மலையக மக்களின் வாழ்க்கைப் பயணம் ஆரம்பம் முதலே போராட்டமாகத்தான் இருந்துவருகிறது. மலைகளில் கொழுந்துக்கூடையும் மண்வெட்டியும் சுமக்கும் இவர்கள் மனிதில் அதற்கும் மேலான சுமைகளைத் தாங்கியவர்களாகவே வாழ்ந்து வருகிறார்கள்.
இவர்களின் வாழ்க்கை ஜீவனத்தையும் நாளாந்த நடைமுறையினையும் ஒரு மூன்றாவது மனிதனின் பார்வையிலன்றி அவர்களுக்குள் ஒருவராக இருந்து பார்த்தலின் பிரதிபலன் நிச்சயம் கண்ணீராகத்தான் இருக்க முடியும். ஏனென்றால் அந்தளவுக்கு வலிகள் நிறைந்த வாழ்க்கை அவர்களுடையது.
“தங்க இடமும் தங்கக் காசும் இலவசமாம், தேயிலைக்கடியில் மாசியும் தேங்காயும் கிடைக்குமாம்” என நம்பிவந்து ஏமாற்றப்பட்டவர்கள் என நாட்டார் பாடல்கள் உட்பட இன்னும் கேளிக்கையாகக் கூறுவதுண்டு. அப்படியென்றால் இவர்களின் ஆரம்பமே ஏமாற்றம் என்பது தெளிவாகிறது. இதன் தொடக்கமோ தெரியவில்லை அவர்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக யாரோ ஒருவரால் காலம் காலமாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.
வறுமை என்னும் தீயின் அணல் மக்களை வாட்டி வதைத்துக்கொண்டிருக்க அரசியல் இலாபம் தேடும் சில தொழிற்சங்கங்களும் அரசியல்தலைவர்களும் மாற்றுப்புறத்தில் குளிர்காய்ந்துகொண்டிருக்கிறார்கள்.
எந்தவொரு தொழிற்சங்கமாயினும் சரி அரசியல்கட்சியாயினும் சரி மக்களின் நன்மைகருதி ஆரம்பிக்கப்பட்டதென்றால், அது இறுதிவரை நிறைவேற்றப்பட வேண்டும். தாமே ஒட்டுமொத்த மலையக மக்களின் பிரதிநிதிகள், சேவைக்கு முன்னுதாரணமானவர்கள் எனச் சொல்லிக்கொள்பவர்கள் தமது வாழ்நாள் காலத்தில் பேச்சில்போன்று செயலிலும் தீரத்தை காட்டுவார்களாயின் வரலாற்றில் அவர்களுடைய பெயர் நிச்சயமாக எழுதப்படும்.
ஆனால் அதற்கு மாறான சம்பவங்களே இங்கு நடைபெற்று வருகின்றன. அப்பாவி தமிழர்களின் வாழ்க்கையை திறந்த மேடையாக்கிக்கொள்ள முனையும் பலர் அதில் நாடகமாடி வெளித்தோற்றத்தில் சிறந்தவர்கள் என காட்ட முற்படுகிறார்கள். மலையகத்தில் இயங்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆயினும் மலையக மக்கள் முன்னணி உள்ளிட்ட ஏனைய தொழிற்சங்கங்களாயினும் அவற்றுக்கென்று தனிக்கொள்கை, தனிச்செயற்பாடு, தனிநோக்கங்கள் உண்டு. அந்த நோக்கங்களை அவை எந்தளவுக்கு அடைந்துள்ளன என்பதை சுயமதிப்பீடு செய்தல் அவசியமாகும்.
குறிப்பாக மலையக தொழிலாளர்களின் சம்பள விவகாரத்துக்கு பிற்போக்குடைய கொள்கைகள் பின்பற்றப்பட்டமைக்கான காரணத்தை பொறுப்புக்கூறவேண்டிய அனைத்து தொழிற்சங்கங்களும் பதிலளிக்க முன்வரவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
ஐந்நு}று ரூபா சம்பள உயர்வை பெற்றுத்தருவோம். எந்தவொரு தொழிற்சங்கமும் எமது நோக்கத்துக்கு தடையாக இருக்கக்கூடாது என ஆரம்பத்தில் கூறிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அமைச்சர்கள் தொழிலாளர்களுக்கு கூறும் பதில் என்ன? பொது நலனுக்காக அரசியலில் ஈடுபடுவதாக கூறும் அனைத்து தமிழ் அரசியல்தலைவர்களும் மக்களின் நலனுக்காக இணைந்து குரல்கொடுக்காமைக்கு காரணம் என்ன?
பாதைசெப்பனிடுவதும்,கூரைத் தகடுகள் கொடுப்பதும் மட்டுமே மலையக அபிவிருத்தியும் மக்களுக்கான சேவையும் என்ற பிரதான எண்ணத்தினை அரசியல்தலைவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையை தீர்த்துவைப்பதன் மூலம் மலையகத்தில் பலகாலமாக இருந்துவரும் நிரந்தரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம்.
மலையகத்தில் கல்வியில் பாரியதொரு மாற்றத்தை ஏற்படுத்தவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு. சிறுபராயத்தில் குழந்தைகளுக்கு போஷாக்கான உணவு கிடைக்காததனால் அவர்களின் கல்வி வளர்ச்சியும் குன்றுகிறது. தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் வழங்கப்படுமானால் இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடலாமல்லவா?
அதேபோன்று “சிறுவர் தொழிலாளர்கள்” என்ற கொடுமை மலையகமெங்கும் பாரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இதற்குப் பெற்றோர் விழிப்புணர்ச்சி கொள்ளாதது முக்கியமான காரணம் எனினும் வறுமையே து}ண்டுகோலாக அமைகிறது. இங்கு சம்பள அதிகரிப்பின் தேவை உள்ளதை நம் தலைவர்கள் உணர்வார்களா?
வேதனையோடு தொடரும் மக்களின் வாழ்க்கையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் அரசியல்தலைவர்கள் வரலாற்றுக்கு கட்டாயம் பதில்சொல்லியாக வேண்டும். அல்லது கறைபடிந்த மக்களின் வாழ்க்கையில் ஒரு கறுப்புப் புள்ளியாக அவர்களின் பெயர் என்றும் அவமானத்தை குறித்துக்காட்டிக்கொண்டிருக்கும்.
அரசியல், தொழிற்சங்க பேதங்கள் தேவையில்லை, யார் பெரியவர் என்ற நிலையும் அவசியமில்லை, மக்களுக்காக ஒன்றிணைந்தால் நிச்சயமாக சாதிக்க முடியும். அது எமது மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வாக அமைவதுடன் ஆரோக்கியமான, காத்திரமான எதிர்காலத்துக்கு நல்ல அடித்தளமாகவும் அமையும்.
மக்களால் மக்களுக்காக தெரிவுசெய்யப்பட்ட தலைவர்கள் இதுபற்றி சிந்திக்க வேண்டும். வலிமை மிக்க மனித உணர்வுகளை சுயலாபத்துக்காக கிள்ளிக் கொலைசெய்யாது அரசியலின் உண்மையான சேவையை வழங்க முன்வருதலே காலத்தின் தேவையாகும்.
அமைச்சர் ஆறுமுகனுக்கு:
* உங்களால் 500ரூபா சம்பளம் பெற்றுத்தரமுடியாது என்று ஆரம்பத்திலிருந்து நீங்கள் அறிந்துகொண்டீர்கள். ஆனாலும் மக்களை ஏமாற்றுவதற்காக ஏன் போலி வாக்குறுதிகளை கொடுத்தீர்கள்?
* வேறு தொழிற்சங்கங்கள் தலையிடாமல் இருந்தால் நிச்சயமாக 500ரூபா சம்பளம் பெற்றுக்கொடுக்க முடியும் என்று உறுதிபடச்சொன்ன நீங்கள் இப்போது சாதாரண தொழிலாளியின் முகத்தை எந்த மனச்சாட்சி கொண்டு பார்க்கப்போகிறீர்கள்?
* தலைமைத்துவம் என்பதை உங்களுடைய மக்களுக்கு சரியாகச் செய்தீர்கள் என்பதில் நு}று வீதம் உடன்பாடு உங்களுக்கு உண்டா?
அமைச்சர் முத்துசிவலிங்கத்துக்கு:
*“உன்னை வெள்ளைவேனில் து}க்குவேன்। நாய்களை வைக்கவேண்டிய இடத்தில் தான் வைக்கவேண்டும்” என்று பாரவத்தை தோட்டத்தில் பகிரங்கமாக ஒரு தொழிலாளரைப் பார்த்துக் கேட்ட உங்களையும் மக்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்களே என்பதை நினைக்கும்போது வெட்கப்படுகிறேன்।
* ரூபா 285 என்பது நியாயமான சம்பள உயர்வுதான் என நாகூசாமல் சொல்லும் நீங்கள், உண்மையில் அந்த மக்களோடு வாழ்ந்திருக்கிறீர்களா என்பதில் சந்தேகம் எழுகிறது?
ஊவா மாகாணசபை உறுப்பினர் வேலாயுதத்துக்கு:
*ரூபா। 285 என்பது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன் தனிப்பட்ட முடிவாகும். ஆதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 500 ரூபா பெற்றுக்கொடுக்க தொடர்ந்து பேச்சுநடத்துவோம் என்று வெளிப்படையாக ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்துவிட்டு மறுபுறம் கபடநாடகம் ஆடிய உங்களுக்கும் சாதாரண துரோகிகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?
* முதலாளிமார் இணைந்து உங்கள் அனைவருக்கும் கொடுத்த மதுபானத்தில் மனச்சாட்சி கரைந்துபோய் சுயநினைவற்றுதான் மறுபக்கம் சாய்ந்தீர்கள் என வெளியில் பேசிக்கொள்ளவதை உங்கள் மௌனம் ஏற்றுக்கொள்கிறதா?
* அடுத்த தேர்தலிலும் சம்பள உயர்வை கருப்பொருளாக வைத்து போட்டியிட எண்ணம் கொண்டிருப்பதால் தான் இந்தத் துரோகத்தை மக்களுக்கு செய்தீர்களா?
வேதனையோடு தொடரும் மக்களின் வாழ்க்கையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் அரசியல்தலைவர்கள் வரலாற்றுக்கு கட்டாயம் பதில்சொல்லியாக வேண்டும். அல்லது கறைபடிந்த மக்களின் வாழ்க்கையில் ஒரு கறுப்புப் புள்ளியாக அவர்களின் பெயர் என்றும் அவமானத்தை குறித்துக்காட்டிக்கொண்டிருக்கும்.
-இராமானுஜம் நிர்ஷன்
6 comments:
வணக்கம் நிர்ஷன்…..
நீண்ட நாட்களுக்கு பின்னர் தங்களின் பதிவை பார்க்க கிடைத்தது மகிழ்ச்சி. இலங்கை வாழ் இந்திய தமிழர்களின் (எனக்கு இந்த சொற்பிரயோகத்தில் நம்பிக்கையில்லை. அவர்களும் இலங்கைத் தமிழர்கள் என்று நம்புபவன் நான். ஆனாலும், தங்களின் கட்டுரை தொடர்பில் ஆராயும் பொழுது அந்த வார்த்தை பிரயோகத்தை கையாள்கிறேன்) இரத்தத்தை கம்பனி முதலாளிகள் மட்டுமல்ல மலையக அரசியல் தலைவர்களுமே சேர்ந்து அட்டைபோல உறிஞ்சி வருகிறார்கள். புதிய அரசியல் தலைமைகள் என்று உருவாகிய மலையகத் தலைவர்களும் மக்களின் வியர்வையையும், இரத்தத்தையும் விற்றே வருகிறார்கள். இந்த நிலையில் மக்கள் பாரிய விழிப்புணர்வு பெறவேண்டும். அது எந்தவித அரசியல் கட்சிகளின் பின்னணியுமின்றி சாத்தியப்பட வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்கான உரிமைகளை அவர்களே பெற்றுக்கொள்ள முடியும்.
கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் பண்டாரவளை பிரதேசத்திலுள்ள மக்களுடன் ஒருவாரம் பழகும் சந்தப்பம் கிடைத்தது. அப்பொழுதுதான் அவர்களின் உண்மையான வாழ்க்கை நிலை எனக்கு புலனாகியது. 8 அடி லயன்களுக்குள் இரண்டு குடும்பங்கள் வாழ்கின்ற நிலைகளையெல்லாம் எப்படி சொல்வது?. இவற்றுக்கு, ஆண்டாண்டு காலமாக மலையக தமிழர்களின் அரசியல் சக்திகள் என்று சொல்லுகின்ற அரசியல் தலைமைகளே முக்கிய காரணமாக இருக்கிறார்கள் என்பது மறுக்கவும், மன்னிக்கவும் முடியாத உண்மை. மலையக இளைஞர், யுவதிகளே தங்களது உரிமைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு அவர்கள் தங்களது முடிவுகளை தாங்களே எடுக்க வேண்டும்.
மீண்டும் சந்திக்கிறேன்.
மருதமூரான்.
வணக்கம் நண்பரே,
ஒரு சில பிரச்சினைகள் காரணமாக வலைப்பக்கம் வரமுடியவில்லை. அதை மற்றுமொரு பதிவில் குறிப்பிடுகிறேன்.
அந்தச் சொற்பிரயோகம் பிழையானதுதான். இருந்தாலும் வழக்கத்திலுள்ள சொல்லை தான் பலருக்கு விளங்கிக்கொள்ள முடிகிறது. அதனால் குறிப்பிடுகிறேன்.
நீங்கள் சொன்னது மெத்தச் சரி. மக்களோடு வாழ்ந்துபார்த்தால் தான் அவர்களின் உணர்வுகளும் வலியும் நன்றாகத் தெரியும்.
