Sunday, November 11, 2018

“ஆயிரம் ரூபா இயலாத காரியம் அரசியல் நலனுக்கான வாக்குறுதிகளுக்கு நாம் பொறுப்பாக முடியாது”

-நிர்ஷன் இராமானுஜம்-

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாவைப் பெற்றுக்கொடுக்க முடியாதென்றும் அரசியல்வாதிகள், அரசியல் நலனுக்காக மன்னர்கள் போல வாக்குறுதியளித்தமைக்கு தாம் பொறுப்பல்ல என்றும் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் பேச்சாளர் ரொஷான் இராஜதுரை தெரிவித்தார்.

கேள்வி: பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கோரும் 1000 ரூபா அடிப்படைச் சம்பளத்தை உங்களால் வழங்க முடியுமா? முடியாதா?
பதில்: முடியாது. அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற எமக்கும் விருப்பம் உண்டு. ஆனாலும் அது சாத்தியமற்றது.

கேள்வி: அவ்வாறாயின் உங்களால் தர இயலுமான, இறுதிப்படுத்தப்பட்ட தொகை என்ன?
பதில்: அடிப்படைச் சம்பளம் 600 ரூபா உள்ளடங்களாக மொத்தமாக 940 ரூபா என்பதே இறுதிப்படுத்தப்பட்டதாகும்.

கேள்வி: அடிப்படைச் சம்பளமாக 1000 ரூபா பெற்றுக்கொடுக்க முடியாமைக்கான காரணம் என்ன?
பதில்: அடிப்படைச் சம்பளம் 1000 ரூபா என்பது 100 வீத அதிகரிப்பாகும். எந்தவொரு தொழிற்துறையிலும் 100 வீத சம்பள அதிகரிப்பை வழங்குவது சாத்தியமற்றது. அவ்வாறு வழங்கினால் நாம் நிறுவனத்தை கொண்டு நடத்த முடியாதல்லவா? எமது தேயிலைக்கு உரிய விலை சர்வதேச சந்தையில் கிடைப்பதில்லை. அத்துடன் உற்பத்திச் செலவு உள்ளிட்ட இதர செலவினங்களின் அதிகரிப்பையும் இங்கு நோக்க வேண்டும். தொழிலாளர் செலவு 67 வீதமாகவும் எரிபொருள், உரம் உள்ளிட்ட ஏனையவை 15 வீதமாகவும் சுகாதாரம், நலன்புரி, மின்சாரம், வரிகள் உள்ளிட்டவை 5 வீதமாகவும் உத்தியோகத்தர்கள், தொழிற்சாலை, மனிதவளம், அலுவலகம், முகாமைத்துவ செலவுகள் 9 வீதமாகவும் இதர செலவுகள் 4 வீதமாகவும் காணப்படுகின்றன. இந்நிலையில் ஒரே தடவையில் பாரியதொரு தொகையை சம்பளமாக வழங்க முடியாத சூழ்நிலையே உள்ளது.

கேள்வி:  பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் வெளியகப் பயிரிடல் முறைமையை அறிமுகப்படுத்துவதன் ஊடாக தொழிலாளர்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்குவதாக கூறப்படுகிறதே?
பதில்: அசௌகரியம் கிடையாது. அது போலியான பரப்புரை. அதுதான் சிறந்த முறை. அந்த முறையின் ஊடாக 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொகையை தொழிலாளர்கள் வருமானமாகப் பெறுகிறார்கள். வெளிநாடுகளிலும் இந்த முறைதான் பின்பற்றப்படுகிறது.

கேள்வி: பெருந்தோட்ட கம்பனிகளுக்கு மானியம் வழங்கப்படுவதாகவும் அதனால் சம்பளம் அதிகரிப்பதற்கான சாத்தியங்களை மறுக்க முடியாது என்றும் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் குறிப்பிட்டுள்ளமை பற்றி..?
பதில்: பெருந்தோட்ட கம்பனிகளுக்கு மானியங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. அவை சிறுதோட்ட உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட மானியங்கள். அமைச்சர் இதனை ஆராய்ந்து பார்த்து கருத்துகளை வெளியிட்டிருக்க வேண்டும்.

கேள்வி: ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் கொடுக்க முடியாவிட்டால், தோட்டங்களை விட்டு வெளியேறுமாறு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பகிரங்கமாகக் கூறியிருக்கிறாரே?
பதில்: நாம் எமது தரவுகளையும் தகவல்களையும் வெளிப்படையாகப் பேணுகிறோம். அரசியல்வாதிகள், அரசியல் நலனுக்காக மன்னர்கள் போல வாக்குறுதியளித்தமைக்கு தாம் பொறுப்பல்ல, அதற்கு நாம் பொறுப்பாக முடியாது. அவ்வாறெனின், நாம் தோட்டங்களை விட்டு வெளியேறத் தயார். மறுபுறம், இவ்வாறு குறிப்பிடும் தொழிற்சங்கவாதிகளும் பணம் படைத்தவர்கள்தான். அவர்களால் தோட்டங்களைக் கொண்டு நடத்த முடியும்தானே? அவ்வாறு தோட்டங்களை நிர்வகித்து ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் பெற்றுக்கொடுக்கலாம் தானே?

கேள்வி: தொழிலாளர்களின் கோரிக்கை நியாயமற்றது என நினைக்கிறீர்களா? அவ்வாறியின் தொழிலாளர்பக்கம் உள்ள பாதகத் தன்மை என்ன?
பதில்: நியாயமானதுதான். நாங்கள் கையில் வைத்துக்கொண்டு இல்லை என்று சொல்லவில்லை. தொழிலாளர்களைப் பொறுத்தவரையில், ஆண் தொழிலாளர்களின் பங்களிப்பு மிக மிகக் குறைவாக காணப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 4 மணித்தியாலங்களே தொழில்புரிகிறார்கள். அதனால் உற்பத்தித் திறனும் குறைவடைகிறது.

கேள்வி: தேயிலை மற்றும் இரப்பர் தோட்டங்கள் உங்களது நிர்வாகத்தின் பின்னர் காடாகிப் போயுள்ளதை கண்கூடாக அவதானிக்கக் கூடியதாக இருக்கிறதே? நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளுக்கு ஏன் தொழிலாளர்கள் மீது குற்றம் சுமத்துகிறீர்கள்?
பதில்: தொழிலாளர்கள் பற்றாக்குறை மற்றும் வேலைக்கு வருகை தராமை தான் காரணம். தற்போதைய இளைஞர்கள் தோட்டங்களில் தொழில்புரிவதை விரும்புவதில்லை. தொழிலாளர் வருகையீனம் காரணமாக தோட்டங்களை பராமரிப்பதில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளோம். இதுவே, அரச நிர்வாகத்தின் கீழ் உள்ள தோட்டங்களைப் பாருங்கள். அவர்களுக்கு ஊழியர்சேமலாப, நம்பிக்கை நிதியங்கள் வழங்கப்படுவதில்லை. முறையாக சம்பளம் கூட வழங்கப்படுவதில்லை.

கேள்வி: சர்வதேச சந்தையில் இலங்கைத் தேயிலைக்குக் கிராக்கி இருக்கிறதல்லவா?
பதில்: ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் ஏலத்தில் உரிய விலை கிடைப்பதில்லை. இது பற்றி அநேகர் அறிந்திருக்காததன் காரணமாகத்தான் எம்மீது குற்றம் சுமத்துகின்றனர். ஏற்கனவே, ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் எமது தேயிலைக்கான கேள்வியை நாம் இழந்திருக்கிறோம். எதிர்வரும் காலம் எமக்கு மிகவும் சவாலாக அமையக்கூடும்.

கேள்வி: தொழிலாளர்களின் மனிதாபிமானம் சார்ந்த விடயங்களிலும் அவர்களின் நலன்களிலும் கம்பனிகள் அக்கறை செலுத்துவதில்லையே?
பதில்: தவறு. தொழிளார்கள் மற்றும் அவர்கள்சார்ந்த ஒரு மில்லியன் மக்களுக்கு எமது சேவைகள் கிடைக்கின்றன. குறிப்பாக இயற்கை அனர்த்தங்களின்போது நாம் மக்களின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருக்கிறோம். உதாரணமாக, 61 வைத்தியசாலைகள், ஆயிரத்து 474 சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் இயங்குகின்றன. இன்னும் பல்வேறு விடயங்களைக் குறிப்பிடலாம்.

கேள்வி: ஆங்காங்கே, தொழிலாளர்சார்ந்த விடயங்களில் கூட்டு ஒப்பந்தம் மீறப்படுவதாக குற்றம் சுமத்தப்படுகிறதே?
பதில்: நாம் நியாயமாகவும் வெளிப்படையாகவும் செயற்படுகிறோம். குற்றங்கள் முன்வைப்பவர்கள் யார் என்பதை மக்கள் அறிவார்கள். இங்கே மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

கேள்வி: இறப்பர் தொழிலாளர்கள் குறித்து தொழிற்சங்கங்களும் அதேபோல் முதலாளிமார் சம்மேளனமும் வாய்திறப்பதில்லை. ஏன்?
பதில்: இறப்பர் தொழிற்துறை பெரும் நட்டத்தில் இயங்குகிறது. காலநிலை மாற்றம், வெளிநாடுகளில் உள்ள கேள்வி உள்ளிட்டவை இதில் தாக்கத்தை செலுத்துகின்றன. எவ்வாறாயினும் நாம் உறுதியளித்த சம்பளத் தொகையை வழங்கி வருகிறோம்.

கேள்வி: இலங்கையில் பெருந்தோட்டத்துறை வீழ்ச்சிக்கு பெருந்தோட்டக் கம்பனிகளும் காரணம் என்பதை ஏற்றுக்கொள்வீர்களா?
பதில்: நீங்கள் யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும். 1992 ஆம் ஆண்டு 3 இலட்சத்து 27 ஆயிரம் தொழிலாளர்கள் தொழிலில் ஈடுபட்டார்கள். இப்போது அந்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 50 ஆயிரமாகக் குறைவடைந்துள்ளது. இளைஞர், யுவதிகள் பெரும்பாலும் இடம்பெயர்ந்து வெளியிடங்களுக்குச் சென்றுவிடுகிறார்கள். தொழிற்துறை பாதிப்புக்கு இதுவே பிரதான காரணியாகும்.

கேள்வி: ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளமாக கொடுக்காவிட்டால் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளனவே?
பதில்: எமது நிலைப்பாடு குறித்து தொழிற்சங்கங்கத் தலைவர்களும் நன்கறிவார்கள். நாம் விளக்கமளித்துள்ளோம்.

கேள்வி: சம்பள விவகாரம் தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளர் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தாரா?
பதில்: ஆமாம். இதே நிலைப்பாட்டைத்தான் நாம் அவரிடமும் எடுத்துரைத்தோம்.

நன்றி தினக்குரல்
11.11.2018

No comments: