Friday, December 28, 2018

இறப்பர் தொழிலாளர்களை கைவிடும் தொழிற்சங்கங்கள் - நிர்ஷன் இராமானுஜம்


லங்கை ஏற்றுமதி வர்த்தகத்தில் இறப்பர் தொழிற்துறைக்கு பிரதான இடம் உண்டு. தேயிலை பெருந்தோட்டங்களைப் போலவே இறப்பர் பெருந்தோட்டங்களிலும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் தொழில்புரிந்து வருகிறார்கள்.

ஆயினும் இந்தத் தொழிலாளர்கள் குறித்த அக்கறையை, பெருந்தோட்ட மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் முற்றுமுழுதாக கைவிட்ட நிலையே இன்று காணப்படுகிறது.

http://puthiyamalayagam.blogspot.com
அண்மைக்காலமாக கூட்டு ஒப்பந்தம் பற்றிய பேச்சு அதிகமாகவே பேசுபொருளாகியுள்ளது. இதில் பங்கேற்கும் தொழிற்சங்கங்களாயினும் சரி, பங்கேற்காத தொழிற்சங்கங்களாயினும் சரி இறப்பர் தொழிற்துறையைப் பற்றி வாய்திறப்பதில்லை. முதலாளிமார் சம்மேளனம் என்ன சொல்கிறதோ,  அதை அவ்வாறே கேட்டுக்கொள்ளும் போக்கிலேயே செயற்படுகின்றன. கூட்டு ஒப்பந்தம் பற்றி எத்தனையோ ஊடகவியலாளர் மாநாடுகளை நடத்தி சம்பள விவகாரத்தைத் தெளிவுபடுத்தும் தொழிற்சங்கங்கள் இதுவரை இறப்பர் தொழிலாளர்கள் பற்றி எந்தவித கருத்தையுமே வெளியிடாதது வேதனைக்குரிய விடயமாகும்.

பொதுவாக மலையகம் என்றால் மத்திய, ஊவா மாகாணங்களை மாத்திரமே குறி வைக்கும் தொழிற்சங்கங்கள் இறப்பர் பயிர்ச்செய்கை இடம்பெறும் ஏனைய மாவட்டங்கள் குறித்து கரிசனை கொள்வதில்லை. அவர்களுக்கு இடம்பெறும் அநீதிகள் குறித்தும் குரல்கொடுப்பதில்லை. ஆனால் தொழிலாளர்களின் மாதாந்த சந்தாப்பணம் மாத்திரம் தொழிற்சங்கக் கணக்குகளில் வரவில் வைக்கப்படுகின்றன.

சரி, ஏன் இந்தத் தொழிற்சங்கங்கள் இறப்பர் தொழிலாளர்களைப் புறக்கணிக்கின்றன? இதற்குப் பிரதான காரணியொன்று உள்ளது. தொழிலாளர்களின் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் அனைத்தும் முற்றுமுழுதாக அரசியல் நோக்கத்தைக் கருதியே இயங்கிக்கொண்டிருக்கின்றன. தமது அரசியல் இருப்பை உறுதி செய்துகொள்ளவே தினந்தோறும் போராட வேண்டியிருக்கிறது. இந்நிலையில் எங்கு தமக்கான வாக்கு வங்கியை தக்க வைத்துக்கொள்ள முடியுமோ அங்குதான் இவை அரசியல் ரீதியாக இயங்குகின்றனவே தவிர சந்தா செலுத்தும் தொழிலாளர்களின் நலன் குறித்து சிந்திப்பதில்லை.

பெருந்தோட்டக் கம்பனிகளைப் பொறுத்தவரையில் இறப்பர் தொழிற்துறை தொடர்ந்தும் நட்டத்தில் இயங்குவதாக சுட்டிக்காட்டுகின்றன. இந்த நட்டத்திலிருந்து மீள்வதற்காக முள்ளுத்தேங்காய் உற்பத்தியில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றன.

ஏற்கனவே, இறப்பர் உற்பத்தி தொழிற்சாலைகள் பல மூடப்பட்டுள்ளன. பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் தொழில்வாய்ப்பை இழந்துள்ளார்கள். இவற்றுக்கு யார் பொறுப்புக் கூறுவார்கள்? பெருந்தோட்ட தொழிற்துறையின் வினைதிறனை அதிகரிப்பதாக கடந்த கூட்டு ஒப்பந்தத்தில் சம்மதம் தெரிவித்து கையொப்பமிட்ட தொழிற்சங்கங்களின் பதில்தான் என்ன?
இறப்பர் தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் அரசியல் ரீதியாகவும் தொழிற்சங்க ரீதியாகவும் அநாதைகளாக்கப்பட்டுள்ளார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

உண்மையில் மலையகத் தொழிற்சங்கங்கள் மக்கள் நலனுக்காக இயங்குகின்றன என்றால் இறப்பர் தொழிலாளர்கள் குறித்தும் அக்கறை செலுத்த வேண்டும். பெரும்பாலான தோட்டப்பகுதிகளில் நிர்வாகத்தினால் பெரும் அநீதிகள் இழைக்கப்படுகின்றன. ஆனால் அவர்கள் தமது நியாயங்களை எடுத்துரைப்பதற்குரிய தலைமைத்துவம் இல்லாமல் இருக்கிறார்கள்.

வெறுமனே வாய்ப்பேச்சில் வீரர்களாக இருக்கும் தொழிற்சங்கத் தலைமைகள் இது குறித்து சிந்தித்து களத்தில் இறங்கிப் பணியாற்ற முன்வர வேண்டும் என்பதே தொழிலாளர்களின் கோரிக்கையாகும்.
குறிப்பாக, களுத்துறை, இரத்தினபுரி, குருநாகல், காலி உள்ளிட்ட மாவட்டங்களில் இறப்பர் தொழிற்துறையைக் கைவிட வேண்டிய சூழ்நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

உரிய பராமரிப்பின்றி காடாகிப்போயுள்ள பெருந்தோட்டங்களை அரசியல்வாதிகள் தாம் நினைத்தாற்போல பெரும்பான்மையின மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் திட்டமும் மறைமுகமாக நடைபெற்று வருகிறது. இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் அதிகாரப்போட்டிக்காக நீயா? நானா? என தலைவர்கள் சண்டையிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

எங்களுடைய மண், எங்களுடைய தொழிற்துறை ஒருசிலரின் அரசியல் அபிலாஷைகளுக்காகவும் சுய தேவைக்காகவும் பறிபோவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு அதிகாரத்துக்காகப் போட்டிபோடுபவர்கள் கட்டாயம் மக்களின் இந்த நிலைமைக்குப் பதில் கூறியே ஆக வேண்டும். அல்லாவிடின் ஒரு சமூகத்தை அதன் நிலத்திலிருந்தும் கலாசாரத்திலிருந்தும் அந்நியப்படுத்தியவர்கள் என்ற கறுப்புப் புள்ளி என்றுமே மறையாமல் நிலைத்திருக்கும் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.

-நிர்ஷன் இராமானுஜம்-

No comments: