இலங்கை இலத்திரனியல் ஊடகங்களில் வானொலிகளுக்கென தனியான இடம் உண்டு. அதிலும் குறிப்பாக தனியார் வானொலிகள் மீது தமிழ்பேசும் மக்களிடையே அதிக வரவேற்பு இருந்தது, இருந்து கொண்டிருக்கிறது.
எனினும் தனியார் வானொலி அறிவிப்பாளர்கள் சிலரின் தற்போதைய போக்கு, ஆரோக்கியமான வானொலிக் கலாசாரத்தின் எதிர்காலம் குறித்து சிந்திக்க வைக்கிறது.
நான் இவ்வாறு வெளிப்படையாகக் கூறுவது என்னுடைய ஊடக நண்பர்கள் பலரை காயப்படுத்துவதாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. காத்திரமாக மிளிர்ந்து வளர வேண்டிய ஊடகத்துறையில் தினமும் காழ்ப்புணர்ச்சியுடன் கூடிய விடயங்களை கேட்டுச் சகிக்க முடியாத நிலைமையிலேயே இதனை எழுதத் துணிந்திருக்கிறேன்.
தனியார் வானொலிகளில் கடமையாற்றிய அறிவிப்பாளர்கள் சிலர் அங்குமிங்குமாக தாவி தற்போது நிகழ்ச்சி படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தாம் எதிர்பார்க்கும் களம் மற்றும் தமது எதிர்கால இலட்சியத்தை நோக்காக் கொண்டு மாற்றிடத்தில் தொழில் பெற்றுக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. ஆயினும் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்வது போல தாம் முதலில் பணியாற்றிய ஊடகங்களை கேலி செய்து கேவலமாகக் கிண்டலடிக்கும் பாணி வருந்தச் செய்கிறது.
ஒரு சில வாரங்களாக இதனைக் கவனித்து வருகிறேன். இப்படியே சென்றால் நிலைமை என்னாவது?
ஆரோக்கியமான வானொலிக் கலாசாரத்தை எவ்வாறு வளர்க்க முடியும்?
ஆசியாவில் முதன்முறையாக வானொலி ஆரம்பிக்கப்பட்டது இலங்கையில் தான். காலத்துக்குக் காலம் தொழில்நுட்பத்திலும் சரி, நிகழ்ச்சிப் படைப்பிலும் சரி, இதர விடயங்களிலும் சரி வானொலித்துறை வளர்ச்சி கண்டு வருகிறது என்பது பெருமை தருகின்ற போதிலும் ஒருவருக்கொருவர் முட்டி மோதிக் கொள்ளும் சொல்லாடல்களை சகிக்க முடியாமல் உள்ளது.
ஊடகங்களுக்கிடையில் போட்டித்தன்மை என்பது அவசியமானதாகும். அது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.
அதைவிடுத்து ஒரு சில அறிவிப்பாளர்கள் தமது போட்டி வானொலி அறிவிப்பாளர்களை மோசமான முறையில் இரட்டை அர்த்தங்களுடன் திட்டித் தீர்ப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
சிலர் மற்றையவர்களின் தனிப்பட்ட தகவல்களைக் கூட பெயரைக் குறிப்பிடாமல் கூறுகிறார்கள். இது எந்த வகையில் நியாயம் என்பது எனக்குப் புலப்படவில்லை.
சமுதாயத்தை விழிப்புணர்வூட்டி காத்திரமான முறையில் கட்டியெழுப்பும் பணியை செய்ய வேண்டிய கடப்பாடு பொறுப்புள்ள ஊடகம் என்ற வகையில் வானொலிகளையும் சார்ந்திருக்கிறது.
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகத்தில் பிரதான வகிபாகத்தை கொண்டு இயங்கும் வானொலியில் பணியாற்றுபவர்கள் முறையற்ற விதத்தில் நடந்து கொள்ளக் கூடாது.
வானொலியொன்றின் பெண் அறிவிப்பாளர் ஒருவரது குரல் இப்படிச் சொல்கிறது -
"கிளிகளைப் பற்றிக் கதைக்காதீர்கள், அதுவும் கலர் கலரான கிளிகளைப் பற்றி பேசவே வேணாம். அந்தக் கிளிகள் நாளைக்கு எங்கு பறக்குமோ, யார் வீட்டப் போகுமோ? யார் கண்டார்?"
மற்றுமொரு வானொலியொன்றின் ஆண் அறிவிப்பாளர் ஒருவர் இப்படிக் கூறுகிறார்-
"எல்லாரும் நிகழ்ச்சி செய்யலாம். ஆனா வித்தியாசமான நிகழ்ச்சி நம்மகிட்டதான் இருக்கு. கட கடனு ட்ரெய்ன் ஓடுற மாதிரி பேசினா யார்தான் கேட்பாங்க? அது நிலைக்காது - தம்பி இது உங்களுக்குத்தான் - நான் தம்பி னு சொன்னது யாருக்குனு தம்பிக்குப் புரிஞ்சா போதும்.
இதுமட்டுமல்ல இன்னும் நிறைய விடயங்கள் இருக்கின்றன. அவற்றை இங்கே எழுதுவதற்கு ஊடகத்துறை சார்ந்தவன் என்ற ரீதியில் வெட்கப்படுகிறேன்.
அறிவிப்பாளர்களுக்குள் தனிப்பட்ட ரீதியில் பிரச்சினை இருக்கலாம். அதற்காக ஒருவருக்கொருவர் பொதுவான இடத்தில் அதுவும் நேயர்களிடம் கேவலமாக திட்டித் தீர்த்துக் கொள்வது தீர்வைக் கொண்டு வருமா???
வானொலித் துறைக்குள் நுழைய வேண்டும் என்ற அவாவில் காத்திருக்கும் இளையோருக்கு நீங்கள் கற்றுக் கொடுக்கும் பாதை இதுதானா???
வானொலி அறிவிப்பாளர்கள் என்றால் தங்களுடைய ஹீரோக்கள் என்று நினைத்துப் பழகும் நேயர்கள் இன்னும் இருக்கிறார்கள். ஆனால் அதற்கு தாம் தகுதியுடையவர்கள் தானா என நான் மேற்சொன்ன அறிவிப்பாளர்கள் சிந்திக்க வேண்டும்.
(தற்போதைய நிலைவரப்படி - இன்று தாம் திட்டித் தீர்க்கும் அறிவிப்பாளர்கள் நாளை தங்களோடு இணைந்து நிகழ்ச்சி படைக்கவும் கூடும் அல்லது அவர்கள் பணியாற்றும் வானொலியில் இணையும் வாய்ப்பும் இருக்கிறது என்பதை மறக்கக் கூடாது.அதாவது இன்று உங்களுடைய எதிரி நாளை உங்களுக்கு நண்பராகலாம். அதேபோல் இன்று உங்களுடைய நண்பர் நாளை எதிரியாகலாம்.)
அண்மையில் நிகழ்ச்சியொன்றுக்கு சென்றிருந்தேன். அங்கு வானொலியொன்றின் அறிமுகம் குறித்த குறிப்பு ஒன்றில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.
//வானொலி நேயர்களின் ரசனையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப தமது நிகழ்ச்சிகளில் மாறுதல்களை ஏற்படுத்த அவை தவறியுள்ளன. இந்நிலையில் வானொலி நேயர்கள் மத்தியில் மாற்றத்துக்கான தேவை அதிகளவில் உணரப்படுகின்ற காலமே இது//
அப்படியாயின் இதுவரை காலமும் மாறுதல்களை ஏற்படுத்த சம்பந்தப்பட்டவர்களே தவறிவிட்டார்கள் என்றுதானே அர்த்தம்?
போட்டித் தன்மை இருக்கட்டும். அது ஆரோக்கியமான வானொலிச் சூழலை வளர்க்கட்டும். மாறாக கேவலமான வார்த்தைகளால் திட்டித் தீர்த்து கோபங்களை வெளிக்காட்டும் களமாக வானொலி நிகழ்ச்சிகளை மாற்றியமைக்காதீர்கள் என்பதே அன்பான வேண்டுகோள்.
நான் ஊடகவியலாளனாக அன்றி சாதாரண பொதுமகனாகவே எனது கருத்துக்களை முன்வைத்திருக்கிறேன். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் இது எழுதப்பட்டதல்ல என்பதை பணிவுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
-இராமானுஜம் நிர்ஷன்