Tuesday, June 27, 2017

சிங்கராஜ வனம் - 'காட்டின் காவலாளிகளை இழக்கும் அபாயம்'


லங்கை சிங்கராஜ வனம் சர்வதேச ரீதியில் பாதுகாக்கப்பட்ட இயற்கை சொத்தாக கருதப்படுகிறது. நமது நாட்டில் உள்ள சொத்து என்பதாலோ என்னவோ இந்த வனத்தின் அருமை பற்றி பலர் அறிந்துகொள்ள முற்படுவதில்லை.

சிங்கராஜ வனத்தில் இப்போது இரண்டு யானைகள் மட்டுமே வாழ்கின்றன. அதன் பின்னர் யானைகள் வாழும் வனாந்தரம் என்ற மதிப்பினை சிங்கராஜ வனம் இழக்கும் நிலை உருவாகியுள்ளது.

வனவள திணைக்களத்தின் இரத்தினபுரி மாவட்ட அதிகாரிகள் இந்தத் தகவலை ஞாயிறு தினக்குரலிடம் உறுதிப்படுத்தினர். அவை ஆண் யானைகள் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். யானைகளின் வாழ்விடங்களுக்கு அபாயம் ஏற்படும் போது அவை கோபத்துக்கு உள்ளாவதை யாரும் தவிர்க்க முடியாது எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

1988 ஆம் ஆண்டு 4ஆம் இலக்க தேசிய வனச்சொத்துக்களை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் 1988 ஆம் ஆண்டு ஒக்டோபர் 21 ஆம் திகதி 528ஃ14 என்ற வர்த்தமானி அறிவித்தலில் சிங்கராஜ வனம் தேசிய சொத்தாக பிரகடனப்படுத்தப்பட்டது.

ஓர் இயற்கை வனம் தேசிய சொத்தாக பிரகடனப்படுத்தப்பட்டமை உலகத்திலேயே இதுவே முதற் தடவையாகும்.
சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த சிங்கராஜ வனம் 1989 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பினால் சர்வதேச ரீதியில் பாதுகாக்கப்பட்ட இயற்கை சொத்தாக பிரகடனப்படுத்தப்பட்டது.
சப்ரகமுவ, தென் மாகாணங்களை இணைக்கும் சிங்கராஜ வனம், இறக்குவானை மலைக் குன்றுகளில் சுமார் 1170 மீற்றர் உயரத்தில் தனது கம்பீரத்தை காட்டி நிற்கின்றது.
யால போன்ற வறட்சியான காலநிலை மிக்க சூழலில் நாம் காணுகின்ற விலங்குகளை சாதாரணமாக இங்கு காண முடியாது. இந்த வனாந்தரத்திலுள்ள விலங்குகளை காணுவது மிக அரிது. வனத்தின் அடர்த்தி காரணமாகவும் மிக உயரமான மரங்கள், செடி, கொடிகள் காரணமாக காட்டுக்குள் நுழைவதும் மிகவும் சிரமமானது.

இந்த வனத்தை அண்டிய பகுதிகளில் யானைகளின் தொல்லை அதிகம் இருப்பதாக தொடர்ந்தும் முறைப்பாடு செய்யப்படுகின்றன. குறிப்பாக பொத்துபிட்டிய, கலவான, தெனியாய பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது.

அண்மையில் யானை தாக்குதலின் காரணமாக பொத்துபிட்டிய பகுதியில் இரு உயிர்கள் பலியாகின. இதனையடுத்து யானைகளை வேறு காட்டுப்பகுதிகளுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களால் முன்வைக்கப்பட்டு வருகிறது.

ஆனால் அங்கு இரண்டு யானைகள் மாத்திரமே வாழும் தகவல் அந்த மக்களுக்கு தெரியாது. பல யானைகள் வாழ்வதாகவே அவர்கள் கருதுகிறார்கள்.

இதேவேளை, யானைகளை வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாது என இன்னுமொரு சாரார் கருத்து தெரிவித்துள்ளனர்.
1999 ஆம் ஆண்டு காட்டு யானையை பிடித்துக் கொண்டு செல்ல வனவள திணைக்கள அதிகாரிகள் இறக்குவானை-பொத்துபிட்டிய வீதி டிப்டீன் தோட்டப்பகுதிக்குச் சென்றிருந்தனர்.
அந்தக் குழுவுக்கு மிருக வைத்தியர் நந்தன அத்தபத்து தலைமை தாங்கியிருந்தார்.

அதன்போது பொதுமக்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக அவர்களால் அந்தக் காரியத்தை செய்ய முடியாமல் போயிற்று.
யானைகள் இருக்கும் பயத்தினால் தான் காடழிப்பு உட்பட சட்டவிரோத செயற்பாடுகள் நடைபெறுவதில்லை என அதன்போது பொதுமக்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

காட்டுக்குள் சட்டவிரோத மதுபான உற்பத்தி தடுக்கப்படுவதற்கு யானைகள் இருக்கும் என்ற பயமே காரணம் எனவும் மக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இப்போது இரண்டு யானைகள் மாத்திரமே காட்டில் வாழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கராஜ வனத்தில் வாழ்ந்த யானைக் கூட்டம் கன்னெலிய காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளதாகவும் அவை மீளத் திரும்பக் கூடிய சாத்தியங்கள் இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

யானைகள் அவற்றுக்கென தனியான பாதைகள் வகுத்து அவற்றை மையமாகக் கொண்டு பயணிக்கின்றன. சிங்கராஜ வனாந்தரப்பகுதியில் இடம்பெறும் காடழிப்பு காரணமாக அவை நீர்நிலைகளை சென்றடைவதில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்குகின்றன. இதனாலேயே குடியிருப்பு பகுதிகளுக்கு வர நேரிடுகிறது.

இந்த நிலை காரணமாக சிங்கராஜ வனத்தில் வாழ்ந்த மேலும் பல யானைகள் மாத்தறை, அக்குறெஸ்ஸ காடுகளுக்கும் இடம்பெயர்ந்துள்ளன.
இறக்குவானையை அண்டிய பகுதிகளிலும் பொத்துபிட்டிய மற்றும் சூரியகந்தை ஆகிய பகுதிகளிலும் சிங்கராஜ வனம் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்படுகிறது.

அங்கே காடுகளுக்கு அண்மித்த பகுதிகளில் தேயிலையும் பயிரிடப்படுகிறது. இறக்குவானையிலிருந்து பொத்துபிட்டியவுக்கு செல்லும் வழியின் இரு மருங்கிலும் பெரும் அடர்த்தியான காடு காட்சியளிக்கிறது. அந்த வீதியின் அருகில் இயற்கையான அழகிய ஆறு ஊற்றெடுத்துப் பாய்கிறது.

யானைகள் இந்த சமாந்தரமான நிலத்தில் மிக நீண்ட நேரத்தை கழிக்கின்றன. எனினும் அந்தப் பகுதிகளிலும் தற்போது குடியிருப்புகள் பெரும்பான்மைகாக புதிதாகவே முளைத்திருக்கின்றன.
யானைகளின் வாழ்விடத்தை மனிதர்கள் அழிக்கும் போது இனி யானைகளுக்கான தீர்வுகள் தான் என்ன?

சிங்கராஜ வனம் இலங்கைக்கே உரித்தான அரிய வகை தாவரங்களையும் உயிரினங்கள் பலவற்றையும் தன்னகத்தே கொண்டது. கடந்த 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் சிங்கராஜ வனத்தில் இதுவரை கண்டிராத புதிய வகை உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. அத்தோடு மனிதனுக்கு அவசியமான பிராணவாயு, நீர்வளம் முதல் அனைத்துக்குமே இயற்கை மூலாதாரமாக விளங்குகிறது.

எனினும் சுயநலமாக சிந்திக்கும் மனிதனால் இயற்கை வளத்தை பாதுகாக்கும் மனப்பாங்கு தொலைந்து போகிறது. இதனால் இலங்கையிலுள்ள அரிய மிருகங்களை படங்களில் மாத்திரமே எதிர்கால சந்ததியினர் காணும் துர்ப்பாக்கிய நிலை உருவாகுவதை தவிர்க்க முடியாது.

-இராமானுஜம் நிர்ஷன்-
நன்றி தினக்குரல் -  04.06.2017