சமுதாயத்தின்மீது ஆர்வமும் ஈடுபாடுமுள்ள ஆசிரியர்களை ஒன்றிணைத்து சில வேலைத்திட்டங்களை செய்யலாம் என நினைத்திருக்கிறேன். நிச்சயமாக அது விரைவில் சாத்தியப்படும்.
நன்றிகள்.
அவசியமான பதிவு
போராட்டம் பற்றி எனது பள்ளி அதிபருடன் பேசிக்கொண்டிருந்த போதே சொன்னேன். பாருங்கள் திடீரென போராட்டத்தை நிறுத்திக் கொண்டு நாங்கள் இறங்கி போனோம் அவர்கள் ஏறி வந்தார்கள் இடைநடுவில் தொழிலாரர்களுக்கு பாதகமில்லா தீர்வுக்கு வந்தோம் என கதையளப்பார்கள் என சொன்னேன். காலங்காலமாய் இதுதானே நடக்கிறது.
தர்ஷன்,
உங்களைப் போன்றோரின் பங்களிப்பு மிக அவசியமாகிறது. குறிப்பாக சிறுவர் தொழிலாளர்கள் விடயத்தில் களத்தில் இறங்க வேண்டும்.
நீங்கள் மாத்தளையைச் சேர்ந்தவர் தானே?
அங்கு சுதாகரன், தாசன் போன்ற ஆசிரிய நண்பர்கள் தனிப்பட்ட ரீதியில் பல்வேறு உதவிகளை செய்துவருகிறார்கள். நீங்கள் இணைந்து செயற்பட்டால் சில பிரச்சினைகளை அடியோடு ஒழிக்கக் கூடியதாக இருக்கும்.
நன்றி
அட சுதாகரன் உங்கள் நண்பரா தாசன் என்று நீங்கள் சொல்வது காளிதாசையா
நிர்ஷன் நான் கடமையாற்றும் பாடசாலையும் தினம் ஒரு மணி நேரம் காட்டு வழியே நடந்து செல்ல வேண்டிய ஒரு பின்தங்கிய பிரதேசம்.
நம் மக்களிடம் பொருளாதார வறுமை எப்படி இருந்தாலும் சிந்தனை வறுமை தலை விரித்தாடுகிறது. நான் நியமனம் பெற்ற நாள் தொட்டு அங்கு மக்களிடம் எவ்வளவு முயன்றாலும் " நான் மாறுவேனா" என்ற ரீதியிலே இருக்கிறார்கள்.
சாதிய அடிப்படையிலான பிளவுகள் அதிகம். முறைகேடான பாலியல் தொடர்புகள், சிறுவயது திருமணங்கள், கச்சிப்பு, இன்னும் நான் அறிந்திராத போதைப் பழக்கங்களும் அதிகம்.
நாங்களும் பாடசாலையில் பல கருத்தரங்குகள் ஏற்பாடு செய்து எவ்வளவோ தெளிவு படுத்தினாலும் ம்ஹ்ம் மாற்றமே இல்லை.
கிட்டத்தட்ட பல நிறுவனகளினதும் தனிநபர்களினதும் காலில் கையில் விழுந்து எத்தனையோ உதவிகள் பெற்றுத்தருகிறோம். அதை வாங்கி கொள்ள ஓடோடி வருபவர்கள் தம் பிள்ளைகளை கற்ப்பிக்க மட்டும் ஆர்வமே இன்றி இருக்கிறார்கள்.
நான் முகங்கொடுத்த அனுபவங்களை வைத்து மட்டும் ஆயிரம் பதிவுகள் போடலாம்
சொன்னவை சிறு துளியே
சிறுவர் தொழிலாளர் விடயத்தை பொறுத்தவரை மாற்றமொன்று உள்ளது இப்போது எனக்கு தெரிந்து பெரியே பிரச்சினை வேலையற்ற இளைஞர் கூட்டமும் அவர்களால் இடம்பெறும் ஒழுக்க சீர்கேடுகளும்
நிர்ஷன் பல இங்கு பகிர முடியாதவை
தர்ஷன்
ஆம். சுதாகரன்,காளிதாசன் ஆகிய இருவரும் தான்.
நீங்கள் சொல்வது புரிகிறது தர்ஷன். நாங்கள் விரைவில் மாத்தளையில் சந்திப்போம்.அப்போது நிறைய விடயங்கள் பகிரலாம்.
இந்த பிரச்சினைகளை எப்படி அனுகலாம் என்பதில் எனக்கு சில கருத்துக்கள் உண்டு. அதுபற்றி விரிவாக பேசுவோம்.
நேரமிருந்தால் மின்னஞ்சலில் தொடர்புகொள்ளுங்கள்.
Post a Comment