Tuesday, November 10, 2009

அச்சுவலைச் சந்திப்பு 02

இளையதம்பி தயானந்தா – ஆசிரியர் - இருக்கிறம்

நான் இல்லாதபோதும் கூட அச்சுவலைச் சந்திப்பு நன்றாக நடந்துகொண்டிருக்கிறது. பதிவர்கள், ஊடகவியலாளர்கள் நான் நினைத்ததற்கும் அதிகமானோர் வந்திருக்கிறார்கள்.

இது வெறும் சந்திப்புதான்.

எமது விழுமியங்களையும் மொழியையும் காக்கவேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இன்றைய உலகம் இணையத்தின் பங்களிப்போடு தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆதலால் இணையத்தையும் ஊடகத்தையும் இணைக்கவேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டது.

நாம் எழுதுகிறோம் என்பது முக்கியமில்லை. என்ன எழுதுகிறோம்? எதற்காக எழுதுகிறோம்? நாம் எழுதுவதானால் ஏற்படும் அனுகூலங்கள் என்ன என்பது பற்றி சிந்தித்து எழுதுபவர்களை நான் குறைவாகவே காண்கிறேன். ஆகையால் நமது மொழிசார்ந்த அக்கறையாளர்கள் என்ற வகையில் இதற்குத் தீர்வு காணும் அடிப்படையாக இந்த சந்திப்பினை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

இனியும் நாங்கள் சந்திப்போம். இருக்கிறம் எப்போதும் உங்களுக்காக இருக்கிறது.

இந்திய சஞ்சிகைகளின் ஆதிக்கம் மேலோங்கியிருந்த காலத்தில் பல சவால்களுடன் இந்தப் பெயர்கொண்டு ஆரம்பித்தோம். பத்திரிகைகளையும் இந்திய சஞ்சிகைகளையும் பார்த்துப்பழகிய நம்மவர்களை ஓர் ஈழத்துச் சஞ்சிகை எவ்வாறு கவரவேண்டும்? எவ்வாறான தகவல்களை உள்ளடக்கலாம் என பல மாதங்களாக திட்டமிட்டோம். ஏன் இன்னும்கூட அது நடக்கிறது.

தமிழனாக இருந்து தமிழனுக்காக சஞ்சிகை நடாத்துவதன் சிரமங்களை நான் நிறையவே அனுபவித்திருக்கிறேன். ஆனாலும் நாம் உழைக்கப் பிறந்தவர்கள். ஏதோ ஒருவகையில் இந்தத் துறைக்குள் ஈர்க்கப்பட்டு இன்றுவரை அதற்காக பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம்.

எழுத்தாளர்கள், படைப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நமது சமுதயாம், மொழிக்காக பாடுபடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மீண்டும் பேசிய விடயங்கள் :

முன் அட்டை, இந்திய சினிமா போன்ற விடயங்களை சந்தைப்படுத்தலுக்காக கையாள வேண்டிய கட்டாயம் உண்டு. வருமானத்தினூடாகத்தான் இதனை நடாத்திச்செல்ல முடியும்.

மொழி வழக்கைப் பற்றி நான் குறிப்பிட்டாக வேண்டும். சில எழுத்துப்பிழைகள், தவறுகள் இருக்கின்றன என்பதற்கான நாம் மொழிப்பற்றற்றவர்கள் என்ற நிலைப்பாடு கொள்ளலாகாது.

நமக்கென உரிய மொழிச்சொற்கள் வழக்கொழிந்து வருகின்றன. அவற்றை மொழிப்பயன்பாட்டோடு பாதுகாக்க முதுசரம் சஞ்சிகையை வெளியிட நினைத்தோம்.

இனிவரும் காலம் பல நல்ல முயற்சிகளுக்கு வழிசமைக்கும் என்ற நம்பிக்கை உண்டு.

நடராஜா குருபரன் - ஊடகவியலாளர்

காலத்தின் சோதனையால் நாம் இன்று பிரிந்துநிற்கிறோமே தவிர மனதால் ஒன்றுபட்டிருக்கிறோம். உங்களை எல்லாம் நேரில் சந்திக்கவில்லையே என்ற ஆதங்கத்தை இருக்கிறம் போக்கியிருக்கிறது. தயானந்தா அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

என்னுடன் ஊடகங்களில் பணியாற்றிய நிறைய நண்பர்களை, எனக்குத் தலைமைப் பொறுப்பு வகித்தவர்களை இன்று பார்க்கிறேன்.

தயா அண்ணா கூறியதுபோல எதைவேண்டுமானாலும் எழுதலாம் என்றில்லாமல் நன்றாக சிந்தித்து, அது பொழுதுபோக்கு அமிசமாயினும் சரி, நடைமுறைவிடயங்களாயினும் சரி காத்திரமாக வழங்கப்படல் வேண்டும்.

குறிப்பாக பால்நிலை சமத்துவத்தை நாம் பேணவேண்டும். பல வலைத்தளங்களிலும் இணையத்தளங்களிலும் இழிநிலை வார்த்தைப் பிரயோகங்களை நான் பார்த்துவருகிறேன். இது நமது சமுதாயத்தை மேலும் கீழ்தரத்துக்கு தள்ளும் செயலாகும்.

நாம் ஏன் இன்று இவ்வாறிருக்கிறோம்? நமக்கான களம் என்ன? என்றெல்லாம் சிந்திப்பவர்கள் இவ்வாறு எழுதுவதில்லை.

குறிப்பாக ஊடக தர்மம் குறித்து சிந்திப்பவர்கள் குறைவாகத்தான் இருக்கிறார்கள். இதனை ஒரு குறையாக நினைத்துக்கொள்ள வேண்டாம். செம்மைப்படுத்தலின் அவசியம் காலத்தின் தேவை என்பதாலேயே நான் இதைக் குறிப்பிடுகிறேன்.

ஒரு விடயத்தை எழுதும்போது அதனால் மற்றொரு சமூகமோ, வர்க்கமோ, மொழியோ அல்லது இதர விடயங்களோ பாதிக்கப்படக்கூடாது. அதனால் நாம் எழுதுவதன் காத்திரத்தன்மையை இழந்துவிடுகிறோம்.

ஒரு தளத்தில் வருவதை அவ்வாறே பிரதிபண்ணி தமது இணைங்களிலும் வலைத்தளங்களிலும் பதிந்துவிடுபவர்கள் இருக்கிறார்கள். நான் எழுதும் பல கட்டுரைகள் பெயர்கூட குறிப்பிடப்படாமல் பல தளங்களில் பார்த்திருக்கிறேன்.

இவ்வாறானவற்றைத் தவிர்த்து தரமான தகவல்களை நாங்கள் வழங்க முன்வரவேண்டும். தமிழால் சாதனை படைப்பதற்கு நிறைய இருக்கிறது. அந்த சாதனை படைப்பதற்கான வழியை நாம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த சந்திப்பு அதற்கான ஏற்பாடாக அமையட்டும்.

எழில்வேந்தன் - ஊடகவியலாளர்

இணையத்தளங்களில் நாம் எழுதும் விடயங்கள் குறித்து இங்கு பல்வேறு கருத்துகள் பரிமாறப்பட்டன. தமிழில் விடப்படுகின்ற தவறுகள் பற்றி வித்தியாதரன் நன்றாக எடுத்துக்கூறினார்.

இவ்வாறான பிழைகளைத் தவிர்த்து முறையாக எழுதவேண்டியது நமது கடமையாகும்.

நான் ஒரு விடயத்தை இங்கு முன்வைக்க விரும்புகிறேன்.
நமது கலாசாரம், நமது மொழி என பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இந்தியச் சொற்கள், இந்திய படங்களை ஏன் நாம் நம்பியிருக்க வேண்டும். இருக்கிறம் சஞ்சிகையில் தற்போது அவ்வாறான போக்கு காணப்படுகிறது. எனக்குத் தந்த சஞ்சிகையில் கூட இந்திய சினிமாவுக்கே அட்டைப்படத்துடன் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறீர்கள்.

இதற்கான விளக்கத்தை நான் இருக்கிறம் நிர்வாகத்தினரிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

…………………………………………………………..
முகுந்தன் (வலைப்பதிவரல்லாமல் ஆர்வத்தின் காரணமாக வந்தவர்), சட்டத்தரணி மர்சூம், அறிவிப்பாளர் முகுந்தன், பிரதீப், ஒளிபரப்பாளர் முஷாரப் என ஒரு பட்டாளமே அங்கு தமது கருத்துக்களை முன்வைத்தது.
அனைவரினதும் பேச்சுக் குறிப்புகள் என்னிடம் இருக்கின்றன.

எனினும் அது இருக்கிறம் சஞ்சிகையின் வளர்ச்சிகான விமர்சனங்கள் என்பதால் நான் இங்கு எழுதவில்லை.
(தொடரும்)

2 comments:

Unknown said...

//பல வலைத்தளங்களிலும் இணையத்தளங்களிலும் இழிநிலை வார்த்தைப் பிரயோகங்களை நான் பார்த்துவருகிறேன் //

எனக்குத் தெரிந்தவரை எங்கள் இலங்கையைச் சேர்ந்த யாரும் பால் சமத்துவநிலைக்கெதிராக இழிசொற்களைப் பயன்படுத்துவதில்லை.
இது கதைக்கப்பட்டது எனக்குத் தெரியாது.

சரி பார்ப்போம்....

ம்...

//முகுந்தன் (வலைப்பதிவரல்லாமல் ஆர்வத்தின் காரணமாக வந்தவர்), சட்டத்தரணி மர்சூம், அறிவிப்பாளர் முகுந்தன், பிரதீப், ஒளிபரப்பாளர் முஷாரப் என ஒரு பட்டாளமே அங்கு தமது கருத்துக்களை முன்வைத்தது.
அனைவரினதும் பேச்சுக் குறிப்புகள் என்னிடம் இருக்கின்றன.

எனினும் அது இருக்கிறம் சஞ்சிகையின் வளர்ச்சிகான விமர்சனங்கள் என்பதால் நான் இங்கு எழுதவில்லை.//

அங்கு நடந்த கதையின் இரத்தினச் சுருக்கம். ;)

நன்றி நிர்ஷன் அண்ணா...
உங்கள் பதிவு தான் அந்த சந்திப்பின் வரலாற்றை சொல்லப் போகும் பதிவு.
வாழ்த்துக்கள் நன்றிகள்....
தொடர்ந்து எழுதுங்கள்...

யோ வொய்ஸ் (யோகா) said...

அன்று பின்வரிசையிலிருந்த எங்களுக்கு ஒலித்தெளிவின்மை காரணமாக எதுவும் கேட்கவில்லை. உங்களது பதிவு சகல உரைகளையும் தாங்கி வந்திருப்பது மகிழ்ச்சி.