மலையகத் தொழிலாளியின் மரண வாக்குமூலம் - நிர்ஷன் இராமானுஜம்

ஏமாற்றங்களையும் வலிகளையும் தாங்கிய ஒரு மலையகத் தொழிலாளியின் மரண வாக்குமூலம் இது!

Image from Internet
மகனே,

இந்தத் தளர்ந்த வயதில், மரணம் அழைக்கும் தருவாயில் உனக்காக இந்த மடலை வரைகிறேன். வாய்திறக்க முடியாத எனது சோகங்கள் அனைத்தையும் நீ பாடமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே எனது அவா.

அடர்ந்த காடுகளை அழகிய தேசமாக்கிய தன்னம்பிக்கை மிக்க சமூகம் நம்முடையது. எமது விதியோ என்னவோ குதிரைகளின் கொட்டகைக்குள் அடைக்கப்பட்டு வெள்ளையனுக்குச் சேவகம் செய்வதிலேயே காலம் கழிந்தது. மீசை முறுக்கிய அஜானுபாகுவான தோற்றத்தோடு உன் தாத்தா பீடியொன்றை பற்றவைத்துக்கொண்டு தன்னந்தனியாக இந்த மலைகளில் நடந்துவருவார். அவரோடு நடைபயின்றதால் என்னவோ எனக்கும் கொஞ்சம் திமிரும் இறுமாப்பும் கூடவே ஒட்டிக்கொண்டன. என்னதான் இருந்தாலும் வெள்ளையனின் பிரம்புக்குள் அத்தனையும் தொலைத்துப்போனதுதானனே உண்மை.

மகனே, இவற்றையெல்லாம் நீ மறந்துவிடக் கூடாது. வெள்ளையனின் ஆதிக்கத்தின் பின்னரும் எமக்கு நல்லகாலம் பிறக்கும் என நம்பியிருந்தோம். அதுவும் இந்த நிமிடம் வரை நடக்கவில்லை என்பதே பெருந்துயரம். எமது மக்களின் விடிவுக்காக குரல் கொடுக்கப்போகிறோம் என்று எழுந்துநின்றவர்கள் எல்லாம் இன்று அரசியல் சாக்கடைக்குள் விழுந்து விட்டார்கள். அதில் இன்பம் காணும் அவர்களை அங்கிருந்து மீட்டெடுப்பது என்பது, நீரில் இருந்து ஈரத்தைப் பிரித்தெடுப்பது போன்று சிரமமானது.

ஆகட்டும், எனக்கு 50 ரூபா சம்பளம் கிடைத்த நாள் முதல் உன்னைப் படிக்க வைத்திருக்கிறேன். ஆனாலும் நம் தலைவர்களின் உண்மையான முகம் பற்றி நான் உனக்குக் கற்றுத்தரவில்லை. ‘தோட்டகாட்டான்’ எனும் பெயரோடு நீ கொழும்பில் தொழில்புரிகிறாய், ஆனால் உன்னால் தெரிவானவனோ ‘தலைவன்’ எனும் பெயரில் சுகம் அனுபவிக்கிறான்.

நீ ஒன்றைப் புரிந்துகொள், மலையகத்தில் அரசியல் எனும் பெயரில் நடத்தப்படும் அத்தனையும் நாடகம்தான். நாம் வெறும் கோமாளிகள் போல நாடகத்தைப் பார்த்து ஏமாந்துகொண்டிருக்கிறோம். நம் தோட்டத்தில் காத்தவராயன் கூத்தில் உன் தாத்தா வெறியோடு ஆடியதைக் கண்டு ஒரு வாரம் நான் அவரிடமிருந்து ஒதுங்கி நின்றேன். ஆயினும் அதைவிட ஒப்பற்ற வகையில் நாடகங்கள் தான் எம் தலைவர்களால் இன்று அரங்கேற்றப்படுகிறது.

கொழுந்து மாலைகளால் நாம் அவர்களை அலங்கரிக்கின்றோம். ஆனால் ஒரு சிறு தூசுக்கேனும் எம்மை அவர்கள் கவனிப்பதில்லை.

அரசியல் என்றும் அவன்தான் தலைவன் என்றும் கொடிபிடித்துத் திரிந்து கொண்டாடிக் களித்தது போதும் மகனே! இன்னும் எத்தனை நாளைக்குத் தான் நாம் “ஐயா” போட்டுக்கொண்டே வாழ்வது? நமக்கென்று சுயமாய் ஒரு பாதையை நாம் வகுத்துக்கொள்ளக் கூடாதா?

ஐயாவின் வீட்டு மாட்டுத் தொட்டிலில் அதிகாலை 4 மணிக்கு பசும்பால் கறந்து கொடுத்திருக்கிறேன். சம்பளம் பெற்றுக்கொண்டதில்லை. கால் போத்தல் பாலுடன் வீட்டுக்கு வந்து உனக்கும் தங்கைக்கும் கொடுத்துவிட்டு மலைக்குப் போயிருக்கிறேன். அப்போதெல்லாம் வலிக்கவில்லை. வலிகளை நான் உணர்ந்ததும் இல்லை.

சின்னத்துரை எனக்கு ஒருநாள் பேர் போடவில்லை என முறைப்பாடு செய்ய ஐயாவின் அலுவலகத்துக்குச் சென்றேன். ஐயா என்னிடம் கேட்டாரே ஒரு கேள்வி…

“நீயெல்லாம் சம்பளம் எடுத்து என்ன செய்யப்போற? உன் புள்ள என்ன டொக்டராவா வரப்போறான்? அவனும் புல்லு வெட்டத்தானே போறான். போயிட்டு வேலயப்பாரு” என்றார்.

அப்போதுதான் வலித்தது மகனே. உன்னை என்னிலும் மேலாக உருவாக்க வேண்டும் என அப்போது நினைத்தேன். நான் இங்கே பிறந்ததும் இப்படி வளர்ந்ததும் என் தவறில்லையே? இறைவனின் தவறன்றோ என முச்சந்தி மாடசாமியிடம் விழுந்து விழுந்துக் கதறினேன்.

இவற்றையெல்லாம் நான் இதுவரை உன்னிடம் சொன்னதில்லை. என் வாழ்க்கையும் மரணமும் உனக்கு ஒரு பாடமாகட்டும். நீ எதற்கும் அஞ்சாதே, இளைஞன் என்ற நெஞ்சு நிமிர்த்திய பலம் உனக்கிருக்கிறது. அயராத உழைப்பும், விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் உனக்கிருக்கிறது. இனி எதற்கு, யாருக்கு பயப்பட வேண்டும்?

பயங்கரமான மிருகங்கள், விஷ ஜந்துக்கள், பேய், பிசாசுகள் என அத்தனையையும் தாண்டி அடர்ந்த வனங்களை அழித்து தேயிலை செய்தோம்.

இந்த நிலம், இந்தக் கோயில், இந்த லயம், இந்த ஆறு என அனைத்துமே எமக்கே சொந்தம். எங்களுடைய கலாசாரம், எங்களுடைய பண்பாடு, எங்களுடைய விழுமியங்கள், எங்களுடைய தனித்துவங்கள் என அத்தனையயும் காக்க வேண்டியதும் பேண வேண்டியதும் உன்னுடைய பொறுப்புதான் மகனே.

அப்போதைய காலத்தில், கடும் மழையிலும் வெயிலிலும் எங்கள் களைப்பு தீர நாம் பாட்டு பாடுவோம். அந்தப் பாடல்கள் சுற்றியுள்ள மலைகளில் எதிரொலிக்கும்.

“வாரான்டி வாரான்டி சின்னத்தொர
பெரம்பெடுத்து வாரான்டி கட்டத்தொர
சுண்ணாம்பு செவக்கவில்ல – அவன்
கோவந்தான் செவந்திருக்கு”
இப்படி பாடினோம்.

“மாடசாமிக்கு ஆடு வெட்ட வாங்கடியோ –
அந்த மலச்சாமிக்கு கோழி கொண்டு வாங்கடியோ
வாழ எல சோறு
வாழ வைக்கும் பாரு
சோகமெல்லாம் போகும் - நம்ம
சொந்தமெல்லாம் சேரும்”

இப்படியும் பாடினோம்.

ஆனாலும், வாய்வழி வந்த இந்தப் பாட்டுப் போல நம்ம வரலாறும் மறைந்து போகிறது மகனே. அந்தக் கவலை மட்டுந்தான் என் நெஞ்சை அடைக்கிறது.

நான் போய் வருகிறேன் மகனே.

இனி உன் வாழ்க்கை உன் கையில் தான் இருக்கிறது. போலித் தலைவனை நம்பி பின்னால் செல்வதா அல்லது நீயே தலைவனாகி உன் தலைமுறையைக் காப்பதா என்பதை சிந்தித்துத் தீர்மானித்துக்கொள். உன் எதிர்கால பாதையை முறையாகத் திட்டமிடு. யாருக்கும் எந்த வஞ்சகமும் ஏமாற்றமும் துரோகமும் செய்யாமல் தற்துணிவோடு முன்னோக்கிச் செல்.

எமது மக்களுக்கான நியாயமான எந்தவொரு பயணமும் தோற்றதாய் இதுவரை சரித்திரமில்லை மகனே. உன் வாழ்க்கையும் பயணமும் சரித்திரமாகட்டும். நம்மூர் மாடசாமி எப்போதும் உன் துணை நிற்பான்.

இப்படிக்கு,
உன் அன்பு அப்பா
எஸ். சிங்காரம்

0 comments: