வந்தியின் அடுத்த முதல்வன் யார்? என்ற பதிவே இந்தப் பதிவையும் எழுதக் காரணமானது.நமது தொலைக்காட்சிகளில் பயனுள்ள நிகழ்ச்சிகளைத் தவிர ஏனைய நிகழ்ச்சிகளை பார்ப்பதை நான் தவிர்த்துவருகிறேன். அதனால் நிகழ்ச்சிகளைப் பற்றி அவ்வளவாக குறிப்பிடத் தெரியாது.
ஆனாலும் சாமானியன் என்ற வகையிலும் நாட்டு நடப்புகளை அறிந்துகொள்ளவேண்டிய குடிமகன் என்ற ரீதியிலும் செய்திகளை பார்ப்பதும் கேட்பதும் உண்டு।
செய்தி எழுதுவதும் தொகுப்பதும் தனியொரு கலை. படித்தவருக்கும் பாமரருக்கும் விளங்கும் வகையிலும் பிழைகளைத் தவிர்த்தும் கருத்துப் பிசகாமலும் எழுத வேண்டும். அதனால் தான் செய்தியாசிரியர்களுக்கும் தொகுப்பாசிரியர்களுக்கும் (இருவருக்கும் வித்தியாசம் உண்டு) அதிக மதிப்பு இருக்கிறது.
செய்திகளில் அடிக்கடி இடம்பெற்ற சில தவறுகளை நான் குறிப்பெடுத்துக்கொள்வேன். ஏனென்றால் அடுத்தமுறை நான் அந்தப் பிழையை விடக்கூடாது என்பதற்காக.
நான் குறிப்பெடுத்துக்கொண்டதில் சிலவற்றை மட்டும் (பெயர், இடங்களை மாத்திரம் மாற்றி) இங்கு தருகிறேன்.
நான் தமிழ்ப்புலமை பெற்றவன் அல்ல. எனக்குப் பட்டவற்றை சொல்கிறேன்.
பிழையிருப்பின் அடியேனையும் மன்னித்தருள்க.
*நேற்றுமாலை புறக்கோட்டையில் இடம்பெற்ற விபத்தொன்றில் முன்னாள் கொழும்பு மாநகரசபையின் உறுப்பினர் பெயரிலி படுகாயமடைந்தார்.
அநேகமான இலங்கை ஊடகங்களில் இந்தத் தவறு இடம்பெறுவதை கவனிக்கக் கூடியதாக உள்ளது.
சம்பவங்களைக் குறிப்பிடும்போது இடத்திற்குப் பிறகுதான் காலத்தைச் சொல்ல வேண்டும். அது தவிர கொழும்பு மாநகரசபையை முன்னாள், இந்நாள் என இருவேறாக குறிப்பிட முடியாது. அது எப்போதும் அப்படியே தான் இருக்கிறது. இங்கு உறுப்பினரின் பதவிக்காலம் தான் குறிப்பிடுபொருள்.
சரியாயின்,
புறக்கோட்டையில் நேற்றுமாலை இடம்பெற்ற விபத்தொன்றில் கொழும்பு மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் பெயரிலி படுகாயமடைந்தார்.
(சிலருக்கு முன்னாள் என்பதற்கும் முன்னால் என்பதற்கும் வித்தியாசம் தெரியாமலிருப்பது கவலைக்குரியது).
*விபத்தில் உயிரிழந்தோருக்கு நஷ்ட ஈடு வழங்குவதாக அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
உயிரிழந்தவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க முடியாது என்பதை எழுதுபவர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
*நீர்கொழும்பு கடற்கரைப்பகுதி நீர்நிலைகளில் கிருமிநாசினிகள் கலந்துள்ளமையால் மீன்கள் அதிகமாக உயிரிழந்து கரையொதுங்குவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் உயிரிழந்த மீன்களை விற்பனை செய்ய அப்பகுதியில் தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.
உயிரிழப்பதில் அதிகமாக குறைவாக என்று சொல்ல முடியாது. இங்கு மீன்களின் எண்ணிக்கையை சுட்ட பயன்படும் அதிகமாக என்ற சொல் தவறான இடத்தில் குறிக்கப்பட்டுள்ளது. சரியாயின் அதிகமான மீன்கள் உயிரிழந்து கரையொதுங்குவதாக…. என தொடர வேண்டும்.
அத்துடன்,
உயிரிழந்த மீன்கள் தான் அனைத்து இடங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதற்கு யாரும் தடைவிதிக்க முடியாது. ஆதலால் செய்தி இவ்வாறு தொகுக்கப்பட வேண்டும்.
நீர்கொழும்பு கடற்கரைப்பகுதி நீர்நிலைகளில் கிருமிநாசினிகள் கலந்துள்ளமையால் அதிகமான மீன்கள் உயிரிழந்து கரையொதுங்குவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அப்பகுதியில் கிருமிநாசினி காரணமாக உயிரிழந்த மீன்களை விற்பனை செய்ய தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.
*மட்டக்களப்பு நகரில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். குறித்த நபர் மேலும் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எந்தவொரு வாக்கியத்தையும் குறித்த என்ற பதத்துடன் ஆரம்பிப்பது தவறாகும். குறித்த என்ற பதத்துக்கு பதிலாக அந்த என்ற பதத்தை உபயோகிக்கலாம்.
அல்லது,
மட்டக்களப்பு நகரில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் குறித்த நபர் மேலும் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
(வசனத்தின் நீளம் வாசகர்/நேயர்களை சங்கடத்துக்குள்ளாக்கும் என்பதால் சுருக்குதல் சிறந்தது)
*வெலிகமவில் இன்று காலை தனியார் பயணிகள் பஸ் ஒன்றுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நான்கு வயது குழந்தையொன்று வீதியில் நடந்து கொண்டிருந்த சமயம் விபத்துக்குள்ளான சம்பவத்தை அடுத்தே இந்தத் தீ வைப்பு இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
அவ்வாறு குழந்தைமீது மோதிய பஸ் தீ வைக்கப்பட்டுள்ளது.
இங்கு இறுதி வசனம் தேவையற்ற ஒன்று என்பது நான் சொல்லித்தான் புரியவேண்டும் என்றில்லை.
*……………. செவ்வாய்க்கிழமை கொழும்பில் உள்ள அமைச்சு அலுவலகத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இச்சந்திப்பின் போது இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களின் சுகாதார நிலைமைகள் மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இச்சந்திப்பின்போது இடம்பெயர்ந்து என்பதில் உள்ள மயக்கத்தை கவனிக்க வேண்டும். சந்திப்பின்போது யாரும் இடம்பெயரவில்லை.
சரியாயின்,
……இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களின் சுகாதார நிலைமைகள் மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பில் இச்சந்திப்பின்போது விரிவாக ஆராயப்பட்டது.
*எதிர்வரும் பருவப் பெயர்ச்சி மழைக் காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் இடம்பெயர்ந்தோரை வேறு இடங்களில் பாதுகாப்பாக தங்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது.
தங்கவைக்க வேண்டுமென… என்பதே சரியானதாகும்.
*இடம்பெயர் மக்களை வேறு இடங்களில் தங்க வைக்கும் செயன்முறையின் போது மக்களின் சுதந்திரமான நடமாட்டத்தினயும் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களிற்கான பொறுப்பாளர் ஜோன் ஹோல்ம்ஸ் தெரிவித்துள்ளார்.
இடம்பெயர் என்ற சொல் நிகழ்காலத்தை குறிப்பிடும் தொக்கிநிற்கும் சொல்லாக இருக்கிறது. இதன் அர்த்தம் தற்போது இடம்பெயர்ந்து கொண்டிருக்கும் மக்களை …. எனக்கொள்ளலாம்.
இடம்பெயர்ந்துள்ள மக்களை..... என ஆரம்பிப்பதே சிறந்தது.
*புத்தளம் நிவ்செட்ல்மென்ட் வீதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவமொன்றில் ஒருவர் வாள்வெட்டு காயங்களுக்குள்ளான நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வாள்வெட்டு சம்பவம் என்றால் வாள்வெட்டுக் காயம் தான். ஏற்கனவே வாள்வெட்டு என்ற சொல் உபயோகித்துள்ள படியால் வெட்டுக்காயங்களுக்குள்ளான நிலையில்…. என தொடர்தல் பொருத்தமானதாகும்.
----------------------------------------------------------------------------------------------
இந்தப் பதிவு எந்தவொரு ஊடகத்தையும் தாக்கும் எண்ணத்தில் எழுதப்பட்டதல்ல. ஊடகங்களைப் பொறுத்தவரையில் சில சில தவறுகள் இடம்பெறுவதை ஏற்றுக்ககொள்ள வேண்டும். ஆயினும் அது தொடர்கதையாயின் ஏற்றுக்கொள்ள முடியாது. நேரமிருப்பின் முழுமையான விபரப் பதிவினைத் தர முயற்சிக்கிறேன்.
31 comments:
நானும் இவற்றை பலமுறை யோசித்திருக்கிறேன். அது மட்டுமல்ல, ஒரு வானொலியில் இரண்டு எதிரெதிரான விடயங்கள் ஒரே நேரத்தில் நடந்ததுபொல ஒருமுறை செய்தி வாசித்தார்கள். இரண்டில் ஒன்று மட்டுமே நடந்திருக்க முடியும்.
இப்படியான செய்திகள் பலமுறை கேட்டுச் சிரித்திருக்கிறேன். இப்போது யோசித்தால் ஞாபகம் வர மறுக்கிறது.
இண்டைக்கென்ன இலங்கை ஊடகங்கள் நிறைய அடிவாங்குது? இப்படியே போனா நாமளும் இதைப்பற்றிப் பதிவு போட்டிடுவனோ?
ம்ம்
இணையத்தில் தருவதோடு பத்திரிகைகளுக்கு அனுப்பினால் ஊடகங்கங்களின் பார்வை பட வாய்ப்புண்டு அல்லலவா?
நிர்சரே!
வணக்கம். இந்தப் பதிவுக்கு நான் கருத்துரையிட்டால் பலருக்குக் கோபம் வரும். ஆனால் முக்கியம் நான் ஏற்கனவே எனது பதிவில் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறேன். ஊடகங்களில் (செய்தித்துறையில்) பணிபுரிந்த பலர் இன்று பல நெருக்கடிகளின் மத்தியில் நாட்டிலே வாழ்ந்தாலும் சிலர் தம் பாதுகாப்புக்காக நாட்டைவிட்டு வெளியேறிய நிலையிலும் பணியாற்றுகிறார்கள். சில ஊடகவியலாளர்களுக்கு நடந்த கதை அனைவரும் அறிந்ததே!
நான் சொல்லவிரும்புவது - உமது கட்டுரைக்காக எழுதுகிறேன் - செய்திவந்தால் போதும் - அல்லது செய்தி சொன்னால் போதும் அது தமிழில் இருந்தால் சரி என்பதுபோலத்தான் இன்றைய செய்தி ஊடகங்கள் மிளர்கின்றன. எனக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது - முன்பு வீரகேசரியில் இராஜகோபால் ஐயாவைச் சந்திக்கப் போகும்போது அல்லது தினசரி வாரஇதழின் முன்னைய ஆசிரியர் நடராஜா அவர்களுக்கு முன்னால் அடுத்த நாள் பத்திரிகை சரிபார்க்கப்படுதற்கு இருக்கும். எங்களுடன் கதைத்துக்கொண்டு தம் பணியை அவர்கள் செய்தார்கள். சரி பிழை பார்ப்பவர்களுக்கும் சரி அல்லது செய்தியைத் தொகுத்து எழுதுபவர்களும் சரி விடயத்தை நீங்கள் சொன்னதுபோல - கிரகிக்கும் தன்மை (பூரண தமிழ் அறிவு) வேண்டும்!
இது நடக்குமா?
ம்ம்... சில பந்தியை வாசிக்கும் போது அதில் என்ன பிழை என நினைத்தேன். உங்கள் விளக்கத்தின் பின் தான் பிழையை சரியாக அறிந்து கொள்ள முடிந்தது :(. நல்ல பதிவு. வாழ்த்துக்கள்
நான் தமிழிலுள்ள சொல்லாடல் நுணுக்கங்களை அறிந்து கொண்டேன். மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. நன்றிகள். தொடர்ந்தும் இப்படியான நுணுக்கங்களை எழுதுங்கள். பயனுள்ளதாக இருக்கும். (இவற்றில் ஏதும் பிழைகள் இருக்கின்றனவா?)
வணக்கம் நிர்ஷன்,
செய்தி அறிக்கைகளில் அதிகம் வெளிப்படும் குறைபாடுகளை குறிப்பிட்டுள்ளீர்கள். தற்போது வானொலி, தொலைக்காட்சி செய்திகளில் இடம், பொருள், காலம் என்ற விடயங்களை கருத்தில் கொண்டு செய்தியாசிரியர்களும், தொகுப்பாசிரியர்களும் செய்திகளை எழுதுவது குறைந்துள்ளது.
அதற்கு அவர்களின் மொழி அறிவு போதியளவு இல்லாமை காரணமாக இருக்கலாம். ஆனால், இடம், பொருள், ஏவல் என்ற இலக்கண விடயங்கள் பள்ளிக் காலங்களிலேயே கற்றுக்கொண்டவை தானே. அது குறித்து கவனம் செலுத்த வேண்டியது அதி முக்கியமானது. அப்பொழுது தானே செய்தியில் தெளிவு இருக்கும். சாமானியர்களுக்கும் புரியும்.
(வெளிநாட்டு வானொலிகள் இரண்டிற்கு 18 மாதங்களுக்கும் மேலாக செய்தியாசிரியராக பணியாற்றிய அனுபவத்திலேயே இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளேன்.)
தேவையா இன்னொரு பதிவு,
ஒருமுறை ஒரு வானொலியில் ஒரு அறிவிப்பாளினி( நான் கேட்கும்போது மட்டும் ஏனோ அறிவிப்பாளினிகள் வருகின்றார்கள்) சட்டமா அதிபரை சட்ட மா அதிபர் எனப் பிரித்து வாசித்தார். இவர்கள் வார்த்தைகளைப் பிரிக்கும்போது அர்த்தம் மாறும் என்பது தெரியாமல் வாசிக்கின்றார்கள்.
விளையாட்டு வீரர்களினதும் வெளிநாட்டுத் தலைவர்களினதும் பெயர்கள் இவர்களின் வாயில் துவைபடும்.
செய்தி வாசிப்பவர்களை விட செய்தியினை எழுதுபவர்களுக்குத் தான் அதிக ஞானம் தேவை.
நல்ல பதிவு நிர்ஷன், ராஜசேகர ரெட்டி விபத்தில் இறந்த போது இலங்கையில் ஒரு வானொலியில் ”மலையில் முட்டி ஆந்திர முதல்வர் மரணம்” என ப்ளாஷ் நியுஸ் சொன்னார்கள்.
//Subankan said...
நானும் இவற்றை பலமுறை யோசித்திருக்கிறேன். அது மட்டுமல்ல, ஒரு வானொலியில் இரண்டு எதிரெதிரான விடயங்கள் ஒரே நேரத்தில் நடந்ததுபொல ஒருமுறை செய்தி வாசித்தார்கள். இரண்டில் ஒன்று மட்டுமே நடந்திருக்க முடியும்.
இப்படியான செய்திகள் பலமுறை கேட்டுச் சிரித்திருக்கிறேன். இப்போது யோசித்தால் ஞாபகம் வர மறுக்கிறது.
இண்டைக்கென்ன இலங்கை ஊடகங்கள் நிறைய அடிவாங்குது? இப்படியே போனா நாமளும் இதைப்பற்றிப் பதிவு போட்டிடுவனோ?//
வருகைக்கு நன்றி சுபாங்கன்.
ஆதங்கத்தைத் தான் குறிப்பிட்டிருக்கிறேன்.
பதிவிடுங்கள். சரியானது நடந்தால் சரி…
// தர்ஷன் said...
ம்ம்
இணையத்தில் தருவதோடு பத்திரிகைகளுக்கு அனுப்பினால் ஊடகங்கங்களின் பார்வை பட வாய்ப்புண்டு அல்லலவா?//
நன்றி தர்ஷன்.
முயற்சிக்கிறேன்.
// தங்க முகுந்தன் said...
நிர்சரே!
வணக்கம். இந்தப் பதிவுக்கு நான் கருத்துரையிட்டால் பலருக்குக் கோபம் வரும். ஆனால் முக்கியம் நான் ஏற்கனவே எனது பதிவில் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறேன். ஊடகங்களில் (செய்தித்துறையில்) பணிபுரிந்த பலர் இன்று பல நெருக்கடிகளின் மத்தியில் நாட்டிலே வாழ்ந்தாலும் சிலர் தம் பாதுகாப்புக்காக நாட்டைவிட்டு வெளியேறிய நிலையிலும் பணியாற்றுகிறார்கள். சில ஊடகவியலாளர்களுக்கு நடந்த கதை அனைவரும் அறிந்ததே!
நான் சொல்லவிரும்புவது - உமது கட்டுரைக்காக எழுதுகிறேன் - செய்திவந்தால் போதும் - அல்லது செய்தி சொன்னால் போதும் அது தமிழில் இருந்தால் சரி என்பதுபோலத்தான் இன்றைய செய்தி ஊடகங்கள் மிளர்கின்றன. எனக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது - முன்பு வீரகேசரியில் இராஜகோபால் ஐயாவைச் சந்திக்கப் போகும்போது அல்லது தினசரி வாரஇதழின் முன்னைய ஆசிரியர் நடராஜா அவர்களுக்கு முன்னால் அடுத்த நாள் பத்திரிகை சரிபார்க்கப்படுதற்கு இருக்கும். எங்களுடன் கதைத்துக்கொண்டு தம் பணியை அவர்கள் செய்தார்கள். சரி பிழை பார்ப்பவர்களுக்கும் சரி அல்லது செய்தியைத் தொகுத்து எழுதுபவர்களும் சரி விடயத்தை நீங்கள் சொன்னதுபோல - கிரகிக்கும் தன்மை (பூரண தமிழ் அறிவு) வேண்டும்!
இது நடக்குமா?//
நிச்சயமாக அண்ணா,
உச்சரிப்பு, சரியான தமிழ் கேட்பதற்கு வானொலிச் செய்திகேளுங்கள், தொலைக்காட்சி செய்தி பாருங்கள் என நான் படிக்கும்காலத்தில் அப்பா அடிக்கடி சொல்லுவார். (அப்போது இலங்கை வானொலியும், ரூபாவாஹினியும்).
ஆனால் இப்போது சொல்ல முடியுமா என்பதே கேள்வி. நல்ல மாற்றம் விரைவில் ஏற்படும் என நம்புகிறேன். நீங்கள் குறிப்பிட்ட ஊடக ஜாம்பவான்களிடமிருந்து எனக்கும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
//வேந்தன் said...
ம்ம்... சில பந்தியை வாசிக்கும் போது அதில் என்ன பிழை என நினைத்தேன். உங்கள் விளக்கத்தின் பின் தான் பிழையை சரியாக அறிந்து கொள்ள முடிந்தது :(. நல்ல பதிவு. வாழ்த்துக்கள்/
நன்றி வேந்தன்.
உங்கள் ஒத்துழைப்புடன் தொடர்ந்து எழுதுகிறேன்
//பால்குடி said...
நான் தமிழிலுள்ள சொல்லாடல் நுணுக்கங்களை அறிந்து கொண்டேன். மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. நன்றிகள். தொடர்ந்தும் இப்படியான நுணுக்கங்களை எழுதுங்கள். பயனுள்ளதாக இருக்கும். (இவற்றில் ஏதும் பிழைகள் இருக்கின்றனவா?)//
நிச்சயமாக எழுதுகிறேன். (இடையில் என்ன கிண்டல்)
உங்கள் ஆதரவுக்கு நன்றி நண்பரே
//மருதமூரான். said...
வணக்கம் நிர்ஷன்,
செய்தி அறிக்கைகளில் அதிகம் வெளிப்படும் குறைபாடுகளை குறிப்பிட்டுள்ளீர்கள். தற்போது வானொலி, தொலைக்காட்சி செய்திகளில் இடம், பொருள், காலம் என்ற விடயங்களை கருத்தில் கொண்டு செய்தியாசிரியர்களும், தொகுப்பாசிரியர்களும் செய்திகளை எழுதுவது குறைந்துள்ளது.
அதற்கு அவர்களின் மொழி அறிவு போதியளவு இல்லாமை காரணமாக இருக்கலாம். ஆனால், இடம், பொருள், ஏவல் என்ற இலக்கண விடயங்கள் பள்ளிக் காலங்களிலேயே கற்றுக்கொண்டவை தானே. அது குறித்து கவனம் செலுத்த வேண்டியது அதி முக்கியமானது. அப்பொழுது தானே செய்தியில் தெளிவு இருக்கும். சாமானியர்களுக்கும் புரியும்.//
ஆமாம் சகோதரரே.
செய்தி எழுதிய பின்னர் ஒரு வாசகனாக இருந்து வாசித்துப்பார்க்க வேண்டும் என தேவராஜ் அவர்கள் சொல்லுவார்.
// (வெளிநாட்டு வானொலிகள் இரண்டிற்கு 18 மாதங்களுக்கும் மேலாக செய்தியாசிரியராக பணியாற்றிய அனுபவத்திலேயே இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளேன்.)//
உண்மையாகவா? சந்தோசமாக இருக்கிறது. அப்படியெனின் உங்கள் ஆக்கபூர்வமான கருத்துரைகள் சில விடயங்களுக்காக எனக்குத் தேவைப்படுகின்றன.
ஒத்துழைப்பு தருவீர்களா?
நன்றி.
//வந்தியத்தேவன் said...
தேவையா இன்னொரு பதிவு,
ஒருமுறை ஒரு வானொலியில் ஒரு அறிவிப்பாளினி( நான் கேட்கும்போது மட்டும் ஏனோ அறிவிப்பாளினிகள் வருகின்றார்கள்) சட்டமா அதிபரை சட்ட மா அதிபர் எனப் பிரித்து வாசித்தார். இவர்கள் வார்த்தைகளைப் பிரிக்கும்போது அர்த்தம் மாறும் என்பது தெரியாமல் வாசிக்கின்றார்கள்.
விளையாட்டு வீரர்களினதும் வெளிநாட்டுத் தலைவர்களினதும் பெயர்கள் இவர்களின் வாயில் துவைபடும்.
செய்தி வாசிப்பவர்களை விட செய்தியினை எழுதுபவர்களுக்குத் தான் அதிக ஞானம் தேவை.//
உங்கள் உதாரணம் சிந்திக்க வைத்தது வந்தி. உண்மை தான். நாளாந்தம் நிகழ்வுகள் வாசிக்கும்போது ஆலயக் கிரியைகளில் ஒன்றான பிரவேசபலியை கெட்டவார்த்தையாக மாற்றியுள்ள பிரபல அறிவிப்பாளினியும் இருக்கிறார்.
நன்றிங்கோ.
// யோ வாய்ஸ் (யோகா) said...
நல்ல பதிவு நிர்ஷன், ராஜசேகர ரெட்டி விபத்தில் இறந்த போது இலங்கையில் ஒரு வானொலியில் ”மலையில் முட்டி ஆந்திர முதல்வர் மரணம்” என ப்ளாஷ் நியுஸ் சொன்னார்கள்.//
உண்மையாகவா? என்ன கொடும சார் இது?
மாற்றம் ஏற்படும்வரை காத்திருப்போம்.
(தீபாவளிக்கு வீட்டுக்கு சென்று வந்ததும் உடம்பு பருத்துள்ளதாக அறிந்தேன். உண்மையா?)
//இறக்குவானை நிர்ஷன் said...
(தீபாவளிக்கு வீட்டுக்கு சென்று வந்ததும் உடம்பு பருத்துள்ளதாக அறிந்தேன். //
தீபாவளி என்றில்லை நிர்ஷன் கடந்த 3,4 மாதமாக கொஞ்சம் கொஞ்சமாக பருமன் கூடி 10 கிலோ கூடிட்டேன். அத குறைக்க வழி தேடுகிறேன்.
////இறக்குவானை நிர்ஷன் said...
உண்மையாகவா? சந்தோசமாக இருக்கிறது. அப்படியெனின் உங்கள் ஆக்கபூர்வமான கருத்துரைகள் சில விடயங்களுக்காக எனக்குத் தேவைப்படுகின்றன.
ஒத்துழைப்பு தருவீர்களா?////
தங்களுக்கு உதவ தயாராக இருக்கிறேன். வாழ்த்துக்கள்.
// யோ வாய்ஸ் (யோகா) said...
//இறக்குவானை நிர்ஷன் said...
(தீபாவளிக்கு வீட்டுக்கு சென்று வந்ததும் உடம்பு பருத்துள்ளதாக அறிந்தேன். //
தீபாவளி என்றில்லை நிர்ஷன் கடந்த 3,4 மாதமாக கொஞ்சம் கொஞ்சமாக பருமன் கூடி 10 கிலோ கூடிட்டேன். அத குறைக்க வழி தேடுகிறேன்.//
நல்லது நடந்தால் சந்தோசம் தானுங்கோ.
// மருதமூரான். said...
////இறக்குவானை நிர்ஷன் said...
உண்மையாகவா? சந்தோசமாக இருக்கிறது. அப்படியெனின் உங்கள் ஆக்கபூர்வமான கருத்துரைகள் சில விடயங்களுக்காக எனக்குத் தேவைப்படுகின்றன.
ஒத்துழைப்பு தருவீர்களா?////
தங்களுக்கு உதவ தயாராக இருக்கிறேன். வாழ்த்துக்கள்.//
விரைவில் தொடர்புகொள்கிறேன். மின்முகவரியைத் தாருங்கள்.
ramnirshan@gmail.com
நிர்ஷன் பதிவு முழுதும் ஆறுதலாக வாசித்தேன்.நிறைவான செய்திகள்.
சம்பந்தப்பட்டவர்கள் கண்டிப்பாகக் கவனத்தில எடுக்கவேண்டும்.இங்கும் இப்படித் தவறுகள் இருக்கின்றன.
எனக்குள் எப்போதும் வரும் ஒரு சந்தேகம்,விபத்து என்பது தற்செயலாக நடக்கிற ஒன்று.
செய்தியில் அதை விபத்தில் கொல்லப்பட்டனர் என்று சொல்கிறார்களே.அது சரியா ?
என்னத்தச் சொல்ல... இன்று இலங்கையின் ஊடக சுதந்திரம் இப்படி மாறிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
அருமையான ஒரு தொகுப்பு பதிவு.. இன்றைய செய்தி ஆசிரியர்களுக்கும், வாசிப்பாளர்களுக்கும் தேவையான ஒரு விஷயம்..
இவ்வாறான தவறுகளைப் பலரும் விடுவதற்கான காரணம், இலகுவாக எடுத்துக் கொள்வதும், பூரண அறிவின்மையும், அவசரமும், அவதானிப்பின்மையுமே..
முன்பு போல மனம் ஒருமித்து செய்கிறார்களில்லை..விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கும் அருகிவிட்டது..
நாம் கொடுக்கும் பயிற்சிகளோடு அவர்களின் முயற்சிகளும் இத் தவறுகளை தவிர்த்துக்கொள்ள முக்கியமானது.
ஆனால் ஒன்று, அச்சு ஊடகத்திலும் இதே போன்ற பல தவறுகள் இப்போதெல்லாம் சகஜமாகி விட்டது..
/////இறக்குவானை நிர்ஷன் said...
// மருதமூரான். said...
////இறக்குவானை நிர்ஷன் said...
உண்மையாகவா? சந்தோசமாக இருக்கிறது. அப்படியெனின் உங்கள் ஆக்கபூர்வமான கருத்துரைகள் சில விடயங்களுக்காக எனக்குத் தேவைப்படுகின்றன.
ஒத்துழைப்பு தருவீர்களா?////
தங்களுக்கு உதவ தயாராக இருக்கிறேன். வாழ்த்துக்கள்.//
விரைவில் தொடர்புகொள்கிறேன். மின்முகவரியைத் தாருங்கள்.
ramnirshan@gmail.com////
praveentr9@gmail.com
நிர்ஷன்...
ஒரே நகைச்சுவை போங்கள்...
அவர்கள் தமிழையே ஒழுங்காக் கதைக்கிறார்கள் இல்லை., நீங்கள் இலக்கணம் பற்றிப் பேசுகிறீர்கள்???
ஒருமை, பன்மை, உணர்திணை, அஃறிணை தெரியாதவர்களுக்கு நாங்கள் இலக்கணம் கற்பிக்க முயலலாமா???
'... சம்பவங்கள் இடம்பெற்றது'
இதுதான் இப்போதைய தமிழ்...
நாமெல்லாம் பழமைவாதிகளாம்....
இவர்களை நினைத்தால் சிரிப்புத் தான் வருகிறது....
சக்தியைத் திட்டுவதை நிறுத்தவம் இல்லையென்றால் ஆப்படிப்போம்
// ஹேமா said...
நிர்ஷன் பதிவு முழுதும் ஆறுதலாக வாசித்தேன்.நிறைவான செய்திகள்.
சம்பந்தப்பட்டவர்கள் கண்டிப்பாகக் கவனத்தில எடுக்கவேண்டும்.இங்கும் இப்படித் தவறுகள் இருக்கின்றன.
எனக்குள் எப்போதும் வரும் ஒரு சந்தேகம்,விபத்து என்பது தற்செயலாக நடக்கிற ஒன்று.
செய்தியில் அதை விபத்தில் கொல்லப்பட்டனர் என்று சொல்கிறார்களே.அது சரியா ?//
ஹேமா,
விபத்துச் சம்பவத்தில் கொல்லப்பட்டனர் என்பதுதான் மிகச்சரியானதாகும். ஆனால் விபத்தில் என்று சொல்லப்படுவது முழுப்பிழையல்ல.
மற்றும்,
திட்டமிட்டு நடைபெறுவதை மட்டுமே நடைபெற்ற….. என்று சொல்ல முடியும். விபத்துகள் திட்டமிடப்படாதவையாகையால் அவற்றை இடம்பெற்ற…. என்ற பதத்துடன் பயன்படுத்துவதே சரியானதாகும்.
“நேற்று நடைபெற்ற விபத்து என்பது பிழையாகும். நேற்று இடம்பெற்ற விபத்து என்பதே சரியானதாகும்.
வருகைக்கு நன்றி.
//சந்ரு said...
என்னத்தச் சொல்ல... இன்று இலங்கையின் ஊடக சுதந்திரம் இப்படி மாறிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகின்றது.//
பயறிச்சிபெற்றவர்களை குறித்த வேலைகளில் அமர்த்துவதே சிறந்தது.
நன்றி சந்ரு
// LOSHAN said...
அருமையான ஒரு தொகுப்பு பதிவு.. இன்றைய செய்தி ஆசிரியர்களுக்கும், வாசிப்பாளர்களுக்கும் தேவையான ஒரு விஷயம்..
இவ்வாறான தவறுகளைப் பலரும் விடுவதற்கான காரணம், இலகுவாக எடுத்துக் கொள்வதும், பூரண அறிவின்மையும், அவசரமும், அவதானிப்பின்மையுமே..
முன்பு போல மனம் ஒருமித்து செய்கிறார்களில்லை..விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கும் அருகிவிட்டது..
நாம் கொடுக்கும் பயிற்சிகளோடு அவர்களின் முயற்சிகளும் இத் தவறுகளை தவிர்த்துக்கொள்ள முக்கியமானது.
ஆனால் ஒன்று, அச்சு ஊடகத்திலும் இதே போன்ற பல தவறுகள் இப்போதெல்லாம் சகஜமாகி விட்டது..//
உண்மைதான் லோஷன் அண்ணா,
விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாவிட்டால் வளர்ச்சியையும் எதிர்பார்க்க முடியாது. பயிற்சிகளை விட நீங்கள் குறிப்பிட்டதுபோல முயற்சியுடையவர்கள் எளிதில் கற்றுக்கொள்கிறார்கள்.
அச்சு ஊடகங்களில் இவ்வாறான தவறுகள் இடம்பெறுகின்றன என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஒப்புநோக்காளர்கள் விடும் தவறுகளும் காரணமாக இருக்கலாம்.
கருத்துக்கு நன்றிகள்.
// கனககோபி said...
நிர்ஷன்...
ஒரே நகைச்சுவை போங்கள்...
அவர்கள் தமிழையே ஒழுங்காக் கதைக்கிறார்கள் இல்லை., நீங்கள் இலக்கணம் பற்றிப் பேசுகிறீர்கள்???
ஒருமை, பன்மை, உணர்திணை, அஃறிணை தெரியாதவர்களுக்கு நாங்கள் இலக்கணம் கற்பிக்க முயலலாமா???
'... சம்பவங்கள் இடம்பெற்றது'
இதுதான் இப்போதைய தமிழ்...
நாமெல்லாம் பழமைவாதிகளாம்....
இவர்களை நினைத்தால் சிரிப்புத் தான் வருகிறது....//
ஆமாம் தம்பி,
ஆனாலும் வளரும் சமுதாயம் குறித்து நாங்கள் அக்கறைகொள்ளத்தானே வேண்டும். இந்தப் பிழைகளைப் பார்த்து வளர்வார்களானால் எதிர்காலத்தில் ஊடகத்துறை பற்றி சிந்திக்கவே முடியாமல் போகும்.
உங்களைப் போன்ற இளைஞர்களின் பங்களிப்பும் அவசியமாகிறது. களத்தில் இறங்குங்கள்.
நிர்ஷன், இப்போது உங்கள் பெயர் தெளிவாக நினைவில் உள்ளது.
அருமையான பதிவு. உங்கள் பதிவு அனைவரின் எழுத்துக்களில் மாற்றத்தையும், திருத்தத்தையும் ஏற்படுத்தும் என நம்புகின்றேன்.
தவறுகள் தவறிச் செய்பவை தான் அவை தொடராமல் காப்பது நம் கடமை. நானும் இதே தவறை இத்தனை நாட்களாக செய்து கொண்டு தான் இருந்துள்ளேன். டைப் செய்தவற்றை மீள வாசித்து திருத்துவதே இல்லை. யாராவது கூறினால் மாற்றுவேன் இனி அவ்வாறான நிலை ஏற்படாமல் பார்த்துக் கொள்வேன். மீண்டும் மீண்டும் நன்றிகள் கோடி
Post a Comment