Monday, May 1, 2017

இனியொரு புதுத் தேசம் மலரட்டும்!

இனியொரு புதுத் தேசம் மலரட்டும்


அன்புக்குரிய மகனே,
துரோகிகளும் ஏமாற்றுவித்தைக்காரர்களும் நிறைந்து வாழும் தேசம் இது. சுற்றுச்சூழ நாம் காணும் இயற்கையை கொண்டு சுவர்க்க பூமி என எடைபோட்டு விடாதே. மலைக்காட்டை அழித்து தேயிலை விதைத்து பச்சை தேசத்தை சமைத்தார்கள் எங்கள் மூதாதையர்கள்.


காடழிக்கும் பணிக்கு சென்ற ஆயிரக்கணக்கான மூதாதையர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை. பகடைக்காய்களாய் அங்குமிங்கும் அடிபட்டிருக்கிறோம். எம்மை வைத்து இலாபம் தேடிய முதலாளிமார் இன்னும் சுகமாகத்தான் வாழ்கிறார்கள்.
நாம் இதயசுத்தியானவர்கள். எங்களுக்கு ஏமாற்றம், துரோகம் என்பதெல்லாம் வெறும் வார்த்தைகளாகத்தான் தெரியும். காமன் கூத்தில் மாத்திரம் தான் எங்கள் கிராமத்து மக்கள் நடிப்பார்கள்.

நமது சோகமெல்லாம் மலைக்காற்றிடையே மறைந்திருக்கிறது. எமது கண்ணீர்கூட தேயிலைக்கு உரமாகியிருக்கிறது.

இங்கே தலைவர்கள் என சொல்லிக்கொள்வோர் வந்துபோவதுண்டு. எம்மை ஆளப்பிறந்தவர்களாகவும் அன்பின் இருப்பிடமாகவும் அவர்கள் காட்டிக்கொள்வதுண்டு. அவர்களின் புன்னகைக்குப் பின்னால் போலித்தனத்தின் உச்சம் மறைந்திருக்கிறது.

நாம் இதை கண்டுகொள்ள காலம் எடுத்தது குழந்தையே. நீ எங்கள் வரலாற்றை முதலில் கற்றுக்கொள். அவை சொல்லித் தரும் பாடத்தை விட எந்தத் தத்துவங்களும் உணர்த்திவிடப் போவதில்லை.

கூடை சுமந்து கூனிப் போனேன், கொழுந்து கிள்ளிக் களைத்துப் போனேன்
ஒரு ரொட்டித் துண்டில் வயிற்றை நிரப்பி உன்னை கருவாய் சுமந்தேன். கால்கிலோ குறைந்ததென்று அரைநாள் சம்பளத்தோடு வீடு திரும்பிய நாட்கள் அதிகமாகவே உண்டு.


பசியும் ஏமாற்றமும் கல்நெஞ்சக்காரக் கடவுள் எமக்கு கொடுத்த வரங்கள். நாம் பணத்தால் ஏழைகளே தவிர மனதால் மிக உயர்ந்தவர்கள்.

நான் சிறுபராயத்தில் இருக்கும்போது பௌர்ணமி இரவில் ஊரார் இணைந்து கதை பேசுவார்கள். அப்போது மூத்தவர்கள் பலரும் தாங்களே இயற்றிய பாடல்களை பாடுவார்கள். அந்த ஒவ்வொரு வார்த்தைகளிலும் ஏராளமான வலிகள் புதைந்திருக்கும். ஆனால் அதே பாடல்கள்தான் வலிகளை போக்கும் மருந்தாகவும் இருந்தன.

அந்தக்காலம் இப்போதில்லை. காலம் முழுவதும் கடவுளைத் தூற்றிக்கொண்டே காலமாகிப் போகிறோம்.

உன்னைப் போல எத்தனையோ குழந்தைகள் கொழும்பில் பணக்காரர்கள் வீட்டில் வளர்க்கப்படுகிறார்கள். அவர்களுக்கு உலகம் தெரியாது. பாத்திரம் தேய்ப்பதைத் தவிர வேறொன்றும் சாதித்தது கிடையாது.

என் உதிரம் கொடுத்து உனக்கு உயிர்கொடுத்திருக்கிறேன். உன்னை கடைசிவரை உயிராகக் காக்கும் வரம் எனக்கு கிடைக்குமோ தெரியாது. எனக்கு பொன்,பொருள்,மாளிகையொன்றும் தேவையில்லை. 

என்னைப்போல எத்தனையோ தாய்மாருக்கு மகனாக வளர்ந்து இந்த தேசத்துக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்திடு.
எனக்கு ஆயிரமாயிரம் கனவுகள் உண்டு. என் உயிர் துறக்கும் தருவாயில் அவையும் என்னுடனேயே இந்த மண்ணுக்குள் புதைந்து போகும். அரசியலில் நல்லவர்கள் இருப்பார்கள், சமூகத்தில் துரோகிகளல்லாத நல்லுள்ளம் படைத்தவர்கள் இருப்பார்கள் என்பதை இந்த உலகுக்கு காட்டு.

தூய சிந்தனையுடனான உன் வளர்ச்சி கண்டு இந்த மண்ணுக்குள் புதைந்துபோன எங்கள் மூதாதையர்களின் ஆத்மா சாந்தியடையட்டும். இனியொரு புதுத் தேசம் உன்னிலிருந்து மலரட்டும்!

அன்புடன் அம்மா.

எழுத்து: இராமானுஜம் நிர்ஷன்
படங்கள்: சொரின் பர்ஸோய் (அல்-ஜசீரா)

No comments: