பேரன்பும் பெருமதிப்புக்கும் உரிய கம்பவாரிதி ஐயாவுக்கு,
வணக்கம்.
ஏகனாகவும் அநேகனாகவும் எங்கும் எதிலும் எல்லாமாகவும் வியாபித்து அண்டங்கள் அனைத்திற்கும் கர்த்தாவான மூலப்பரம்பொருளின் பேரருள் தங்கள் நலனை என்றும் காக்க வேண்டி மடலைத் தொடர்கிறேன்.
இலங்கைத் தமிழர்களிடையே தங்களுடைய பெயரும் புகழும் எவ்வாறு பரவப்பெற்று எந்தளவுக்கு மதிப்புநிறைந்து விளங்குகின்றது என்பதை நான் சொல்லி அறியவேண்டியதில்லை. தமிழ்,சமயம்,சமூகத்துக்கு உங்களுடைய அர்ப்பணிப்புடனான சேவையும் அயராத உழைப்பினூடான பங்களிப்பும் மக்கள் உள்ளத்தில் நம்பிக்கை நாற்றுகளை விதைத்திருக்கின்றன என்றால் மிகையில்லை.
ஐயா,
உங்கள் புகழை தமிழ் உலகம் அறிந்திருக்கும் இவ்வேளையில், நான் இதைக் குறிப்பிட்டது வெறும் வார்த்தைப் புகழ்ச்சிக்காகவல்லாது இணையவாசகர்கள் தங்களைப் பற்றி அறிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே.
நமது நாட்டில் மொழிப்பற்று மதப்பற்று கொண்டவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் சமூக சேவகர்களா அல்லது சமூக ஆர்வலர்களா என்று சிந்தித்தால் எனக்கென்னவோ திருப்திகரமான பதில் கிடைப்பதில்லை.
பெரும்பாலான கல்விமான்கள் மேடைப்பாராட்டுக்காகவும் தற்புகழ்ச்சிக்காவும் மாத்திரமே “சேவை” என்ற பெயரில் ஆங்காங்கே சில நிகழ்ச்சிகளுக்கு தலைமைதாங்கி வருகிறார்கள். ஆனால் தங்களைப் போன்ற குறிப்பிடத்தக்க சிலர் தான் சமுதாயம் இழிவழியில் செல்லக்கூடாது என்பதில் அக்கறை கொண்டுள்ளார்கள். இதற்கு, கடந்த அக்டோபர் 14ஆம் திகதி புதன்கிழமை தினக்குரல் நாளேட்டில் வெளியான “கந்த சஷ்டி விரத ஆரம்பம் 19ஆம் திகதியே” என்ற கட்டுரை ஒரு சமீபத்திய சான்றாகும்.
விரத தின நிர்ணயம் குறித்து ஏற்கனவே நமக்குள் எழுந்த பல்வேறு சிக்கல்களுக்கு ஊடகங்கள் வாயிலாக தாங்கள் அளித்திருந்த பதில்கள் முறையான விளக்கங்களாக அமைந்திருந்தன என்பதில் நிறைவுண்டு.
விரதங்கள் மற்றும் விழாக்கள் குறித்து அவ்வப்போது இவ்வாறான பிரச்சினைகள் எழுவது சாதாரணமாகிவிட்ட நிலையில் கந்த சஷ்டி குறித்த தங்களது ஆக்கம் கல்வியாளர்களிடத்தில் நல்லதொரு புரிந்துணர்வை ஏற்படுத்தியதே தவிர அடிமட்ட மக்களை சென்றடையவில்லை என்பதே என்னுடைய ஆதங்கமாகும். இதுவே இந்த மடலை எழுதுவதற்குக் காரணமாயும் அமைந்தது.
கொழும்பில் இயங்கும் பல தலங்களை அடியொட்டியே ஏனைய பல பிரதேச ஆலயங்களில் விழாக்கள் நிர்ணயமாவதை பல சந்தர்ப்பங்களில் நோக்கியிருக்கிறேன். அப்படியிருக்கையில் முறையான விரதநெறியை தலைநகர ஆலயங்களில் பின்பற்றப்படுவது மிகஅவசியமாகும்.
கந்த சஷ்டியானது பிரதமையில் ஆரம்பிப்பதே மரபு. அதற்கமைவாக அக்டோபர் 19ஆம் திகதியே கந்த சஷ்டியின் ஆரம்ப தினமாகும் என்பதை சகல ஆதாரங்களோடும் குறிப்பிட்டிருந்தீர்கள். அதனை எல்லா ஆலய நிர்வாகங்களும் பின்பற்றவில்லை. பல ஆலயங்களில் 18ஆம் திகதியே பின்பற்றப்பட்டன.
