Thursday, September 13, 2007

மலையக தொழில்நுட்பக் கல்லூரிகளில் தமிழ்மொழிமூலப் பயிற்சி நெறிகள் வேண்டும்

(தினக்குரலில் 30.08.2007 இல் வெளிவந்த கட்டுரை)

-த. மனோகரன்-

கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ, மாணவியர் தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர்ந்து பல்வேறு தொழில்நுட்பப் பாடங்களைப் பயில வசதிகள் செய்யப்பட்டுள்ளன. உயர் தொழில்நுட்பக் கல்லூரிகள் உயர்கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் அதேவேளை, தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் கீழும், வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழும் பல தொழில்நுட்பக் கல்லூரிகள் செயற்படுகின்றன.
வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழ் நுவரெலியா, கண்டி, பதுளை ஆகிய மலையக நகரங்களில் தொழில்நுட்பக் கல்லூரிகள் இயங்குகின்றன. இவை எதிலும் தமிழ்மொழிமூல பயிற்சிகள் வழங்கப்படுவதில்லை. ஏற்கனவே, நுவரெலியா, கண்டி ஆகிய இடங்களிலுள்ள தொழில்நுட்பக்கல்லூரிகளிலிருந்த தமிழ்மொழி மூல கற்கை நெறிகள் தற்போது நடைபெறுவதில்லை. பதுளையில் தமிழ் தட்டெழுத்து இயந்திரங்கள் போன்ற சாதனங்கள் பலவருடங்களுக்கு முன்பு வழங்கப்பட்டிருந்த போதும் தமிழ்மொழிமூல கற்கைநெறிகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லையென்று கூறப்படுகின்றது.
க.பொ.த. (சா.தர)ப் பரீட்சையில் சித்தியடைவது மட்டுமே தொழில்நுட்பக் கல்லூரி அனுமதிக்கான தகைமையாகவுள்ளது.
கணக்கியல் தொழில்நுட்பவியலாளருக்கான தேசிய சான்றிதழ் நெறிக்கான இரண்டு வருடப் பயிற்சி நெறியும், சுருக்கெழுத்து, தட்டெழுத்தாளருக்கும், கணினி பயிலுநருக்கான ஒருவருட சான்றிதழ் நெறியும் வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழ்வரும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படுகின்றன.
கணக்கியல் தொழில்நுட்பவியலாளருக்கான தேசிய சான்றிதழ் (N.C.A.T.) பாடநெறியில் வர்த்தகம், கணக்கியல், பொருளியல், கணிதம், வரிவிதிப்பு, உட்பட பல பாடநெறிகள் உள்ளன.
ஒருவருட பயிற்சி நெறியாக கணினி மற்றும் சுருக்கெழுத்து, தட்டெழுத்துப் பாடநெறியுள்ளது.
இப்பாடநெறிகளில் பயிலும் மாணவர்களுக்கு வரவு அடிப்படையில் மாதாந்தம் நானூறு ரூபாவுக்கு மேற்படாத கொடுப்பனவும் வழங்கப்படுகின்றது. அத்துடன், குடும்ப பொருளாதார நிலையை அடிப்படையாகக் கொண்டு ஐயாயிரம் ரூபா உதவு தொகையும் வழங்கப்படுகின்றது.
இவ்வாறு பாடசாலை, பல்கலைக்கழக உயர்கல்வி பயிலும் வசதியற்ற க.பொ.த. (சா.த.) பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் எதிர்கால தொழில்வாய்ப்பை உருவாக்கு முகமாக அரசாங்கத்தால் செயற்படுத்தப்படும் மேற்படி செயற்திட்டம் மலையகத் தமிழ் மாணவர்களைச் சென்றடையவில்லையென்பது கவலையளிப்பதாகும். இதுபற்றி எவரும் பொறுப்புடன் சிந்திப்பதாகவும் தெரியவில்லை.
மலையகத்தின் நுவரெலியா மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் ஐம்பத்திரெண்டு வீதத்தினராகத் தமிழர்களிருந்த போதும் அங்குள்ள தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழ்மொழிமூலப் பாடநெறி இல்லாமலிருப்பது ஒரு புறக்கணிப்பாகவே கருதப்பட வேண்டியதாகும். இதை ஒரு சமூக அநீதியாகவும் கொள்வதில் தவறில்லை.
சமூக அநீதி ஒழிப்புக்குப் பொறுப்பான அமைச்சர் பெ. சந்திரசேகரன் நுவரெலியா மாவட்ட தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர். அத்துடன், வாழ்க்கைத் தொழிற் பயிற்சிப் பிரதியமைச்சர் பெ. இராதாகிருஷ்ணனும் மலையக தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகவே உள்ளார்.
