத்துக் கொள்ளும் பொருட்டு விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டனர். டி. எஸ். சேனநாயக்காவின் மரணத்துக்கு பின்னர் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. இதன்போது இந்தியர்கள் குடியுரிமை அற்றவர்களாக இருந்தபடியால் தொண்டமானும் ஏனைய ஆறு பிரதிநிகளும் மீண்டும் பாராளுமன்றம் செல்ல முடியவில்லை.

1952 சத்தியாகிரகம்
ஏப்ரல் २८- 1952 இல் இலங்கை வாழ் இந்திய மக்களுக்கு குடியுரிமை வழங்குமாறு தொண்டமான் பேரணியொன்றையும் சத்தியாக்கிரகம் ஒன்றையும் நடத்த ஆரம்பித்தார்। ஏப்ரல் 29இ 1952 இல் அசீசுடன் கூடச் சென்று பிரதமரின் அலுவலக அறைக்கு முன்னதாக சத்தியாகிரகத்தில் ஈடுபட்டார். பல சிக்கல்களுக்கு மத்தியில் இதனை தொடர்ந்து செய்தார். பல சந்தர்ப்பங்களில் பொலிசார் அவரை பலவந்தமாக சத்தியாக்கிரக இடத்தில் இருந்து அகற்றினாலும் மீண்டும் அவ்விடத்துக்கு திரும்பினார். பாராளுமன்றம் முன்பாகவும் தமது அகிம்சை போராட்டத்தை தொடர்ந்தார். இப்போராட்டங்கள் காரணமாக அரசு இந்தியர்களை மீண்டும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க கோரியது. இதன் போது 850இ000 பேர் குடியுரிமைக்காக விண்ணப்பித்தனர். 1950 களில் இலங்கை இந்திய காங்கிரஸ் சார்பாக எவருமே பாராளுமன்றம் செல்லவில்லை.

அசீசின் பிரிவு
ஆரம்பத்தில் இருந்தே அசீசுடனான சில கருத்து முரன்பாடுகள் காணப்பட்டாலும் அவை பொது நோக்கு ஒன்றுக்காக பின்தள்ளப்பட்டு வந்தது। அசீஸ் இலங்கை இந்திய காங்கிரசை இடதுசாரிகள் பக்கமாக நகர்த்துகிறார் என்ற குற்றச்சாட்டு தொண்டமானால் முன்வைக்கப்பட்டது। மேலும் அசீஸ் முஸ்லிமாகவும் தமிழ் பேச முடியாதவராகவும் காணப்பட்டார். ஆனால் சௌமியமூர்த்தி பெரும்பான்மையான இந்திய தொழிளாலர்களை போல இந்து தமிழராக காணப்பட்டார். இவர்களின் கருத்து முரண்பாடு 1945இல் இருந்து வெளித்தோன்றியது. 1945 முதல் இலங்கை இந்திய காங்கிரசின் ஒவ்வொரு தலைவர் தெரிவு வாக்கெடுப்பிலும் சௌமியமூர்த்தி அசீசை வெற்றிக் கொண்டார். 1954இல் அட்டனில் நடைபெற்ற இ. இ. கா. பொதுக்கூட்டத்தில் தொண்டமான் தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை. அசிஸ் இதில் வெற்றிப்பெற்றார். கட்சிக்குள் பலர் சௌமியமூர்த்திக்கு ஆதரவு நிலை எடுத்தபடியால் டிசம்பர் 13 1955 அசிஸ் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். வெளியேற்றப்பட்ட அசீஸ் சனநாயக தொழிளாலர் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார்।

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
அசீஸ் இ।இ।கா।வின் தலைவராக தெரிவான 1954 அட்டன் பொதுக்குழுவில் இலங்கையில் அப்போது இ.இ.கா.வுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட இந்திய சார்பு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் வகையில் இலங்கை இந்திய காங்கிரசினது பெயர் இலங்கை சனநாயக காங்கிரஸ் என்றும் இலங்கை இந்திய காங்கிரஸ் தொழிற் சங்கத்தினது பெயர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்றும் மாற்றப்பட்டது. அசீஸ் கட்சியில் இருந்து வெளியேறிய பிறகு சட்டச் சிக்கல்கள் காரணமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) மட்டுமே சௌமியமூர்த்தியின் தலைமையில் கீழ் வந்தது. அது முதல் 1999 இல் அவர் இறக்கும் வரையில் இ.தொ.கா.வின் தலைவராக பதவி வகித்தார்.

1956 இல் சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டார்। மேலும் அதன் செயற்குழுவுக்கும் தெரிவு செய்யப்பட்டார் இப்பதவியை அவர் 1978 இல் அமைச்சராக பதவியேறும் வரையில் தொடர்ந்து வகித்து வந்தார்.

சிறி கலவரம் 1957
1957 இல் இலங்கை சுதந்திர கட்சி தலைமையிலான அரசின் போக்குவரத்து அமைச்சர் மைத்திரிபால சேனாநாயக்கா வகன எண்தகடுகளில் ஆங்கில எழுத்துக்கு பதிலாக சிங்கள் சிறி (ஸ்ரீ) எழுத்து பாவிக்கப்பட வேண்டும் எனப் பணித்தார்। இதனால் இலங்கையின் வட்க்கு கிழக்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தலைமையில் சிறி-எதிர்ப்பு போராட்டம் வெடித்தது। தெற்கில் சிங்களவரால் தமிழ் பெயர் பலகைகளுக்கு தார் பூசப்பட்டது। இப்போராட்டத்துக்கு மத்திய மலை நாட்டில் இந்திய வம்சாவளியினர் வாழும் பகுதிகளிலும் ஆதரவு கிடைத்தது। இதனால் அப்பகுதிகளில் சிங்கள-தமிழ் கலவரம் மூண்டது. இதன் போது அப்போதைய பிரதமரான எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க தொண்டமான் மத்திய மலைநாட்டின் நகரங்களுக்குச் சென்று நிலைமையை சீர் செய்தார். பின்னர் வெளியிட்ட ஊடக குறிப்பில் மலையக தமிழ் இளைஞ்ஞர்கள் அமைதிகாக்க வேண்ண்டு மெனவும்இ வடக்கு கிழக்கு தமிழர் பிரச்சினயிலிருந்து மலையக தமிழரது பிரச்சினை வேறுப்பட்டது எனவும் சுட்டிக்காட்டினார். மேலும் யூன் १९५७- இல் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுக்கு எழுதிய கடிதம் மூலம் இலங்கை சுதந்திர கட்சியையும் இலங்கைத் தமிழரசுக் கட்சியையும் பேச்சுகளுக்கு இணங்கச் செய்துஇ பின்னர் பௌத்த பிக்குகளின் எதிர்ப்பு காரணமாக கிழித்தெறியப்பட்ட பண்டா-செல்வா ஒப்பந்த்துக்கு வித்திட்டார்.

போட்டியிட்ட தேர்தல்கள்
டிசம்பர் २३- 1959 இல் அசீசின் சனநாயக தொழிளாலர் காங்கிரசும்இ இலங்கை தொழிலாளர் காங்கிரசும் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட்டது। இதன்போது நுவரெலியா ஆசனத்துக்கு போட்டியிட்ட தொண்டமான் தோல்வியுற்று பாராளுமன்ற்றம் செல்ல முடியவில்லை। அம்முறை சிறிமாவோ பண்டாரநாயக்கா ஆட்சி அமைத்தார்। ஆகஸ்ட் ४- 1960 இல் சிறிமாவோ பண்டாரநாயக்கா, தொழிலாளர் பிரதிநிதியாக சௌமியமூர்த்தியை பாராளுமன்றத்துக்கு நியமித்தார்। மார்ச் २२-1965 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐ।தே.கவுடன் இணைந்து போட்டியிட்டார்.
( வலைப்பயணர்களுக்கு மற்றும் இணையப்பாவனையாளர்களுக்கு மேலதிக தகவல் கிடைக்குமாயின் தயவுசெய்து பின்னூட்டம் தாருங்கள்)

இந்தக் கொடுமையை கேளுங்கள் ஐயா!

தனது இரண்டு மாத குழந்தைக்கு பால் மா வாங்குவதற்கு பணம் இல்லாததால் விரக்தியடைந்த இளம் தாய் நஞ்சு குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இலங்கையின் தென்பகுதியில் தெனியாய - தாரங்கல சதன் குறூப் தேயிலைத் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது।
திங்கட்கிழமை மாலை இவர் நஞ்சு குடித்து ஆபத்தான நிலையில் மொறவக்க ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மரணமானார்.
பாலகிருஷ்ணன் சரோஜாதேவி (20 வயது) என்ற இளம் பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டார். மொறவக்க ஆஸ்பத்திரியில் இவரது மரண விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சம்பவதினம் பிள்ளைக்கு பால் இல்லாமல் இறந்த மனைவி தனது தாயாரிடம் பணம் கேட்டதாகவும், தாயார் பணம் இல்லை என்று கூறியதால் அவர் மனம் உடைந்து காணப்பட்டார் எனவும் தான் கடையில் கடனுக்கு பால்வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்றவேளையில் அவர் நஞ்சு குடித்துவிட்டதாக சகோதரி ஓடிவந்து கூறியதாகவும் கணவன் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்கும்போது கூறினார்.
இது தற்கொலை என மரண விசாரணை அதிகாரி தீர்ப்பு வழங்கினார்।
நாளுக்கு நாள் பொருட்களின் விலைகள் அதிகரித்துச்செல்ல இலங்கை முழுவதிலும் தற்போது பால்மாவுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது। இதனால் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்। சில வர்த்தகர்கள் அதிகூடிய விலைக்கு பால்மாவை விற்பனை செய்துவருகின்றனர்।
இந்நிலை தொடருமானால் மேலும் பல தாய்மார்களின் குழந்தைகளின் இறப்புச்செய்தி பத்திரிகைகளில் தலைப்புச்செய்தியாகும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்பது உண்மை.

தாக்குதலின் பிரதிபலிப்பு !!!

அனுராதபுரம் விமானப்படைத்தளம் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட கடும் தாக்குதல் நாடெங்கிலுமுள்ள பேரினவாதிகளுக்கு பேரிடியைக் கொடுத்துள்ளது। எதைப்பேசி எப்படி சமாளிக்கலாம் என அரசியல்வாதிகள் ஒருபுறமும் தமிழர்களை ஒடுக்குவதற்கு எந்தவகையில் தாம் பங்களிப்பு செய்யலாம் என சிங்கள் இனவாத மக்களும் சிந்தித்துக்கொண்டிருக்கின்றனர்।

இந்நிலையில் கொழும்பிலுள்ள அப்பாவி தமிழர்களிடம் சில அவசியமற்ற கேள்விகளை பாதுகாப்புத்தரப்பினர் கடந்த இரண்டு நாட்களாக கேட்கின்றனர்। கொழும்பில் இது வழமைதான் என்றாலும் சில படையினரின் நடத்தையில் துவேசம் தலைவிரித்தாடுவதாக சம்பந்தப்பட்ட மக்கள் தெரிவித்தனர்।

"இதுவரை எத்தனை புலிக்கு நீ சோறு போட்டிருக்கிறாய்? என்ன சோறு போடவில்லையா? அப்படியென்றால் உன்னுடையதை எதைக் கொடுத்தாய்? " என்று வெள்ளவத்தையில் வசிக்கும் தமிழ்ப்பெண்ணிடம் இராணுவ வீரர் ஒருவர் கேட்டுள்ளார்।

முழுமையான இனத்துவேசக் கிணற்றுக்குள் வீழ்ந்து கிடக்கும் இவர்கள் அப்பாவிகளைக் கூட வார்த்தைகளால் துன்புறுத்துகிறார்கள்। சம்பந்தப்பட்ட அனைவருமே இவ்வாறான பிரச்சினைகளைத் தீர்க்க முன்வரவேண்டும்.

கொடுமைகளுக்கு காற்புள்ளியிடும் அரசியல் !

இரத்தினபுரி எந்தானை தோட்டப்பகுதி மற்றும் அதனை அண்டிய தோட்டப்பகுதிகளில் கர்ப்பிணித் தாய்மார்களை கொண்டுசெல்வதற்கான காவு வண்டி (அம்பியுலன்ஸ்) இல்லாததால் பெரிதும் அவஸ்தைப்படுவதாக அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டினர்। பிரசவ வேதனையில் அவதிப்படும் பெண்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு எத்தனையோ பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தனர்।

மலையகத்தில் இது புதிய பிரச்சினையல்ல। காலம்காலமாக இருந்துவரும் பிரச்சினைதான்। ஆனால் எந்தவொரு அரசியல் தலைவர்களும் இவ்வாறான அத்தியாவசிய சேவைகளை வழங்க முன்வரவில்லை என்பதுதான் வருந்ததக்க விடயம்। ஹற்றன் வெலிஓய தோட்டப்பகுதி மக்கள் இவ்வாறு அம்பியுலன்ஸ் வண்டியில்லை என அமைச்சர்களிடம் முறையிட்டனர்। ஆனால் யாரும் தருவதற்கு முன்வரவில்லை।

இந்நிலையில் பிரசவ வேதனையில் தவித்த பெண் ஒருவரை கொண்டு செல்ல வாகனம் இல்லாத காரணத்தினால் மிகவும் தாமதமாகி தோட்ட லொறியில் ஏற்றிக் கொண்டு சென்றமையினால் அந்தப் பெண் பரிதாபகரமாக உயிரிழந்தார்। இந்த அவலச் சம்பவத்துக்குப் பிறகு தான் அப்பகுதிக்கு அம்பியுலன்ஸ் கிடைத்தது।

இவ்வாறு வரலாற்றுப் பாடங்கள் நிறைய இருக்கின்றன। இருந்தும் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளியிடாமல் தொடர்வது நியாயமா இல்லையா என்பதை தலைவர்கள் முடிவுசெய்யட்டும்.

மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில்...!


கடும் நிறக்கட்சிக்கார அரசியல்வாதி (சொல்லிக்கொள்கிறார்!) மலையகத்தின் சில பகுதிகளுக்கு சென்று பிரசாரம் செய்வதற்கு சில தொழிலாளர்களை நியமித்துள்ளாராம்। அந்தத் தொழிலாளர்கள் தோட்டங்கள் தோறும் சென்று கட்சிக்கு அங்கத்தவர்களை இணைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனராம்। இதில் என்ன வேடிக்கை என்றால் அந்தத் தொழிலாளர்களுக்கே கட்சி குறித்து விளக்கமில்லாததுதான்। அத்துடன் பணத்துக்காகத் தான் இதைச்செய்கிறோம்। இல்லாவிட்டால் கட்சி கருமம் ஒன்றும் தேவையில்லை என அவர்களே சில சந்தர்ப்பங்களில் சொல்லியிக்கிறார்கள்।


அது அப்படியென்றால் அரசியல் தலைவர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? எங்களது கட்சியை தொழிலாளர்கள் மனதில் அடிக்கடி ஞாபகம்வரும்படி செய்ய வேண்டும்। அதற்கு ஒரே வழி மாதத்துக்கு ஒரு தடவையேனும் அவர்களின் சம்பளப்பிரச்சினை பற்றி ஊடகங்களுக்கு அறிக்கை விடுவதுதான்। சும்மா தான் ஆட்களை அனுப்பி அங்கத்தவர்களை சேர்க்கச்சொன்னேன்। இப்போதெல்லாம் அரசியல் நடத்துவது சிரமமாகிவிட்டது என்றாராம் ஒரு விருந்துபசாரத்தில்।


ஐயா, உங்களுடைய கட்சியை வளர்ப்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யுங்கள்। தயவுசெய்து தொழிலாளர்களின் வாழ்க்கையை கெடுக்காதீர்கள்। அவர்கள் அப்பாவிகள்। சுயநலத்துக்காக சமுதாயத்தை சீரழிப்பது எந்த வகையில் நியாயம்? அவர்கள் பகடைக்காய்களல்ல! அதை உணருங்கள்.

பேசும் நெஞ்சங்களுக்கு !

இராஜகுமாரனின் பின் இடுகையைப் பார்த்து உண்மையில் மனம் நெகிழ்ந்துபோனேன்। மலையகப் பிரச்சினையை எடுத்துக்கூற இணையத்தளம் இல்லாத வரலாற்றுக்குறையை இந்த வலைப்பக்கம் நிவர்த்திப்பதாக குறிப்பிட்டார்। இதுவரை மலையகத்துக்கென இணையத்தளம் இல்லை என்பது உண்மைதான்। ஆனாலும் இந்த வலைப்பக்கமானது முழுமையாக மலையக மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவராது।

என்னால் முடிந்தளவு மட்டுமே செய்கிறேன்।மற்றும் இந்த வலைப்பக்கம் பற்றி பேசும் நண்பர்களுக்கு நன்றி। உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்புடன் புதிய மலையகத்துக்கான அத்திவாரத்தில் ஒரு கல்லையாவது நிரந்தரமாக அமைப்போம்। அது சமுதாயப்பணிக்கு வித்திடட்டும்.

அரசியல் விபச்சாரம்!

பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பொதுமக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதி எனப்படுபவர் அரசியல் பணியில் தனது நலனுக்காக மக்களுடைய சுயகெளரவத்தையும் தன்மானத்தையும் விற்று பொருளும் புகழும் சம்பாதித்தல் அரசியல் விபச்சாரம் எனப்படும்(நான் சொல்வது சரியா என்பது மற்றவர்கள் தான் கூறவேண்டும்)।

இவ்வாறு யார் யார் செய்துகொண்டிருக்கிறார்களோ அவர்கள் கண்ணாடியின் முன் நின்று தாங்கள் விபசாரம் தான் செய்கிறோம் என்பதை ஒருகணமேனும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்।

எனக்குத் தெரிந்தவரையில் மூன்று தடவைக்கு மேல் கட்சி விட்டு கட்சி மாறிய அரசியல்வாதியொருவர் தான் அரசியல்விபச்சாரம் செய்யவில்லை என்பதை எங்கு வேண்டுமானாலும் அடித்துக்கூற தயாராகவுள்ளதாக தனது நண்பர்களிடம் கூறியுள்ளார்। ஆட்சி மாறியதும் நீங்கள் கட்சி மாறி மக்களை தர்மசங்கடத்துக்குள்ளாக்கி அவர்களுடைய சுயகெளரவத்தை விலைக்கு விற்கவில்லையா? அதற்குப் பெயர் என்ன ஐயா? வீடுகளில் மலையக அப்பாவி சிறுவர்களை அழைத்துவந்து வீடுகளில் வேலைக்கு வைப்பது தவறு எனக் கூறிக்கொண்டு உங்கள் வீட்டில் மட்டும் அரியில் நெல் பொறுக்குவதற்கு சிறுவர்களை அமர்த்துவது எந்தவகையில் ஐயா நியாயம்?

என்ன கொடும சார் இது?

கொழும்பில் கடந்த சனிக்கிழமை நடந்த மாணவர்கள் தொடர்பான பொது நிகழ்வொன்றுக்கு சென்றிருந்தேன்। கொழும்பில் இருந்துகொண்டு மலையகத் தமிழர்களின் துயரை கண்ணூடாகப் பார்ப்பதாக கூறிக்கொள்ளும் அமைச்சர் ஒருவர் தான் அன்றைய தினம் பிரதம அதிதி। அவர் உரை நிகழ்த்தினார்।
தற்கால மாணவர் சமுதாயத்தினர் தான் எதிர்காலத்தை கட்டியெழுப்பவேண்டியவர்கள்। அவர்களது திறமைகளுக்கு களம் அமைத்துக்கொடுத்து வளர்த்தெடுக்கவேண்டிய பொறுப்பு எமக்குண்டு। அதற்கான செயற்திட்டங்களையும் நாடளாவிய ரீதியில் நான் முன்னெடுத்து வருகிறேன் என நா கூசாமல் கூறினார்। இதே அமைச்சர் ஒரு தொழிலாளியிடம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் எப்படிக்கூறியிருக்கிறார் தெரியுமா? பிள்ளைகளின் கல்விக்காக மட்டும் என்னிடம் வராதீர்கள்। தோட்டத்தில் ஏதாவது பிரச்சினை என்றால் சொல்லுங்கள்। உங்கள் பிள்ளைகளுக்கு கல்வியூட்ட வேண்டிய பொறுப்பு என்னுடையதல்ல। தேர்தலின்போது யாருக்கு வாக்களித்தீர்களோ அவர்களிடம் போய் கேளுங்கள் என்றாராம்।

என்ன கொடும சார் இது?

மக்கள் சேவகர்களை வாழ்த்துகிறோம்!


இலங்கை அமைச்சரவையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று மீண்டும் இணைந்து கொண்டது.
அலரி மாளிகையில் மகிந்த ராஜபக்ச முன்னிலையில் நேற்றுறு வியாழக்கிழமை காலை 9:30 மணியளவில் இ.தொ.கா.வினர் மீண்டும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.
ஏற்கனவே அவர்கள் வகித்த அமைச்சுப் பொறுப்புக்களே மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இ.தொ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமான்- அமைச்சரவை அந்தஸ்துள்ள இளைஞர் வலுவூட்டல் அமைச்சரராகவும் உட்கட்டமைப்பு பிரதி அமைச்சராக முத்துசிவலிங்கமும்
தபால் தொலைத்தொடர்புத்துறை பிரதி அமைச்சராக எம்.எஸ்.செல்லச்சாமியும் கல்வி பிரதி அமைச்சராக சச்சிதானந்தனும் அரசியல் யாப்பு பிரதி அமைச்சராக என். கேதீஸ்வரனும் பதவியேற்றுள்ளனர்.
மகிந்தவின் ஆலோசகரும் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்சவுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டை அடுத்து கடந்த ஓகஸ்ட் மாதம் 2 ஆம் நாள் ஐந்து பேரும் அமைச்சரவை பொறுப்புக்களிலிருந்து விலகியிருந்தனர்.
உட்கட்டமைப்பு அமைச்சரான முத்துசிவலிங்கத்தை தகாத வார்த்தைகளால் பசில் ராஜபக்ச திட்டி அவரை கடுமையாக எச்சரித்தாலேயே தாம் அமைச்சரவை பொறுப்புகளிலிருந்து விலகியதாகவும் இனி ஒருபோதும் மீண்டும் அமைச்சுப்பதவிகளை ஏற்கப்போவதில்லை என்றும் இ.தொ.கா.வினர் சூளுரைத்திருந்தனர்.
ஆனால் அமைச்சரவை பொறுப்புக்கள் இல்லாது இ.தொ.கா.வினர் இருக்க மாட்டார்கள் என்றும் விமர்சிக்கப்பட்டது. இந்த விமர்சனங்களையும் இ.தொ.காவினர் அடியோடு மறுத்தனர். தாம் ஒருபோதும் அமைச்சரவை பொறுப்புக்களை ஏற்க மாட்டோம் என்று இ.தொ.கா.வின் பிரதி தலைவர் ஆர். யோகராஜன் தெரிவித்திருந்தார் .
இந்நிலையில் இ।தொ.கா.வினர் மீண்டும் நேற்றுக்காலை அமைச்சரவை பொறுப்புக்களை பொறுப்பேற்றுள்ளனர்.

காலங்காலமாக பல்வேறு அமைச்சுப்பொறுப்புகளை வகித்து மக்கள் பணியாற்றிவரும் நமது தலைவர்கள் பிரச்சினையின் பின்னர் மீண்டும் பதவியேற்றுள்ளனர்। மலையகத்துக்காக தம்மை அர்ப்பணித்து பாடுபட்டு வியர்வை சிந்திவரும் நமது தலைவர்கள் மேலும் பல சேவைகள் செய்யக் காத்திருக்கிறார்கள்। மக்களின் நம்பிக்கைக்கும் பாத்திரமாக இருக்கிறார்கள்। புதிதாக அமைச்சுப்பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட எமது தலைவர்களை நாம் வாழ்த்துகிறோம்।

(செய்தி-நன்றி புதினம்)

மனித உரிமைகள் அமைப்புகளுக்கு...

தீபாவளிப் பண்டிகை நெருங்கிவிட்டது। மலையகத் தொழிலாளர்களிடத்தில் தற்போது பணம் இல்லை। வருடந்தோறும் சிறப்பாக கொண்டாடும் இப்பண்டிகையை இவ்வருடம் எவ்வாறு கொண்டாடுவது என திண்டாடிக்கொண்டிருக்கின்றனர்।

இந்நிலையில் சில தரகர்கள் தமது கைவரிசையை காட்ட முயன்றுவருகிறார்கள்। ஹட்டன், இராகலை,நானுஓய தோட்டப்பகுதிகளிலுள்ள சில தரகர்கள் தொழிலாளர்களின் வீடுகளுக்கு சென்று பிள்ளைகளை கொழும்புக்கு வேலைக்கு அனுப்புமாறு கேட்கின்றனராம்। அவ்வாறு அனுப்பினால் தீபாவளிக்கு பெருந்தொகையான பணத்தை பெற்றுத்தருவதாகவும் உறுதியளிக்கின்றனராம்। நானுஓய பகுதியில் தங்கமான இரத்தினம் ஒருவர் இப்படி மும்முரமாக இயங்கிவருகிறாரார் என மக்கள் தெரிவித்தனர்।

மனித உரிமை அமைப்புக்கள் நடவடிக்கை எடுப்பார்களா?

ஒரு சோகம் சிரிக்கிறது!


பட்டினிக்கு குறைவில்லை
பள்ளிப்பாடம் பிடிக்கவில்லை
சாப்பிட சோறில்லை
விலையும் குறையவில்லை

தலைவர்கள் என்று சொல்பவர்கள்
தாகம் தீர்க்க மறுக்கிறார்கள்

பணத்தை நோக்கும் பாவிகள் சிலர்
பொதுநலம் என்று கதைக்கிறார்கள்

போகும் வழியில் ஒளியில்லை
எதிலும் எமக்குத் தெளிவில்லை

கவலை மறந்து சிரிக்கிறேன்
கமராவுக்காக நடிக்கிறேன்

இனிக்கிறது மாங் கனி
வேறு வழியியுமில்லை இனி

-ஆர்।நிர்ஷன்

உங்களுக்கு நன்றி

கொழும்புவாழ் மலையகத்தமிழர்கள் சிலர் இந்த புளொக் பற்றி பேசியதாக அறிந்தேன்। மிகவும் காரசாரமான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதாகவும் தகவல் கிடைத்தது। இது சுயநலம் கருதி செய்யப்படும் சேவையல்ல। பிறந்த மண்ணுக்காகவும் அப்பாவி தமிழ் மக்களுக்காகவும் எதிர்கால மலையகத்துக்காகவும் எங்களால் இயன்ற பணியை செய்ய விளைந்திருக்கிறேன்। அவ்வளவுதான்। யாரையும் புண்படுத்துவது எனது நோக்கமல்ல। யாரையும் கீழ்த்தரமாக குறிப்பிடுவது எனது பழக்கமுமல்ல।

இன்னும் பல சேவைகளை இந்த புளொக்கின் மூலம் அறிமுகப்படுத்தக்காத்திருக்கிறேன்। பொறுத்திருந்து பாருங்கள்। இந்தவிடயத்தைப் பற்றி பேசிய உங்களுக்கு நன்றி.

தூங்கும் அர(ட்டை)(சியல்)வாதிகள்!


பொருள் விலையேற்றங்களின்போது தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரியுங்கள் என அரசியல்வாதிகள் கோஷமிடுவதும் பின்னர் பெரிய தலைகளிடம் சமரசம் செய்துகொண்டு தூங்குவதும் வழமையாகிவிட்டது। தற்போது ஒருநாள் உணவுக்கு ஒருவருக்கே போதாத 190ரூபா அடிப்படை சம்பளத்தை தொழிலாளர்கள் பெறுகிறார்கள்। இது எந்தவகையிலும் நியாயம் இல்லை என்பதும் குடும்பத்தின் வயிற்றுப்பிழைப்புக்கே போதாது என்பது நமது தலைவர்களுக்கு தெரியாமலா இருக்கிறது।


அப்பாவி தொழிலாளர்களின் விதிதான் இவ்வாறான அரசியல்வாதிகளைப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்ற காரசாரமான வாதப் பிரதிவிதங்களும் முன்வைக்கப்பட்டுவருகின்றன। ஆனால் இவர்களிடம் கூறி சம்பளத்தை அதிகரிப்பதும் கல்லில் நார் உறிப்பதும் முட்டையில் முடிபிடுங்குவதும் ஒன்றுதான் என்றும் மலையக சமூகம் கூறுகிறது.

உங்கள் பணி வளரட்டும்

மலையகத்தில் புதிதாக நியமனம் பெற்ற ஆசிரியர்கள் மிகவும் சிறப்பாக தமது கடமையை நிறைவேற்றிவருவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்। ஆசிரிய நியமனம் வழங்கப்படும்போது பல்வேறு விமர்சனப்பார்வைகளால் நோக்கப்பட்ட இவ்விடயம் குறித்து மலையக கல்விச்சமூகம் திருப்தியடைந்துள்ளதாக பலர் அறியத்தந்தனர்।

உண்மையில் சந்தோஷமாக இருக்கிறது। ஆசிரியர்களே ஆசிரியப்பணிக்கு மேலதிகமாக மது ஒழிப்பு,சுகாதார மேம்பாடு ஆகிய விடயம் குறித்தும் பிரத்தியேகமாக கவனம் செலுத்துங்கள்। புதியதொரு மலையகத்தை நாம் இதுவரை கனவில் மட்டும் கண்டுவந்த மலையகத்தை உருவாக்குவோம்। எங்களுக்கு அரசியல்வாதிகளின் பலம் தேவையில்லை। இளைஞர்சக்தி இருக்கிறது என்பதை நிரூபிப்போம்.

யார் வேலைக்காரர்கள்?

மலையகத்தின் சில பகுதிகளில் தொழிலாளர்களை வேலைக்கு செல்லவேண்டாம் எனக்கூறி தமது சொந்த தேவைகளைச்செய்துதருமாறு சில தலைவர்கள் தொழிலாளர்களை வற்புறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன। அங்கிருந்து சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் தொலைபேசி மூலம் தகவல் தந்தனர்।

என்ன விடயம் என்பதை தெளிவாகக்கூறுகிறேன்। தலைவரின் வீட்டில் அவருடைய நண்பர்களுக்கு மதுபான உபசாரம் நடக்க ஏற்பாடாகியதாம்। அங்கு மதுபானம் பரிமாறுவதற்குத் தான் தொழிலாளர்கள் சிலரை அழைத்திருக்கிறார்। அதுவும் சம்பளம் இல்லை। ஒருகிளாஸ் குடிச்சிட்டு வேலை செய்யுங்கள் எனச்சொல்லியிருக்கிறார் என்றால் பாருங்கள்। தான் சீரழிவது போதாமல் சமுதாயத்தையும் சேர்த்து சீரழிப்பவர்கள் தான் தங்களைத் தலைவர்கள் எனக் கூறிக்கொள்கிறார்கள்।

மக்கள் வாக்கினால் மக்களுக்கு சேவை செய்யவந்தவர்கள் தான் வேலைக்காரர்கள்। தொழிலாளர்கள் அடிமைகளல்ல। அரசியல்வாதிகள் தான் சேவகர்கள் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணரவேண்டும்.

இது எப்படி இருக்கு?


மலையகத்தின் தலைவர்கள் எனக்கூறிக்கொள்ளும் அமைச்சர்கள் சிலர் கடந்த வாரத்தில் பிரத்தியேக கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனராம்। முதலில் தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினை பற்றித்தான் பேச்சு வந்திருக்கிறது। பின்னர் நுவரெலியாவில் தேயிலைத்தோட்டம் வாங்குவது பற்றித்தான் ஒவ்வொருவரும் பேசினார்களாம்। சுமார் இருபது இலட்சத்துக்கு முழுமையான தேயிலைச்செடிகளுடன் காணி இருந்தால் சொல்லுங்கள் வாங்கத்தயாராக இருக்கிறேன் என தலைவர் ஒருவர் கூறினாராம்।

தேயிலைக்கு நல்ல கிராக்கி இருப்பதால் சம்பாதிப்பதற்கு இதுதான் நல்ல வழி என அவர் கூறியதை மற்றவர்களும் ஆமோதித்தனராம்। மற்றொரு முக்கியஸ்தர் தமக்கு மதுபானசாலை அனுமதிப்பத்திரமொன்றை பெற்றுத்தருமாறு வேண்டினாராம்.

ஒருபுறம் தொழிலாளர்கள் கால்வயிறு உணவுடன் பட்டினியால் தவித்துக்கொண்டிருக்க அதற்குத் தீர்வினை பெற்றுக்கொடுப்பதை விடுத்து இப்படியும் அமைச்சர்கள் கதைக்கிறார்கள் என அங்கிருந்த ஒருவர் ஆதங்கப்பட்டக்கொண்டார்। அவரும் முதலைக்கண்ணீர்தான் வடித்தார்.

இருள் தரும் வெளிச்சம்...

அண்மையில் இரத்தினபுரி காவத்தை தலுக்கலை தோட்டப்பகுதிக்கு சென்றிருந்தேன்। அங்கு லயன் குடியிருப்பிலுள்ள மக்கள் இரவில் விளக்கு வைத்துக்கொள்வதில்லை। வீட்டு முற்றத்தில் தீ வைத்து சுற்றி உட்கார்ந்திருக்கிறார்கள்। ஏன் எனக் கேட்டபோது மண்ணெண்ணெய் விலை அதிகரித்திருக்கிறது। காசுக்கு எங்கே போவோம்। அதுதான் காட்டு மரங்களை கொண்டு வந்து தீ மூட்டி உட்கார்ந்திருக்கிறோம்। தினமும் இப்படித்தான் என்கிறார்கள் அந்தத் தோட்டத்து மக்கள்।

வீடுகளில் சிறிய வெளிச்சம் கூட இல்லை। பாடசாலைக்கு செல்லும் பிஞ்சுக்குழந்தைகள் அந்த வெளிச்சத்தில் கூடி விளையாடுகின்றன। ஆனால் படிப்பதில்லை। படிப்பதற்கு போதிய வெளிச்சம் இல்லை। இதனை யார் கவனிப்பார்கள்?

வெளிச்சத்தில் விளையாடித்திரியும் இந்தக்குழந்தைகள் தங்கள் கல்வியை பாழாக்கிக்கொள்கிறார்கள் என்பதை அறிவார்களா? வெளிச்சத்துக்காக தீமூட்டும் இவர்களின் வாழ்க்கை இருளுக்குள் தள்ளப்படுகிறது।

என்ன சொல்லியும் பிரயோசனமில்லை। கடந்த சில வருடங்களாகவே எமது தலைவர்கள் மெளனவிரதத்தில் தானே ஈடுபட்டுவருகின்றனர்।

மலையகத்துக்குத் தனியான வானொலி தொலைக்காட்சி சேவை வேண்டும் எனக் கூறியிருக்கிறார்। ஐயா நல்ல விஷயம்தானுங்க। அதுக்கு முன்னால தொழிலாளர்களின் வயிற்றுப்பிழைப்புக்கு வழி காட்டிக்கொடுத்தா நல்லதுங்க.

எத்தனை சிரமம்?


இவர்கள்
தங்களுக்காக மட்டும்உழைக்கவில்லை
நாட்டுக்காக சிரமப்படுகிறார்கள்!
தமதுநலனை மட்டும் பார்க்கவில்லை
உலகுக்கே
உதாரணமாய் திகழ்கிறார்கள்!

காதுல விழுந்தது...

அம்மையாரு காலத்துல நடந்த விசயத்த ஒருத்தர் சொன்னாருங்க.அவரோட கைகோக்கிற பேச்சுவார்த்த நடந்துச்சாம். அப்ப உங்க ஆக்களுக்கு சம்பளத்த கூட்டுறதுக்கு ஒத்துக்குறேன்னு அம்மையார் சொல்லிருக்காரு. அம்மா சம்பளம் கூட்டாட்டியும் பரவால்ல. இந்தியாவுல இருந்து சாமான் கொஞ்சம் கொண்டுவர இருக்குது. அதுக்கு டெக்ஸ்ஸ இல்லாமலாக்கினீங்கன்னா அதுவே பெரிய விசயம்னு அந்தத் தெய்வம் மறுமொழி சொன்னிச்சாம். அம்மையாருக்கு நெருக்கமாக இருந்த மலையகப்புள்ள ஒன்னு போதையில உளரிருக்கு. இது கொஞ்சம் கசிஞ்சு வருதுங்க. பாப்போம் என்ன நடக்குதுன்னு...

யாருக்காக இந்த நாடகம்?

தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினை மீண்டும் தலைதூக்கியுள்ளது. மலையக தொழிற்சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மலையகத் தலைவர்கள் எனக்கூறிக்கொள்ளும் சிலர் அரசியல் இலாபம் தேட முயற்சிப்பது வெளிச்சமாகியுள்ளது.

அட்டன் பகுதி தோட்டங்களுக்கு சென்ற சில தலைவர்கள் மற்றொரு தொழிற்சங்கத்துக்கு எதிராக போராட்டம் தொடங்குங்கள் நாங்கள் பக்கபலமாக இருக்கிறோம் எனக் கூறியிருக்கிறார்கள்.இது யாருக்காக?மதிப்புக்குரிய தலைவர்களே உங்களுக்குள் இருக்கும் முரண்பாடுகளுக்கு பழிதீர்த்துக்கொள்ள அப்பாவி மலையக மக்களை பகடைக்காய்களாக பயன்படுத்தாதீர்கள்.

மதுவுக்கு அடிமையாக வேண்டாம் என நீங்களே கூறிக்கொண்டு உங்கள் குறிக்கோள்களை அடைந்துகொள்வதற்காக கசிப்பு வாங்கிக்கொடுப்பதற்கு எப்படி மனம்வந்தது?வரலாற்றுக்குற்றம் எப்போதாவது நிரந்தரமான தண்டனையை உங்களுக்கு வழங்கும். அப்பாவி மக்களின் வாழ்க்கையை கெடுத்த அவப்பெருக்கு உட்படாதீர்கள்.

'' சமயத்தையும் சமூகத்தையும் வளர்க்காவிட்டாலும் பரவாயில்லை.
அழிக்காமலாவது இருங்கள்''
-வீரத்துறவி.

தலைவர்களிடம் வேண்டுகோள்

அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்துப்பொருட்களின் விலைகளும் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால் மலையக மக்கள் பெரும் பொருளாதாரச்சுமைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். வாழ்க்கைச்செலவு அதிகரித்த போதிலும் சம்பளத்தில் மாற்றமில்லாமல் இருக்கிறது.
முதலாளிமார் சம்மேளனத்துடன் நமது தலைவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தம் இச்சந்தர்ப்பத்தில் எந்த வகையில் மலையக மக்களுக்கு நன்மை பயக்கிறது என்பதை தலைவர்கள் மக்களுக்கு வெளிப்டுத்த வேண்டும்.
தொடர்மௌனம் காக்கும் மலையக மக்களை ஆசை காட்டி அடிவருடிகளாக்கிக்கொள்வதும் அவர்களுடைய பலவீனத்தை பயன்படுத்திக்கொள்வதுமாகவே இதுகாலமும் இருந்துவந்துள்ளது. எனினும் இவ்வாறான பிரச்சினைகளில் இனியும் விட்டுக்கொடுப்புடன் தம்நிலை அறியா பாமரர்களாக இருந்துவிடமுடியாது.
மலையக மக்கள் கடவுள் பக்திகொண்டவர்கள். எந்தப்பிரச்சினை வந்தாலும் தமது இஷ்ட,குல தெய்வங்களை மனதார பிரார்த்திக்கிறார்கள்.
அவர்களின் ஒட்டுமொத்த பிரார்த்தனையும் ஈடேறும் நாள் வரவேண்டும். அதற்காக உழைக்கவேண்டிய பொறுப்பு மலையக இளைஞர்களுக்கு உண்டு.
அதேவேளை மலையக தலைவர்கள் இனியாவது ஒரே குடையின் கீழ் இணைந்து சமுதாய முன்னேற்றத்துக்கு பாடபடவேண்டும் என்பதே மக்களது எதிர்பார்ப்பு.

மலையக தொழில்நுட்பக் கல்லூரிகளில் தமிழ்மொழிமூலப் பயிற்சி நெறிகள் வேண்டும்

(தினக்குரலில் 30.08.2007 இல் வெளிவந்த கட்டுரை)

-த. மனோகரன்-

கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ, மாணவியர் தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர்ந்து பல்வேறு தொழில்நுட்பப் பாடங்களைப் பயில வசதிகள் செய்யப்பட்டுள்ளன. உயர் தொழில்நுட்பக் கல்லூரிகள் உயர்கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் அதேவேளை, தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் கீழும், வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழும் பல தொழில்நுட்பக் கல்லூரிகள் செயற்படுகின்றன.
வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழ் நுவரெலியா, கண்டி, பதுளை ஆகிய மலையக நகரங்களில் தொழில்நுட்பக் கல்லூரிகள் இயங்குகின்றன. இவை எதிலும் தமிழ்மொழிமூல பயிற்சிகள் வழங்கப்படுவதில்லை. ஏற்கனவே, நுவரெலியா, கண்டி ஆகிய இடங்களிலுள்ள தொழில்நுட்பக்கல்லூரிகளிலிருந்த தமிழ்மொழி மூல கற்கை நெறிகள் தற்போது நடைபெறுவதில்லை. பதுளையில் தமிழ் தட்டெழுத்து இயந்திரங்கள் போன்ற சாதனங்கள் பலவருடங்களுக்கு முன்பு வழங்கப்பட்டிருந்த போதும் தமிழ்மொழிமூல கற்கைநெறிகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லையென்று கூறப்படுகின்றது.
க.பொ.த. (சா.தர)ப் பரீட்சையில் சித்தியடைவது மட்டுமே தொழில்நுட்பக் கல்லூரி அனுமதிக்கான தகைமையாகவுள்ளது.
கணக்கியல் தொழில்நுட்பவியலாளருக்கான தேசிய சான்றிதழ் நெறிக்கான இரண்டு வருடப் பயிற்சி நெறியும், சுருக்கெழுத்து, தட்டெழுத்தாளருக்கும், கணினி பயிலுநருக்கான ஒருவருட சான்றிதழ் நெறியும் வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழ்வரும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படுகின்றன.
கணக்கியல் தொழில்நுட்பவியலாளருக்கான தேசிய சான்றிதழ் (N.C.A.T.) பாடநெறியில் வர்த்தகம், கணக்கியல், பொருளியல், கணிதம், வரிவிதிப்பு, உட்பட பல பாடநெறிகள் உள்ளன.
ஒருவருட பயிற்சி நெறியாக கணினி மற்றும் சுருக்கெழுத்து, தட்டெழுத்துப் பாடநெறியுள்ளது.
இப்பாடநெறிகளில் பயிலும் மாணவர்களுக்கு வரவு அடிப்படையில் மாதாந்தம் நானூறு ரூபாவுக்கு மேற்படாத கொடுப்பனவும் வழங்கப்படுகின்றது. அத்துடன், குடும்ப பொருளாதார நிலையை அடிப்படையாகக் கொண்டு ஐயாயிரம் ரூபா உதவு தொகையும் வழங்கப்படுகின்றது.
இவ்வாறு பாடசாலை, பல்கலைக்கழக உயர்கல்வி பயிலும் வசதியற்ற க.பொ.த. (சா.த.) பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் எதிர்கால தொழில்வாய்ப்பை உருவாக்கு முகமாக அரசாங்கத்தால் செயற்படுத்தப்படும் மேற்படி செயற்திட்டம் மலையகத் தமிழ் மாணவர்களைச் சென்றடையவில்லையென்பது கவலையளிப்பதாகும். இதுபற்றி எவரும் பொறுப்புடன் சிந்திப்பதாகவும் தெரியவில்லை.
மலையகத்தின் நுவரெலியா மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் ஐம்பத்திரெண்டு வீதத்தினராகத் தமிழர்களிருந்த போதும் அங்குள்ள தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழ்மொழிமூலப் பாடநெறி இல்லாமலிருப்பது ஒரு புறக்கணிப்பாகவே கருதப்பட வேண்டியதாகும். இதை ஒரு சமூக அநீதியாகவும் கொள்வதில் தவறில்லை.
சமூக அநீதி ஒழிப்புக்குப் பொறுப்பான அமைச்சர் பெ. சந்திரசேகரன் நுவரெலியா மாவட்ட தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர். அத்துடன், வாழ்க்கைத் தொழிற் பயிற்சிப் பிரதியமைச்சர் பெ. இராதாகிருஷ்ணனும் மலையக தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகவே உள்ளார்.
இவ்வாறான பொறுப்புமிக்க அமைச்சர், பிரதி அமைச்சர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மலையகத் தமிழ் மக்களின் பிள்ளைகள் தேசிய ரீதியில் பல்வேறு மட்டங்களில் அரசாங்கக் கல்விக் கொள்கைக்கமைய வழங்கப்படும் தொழில்நுட்பப் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ள வழி செய்யப்படாமலிருப்பது சமுதாய நோக்கில் வேதனைக்குரிய ஒன்றாகும்.
தொழில்நுட்பக் கல்லூரியில் சான்றிதழ் பெற்றவர்கள் தனியார்துறைகளில் வேலை வாய்ப்புப் பெற முன்னுரிமையுள்ளது. இன்று தமிழ் சுருக்கெழுத்து, தட்டெழுத்து, கணினி அறிவுகொண்டவர்களுக்குப் பெருந்தட்டுப்பாடு நிலவுகின்றது.
அரசாங்க சேவையில் முகாமைத்துவ உதவியாளர் சேவை போன்றவற்றில் இணைந்துகொள்ள சுருக்கெழுத்து, தட்டெழுத்து, கணினி அறிவு மேலதிக தகைமையாகவுள்ளது. இவ்வாறிருக்கும் போது குறிப்பிட்ட பாடநெறிகளைப் பெறும் வசதி இன்மையானது மலையகத் தமிழ் பிள்ளைகளின் எதிர்கால வளத்திற்கு ஒருதடையாகவே கணிக்கப்பட வேண்டும்.
பொருளாதார ரீதியில் வசதி குறைந்த, பல்வேறு சிரமங்களின் மத்தியில் வாழ்வை ஓட்டும் மலையகத் தமிழ் மக்களின், அவர்களது பிள்ளைகளின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தொழில்நுட்பக் கல்லூரிகளில் வழங்கப்படும் பயிற்சிகள் பெரும் உதவியாக, வழிகாட்டியாக அமையும்.
எனவே நுவரெலியா, கண்டி தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஏற்கெனவே இருந்த தமிழ்மொழிமூல பாடநெறிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கும் பதுளை தொழில் நுட்பக் கல்லூரியில் தமிழ்மொழி மூலப் பாடநெறிகளைத் தொடங்குவதற்குமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
புறக்கணிக்கப்பட்டுள்ள மலையக தமிழ் சமூக பிள்ளைகளைச் சமூக அநீதியிலிருந்து மீட்டெடுக்கவும், அவர்களுக்கு வளமாக வாழ்வதற்கு வாழ்க்கைத் தொழிற் பயிற்சியை அளிப்பதற்கும் இவ்விரு துறைகளுக்கும் பொறுப்பான அமைச்சர்களாகவுள்ள சந்திரசேகரனும், இராதாகிருஷ்ணனும் நடவடிக்கை எடுப்பார்களென மலையக தமிழ் பிள்ளைகளின் வளமான எதிர்காலத்தைப் பொறுப்புடன் நோக்கும் சமூக நலன்விரும்பிகள் எதிர்பார்க்கின்றனர்.
எம்மவர்கள் அமைச்சராக, பிரதி அமைச்சராக இருக்கின்றார்கள் என்று மக்கள் திருப்தியுறலாம். மலையகத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டு நாம் உயர் பதவிகளில் இருக்கின்றோமென்று அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் கூறிக்கொள்ளலாம். இவற்றால் சமுதாயம் எதுவும் பெறப்போவதில்லை.
நம்மவர்கள் உயர் பதவிகளில் இருந்தார்கள் என்று வரலாறு சொல்லுவதைவிட நமக்காக அவர்கள் இன்னின்ன ஆக்கபூர்வமான செயற்பாடுகளை ஆற்றினார்கள் என்று கூறப்பட வேண்டும். அதுவே, மக்களின் பெயரால் பதவிகளைப் பெற்றவர்களுக்கு அழகுமட்டுமல்ல கடமையும், பொறுப்பும்கூட.
மலையகத் தமிழ் பிள்ளைகளுக்கு நன்மை செய்யக்கூடிய சந்தர்ப்பத்தை நழுவவிடாது பொறுப்புள்ளவர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். செய்வார்களா?

களத்துக்கு வாருங்கள்...

மலையகம் தொடர்பான தரமான கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. சுதந்திரமாக தமது கருத்துக்களை இங்கு எழுதலாம். மலையக முன்னேற்றத்துக்கு சுயமான ஆலோசனைகளையும் காத்திரமான கருத்துக்களையும் முன்வைத்து சமுதாய வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்வோம். தவறு செய்பவர்களையும் அதற்கு வழிவகுப்பவர்களையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவருவோம்.

உங்களுடன்...

பரிதாபத்துக்குரியவர்கள் என மலையக மக்கள் மற்றய சமுதாயத்தினரால் நோக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு பொறுப்புக் கூறவேண்டிய கடப்பாடு பல்வேறு தரப்பினருக்கு இருந்தபோதிலும் யாரும் அதனை உணர்ந்ததாக இதுவரை தெரியவில்லை.அவ்வாறு கடமையை உணராதவர்களுக்கு இந்தத் தளம் சொற்போர்க்களமாகட்டும். கடமை உணர்ந்தவர்களுக்கு இந்தத் தளம் செயற்களமாகட்டும்.


-அன்புடன் இறக்குவானை நிர்ஷன்.