ஆயினும்,
கந்த சஷ்டி விரதாரம்பம் 19ஆம் திகதி என்பதை தாங்கள் 14ஆம் திகதிதான் குறிப்பிட்டிருந்தீர்கள். அவ்வேளையில் பெரும்பாலான ஆலயங்களில் திகதி நிர்ணயிக்கப்பட்டு விளம்பரப்படுத்தலும் நடாத்தியாயிற்று. சில ஆலயங்களில் உண்மை நிலை தெரியவந்தபோதும் தமது ஏற்பாடுகள் காரணமாக சரியான முறையினை பின்பற்ற முடியவில்லை. இதற்கு தாமதமான விளக்கமே காரணமாகும்.
இது இவ்வாறிருக்க,
நாட்டில், இந்துகலாசார அலுவல்கள் திணைக்களம், அகில இலங்கை இந்துமாமன்றம் உட்பட பல்வேறு ஆலய அமைப்புகள் மற்றும் பலம்மிக்க கழகங்கள் மன்றங்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. இவர்கள் யாருமே இதுகுறித்து அக்கறை கொள்ளாதபோது தாங்கள் முன்வந்து விளக்கமளித்ததை, பாராட்டுவதற்கு தகுதியற்றவனாய் அதனை அன்போடு வரவேற்கிறேன்.
ஆக,
இவ்வாறான விளக்கங்கள் காலதாமதமின்றி வெளியிடப்படுதல் அவசியமாகும். இந்து சமயம் சுதந்திரமான சமயம் என்பதால் எப்படியும் இருந்துவிடலாம் என்றில்லை. அதற்கென ஆகம,வேத முறைகள் உண்டு என்பதை சரியான நேரத்தில் விளக்கமளிப்போமானால் தவறான நடத்தைகளை தவிர்க்கக் கூடியதாக இருக்கும்.
தங்களைப்போன்றவர்கள் வெளியுலகுக்கு உண்மையை உரைக்கும்போது மக்கள் அதனை ஏற்றுக்கொள்கிறார்கள். இனியொரு நிலைமை இவ்வாறு தோன்றும்பட்சத்தில் அனைத்து மக்களுக்கும் சென்றடையும் விதத்தில் முன்கூட்டியே அறிவிப்பது தேவையாகும். அத்துடன் நாட்டில் இயங்கும் அனைத்து இந்து மன்றங்கள் கலகாங்களினு}டாக விழிப்புணர்வை ஏற்படுத்தினால் அனைவரையும் சென்றடையும் விதத்திலும் அமையும்.
அடியேனின் கருத்துக்களை தாங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்ற எண்ணத்துடனும் பலருக்கு குருவாய் இருக்கும் உங்களிடம் சாதாரண குடிமகான் என்ற நேசத்திலும் உரிமையோடு இந்த வேண்டுகோளை முன்வைக்கிறேன்.
பத்து சமயக் கட்டுரைகள் பத்திரிகைகளுக்கு எழுதி பொதுமண்டபத்தில் பொன்னாடை போர்த்திக்கொள்ளும் பலருக்கு நமது சமூகம், நமது சமுதாயத்தின் எதிர்காலம் குறித்து அக்கறையே இல்லை. இவ்வாறிருக்கும்போது தங்களைப்போன்ற முன்னோடிகளின் காத்திரமான முன்னுதாரண விளக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
மேற்சொன்னது போல உரிமையோடு சொல்கிறேன். இது தங்களுக்கான இந்தச் சிறியேனின் தனிப்பட்ட மடல் தான். தனிப்பட்ட கழகங்களை நான் இங்கு குறிப்பிடவில்லை. விழா என்ற பெயரில் வேற்று நாட்டு அறிஞர்களுக்கு பணத்தை வாரியிறைத்து பேருக்காவும் புகழுக்காகவும் மட்டும் நிகழ்ச்சி நடாத்துபவர்களுக்கு இதைச் சொல்லுங்கள்.
குறிப்பிட்ட ஒருசாரார் நல்ல பண பலத்துடனும் கல்வித்தகுதியுடனும் இருந்துகொண்டிருக்கிறார்கள். பாமரர்களுக்கு யார் உதவுவார்கள்? என்று கேளுங்கள்.
இந்து என்ற பெயரில் எங்கோ ஒரு மூலையில் பல குடும்பங்கள் அடிப்படையே தெரியாமல் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. வாழ்காலத்தில் அவர்களுக்கு நாம் என்ன செய்தோம் என்பதை மனச்சாட்சியோடு கேட்கச் சொல்லுங்கள்.
எல்லாவற்றையும் விட ஏழைகளுக்காக உழைப்பதே மேல் என்பதை எடுத்துச்சொல்லுங்கள்.
அவ்வாறில்லையெனின்,
யாரையும் நம்பியிருக்கத் தேவையில்லை. சமூக அக்கறைமிக்கவர்களோடு வாருங்கள். வீதிக்கு இறங்குவோம். இதுதான் உண்மை என்பதை தக்க தருணத்தில் உரைப்போம்.
இந்த மடலினை எனது வலைத்தளத்தில் பிரசுரித்தமைக்கு மன்னிக்க வேண்டுகிறேன்.
உள்ளம் நிறைந்த நன்றிகள்.
இவ்வண்ணம்,
இறைதிருநாமங்களோடு
பணிவன்புடன்,
இராமானுஜம் நிர்ஷன்
4 comments:
சரி தான்... சற்ற வேளைக்கே சொல்லியிருக்கலாம்...
எனக்குள்ள வருத்தம் என்னவென்றால், எங்கள் நாட்டில் இவரைப் போன்ற பிரபலங்கள் பொதுவவாக தமிழ் வளர்ச்சிக்காக வெளிப்படையாக கருத்துத் தெரிவிப்பது குறைவு...
இவரைப் போன்ற பிரபலங்கள் 'தமிழில் வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குப் பெயர் வையுங்கள், பத்திரிகைகள் சரியான தமிழில் எழுதுங்கள், அறிவிப்பாளர்கள் தமிழை சரியாக உச்சரியுங்கள்' என்று சொன்னால் பாரிய மாற்றம் ஏற்படும் என்று நான் நம்புகிறேன்...
ஏனென்றால் எங்கள் கருத்துக்ககளைப் பார்த்து 'இவன் கணக்கில்லை. சொன்னா சொல்லிற்றுப் போகட்டும்' என்று இருப்பது போல அவர்களால் இருக்க முடியாது...
என்ன சொல்கிறீர்கள் நிர்ஷன்?
கோபி,
கல்விமான்கள் பலர் தவறான சம்பவங்களை நேரடியாகப் பார்த்தும், “நமக்கேன் வீண்வம்பு” என்று இருந்துவிடுகிறார்கள். அதனால் தான் நீங்கள் குறிப்பிட்டதுபோல சில வானொலி, தொலைக்காட்சிகள் தமக்கேற்றாற்போல் ஆங்கிலத்தில் ஆட்டம்போடுகின்றன.
நாம்சொன்னால் அப்படித்தான் நினைப்பார்கள் கோபி. ஆனால் தொடர்ந்தும் அது சாத்தியப்படாது. உங்களைப்போன்ற துடிப்புள்ள இளைஞர்களின் பங்களிப்பு இருக்கும்போது எதைச்செய்ய முடியாது என நினைக்கிறீர்கள்?
விரைவில் நல்ல மாற்றம் வரும் என நினைக்கிறேன்.
கருத்துக்கு நன்றி. தொடர்பில் இருங்கள். திங்களன்று சந்திப்போம்.
நண்பா நானும் இறக்குவானை வந்திருக்கிறேன் இறக்குவானை பாலங்கோட்டை தெனியாய எல்லாம் உறவுகள் உள்ளனர் நீங்கள் .....எங்கு உள்ளீர்கள்
கழகங்களைத் தவிர்த்து கம்பவாரிதி ஐயாவை மனக்கண் நிறுத்தும்போது அவரது தொண்டையும் சமூக அக்கறையையும் குறைகான இயலாது. முன்னர் ஒருமுறை வாக்கியமா திருக்கணிதமா என்னும் பிரச்சினைக்கு பட்டிமன்றமொன்றில் (வேறு தலைப்பைக் கொண்டு வாதம் நடந்த பட்டிமன்றம்) மகாபாரதப் போரை முன்வைத்து வாக்கிய பஞ்சாங்கமே சரி எனப்பொருள்பட விளக்கம் கொடுத்திருந்தார். (சகாதேவன் கணித்ததை கிருஷ்ண பரமாத்தா மாற்றியமையை மையமாக வைத்து)
ஆனால் ஈற்றிலேயே இவ்வண்ணம் தெளிவுபடுத்தி பிரசுரம் வெளியாவது எமது சமூகத்தில் பழக்கமாயிற்று. அது ஏன் என்றுதான் புரியவில்லை. அதை மாற்ற வேண்டும்! தங்கள் மடலுக்கு அத்தகு சக்தியுண்டு. கம்பவாரிதி ஐயா தங்கள் மடலைக் கண்டால் (நிச்சியம் கண்டிருப்பார்) உள்ளப் பூரிப்புடன் வாசித்திருப்பார்.
Post a Comment