இவ்வாறான பொறுப்புமிக்க அமைச்சர், பிரதி அமைச்சர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மலையகத் தமிழ் மக்களின் பிள்ளைகள் தேசிய ரீதியில் பல்வேறு மட்டங்களில் அரசாங்கக் கல்விக் கொள்கைக்கமைய வழங்கப்படும் தொழில்நுட்பப் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ள வழி செய்யப்படாமலிருப்பது சமுதாய நோக்கில் வேதனைக்குரிய ஒன்றாகும்.
தொழில்நுட்பக் கல்லூரியில் சான்றிதழ் பெற்றவர்கள் தனியார்துறைகளில் வேலை வாய்ப்புப் பெற முன்னுரிமையுள்ளது. இன்று தமிழ் சுருக்கெழுத்து, தட்டெழுத்து, கணினி அறிவுகொண்டவர்களுக்குப் பெருந்தட்டுப்பாடு நிலவுகின்றது.
அரசாங்க சேவையில் முகாமைத்துவ உதவியாளர் சேவை போன்றவற்றில் இணைந்துகொள்ள சுருக்கெழுத்து, தட்டெழுத்து, கணினி அறிவு மேலதிக தகைமையாகவுள்ளது. இவ்வாறிருக்கும் போது குறிப்பிட்ட பாடநெறிகளைப் பெறும் வசதி இன்மையானது மலையகத் தமிழ் பிள்ளைகளின் எதிர்கால வளத்திற்கு ஒருதடையாகவே கணிக்கப்பட வேண்டும்.
பொருளாதார ரீதியில் வசதி குறைந்த, பல்வேறு சிரமங்களின் மத்தியில் வாழ்வை ஓட்டும் மலையகத் தமிழ் மக்களின், அவர்களது பிள்ளைகளின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தொழில்நுட்பக் கல்லூரிகளில் வழங்கப்படும் பயிற்சிகள் பெரும் உதவியாக, வழிகாட்டியாக அமையும்.
எனவே நுவரெலியா, கண்டி தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஏற்கெனவே இருந்த தமிழ்மொழிமூல பாடநெறிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கும் பதுளை தொழில் நுட்பக் கல்லூரியில் தமிழ்மொழி மூலப் பாடநெறிகளைத் தொடங்குவதற்குமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
புறக்கணிக்கப்பட்டுள்ள மலையக தமிழ் சமூக பிள்ளைகளைச் சமூக அநீதியிலிருந்து மீட்டெடுக்கவும், அவர்களுக்கு வளமாக வாழ்வதற்கு வாழ்க்கைத் தொழிற் பயிற்சியை அளிப்பதற்கும் இவ்விரு துறைகளுக்கும் பொறுப்பான அமைச்சர்களாகவுள்ள சந்திரசேகரனும், இராதாகிருஷ்ணனும் நடவடிக்கை எடுப்பார்களென மலையக தமிழ் பிள்ளைகளின் வளமான எதிர்காலத்தைப் பொறுப்புடன் நோக்கும் சமூக நலன்விரும்பிகள் எதிர்பார்க்கின்றனர்.
எம்மவர்கள் அமைச்சராக, பிரதி அமைச்சராக இருக்கின்றார்கள் என்று மக்கள் திருப்தியுறலாம். மலையகத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டு நாம் உயர் பதவிகளில் இருக்கின்றோமென்று அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் கூறிக்கொள்ளலாம். இவற்றால் சமுதாயம் எதுவும் பெறப்போவதில்லை.
நம்மவர்கள் உயர் பதவிகளில் இருந்தார்கள் என்று வரலாறு சொல்லுவதைவிட நமக்காக அவர்கள் இன்னின்ன ஆக்கபூர்வமான செயற்பாடுகளை ஆற்றினார்கள் என்று கூறப்பட வேண்டும். அதுவே, மக்களின் பெயரால் பதவிகளைப் பெற்றவர்களுக்கு அழகுமட்டுமல்ல கடமையும், பொறுப்பும்கூட.
மலையகத் தமிழ் பிள்ளைகளுக்கு நன்மை செய்யக்கூடிய சந்தர்ப்பத்தை நழுவவிடாது பொறுப்புள்ளவர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். செய்வார்களா?

1 comment:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//நம்மவர்கள் உயர் பதவிகளில் இருந்தார்கள் என்று வரலாறு சொல்லுவதைவிட நமக்காக அவர்கள் இன்னின்ன ஆக்கபூர்வமான செயற்பாடுகளை ஆற்றினார்கள் என்று கூறப்பட வேண்டும். அதுவே, மக்களின் பெயரால் பதவிகளைப் பெற்றவர்களுக்கு அழகுமட்டுமல்ல கடமையும், பொறுப்பும்கூட.
மலையகத் தமிழ் பிள்ளைகளுக்கு நன்மை செய்யக்கூடிய சந்தர்ப்பத்தை நழுவவிடாது பொறுப்புள்ளவர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். செய்வார்களா?//

இதைச் செய்யும் வரை அவர்கள் கதவுகளைத் தட்டுங்கள்.