வாசுவும் சாமரவும் மிக நெருங்கிய நண்பர்கள் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வாசு வியாபார நிலையம் ஒன்றை நடத்தி வருகிறான். அரசாங்க நிறுவனம் ஒன்றில் தொழில்புரிந்து வருகிறான் சாமர. இருவருக்கும் இடையில் மூன்று வருட நட்பு இருந்துள்ளது.
ஒரு தேநீர் கோப்பையில் இருவரும் பகிர்ந்து நுகரும் வகையிலும் ஒரே உணவைப் பகிர்ந்து உண்ணும் வகையிலும் நட்பு வளர்ந்திருந்தது. சாமர தனது நண்பர்கள் சிலரையும் (சிங்களவர்கள்) வாசுவுக்கு அறிமுகப்படுத்தத் தவறவில்லை.
இப்படியிருக்கையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சாமர தனது திட்டம் ஒன்றுகுறித்து வாசுவுடன் கலந்துரையாடியுள்ளான். அந்தத் திட்டத்தை இவ்வாறு விபரித்துள்ளான்.
“அதிர்ஷ்டலாபச் சீட்டு தயாரிப்பவர்களுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. குறிப்பிட்ட ஒரு சீட்டில் உள்ள இலக்கங்கள் தெரிவுசெய்யப்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும். சரியாக குறிப்பிட்ட தினத்தில் சனிக்கிழமை அதிர்ஷ்டத்தில் திட்டமிடப்பட்ட குறித்த இலக்கங்கள் தெரிவாகும். கிட்டத்தட்ட 15 கோடி பணம் இதன்மூலம் கிடைக்கும். இரண்டு வருடங்களுக்கு ஒரு முறைதான் இப்படி திட்டம் ஒன்றை அரங்கேற்றலாம்.
இப்படி செய்வதற்கு 25 இலட்சம் ரூபா செலவாகும். ஆனால் வருமானம் அதை விட பன்மடங்கு கிடைக்கும்.
இங்கே, சீட்டு தயாரிப்பவர், இலக்கத்தை தெரிவு செய்பவர், அச்சிடுபவர் என ஐந்து பேருக்கு பணம் கொடுக்க வேண்டியுள்ளது. நீ பணம் தந்தால், அடுத்த கட்ட ஏற்பாடுகளுக்குச் செல்லாம்” என நம்பிக்கையூட்டியுள்ளான் சாமர.
இந்த விடயத்தை முழுமையாக நம்பிய வாசு, எதைப்பற்றியும் யோசிக்காமல் சம்மதித்துள்ளான். அதுமட்டுமல்லாது சாமர கோரிய முதல்கட்டப் பணத்தொகையான 5 இலட்சத்தையும் கொடுத்துள்ளான்.
இப்படி கட்டம் கட்டமாக 23 இலட்ச ரூபா பணம் வாசுவால் சாமரவுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. சமார, இரண்டு அதிர்ஷ்டலாபச் சீட்டுகளை வாசுவுக்கு கொடுத்த போதிலும் அதில் எந்தவொரு இலக்கமும் தெரிவு செய்யப்படவில்லை.
இப்படி காலம் நகர்கையில், சமரவின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வாசுவைச் சந்திப்பதிலிருந்து அவன் தவிர்த்துவந்தான். இதனால் சந்தேகம் கொண்ட வாசு தான் கொடுத்த பணத்தைக் கேட்டுள்ளான்.
இந்த நிலையில், வாசுவை மதிய உணவு விருந்துக்காக தனது வீட்டுக்கு அழைத்தான் சாமர. இனி நடந்த விடயங்களை வாசு இப்படி விபரிக்கிறான்.
“அன்று மதியவேளை சாப்பாட்டுக்குப் போனேன். சாமரவும் அவனது மனைவியும் வீட்டில் இருந்தார்கள். சாமரவின் மனைவிதான் எனக்கு உணவு பரிமாறினாள். அன்றுதான் அவளை நான் முதல் முதலாகப் பார்த்தேன். ஆனாலும் அவளுடைய நடத்தையில ஏதோ மாற்றம் இருந்தது. என்னருகில் இருந்து என்னை உரசிக்கொண்டே இருந்தாள். பார்வையும் வித்தியாசமாக இருந்தது.
நான் சாப்பிட்டு முடியும் முன்பே சாமர எழுந்துவிட்டான். அந்த நேரத்தில் என்னுடைய கோப்பையின் கீழ் ஏதோ காகிதத்தை வைத்துவிட்டு உள்ளே சென்றாள் சாமரவின் மனைவி. நான் அதை எடுத்துப் பார்த்தேன். அது கைத்தொலைபேசி இலக்கம்.
நான் கொஞ்ச நேரத்தில அங்கிருந்து வந்துவிட்டேன். அன்றிரவு அந்தத் தொலைபேசி இலக்கத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. சாமரவின் மனைவி எனக்கு அழைத்திருந்தாள். நான் ஸ்மார்ட்டாக இருப்பதாகவும் என்னைச் சந்திக்க வேண்டும் எனவும் கூறினாள்.
இப்படி சில நாட்கள் நகர்ந்தன.
ஒருநாள் அவள் எனக்கு அழைப்பு எடுத்தாள். ‘சாமர அனுராதபுரத்துக்குச் சென்றிருக்கிறார். நாளை மாலை தான் வருவார். நீங்கள் இன்றிரவு வீட்டுக்கு வர முடியுமா? இரவு 10 மணிக்கு வாருங்கள்’ என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
சாமரவின் மனைவி அழகானவள். அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருந்தது. நான் சாமரவின் வீட்டுக்குச் சென்றேன். அவள் செக்ஸியாக ஆடை அணிந்திருந்தாள். எனக்கு என்ன வேண்டும் எனக் கேட்டாள். நான் எதுவும் பேசாமல் அமைதியாக அவளைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
சற்று நேரத்தில் அவள் என்னை இறுகக் கட்டி அணைத்துக்கொண்டாள். நானும் அணைத்துக்கொண்டேன்.
திடீரென கதவைத் திறந்துகொண்டு சிலர் வந்தனர். அவர்களில் சாமரவும் இருந்தான். எதுவும் பேசாமல் என் கன்னத்தில் மாறி மாறி அறைந்தான் சாமர. மற்றொருவன் என் பின் பக்கத்திலிருந்து மார்போடு பிடித்து கைகள் அசையா வண்ணம் இறுக்கிக்கொண்டான். இன்னொருவன் வீடியோ பதிவு செய்தான். மற்றுமொருவன் கதவுக்கு அருகில் நின்றான்.
சாமர என்னைக் கேவலமாகத் திட்டித் தீர்த்தான். என்னைப் பொலிஸில் ஒப்படைப்பதாகவும் மிரட்டினான். சாமரவின் மனைவி அறைக்குள் இருந்து என்னைக் கிண்டலாகப் பார்த்ததை நான் அவதானித்தேன்.
பின்னர் நான் அங்கிருந்து அடித்து விரட்டப்பட்டேன்.
என்னுடைய 23 இலட்சம் பணத்தின் கணக்கைத் தீர்க்க கணவனும் மனைவியும் இணைந்து நடத்திய நாடகம் இதுவென நான் பின்னர் அறிந்துகொண்டேன்.
எனது பணத்தைத் தருமாறும், மனைவியின் வேண்டுகோளுக்கு அமையவே வீட்டுக்கு வந்ததாகவும் நான் அவனுக்கு அழைப்பு எடுத்து கூறினேன். ‘உன்னோடு இனி எந்தத் தொடர்பும் இல்லை. உன்னைப் பொலிஸ் நிலையத்தில் பிடித்துக்கொடுப்பேன். எங்கேயாவது ஓடியொளிந்துகொள். நீ ஒரு கேவலமான நாய்’ எனப் பதில் கிடைத்தது” என நடந்த சம்பவத்தை விபரித்தான் வாசு.
நூதனமான திருட்டுச் சம்பவங்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்றன. அதற்கு வாசுவின் இந்தக் கதை ஓர் உதாரணம். வஞ்சகர்கள் நிறைந்த இந்த உலகத்தில் சூழ்ச்சியோடு திட்டமிடப்பட்டு இந்தக் கொள்ளை அரங்கேறியிருக்கிறது. இங்கே நான் யாரையும் நியாயப்படுத்தவில்லை. சில பலவீனங்களைப் பயன்படுத்தி இப்படியும் கொள்ளைகள் இடம்பெறுகின்றன என்பதை சுட்டிக்காட்டவே முனைந்துள்ளேன்.
அவதானமாக இருப்போம்.
-நிர்ஷன் இராமானுஜம்-
16.02.2019