Showing posts with label மலையக அரசியல்வாதிகள். Show all posts
Showing posts with label மலையக அரசியல்வாதிகள். Show all posts

Friday, April 10, 2020

கானல் நீராகிப்போன ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம்! பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார்?

லையக பெருந்தோட்ட மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் கறுப்புச் சரித்திரத்தில் மற்றுமொரு நாள் இன்று உதயமாகியிருக்கிறது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் இன்றுமுதல் வழங்கப்படும் என்ற, அரசாங்கத்தின் பொறுப்புமிக்க அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் வாக்குறுதி மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.

தொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச சம்பளம் என்பதற்கும் அடிப்படைச் சம்பளம் என்பதற்கும் வித்தியாசம் உண்டு. அரசியல்வாதிகளின் சாணக்கியமான காய்நகர்த்தலில் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை பல தடவைகள்,பலரும் சுட்டிக்காட்டியிருந்தார்கள்.

கொரோனா அச்சுறுத்தலிலும் தேயிலைத் தேசத்தைக் காக்கும் மக்கள் இன்று சகலராலும் கைவிடப்பட்டிருக்கிறார்கள்.

மலையக பெருந்தோட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம் எனச் சொல்லும் தலைவர்களின் கையாலாகத்தனத்தின் வெளிப்பாட்டை இன்று நாம் காண்கிறோம்.

இந்த விடயத்தில் அரசாங்கத்தின் நழுவல்போக்கு, அரசியல்வாதிகளின் ஏமாற்று நாடகம் ஆகியவற்றின் சிலதுளிகளை விபரிக்க முயற்சிக்கிறேன்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா அடிப்படைச் சம்பளம் வழங்குவதில் அரசாங்கத்துக்கு உள்ள சவால்கள் என்ன?
இலங்கை தேயிலையிலையில் 24.5 வீதமான உற்பத்தியை மாத்திரமே பெருந்தோட்டங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன. மிகுதி 75.5 வீதமானவை சிறு தோட்டங்களில் உற்பத்தியாகின்றன.

ஒப்பீட்டு ரீதியில் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் வழங்கப்படுமாயின் அதற்கு ஒத்தாற்போல சிறுதோட்ட உரிமையாளர்கள், தொழிலாளர்களுக்கும் சலுகைகள், நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டிய கட்டாயச் சூழல் எழுந்துள்ளது.

சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபை, சிறுதோட்ட உரிமையாளர்கள் சங்கம், இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர் சங்கம், தேயிலை ஏற்றுமதியாளர் சங்கம் ஆகியன இதற்கான அழுத்தங்களை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றன.

இதனால் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளது.

மறுபுறம் தேயிலை உற்பத்தி விலையேற்றம், தொழிலாளர்களிடம் வினைத்திறன் இன்மை (குறிப்பாக ஆண்கள்), தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி, ஏற்றுமதியில் உள்ள தடைகள் ஆகியவற்றை முதலாளிமார் சம்மேளனம் காரணங்களாக முன்வைத்தது.

இதனால் 1000 ரூபா அடிப்படைச் சம்பளத்தை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டது.
(இன்னும் பல காரணங்கள் உண்டு)

இதேவேளை, தொழிலாளர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கும் தொழிற்சங்கங்கள் அதற்கான பொறிமுறைகளை சரியான முறையில் முன்வைக்கவில்லை.

2015 ஆம் ஆண்டு, பொது மேடையில் ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் பெற்றுக்கொடுப்போம் என உறுதியளித்தார் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்.

ஆனால் 2019 ஆம் ஆண்டு, “ஆயிரம் ரூபா எப்படி கொடுக்கப் போறீங்கனு ஜனாதிபதிகிட்ட கேட்டேன்” என்கிறார். இதன் மூலம் அடிப்படை பிரச்சினை என்னவென்பது தெளிவு.

இதேவேளை, இராஜாங்க அமைச்சர் ரொமேஷ் பத்திரனவின் கருத்துக்கும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் கருத்துக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்பட்டன.

கம்பனிகளுடன் பேச்சுவார்த்தையில் இழுபறியில் இருக்கிறது, பேச்சுவார்த்தை நடத்துகிறோம், சாதகத்தன்மைகள் குறித்து ஆராய்கிறோம் என ரொமேஷ் பத்திரன கூறும்போது,
மறுநாள்
ஏப்ரல் 10 ஆம் திகதி உங்களுக்கு 1000 ரூபா சம்பளம் கைக்கு கிடைக்கும். இது நிச்சயம், நேத்தும் ஜனாதிபதியோட பேசினேன், பிரதமருக்கும் சொன்னேன் என்கிறார் ஆறுமுகன் தொண்டமான்.

(ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் தொழிலாளர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதால் பல தடவைகள், அமைச்சுப் பொறுப்பையும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜினாமா செய்தவர்தானே? என மனதில் கேள்வி உதித்தால் நான் பொறுப்பல்ல தோழர்களே!)

வடக்கில் ஒருவிதமான தோரணையில் ஒரு கருத்தையும் நுவரெலியாவில் இன்னொரு விதமான தோரணையில் இன்னொரு கருத்தையும் அவர் முன்வைத்து வந்தார்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் அமைச்சர் ஆறுமுகனின் தெளிவற்ற பேச்சு, சம்பள அதிகரிப்புக்கான நியாயத்தை எடுத்துக்காட்டவில்லை.

தொழிலாளர்களின் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கு இவ்விந்த சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என நிறுவுவதற்கு பலம்பொருந்திய (சொல்லப்படுகின்ற) இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் முடியவில்லை.

நிற்க,
இந்நிலையில், முதலாளிமார் சம்மேளனத்தினால் ஏன் அடிப்படைச் சம்பளம் ஆயிரத்தை வழங்க முடியாது என்ற கேள்வியும் எழுகிறதல்லவா?

இலாபத்தை நோக்காகக் கொண்ட எந்தவொரு நிறுவனமும் அந்த நோக்கத்திலிருந்து பின்வாங்குவதைத் தவிர்க்கின்றன.

இறுதியாக முதலாளிமார் சம்மேளனம் அரசாங்கத்திடம் முன்வைத்த முன்மொழிவு பரிந்துரையின் அடிப்படையில் தொழிலாளி ஒருவருக்கு மொத்த சம்பளமாக மாதாந்தம் 25,000 வழங்க முடியும் எனத் தெரிவித்திருந்தது.

அதுவும் ஊழியர் சேமலாப நிதி, நம்பிக்கை நிதி அடங்கலாக வரவுக் கொடுப்பனவையும் உள்ளடக்கியது.
அந்த பரிந்துரை வருமாறு,


இங்கே, அடிப்படைச் சம்பளத்தில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்த முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் தெரிவிக்கவில்லை.

அத்துடன் தேயிலை, இறப்பர் தோட்டங்கள் காடாகிப் போயுள்ளமைக்கு தொழிலாளர்களையே குறை கூறி வருகின்றன.

அதேவேளை, தற்போதைய சூழ்நிலையில் கொரோனா ஆபத்து குறித்து அதிக அவதானம் செலுத்தப்பட்டு வருவதால் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இது வாய்ப்பாக அமைந்து விடுகிறது.

அதுமாத்திரமன்றி கடந்த காலங்களில் தொடர்ச்சியாக கடும் வெயில் காலநிலை காணப்பட்டது. இதனால் தேயிலை தொழிற்சாலைகள் பல இயங்காமால் போயின. தேயிலை உற்பத்தியிலும் சிறு அளவிளான வீழ்ச்சி ஏற்பட்டது.

இவையும் முதலாளிமார் சம்மேனளத்தால், சம்பள அதிகரிப்பு சாத்தியமற்றதற்கான காரணங்களாக முன்வைக்கப்படுகின்றன.
கடந்த மார்ச் 20 ஆம் திகதி வரையில் முதலாளிமார் சம்மேளனத்துடன் அரச தரப்பினர், தொழிற்சங்க தரப்பினர் ஆகியோர் 18 சுற்று பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தனர்.

கொழும்பு ஏல விற்பனையில் தேயிலைக்கு உரிய கேள்வி விலை நிர்ணயம் கிடைக்காமையை சுட்டிக்காட்டிய முதலாளிமார் சம்மேளனம், ஒரு சில நாடுகளுக்கான ஏற்றுமதியில் வீழ்ச்சி குறித்தும் வாதாடியிருந்தது.

அதேவேளை, கடந்த டிசம்பர் (2019) மாதத்தில் ஒரு கிலோ தேயிலைக்கான உற்பத்திச் செலவு 631 ரூபாவாக இருந்த வேளை, விற்பனை விலை 508 ஆக இருந்ததாகவும் சுட்டிக்காட்டியது.

வெளியார் உற்பத்தி முறைமை நடைமுறைப்படுத்தப்படுமாயின் அதிக சம்பளத்தை வழங்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அதனை ஊக்குவிப்பதற்கு தொழிற்சங்கள் முன்வரவேண்டும் எனவும் முதலாளிமார் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதேவேளை, ஆண் தொழிலாளர்களின் செயற்திறனில் முதலாளிமார் சம்மேளனம் திருப்தியை வெளிப்படுத்தவில்லை.

அதுமாத்திரமல்லாது, இலங்கையில் சராசரியாக நாளொன்றுக்கு 18 முதல் 21 கிலோ கிராம் தேயிலைக் கொழுந்து பறிக்கப்படும் அதேவேளை, இந்தியாவில் அது 40 கிலோ கிராமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அரச தரப்பினர் கூறுவதுபோல ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் வழங்க முடியும் என்றால், அரசாங்கத்துக்குச் சொந்தமான பெருந்தோட்ட நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு ஏன் அதனை வழங்க முடியாது என்ற கேள்வியும் முதலாளிமார் சம்மேளனத்தினால் எழுப்பப்படுகிறது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் உலகம் கொரோனா என்ற கொடிய நோய்க்கு முகங்கொடுத்திருக்கிறது. இதனால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பேச்சுவார்த்தைகளுக்கும் தடைகள் ஏற்பட்டுள்ளன.
2020, பெப். 20 - பேச்சுவார்த்தை

2020, பெப்.20 - பேச்சுவார்த்தை
தேயிலை ஏற்றுமதியில் சலுகைகளைக் கொடுத்து, அதன் மூலமான பணத்தை தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு பயன்படுத்தும் யோசனை ஆராயப்பட்ட போதும் அதன் சாத்தியப்பாடுகள் குறைவாகவே காணப்படுகின்றன.

ஏனென்றால் அதன் விளைவு அரச ஏற்றுமதி வருமானத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் (தற்போதைய சூழ்நிலை போல) பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனால் தேயிலை ஏற்றுமதி பெரும் சவால்களை எதிர்கொள்ள நேரிடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆக, யதார்த்தங்களைப் புரிந்துகொண்டு தேயிலை ஏற்றுமதிகள் பாதிக்கா வண்ணம் தொழிற்சங்கங்கள் சாதகமான முன்மொழிவுகளை சமர்ப்பிக்க வேண்டும்.

இங்கே, இந்த விடயத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை மாத்திரம் குறைகூறுவது நியாயமற்றது. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும்  தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களிடம் சந்தா பெற்றுக்கொள்ளும் ஏனைய தொழிற்சங்களும் இந்த விடயத்தில் அக்கறை கொள்ள வேண்டும்.

பெரும்பான்மை இனப் பலத்தோடு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் சிறுபான்மையினரின் கோரிக்கைகளுக்கான தீர்வுகளை தாம்பாளத்தில் வைத்துத் தந்துவிடப்போவதில்லை. அதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.

வெறுமனே அறிக்கைகளால் மாத்திரம் சம்பள விடயத்தை வெற்றிகொள்ள முடியாது என்பதை  உணர்ந்து செயல்திறன் மிக்க நடவடிக்கைகளில் ஈடுபடும் வரை இந்தப் பிரச்சினை தொடர்ந்துகொண்டே இருக்கும் என்பதுதான் கண்கூடு.

-நிர்ஷன் இராமானுஜம்-
10.04.2020

(இலங்கைத் தேயிலை ஏற்றுமதித்துறை எதிர்நோக்கியிருக்கும் சவால்கள், உள்நாட்டில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள், தேயிலை மலைகள் தரிசு நிலமாகியதன் விளைவுகள் குறித்து புள்ளி விபரங்களோடு அடுத்த கட்டுரையில் சந்திக்கிறேன்)

Thursday, February 27, 2020

தியகலையில் அமைச்சர் ஆறுமுகனின் மகனும் கூட்டாளிகளும் போதையில் வெறியாட்டம்!

மைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மகன் ஜீவன் தொண்டமான் தனது சகாக்கள் சகிதம் கினிகத்தேனை, தியகல தோட்டத்தில் இளைஞர்களைக் கடுமையாகத் தாக்கி, துப்பாக்கி முனையில் மரண அச்சுறுத்தல் விடுத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 25ஆம் திகதி இரவு இச்சம்பவம் நடைபெற்றதாகவும் தாக்குதல் நடத்தியவர்கள் அனைவரும் போதையில் இருந்ததாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனை மூடி மறைப்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் நாம் நேற்றிரவு (26) களத்துக்குச் சென்று நிலைமைகளைக் கேட்டறிந்தோம்.

கினிகத்தேனை நகரிலிருந்து சுமார் 3.5 கிலோ மீற்றர் தூரத்தில் சிவனொளிபாதமலை வீதியையொட்டி இருக்கிறது தியகல தோட்டம். அங்கு 110 குடும்பங்களைச் சேர்ந்த 400 க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள்.

அந்தத் தோட்டத்துக்கு மைதானம் ஒன்றின் அவசியப்பாடு நீண்டகாலமாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் முத்தையா பிரபாகரன் எனும் நபர் அங்கு வருகை தந்து 50 ஆயிரம் ரூபா பணம் தருவதாகவும் உடனடியாக மைதானத்தை அமைக்கும் பணிகளை ஆரம்பிக்குமாறும் இளைஞர்களிடம் கூறியுள்ளார்.

முத்தையா பிரபாகரன் என்பவர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப்போவதாக அனுமானிக்கப்படுகின்ற நிலையில் இந்த விடயம் குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான பின்னணியில் 26ஆம் திகதி இரவு 7.15 மணிக்கு என்ன நடந்தது என்பதை எஸ்.சரவணன் (32), எஸ். சசிகுமார் (44) ஆகியோர் இவ்வாறு விளக்குகின்றனர்.

இதேவேளை, தங்களுக்கு நிகழ்ந்த இந்த மோசமான அனுபவங்கள் குறித்துதனது மன ஆதங்கத்தைப் பகிர்ந்துகொள்கிறார் கே. சரோஜா (54).


இந்த சம்பவத்தின் பின்னர் தாக்கப்பட்ட நபர்கள் எனக் கூறப்படுகின்ற ஒருசிலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தியதாகவும் வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யாமையில் அரசியல் செல்வாக்கு உள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.

இந்தச் சம்பவத்தில் தியகல தோட்டத்தைச் சேர்ந்த எஸ். சரவணன் (32), எஸ். சசிகுமார் (44), எஸ். சுpவகாந்தன் (32), எஸ். ஜீவா (29), டபிள்யு. ஜி. பிரியந்த (35) ஆகியோர் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

"ஜீவன் சேர்ட கால்ல விழுந்து பொம்பளைங்க நாம கெஞ்சினோம்"
"எல்லாரும் போதையில இருந்தாங்க"
"சசிய வெட்டி கொன்னுட்டுதான் போவோம்னு துடிச்சாங்க"
"நாங்க இல்லனா, இன்னைக்கு எங்க தோட்டத்துல மூனு சாவு விழுந்திருக்குங்க"
"கத்திய எடு, இவன வெட்டுவோம்னு அவங்க கத்தும்போது… என் அர உசுரு போயிருச்சிங்க தம்பி”

இப்படியான அனுபவங்களை அழுகையோடு அந்த மக்கள் சொல்லும்போது மனம் ரொம்பவும் பாரமாகிப்போனது.

இருக்கட்டும்.

மைதானம் அமைப்பதில் கருத்து முரண்பாடுகள் இருந்தால் அதனை முதலில் பேசித் தீர்த்திருக்கலாம். அடாவடித்தனம்தான் அதற்கு தீர்வு என்பதை ஜீவன் தொண்டமான் வெளிநாட்டில் கற்றுத் தேர்ந்திருக்கிறார் போல!

இந்த நாட்டில் யாருக்கும் எங்கும் அரசியல் செய்வதற்கும், யாரும் யாருக்காவது வாக்களிப்பதற்கும் உரிமை இருக்கிறது. அதனை துப்பாக்கி முனையில் மாற்றியமைக்க தீர்மானிப்பதானது மடைமையின் உச்சம் என்றே சொல்ல வேண்டும்.

ஒரு சாதாரண பொதுமகனாக என் மனதில் உதிக்கும் கேள்விகள் இவை,

* நான்கு வாகனங்கள், 18 முதல் 22 பேர் வரையான அடியாட்கள், துப்பாக்கிகள், கூரிய ஆயுதங்கள் இவற்றோடு வலம் வருவதற்கான அதிகாரத்தை ஜீவன் தொண்டமான் எனும் நபருக்கு யார் வழங்கினார்கள்?
* நம் நாட்டுப் பிரஜைகளை, தொழிலாளர்களைத் தாக்குவதற்கு ஜீவன் எனும் நபர் யார்?
* அந்த மக்களின் சந்தாப்பணத்தில் ஒரு துளி உப்பேனும் உங்கள் சாதத்தில் கலக்கவில்லையா?
* அந்த மக்களின் வியர்வையில் ஒரு துளியேனும் உங்கள் தேநீர் கோப்பையில் இருந்ததில்லையா?
* அதிகாரம் எனும் பயமற்ற தன்மையா? தந்தையின் வழிநடத்தலா அல்லது என்ன செய்தாலும் தொழிலாளர்கள் தங்களை திருப்பி அடிக்க மாட்டார்கள் என்ற அசட்டு நம்பிக்கையா?

உண்மையில் அந்த மக்களின் நிலைமை, அன்றைய சம்பவம் தொடர்பாக அவர்கள் பகிர்ந்துகொண்ட தகவல்களைக் கேட்டபோது தொண்டமான் பரம்பரையில் இரத்தம் உறிஞ்சும் அடுத்த நரி உருவாகியுள்ளது என்பது உறுதிப்படுத்தப்படுவதை தவிர்க்க முடியவில்லை.

இனியாவது திருந்துங்கள் - அல்லது மாற்று நடவடிக்கைகளுக்கு மக்கள் தள்ளப்படுவார்கள் என்பதை உணர்வதற்கான காலம் வெகுதூரத்தில் இல்லை என்பதை நிச்சயம் உணர்வீர்கள்.

-நிர்ஷன் இராமானுஜம்-
தியகலையிலிருந்து 27.02.2020

Tuesday, October 30, 2018

மக்களின் கொந்தளிப்பில் குளிர்காயும் அரசியல் முதலைகள்!

ஒரு மலையகத் தமிழனாக, மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டவனாக வரலாற்றில் மிகக் கேவலமானதொரு அரசியல் தலைமையை சமகாலத்தில் கண்டிருக்கிறேன் என்பதை மிக வேதனையுடன் பதிவு செய்து தொடர்கிறேன்.



வடிவேல் சுரேஷ்
- மலையகத்தின் மீட்பர் போல தீவிரமான பேச்சு, போலிச்சிரிப்பு, அவ்வப்போது நாடகம் என அரசியல் ரீதியாக எந்தவொரு கொள்கையும் இல்லாமல் அப்பாவி மக்களின் வாக்குகளால் தெரிவான நபர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வியூகம் அமைத்து வெற்றி பெற்றாலும் காலம் இவரை மக்கள் மத்தியில் பல சந்தர்ப்பங்களில் அடையாளம் காட்டியிருக்கிறது.

நேற்று முன்தினம் புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து ஆதரவு தெரிவித்ததை மக்கள் அறியாமல் இல்லை. ஆனாலும் நேற்று ஐக்கிய தேசிய கட்சியினருடன் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலும் அதன் பின்னர் தனிப்பட்ட ரீதியில் தெரிவித்த கருத்துக்களும் நியாயமான சிந்தனையுடையவர் என்ற தோற்றப்பாட்டை உருவாக்கியிருந்தன.
இதில் குறிப்பிடத்தக்க சில கருத்துக்களை இங்கே பதிவிடுகிறேன்.

“நான் கட்சி மாறியதாக கூறியதில் எந்த உண்மையும் இல்லை. மரியாதையின் நிமித்தமே மகிந்த ராஜபக்ஷவை சந்தித்தேன். நான் ஒரு பச்சைத் தமிழன், இந்து, எனக்கு நன்றிக்கடன் என்ற கடமை இருக்கிறது. அதற்காக நான் அவர்களுடன் இணைந்துகொண்டதாக போலிப்பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராக செயற்படுகிறேன். அதனூடாக மக்கள் சேவை செய்யவே விரும்புகிறேன்”

இப்படிக் கூறிய வடிவேல் சுரேஷ், அன்றையதினமே மாலை மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அமைச்சரவையில் இராஜாங்க அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இங்கே மக்கள் முன்வைக்கும் கேள்விகள்தான் என்ன?

நீங்கள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளராகவே இருந்திருக்கலாம். எதற்காக மீண்டும் கட்சி மாறி நாடகம் ஆடினீர்கள்?

அன்று மாலையில் அமைச்சுப் பொறுப்பை ஏற்கும் அளவுக்கு பேச்சுவார்த்தைகளின்போது எட்டிய இணக்கப்பாடுகள் அல்லது கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் என்ன?

உங்களது இந்த செயற்பாட்டினால் ஒட்டுமொத்த மலையக மக்களையும் தலைகுனிய வைத்துவிட்டீர்கள் என்பதை அறிவீர்களா?

வெறும் பதவிக்காக தாவும் நீங்கள், முதலாளிமார் சம்மேளனத்துடன் இத்தனை நாள் நடைபெற்ற பேச்சுவார்;த்தைகளின் போது மக்களின் நியாயங்களையும் போராட்டங்களையும் காட்டிக்கொடுத்து கையொப்பம் இட்டதன் உண்மையான காரணம் வெளிப்படுத்திவிட்டீர்கள் என்பதை அறிவீர்களா?

மலையகத்தில் பட்டினிக்கான போராட்டம் நடைபெறுகிறது. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பிரதான தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளரான நீங்கள் மக்களின் நிலைப்பாடு, வேண்டுகோள் பற்றி முன்வைத்த கோரிக்கைகள் என்ன?

அமைச்சர் வடிவேல் சுரேஷ் அவர்களே, மக்களுக்கு சேவையாற்றவே கட்சி மாறினேன் என வெகு இலகுவாக நீங்கள் கூறிவிட்டுச் செல்லலாம். ஆனால் காலம் உங்களுக்குக் குத்தியிருக்கின்ற கறுப்புப் புள்ளியை என்றுமே மறைக்க முடியாது.

மலையக மக்கள் ஏமாற்றுப்பேர்வழிகள், கொஞ்ச காலம் கோபமாக இருப்பார்கள், பின்னர் அனைத்தையும் மறந்துவிடுவார்கள் என்ற எண்ணத்தை துடைத்தெறியுங்கள். ஒரு மலையக சமூகத்தைச் சார்ந்தவனாக, உங்களைப் போன்றவர்களை மக்கள் தெரிவு செய்திருக்கிறார்கள் என்பதை நினைத்து வெட்கித் தலைகுனிகிறேன்.

உங்களுடைய கட்சித்தாவலுக்கும் கடைசிநேர சதுரங்க ஆட்டத்துக்கும் பிரதான காரணம் என்ன என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள். உங்களை அமைச்சுப் பொறுப்பில் அமர்த்தியவர்களின் முக்கிய நோக்கம் என்ன?

நீங்கள் மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்பதா? அல்லது பெரும்பான்மையை நிரூபித்து தமிழ்மக்கள் தங்களோடு இருக்கிறார்கள் என்பதை வெளியுலகுக்குக் காட்ட வேண்டும் என்பதா?

நான் ஐக்கிய தேசிய கட்சி சார்ந்தவன் அல்லன். மனச்சாட்சியுள்ள பெருந்தோட்டவாசியாக மக்கள் மனதில் உள்ள குமுறல்களை வார்த்தையாக்கிக்கொண்டிருக்கிறேன்.



ஆகட்டும், இப்போது நீங்கள் பெருந்தோட்டத்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கிறீர்கள். இனி மக்களின் கோரிக்கையை எவ்வாறு நிறைவேற்றப்போகிறீர்கள்? புதிய பிரதமரும் அவர் சார்ந்த குழுவினராலும் இது தொடர்பாக எழுத்து மூல உறுதிப்பாடு வழங்கப்பட்டிருக்கிறதா? என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்துங்கள்.

பெருந்தோட்ட மக்களின் சம்பளக் கோரிக்கை தொடர்பாக ஒக்டோபர் 10ஆம் திகதி தங்களுடைய தொழிற்சங்க அலுவலகத்தில் நாம் சந்தித்திருந்தோம். ஆயிரம் ரூபா சம்பளம் பெற்றுத்தராமல் ஓயமாட்டேன் என உறுதியளித்ததை மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

இனி உங்களுக்கு ஒரு தொழிற்சங்கம் இல்லை. இனியும் ஒரு தொழிற்சங்கம் வேண்டுமானால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிடம் தஞ்சம் கோரலாம். ஆனால் நீங்கள் ஆரம்பத்தில் அங்கும் எவ்வாறான சித்துவிளையாட்டுகளை நடத்தினீர்கள் என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள்.

எந்தவொரு சுயலாபமும் (?) இன்றி மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அமைச்சுப் பொறுப்பை ஏற்றிருந்தால் அந்தக் கடமையை நியாயமாகவும் நேர்மையாகவும் செய்வதற்கு இனியாவது முயற்சி செய்யுங்கள் அமைச்சரே. அரசியல் ரீதியாக எந்தவொரு கொள்கையும் இல்லாமல் அங்குமிங்கும் தாவித்திரிவதால் உங்களை மாத்திரமன்றி சமூகத்தையும் காட்டிக்கொடுக்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

மக்களின் கொந்தளிப்பில் குளிர்காயும் அரசியல் முதலைகள் பல இருக்கின்றன. இப்போது மக்களுக்கு முக்கியமானதொரு தேவை இருக்கிறது. அது சம்பளத் தேவை. அதனைக்காரணம் காட்டி கட்சி தாவுவது மிக இலகுவான விடயம் தான். ஆனாலும் இனிவரும் காலம் சவால்மிக்கதொரு நிலைமையைத் தோற்றுவிக்கலாம் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

அத்தோடு மக்கள் சார்பில் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். இருநூறு வருட கடும் உழைப்போடு இன்றும் தமது உழைப்பை மாத்திரமே நம்பியிருக்கும் அப்பாவித் தொழிலாளர்களின் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள். உங்களை அறியாமல், மலையகத்தில் மாற்றத்தை வேண்டி பாரியதொரு இளைஞர் சக்தி உருவாகி வருகிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.



மேலும் பல முதலைகள் பற்றி தொடர்ந்தும் பேசுவோம்.

-இராமானுஜம் நிர்ஷன்-

Friday, September 9, 2016

சப்ரகமுவ தமிழ் மாணவர்களின் உயர்தரக் கல்வியோடு விளையாடுகிறதா கல்வி அமைச்சு?


-நிர்ஷன் இராமானுஜம்-

சப்ரகமுவ மாகாண தமிழ் மொழி மூல உயர்தர மாணவர்களுக்கு என்றுமில்லாதவாறு அநீதி இழைக்கப்பட்டுள்ளமை அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் பேசும் மக்களுக்கு வரப்பிரசாதமாக கல்வி இராஜாங்க அமைச்சு கிடைத்துள்ள போதிலும் சப்ரகமுவ மக்கள் மாற்றான்தாய் மனப்பான்மையோடே பார்க்கப்படுகின்றனர்.
சப்ரகமுவ மாகாணத்தில் எந்தவொரு தமிழ் பாடசாலையிலும் உயர்தர கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப பிரிவுகள் இல்லை. இதுவரை காலமும் அதற்கான எந்த ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவும் இல்லை.
அதுமாத்திரமல்லாமல் கலை, வர்த்தக பிரிவுகளில் போதிய வளங்கள், ஆசிரியர் பற்றாக்குறைகளும் சப்ரகமுவ மாகாணத்தில் நிலவுகிறது.
இந்நிலையில் தாம் விரும்பிய துறையில் தம்மை ஈடுபடுத்திக்கொள்வதற்காக வேறு மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளை இந்த மாணவர்கள் நாடுகின்றனர்.
தலைநகர் கொழும்பு உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களை விட பொருளாதார ரீதியில் மத்திய மாகாணம் பொருந்தும் காரணத்தினால் பெற்றோர் மத்திய மாகாணத்தை நாடுகின்றனர்.
அத்துடன் தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசம் என்பதாலும் நம்பிக்கையுடன் அந்த மாவட்ட பாடசாலைகளை நாடுகின்றார்கள்.
மத்திய மாகாணத்தில் சப்ரகமுவ மாணவர்களை இணைத்துக்கொள்ளுவதானது இன்று நேற்று நடைபெறுவது அல்ல. மிக நீண்டகாலம் தொட்டே இந்த மாணவர்கள் மத்திய மாகாண பாடசாலைகளில் கற்று சிறப்புத் தேர்ச்சியுடையவர்களாக வெளியேறி வருகிறார்கள்.
இந்த நிலையில் நுவரெலியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தவறான புரிதல் ஏற்பட்டுள்ளது.
அதாவது பரீட்சைக்கு தோற்றுவதற்காக மாத்திரமே அவர்கள் மத்திய மாகாணத்தை நாடுவதாக அரசியல் பிரமுகர்கள் எண்ணுகின்றனர். அத்துடன் வெட்டுப்புள்ளியை காரணம் காட்டியும் மாணவர்கள் இணைவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது தவறான கண்ணோட்டமாகும்.
தமது எதிர்கால கனவுகளை நனவாக்கிக் கொள்ளவே அத்தனை சிரமங்களையும் தாண்டி வேறு மாகாணங்களுக்கு செல்கிறார்கள். உரிய வளங்கள் தமது பகுதியில் இருந்தால் மாற்றிடங்களை நாட வேண்டிய அவசியம் இல்லை.
சப்ரகமுவவில் தமக்குரிய பாடத்திட்டங்கள் இல்லையென்றால் அந்த மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்? என்பதற்கு உரிய பதில் அரசியல்வாதிகளிடம் இருக்குமானால் தயவுடன் அதை முன்வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த முறை மாணவர்களுக்கு நிகழ்ந்த அநீதி இங்கே குறிப்பிடுகிறேன்.
சப்ரகமுவ மாகாணத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற 38 மாணவர்கள் நுவரெலியா மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு விண்ணப்பித்திருந்தார்கள்.
அவர்களுக்கான அனுமதி கடந்த ஜுன் மாதம் பாடசாலை நிர்வாகத்தினால் வழங்கப்பட்டிருந்தது.
அந்த மாணவர்கள் பாடசாலைகளுக்கு உரிய கட்டணங்களை செலுத்தி தங்குமிடங்களையும் தெரிவு செய்து அதற்கான கொடுப்பனவையும் செலுத்தி அங்கு தங்கியிருந்தார்கள்.
அவர்களில் பலர் பாடசாலைகளுக்கு சென்று கல்வி நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளனர்.
எனினும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவ்வந்த பாடசாலைகளிலிருந்து அவர்கள் பலாத்காரமாக அனுப்பப்பட்டுள்ளனர். கல்வி அமைச்சரின் கடுமையான உத்தரவின்பேரில் பாடசாலைகளிலிருந்து அனுப்புவதாக பாடசாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
மாணவர்களுடைய நோக்கம், கனவுகள் எல்லாம் சிதைக்கப்பட்டு இன்று செய்வதறியாது தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆக, இதன்பிறகு கல்வி அமைச்சருக்கு ஊடகங்கள், அரசியல்பிரமுகர்கள், பெற்றோர்கள், பொதுமக்களால் விடுக்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாக இரத்தினபுரியில் இரண்டு பாடசாலைகளிலும் ஊவாவில் இரண்டு பாடசாலைகளிலும் உடனடியாக உயர்தர கணித, விஞ்ஞான பிரிவுகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் இராதாகிருஷ்ணன் உறுதியளித்திருந்தார்.
இந்தத் தீர்மானத்தை நாம் வரவேற்கிறோம்.
ஆனால் உரிய வளங்களுடன் பூரணமாக குறித்த பிரிவுகள் எப்போது ஆரம்பிக்கப்பட்டு இந்த மாணவர்கள் எப்போது பரீட்சை எழுதப்போகிறார்கள்?
இந்த அப்பாவி மாணவர்கள் மத்திய மாகாணத்தில் கல்வி கற்பதற்கான கோரிக்கையை விடுக்கிறார்களே தவிர வேறெந்த நோக்கத்திற்காகவும் அல்ல என்பது உரியவர்களுக்குப் புரிகிறதா?
சப்ரகமுவவை பிரதிநிதித்துவப்படுத்தி மாகாண சபை உறுப்பினர்களாக தெரிவாகியிருக்கும் இருவரும் இதுவரை இது தொடர்பாக வாய் திறக்கவில்லை. கல்வி அமைச்சர் வேறு கட்சிதானே? அவர்களே பார்த்துக்கொள்ளட்டும் என்ற மனப்பான்மையில் அவ்விருவரும் இருக்கிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது.
இந்த மாவட்ட பாடசாலை சமூகத்திடையே பெரும் வெறுப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் இவர்களுடைய காதுக்கு எட்டாததன் காரணமும் பின்னணியும் எதுவென மக்கள் நன்கறிவார்கள்.
இது இவ்வாறிருக்க, தமிழ் முற்போக்கு கூட்டணி சப்ரகமுவ மாகாணத்தை மாற்றான்தாய் மனப்பான்மையுடன் நோக்குவதற்கான காரணம் என்ன?
அவ்வாறெனின் தேசிய அமைச்சுகளை வாக்கு வங்கியை வளர்த்துக்கொள்வதற்காக மாத்திரம் பயன்படுத்திகிறார்களா?
மலையகம் என்றால் நுவரெலியா மாத்திரம் அல்ல. எமது தமிழ் அரசியல்தலைவர்கள் என நாம் உரிமையோடு கேட்கும்போது தலைசாய்த்து நியாயத்தை கேட்காமல் தட்டிக்கழிப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழ் மாணவர்கள் எதிர்நோக்கியிருக்கும் இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு மிக விரைவாக எட்டப்பட வேண்டும் என்பதே மக்களது கோரிக்கை.
சப்ரகமுவவில் உயர்தர கணித, விஞ்ஞான பிரிவுகளை ஆரம்பிக்க எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் வரவேற்கத்தக்கவை. அது நடைபெறும் வரையில் இந்த முறை மாத்திரமாவது மாணவர்கள் மத்திய மாகாணத்தில் இணைத்துக்கொள்வதற்கான அனுமதியை கல்வி அமைச்சு வழங்க வேண்டும்.



Tuesday, April 23, 2013

நியாயத்தை ஆட்டிப்படைக்கிறதா அதிகாரம்?


ஓர் ஊடகவியலாளனாக அன்றி சாதாரண பொதுமகனாக ஆதங்கம் நிறைந்தவனாய் எழுதுகிறேன்.

கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏப்ரல் 21 ஆம் திகதி மலையக தொழிற்சங்க கூட்டமைப்பினர் கொட்டகலையில் ஆர்ப்பாட்டம் நடத்தத் தீர்மானித்திருந்தனர்.
அவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தத் தயாரானபோது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்கள் அவ்விடத்துக்கு வந்து குழப்பம் விளைவித்தனர் என்பது செய்தி.
ஆம்! மலையக தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படைச் சம்பள அதிகரிப்பு போதுமானது அல்ல என்பது வெட்டவெளிச்சமானதாகும். இரண்டு வருடங்களுக்கு வெறும் 70 ரூபா (நாளொன்றுக்கு)அதிகரிப்பில் அவர்களால் என்ன செய்துவிட முடியும்?

இந்த இரண்டு வருடங்களுக்குள் எரிபொருளோ, மின்கட்டணமோ, போக்குவரத்துச் செலவோ, இதர அத்தியாவசிய செலவுகளோ அதிகரிக்க மாட்டாது என்பதை ஒப்பந்தக்காரர்களால் நிச்சயித்துக் கூறமுடியுமா?
ஐந்து பேர் உள்ள குடும்பம் ஒன்றுக்கு இந்த அதிகரிப்பு போதுமானது என கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கத் தலைவர்கள் தீர்மானித்தமையை எண்ணி தலைமைகளை உருவாக்கியவர்கள் என்ற வகையில் மலையகம் வெட்கம் கொள்கிறது.
அதிகரிக்கப்பட்டுள்ள சம்பளத்தை மக்கள் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறார்கள் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மார்தட்டிக்கொள்கிறது. ஆனால் மக்களோடு மக்களாக இருந்து பார்த்தவன் என்ற வகையில் அவர்களின் வேதனையை வரிகளுக்குள் அடக்கிவிட முடியாது.
இதைத் தட்டிக்கேட்க திராணியற்றவர்களாக தொழிலாளர்கள் மனதுக்குள் குமுறி அல்லல் படுகிறார்கள் என்பதே யதார்த்தமான உண்மை.
அவர்கள் ஆரம்பம் முதலே அடக்கியாளப்பட்டவர்கள். ஆதலால் கூச்ச சுபாவம் அவர்களைத் தட்டிக்கேட்க விடுவதில்லை என்பது ஒருபுறமிருக்க நியாயமான சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுக்க வேண்டியது மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களின் கடமையல்லவா?

சரி… ஆகட்டும்.

நிலைமை இப்படியிருக்கையில் கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிரான போராட்டத்தை அமைச்சர் ஆறுமுகனின் கோட்டையாகக் கருதப்படும் கொட்டகலையில் நடத்துவதற்கு எதிர்ப்புக் கூட்டணி தீர்மானித்து அதற்கான திகதியை முன்னரே அறிவித்திருந்தது.
எனினும் அன்றைய தினத்தில் அதே இடத்தில் கூட்டு ஒப்பந்தத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக இ.தொ.கா. அறிவிக்கவில்லை.
மக்களாகவே சந்தோசத்தை வெளிப்படுத்துவதற்காக கூடினார்கள் என இ.தொ.கா. கூறினாலும் தலைமைத்துவம் வழங்கப்படாமல் மக்கள் கூடினார்கள் என்பதை நியாயப்படுத்த முடியுமா?

எந்தவொரு முன்னறிவித்தலும் இன்றி கூடிய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பொலிஸார் ஆதரவு வழங்கியதன் பின்னணி என்ன?

கூட்டு ஒப்பந்தத்தில் நியாயமான சம்பள உயர்வு கிடைத்ததற்காக ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள் என்றால் அதை ஏன் ஒப்பந்தம் கைச்சாத்திட்ட மறுநாளோ அல்லது ஒரு வாரத்திற்குள்ளோ நடத்தியிருக்கக் கூடாது?

ஆர்ப்பாட்டக்காரர்களில் பெரும்பாலானோர் அதிக மதுபோதையில் இருந்துள்ளார்கள். அவர்கள் சொந்தக் காசில் தான் மதுபானம் வாங்கி அருந்திவிட்டு ஆர்ப்பாட்டத்துக்கு வந்தார்களா?
அங்கு கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன், அம்பகமுவ பிரதேச சபை முன்னாள் தலைவர் நகுலேஸ்வரன், நுவரெலிய பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சக்திவேல், மத்திய மாகாண சபை உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் இருந்ததாக பொதுமக்கள் தகவல் வழங்கினார்கள். இவர்கள்தான் ஆர்ப்பாட்டக்காரர்களை வழிநடத்தியதாகவும் சிலர் கூறினார்கள்.
"ஆறுமுகனின் கோட்டைக்குள் எந்த நாயும் வரக் கூடாது. வரவும் விடமாட்டோம்" என அதிகாரத் தொனியில் இந்த மக்கள் பிரதிநிதிகள் அங்கு பேசினார்கள்.




அவ்வாறெனின் இவர்களுக்கும் இ.தொ.கா.வுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தலைமைபீடத்தால் கூற முடியுமா?
ஆக, நியாயத்தை அதிகாரம் ஆட்டிப்படைக்கிறதா? என மக்கள் கேட்கிறார்கள். அமைச்சர் ஆறுமுகரே என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?

அரசியல் தலைமை என்பது மக்கள் சேவை என்பதில் மாத்திரம் வரையறுத்துக்கொள்ளாது ஒட்டுமொத்த சமூகத்துக்கும் உதாரணமாக செயற்பட வேண்டியது அவசியமாகும். அப்படி ஒரு தலைமைத்துவத்தை மலையகம் எதிர்பார்க்கிறது.
தொழிலாளர்கள் அப்பாவிகள் என்பதால் சில சந்தர்ப்பங்களில் எதைச் சொன்னாலும் ஏற்றுக்கொள்கிறார்கள். அதற்காக கொட்டகலையில் கொம்பு முளைத்த வெள்ளைக் காகம் நான்கு கால்களுடன் பறக்கிறது பாருங்கள் எனச் சொன்னால் யார்தான் ஏற்றுக்கொள்வார்கள்?
கொட்டகலையில் மலையக தொழிற்சங்க கூட்டமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தை குழப்புவதற்காக வேறொரு ஆர்ப்பாட்டம் திட்டமிட்டு செயற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கும் தொடர்பில்லை என்று அறிக்கை விட்டுக்கொள்ளலாம்.

ஆனால் அமைச்சர் ஆறுமுகனின் கோட்டையில் அவருக்குத் தெரியாமல் எதுவும் நடந்திருக்க வாய்ப்பில்லை என்பதும் வெளிப்படையே.
-இராமானுஜம் நிர்ஷன்